சிறிது நேரம் ப்ரவின் மற்றும் பவினுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு மாடிக்குச் சென்று உடையை மாற்றிக்கொண்டு கீழே வந்தாள் மிருதுளா. அவள் வந்தமர்ந்ததும் ப்ரவின்..
“மன்னி டின்னர் என்னப் பண்ணப் போறேங்கள்?”
“ஓ! இரு ப்ரவின் நான் போய் மாவு இருக்கான்னு பார்க்கறேன். இருந்ததுன்னா தோசையோ இட்டிலியோ சாப்பிடலாம்”
அமர்ந்தவள் மீண்டும் மெதுவாக எழுந்துக் கூறிக்கொண்டே ஃப்ரிஜைத் திறந்தாள். அதில் கொஞ்சம் பச்சைமிளகாய், ஒரு துண்டு இஞ்சி மற்றும் இரண்டு தக்காளி மட்டுமே இருந்ததைப் பார்த்ததும் மிருதுளா ப்ரவினிடம்
“மாவு இல்லையே ப்ரவின். சரி உப்புமா பண்ணட்டுமா?”
“உப்புமா வா? மன்னி ப்ளீஸ் அது மட்டும் வேண்டாமே”
“சரி இரு கிட்சனில் போய் பார்த்து டிசைட் பண்ணறேன்”
“என்ன மன்னி? டிசைட் பண்ணினேளா?”
“ஓ எஸ். டின்னர் பண்ணவும் ஆரம்பிச்சாச்சு. இன்னும் பத்து நிமிஷத்துல சுடச்சுடப் பரிமாறப்படும்”
“என்ன பண்ணறேங்கள்?”
“பூரி மசால் பண்ணிண்டிருக்கேன். நீ போய் கொஞ்சம் கொள்ளப்பக்கத்திலேருந்து கருவேப்பிலை பறிச்சுண்டு வாயேன் ப்ளீஸ்”
“இதோ கொண்டு வரேன்”
மிருதுளா ப்ரவின், பவின், நவீன் மூவருக்கும் புரி மசால் பரிமாறினாள். மூவரும் ரசித்து உண்டனர். பர்வதம் இருந்திருந்தால் பூரி எல்லாம் செய்தும் தந்திருக்க மாட்டாள், செய்யவும் விட்டிருக்க மாட்டாள். தற்காலிகமாக கிடைத்த சுதந்திரத்தை பயன்படுத்தி தனக்கு பிடித்ததை செய்து அனைவருக்கும் கொடுத்து தானும் உண்டு மகிழ்ந்தாள் மிருதுளா.
ஒவ்வொரு நாள் இரவும் சிறுநீர் கழிப்பதற்கு மாடியிலிருந்து கீழே வீட்டிற்கு வெளியே உள்ள கழிப்பறைக்கு இருட்டில் இறங்கி வரவேண்டும் நவீனும் மிருதுளாவும். திருமணமான புதிதில் மிருதுளா இருட்டில் படி இறங்கி வந்ததற்கும் இப்போது வாயும் வயிறுமாக கீழே இறங்கி வருவதற்கும் நிறைய வித்தியாசமுள்ளது.
அன்றிரவு மிருதுளாவிற்கு கழிப்பறை போக வேண்டியிருந்ததால் எழுந்து நவீனைப் பார்த்தாள் நவீன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவள் தனியாக இருட்டில் மாடிப் படி இறங்கி போக பயந்து நவீனை துணைக்கு கூட்டிச்செல்ல எழுப்பினாள். ஆனால் அவன் அசையக்கூட இல்லை. அவள் இருட்டில் வெளியே போக பயந்து அடக்கிக் கொண்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். அவளுக்கு உறக்கம் வரவில்லை. மீண்டும் ஒரு முறை நவீனை எழுப்பிப் பார்த்தாள். அவனும் விருட்டென எழுந்து
“என்ன மிருது என்ன ஆச்சு? என்ன வேணும்?”
“நவீ சாரி. என் கூட கீழ வரைக்கும் வரேளா? ப்ளீஸ். எனக்கு டாய்லெட் போகணும் ஆனா இருட்ல படி இறங்கிப் போக பயமா இருக்கு”
“அட மிருது இதுக்கு ஏன் ப்ளீஸ் எல்லாம் சொல்லிண்டு. நான் தான் என்ன வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் எழுப்பச் சொல்லிருக்கேனே. சரி சரி வா”
“நீங்க டார்ச் அடிச்சுண்டே முன்னாடி போங்கோ நான் உங்க தோளைப் பிடிச்சுண்டே பின்னாடி வரேன்”
என்று ஒரு கையால் நவீனின் தோளைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் தன் வயிற்றையும் பிடித்துக் கொண்டு மெதுவாக இறங்கினாள் மிருதுளா. அவ்வளவு நேரம் சிறுநீரை அடக்கிக் கொண்டதனால் வயிற்றில் வலி ஏற்பட வயிற்றை பிடித்துக் கொண்டிருந்தாள். கீழே இறங்கி வந்த வேலையை முடித்ததும் மீண்டும் மேலே ஏறிப் போக வேண்டுமே என்றிருந்தது மிருதுளாவிற்கு. கீழேயே படுத்துக் கொள்ளலாம் என்றால் ப்ரவின் பவின் படுத்திருக்கிறார்கள், மேலும் அவர்கள் கதவை உள் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு உறங்குகிறார்கள். வேறு வழியின்றி மீண்டும் நவீனின் தோளைப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறி தங்கள் அறைக்குள் சென்று படுத்துறங்கினாள்.
காலை விடிந்ததும் மிருதுளா எழுந்து நவீனையும் எழுப்பிவிட்டு இருவருமாக கீழே இறங்கிச் சென்றனர். நால்வருக்கும் காபிப் போட்டாள் மிருதுளா. பின் நால்வரும் அமர்ந்து முன் நாள் இரவு செய்த பூரியில் மீதமிருந்த நான்கை நால்வரும் பகிர்ந்து காபியுடன் உண்டனர்.
“என்ன டிபன் செய்யட்டும் மக்களே?”
“உன் இஷ்டம் மிருது”
“இல்ல மன்னி நம்மள குளிச்சிட்டு காபி மட்டும் குடிச்சிட்டு டிபனுக்கு பெரியப்பா ஆத்துக்கு வரச்சொன்னா அப்பாவும் அம்மாவும் ”
“ஓ! அப்படியா!. பரவாயில்லை ப்ரவின் உன் கிட்டயாவது எல்லாம் சொல்லிட்டுப் போயிருக்காளே அதுவரைக்கும் சந்தோஷம் தான். இதை நீ நேத்து சாயந்தரமே சொல்லியிருக்கலாம் இல்லையா!! நான் இன்னும் ஒரு அரைமணிநேரம் தூங்கிருப்பேனே”
“நான் மறந்துட்டேன் மன்னி”
“ஓ! அப்படியா சரி சரி. அப்போ ஒவ்வொருத்தரா குளிக்கத் தொடங்குங்கோ அப்பத்தான் டைமுக்கு பெரியப்பா ஆத்துக்கு போக முடியும். இன்னும் ஏதாவது இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சொல்ல மறந்திருந்தா இப்பவே சொல்லிடு ப்ரவின்”
நால்வரும் குளித்து ரெடி ஆனதும் வீட்டைப் பூட்டி நடந்து பஸ் ஸ்டாப் சென்று பஸ்ஸைப் பிடித்து ஒரு மணி நேரத்தில் ராசாமணி வீட்டிலிருந்தார்கள். அனைவரும் நவீனையும் மிருதுளாவையும் வரவேற்று அமர்ந்துப் பேச ஆரம்பித்தனர். மிருதுளாவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. அங்கு அனைவரும் டிபன் சாப்பிட்டாகி விட்டதுப் போல மிருதுளாவிற்கு தோன்றியது. ஏனென்றால் அனைவரும் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். நவீனை கூப்பிட்டு பார்த்தாள் அவன் அங்கிருந்தவர்களுடன் பேச்சில் மூழ்கியிருந்தான்.
மிருதுளாவிற்கு பசி அதிகமாகிக் கொண்டேயிருந்தது…தன் மாமியாரிடம் கேட்டால் அதை வைத்தே தனக்கு ஆப்பு வைத்துவிடுவாள் என்ற பயம் ஒரு பக்கம் டிபன் சாப்பிடாமல் எப்படி பிரயாணம் செய்ய போகிறோம் என்ற பதற்றம் மறுபக்கம் என்று தனியாக தவித்துக் கொண்டிருக்கையில் அவள் தோளைப் பின்னாலிருந்து யாரோ தட்டினார்கள் யாரென்றுத் திரும்பிப் பார்த்தாள் சொர்ணம் அத்தை நின்றிருந்தார்..
“என்ன மிருது? எப்படி இருக்க? உன் கொழந்த என்னச் சொல்லறது? எப்படி இருக்காம்?”
“நல்லா இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கேங்கள்? கொழந்தையும் நன்னா இருக்கு”
“நான் நல்லா இருக்கேம்மா. எனக்கென்ன? என்ன வயிறு தள்ளவேயில்லையே!! பர்வதம் ஆறரை மாசம் ஆச்சுன்னா”
“ஆமாம் அத்தை ஆறு மாசமாயாச்சு”
“அப்போ புள்ள தான் பொறக்கப் போறான்னு நேக்கு தோணறது”
“எல்லாரும் அப்படித் தான் சொல்லறா அத்தை. ஆனா எங்களுக்கு பொண்ணு தான் வேணும். பார்ப்போம்”
“சரி சரி நானும் போய் கிளம்பட்டும் நீ ஏன் நின்னுன்டு இருக்க அப்படிப் போய் அந்த சேர்ல உட்கார்ந்துக்கோ போ”
என்று சொல்லிவிட்டுச் சென்றாள் சொர்ணம் அத்தை. அவர் பேச்சைத் தட்ட விரும்பாத மிருதுளாச் சென்று அமர்ந்தாள். ஜன்னல் வழியாக ஈஸ்வரன் மெதுவாக பேசும் சப்தம் கேட்டது. மிருதுளா திரும்பிப் பார்த்தாள் ஜன்னலுக்கு மறுபுறம் ஈஸ்வரனும் ப்ரவினும் பேசிக்கொண்டிருந்தனர்.
“உன் மன்னி நேத்து நைட்டு என்னடா டின்னர் செஞ்சா?”
“பூரி மசால் பா”
“ஆஹா எனக்குப் பிடிச்சது ஆச்சே. பேசாம நானும் உங்கக் கூடவே காலை ல வந்திருக்கலாம். நேத்து நைட்டு இங்கே உப்புமா, இட்டிலி தேங்காய் சட்னி அவ்வளவுதான்”
“சரி அப்பா காலைல டிபனுக்கு இங்க வரச் சொன்னயே அதுனால மன்னிட்ட டிபன் செய்ய வேண்டாம்ன்னு சொல்லிட்டேன் ஆனா என்ன இங்க எல்லாரும் சாப்ட்டாச்சா என்ன? எனக்கு பசிக்கறதுப்பா”
என்று ப்ரவின் கூறியதைக் கேட்டதும் மிருதுளாவின் மனமும் அதையே கூறியது. அதற்கு ஈஸ்வரனின் பதிலை ஆவளுடன் எதிர்ப்பார்த்திருந்தாள்..
“இங்க காலை ல பொங்கல் இட்டிலி வடை சட்னி சாம்பார் போட்டா. அது சீக்கிரம் தீந்துடுத்து. அதனால மீதமிருக்கறவாளுக்கு மறுபடியும் ஆர்டர் கொடுத்திருக்கா ஆனா இன்னமும் வரக்காணும்”
இதைக் கேட்டதும் மிருதுளாவிற்கு பாதி வயிறு நிறம்பியதுப் போல இருந்தது. சற்று நேரத்தில் ஆர்டர் கொடுத்த டிபன் வந்தது. மிருதுளா வேகமாகச் சென்றாள். ஆனால் சாப்பிடாத ஆண்களை முதலில் அமரச்சொன்னார்கள். வரிசையாக அனைவரும் அமர்ந்தனர் அதில் நவீனும் ஒருவன். மிருதுளா நிலைமை அறிந்தும் அவனுக்கு அவள் முதலில் சாப்பிட வேண்டும் என்று தோணாதது மிருதுளாவிற்கு மனவேதனை அளித்தது. அவள் தயக்கத்துடன் நின்றிருந்ததைப் பார்த்த சொர்ணம் அத்தை அவளருகே வந்து
“ஏய் பொண்ணே நீ சாப்ட்டயோ?”
“இல்ல அத்தை. இன்னும் சாப்பிடலை”
“மொதல்ல நீ போய் உட்காரு. வாயும் வயிறுமா இருக்க நேரத்துக்கு சாப்பிடண்டாமோ.”
“பரவாயில்லை அத்தை அங்க எல்லாரும் உட்கார்ந்துட்டா. நான் அடுத்தப் பந்தில உட்கார்ந்துக்கறேன்”
“நீ வா என் கூட. அங்கப் பாரு உன் புருஷன் உட்கார்ந்திருக்கறத. டேய் நவீன் உன் பொன்டாட்டி சாப்பிடறது தானே முக்கியம் அவளை விட்டுட்டு நீ ஜம்முன்னு உட்கார்ந்திருக்க? மணி என்ன ஆச்சு?”
“அவ அப்பறமா… சாப்பிடாத பொம்மனாட்டிகள் கூட சேர்ந்து சாப்ட்டுப்பா விடுங்கோ. அதுக்காக ஏன் அவன சொல்லறேங்கள். மாவு வச்சுட்டுத் தான் வந்தேன் அதை சுட்டு சாப்ட்டுட்டு வந்திருக்கலாமோனோ. வந்தெடத்துல எல்லாம் டைமுக்கு கிடைக்குமா என்ன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கத் தான் வேணும். அவளும் எப்போ தான் இதெல்லாம் கத்துப்பா?”
பர்வதம் இதைச் சொன்னதும் மிருதுளாவிற்கு தூக்கி வாரிப்போட்டது. இல்லாத மாவில் எப்படி எதைச் சுட்டு சாப்பிடுவது ?!! மாவு வைக்கவில்லை என்ற உண்மை தெரிந்தும் நவீன், ப்ரவின், பவின் ஒன்றுமே கூறாமல் அவர்கள் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சொர்ணம் அத்தை மிருதுளாவின் கையைப் பிடித்து ஒரு இடத்தில் அமரச் செய்து தன் தங்கையிடம்
“ஏய் லக்ஷ்மி மிருதுளாவுக்கு இலையைப் போடு. டிபன் பரிமாறு. மாசமான பொண்ணுக்கு குடுக்காம வேற யாருக்கு!!! வாயும் வயிறுமா இருக்கற பொண்ண இவ்வளவு நேரம் காக்க வச்சதே தப்பு இதுல இன்னும் காக்க வச்சா பாவம் தான் வந்து சேரும். மிருதுளா நீ நிதானமா சாப்பிடு சரியா”
மிருதுளாவிற்கு அப்பாடா என்றிருந்தது மனதில். அவளுக்கு அந்த அம்பாளே சொர்ணம் அத்தை வடிவில் வந்ததாக தோன்றியது. பொறுமையாக சாப்பிட்டு மெதுவாக எழுந்துச் சென்று இலையைப் போட்டு கையை அலம்பி விட்டு வந்தாள். அடுத்தப் பந்திக்கு மீதமிருந்த பெண்கள் அமர்ந்திருந்தனர். உடனே அங்குச் சென்று அவர்களுக்கு பரிமாற முற்பட்டபோது மீண்டும் சொர்ணம் அத்தை தடுக்க அதற்கு பர்வதம்…
“என்னத்துக்கு அவளுக்கு இவ்வளோ சப்போர்ட் பண்ணறேங்கள்ன்னு எனக்குத் தெரியலை. ஏன் இந்த வேலையை அவ செஞ்சா உங்களுக்கு என்ன?”
“பர்வதம் உன் மாட்டுப் பொண்ணு மாசமா இருக்கா அது உனக்கு ஞாபகம் இருக்கா? அதுவும் இல்லாம இங்க இத்தனைப் பேர் இருக்கும் போது அவ தான் செய்யணும்னு இல்லை புரியறதா. இது மனிதாபிமானம்னு கூடச் சொல்லுவா”
என்றதும் பர்வதம் கப்சிப் ஆனாள். மாசமாக இருக்கும் தன் மருமகளை பார்த்துக் கவனித்துக் கொள்ள வேண்டிய இடத்திலிருக்கும் நான்கு பிள்ளைகளைப் பெற்ற மகராசிக்கு இன்னொருத்தர் சொல்லிப் புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பர்வதம் போல் வேண்டுமென்றே சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் வெறுப்பை சொல்லிலும், செயலிலும் காண்பித்து பழிதீர்த்துக் கொள்ளும் பெண்டிருக்கு சொர்ணம் அத்தைப் போன்றவர்கள் நன்றாக உறைக்கும் படி சொன்னால் தான் அந்த நேரத்திலாவது அடங்குவார்கள்.
குஜராத்தில் நவீன் மிருதுளாவை கவனித்துக் கொண்டது போல இப்போது கவனிக்கத் தவறுவது சரியா? ஏன் அதையே மீண்டும் செய்கிறான்? இதனால் மிருதுளா மனதில் என்ன நினைக்கிறாள்?
தொடரும்……