அத்தியாயம் 44: அன்பா? ஆதிக்கமா?

பத்தாம் தேதி காலை நவீன் எழுந்துப் பார்த்தான் கடிகாரம் ஏழு மணி காட்டியது பக்கத்தில் மிருதுளா நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே தன் மனதில்…

“பாவம் குஜராத்தில் தூங்கினது அதுக்கப்புறம் இன்னைக்கு தான் ஏழு மணி ஆகியும் தூங்க முடியறது. தூங்கட்டும்”

என்று அவளை எழுப்பாமல் மெதுவாக கதவைத் திறந்து வெளியேச் சென்றான் நவீன். 

“குட் மார்னிங் மாப்பிள்ளை. மிருது இன்னும் தூங்கறாளா?”

“ஆமாம் நல்லா அசந்து தூங்கறா. அதுனால தான் எழுப்பாம வந்துட்டேன். நான் போய் ப்ரஷ் பண்ணிட்டு வந்துடறேன்”

“சரி சரி தூங்கட்டும். அவளா எழுந்திரிக்கும் போது எழுந்துக்கட்டும். நீங்க பல் தேய்ச்சுட்டு வாங்கோ உங்களுக்கு காபி போட்டுத் தர்றேன்”

தன் மனைவி மீது இந்த அக்கறை ஏன் அவன் வீட்டில் மிருதுளாவை தூங்கவிடாமல் செய்தபோது வரவில்லை? பொண்டாட்டி தாசன் என்ற பெயர் வைத்து விடுவார்கள் என்று சுயநலமாக சிந்தித்தானா? இல்லை மனைவிக்கு கெட்டப் பெயர் வந்துவிடும் என்ற எண்ணமா? இங்கே அவளை தூங்க விட்டால் அவனுக்கும் பாதிப்பில்லை மிருதுளாவிற்கும் பாதிப்பில்லை அதனால் வந்த அக்கறையா? இது பெரும்பாலும் எல்லா திருமணமான ஆண்களுக்குள்ளும் இருக்கும் பாரபட்சமே. குடும்ப பொறுப்புடன் வளர்ந்த நவீனால் தன் பெற்றோரிடம்  அவர்கள் தவறை சுட்டிக் காட்டி புரிய வைக்கவும் முடியவில்லை அதே நேரம் மனைவி கஷ்டப்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. 

தவறு செய்தால் அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு மீண்டும் அதை செய்யாதிருக்கும் நற்பண்பையும், தவறு யார் செய்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் என்னும் தைரியத்தையும் நம் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே சொல்லி வளர்க்க வேண்டும். பெரியவர்கள் தவறே செய்வதில்லை என்பது போல ஒரு பிம்பத்தை கொடுக்கக் கூடாது. பெற்றவர்கள் சில முறை பிள்ளைகளை தவறாக புரிந்துக் கொண்டு திட்டவோ / அடிக்கவோ செய்து விடுகிறார்கள், ஆனால் பிள்ளைகள் மீது தவறில்லை பெற்றவர்கள் தவறாக புரிந்துக் கொண்டு திட்டவோ / அடிக்கவோ செய்து விட்டார்கள் என்று தெரியவரும் போது எத்தனை அப்பாக்கள் / அம்மாக்கள் பிள்ளைகளிடம்(சிறு பிள்ளையானாலும்) மன்னிப்பு கேட்கிறார்கள்? 

இந்த உலகில் தவறு செய்யாத மனிதர்கள் என்று யாருமே இல்லை.  பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றவர்கள் திருத்துவது போல பெற்றவர்கள் தவறிழைத்தால் அதை பிள்ளைகளும் எடுத்துரைக்கலாம் என்ற சுதந்திரத்தை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும்.   அப்படி இல்லாமல் நாங்கள் பெற்றவர்கள் நாங்கள் தவறே செய்யமாட்டோம். எங்களுக்குதான் எல்லாம் தெரியும் பிள்ளைகளாகிய நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று ஆதிக்கத்தை காட்டும் பெற்றவர்களின் திருமணமான மகன்களின் வாழ்க்கை இருதலைக் கொள்ளியினுள் எறும்பாக தான் இருக்கிறது. 

நவீனுக்கு இதுவரை அப்படி ஒரு எறும்பின் நிலை வராததற்கு காரணம் மிருதுளாவின் நற்குணம் ஆகும். அவள் நவீனின் நிலைமையைப் புரிந்து நடந்துக் கொள்வதால், பலகாலமாக ஒரு தலையில் உள்ள கொள்ளியின் வெட்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள குளிர்ந்த வாழை மரமான மறுதலையின் குளிர்ச்சியை நாடலானான். இது மனித இயல்பாகும்.

நவீனுக்கு மிருதுளாவின் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் மீதும் தன் மீதும் காட்டும் அன்பு, பாசம், அக்கறை எல்லாம் அவன் அதுவரை கண்டிராதது, அனுபவிக்காதது என்பதால் அது அவனுக்கு மிகவும் ஆனந்தத்தையும் மனமகிழ்ச்சியையும் தந்தது. குஜராத்திற்கு மிருதுளா குடும்பத்தினர் வந்திருந்த போதே பரிந்துக் கொண்டிருந்தாலும் அப்பொழுது ஆபிஸ், வகுப்பு என்று ஓடிக் கொண்டிருந்ததால் முழுமையாக அவர்களின் அன்பை உணர்வதற்கு நேரமில்லாமல் போனது. ஆனால் இம்முறை முழுமையாக இரண்டு நாட்கள் அவர்களுடன் இருந்ததில் பெற்றவர்களின் உண்மையான அன்பு, பாசம் பற்றி  நன்றாக புரிந்துக் கொண்டான் நவீன்.

காபியைக் குடித்துக்கொண்டே தினத்தந்தி, தினமலர் பேப்பரை படித்து முடித்தான். அப்போது ராமானுஜம்…

“உங்களுக்கு இங்கிலிஷ் நியூஸ் பேப்பர் போடச் சொன்னேன்…பேப்பர் காரன் மறந்துட்டானாம்”

“அதுனால என்ன இப்போ.  நான் தினத்தந்தி, தினமலர் பேப்பர்களும் படிப்பேன்.”

இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது மிருதுளா எழுந்து வந்தவள் தன் அம்மாவிடம்…

“அம்மா மணி ஏழரை ஆச்சு!!! என்னை எழுப்பிருக்கலாமே மா”

“அதுனால என்ன மிருது. நோக்கு ஒண்ணு தெரியுமோ கர்ப்பிணி பொண்களை தூங்கும் போது தொந்தரவு செய்யப்படாதுன்னு சொல்லுவா. அவா நல்லா தூங்கும் போது எழுப்பவும் கூடாது தெரியுமோ?”

“அப்படியா?”

“ஆமாம் அதுனால தான் உன்னை நாங்க எழுப்பலை. சரி போய் ப்ரஷ் பண்யுட்டு வா உனக்கும் காபி போட்டுத் தர்றேன்”

“நவீ நீங்க காபி குடிச்சாச்சா?”

“ஓ! எஸ் மீ டன்”

பின் ஒருவர் பின் ஒருவராக குளித்து விட்டு வந்ததும் சூடாக டிபன் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் மிருதுளா தனது பொருட்களை எல்லாம் பேக் செய்ய ஆரம்பித்தாள். அப்போது அம்புஜம்…

“ஏண்டி மிருது நீங்க இன்னும் ஒரு ரெண்டு நாளாவது இருந்துட்டுப் போங்கோளேன் டி. இந்த தீபாவளி கொண்டாட்டத்துல உங்களை எங்களால சரியா கவனிச்சுக்க முடியாம போயிடுத்து. எனக்கும் என் பொண்ணுக்கு பிடிச்சதெல்லாம் செய்து கொடுக்கணும்ன்னு ஆசை இருக்காதா மா”

“அம்மா நீ சொல்லறதெல்லாம் சரி தான். ஒரு விஷேசம் அடெண்ட் பண்ணத்  தானே நாங்க போறோம். அது முடிஞ்சதும் நாங்க இங்கே வந்து ஒரு வாரம் தங்கறோம்ன்னு சொன்னேனே. ஆமாம் நீ எங்களை என்ன கவனிக்கலைன்னு சொல்லற? எங்களை சூப்பரா கவனிச்சிண்டேங்கள் தெரியுமா. எனக்கும் இங்கேயே இருக்கணும்னு தான் ஆசையா இருக்கு. ம்… என்ன பண்ண மா. இன்னும் இரண்டு நாள்ல வந்துடுவோம் சரியா”

“சரி சரி பத்திரமா போயிட்டு வாங்கோ. நீ முந்தி மாதிரி தனி ஆள் இல்ல மிருது ஞாபகம் வச்சுக்கோ. சர்வ ஜாக்கிரதையா இரு சரியா. நீ பேக் பண்ணு நான் போய் மத்தியான சாப்பாட்டை தயார் பண்ணட்டும்” 

மிருதுளா எல்லாவற்றையும் பேக் செய்து நவீனை அழைத்து பேக்கை ஹாலில் வைக்கச் சொல்லிவிட்டு சற்று நேரம் படுத்துக் கொண்டாள். நவீனும் வேனுவும் டிவியில் “சீக்ரெட்ஸ் ஆஃப் தி ஓஷன்” என்று  கடலுக்கடியில் உயிர் வாழும் உயிரினங்களைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது …

“அத்திம்பேர் மிருதுக்கா இந்த ப்ரோக்ராம் பார்க்கவே மாட்டா தெரியுமா?”

“அப்படியா! ஏன் நல்லா தானே இருக்கு”

“இதுன்னு இல்ல அதிம்பேர் அவ இந்த மாதிரி ஃபிஷ், ஆக்டோபஸ், ஸ்நேக்ஸ் பத்தின எந்த ப்ரோக்ராமும் பார்க்க மாட்டா. நான் ஒரு தடவை அவளை கம்பல் பண்ணி பார்க்க வச்சேன் ரெண்டு நாள்  அவ சாப்பிடவே இல்லை. நைன்த் ஸ்டாண்டர்ட் ல அவ க்ளாஸுக்கு பக்கத்துல தான் கெம்மிஸ்ட்ரி லாப் இருந்தது எங்க ஸ்கூல்ல. அதுல இருந்து வந்த ஸ்மெல் பிடிக்காததால் தான் அவ சயின்ஸ் குரூப்பே எடுக்க மாட்டேன்னுட்டா”

“ஓ!! இதெல்லாம் எனக்கு மிருதுவ பத்திய புது இன்ஃபோ வேனு.”

“நீங்க இங்கயே எங்க கூட ஒரு வாரம் இருந்தேங்கள்னா நான் நிறைய இன்ஃபோ தருவேன். நீங்க தான் எல்லாத்தையும் மிஸ் பண்ணப்போறேங்கள்” 

“அது தான் டூ டேஸ் ல மறுபடியும் வருவோமில்லையா அப்போ கேட்டுக்கறேன்”

“ஓகே அத்திம்பேர் ஷுவரா சொல்லறேன்”

சற்று நேரம் படுத்திருந்த மிருதுளா மீண்டும் தூங்கிப் போனதைப் பார்த்த வேனு அம்புஜத்திடம்

“என்னமா மிருதுகா எழுந்துண்டதே லேட்டு !! மறுபடியும் தூங்கறா!!!. இப்படி எல்லாம் தூங்க மாட்டாளே அவ. அவளுக்கு என்ன ஆச்சு?”

“டேய் வேனு இந்த மாதிரி நேரத்துல தூக்கம் தான் வரும். நல்லா நிம்மதியா தூங்கணும். நல்லா சத்தான சாப்பாடா சாப்பிடணும் அப்பத் தானே குட்டிப் பாப்பா ஹெல்த்தியா பொறக்கும்.”

மத்திய உணவு தயார் ஆனதும் எல்லாவற்றையும் ஹாலில் கொண்டு வந்து வைத்தாள் அம்புஜம். ராமானுஜம், நவீன், வேனு மூவருமாக அமர்ந்து சாப்பிட்டனர். அவர்களுக்கு அம்புஜம் பரிமாறினாள். மிருதுளா தூங்கி எழுந்தாள். தன் அம்மா சமைத்த சாப்பாட்டின் மணம் அவளை தூண்டில் போட்டு ஹாலுக்கு இழுத்து வந்தது. 

“ஹலோ என்ன எல்லாரும் என்ன விட்டுட்டு சாப்பிடறேங்கள்”

“நீ நல்லா தூங்கிண்டிருந்த மிருது அதுனால நாங்க சாப்பிட ஆரம்பிச்சுட்டோம். வா வந்து ஜாயின் பண்ணிக்கோ”

“பரவாயில்லை நவீ. சும்மா தான் கேட்டேன். நீங்க மூணு பேரும் சாப்பிடுங்கோ நான் அம்மா கூட சாப்ட்டுக்கறேன். அதுக்குள்ள நான் போய் முகம் கை கால் அலம்பிட்டு நம்ம ஆத்துக்குப் போக ரெடியாகி வந்துடறேன்”

என்று மிருதுளா கிளம்பி வந்து தன் தாயுடன் அமர்ந்து சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடலானாள். அவளுக்கு நன்றாக தெரியும் அங்கே போனால் வெறும் ரசம் சாதம் தான் கிடைக்குமென்று. சாப்பிட்டு முடித்ததும் அந்த பாத்திரங்களை எல்லாம் எடுத்து அடுப்படியில் வைக்க முற்பட்ட மிருதுளாவை அம்புஜம் தடுத்து..

“மிருது நீ சாப்ட்டாச்சோனோ போய் அங்க பேசாம உட்காரு. நானும் அப்பாவும் பார்த்துக்கறோம்”

 என்று சொல்லிக் கொண்டே அனைத்தையும் பாத்திரம் மாற்றி வைத்து சாபப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்து முடித்தாள் அம்புஜம். 

சற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் 

“மிருது கிளம்பலாமா?”

“மாப்ள இப்போ வெயில் அடிக்கறது. சித்த வெயில் தாழ காபி குடிச்சிட்டு கிளம்புங்கோளேன்”

“சரி அப்போ ஒரு அஞ்சு மணிக்கு கிளம்பலாம் மிருது”

என்று நவீன் சொன்னதும் மிருதுளாவின் மனதில் ஏதோ ஐந்து மாதம் தங்கி விட்டு போவது போல ஒரு மகிழ்ச்சிப் பொங்கியது. 

“ஓகே நவீ. அப்பா அஞ்சு மணிக்கு அந்த ஆட்டோக் காரரை வரச்சொல்லிடுப்பா.”

ராமானுஜமும் அட்டோ ஸ்டாண்டிற்கு ஃபோன் போட்டு ஆட்டோ காரர் செந்திலை ஐந்து மணிக்கு வரச்சொன்னார். அனைவருமாக குடும்பக் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். மூன்று மணியளவில் ஃபோன் பெல் அடித்தது. வேனு ஃபோனை அட்டெண்ட் செய்தான்..

“ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன் நவீன் இருக்கானா? அவன்ட்ட பேசணும்”

“ஹலோ மாமா நான் வேனு பேசறேன். இதோ அத்திம்பேர்ட்ட குடுக்கறேன்”

ரிசீவரை ஒரு கையால் மூடியப் படி நவீனிடம் 

“அத்திம்பேர் உங்க அப்பா உங்கள்ட்ட பேசணுமாம்”

என்று கூறிக் கொடுத்தான்

“ஹலோ நவீன் பேசறேன்”

“என்ன மணி மூணு ஆச்சு இன்னும் நீங்க ரெண்டு பேரும் அங்கிருந்து கிளம்பாம என்ன பண்ணிண்டிருக்கேங்கள்?”

“வெயில் தாழ கிளம்பலாம்ன்னு இருக்கோம். அஞ்சு மணிக்கு கிளம்பி வந்துடுவோம்”

“சரி சரி சட்டு புட்டுன்னு கிளம்பி வரப்பாருங்கோ. நான் ஃபோனை வைக்கறேன்”

“ஃபோன்ல அப்பா என்னச் சொன்னார் நவீ?”

“மணி ஆச்சே ஏன் இன்னும் வரலைன்னு கேட்டா. நான் அஞ்சு மணிக்கு கிளம்பி வருவோம்ன்னு சொன்னேன். சரின்னு வச்சுட்டா”

“ஓ ! ஓகே ஓகே”

மணி நாலு அடித்ததும் அம்புஜம் எழுந்து அடுப்படிக்குச் சென்று காபி டிக்காக்ஷன் போட்டு,  தங்கள் மகளுக்குப் பிடித்த  வெங்காய தூள் பக்கோடா செய்வதற்காக வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி எல்லாவற்றையும் பொடிப் பொடியாக நறுக்கியதும் ராமானுஜத்தை அழைத்து பக்கோடா போடச்சொல்லிவிட்டு அனைவருக்கும் காபி போட்டாள். இருபது நிமிடங்களில் சுடச்சுட வெங்காய தூள் பக்கோடாவும் சூடான பில்டர் காபியும் பிள்ளைகளுக்கு செய்துக் கொடுத்தனர். அதைப் பார்த்ததும் மிருதுளா

“அய்யா வெங்காய பக்கோடா. மை ஃபேவரைட். சூப்பர் அம்மா அன்ட் அப்பா.”

“சாப்பிடு மிருது உனக்கு பிடிக்குமேன்னு தான் செய்தோம். மாப்ள உங்களுக்கு பிடிச்சிருக்கா?” 

“பிடிச்சிருக்காவா!!!! பக்கோடா சூப்பரா இருக்கு”

நவீனும் மிருதுளாவும் மாலை சிற்றுண்டியை முடித்துவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் பஸ் ஸ்டாப் வந்திறங்கி பஸ்ஸில் ஏறி அவர்கள் ஊருக்குச் சென்றனர். இருவரும் நவீன் வீட்டிற்குள் நுழையும் போது மணி ஆறு அடித்தது. வீட்டில் ப்ரவின் மற்றும் பவின் மட்டும் இருந்தனர்.  

“அப்பா அம்மா எங்க ப்ரவின்? நீங்க மட்டும் இருக்கேங்கள்! அவா கடைக்கு எங்கயாவது போயிருக்காளா?”

“இல்லை மன்னி அவா ரெண்டு பேரும் ராசாமணி பெரியப்பா ஆத்துக்கு போயிருக்கா நம்ம நாலு பேரையும் நாளைக்கு காலை ல ஏழு மணிக்கு அங்க வரச் சொல்லிருக்கா.”

“நவீ நீங்க அப்பாட்ட பேசும்போது இதப்பத்தி உங்க கிட்ட சொன்னாரா?”

“இல்லையே ஒண்ணுமே சொல்லையே”

“அண்ணாட்ட பேசிட்டு ஃபோனை வச்சதும் கிளம்பி போயிட்டா மன்னி”

“அப்போ எனக்கு ஃபோன் போட்டப்போதே அவா கிளம்பியாச்சா? அதை ஏன் என் கிட்ட சொல்லலை?”

“விடுங்கோ நவீ அது தான் ப்ரவின் கிட்ட சொல்லி நம்மகிட்ட சொல்ல சொல்லிருக்கா இல்லையா அப்புறம் என்ன?” 

என்று மிருதுளா சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் மூத்த தம்பதியர் செய்தது தவறே.

நவீனிடம் ஃபோன் போட்டு இன்னுமா கிளம்பவில்லை என்று கேட்கத் தெரிந்த ஈஸ்வரனுக்கு ஏன் தாங்கள்  ராசாமணி வீட்டிற்கு செல்வதை சொல்ல தோணவில்லை! நாங்கள் பெற்றவர்கள் அதனால் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று எண்ணினாரோ என்னவோ? அப்படி எண்ணக்கூடிய ஆசாமி தானே அவர். இவர்கள் பிள்ளைகளின் மனமறிந்து நடந்துக்கொள்ளாமல், பெற்றவர்கள் என்ற அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள். இவர்களைப் போலவே நவீனும் மிருதுளாவும் இவர்களுக்குச் சொல்லாமல் இப்படி ஏதாவது செய்தால்? 

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s