அத்தியாயம் 43: தலைதீபாவளி

விடியற்காலை சூரியன் எழுவதற்கு முன்னதாகவே அம்புஜம் எழுந்து குளித்துவிட்டு டேப்ரிக்கார்டரில் சுப்பரபாதத்தை போட்டுவிட்டு ராமானுஜம் குளித்து வருவதற்குள் ஒரு பலகையில் மாக்கோலம் இட்டு, நல்லெண்ணையில் மிளகு, அரிசி போட்டு காய்ச்சி, அதை இருக்கைப் பலகைக்கு அருகில் வைத்து, விளக்கேற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்து, புதுத்துணிகளை தாம்பாளத்தில் வைத்துவிட்டு, மகன், மகள், மருமகன் ஆகியோரை எழுப்பினாள் அம்புஜம். மிருதுளாவும், நவீனும், வேனுவும் எழுந்து பல் துலக்கி விட்டு வந்ததும் முதலில் மாப்பிள்ளை நவீனை பலகையில் அமரச்செய்து தலையில் எண்ணெய் ஊற்றி தேய்த்தாள் அம்புஜம், அடுத்து மிருதுளா பின் வேனு என மூவருக்கும் எண்ணெய் தேய்க்கும் சடங்கு நிறைவாக நடைப்பெற்றது. எண்ணெய் தேய்த்ததும் ஒருவர் பின் ஒருவராக குளிக்கச் சென்றனர். குளித்து வெளியே வந்து சாமி கும்பிட்டு பின் அம்புஜம் மற்றும் ராமானுஜம் காலில்  விழுந்து நமஸ்காரம் செய்து அவர்கள்  வாங்கி வைத்திருந்த புத்தாடைகளை பெற்று அதை அணிந்துக் கொண்டனர். அனைவருக்கும் சுட சுட ஆவி பறக்கும் பில்டர் காபியை கொடுத்தாள் அம்புஜம். காபி அருந்தியதும் வேனு நவீனிடம்

“அத்திம்பேர் வாங்கோ நாம போய் அந்த பத்தாயிரம்வாலாவை வெடிப்போம்”

“சரி வா போகலாம். மிருது நீயும் வந்துப் பாரேன்”

“ஓ வரேன் ஆனா நான் திண்ணையிலே இருக்கேன் நீங்க ரெண்டு பேருமா வெடிங்கோ”

அவர்கள் வெளியே சென்று பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தார்கள். அந்த நேரம் அனைவருக்கும் காலை டிஃபன் இட்டிலி, வெண்பொங்கல், சக்கரைப் பொங்கல், மெதுவடை, சட்னி, சாம்பார் எல்லாம் தயார் செய்தார்கள் அம்புஜமும் ராமானுஜமும். பட்டாசு வெடித்து முடித்து விட்டு வீட்டினுள் வந்து கை, கால் எல்லாம் நன்றாக கழுவி பின் வரிசையாக காலை உணவருந்த அமர்ந்தார்கள் நவீன், மிருதுளா மற்றும் வேனு. அம்புஜமும், ராமானுஜமும் பிள்ளைகளுக்கு பரிமாறி அவர்கள் உண்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.  பிள்ளைகள் மூவரும் சாப்பிட்டப் பின்னர் ராமானுஜமும் அம்புஜமும் சாப்பிட்டனர். 

பின் பாத்திரங்களை எல்லாம் தேய்த்துக் கொண்டிருக்கும் போது வயிறு வலிக்க உடனே டாய்லெட் சென்று பார்த்தாள் அம்புஜம். அவள் அவளின்  மெனோபாஸின் முந்தைய நிலையில் இருந்ததால் மாதவிடாய் இந்த நாள் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாமல் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடும் என்றிருக்க, தன் மகள் மருமகனின் தலைதீபாவளி அன்று வந்ததும் அவள் சற்று பதற்றமடைந்தாள் ஏனெனில் அன்றைக்கு அவளுக்கு நிறைய வேலைகள் இருந்தது. அவை அனைத்தையும் அவளே செய்யவேண்டியும் இருக்க சற்று தலைச் சுற்றியது அம்புஜத்திற்கு. சிறிது நேரம் உள்ரூமில் சுவற்றில் சாய்ந்து காலை நீட்டிக்கொண்டு அமர்ந்தாள். 

ஹாலில் நவீன், மிருதுளா, வேனு மற்றும் ராமானுஜம் பேசிக்கொண்டிருந்தனர். அங்கே தனது அம்மாவை காணாமல் மிருதுளா

“அம்மா எங்க காணம்?”

“அவ பாத்திரம் தேய்ச்சிண்டிருந்தா. அப்பறம் எங்க போணான்னு தெரியலையே. அந்த ரூம்ல பாரு மிருது” 

என்றார் ராமானுஜம். மிருதுளா உள் ரூமிற்குள் சென்று தன் தாய் சுவற்றில் சாய்ந்தப் படி தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து தரையில் தலையணையை வைத்து அதில் மெதுவாக அம்புஜத்தைப் படுக்கச் செய்யும் பொழுது விருட்டென்று எழுந்த அம்புஜம்…

“ஆஹ்ங் ஆஹ்ங்.. எழுந்துட்டேன் இதோ வரேன்”

“அம்மா யாரும் உன்னை கூப்பிடலை படுத்து தூங்கிக்கோ”

“இல்ல மிருது எனக்கு வேலையிருக்கு”

“பரவாயில்லை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறமா செஞ்சுக்கோ மா.”

“இல்ல மா இதோ வரேன்”

“சொன்னா கேட்க மாட்டியே. ஏன் ரொம்ப டல்லா இருக்க மா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மா. நேத்தேலிருந்து சரியா தூங்கலை அதுதான்”

 உண்மையான பிரச்சினையை சொன்னால் மகளும் சங்கடப்படுவாள் என்று சொல்லாமல் மறைத்தாள் அம்புஜம். மீண்டும் அவளது வேலைகளை தொடர்ந்தாள். மத்திய உணவிற்கு சாம்பார், ரசம், அவியல், உருளை ஃப்ரை, பீன்ஸ் உசிலி, வாழக்காய் சிப்ஸ், பாயசம், மசால் வடை, இஞ்சிப்புளி, அப்பளம், வடாம் என்று ஒரு கல்யாண சாப்பாடே தயார் செய்தாள். ராமானுஜம் அவ்வப்போது காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தும், வடையை சுட்டெடுக்கவும் உதவிச் செய்தார். கடைசியாக குக்கரில் சாதம் வைத்து சமையல் ஒரு பதினொன்றரை மணிக்கெல்லாம் தயார் ஆனதும் அக்கடான்னு உள்ரூமில் சென்று படுத்துக்கொண்டாள் அம்புஜம். 

தன் தாய் அடிக்கடி சென்று சோர்வாக படுத்துக் கொள்வதை கவனித்த மிருதுளா மீண்டும் சென்று 

“அம்மா ஏதாவது பிரச்சினையா? நீ இப்படி அடிக்கடி சோர்ந்து போற டைப் இல்லையே”

“ஒண்ணுமில்லை மா. கொஞ்சம் டையர்டா இருக்கு அவ்வளவு தான். வா வந்து உட்காரு மிருது”

மிருதுளா மெல்ல அமர முயற்சிக்கும்  போது வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஹாலில் இருந்து  ராமானுஜம் 

“வாங்கோ வாங்கோ ஹாப்பி தீபாவளி”

என்று சத்தமாக வரவேற்க. அம்புஜம் மிருதுளாவிடம்…

“யாரு வந்திருக்கா மிருது? உங்க அப்பா பலம்மா வரவேற்கறா!”

“இரு பார்த்துட்டு வரேன்.”

எட்டிப் பார்த்த மிருதுளாவின் முகம் வாடியது. பின் தன் அம்மாவிடம்

“அம்மா என் மாமியார், மாமனார், ப்ரவின் அன்ட் பவின் வந்திருக்கா”

“ஓ !! அப்படியா!!! அவா வர்றதா நீங்க எங்கள்ட்ட சொல்லவே இல்லையேடி”

“எங்களுக்கே தெரியாது”

“சரி சரி வா அவாள வரவேற்போம்”

“வாங்கோ வாங்கோ பர்வதம் மாமி அன்ட் மாமா ஹாப்பி தீபாவளி. வாப்பா ப்ரவின், பவின்”

அனைவரும் வந்து ஹாலில் அமர்ந்து பேசலானார்கள். அப்பொழுது வேனு பவினையும், ப்ரவினையும் பட்டாசு வெடிக்க வெளியே அழைத்துச் சென்றான். அம்புஜம் அனைவருக்கும் எலும்மிச்சை ஜூஸ் போட்டு மிருதுளாவிடம் அனைவருக்கும் கொடுக்கச் சொன்னாள். அப்போது பர்வதம் 

“என்னது?”

“லெமன் ஜூஸ் மா. எடுத்துக்கோங்கோ”

“இந்த தனுப்பு காலத்துல லெமன் ஜூஸ்ஸா எனக்கு வேண்டாம் மா”

என்று வழக்கமான நசுங்கல் வேலையை ஆரம்பித்தாள். 

“மாமி சாரி. உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்கோ உடனே செய்து தர்றேன்”

“எனக்கு டி போதும்”

“இதோ ஒரு நொடியில் டி போட்டு தந்துட்டா போச்சு”

“என்ன சாப்பிடற நேரத்துல டி வேண்டிருக்கு?” என்றார் ஈஸ்வரன்

“இல்லை பரவாயில்லை இதோ போட்டுக் கொண்டுண்டு வரேன்.”

என்று அடுப்படிக்குள் சென்று தனது வயிறு வலியையும் காட்டிக் கொள்ளாமல் டி போட்டுக் கொண்டே மிருதுளாவை உள்ளே அழைத்தாள் அம்புஜம். 

“என்னடி மிருது இவாளும் சாப்பிட வர்றப் போறான்னு  சொல்லாமல் இப்படி வந்து நிக்கறா? நான் நம்ம அஞ்சு பேருக்கு தானே சமைச்சிருக்கேன். மறுபடியும் குக்கர்ல சாதம் வச்சிடுறேன். ஆனா மத்ததெல்லாம் பத்தும்மான்னு கொஞ்சம் பாரேன் மா” 

“நான் என்னப் பண்ணுவேன் மா. எங்க கிட்டயும் ஒண்ணுமே சொல்லலை. இப்படி திடுதிப்புன்னு வந்திருக்கா. ஓகே ஓகே நீ செய்திருப்பதெல்லாம் பத்தும்மா நீ கவலைப் படாதே.”

என்று மெதுவாக அம்புஜமும் மிருதுளாவும் பேசிக்கொண்டிருக்கையில்…

“என்ன அம்மாவும் பொண்ணுமா குசு குசுன்னு பேசிண்டிருக்கேங்கள் அடுப்படில?” என்று கேட்டுக்கொண்டே அடுப்படிக்குள் நுழைந்த பர்வதத்திடம் அம்புஜம் ஒரு தம்பளர் டியை கொடுத்து…

“ஒண்ணுமில்லை மாமி சாப்பாடெல்லாம் ரெடின்னும் எல்லாம் போதுமான்னும், டேஸ்ட் பார்க்கவும் மிருதுளாட்ட சொல்லிண்டிருந்தேன். அவளும் எல்லாம் போதும் நல்லாயிருக்குன்னு சொல்லிண்டிருந்தா நீங்க வந்துட்டேங்கள்”

“என்ன சபெஷல் உங்க பொண்ணு மாப்பிள்ளை தலைதீபாவளிக்கு?”

“காலை ல எங்க அம்மா பஞ்சு மாறி இட்டிலி, பொங்கல், வடை, சாம்பார் சட்னி எல்லாம் பண்ணினா அன்ட் லஞ்சுக்கு ஃபுல் கல்யாண மெனுவ தனியாளா செய்திருக்கா.”

என்று ஊருக்கு வந்த நாள் முதல் வெறும் ரசம் சாதமும், தொட்டுக்க ஒண்ணுமில்லாத கல்லு இட்டிலியும் மட்டுமே செய்துத் தந்த பர்வதத்திடம் கூறினாள் மிருதுளா. 

“ஓ! ஆமாம் ஆமாம் காலைல சாம்பார் வச்சுட்டா அதே மத்தியானத்துக்கும் ஆச்சே இல்லையா மாமி”

 என்று பர்வதம் கூறியதும் மிருதுளா வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு 

“அப்படி இல்லை காலைல டிஃபனுக்கு டிஃபன் சாம்பாரும் மத்தியானத்துக்கு சாப்பாட்டு சாம்பாரும் என ரெண்டு வகை சாம்பார் செஞ்சிருக்கா என் அம்மா. ஏன்னா எனக்கு டிஃபன் சாம்பாரை சாதத்தில் பிசைந்து சாப்பிடப் பிடிக்காது.”

இவ்வாறு மாமியார் விஷத்தைக் கக்க அதை மிருதுளா தடுக்க என உரையாடிக் கொண்டிருக்கையில் அம்புஜத்திற்கு டாய்லெட் போக வேண்டியிருக்க மிருதுளாவின் கையை பிடித்து அழுத்தி அமைதியாகும் படி செய்கைக் காட்டிவிட்டு பர்வதத்திடம்

“மாமி கொழந்தைகள் எப்பவாவது தான் வர்றா அப்போ அவாளுக்கு பிடிச்சதை எல்லாம் செய்துக் கொடுக்க தானே அம்மாக்களுக்கு தோணும் இல்லையா சொல்லுங்கோ.”

“ஆமாம் ஆமாம்” என்று அலுத்துக் கொண்டாள் பர்வதம். 

“நீங்க ஹால்ல இல்லாட்டி ரூம்ல உட்கார்ந்து பேசிண்டிருங்கோ இதோ நான் டாய்லெட் போயிட்டு வந்துடறேன். மாமிய கூட்டிண்டுப் போமா மிருது”

என்று வேகமாக சென்றாள் அம்புஜம். பாவம் அவள் அவசரம் மற்றும் அவள் படும் அவஸ்தை அவளுக்குத் தானே தெரியும். 

மிருதுளா தன் மாமியாரை உள்ரூமிற்குள் அழைத்துச் சென்று ஒரு பாயை விரித்து அமரச் சொன்னாள். பர்வதம் அமர்ந்துக் கொண்டே..

“உனக்கும் நவீனுக்கும் தலைதீபாவளிக்கு என்ன செஞ்சா உன் அப்பா அம்மா? நீ நைட்டில இருக்க நவீன் என்னடான்னா ஒரு டிஷர்ட்டும் ஷார்ட்ஸும் போட்டுண்டிருக்கானே”

“காலை ல இருந்து பத்து மணி வரைக்கும் புது டிரஸ் தான் போட்டுண்டிருந்தோம். கொஞ்ச முன்னாடி தான் மாத்தினோம். இதோ இந்த புடவையும், ஷர்ட்டும் பேன்ட்டும் தான் என் அப்பா அம்மா எங்களுக்கு தந்தா. ஈவினிங்க்கு வேற டிரஸ் வாங்கியிருக்காளாம். அதுவுமில்லாம வேற ஏதோ ஒரு சர்ப்ரைஸும் இருக்குன்னு சொல்லிருக்கா அது என்னன்னு தெரியலை”

“என்னத்துக்கு ரெண்டு டிரஸ் எடுத்திருக்கா?”

“அதை அவாகிட்ட தான் கேட்கணும் மா”

என்று மிருதுளா சொல்லிக் கொண்டிருக்கும் போது அதைக் கேட்டுக்கொண்டே அம்புஜம் உள்ளே நுழைந்தாள்.

“அது ஒண்ணுமில்லை மாமி கடைக்கு போனபோது ஒரு டிரஸ் எடுக்கத் தான் போனோம் ஆனா அங்க எங்களுக்கு ரெண்டும் பிடிச்சதுனால ரெண்டையுமே வாங்கிண்டு வந்துட்டோம். அந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்ட சாயந்தரம் இவாகிட்ட கொடுக்கலாம்ன்னு இருந்தோம்…சரி இப்போ நீங்களும் இருக்கேங்கள் இப்பவே குடுத்துட்டாப் போச்சு. என்ன சொல்லறேங்கள் மாமி?”

“ஆமாம் ஆமாம் இப்போ குடுதேங்கள்ன்னா நாங்களும் என்னது அதுன்னு தெரிஞ்சுப்போம்”

“இல்லாட்டினாலும் நானும் நவீனும்  ஆத்துக்கு வந்து காம்மிச்சிருப்போமே மா”

“சரி சரி …இந்தா மிருது இது உனக்கு, அது மாப்பிள்ளைக்கு.. நீயே கொண்டு போய் அவர்கிட்ட குடு”

“என்னது மா இது? சரி இரு நான் நவீகிட்டயும் குடுத்துட்டு ரெண்டு பேரும் ஒண்ணா ஓபன் செஞ்சுப் பார்க்கறோம்”

“நவீ , நவீ… இந்தாங்கோ இது உங்களுக்காக உங்க மாமனார் மாமியாரின் தீபாவளி கிஃப்ட். இது என்னோடது. ரெண்டு பேருமா திறந்துப் பார்ப்போமா”

“இப்பவே வா. சரி ஓகே நீயே பிரிச்சுக் காட்டு”

“வாவ் லவ்லி!!! உங்களுக்கு கோல்ட் ப்ரேஸ்லெட் நவீ. வாவ் !!! எனக்கு தோடு. ரொம்ப அழகா இருக்குமா. இந்தாங்கோ அப்பா அம்மா பாருங்கோ”

என்று மிருதுளா இரண்டையும் ஈஸ்வரன் கையில் கொடுத்தாள். ஈஸ்வரன் வாங்கியதும் அதைப் பார்க்காமல் பர்வதத்திடம் கொடுத்தார். ஆனால் பர்வதம் கை தவறியது போல நடித்து இரண்டு டப்பாக்களையும் கீழே போட்டாள். உடனே அம்புஜம் அதை எடுத்து மறுபடியும் பர்வதத்திடம் கொடுத்தாள். அதை பார்த்தும் பார்க்காதது போல மிருதுளாவிடமே கொடுத்தாள் பர்வதம். மிருதுளா அதை வாங்கி பீரோவில் வைத்து விட்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தாள்.

“சரி எல்லாருமா பேசிண்டே இருந்தா எப்படி சாப்பிடண்டாமா!! வாங்கோ உட்காருங்கோ. மொதல்ல ஈஸ்வரன் மாமா, பர்வதம் மாமி, ப்ரவின், பவின், மிருதுளா, மாப்பிள்ளை உட்காருங்கோ.” 

என்றாள் அம்புஜம்

“இல்லை ராமானுஜம் மாமா அவாகூட உட்காரட்டும் நானும் நீங்களும் அப்பறமா சாப்பிடுவோமே”

“பர்வதம் மாமி நீங்க மாமாவோட உட்காருங்கோ ப்ளீஸ் நாங்க மூணு பேரும் லேட்டா தான் காலைல டிஃபன் சாப்பிட்டோம் அதுனால எங்களுக்கு இப்போ பசியில்லை அதுதான் சொன்னேன்”

“பர்வதம் ஆவா தான் சொல்லறா இல்லையா வா வந்து உட்காரு” என்று ஈஸ்வரன் சொன்னதும் அமர்ந்தாள் பர்வதம்.

அம்புஜத்தால் குனிந்து பரிமாற முடியாததால் அவள் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொடுக்க ராமானுஜமும், வேனுவும் பரிமாறினார்கள். அனைவரும் சாப்பிட்டு எழுந்தப் பின்னர் அவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு தாம்பூலம் கொடுத்தார் ராமானுஜம். பின்பு அவர்கள் மூவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். 

ராமானுஜமும் அம்புஜமும் சாப்பிட்டு எழுந்ததும்…ஈஸ்வரன்

“சரி மாமா நாங்க கிளம்பறோம். சாப்பாடு சூப்பரா இருந்தது மாமி.”

“தாங்க்ஸ் மாமா. ஏன் சாயந்தரமா வெயில் தாழ கிளம்பலாமே ஏன் இந்த வெயில்ல கிளம்பறேங்கள்?”

“இல்ல என் தம்பி ஆத்துக்கும் என் மச்சினர் ஆத்துக்கும் நாங்க போகணும் அதுதான் கிளம்பறோம் மாமி”

“ஓ !! அப்படியா சரி மாமி. ஒரு நிமிஷம் இருங்கோ”

என்று உள்ளேச் சென்று மிருதுளாவிடம் பீரோவைத் திறந்து அதன் உள்ளிருந்த  புடவை,  ப்ளௌஸ் பிட், வேஷ்டி, துண்டை எடுத்து ஒரு தாம்பாளத்தில் அதோடு வெற்றிலை பாக்கு, பழம், பூ வைத்து அவளின் மாமனார் மாமியாரிடம் கொடுக்கச் சொன்னாள் அம்புஜம். ப்ரவின் மற்றும் பவினுக்கு ஆளுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து வேண்டியதை வாங்கிக்கச் சொன்னார்கள். பின் ஈஸ்வரன் குடும்பம் கிளம்பும் போது நவீனிடம்….

“நாளைக்கு சாயந்திரம் ரெண்டு பேரும் வந்திடுங்கோ சரியா” 

என்று சொன்னார் ஈஸ்வரன் அதற்கு நவீன்

“ஆங் ஆங் அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீங்க எல்லாரும் பத்திரமா ஆத்துக்கு போங்கோ. பை”

அவர்களுக்கு ஆட்டோவை வரவழைத்தார்  ராமானுஜம். அதில் ஏறிச் சென்றனர் நவீன் குடும்பத்தினர். அவர்களை வழியனுப்பி வைத்தப்பின் மிருதுளா குடும்பத்தினர் வீட்டினுள் வந்தனர். அனைவரும் சற்று நேரம் உறங்கப் படுத்துக்கொண்னர். வேனுவும் நவீனும் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர். 

மாலை நான்கு மணிக்கு அம்புஜம் எழுந்து காபி டிக்காக்ஷன் போட்டு அனைவருக்கும் காபியும் கீரை வடையும் செய்து கொடுத்தாள். மிருதுளா நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததால் அவளை எழுப்பவில்லை. ஐந்து மணி அளவில் மிருதுளா எழுந்தாள். அவள் ஃப்ரெஷ்ஷாகி வருவதற்குள் அவளுக்கும் காபி அன்ட் வடையை எடுத்து வைத்தாள் அம்புஜம். அன்று மாலை புதுத்துணி உடுத்தி அனைவரும் கோவிலுக்குச் சென்று வந்ததும் மீண்டும் வேனுவும் நவீனுமாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். ராமானுஜம், அம்புஜம், மிருதுளா மூவரும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் அக்கம் பக்கத்தினருடன் பேசிக் கொண்டுமிருந்தனர்.  ராமானுஜத்தின் தம்பி ராமநாதன் அவர் மனைவி குழந்தையுடன் பைக்கில் வந்திறங்கினார். 

“வாங்கோ வாங்கோ ஹாப்பி தீபாவளி” என்றாள் அம்புஜம்.

“வாங்கோ சித்தப்பா அன்ட் சித்தி. வாடி வாண்டு” என்றாள் மிருதுளா

“வா வா ராமநாதா. வாம்மா” என்றார் ராமானுஜம்

அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அம்புஜம் அனைவருக்கும் காபி போட்டு பட்சணங்களுடன் கொடுத்தாள். அப்போது ராமநாதனின் மனைவி அம்புஜத்திடம்…

“மன்னி நம்ம மிருதுக்கு என்ன ஒரு ஆறு மாசம் ஆகிருக்குமா?”

“ஆமாம் ஏன் கேட்கற”

“இல்லை ஆறு மாசமாகியும் அவள் இன்னமும் முந்தித்ததை விட ரொம்ப ஸிலிம்மா அழகா இருக்கா. வயிறு தெரியவேயில்லையே.”

“அதுக்கு இப்போ உனக்கென ம்மா”

“இல்ல மன்னி வயிறு இன்னமும் பெரிசாகலைன்னா…. அப்போ மிருதுக்கு ஆண் குழந்தைத் தான்ன்னு சொல்ல வரேன். “

“சித்தி எங்களுக்கு பொண்ணு தான் வேணும்”

“உன்னப் பார்த்தா எனக்கென்னவோ ஆண் குழந்தைன்னு தான் தோனறது மிருது”

“சரி சரி ஆணோ பொண்ணோ நல்லபடியா ஆரோக்கியமா பொறக்கட்டும்”

“சரி மன்னி நாங்க கிளம்பறோம் இன்னும் சில ஃப்ரெண்ட்ஸ் ஆத்துக்கெல்லாம் போகவேண்டியிருக்கு”

“சரி இந்தா இந்த பட்சணங்களை எல்லாம் பேக் பண்ணிருக்கேன். எடுத்துக்கோ”

“தாங்க்ஸ் மன்னி அப்போ நாங்க வரோம் மிருதுளா, மாப்ள அன்ட் வேனு”

என்று வந்து சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றனர் ராமநாதன் குடும்பத்தினர். அவர்கள் சென்றதும் இரவு உணவு அருந்தியப் பின் அம்புஜம் மிருதுளாவையும், மாப்பிள்ளையையும், வேனுவையும் கிழக்குப் பார்த்து உட்காரச் சொல்லி ராமானுஜத்திடம் சுத்திப் போடச் சொன்னாள். அவரும் அவர்களுக்கு சுத்திப்போட்டார். பின்னர் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கலானார்கள். 

நவீன், மிருதுளாவின் தலை தீபாவளி சிறப்பாக நடந்தேறியது. தலைதீபாவளிக்கு இரண்டே நாள் மட்டும்  சென்று வர அனுமதிக் கொடுத்துவிட்டு அதில் பாதி நாள் அவர்களும் வந்திருந்தார்கள் நமது கெட்டிக்கார மூத்த தம்பதியர்.  அம்புஜம் தனது பிரச்சினையை வெளிக்காட்டிக் கொள்ளாமலே அனைவருக்கும் அனைத்தையும் செய்து முடித்து இரவு படுத்ததும் உறங்கிப் போனாள். பிள்ளைகளுக்காக வாழும் பெற்றவர்கள் ஆயிற்றே!!! 

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s