மூன்று நாட்களில் அதாவது நவம்பர் ஒன்பதாம் தேதி தீபாவளி. மிருதுளாவின் பெற்றோர் சந்தோஷத்துடன் நவீன் மிருதுளா ஊருக்கு வந்த அடுத்த நாள் அவர்கள் வீட்டுக்குச் சென்று தலைதீபாவளிக்கு முறையாக அழைப்பு விடுத்தனர்.
“எங்க பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஏழாம் தேதியே அதாவது நாளைக்கே தலைதீபாவளிக்கு அனுப்பி வச்சிடுங்கோ மாமா” என்று பூ பழ தட்டுடன் கூறினார்கள் ராமானுஜம் தம்பதியர்.
“அப்படியா!!! அவா ரெண்டு பேரும் எட்டாம் தேதி இங்க மத்தியம் சாப்ட்டுட்டு உங்க ஆத்துக்கு வருவா” என்று ஏழாம் தேதி அனுப்ப விரும்பாததை ஈஸ்வரன் மறைமுகமாக கூறியதும் ராமானுஜமும் அம்புஜமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பின் மிருதுளாவையும் மாப்பிள்ளையையும் பார்த்தனர். மிருதுளா ஒன்றும் கூற முடியாமல் நின்றிருந்தாள். நவீன் தலையை குனிந்து நின்றிருந்தான்.
“சரி நாங்க அப்ப கிளம்பறோம் …வரோம்”
“இருங்கோ இதோ காபி போட்டுடறேன்”
“இல்ல மாமி எங்களுக்கு நிறைய வேலையிருக்கு. அம்பு கிளம்பலாமா”
“நாங்க போயிட்டு வரோம் மாமி. வரோம்மா மிருது. அப்போ எட்டாம் தேதியே வாங்கோ மாப்பிள்ளை”
என்று சந்தோஷத்துடன் வந்தவர்கள் மனவேதனை மற்றும் அவமானத்துடன் திருப்பிச் சென்றார்கள். மிருதுளாவிற்கு மிகவும் சங்கடமாக இருந்ததது. அவள் பெற்றோர் சென்றதும் நேராக மாடிக்குச் சென்று அவளது கோபத்தை அடக்க முயற்சித்துக் கொண்டிருக்கையில் நவீன் ரூமிற்குள் நுழைந்தான்.
“ஹேய் மிருது ஏன் இங்க வந்து இப்படி உட்கார்ந்துண்டிருக்க? என்ன ஆச்சு?”
“ப்ளீஸ் லீவ் மீ அலோன் நவீ”
“ஏய் வாட் ஹாப்பென்ட் மிருது?”
“உங்களுக்கு என்ன நடந்ததுன்னு புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கறேங்களா நவீ?”
“சீரியஸ்ஸா புரியலை நீ ஏன் இப்படி வந்து உட்கார்ந்திருக்க”
“ஓ!! சூப்பர் நவீ!!! சூப்பர்!!! எங்க அப்பா அம்மா நம்மள நம்ம தலைதீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி வரச்சொன்னதுக்கு ஒண்ணு …இல்லை அவாள முந்தின நாள் தான் அனுப்ப முடியும்னோ ….இல்ல ரெண்டு நாள் முன்னாடி எல்லாம் அனுப்ப முடியாதுன்னோ சொல்லிருக்கணும் அத விட்டுட்டு அதென்ன அப்படி ஒரு பதில் கொடுக்கறா உங்க அப்பா. அதுல தான் என்ன ஒரு அதிகாரம்!!! எவ்வளவு ஆசையா சந்தோஷமா என் அப்பா அம்மா வந்தா அவாள எப்ப வந்தாலும் சங்கடப்படுத்தி அனுப்பறதே வேலையா வச்சிருக்கா உங்க அப்பாவும் அம்மாவும். இது உங்களுக்குப் புரியலைன்னு சொல்லறேங்கள்”
“ஓ!! அதுவா… நானும் கவனிச்சேன். அப்பா அப்படி பேசினதுக்கு நான் என்ன பண்ணுவேன் மிருது”
“ஏன் அப்படி பேசறேங்கள்ன்னு கேட்க தோணலையா நவீ உங்களுக்கு??”
“அவா அப்படி தான் !!!என்ன பண்ண?”
“சரி இதே மாதிரி என் அப்பா உங்க அப்பாகிட்ட பேசியிருந்தா இதே மாதிரி தான் சொல்லிருப்பேங்களா நவீ?”
“ஜஸ்ட் லீவ் இட் மிருது”
“எப்படி!!! எப்படி!!! ஜஸ்ட் லீவ் இட் டா!!!!”
“உங்க அப்பா அப்படி எல்லாம் பேச மாட்டார்”
“ஆமாம் எங்க அப்பா அம்மா மரியாதை தெரிஞ்சவா அதுனால அப்படி எல்லாம் பேச மாட்டா தான் ஆனா அதுக்காக ….உங்களை கல்யாணம் பண்ணிண்டு வந்த நாள் முதலா எப்ப அவா வந்தாலும் நொடுக்குன்னு ஏதாவது சொல்லறதே பொழப்பா வச்சிருந்தா எவ்வளவு நாள் தான் நானும் பொறுத்துக்கறது? என்னைத் தான் எப்ப பாரு நாக்குல விஷத்த வச்சுண்டு கொட்டிண்டே இருக்கான்னா என் பேரன்ட்ஸையும் அதே மாதிரி தான் பேசறா. என் மேலேயோ இல்ல என் பேரன்ட்ஸ் மேலயோ ஏதாவது தப்பிருக்கா?? பின்ன ஏன் எங்கள கண்டாளே இப்படி விஷத்த கக்கறா?”
என்று அத்தனை நாள் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தாள் மிருதுளா. குட்ட குட்ட குனிந்துக்கொண்டேயிருந்தால் குட்டுபவர்கள் இன்னும் பலமாகத் தான் குட்ட நினைப்பார்களே தவிர குட்டுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள்.
நவீன் மௌனம் காத்தான். ஏனெனில் மிருதுளா கேட்டதில் நியாயமிருந்தது. அவன் தன் அப்பாவிடம் கேட்காதது தவறே. பல குடும்பங்களில் அவர்கள் அப்படித் தான், அவர்களிடம் பேச முடியாது பேசி பிரயோஜனமில்லை என்று எண்ணி விலகுவதால் அதைச் செய்பவர்கள் ஏதோ அவர்களுக்கு பயந்து தான் எவரும் எதிர்த்து பேசவில்லை என்றெண்ணி மீண்டும் அதே மாதிரியான பேச்சையும் திமிரு தனத்தையும் தொடர்வார்களேயின்றி ஒருநாளும் திருந்த மாட்டார்கள். அது போல தான் இங்கேயும் நடக்கிறது.
உண்மையில் தங்கள் பிள்ளைகள் நன்றாக சந்தோஷமாக வாழவேண்டும் என்றெண்ணும் பெற்றவர்கள் இப்படி கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் வம்பு வளர்க்க மாட்டார்கள்.
“ப்ளீஸ் நீங்க கீழ போங்கோ நவீ. நான் என்னை நானே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திண்டுட்டு வரேன். உங்களால அவாள்ட்ட கேட்டக முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..”
“சரி விடு மிருது. கண்ணைத் துடைச்சுக்கோ. இதுக்கெல்லாமா அழுவுறது? பார்த்துக்கலாம் வா”
“இதுக்காக மட்டுமில்ல நவீ நான் இந்த ஆத்துக்கு காலடி வச்ச நாள் முதலா இதைத் தான் அனுபவிச்சிண்டிருக்கேன். நீங்க போங்கோ நான் வரேன்”
நவீன் கீழேச் சென்றான்.
“என்னவாம் உன் பொண்டாட்டிக்கு? ஏன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணறா?”
என்று ஈஸ்வரன் கேட்டதுக்கு “நாங்கள் எங்கள் ரூமில் மாடியில் கதவு சாத்திக்கொண்டு பேசியது எப்படி உங்களுக்கு தெரிந்தது” என்று கேட்காமல் நவீன் அவரை ஒரு பார்வைப் பார்த்திவிட்டு ஃப்ரிட்ஜிலிருந்து ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து மடக் மடக்கென்று குடித்துவிட்டு டிவியை ஆன் செய்து பார்க்கலானான்.
சற்று நேரததில் மிருதுளா கீழே வந்தாள். நவீன் டிவி பார்த்துக் கொண்டும் மற்றவர்கள் ஏதோ வேண்டாதவர்கள் தங்கள் வீட்டில் அமர்ந்திருப்பது போல நடந்துக்கொண்டனர். இப்படிப்பட்ட சூழல் தன் குழந்தைக்கு சரியில்லை என்றெண்ணி அவள் ப்ரவின் மற்றும் பவினுடன் பேச்சுக்கொடுத்தாள்.
“ஹே ப்ரவின் அன்ட் பவின் உங்க காலேஜ் எல்லாம் எப்படி போறது?”
“நல்லா தான் போறது” என்றான் ப்ரவின்
“பவின் உனக்கு”
“ம்..ம்… நல்லாருக்கு”
“சரி நீ குஜராத் ல இருந்து வந்த கதை எல்லாம் உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னயா? எல்லாரும் என்ன சொன்னா?”
“ஒண்ணும் சொல்லலை”
என்று இருவருமே ஓரிரு வார்த்தைகளில் பதிலளிக்க அதற்கு மேல் பேச்சைத் தொடர விரும்பாத மிருதுளா நவீனுடன் சேர்ந்து டிவி பார்த்தாள். அவளுக்கு ஏதோ காற்றுப் புகாத ஒரு கூண்டில் அடைப்பட்டிருப்பது போல இறுக்கமாக இருந்தது. சாப்பிட்டப்பின்னர் மிருதுளா பாத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டு இடத்தை சுத்தம் செய்த பின் சற்று நேரம் உறங்க வேண்டும் போல் தோண கீழே உள்ள ரூமிற்குள் சென்று பார்த்தாள் அங்கே ஈஸ்வரன் படுத்திருந்தார். ஹாலில் படுக்கலாமென்று வந்து பார்த்தாள் அங்கு பர்வதம், ப்ரவின் மற்றும் பவின் படுத்திருந்தனர் நவீன் சேரில் அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தான்.
மிருதுளா சற்று நேரம் கதவோரமாக அமர்ந்திருந்து விட்டு தூக்கம் சொக்க ஆரம்பித்ததும் மெல்ல எழுந்து மாடி ரூமிற்குச் சென்றாள். நவீன் மிருதுளா மாடிக்கு போவதைப் பார்த்தான். அவள் சென்ற கொஞ்ச நேரத்தில் அவனும் மாடிக்குச் சென்றுப் பார்த்தான் அவள் படுத்திருந்தாள்.
“என்ன மிருது தூக்கம் வர்றதா?”
“ஆமாம் நவீ சொக்கறது. இந்த வெயில் ல மாடி ஏறி வரவேண்டாமே கீழேயே படுத்துக்கலாம்னு பார்த்தேன் இடமில்லை அதுனால தான் இங்கயே வந்து படுத்துட்டேன்”
“ஏன் கீழ உள் ரூமுல படுத்திருக்கலாமே”
“அங்க அப்பா படுத்திருக்கார். சரி நான் கொஞ்ச நேரமாவது தூங்கறேன்”
“நான் மட்டும் என்னப் பண்ணப்போறேன். இரு கதவை தாப்பா போட்டுட்டு வரேன்”
இருவரும் உறங்கினர். மாலை ஐந்து மணியானதும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று பழையப்படி பெல் சத்தம் கேட்டு பதறி அடித்துக்கொண்டு எழுந்தாள் மிருதுளா. அவள் எழுந்த வேகத்தைப் பார்த்ததும் நவீன் அவளை தட்டிக்கொடுத்து …
“ஒண்ணுமில்லை மிருது பெல்லு சத்தம் தான். பயப்படாதே ஒண்ணுமில்லை. இந்தா இந்த தண்ணியைக் குடி. இவாள…. நீ நிதானமா கீழ வா”
கீழே கோபத்துடன் வந்தான் நவீன்.
“யாரு அந்த பெல்லை அடித்தது”
“ஏன்!!!! நான் தான். விளக்கேத்த நேரமாச்சு இன்னுமா தூங்குவா? அதுதான் கூப்பிட்டேன்.” என்று நக்கலாக சொன்னாள் பர்வதம்
“இனி நாங்க மாடில இருந்தா யாரும் இந்த பெல்லை அடிச்சுக் கூப்பிடக்கூடாது”
“பின்ன உன் பொண்டாட்டி எப்ப பாரு மாடிலேயே இருந்தா ஒவ்வொரு தடவையும் ஏறி வந்து கூப்பிடவா முடியும்”
“இந்த பெல் இருந்தா தானே அடிப்பேங்கள்”
என்று கிடுகிடுவென மாடிக்குச் சென்று அந்த பெல்லை கழற்றி பரணில் வைத்தான் நவீன். போன முறையே செய்திருக்க வேண்டும். அப்போது மிருதுளா மட்டுமே ஆனால் இப்போது உறங்குவது தன் பிள்ளையும்மல்லவா அது தான் கழற்ற வைத்திருக்க வேண்டும்.
“சரி பெல்லை கழற்றிட்ட இப்போ உன் பொண்டாட்டியை கீழ வரச்சொல்லு” என்றாள் பர்வதம். தன் மகனின் மனைவிக்கு மிருதுளா என்ற பெயர் இருப்பதே மறந்துவிட்டாள் போல தோன்றுகிறது. நவீன் மேலே ஏற துவங்கும் போது மிருதுளா கீழே இறங்கிக் கொண்டிருந்தாள்.
மாசமாயிருக்கும் மருமகளுக்கு கீழே படுக்க இடம் கொடுக்க மனமில்லை, இவர்களுக்கு மேலே ஏறி கூப்பிட கஷ்டமாக இருக்கிறதாம் ஆனால் மாசமான மருமகள் டாய்லெட் போவதற்கும் படுத்துக்கொள்வதற்கும் ஏறி இறங்க வேண்டுமாம்.
மிருதுளா கீழே வந்ததும் நேராகா பாத்ரூம் சென்று ஃப்ரெஷ்ஷாகி வந்து விபூதி குங்குமம் இட்டுக்கொண்டு காபி போட அடுப்படிக்குள் சென்றாள். அப்போது பர்வதம்…
“இப்படி தான் குஜராத்ல விளக்கேதும் ஏத்தாம தூங்கிண்டே கிடப்பயா?”
மிருதுளாவிற்கு கோபம் வந்ததால் புத்தி வேலை செய்யவில்லை அதனால் திருப்பி சரியான பதிலளிக்க முடியாமல் வேகமாக அடுத்த விஷ அம்பு பரவதம் நாவிலிருந்து வெளி வருவதற்குள் காபியைப் போட்டுக்கொண்டு வெளியே அமர்ந்திருந்த நவீனுக்கு ஒரு தம்ளர் கொடுத்து தானும் குடித்துவிட்டு இருவரின் தம்பளரையும் பாத்திரங்கள் தேய்க்க போடுமிடத்தில் குனிந்து போட்டுக்கொண்டிருக்கையில் ஹாலிலிருந்து பர்வதம் …
“அப்படியே அங்க கிடக்குற பாத்திரங்களை எல்லாம் தேய்ச்சு வச்சிடு”
மிருதுளாவும் இருக்கைப் பலகையை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்து தேய்க்கலானாள். அதைப் பார்த்த நவீன்..
“மிருது நீ வேணும்னா எழுந்திரி நான் தேய்க்கறேன். இப்படி கீழ உட்கார்ந்துண்டு தேய்க்கறதுனால வயிறு அமுங்கறது பாரு”
“ஆமா ஆமாம்….நான் நாலு புள்ளகள பெத்துருக்கேன்….என்னமோ உலகதிசம் பாரு” என்று பர்வதம் நவீன் மிருதுளாவிடம் பேசுவதைக் கேட்ட பர்வதம் சொல்ல..
“ஆனா எங்களுக்கு இது தான் ஃபர்ஸ்ட் குழந்தை” என்று நவீன் திருப்பிக் கூறியது வெடுக்கென்று உள்ளேச் சென்றாள் பர்வதம்.
“ஏன் பா ? விடுங்கோ இதோ எல்லாத்தையும் தேய்ச்சாச்சு.”
என்று மிருதுளாவே எல்லாத்தையும் தேய்த்துவிட்டு பலகையிலிருந்து எழ நவீனிடம் கைக் கொடுக்குமாறு கூற நவீனும் அவளுக்கு கைக் கொடுத்து எழுப்பிவிட்டான்.
“நவீ நாம ஒரு வாக் போகலாமா”
“ஓ எஸ், இரு வேலட்டை எடுத்துண்டு வரேன்”
நவீன் வந்ததும் மிருதுளா உள்ளேச் சென்று பர்வதத்திடம்
“அம்மா நாங்க ரெண்டு பேரும் ஒரு வாக் போயிட்டு வந்துடறோம்”
“ம்..ம்…ம்… ஆமாம் என்ன இது ஆறு மாசமாக போறது உனக்கு வயிறே காணம்”
“அப்படின்னா!!! எனக்கு நீங்க சொல்லறது புரியலை”
“இல்ல மாசமான மாதிரி இல்லையேன்னு சொல்லறேன்”
மிருதுளாவிற்கு மீண்டும் கோபம் வர
“சரி நாங்க வரோம்”
என்று கூறி நவீனுடன் வெளியேச் சென்றாள்.
தனக்கோ இல்லை தன்னை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் தவறு நிகழ்ந்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்பதனால் தான் பாரதி “ரௌத்திரம் பழகு” என்று கூறியுள்ளார். எதிர்க்கும் துணிவின்றி தன் மனதிற்குள் தனக்குத் தானே நொந்துக்கொள்வதனால் வெளிப்படுவது ஆத்திரம் ..சினம்..கோபம்.
ஆத்திரம் அறிவற்றது என்பது மிருதுளாவிற்கு மிகவும் பொருத்தமான வாக்கியமாகும். பர்வதம் மிருதுளாவை இப்படி சீண்டிக் கொண்டே இருக்கும் போதெல்லாம் மிருதுளா கோபப்படாமல் இருந்தால் தான் அவள் மூளை விறுவிறுப்பாக வேலைச் செய்து பர்வதத்திற்கு சரியான பதிலடி கொடுக்க முடியும். இப்படி எதற்கெடுத்தாலும் கோபம் முந்திக்கொண்டால்… நஷ்டம் அவளின் உடம்பிற்கும் மனதுக்கும் தான் என்பதை மிருதுளா மட்டுமல்ல அவளைப் போன்ற பெண்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். கோபம் கண்ணை மட்டும் மறைக்காது மூளையையும் செயலிழக்கச் செய்யும். மிருதுளா ஆத்திரம் தவிர்த்து “பாரதி” பெண்ணாக விவேகத்துடன் கூடிய ரௌத்திரம் பழகியாக வேண்டும்.
தொடரும்……