ராமானுஜமும் அம்புஜமும் வீடு திரும்பியதும் ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டு மருதுளாவையும் வேனுவையும் அழைத்து அனைவருமாக நடந்தவற்றை அவர்களுக்குள் உரையாடி பின் நிச்சயதார்த்த தேதியையும் கூறி அன்றே நிச்சயம் பண்ணிடலாம் என்ற முடிவுக்கும் வந்தனர். அதை மாப்பிள்ளை வீட்டாரிடமும் ஃபோனில் தெரிவித்தனர். ராமானுஜமும் அம்புஜமும் தங்களுக்கு மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களை மட்டும் நிச்சயதார்த்திற்கு அழைத்தனர். மற்றவர்களை திருமணத்திற்கு அழைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து நிச்சயதார்த்தத்திற்கு நான்கு நாட்களே இருப்பதால் விறுவிறுப்பாக வேலைகளில் இருங்கினர். அம்புஜம் பங்கஜத்துக்கு ஃபோன் போட்டு நடந்த அனைத்து விவரங்களையும் கூறி நன்றியையும் தெரிவித்தாள். அதற்கு பங்கஜம்
“என்னத்துக்கு இப்போ தாங்ஸ் எல்லாம் சொல்லர அம்பு…ஏதோ என்னால முடிஞ்சது. நீ என் தோழி மேனகாக்கு தான் தாங்ஸ் சொல்லனும் ஏன்னா அவ மூல்யமா தானே இந்த வரன் வந்தது. சரி உனக்கும் நிறைய வேலைகள் இருக்கும் இன்னும் நாலு நாள் தானே இருக்கு. போய் ஆகவேண்டியதை பாரு. ஏதாவது ஹெல்ப் வேணும்னா ஒரு ஃபோன் போடு போறும். பை த பை மாமியார் ஆக போர என் அக்கா அம்பு… பை… “
“சரி பங்கு பை”
ராமானுஜத்தின் நண்பர்கள் விஷயத்தைக் கேள்வி பட்டதும் அவர்கள் அனைவரும் (ஒரு நாலு பேர். ராமானுஜத்திற்கு அதிக நண்பர்கள் இல்லாவிட்டாலும் இருக்கும் நாலு பேரும் உண்மையான நட்புடன் இருந்தனர்) ஆளுக்கு ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். ராஜேஷ் பூ மற்றும் மாலைகள், சதாசிவம் பழங்கள், ஸ்வீட்கள், வெங்கட் நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் சென்று வர வேன், வெற்றிமாறன் அன்று வேண்டிய காலை, மத்திய உணவு மற்றும் காபி, டி என ஒவ்வொரு வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யலானார்கள்.
அம்புஜம் தனது மகளுக்கு மேக்அப் போட அவர்கள் வீட்டுப்பக்கத்தில் இருந்த ஒரு அழகு நிலைத்தில் சொல்லி வைத்தாள்.
இப்படி நிச்சயதார்த்த ஏற்பாடுகள் எல்லாம் மடமடவென நடந்தது மருதுளா வீட்டில். நமது மாப்பிள்ளை நவீன் வீட்டில் என்ன செய்கிறார்கள் என்பதை…. மிருதுளா என்ன ஆனாள்? தொடரைப் படிக்கும் வாசகர்களாகிய நாம்
தெரிந்துகொள்ள நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது ஆகையால் வாருங்கள் போய் ஒரு எட்டு ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டு வருவோம்.
ஈஸ்வரன் அவர் உறவினர்கள் அனைவருக்கும் ஃபோனில் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். அனைவருக்கும் தெரிவித்தப்பின் பர்வதம் கூறளானாள்
“காலைல புடவ எடுக்க வெய்யிலில் போயிட்டுவந்ததால ஒரே தலைவலி. சரி ஏன்னா உங்க தங்கை அக்காக்கள் எல்லாரும் எப்ப வராளாம்? பேசாம நிச்சயதார்த்தத்தனைக்கு உங்க அக்காவையே சமைக்க சொல்லிடுங்கோ அப்பறம் நம்ம ஆம் ரொம்ப சின்னது அதனால உங்க அண்ணா ராசாமணி ஆத்துல வச்சுண்டுடலாம் அவராண்ட சொல்லிடுங்கோ. நம்ம பிச்சுமணியையும் என் அக்கா ரமணியையும் அவா ஆத்துக்கே போய் நிச்சயத்துக்கு அழைச்சுட்டு வரலாம். பூ மாலை பழங்கள் எல்லாம் பிச்சுமணி பார்த்துப்பான்.”
பர்வதம் பேசுவதிலிருந்து ஒன்றை நாம் நன்றாக புரிந்துக் கொள்ள முடிகிறது அது என்னவென்றால் அவள் வீட்டுச் சொந்தங்களை மட்டும் மதிப்பவள் கணவர் வீட்டு சொந்தங்களை நன்றாக தனது கணவர் மூலமே வேலை வாங்கும் சிறந்த ரிங் மாஸ்டர். அடுத்தவர்களிடம் தங்களுக்காக இதை செய்ய மடியுமா என்றெல்லாம் கேட்க தயக்கேமே இல்லாத, அடுத்தவர்களை ஏதோ அவளுக்கு செய்ய கடமை பட்டவர்கள் போல ஒரு நினைப்பு வேற… என்ன மக்களே இதில் உங்களுக்கு ஏதாவது கருத்துவேறுபாடு இருக்கிறதா?
ஈஸ்வரன் குடும்பத்தில் அவருடன் கூடப்பிறந்தவர்கள் ஐந்து பேர். ஒரு அண்ணன் ராசாமணி, இரண்டு அக்காக்கள் சொர்ணம், வரலட்சுமி, இரண்டு தங்கைகள் வசுந்தரா, சுபத்திரை. சொர்ணம் அனைவருக்கும் அக்கா ஆவார். இவருக்கு பர்வதத்தை அறவே பிடிக்காது. வரலட்சுமியையும் வசுந்தராவையும் சமையலுக்கு வரச்சொல்லிருக்காள் பர்வதம். அவர்களும் தங்களது சகோதரனுக்காக மட்டுமே சம்மதித்தனர். அவர்கள் அனைவரும் பணத்தை விட மனிதர்களை பெரிதும் மதிப்பவர்கள். தங்களது சகோதரன் ஈஸ்வரன் எதுக்கோ வாக்கப்பட்டு முருங்கை மரம் ஏறி ஆக வேண்டியிருப்பதை புரிந்து அவருக்காக அவர் மேல்லுள்ள பாசத்தினால் செய்ய முன்வந்தனர்.
பர்வதம் வேண்டுமென்றே ஒரு சாதாரணமான ஒரு அழுது வடியும் நிறத்தில் நிச்சயதார்த்தப் புடவையை மிருதுளாவுக்காக எடுத்தாள். அது பட்டுப்புடவை கூட இல்லை. ஆனாலும் அவளை கேள்விகேட்க யாரும் இல்லை அப்படியே கேட்டாலும் பிரயோஜனம் இல்லை என்பதும் அனைவரும் தெரிந்ததே. அவளை யாருமே திருத்த முயற்சிக்காமல் அவள் அப்படி தான் என்று விலகிச்சென்ற உறவினர்களே அதிகம்.
நிச்சயதார்த்தம் நாள் வந்தது பர்வதம் வீட்டார் அனைவரும் பர்வதம், ஈஸ்வரன், நவீன், ப்ரவீன் மற்றும் பவின் ராசாமணி வீட்டிற்கு அன்று காலையிலேயே வந்துவிட்டனர். வரலட்சுமியும் வசுந்தராவும் அன்று காலை முதல் சமயற்க்கட்டிலேயே இருக்கவேண்டியதாயிற்று.
அனைவரும் சேர்ந்து நிச்சயதார்தத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து சாஸ்த்திரிகளின் வரவுக்காகவும், பெண் வீட்டார் வரவுக்காகவும் காத்திருந்தனர்.
அன்று மாலை ராகுகாலத்திற்கு முன் ஒரு நாலு மணிக்கு சாஸ்த்திரிகள், தாய் மாமா பிச்சுமணி, பெரியம்மா ரமணி அவரவர் குடும்பத்துடன் ராசாமணி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
வாருங்கள் நம்ம மிருதுளா வீட்டிலிருந்து அனைவரும் கிளம்பி விட்டார்களா என்று தெரிந்துக்கொள்ளலாம்.
நிச்சயத்தன்று காலை அம்புஜம் வேனுவை கூப்பிட்டு மிருதுளாவோடு கோவிலுக்கு சென்று வரும்படி கூறி மிருதுளாவையும் நன்றாக கடவுளிடம் வேண்டிக்கொள்ள சொல்லி அனுப்பினாள்.
மிருதுளாவும் நன்றாக எண்ணை தேய்த்து குளித்து ஆத்திப்பின்னலிட்டு அழகான புடவை உடுத்தி கோவிலுக்கு புறப்பட்டு அறையிலிருந்து வெளியே வந்ததும் அவள் சொந்தங்கள் அனைவரும் அவளைப்பார்த்து
“மிருது உனக்கு கல்யாணகல வந்துடுத்து.”
“லட்சணமா இருக்கா நம்ம மிருது. நவீன் குடுத்துவச்சவர்”
என்றனர்
அம்புஜத்துடன் கூடப்பிறந்தவர்கள் மூன்று தங்கைகள் பாரிமளம், கோமளம், பங்கஜம். ஒரு அண்ணன் மணியன்.
ராமானுஜத்திற்கு ஒரே தம்பி ராமநாதன் அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இவர் மனைவி மேகலா.
அக்காவும் தம்பியும் கோவில் சென்று வந்ததும் சற்றுநேரம் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்து மத்திய உணவு உண்ட பின் ஒரு இரண்டு மணிக்கு அழகு நிலைத்தில் மிருதுளாவை கொண்டு விட்டான் வேனு. மிருதுளா அன்று தான் முதன்மதலில் மேக்அப் போட போகிறாள்.
அவளுக்கு மேக்அப் போட்டு பட்டுப்புடவை கட்டி அவள் வெளியே வந்ததும் வேனு அவளைப்பார்த்து கோபப்பட்டான். காலைல சிம்ப்ளா அழகா இருந்த மிருதுக்கா இந்த மேக்அப் உனக்கு சூட் ஆகலை…. எனக்குப்பிடிக்கலை
என்றதும் மிருதுவின் முகம் வாடியது. மேலும் வேனு வீட்டிற்கு சென்று அனைத்தயும் கலைச்சுட்டு காலைல இருந்த மாதிரி இரு அக்கா என்றதும் அவளுக்கு அழுகை வந்தது. இருவரும் வீடு வந்து சேர்ந்ததும் வேன் அனைவரையும் ஏற்றிக்கொண்டு இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தது. வேனு தனது தாயை அழைத்து வீட்டைத்திறக்க சொன்னான். அம்புஜம் வேனிலிருந்து இறங்கினாள்…
“என்னடா வேனு இப்ப என்னத்துக்கு ஆம தொறக்கனும்? எல்லாரும் காத்துண்டிருக்கா நாழி ஆகறது”
என்று கூறிக்கொண்டே வீட்டை திறந்தாள். உடனே மிருதுளா அழுதுகொண்டே குளியலறைக்குள் சென்றால்…அதைப்பார்த்த அம்புஜம்…
” ஏய் மிருது இப்போ ஏன் பாத்ரூமுக்குள்ள போனாய்? என்னாட வேனு என்ன ஆச்சு”
“அக்கா நீ உன் மேக்அப் எல்லாத்தையும் கலச்சுட்டு வா அக்கா”
“அடேய் என்னடா அக்காளும் தம்பியுமா விளையாடரேங்களா. அடியே மிருது இப்ப வெளில வரல அப்பறம் …” என்று அம்புஜம் கூறிக்கொண்டிருக்கும் போதே கதவு திறந்தது…
“டேய் வேனு இந்த மேக்அப் அழிய மாட்டேங்கறது டா. நான் என்ன செய்ய ?”
“என்னது ?? ஏன்டி இப்படி பண்ணறாய்? சீக்கிரம் மொகத்த தொடச்சுண்டு வா. இதுக்கு மேல ஒன்னும் பண்ணிடாதே…நீ நல்லா தாம்மா இருக்க. வாம்மா நாழி ஆகறதோனோ எல்லாரும் காத்துண்டிருக்கா வாசல்ல”
பங்கஜமும், ராமநாதனின் மனைவி மேகலாவும் உள்ளே சென்றார்கள் …
“என்ன வண்டி கிளம்பப்போறது. அத்திம்பேர் அங்க சத்தம் போடரார் இங்க அம்மாவும் புள்ளையும் பொன்னும் கூடிண்டு என்ன பண்ணறேங்கள்?”
“ஏய் மிருது ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“அவ தம்பிக்கு அவளோட மேக்அப் பிடிக்கலையாம் அதனால கலச்சுக்கப்போறேன்னு ஒரே அல்ச்சாட்டியம் பண்ணரதுகள் ரெண்டுமா. நான் என்னத்த பண்ண!”
“டேய் வேனு உங்க அக்கா இதுவரைக்கும் மேக்அப் போட்டு நீ பார்க்காததால உனக்கு அப்படி தோனரது அவ்வளவுதான். அவள் அழகா தான் இருக்கா. தம்பி சொன்னானாம்..அக்கா மேக்அப்ப அழிக்கறாளாம்…நல்ல தம்பி ..நல்ல அக்கா…”
வாசலில் இருந்து ராமானுஜம்….
“மணி மூன்றை ஆச்சு. இப்போ கிளம்பினாதான் ராகு காலத்துக்கு முன்னாடி அங்க எத்த முடியும். என்ன பண்ணரேங்கள் எல்லாருமா?!!”
நாலரை டூ ஆறு ராகு காலம் என்பதால் நாலு மணிக்கெல்லாம் ராசாமணி வீட்டிற்கு சென்று நிச்சயதார்த்ததிற்கு வேண்டியவற்றை அடுக்கி தயாராகி ஆறு மணிக்கு நிச்சயதார்த்ததை முடித்துக்கொண்டு இரவு உணவு உண்டு வீடு திரும்ப திட்டமிட்டிருந்தனர்.
ராமானுஜம் உறக்க சொன்னதும் அனைவரும் வீட்டைச் பூட்டிக்கொண்டு வேனில் ஏறினார்கள். சரியாக நாலு பத்துக்கு ராசாமணி வீட்டை சென்றடைந்தார்கள். ராசாமணி வீட்டிற்கு எதிர் விடு இவர்களுக்காக சுத்தம் செய்யது வைத்திருந்தனர். மிருதுளா வீட்டார் அனைவரும் அந்த வீட்டினுள் சென்று பழங்கள், பூக்கள், மாலைகள் அனைத்தையும் தாம்பாளத்தில் அழகாக அடுக்கி வைத்தனர். சக்கரையை ஒரு தாம்பாளத்தில் பரப்பி அதன் மேல் ஜெம்ஸ் மிட்டாயால் தனது அக்கா பெயரையும் வரப்போர அத்திம்பேர் பெயரையும் அழகாக பதித்தான் வேனு.
இதற்கிடையில் அனைவருக்கும் காபி பறிமாறப்பட்டது. எல்லாம் தயார் ஆகவும் மணி ஆறு ஆகவும் சரியாக இருந்தது. மிருதுளா வீட்டார் மிருதுளாவை அழைத்துக்கொண்டு நிச்சயதார்த்த சீர்களுடன் ராசாமணி வீட்டிற்குள் சென்றனர்.
நிச்சயதார்த்தம் துவங்கியது. நவீனுக்கு கூட பிறந்த தங்கைகள் யாரும் இல்லாததால் அவன் அத்தைப்பெண் மிருதுளாவின் நாத்தநாராக இருந்து சம்பிரதாயங்களை செய்தார்.
நிச்சயம் ஆனதும் ராமானுஜம் வேனுவிடம் ஒரு அழகிய மோதிரத்தைக்கொடுத்து மாப்பிள்ளைக்கு போட்டுவிட சொன்னார். வேனுவும் நவீனுக்கு மோதிரம் போட அனைவரும் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். பெரியவர்கள் அனைவரையும் நமஸ்காரம் செய்து ஆசிர்வாதத்தை பெற்றனர் நவீனும் மிருதுளாவும். வாழை இலை போட்டு இரவு உணவை ஈஸ்வரன் வீட்டார் பறிமாற பெண் வீட்டார் அனைவரும் உண்டு பின் வீட்டிற்கு திரும்பிச்செல்ல ஆயத்தம் ஆனார்கள். அப்பொழுது மிருதுளாவும் அனைவருடனும் வேனில் ஏற முயன்ற போது பங்கஜம் அவளை நவீனிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு வரச்சொல்லி அனுப்பினாள்.
மிருதுளாவும் நவீனிடம் பங்கஜம் கூறியதை மட்டும் கூறிவிட்டு வேனில் ஏறி அமர்ந்தாள். பங்கஜமும் மேகலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு…
“என்ன இந்த பொன்னு இப்படி இருக்கா?”
“ஆனாலும் இவ்வளவு வெகுளியா இருக்கப்படாது மிருது. நீ நிறைய கத்துக்கணும்…”
அம்புஜம் பர்வத்திடம் சென்று…
“பர்வதம் மாமி நிச்சயத்தை அமர்க்களப்படுத்திட்டேள். ரொம்ப நல்லா நடந்தது. இனி எங்க மிருது உங்க பொன்னு.” என்றதும் பர்வதம் சட்டென்று…
“அது கல்யாணத்துக்கு அப்பறம் தானே. இப்போ நிச்சயம் தானே முடிஞ்சிருக்கு. எல்லாரும் கிளம்பரா போல …உங்கள தேடப்போரா பாருங்கோ”
என்றாள். இதைக்கேட்டதும் அம்புஜத்துக்குள் ஒரு கவலை பற்றியது. அந்த யோசனையிலேயே அவள் வேனில் ஏறி அமர்ந்தாள். அப்போது மேகலா
“என்ன மன்னி ஒரு மாதிரி இருக்கேள்? என்ன ஆச்சு?”
“அதெல்லாம் ஒன்னுமில்லை காலையிலேருந்து ஒரே டென்ஷன் எல்லாம் நல்லப்படியா நடக்கணும்னு அதுதான் கொஞ்சம் அசத்தறது. வேறொன்னுமில்லை.”
அனைவரிடமும் மிருதுளாவின் குடும்பத்தினரும் ராமானுஜத்தின் நண்பர்களும் விடைப்பெற்றுக்கொண்டனர். வேனும் புறப்பட்டு சென்றது.
நம்ம மிருதுளா நவீன் நிச்சயதார்த்த்திற்கு வந்திருந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அடுத்து நிச்சயதார்த்ததிற்கு பின் கல்யாணத்திற்கு முன் வரை நடக்கவிருப்பதை வரும் செவ்வாய் அன்று வந்து தெறிந்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தொடரும்……