ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும் வழக்கம் போல் அவரவர் வேலைகளை செய்தனர் நவீனும், மிருதுளாவும்.
“மிருது உன் பாடங்களை படிக்கறயா? அடுத்த மாசம் நீ பரீட்சை எழுத வேண்டும் ஞாபகமிருக்கா?”
“ஏன் பா அத இப்போ ஞாபகம் படுத்தினேங்கள்!!! சரி நாளையிலிருந்து சின்சியரா படிக்கறேன் போதுமா?”
“ஹலோ என்னமோ எனக்காக படிக்கிற மாதிரி சலிச்சுக்கற. அதெல்லாம் நல்லா எழுதுவ… ரிசல்ட்டை நினைக்காம உன் கடமையை செய். நான் பாஸ் ஆயிட்டேன் இன்னும் ஒரே ஒரு எக்ஸாம் தான் எனக்கிருக்கு பா”
“ஆமாம் எனக்கு தான் இன்னும் ரெண்டு இந்த நவம்பர்ல ஒண்ணும் அடுத்த மே மாசம் ஒண்ணுமிருக்கு.”
இப்படி அவர்கள் படிப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கட்டும்.
நாம ஒரு சிறிய ஃப்ளாஷ் பேக்குக்கு செல்வோமா.
நேற்று நவீனிடம் செலவுக்கு எப்படி பணம் வந்தது? என்ற கேள்வியோடு தான் நேற்றைய பதிவை படித்து முடித்தோமில்லையா….அது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.
நவீன் குளிக்கச் சென்று வெகு நேரமானதில் மிருதுளாவிற்கு ஏதோ சரியாக படாததால்…கட்டிலில் அமர்ந்துக் கொண்டு வெள்ளிக்கிழமை அன்று நவீனின் நடவடிக்கைகள் மற்றும் சனிக்கிழமை காலை பிரட் பகோடா கேட்டபோது அவன் முழித்த முழி எல்லாவற்றையும் மனதில் அசைப்போட்டுப் பார்த்தாள். பின் அந்த மாதத்தின் செலவையும் ஓரளவு கணக்கிட்டும் பார்த்து நவீன் பணம் பற்றாக்குறை காரணமாக தான் அப்படி நடந்துக் கொண்டானோ என்ற எண்ணம் தோன்ற வேகமாக நவீனின் ஆபீஸ் பையிலிருந்து அவன் வேலட்டை எடுத்துப் பார்த்தவள் அதிர்ச்சி ஆனாள். ஏனெனில் அவள் பார்த்தது வெரும் இரண்டு ரூபாய் ஐம்பது காசு மட்டுமே….
அப்போது அவளுக்கு நவீனின் சங்கடம் புரியவே மிகவும் வருத்தப்பட்டு அவளது கண்கள் கலங்கின. பின் வேலட்டை பையினுள்ளேயே வைத்துவிட்டு அவள் மனதில்…
“அச்சோ அவரிடம் பணமில்லை …ஆனால் நானோ அதை புரிந்து கொள்ளாமல் இந்த நேரம் பார்த்து அதை வாங்கித் தா இதை வாங்கித்தா என அவரை கஷ்டப்படுத்தி இருக்கேனே கடவுளே!!! அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார். ஏன் என்னிடம் அவர் சொல்லவில்லை? நான் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி அவர் மிகவும் மனம் வருந்தியிருப்பார்.”
நவீன் பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணி வேக வேகமாக எல்லா இடங்களிலும், டப்பாக்களிலும், ஆங்கரில் மாட்டியிருந்த நவீனின் பான்ட் பாக்கெட்டுகள், நவீனின் ஆபீஸ் பேக் மற்றும் அவன் க்ளாஸுக்கு கொண்டு செல்லும் பேக் என எல்லாவற்றையும் அலசி எடுத்தாள் மிருதுளா. ஆனால் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை.
கடைசியாக அவர்கள் ஊரிலிருந்து கொண்டு வந்த பையையும் பார்த்துவிடலாம் என்று எடுத்து அதனுள் கையை விட்டு துழாவினாள். ஒரு சின்ன மனிப்பர்ஸ் கிடைத்தது. அது அவள் சிறுவயது முதல் ஆசையாக வைத்திருந்த து. வீட்டுக்கு வந்து விட்டு செல்லும் போது அன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் அந்த வீட்டு பிள்ளைகளிடம் காசு கொடுப்பது வழக்கம். அப்படி சேர்ந்த பைசாக்களை தன் தந்தையிடம் கொடுத்து நோட்டுகளாக மாற்றி அவளுக்கு மிகவும் பிடித்த மனிபர்ஸில் போட்டு அவளுடனே எடுத்து வந்ததை மீண்டும் எடுத்துப் பார்த்ததும் அவளுக்கு கடந்த கால நினைவுகள் எல்லாம் மலர்ந்தது. சட்டென அதிலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தவள் அதில் எவ்வளவு இருக்கு என்று பார்த்தாள். மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருந்தது. அவள் மனம் மகிழ்ந்து அதை எடுத்துக்கொண்டு பையை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு…..யோசிக்கலானாள்…
“இதை நான் குடுத்ததாக இருக்கக் கூடாது ஏனெனில் அது நவீனை இன்னும் சங்கடப்பட வைக்கும். என்ன செய்வது”
என யோசித்து…நவீனிடமிருந்த இரண்டு ஜீன்ஸில் ஒன்று ஆங்கரில் மற்றொன்று பீரோவில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. மிருதுளா நவீனின் மடித்து வைத்திருந்த ஜீன்ஸ் பாக்கெட்டில் பணத்தை வைத்து ஆங்கரில் இருந்த ஜீன்ஸை துவைக்க போட்டுவிட்டு குளியலறை கதவை தட்டினாள். நவீன் வெளியே வந்ததும்….
ஆங்கரில் ஜீன்ஸ் இல்லாததால் பீரோவில் மடித்து வைத்திருந்த ஜீன்ஸை எடுத்துப் போட்டுக்கொண்டான். அவனது பையிலிருந்த வேலட்டை ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைக்க முற்பட்டபோது ஏதோ பேப்பர் போல கையில் தடைப்பட்டது அதை எடுத்துப் பார்த்தான் மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுகள். மனதில் அளவில்லா மகிழ்ச்சிப் பொங்கியது. நேராக கடவுள் ஃபோட்டோவுக்கு முன் நின்று நன்றி தெரிவித்து….மனதில்
“ரொம்ப தாங்க்ஸ் கடவுளே!! என்ன பண்ணப் போறேனோ என்ற கவலை என்னை துளைத்தது. நல்ல வேளையாக என்றோ நான் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைத்த காசு தக்க சமயத்தில் உதவப் போகிறது. நல்ல வேள மிருது அந்த ஜீன்ஸ தோய்க்க போட்டா…அதுனால தானே இந்த ஜீன்ஸ எடுத்தேன். எல்லாம் நல்லதுக்கே. இன்னைக்கு என் மிருதுக்கு அவ கேட்டதுக்கும் மேலயே ஏதாவது வாங்கிக்கொடுக்கணும். நல்ல வேள நான் அவசரப்பட்டு என்கிட்ட காசு இல்லாததை அவள்ட்ட சொல்லலை. சொல்லிருந்தா பாவம் அவளும் நான் பட்ட அதே மனவேதனை பட்டிருப்பா.”
இதற்கு பிறகு நடந்தவை எல்லாம் நமக்கு தெரியுமே…..இப்பொழுது ஞாயிற்றுக்கிழமைக்கு வருவோம்.
படிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்கள் டிவியில் திரைப்படம் பார்க்கலானார்கள். அது முடிந்ததும் மத்திய உணவு உண்டு படுத்துக்கொண்டே தீபாவளிக்கு என்னென்ன அவர்கள் பெற்றோர்களுக்கும், தம்பிகளுக்கும் வாங்க வேண்டும் என்றும் அதற்கு எவ்வளவு செலவாகுமென்றும் கணக்கிட்டு அடுத்த வாரம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அனைத்தையும் வாங்கி வைத்து விட வேண்டும் என முடிவெடுத்தனர்.
“அதெல்லாம் சரி மிருது நாளைக்கு ஸ்கேன் எடுக்க ஹாஸ்பிடல் போகணும்.”
“ஆமாம் போகணும். பாப்பா எப்படி இருக்கு என்ன பண்ணறதுன்னு பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு. நீங்க ஆபீஸ் போகணுமே!!!! எப்படி நான் ஹாஸ்பிடல் போவேன்?”
“நீ ரெடியா இரு நான் ஆபீஸ்ல பர்மிஷன் போட்டுட்டு ஒரு பதினோரு மணிக்கு வந்து உன்னை கூட்டிண்டு போயிட்டு… முடிந்ததும் உன்னை ஆத்துல விட்டுட்டு ஆபீஸ் போயிக்கறேன் சரியா”
“ஓகே நான் ரெடியா இருக்கேன்”
அன்று மாலை இருவருமாக நடந்து சென்று டாபாவில் இரவு உணவருந்தி விட்டு வீட்டிற்கு வந்து…..
“நவீ உங்களுக்கு பையன் வேணுமா இல்லை பொண்ணு வேணுமா?”
“எந்த குழந்தையா இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் ஆனாலும் பொண்ணா இருந்தா நல்லாருக்கும்”
“எனக்கும் பொண்ணு தான் வேணும். சரி என்ன பெயர் வைக்கலாம்”
“அதெல்லாம் உன் டிப்பார்ட்மென்ட் மா….”
“அது என்ன என் டிப்பார்ட்மென்ட். …ஏன் உங்களுக்கு ஆசையா இல்லையா”
“ஒண்ணு பண்ணு உனக்கு நம்ம குழந்தைக்கு என்ன பெயர் வைக்கணும்ன்னு தோனறதோ அதை எல்லாம் ஒரு பேப்பர்ல எழுது அதுக்கப்பறம் நாம் ரெண்டு பேரும் உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணி பையன்னா என்ன பெயர் பொண்ணுன்னா என்ன பெயர்ன்னு இரண்டு பெயரை டிசைட் பண்ணலாம். என்ன சொல்லற?”
“ஓகே அது நல்ல ஐடியா. நாளைக்கே லிஸ்ட் ரெடி பண்ணிடறேன்.”
“சரி இப்போ தூங்குவோமா. நீ நல்லா தூங்கணும்ன்னு டாக்டர் சொல்லிருக்கா ஸோ இந்த டாப்பிக் நாளை தொடருவோம் இப்போ நிம்மதியா தூங்கு”
என மிருதுளாவின் தலையை வருடிக்கொடுத்து முத்தமிட்டு குட் நைட் சென்னான் நவீன்.
ஆக இந்த காந்தி ஜெயந்தி விடுமுறை நாட்களில் முதல் இரண்டு நாட்கள் ஐந்து ரூபாயிலும் அடுத்த இரண்டு நாட்கள் நூற்றி ஐம்பது ரூபாயிலும் என முன் பாதி இறுக்கமாகவும் பின் பாதி சற்றே ஏற்றமாகவும் இருந்தது.
மிருதுளா நவீனிடம் அது தான் வைத்த பணம் என்று சொல்லி அவனை சங்கடப்படுத்தாமல் நடந்துக்கொண்டதும், நவீன் தன் கர்ப்பிணி மனைவியிடம் தனது நிதி நிலைமையை சொல்லி கஷ்டப்படுத்த கூடாது என்று எண்ணியதும் அவர்களுக்கிடையே உள்ள புரிதலையும் ஒருவருக்கொருவர் அவர்களுக்குள்ளேயே நடத்திக் கொண்ட அன்பு போட்டி போல் நடந்தேறியது.
திங்கட்கிழமை விடிந்ததும் காலை எழுந்து காபி போட்டு, டிபன் செய்து, மத்திய உணவும் நவீன் ஆபீஸ் கிளம்புவதற்குள் தயார் செய்து வைத்தாள் மிருதுளா.
நவீனும் சீக்கிரம் எழுந்து ஆபீஸுக்கு செல்ல தயாராகி ஏழு மணிக்கெல்லாம் டிபன் அருந்த அமர்ந்தான்…
“என்ன நவீன் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டேங்கள் எப்பவும் எட்டு மணிக்கு தானே சாப்பிட வருவேங்கள்”
“இல்ல மிருது இன்னைக்கு பதினோரு மணி வரணும் இல்லையா அதுனால தான் சீக்கிரம் ஆபீஸுக்கு போறேன். சரி நீயும் சாப்பிடேன்”
“இல்ல பா எனக்கு ஒரு மாதிரி இருக்கு நான் அப்பறமா சாப்ட்டுக்கறேன். நீங்த சாப்பிட்டுட்டு கிளம்புங்கோ”
“அப்பறமா சாப்பிடணும் சரியா.”
“நிச்சயம் சாப்டறேன். எனக்காக இல்லாட்டினாலும் நம்ம குட்டிக்காக சாப்பிடுவேன் கவலைப் படாதீங்கோ.”
“சரி பதினோரு மணிக்கு ரெடியா இரு மறந்துடாதே.”
“மறக்கமாட்டேன் பா…நான் ரெடியா இருப்பேன்.”
“ஓகே பை நான் போயிட்டு வரேன்”
“பை நவீ. ஹாவ் அ நைஸ் டே”
நவீன் சீக்கிரம் ஆபீஸ் சென்று சம்பளத்தை வாங்கிவிட வேண்டும் என்ற அவசரத்தில் காலை ஏழரை மணிக்கெல்லாம் நேராக அக்கௌன்ட்ஸ் டிப்பார்ட்மென்ட்டுக்குச் சென்று சம்பளத்தை வாங்கியதும் அவனுக்கு புத்துயிர் வந்தது போல் இருந்தது. ஆனால் அதற்கும் தலை தீபாவளி செலவு வாசலிலேயே காத்திருக்கிறதே என்ற நினைப்பு அவனை சற்று கலங்கச் செய்தாலும் கடவுள் இருக்கிறார் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் என்று மனதில் நினைத்துக்கொண்டு தனது இருக்கையில் சென்றமர்ந்து வேலையில் மூழ்கினான்.
அன்று ஸ்கேன் செய்து அவர்கள் குழந்தையின் அசைவுகளைப் பார்த்ததில் நவீனும் மிருதுளாவும் பெருமகிழிச்சியில் இருந்தார்கள்.
மிருதுளா …அவர்களின் நிதி நிலவரம் தெரிந்துக்கொண்டமையாலும் அடுத்த மாதம் பெரிய செலவுகள் இருப்பதாலும்… மிகவும் சிக்கனமாக செலவுகளை செய்தாள். வெளியே சாப்பிடுவதை முழுவதுமாக தவிர்த்தாள். அப்படியே ஏதாவது சாப்பிட தோன்றினாலும் இன்னும் ஒரு மாதம் தானே அங்கே போய் சாப்பிட்டுக்கலாம் என்று தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டாள்.
பரஸ்பர அன்பும், விட்டுக்கொடுக்கும் பண்பும் இருந்தால் வாழ்க்கையில் எப்படி பட்ட கஷ்டத்தையும் சற்று வலியிருந்தாலும் அதை சந்தோஷமாக பொறுத்துக்கொண்டு எளிதாக தாண்டி விடலாம் என்பதற்கு இவர்களை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
தொடரும்…..