அத்தியாயம் 37: சுய உணர்தல்

சனிக்கிழமை விடிந்ததும் மிருதுளா சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு அடுப்படியில் காபிக்கு டிக்காக்ஷன் போட்டுக்கொண்டிருந்தாள். நவீன் மெல்ல கண்களைக் கசக்கிக்கொண்டே  பக்கத்தில் திரும்பிப் பார்த்து மிருதுளாவை காணாததால் சட்டென எழுந்தான். அடுப்படியில் ஏதோ சத்தம் கேட்க..

“மிருது நீ அடுப்படிலயா இருக்க?”

“குட் மார்னிங் நவீ. ஆமாம் காபிக்கு டிக்காக்ஷன் போட்டுண்டு இருக்கேன்”

“குட் மார்னிங். என்ன இன்னைக்கு சீக்கிரம் எழுந்துண்டுட்ட!!!”

“ஏன் முன்னாடி எல்லாம் அப்படி தானே எழுந்துண்டிருந்ததேன்!!! இப்போ அம்மா வந்துட்டு போனதுக்கப்பறத்திலேருந்து தான் மெதுவா எழுந்துக்க ஆரம்பிச்சேன்…இப்போ பேக் டூ ரொட்டீன் அவ்வளவு தான்…சரி சரி போய் ப்ரஷ் பண்ணிட்டு வாங்கோ ரெண்டு பேருமா காபி குடிக்கலாம்” 

“ஓகே ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் ல வந்துடறேன்”

இருவருமாக பேசிக் கொண்டே காபி குடித்துக் கொண்டிருக்கும் போது …

“நவீ நாம இன்னைக்கு ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு ப்ரெட் பகோடா சாப்பிடலாமா??”

நவீன் திரு திருவென முழித்துக் கொண்டே என்ன சொல்வதென்று தெரியாமல் காபியை மிகவும் கஷ்ட்டப்பட்டு குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மிருதுளா….

“ஹலோ மிஸ்டர் நவீ … நான் ஏதாவது கேட்கக்கூடாதது கேட்டுட்டேனா என்ன?? அப்படி முழிச்சிண்டே காபியை குடிக்கறேங்கள்!!! காபி நல்லா இல்லையா? இல்ல ஏதோ நினைப்புல முழிக்கறேங்களா?”

“ச்சே ச்சே காபி ஆஸ்யூஷ்வல் சுப்பர் தான்”

“அப்புறம் என்னவாம்? உங்க முழியே சரியில்லையே!!!”

“இல்லை ஒண்ணுமில்லை மிருது‌. இரு நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன் இன்னுட்டு நாம ரெண்டு பேருமா போய் சாப்பிட்டுட்டு வரலாம் சரியா”

“ஓகே சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ. எனக்கு ரொம்ப பசிக்கறது.”

குளியலறையில் ஷவரை ஃபுல்லாக திறந்துக் கொண்டுவிட்டு அழுதான் நவீன். தனது குடும்பத்திற்காக பத்து வருடங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் போதெல்லாம் தனக்கென தன்னை நம்பி ஒரு பெண் வருவாள் அவளுக்காக இது செய் வேண்டும், அது செய்ய வேண்டும், அவளை அங்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும் இங்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்றோ ஏன் ஹனிமூன் போக வேண்டுமென்று கூட நினைப்பில்லாமல் தனக்காக என்று ஒரு பைசா  சேர்த்து வைக்காததால் இன்று தன் கருவை சுமக்கும் தன் மனைவி ஆசைப்பட்டு கேட்கும் அதுவும் சின்ன சின்ன சாப்பாட்டு ஐட்டம்ஸ் கூட வாங்கிக்கொடுக்க முடியாமல் நிற்கின்றோமே என குலுங்கி குலுங்கி அழுது தீர்த்தான். 

பெற்றவர்களாவது பிள்ளையிடம் திருமணப்பேச்சு ஆரம்பித்ததும் சொல்லியிருக்க வேண்டும். நல்ல பெற்றவர்கள் என்றால் இந்த பேச்சுக்கே இடம் வைத்திருக்க மாட்டார்கள் ஆனால் நம்ம நாயகனை பெற்றவர்கள் அவற்றுக்கெல்லாம் விதிவிலக்கானவர்கள் ஆயிற்றே. நவீனின் திருமணத்திற்கு முன் அவனிடமிருந்து எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொண்டும் அவன் திருமணத்திற்கு வந்த மொய் பணத்திலிருந்து கேட்டு வாங்கி வந்த மூவாயிரத்தையும் (பாவம் மகன் இத்தனை வருடங்களாக உழைத்து தந்திருக்கிறானே என்ற எண்ணம் துளி கூட இல்லாமல்) ஃபோன் போட்டு திரும்பப் பெற்றுக்கொண்ட பெருந்தன்மையான பெற்றவர்களிடம் நாம் எப்படி எதிர்பார்ப்பது?!!! சில குடும்பங்களில் மூத்த பிள்ளைகளாக பிறத்தல் சாபக்கேடு என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம் இங்கே நம்ம நவீனுக்கு அதுவே நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

நவீன் குளிக்க போய் ரொம்ப நேரமானதும் மிருதுளா குளியலறை கதவைத் தட்டி…

“நவீ நவீ என்ன பண்ணறேங்கள்? ஏன் குளிச்சிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமாகறது? ப்ளீஸ் ஓபன் தி டோர் நவீ “

“ஹாங் இதோ ஆச்சு வந்துட்டேன். நீ ரெடியாகிடு”

“ஓகே ஓகே சீக்கிரம் வாங்கோ. என்ன ஆச்சு உங்களுக்கு? மொதல்ல வெளில வாங்கோ”

“இதோ இதோ வந்துட்டேன் போதுமா!!”

“ஏன் முகத்தை மறைச்சுக்கறேங்கள்?”

“இல்லையே தலையை துடைச்சுண்டேன் அதனால் உனக்கு அப்படி தோன்னறது.”

என்று தான் அழுததை தன் முகம் காட்டிக்கொடுத்திடக் கூடாதே என்ற அச்சத்தில் மிருதுளாவை நேருக்கு நேர் பார்ப்பதைத்  தவிர்த்துக் கொண்டே இருந்தான்.

“சரி நீ ரெடியா போகலாமா?”

“எங்க போறது நான் சாப்ட்டாச்சு. எனக்கு பயங்கர பசி …நீங்களும் உள்ள போனவர் வெளிலயே வரலை வெயிட் பண்ணி பார்த்தேன் அப்பறம் ரெண்டு தோசை சுட்டு சாப்பிட்டுட்டேன். உங்களுக்கும் நாலு தோசை வார்த்து வச்சிருக்கேன். இன்னும் வேணும்ன்னா சொல்லுங்கோ வார்த்துத் தரேன். மாவு, தோசைக் கல்லு எல்லாம் அப்படியே வச்சிருக்கேன். வாங்கோ சாப்பிடுங்கோ”

“ஸோ சாரி மிருது. ஐ ஃபீல் வெரி பேட் அபௌட் மைசெல்ஃப்”

“என்னத்துக்கு ??? குளிக்கறத்துக்கு இவ்வளவு நேரம் எடுத்துக்கிண்டதாலயா?!!! அப்படின்னா அக்செப்டெட். ஆனா எனக்கு ஒரு டௌட் நீங்க அவ்வளவு நேரம் பாத்ரூம்ல என்ன பண்ணிண்டிருந்தேங்கள்?”

“ப்ளீஸ் மிருது விளையாடாதே. ஆம் சீரியஸ்”

“பாத்ரூம்ல ஏதாவது மாயம் நடந்து உங்களை இப்படி சீரியஸ் ஆக்கிடுத்தா என்ன!!!! ஓகே!! ஓகே !! நோ மோர் கிண்டல்ஸ். நீங்க சாப்பிடுங்கோ. ஆமாம் கண்ணெல்லாம் ஏன் சிவந்திருக்கு?”

“அப்படியா எனக்கு அப்படி ஒண்ணும் தெரியலையே “

“அப்போ ஒண்ணு உங்க கண்ணுக்கு ஏதோ ப்ராப்ளம் இல்ல என் கண்ணுக்கு ஏதோ ப்ராப்ளம்.”

“ஏன் அப்படி சொல்லற?”

“எனக்கு தெரியறது உங்களுக்கு தெரியலைன்னா அப்போ நம்ம ரெண்டு பேர்ல யாரோடோ ஒருவர் கண்ணுக்கு பிரச்சினை என்று தானே அர்த்தம்”

“அதெல்லாம் ஒண்ணுமே இல்ல. சரி கிளம்பு நாம கோவிலுக்கு போயிட்டு வருவோம்”

“ஓகே இதோ நான் ரெடியா தான் இருக்கேன். ஜஸ்ட் அந்த துப்பட்டாவ போட்டுண்டுட்டா போகலாம்”

நவீன் சாப்பிட்டதும் இருவருமாக அவர்கள் வீட்டுப் பக்கத்திலிருக்கும்  கோவிலுக்கு நடந்தே சென்றார்கள். நவீன் தனது மன பாரத்தை கடவுள் மேல் போட்டுவிட முடிவு செய்து தான் கோவிலுக்கு சென்றுள்ளான். அங்கே வாசலில் செருப்பை கழற்றி விட்டு உள்ளே நுழைய முற்படும் போது வாசலில் இருந்த பூக்காரம்மா மிருதுவை பார்த்து …

“இந்தாமா பூ வாங்கிக்கோங்க. அழகா மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க இந்தாங்க இந்த பூவையும் வச்சுக்கோங்க இன்னும் நல்லா இருப்பீங்க”

“பரவாயில்லை மா இன்னொரு நாளைக்கு வாங்கிக்கறேன்”

“ஹேய் மிருது ஏன்!! இப்பவே வாங்கிக்கோ. அவங்க தான் அவ்வளவு சொல்லறாங்கலே. நீங்க குடுங்கம்மா. இந்தா தலையில வச்சுக்கோ. அப்படியே சாமிக்கும் ரெண்டு முழம் குடுங்க”

என்று மிருதுளாவிற்கு பூ வாங்கிக்கொடுத்துவிட்டு சாமிக்கு உண்டான பூவை அர்ச்சகரிடம் கொடுத்து சாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுமாறு கூறி அர்ச்சனை செய்து விட்டு கொஞ்ச நேரம் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து விட்டு வெளியே வந்ததும் நவீன் மிருதுளாவைப் பார்த்து …

“அடுத்தது எங்கே போகலாம்ன்னு சொல்லு மிருது”

“என்ன அய்யா ரொம்ப சந்தோஷமான மூட்ல இருக்கேங்கள்!!! குளிக்க போகறதுக்கு முன்னாடி வேற மாதிரி இருந்தேங்கள் !! குளிச்சிட்டு வந்ததுக்கப்புறம் ஆளே வேற மாதிரி ஆயிட்டேங்களே என்ன விஷயம்? இதுல ஏதோ இருக்கு….பாத்ரூமுக்குள்ள ஏதாவது அதிசயம் நடந்துதா என்ன?”

“ஒண்ணுமில்லை மிருது. சரி நான் கேட்டதுக்கு நீ இன்னும் ஒண்ணும் சொல்லலையே!”

“உங்க இஷ்ட்டம். உங்களுக்கு எங்க போகணும்னு தோனறதோ அங்க போகலாம்.”

“அப்போ அக்ஷர்தாம் கோவில் போயி கொஞ்ச நேரம் அங்க இருந்துட்டு அப்படியே லஞ்சுக்கு புது டாபாவுக்கு போகலாம் சரியா”

“ஓகே!! என்ன இன்னிக்கு சார் கோவில் கோவிலா போலாம்ன்னு சொல்லுறீங்க. பக்தி முத்திருத்தோ. பாத்ரூமில் ஏதாவது ஞானம் பொறந்துடுத்தோ”

“ம்…ம்… அப்படின்னு வச்சுக்கோ”

இருவரும் அக்ஷர்தாம் கோவிலுக்குச் சென்று அங்கே சுவாமிநாராயணனை வணங்கிவிட்டு அந்த வளாகத்தின் அழகை மீண்டும் ரசித்தவண்ணம் அங்கேயே ரொம்ப நேரம் அமர்ந்து பின் அங்கிருந்து கிளம்பி சற்றே தொலைவிலிருந்த ஒரு குட்டி டாபாவின் முன் வண்டியை நிறுத்தினான் நவீன். 

“நவீ இது வீடு மாதிரி இருக்கு”

“இல்ல மிருது இது பார்க்க தான் வீடு மாதிரி சின்னதா இருக்கு உள்ளே வந்து பாரு”

உள்ளே நுழைந்ததும் குஜராத் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அழகான புகைப்படங்கள் நிறைந்த சின்ன வரவேற்பறை இருந்தது. அங்கே இருவரையும் அமரச்செய்தார்கள். மஞ்சளை குழைத்தது போல ஒரு கின்னத்தினுள் ஒரு டூத் பிக் போன்ற குச்சியை விட்டு அதை அவர்களின் நெற்றியில் இட்டுவிட்டார்கள், வெல்கம் ட்ரிங் என்று கும்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டது. அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவரும் குஜராத்தின் பாரம்பரிய உடையையே அணிந்திருந்தனர். சிறுது நேரத்தில் ஒருவர் வந்து இருவரையும் உணவருந்த உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே இருந்த அறை சிறியதாக இருந்தாலும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தரையில் “பா” வடிவில் ஒரு பத்து பேர் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏற்றார்போல் சிவப்பு நிற மெத்தை கை திண்டுகளுடன் வந்து அமருங்கள் என்று அழைப்பு விடுத்தது. அதன் முன் அழகாக ஓவியம் தீட்டப்பட்ட ஒரு பலகை இருந்தது. நவீனையும் மிருதுளாவையும் அமரச்சொன்னார்கள். 

இருவரும் அமர்ந்ததும் வட்டவடிவிலான பெரிய தட்டு அவர்கள் முன் வைக்கப்பட்டது. அதை பார்த்ததும் மிருதுளா நவீனிடம் …

“என்ன பா இவ்வளோ பெரிய தட்டு” 

என்று பஞ்சதந்திரத்தில் கமலிடம் தேவயானி கேட்டது போல கேட்க…

“சும்மா இரு மிருது. உன்னால முடிஞ்சதை சாப்பிடு போதும். அவாளும் கொஞ்சம் கொஞ்சம் தான் பரிமாறுவா பயப்படாதே”

எல்லாம் உண்ட பின் கடைசியில் மீட்டா பான் எனப்படும் பீடாவை போட்டுக்கொண்டு மத்திய உணவை முடித்தார்கள் நவீனும் மிருதுளாவும்.

வெளியே வந்ததும் …

“நீ நல்லா சாப்பிட்டயா மிருது. உனக்கு பிடிச்சிருந்ததா? திருப்தியா இருந்ததா இந்த ப்ளேஸ்?”

“ஹேய் நவீ தி லஞ்ச் வாஸ் எக்செலன்ட். ஐ லவ்டு இட். எவ்வளவு ஐட்டம்ஸ். சூப்பரா இருந்தது. என் வயிறு ரொம்ப ஃபுல்லாயிருக்கு. இன்னைக்கு நம்ம குழந்தைக்கும் சரியான ஹெவி சாப்பாடு தான் போங்கோ”

“ஆம் ஹாப்பி சீயிங் யூ ஹாப்பி லைக் திஸ்”

என்ற மனநிம்மதியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தான் நவீன். அப்போது 

“நவீ அடுத்தது எங்கே.”

“எங்க போகணும்ன்னு நீ சொல்லு அங்கேயே நம் வண்டி போகும்”

“பேசாம ஆத்துக்கு போய் நல்லா ஒரு தூக்கம் போடணும் போல இருக்கு நவீ”

“ஓகே அப்போ ஆத்துக்கே போகலாம்.”

வீட்டிற்கு வந்து உடைகளை மாற்றி விட்டு இருவரும் பெட்டில் படுத்துக் கொண்டே பேசினார்கள்

“மிருது நீ சந்தோஷமா தானே இருக்க?”

“இதுல என்ன டௌட் உங்களுக்கு. நான் சந்தோஷமா தான் இருக்கேன்”

“அடுத்த மாசம் ஊருக்கு போகணுமே”

“ஆமாம் நமக்கு தலை தீபாவளி ஆச்சே போகாம எப்படி”

“அப்பறம் உன்னை அங்கேயே விட்டுட்டு வரணுமேன்னு நினைக்கிறப்போ எனக்கு ஏதோ மாதிரி இருக்கு மிருது”

“என்ன செய்ய நவீ. நம்ம குட்டி பாப்பா வ பத்திரமா இந்த பூமிக்கு கொண்டு வந்து நாமும் நம்ம குழந்தையும் ஜாலியா வாழ வேண்டாமா? அதுக்கு நான் அங்க இருந்தா தானே நல்லது”

“அதெல்லாம் புரியறது ஆனாலும்…சரி விடு ….ஊருக்கு போறதுக்கு என்னென்ன வாங்க வேண்டியிருக்கும்ன்னு ஒரு லிஸ்ட் போடு. அதை எல்லாம் இந்த மந்த் என்டில் வாங்கிடலாம்.”

என்று நவீன் பேசிக்கொண்டே இருக்கையில் மிருதுளா உறங்கிப்போனாள். அவளைப் பார்த்துக்கொண்டே 

“நீ என்னைக்கும் இப்படியே சந்தோஷமா நிம்மதியா இருக்கணும் மிருது அதுக்கு இன்னைக்கு அந்த கடவுள் எனக்கு உதவினமாதிரி என்றென்றும் உதவுனும்ன்னு தான் நான் இன்னைக்கு கோவில்ல அந்த ஆண்டவனிடம் வேண்டின்டேன்” 

என்று அவள் தலையை வருடி கொடுத்துவிட்டு அவனும் உண்ட மயக்கத்தில் உறங்கலானான். 

மாலை ஆறு மணி ஆனது. மிருதுளா எழுந்து பார்த்தாள் சற்று இருட்டாக இருக்கவும் மணி என்ன ஆச்சோ என்று கடிகாரத்தைப் பார்த்தாள் ….

“அச்சசோ!!”

என்று அவள் சொல்ல நவீன் விருட்டென எழுந்து

“என்ன ? என்ன ? என்ன ஆச்சு மிருது”

என்று கேட்க

“மணியை பாருங்கோ ஆறாச்சு. நாம ஏன் இவ்வளவு நேரம் தூங்கியிருக்கோம். சரி சரி நான் போய் மூஞ்சி கை கால் அலம்பிட்டு விளக்கேத்தட்டும். நீங்களும் எழுந்திரிங்கோ”

“சரி இட்ஸ் ஓகே!!! நிதானமா போ. அவசரம் வேண்டாம் பத்திரம்”

வேக வேகமாக முகம் கை கால் கழுவி விட்டு விளக்கை ஏற்றி பின் இருவருக்கும் காபி போட்டுக்கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தாள் மிருதுளா. 

“ஏன் காபி போட இவ்வளவு நேரம் மிருது?”

“காலையில டிபன் செய்தது, சாப்பிட்டது என கொஞ்ச பாத்திரம் சிங்க்ல கிடந்தது அதை எல்லாம் அப்படியே தேய்ச்சுட்டு அப்பறமா காபி போட்டேன் அதுதான் லேட் ஆயிடுத்து”

“சரி நைட்டுக்கு என்ன டின்னர் சாப்பிடலாம்?”

“அப்பா எனக்கு இன்னமும் வயிறு ஃபுல்லா இருக்கு. எனக்கெதுவும் வேண்டாம். உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்கோ செய்துத்தறேன்”

“சரி வா நாம நம்ம பார்க் வரைக்கும் மெதுவா ஒரு வாக் போயிட்டு வருவோம்”

“எனக்கு மதியம் சாப்பிட்டே டையர்டு ஆயிட்டேன் நவீ. சோம்பலா இருக்கு”

“அதனால தான் வாக் போகலாம்னு கூப்பிடறேன். கொஞ்சம் சிரமம் பார்க்காம எழுந்து வா மிருது”

“சரி ஓகே போகலாம். இருங்கோ சல்வார் போட்டுண்டு வந்துடறேன்”

இருவருமாக கதவைப் பூட்டிவிட்டு வெளியே நடக்க ஆரம்பிக்கலாமென திரும்பும் போது ரம்யா சித்தி குடும்பத்தினர் நால்வரும் அவர்கள் காரில் வந்திறங்கினர். அவர்களைப் பார்த்ததும் நவீனும் மிருதுளாவும்…

“வாங்கோ வாங்கோ வாங்கோ”

என்று பூட்டின கதவை திறந்தான் நவீன்.

“என்ன வெளியே கிளம்பறேங்கள் போல …நாங்க வந்து டிஸ்டெர்ப் பண்ணிட்டோமோ” 

“ச்சே ச்சே அதெல்லாம் ஒண்ணுமில்லை சித்தி. நாங்க சும்மா ஒரு வாக் போகலாம்ன்னு கிளம்பினோம் அவ்வளவு தான். நீங்க வாங்கோ நாம உள்ள போகலாம்”

“இந்தா மிருது இத வாங்கிக்கோ”

“என்னது இது சித்தி இவ்வளோ பெரிய பை?”

“இதுல பழங்களும் சுவீட்ஸும் எல்லாமிருக்கு வச்சுக்கோ”

“ஓ!! தாங்க்ஸ் சித்தி”

“காந்தி ஜெயந்திக்கு மூணு நாள் லீவ என்ஜாய் பண்ணறேங்களா?”

“ஆமாம் சித்திப்பா இன்னைக்கு கூட காலை ல கோவிலுக்கெல்லாம் போயிட்டு அப்படியே நம்ம பப்பு டாபா ல சாப்ட்டுட்டு வந்து ஒரு தூக்கம் போட்டும் ஆயாச்சு.”

“ஓ!!!  பப்பு டாபா!!! நாங்களும் நேத்து அங்க தான் லஞ்ச்சுக்கு போனோம். அவன் டாபா எக்ஸ்க்ளூஸிவ்வா இருக்குமே. சாப்பாடும் ரொம்ப நல்லாயிருக்குமே. ஆதென்டிக் குஜராத்தி ஃபுட். என்னமா மிருது உனக்கு அந்த சாப்பாடு பிடிச்சிருந்துதா?”

“ரொம்ப பிடிச்சிருந்தது சித்தப்பா. சூப்பரா இருந்தது. நான் இதுவரைக்கும் அப்படி ஒரு இடத்திலோ இல்லை அப்படி ஒரு நார்த் இந்தியன் பாரம்பரியமான சாப்பாட்டையோ சாப்பிட்டதே இல்லை. இன்று தான் ஃபர்ஸ்ட் டைம் சாப்பிட்டேன்.”

என்று அனைவருடனும் பேசிக்கொண்டும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் அவர்களுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தாள். அதை அருந்திய ரம்யா…

“ஹேய் மிருது சாய் சூப்பர்!! பக்கா நார்த் சாய் மாதிரியே போட்டிருக்க. வெரி டேஸ்டி”

“இங்க எனக்கொரு பஞ்சாபி லேடி ஃப்ரெண்ட் இருக்கா நவீனோட ஆபீஸ் ல வேலைப் பார்க்கறவரோட வைஃப்…அவா தான் சொல்லிக் கொடுத்தா”

“பரவாயில்லையே குட் குட் அப்படி தான் இருக்கணும்”

“மன்னி அப்போ நார்த் இந்தியன் டிஷும் பண்ண கத்துண்டேங்களா?”

“கொஞ்சம் தெரியும் ஆனா சீக்கிரம் கத்துண்டு டுவேன். நெக்ஸ்ட் டைம் நீங்க வரும் போது உங்களுக்கு ரொட்டி சப்ஜி எல்லாம் செய்துத்தருவேன் பாரு”

“சரி நீ எப்படி இருக்க? டாக்டர்ட்ட செக்கப்க்கெல்லாம் கரெக்டா போறயா? கொழந்தை எப்படி இருக்காம்?”

“ஆல் இஸ் வெல் சித்தி. என்ன கொஞ்சம் வாமிடிங் தான் ஜாஸ்த்தியா இருக்கு. தலைசுத்தல் கூட நின்னுடுத்து”

“அதெல்லாம் இன்னும் ஒரு ரெண்டு மாசத்தில நின்னுடும்.”

“சரி இருங்கோ நான் உங்களுக்கு டின்னர் ப்ரிப்பேர் பண்ணறேன். நீங்க எல்லாரும் சாப்ட்டுட்டு தான் போகணும்”

“என்னத்துக்கு உனக்கு சிரமம்மா. அதெல்லாம் வேண்டாம் நீ வந்து உட்கார்ந்து பேசு வா.”

“இல்ல இல்ல சித்தி. அதெல்லாம் முடியாது. அன்னைக்கே நீங்க வந்துட்டு உடனே கிளம்பிட்டேங்கள் ஆனா இன்னைக்கு சாப்ட்டு தான் போகணும்”

“சரி சரி ஓகே ஓகே”

அடுப்படிக்குள் சென்று உருளைக்கிழங்கை வேகப் போட்டுவிட்டு. பூரிக்கு மாவு பிசைந்து வைத்து விட்டு, மசாலா செய்வதற்கான அனைத்து பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொண்டு, உருளை வெந்ததும் கிடு கிடுவென மசாலா செய்தாள். அதை ஒரு மூடியிட்டு மூடிவிட்டு. அடுப்பில் சட்டியில் எண்ணெய் வைத்துவிட்டு பூரி பரத்தலானாள்.  அப்போது ரம்யா உள்ளே வந்து …

“நான் வேணும்னா பரத்தித்தறேன் மிருது நீ எண்ணெயில் போட்டெடு இல்லை நீ பரத்தித் தா நான் போட்டெடுக்கறேன்”

“இல்ல சித்தி நானே செய்துக்கறேன் நீங்கள் அனைவருக்கும் பரிமாறுங்கோளேன் ப்ளீஸ்”

“ஓ! ஷுவர். நீ ஆச்சுன்னா சொல்லு நான் கொண்டு போய் அவாளுக்கெல்லாம் குடுக்கறேன் சரியா”

“டன் சித்தி தாங்க்ஸ்”

“என்னத்துக்கு தாங்கஸ் எல்லாம் மா”

ஒரு இருபது பூரிகள் சுட்டெடுத்ததும் ரம்யாவிடம் பரிமாறச் சொன்னாள் மிருதுளா. ரம்யாவும் அனைவருக்கும் தட்டில் பரிமாறினாள். நவீன், சித்தப்பா, இரண்டு பெண்கள் என அவர்கள் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். 

“மன்னி ஆஸம் சப்ஜி. இட்ஸ் ரியலீ டேஸ்டி”

“ஆமாம் மா மிருதுளா இந்த பூரி மசால் சாப்பிடும் போது எனக்கு எங்க அம்மா செய்து தந்த பூரி மசால் சாப்பிடறமாதிரியே இருக்கு. என் பொண்ணு சொன்னது சென்ட் பெர்சன்ட் கரெட் தான்”

என்று அவர்கள் புகழ்ந்து சாப்பிட்டு எழுந்ததும் ரம்யாவும் மிருதுளாவும் சாப்பிட அமர்ந்தார்கள். 

“ரியலீ மிருது இந்த பூரி மசால் சூப்பரா செய்திருக்க மா. ஆமாம் பூரியை எப்படி இவ்வளவு த்தின்னா பரத்திருக்க எனக்கு தடி தடி யா இந்த ஊருல பண்ணறா மாதிரி தான் வரும்”

“எல்லாருமா ரொம்ப புகழறேங்கள் எனக்கு சங்கோஜமா இருக்கு”

“இதுல என்னதுக்கு சங்கோஜப் படணும். நீ சூப்பரா சமைச்சுக் காட்டிட்டல்ல இனி பாரு நாங்க அடிக்கடி வருவோம்”

“ஆனா சித்தி மிருது இந்த மாசம் மட்டும் தான் இங்கே இருப்பா. அடுத்த மாசம் நாங்க ஊருக்கு போயிடுவோமே”

“டேய் ஊருக்கு போயிட்டு குழந்தையோட இங்கே தானே டா வருவா அப்புறமென்ன…ஏன் உன் பொண்டாட்டிய வேலை வாங்கிடுவோமேன்னு பயமா உனக்கு”

“ச்சே ச்சே அவர் அப்படி சொல்லலை சித்தி”

“இங்கப் பார்டா இவள சொன்னா அவன் பதில் கொடுக்கறான்!!! அவனைச் சொன்னா இவள் பதில் தர்றா…ம் ….ம்…ஓகே !!! ஓகே ஜமாய்ங்கோ…அப்படித்தான் இருக்கணும். காட் பெலஸ் யூ போத்” 

என அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே சாப்பிட்டு விட்டு அந்த இடத்தையும் சுத்தம் செய்து முடித்து  ஹாலுக்கு வந்து அமர்ந்தாள் மிருதுளா. பின் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பலானார்கள் ரம்யா சித்தியும் அவர் குடும்பமும்.

அப்போது குங்குமம், ப்ளௌஸ் பிட், ஒரு வாழைப்பழம் எல்லாம் வைத்து கொடுத்தாள் மிருதுளா. 

“பரவாயில்லையே நம்ம வழக்கங்கள் எல்லாம் தெரிஞ்சுவச்சிண்டிருக்கயே குட் குட். தாங்க்ஸ் ஃபார் தி லவ்லி டின்னர் அன்ட் தாம்பூலம். குட் நைட் போத் ஆஃப் யூ. ஹாவ நைஸ் சிலீப். பை. டேய் மிருதுவ பத்திரமா பார்த்துக்கோடா நவீன்”

“ஷுவர் சித்தி”

“அவர் நல்லாதான் பார்த்துக்கறார் சித்தப்பா.”

“சந்தோஷம்மா. பை நாங்க வர்றோம்”

என்று அவர்கள் காரில் ஏறி சென்றதும் இருவருக்கும் ஒரு பெரிய அலை அடித்து ஓய்ந்தது போல இருந்தது. எதிர் பாராமல் வந்த விருந்தினருக்கு கிடு கிடுவென எல்லாவற்றையும் செய்ததால் சற்று தளர்ந்து போனாள் மிருதுளா. அவர்களை அனுப்பிவிட்டு வந்து படுத்துக்கொண்டவளைப் பார்த்து…

“என்ன மிருது டையர்டா இருக்கு சோம்பலா இருக்குன்னு சாயந்தரம் வாக் கூப்பிட்டப்போ சொல்லிட்டு சும்மா பம்பரமா சுத்தி இத்தனை பேருக்கும் டீ , டின்னர்ன்னு அசத்திட்டயே”

“அதுக்காக வந்தவாளுக்கு ஒண்ணும் குடுக்காமயா அனுப்பறது. இதோ இப்போ ரெஸ்ட் எடுத்துட்டா போறது.” 

“சரி நீ ரெஸ்ட் எடு நான் அந்த பாத்திரத்தை எல்லாம் தேய்ச்சு வச்சுட்டு வரேன் சரியா”

“அடுப்படிய சுத்தம் செய்துட்டேன் ஜஸ்ட் அந்த எண்ணெய் வச்ச சட்டியை மட்டும் தேய்ச்சுடுங்கோ அவ்வளவு தான். மத்ததை எல்லாம் நான் முடிச்சுட்டேன்”

நவீன் அந்த சட்டியை மட்டும் தேய்த்து விட்டு வந்து படுத்துக்கொண்டான். 

“நவீ தூக்கம் வரலையே ஏதாவது படம் பார்ப்போமா”

“ஓ எஸ் “

இருவருமாக டிவியை ஆன் செய்து திரைப்படம் பார்த்துவிட்டு நிம்மதியாக உறங்கச் சென்றனர். 

இரண்டு ரூபாய் ஐம்பது காசு மட்டுமே வைத்திருந்த நவீன் எப்படி பூ, ரெஸ்டாரன்ட் என செலவு செய்தான்? ஆனால் அந்த இரண்டு ரூபாய் ஐம்பது காசு அவனுக்கு அவனையே உணரச்செய்தது. எதையுமே ஒருவர் சொல்லிக்கொடுத்து உணர்வதை விட சுயமாக உணர்ந்தால் அது அப்படியே நிலைத்துவிடும். அப்படி ஒரு “self realization” எனப்படும் சுய உணர்தல் வந்துவிட்டால் அவரை எவராலும் எப்படியும் எந்த காலத்திலும் மாற்ற முடியாது. 

தொடரும்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s