தனது அம்மா வந்திருந்து தன்னை நன்றாக கவனித்துக் கொண்டதில் சற்று சுகம் கண்டு விட்டாள் மிருதுளா. அவளை எந்த வேலையையும் செய்ய விடாமல் அனைத்தையும் அம்புஜமே பார்த்து பார்த்து ஒரு மாதம் முழுவதும் செய்து தந்து பழக்கமான பின் மீண்டும் தானே காலை முதல் இரவு வரை எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமே அதுவும் அப்பப்போ புதிய விருந்தாளிகளான வாந்தியையும் தலைசுற்றலையும் வேற கவனித்துக்கொள்ள வேண்டுமே என்று மலைத்துப் போனாள்.
மறுநாள் காந்தி ஜெயந்தி என்பதாலும் அதனைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்று கிழமை என்பதாலும் நவீனுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க அவன் மனைவிக்கு தன் மாமியார் அளவு இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்த, தெரிந்த உதவிகளைச் செய்து கொடுத்தான். அன்று காலை நவீன் இருவருக்கும் காபி போட்டு கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து மிருதுளாவுடன் சேர்ந்து அருந்தினான். பின் மிருதுளா காலை டிபன் செய்தாள் அதை இருவரும் உண்டனர் அதற்கு உபயோகித்த பாத்திரங்களை மிருதுளா நின்று கழுவிக்கொண்டிருக்கையில் நவீன் சென்று தான் செய்வதாக கூற அதற்கு…
“என்னால இப்போ முடியறது நானே பண்ணிடறேன். எனக்கு எப்போ முடியலையோ சொல்லறேன் அப்போ செய்து தாங்கோ போறும்”
“ஓகே”
என கூறிவிட்டு டிவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது வேகமாக அவனை கடந்து பாத்ரூமிற்கு சென்றாள் மிருதுளா அப்போதும் அவன் பாட்டுக்கு நியூஸையே மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தான். மிருதுளா வாந்தி எடுத்துவிட்டு பாத்திரம் தேய்க்கும் வேலையை முடித்து விட்டு நவீன் அருகே வந்தமர்ந்து….
“ஏன் பா நான் வாந்தி எடுக்க உங்களை க்ராஸ் பண்ணி தானே போனேன்….வாந்தி எடுத்துட்டும் உங்களை க்ராஸ் பண்ணி தானே போய் பாத்திரத்தை எல்லாம் தேய்ச்சு வச்சேன்…இப்படி அசையாம ஆடாம நியூஸை பார்த்துண்டு உட்கார்ந்திருக்கேளே”
“என்ன செய்யணும்னு சொல்லற?”
“உங்க வைஃப் வாந்தியும் எடுத்துண்டு வேலையும் பார்க்கறாளேன்னு ஹெல்ப் பண்ணணும்னு தோணவேயில்லையா?”
“என்ன பேசற நீ? நான் ஹெல்ப் பண்ணறேன்னு வந்தப்போ… நீ எப்போ ஹெல்ப் வேணுமோ அப்போ சொல்லறேன்னு சொல்லிட்டு இப்போ இப்படி வந்து கேட்டா நான் என்னத்தை சொல்றது?”
“அப்படியே நான் சொன்னாலும் உங்க கண்ணுக்கு முன்னாடி நான் அவஸ்தை படறேன் அதை பார்த்துட்டும் நான் சொன்னா தான் செய்வேன் இருக்கேங்கள்….இட்ஸ் டூ மச்”
இப்படித் தான் பல தம்பதியர் இடையே பிரச்சினை என்பது நுழையும். ஆண்களிடம் எதைச் சொன்னாலும் அதை சொல்லும் பெண்கள் ஒரு அர்த்தத்தில் சொல்ல…ஆண்கள் அதற்கு வேறொரு அர்த்தம் எடுத்துக்கொள்ள…..இறுதியில் யார் சரியா சொன்னார் யார் சரியா சொல்லைன்னும், யார் சரியா புரிஞ்சிக் கிட்டாங்க யார் புரிஞ்சுக்கலைன்னும் உப்பு சப்பில்லாத இது போன்ற காரணங்களினாலேயே சண்டையிட்டு கொள்கிறார்கள். அதேபோல நவீன் மிருதுளாக்குள்ளும் சண்டை ஆரம்பிக்க…மீண்டும் வாந்தி வந்து பாத்ரூமிற்குச் சென்றாள் பின்னாலேயே நவீனும் சென்று அவள் நெற்றியைப் பிடித்துக் கொண்டான். அவள் வாந்தி எல்லாம் எடுத்து முடித்துவிட்டு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் போது நவீன் குடிக்க தண்ணீர் கொடுத்தான் அதை வாங்கி குடித்து விட்டு…
“இப்போ செய்தேங்கள் இல்லையா இத மாதிரிதான் பார்த்து தானா உணர்ந்து செய்யணும்”
“இப்போ நீ என்கிட்ட பேசிண்டிருக்கும் சாரி பிஸியா சண்டைப் போட்டுண்டிருக்கும் போது பாதியிலேயே எழுந்து போனா !!! அதுனால தான் வந்தேன்”
அந்த ஒன்றுமில்லாத பிரச்சினை என்று நவீன் எண்ணி அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இப்படிச் சொல்ல அதைக் கேட்டதும்
“ஆமாம் ஆமாம் உங்க தப்ப மறைக்கறதுக்கு பேச்ச மாத்தறேங்களாக்கும்”
“சரி சரி …லெட்ஸ் ஜஸ் லீவ் இட். நான் போய் உனக்கு டீ போட்டு கொண்டு வரேன்”
என இரண்டு தம்பளர் டீயுடன் வந்து ஒன்றை மிருதுளாவிடம் கொடுத்ததும் அதை அவள் வாங்கிக் கொண்டு …
“இந்த டீக்கூட ஒரு பஞ்சாபி சமோசாவும் இருந்தா எவ்வளவு சூப்பரா இருக்கும்….இல்ல நவீ”
“அம்மா தான் உனக்கு பிடிச்ச முறுக்கு போளி அப்பம் எல்லாம் செஞ்சு வச்சுட்டுத்தானே போயிருக்கா அதை எடுத்துண்டு வரட்டுமா சாப்பிடுவோம்”
“இல்ல ப்பா இந்த டீக்கு சமோசா தான் மேட்ச்சா இருக்கும்”
“இப்பவா ஈவினிங் வாங்கித் தரேனே…”
“இப்போ டீயோட சாப்பிடணும்ன்னு கேட்டா ஈவினிங்ன்னு சொல்லறேங்கள்?”
“இல்ல மிருது இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு சாப்பிடுற நேரம் ஆகிடும் இப்போ போய் சமோசா சாப்டேனா அப்பறம் சாப்பாடு சரியா சாப்பிட மாட்ட அதனால சொன்னேன்” என்று தன்னிடமிருப்பது ஐந்தே ரூபாய் என்ற பதட்டத்தில் மிருதுளாவையே வேண்டாமென சொல்ல வைக்க முயறச்சித்தான் நவீன்.
“ஆமாம் நீங்க சொல்லறதும் சரிதான்…சரி எனக்கு ஒரு அப்பமும் ஒரு முறுக்கும் தாங்கோ”
“குட் கேர்ள்!!! இந்தா சாப்பிடு”
“ஆமா இத சாப்ட்டா மட்டும் மத்தியானம் சாப்பாடு சாப்ட முடியுமா என்ன? எங்கயோ எதோ இடிக்கறதே!!!”
“ஒண்ணும் எங்கேயும் இடிக்கலை ஒரு அப்பமும் ஒரு முறுக்கும் சாப்ட்டா தப்பில்லை. சமோசாவில் உள்ள உருளை ஸ்டஃபிங் ரொம்ப ஹெவி ஆகிடும் அதுனால தான் சொன்னேன்”
“ஓகே ஓகே நம்பிட்டேன் நம்பிட்டேன்” என சொன்னாலும் மிருதுளாவிற்கு நவீனின் பேச்சினால் ஏதோ அவன் தவிப்பது போல தோன்றியது அதே யோசனையிலிருந்தவளை
“வரியா சன் டிவில காந்தி ஜெயந்தி சிறப்புத்திரைப்படம் பார்ப்போம்”
“ஓ எஸ் பார்க்கலாமே”
“இரு நான் சாதம் வச்சுட்டு, குழம்புப் பொறியல் எல்லாத்தையும் சூடு பண்ணிட்டு வந்திடறேன் சரியா”
“இப்பவே வா மணி என்ன பண்ணண்டு தானே ஆகறது”
“அம்மா தாயே நீ சடன்னா பசி பசின்னு சொல்ல ஆரம்பிப்பன்னு உன் அம்மா சொல்லிருக்கா அது போல ஏதாவது ஆச்சுன்னா அப்பறம் என்னால எல்லாம் உங்க அம்மா மாதிரி கிடு கிடுன்னு ஏதாவது செய்து தர முடியாது அதனால நான் அந்த வேலைகளை முடிச்சுட்டு ஒரு அரைமணிநேரத்துல வந்திடுவேன் அதுவரைக்கும் நீ டிவி பாரு”
“ஓகே டன்”
நவீன் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வந்தமர்ந்து கொஞ்ச நேரம் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது மிருதுளா எழுந்து போய் சாப்பாட்டை கொண்டு வந்து ஹாலில் வைக்கத் துவங்கினாள் உடனே நவீனும் அவளுக்கு உதவி செய்ய பின் இருவருமாக அமர்ந்து படம் பார்த்துக் கொண்டே உண்டனர்.
சாப்பிட்டப் பின் படம் பார்த்துக்கொண்டே மிருதுளா உறங்கிப் போனாள். அவள் உறங்குவதைப் பார்த்த நவீன் டிவியை ஆஃப் செய்துவிட்டு அவளை பார்த்தப்படி அவளருகே படுத்துக் கொண்டு …
“ரொம்ப சாரி மிருது நீ ஆசைப்பட்டு கேட்ட சமோசாவ கூட வாங்கிக் குடுக்க முடியாத நிலைமையில் நான் இப்போ இருக்கேன். யார் கிட்டேயும் கடனும் வாங்கக் கூடாதூனு சொல்லிட்ட இப்போ நான் என்ன பண்ணுவேன். இன்னும் இரண்டு நாள் ஆகுமே சம்பளம் வர அதுவரைக்கும் உன்னிடம் சொல்லி உன்னை வருத்தப்பட வைக்காமல் பார்த்துக்கணுமே!!! என்ன செய்யப் போறேனோ!!! தயவுசெய்து சாயந்தரம் சமோசாவை மறந்திடு மா ப்ளீஸ்”
என்று மனதிற்குள் பேசிக்கொண்டே அவனும் உறங்கிப்போனான்.
மணி ஐந்தானது நவீன் சட்டென எழுந்துப் பார்த்தான் மிருதுளா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவன் மெதுவாக எழுந்து போய் இருவருக்கும் டீ போட்டுக் கொண்டிருக்கையிலே மிருதுளா எழுந்து முகம் கை கால் அலம்பி சாமிக்கு விளக்கேற்றினாள். நவீன் அடுப்படியிலிருந்து டீயை எடுத்து வரும்போது மனதில்
“மிருதுளா சமோசா கேட்டு விடக் கூடாதே ஆண்டவா”
என்று வேண்டிக் கொண்டே வந்து அவளிடம் டீயை கொடுத்தான். அவளும் அதை வாங்கி எதுவும் சொல்லாமல் குடிக்கலானாள். அப்போது நவீன் பெருமூச்சு விட்டுக்கொண்டே
“நன்றி கடவுளே”
என்று மனதிற்குள் கூறுவதாக எண்ணி வெளியே கேட்கும்படி முனுமுனுக்க உடனே மிருதுளா
“என்னத்துக்கு கடவுளுக்கு நன்றி இப்போ? டீயை குற்றம் குறையில்லாமல் குடிச்சதனால தானே”
“ஐய்யோ சமத்து!!! அதேதான் அதேதான்”
என சமாளித்துக் கொண்டிருக்கும் போதே
அடுத்த பரீட்சை கேள்வி நவீனைப் பார்த்து பாய்ந்தது…
“சமோசா தான் வாங்கித் தரலை போகட்டும் விட்டுடறேன். ஆனா இப்போ நான் கேட்க போறதை நீங்க நிச்சயம் நிறைவேத்தனும் சரியா?”
“சமோசா வாங்கி தரமாட்டேன்னு சொல்லலையே ….சரி என்னது அது மிருது?”
“எங்க அம்மா வந்ததிலிருந்து எப்பவுமே சவுத் இந்தியன் சாப்பாடே ஒரு மாசமா சாப்படறேனா!!”
“அதுக்கு!!!”
“அதனால நாம இன்னைக்கு நைட் டின்னருக்கு ரோஹித் டாபா போய் ரொட்டியும் சப்ஜியும் சாப்பிடுவோமா?”
நவீனுக்கு தூக்கிவாரிப் போட்டது.
“இதுக்கு சமோசாவே பரவாயில்லைப் போல தெரியுதேன்னு அவன் மைன்ட் வாய்ஸ் சொல்ல”
“சரி நீ ஃபர்ஸ்ட் சமோசா தானே கேட்ட அத இன்னைக்கு சாப்பிடு நாளைக்கு டின்னருக்கு போகலாம் சரியா”
“ம்….ம்….ம்…நான் எது கேட்டாலும் நீங்க ஏன் அப்பறம் அப்பறம்ன்னு சொல்லறேங்கள் ? பைசா இல்லையா என்ன?”
“அதுக்கில்லை மிருது நீ மொதல்ல சமோசா தானே கேட்ட அதுனால சொன்னேன் வேற ஒண்ணுமில்லை.
இப்போ !!என்ன!!! உனக்கு சமோசா சாப்பிடணும் போல இருக்கா இல்லையா அத சொல்லு முதல்ல”
என்று நவீன் கேட்டதும் சின்ன பிள்ளைகள் போல ஆமாம் இருக்கு என தலையசைத்தாள் மிருதுளா.
“சரி இரு நான் போய் வாங்கிண்டு வரேன்”
என்று டாபா சென்று ஒரே ஒரு சமோசாவை பேக் செய்து வாங்கிவந்தான். ஆக இப்போது அவனிடம் மீதமுள்ளது இரண்டு ரூபாய் ஐம்பது காசே. வீட்டிற்கு வரும் வழியெல்லாம் என்ன பண்ணுவது என்ற சிந்தனையிலேயே நடந்துச் சென்றான். வீட்டிற்குள் வந்ததும் கடையில் வாங்கியதை மிருதுளாவிடம் கொடுத்து விட்டு ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் ஐஸ் தண்ணீர் எடுத்து குடித்துக் கொண்டிருக்கும் போது…மிருதுளா அதைத் தொறந்துப் பார்த்துவிட்டு…
“அச்சசோ!!”
என்று கூற உடனே குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை …நவீன் சட்டென திரும்பிப் பார்த்ததில் அவன் முகத்தில் அவனே ஊற்றிக்கொள்ள அதைப்பார்த்த மிருதுளா சிரிக்க…
“என்ன ஆச்சு மிருது ஏன் அப்படி சொன்ன?”
“என்ன? நேத்து குல்ஃபியும் ஒண்ணு தான் வங்கினேங்கள் இன்னைக்கு சமோசாவும் ஒண்ணு தான் வாங்கிருக்கேங்கள் என்ன விஷயம்? ஏன் இன்னிக்கு உங்களுக்கு சமோசா சாப்பிடணும் போல தோணலையோ?”
“உண்மைய சொல்லணும்னா ….அது தான். எனக்கு வேண்டாம்ன்னு தோணித்து ஸோ வாங்கலை. ஆஸ் சிம்பிள் ஆஸ் தட்… நானா ப்ரெக்னன்ட்டா இருக்கேன்…நீ சாப்டு மிருது. எனக்கு வேணும்னா நான் வாங்கிண்டு வந்திருப்பேனே”
“சரி சரி இங்க வாங்கோ இதுல பாதியாவது நீங்க சாப்பிடுங்கோ. எனக்கு பாதிப் போறும்.”
“ஹலோ மறுபடியும் சொல்லறேன் எனக்கு வேண்டாம். எனக்கு வேணும்னா இரண்டு வாங்கிண்டு வந்திருப்பேன். உனக்கு பஞ்சாபி சமோசா எவ்வளவு பிடிக்கும்ன்னு தெரியும் பேசாம சாப்பிடு. அதுவுமில்லாம உன்னை கல்யாணம் பண்ணி இங்கே கூட்டிட்டு வரும்வரை நான் இதை எல்லாம் தான் சாப்பிட்டேன்”
“இல்லையே உங்க நண்பர்கள் எல்லாரும் அப்படி சொல்லலையே”
“எப்பவாவது வெளில வரும்போது போதுமா!! ஹாப்பியா!!! அந்த சமோசா ஆரிடப் போறது…பேசாம சாப்பிடு”
“சரி சமோசாவ வாங்கிக் கொடுத்துட்டு டின்னருக்கு கூட்டிண்டு போகாம இருந்துருவேங்களா நவீன்?”
இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வதென்பதறியாமல் சற்று மௌனம் காத்தப் பின் …
“இங்க பார் மிருது… நம்ம சவுத் இந்தியன் சாப்பாடு தான் பெஸ்ட் தெரியுமா!! அதுவும் ப்ரெக்னன்ட்டா இருக்குற நேரத்துல என்னத்துக்கு கடையில விக்கற சாப்பாடெல்லாம் வாங்கி சாப்பிடணும் அப்பறம் அதுனால எதாவது பியச்சனை ஆயிட்டா யாரு கஷ்ட்டப்படப்போறா நாம தானே….அது தேவையா?”
“எனக்கு ஒண்ணு புரியலை நவீ.”
“க்ளியரா சொன்னேனே அதுல என்ன உனக்கு புரியலை?”
“ப்ரெக்னன்சி கன்பார்ம் ஆன அன்னைக்கு வெளில தானே சாப்பிட்டோம் அப்ப ஏன் நீங்க இதெல்லாம் சொல்லலை.”
“அப்போ எனக்கு அவ்வளவா இதப் பத்தி எல்லாம் தெரியாதே அதனால கூட்டிண்டு போனேன்”
“சரி இப்போ எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது”
“என்னோட வேலை பார்க்கற கல்யாணமாகி கொழந்தைகள் இருக்கிற நண்பர்கள் சொல்லி கேட்டது”
“ஹா !!!ஹா !!!ஹா!!! நவீ சூப்பரா சமாளிக்க நினைக்கறேங்கள் ஆனா உங்களால முடியலையே அப்பறம் ஏன்?? உண்மையைச் சொல்லுங்கோ”
“நான் தான் சொல்லிட்டேனே ….வேற என்ன உண்மையை கேட்கற”
“உங்களோட கல்யாணமான நண்பர்கள் ல ஒருத்தர் தான் தமிழ் காரர். மத்தவா எல்லாரும் வடநாட்டுக் காரர்கள் அப்படி இருக்கும் போது அவாளே அவா ஊர் சாப்பாட்டை சாப்பிடக் கூடாதுன்னா சொல்லுவா”
“அவா சாப்பாட்ட ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு தான் சொன்னா”
“சரி …எனக்கு உங்க பேச்சில் ஏதோ ஒரு தடுமாற்றம் தெரியறது. நீங்களா சொல்லும் வரை வெயிட் பண்ணறேன். அப்போ நைட்டு டின்னருக்கு தோசையும் வெங்காய சட்னியும் சாப்பிடலாமா?”
“தோசையை எப்படியாவது வார்த்துத் தந்திடுவேன் ஆனால் அந்த சட்னி எனக்கு பண்ணத் தெரியாதே”
“நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம் நானே செய்யறேன். உங்கள்ட்ட கேட்டேன் அவ்வளவு தான்”
“ஓ எஸ் அப்படின்னா சரி அதையே சாப்பிடுவோம்”
“நான் மத்தியானம் படம் பார்த்தேன் நீங்க சாதம் வச்சு எல்லாத்தையும் சூடு செய்து வச்சேங்கள் இப்போ நான் அடுப்படியில் தொசை அன்ட் சட்னி பண்ணப் போறேன் நீங்க டிவி பாருங்கோ”
“இப்பவே ஏன் மணி ஏழு தானே ஆகறது.”
“இப்ப வெங்கயத்தையும் தக்காளியையும் வதக்கி ஆரவச்சுட்டு வர்றேன் அப்பறம் ஒரு ஏழேகால் போல போய் அதை அரைச்சுட்டு அப்படியே தோசையும் வார்த்துடுவேன் ஆஸ் யூஷுவல் செவென் தர்ட்டிக்கு சாப்பிட்டுடலாம் சரியா”
“அப்படியா அப்போ ஓகே. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடு”
“ஷுவர் ஷுவர். நீங்க டிவி பாருங்கோ”
மிருதுளா சொன்னது போலவே ஏழரைக்கு டின்னர் தயார் செய்தாள் இருவரும் உண்டப் பின் அவரவர் படிப்புப் பற்றியும். மிருதுளா வயிற்றில் குழந்தையுடன் நவம்பரில் பரீட்சை எழுதப் போவது பற்றியும் ஒரு சின்ன வாக் போய் கொண்டே பேசிவிட்டு வீட்டிற்கு திருமபி வரும் போது குல்ஃபி காரன் வண்டி அவர்களை க்ராஸ் செய்யும் போது …
“சார்.. மேடம் ..குல்ஃபி சாப்பிடுங்க” என்று குல்ஃபி விற்பவன் கூறியதும் நவீனுக்கு எங்கடா மிருதுளா கேட்டு தர்மசங்கடமாகிவிடுமோ என இதயதுடிப்பு அதிகரித்தது. ஆனால்
“இன்னைக்கு வேண்டாம் பா. கேட்டதுக்கு ரொம்ப நன்றி பா. நீ போய் உன் வியாபாரத்த கவனி”
“மிருது நீயா குல்ஃபி வேண்டாம்ன்னு சொல்லற?”
“ஆமாம் நவீ தினமும் குல்ஃபி சாப்பிட்டா நம்ம கொழந்தைக்கு எப்பவுமே ஜலதோஷம் பெர்மனெட்டா இருந்துடுத்துன்னா அதுனால தான் அப்படி சொன்னேன். இனி எனக்கு வாரத்துல ஒரு குல்ஃபி ஆர் நம்ம மார்கெட்ல கிடைக்கிற அந்த ஸ்வேர்ள் ஐஸ்கிரீம் வாங்கித் தாங்கோ போதும். டீல் ஓகே வா”
“அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது மிருது. சரி எனிவே ஆம் ஃபைன் வித் யுவர் டீல். டன். சரி …..குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு இனி நாம நைட் எல்லாம் வாக் வரக்கூடாது”
“காலையில் உங்களுக்கு ஆபிஸ் போகணும் சாயந்தரம் க்ளாஸ் அப்பறம் எப்போ போறதாம் நைட்டுதானே. டாக்டர் தினமும் வாக்கிங் தவறாம போக சொல்லிருக்காளே”
“ஆமாம் சரி இந்த மாசம் மட்டும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் க்ளாஸ் போறேன் என்ன சொல்லற”
“அதெல்லாம் வேண்டாம் நீங்க உங்க க்ளாஸுக்கு போங்கோ நான் மெதுவா நம்ம தெருவுலேயே நடக்கறேன். சரி கதவ தொறங்கோ ரெஸ்ட் ரூம் போகணும்”
நவீன் கதவைத் திறந்ததும் மிருதுளா நேராக ரெஸ்ட் ரூமிற்குள் சென்றாள். நவீன் கதவை தாழிட்டு விட்டு சாமி படம் முன்னால் நின்று
“இன்று வந்த சமோசா அன்ட் ரொட்டி சப்ஜி என்ற கடலை தாண்ட உதவிட்ட ஆண்டவா. நேத்தும் இன்றும் ஐந்து ரூபாயில் மிருதுக்கு தெரியாமல் சமாளித்து விட்டேன். இனி இந்த சனி ஞாயிறு என்கிற மீதமிரண்டு நாளும் துணையா இருந்து காப்பாத்துங்கப்பா சாமி.”
என்று கைக்கூப்பி நின்றிருந்ததைப் பார்த்த மிருது
“என்ன நவீ சாமிகிட்ட என்ன அப்படி ஒரு வேண்டுதல் அதுவும் இந்த நேரத்துல?”
“ஒண்ணுமில்லை எல்லாரையும் நல்ல படியா பார்த்துக்கோங்கோன்னு கேட்டுண்டேன். இரு வந்து விபூதி பூசி விடறேன் அப்பறம் போய் படுத்து தூங்கலாம்”
என மிருதுளாவுக்கு விபூதி பூசிவிட்டு தனக்கும் இட்டுக்கொண்ட பின் உறங்க படுத்துக் கொண்டனர். அப்போது நவீனின் மனது பேசிக்கொண்டே இருந்தது…
“சீக்கிரம் திங்கட்கிழமை வரக்கூடாதா? திங்கட்கிழமை விடிந்ததும் சீக்கிரம் ஆபிஸ் போய் மொதல்ல சம்பளத்தை வாங்கி அன்னைக்கே மிருதுவ கூட்டிண்டு டாபா ல போய் அவ ஆசப்பட்ட ரொட்டி சப்ஜி வாங்கிக் கொடுக்கணும்.”
“நவீ ஏதாவது சொன்னேங்களா என்ன?”
“இல்லையே!!! ஏன் கேட்கற?”
“இல்ல நீங்க ஏதோ கேட்டா மாதிரி இருந்தது அதுதான் கேட்டேன். சரி தூங்குங்கோ குட் நைட்” என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு தூங்கலானாள்.
“இதுக்கு மேல நாம நம்ம மனச பேசவிட்டா அப்பறம் எல்லாமே மிருதுக்கு கேட்கிற மாதிரி பேசிடப் போறேன். பேசாம தூங்கிடுவோம் அது தான் சேஃப்”
என்று மனதில் நினைத்துக் கொண்டே அவனும் அவளுக்கு முத்தம் கொடுத்து குட் நைட் சொல்லிவிட்டு தூங்கலானான்.
தொடரும்…..