அத்தியாயம் 35: உடல் தேறியது உள்ளம் தேம்பியது

ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் ரெயில் ஏறிவிட்டாலும் தூங்கிப் போனால் பைகள் களவு போய்விடுமோ என்றும். பாத்ரூமுக்கு எப்படி பெட்டிகளை எல்லாம் நம்பி வைத்துவிட்டு போவது என்றும் எண்ணி அம்புஜம் பிராயணம் செய்த ஒன்றரை நாளும் தண்ணீர் குடிக்காமலும், உணவருந்தாமலும், தூங்காமலும் தன் மகளை பார்க்க போவதற்காக விரதம் மேற்கொண்டவள் போல் பயணித்தாள். முதல் முறை தனியாக பிரயாணம் மேற்கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் இருக்கும் பயமே அம்புஜத்திடமும் இருந்தது. அவளும் எல்லாரையும் போல காட்டிக்கொள்ளாமல் இருந்துக்கொண்டாள். எப்போடா திங்கட்கிழமை காலை வரும் என கை கடிகாரத்தின் முட்களை வேகமாக ஓடச் சொல்லி மனதில் வேண்டிக்கொண்டாள். ஒரு வழியாக ரெயில் குஜராத் ஸ்டேஷனில் வந்து நின்றது. அந்த ரெயில் பெட்டியிலிருந்து விடுப்பட்டு வீடு போய் சேர ஜன்னல் வழியாக அவள் கண்கள் தன் மகளையும் மாப்பிள்ளையும் தேடிக்கொண்டிருக்கையிலே பின்னாலிருந்து “அம்மா” என மிருதுளாவின் குரல் கேட்டதும் சட்டென திரும்பி தன் மகளை அணைத்துக் கொண்டு 

“அப்பாடா ஒரு வழியா பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்”

“ஏன் மா ரொம்ப பயந்துட்டயா?”

“ஏன் என்ன ஆச்சு?”

“அது ஒண்ணுமில்லை மிருது அன்ட் மாப்ள தனியா எங்கயுமே பிரயாணம் போனதில்லை அதுவும் இவ்வளவு தூரமெல்லாம் வந்ததே இல்லை அதனால் பதட்டமா இருந்தது இப்பவும் கொஞ்சம் இருக்கு.”

“சரி சரி ஆத்துக்கு போகலாம். மிருது நீ அம்மாவை கூட்டிண்டு முன்னால் போ நான் இந்த பெட்டி அன்ட் பேக் எல்லாம் எடுத்துண்டு பின்னாடியே வர்றேன்”

“நான் வேண்ணா பேக்கை எடுத்துக்கறேன் நீங்க பெட்டிய மட்டும் எடுத்துண்டு வாங்கோ”

“நீங்க மிருது கூட போங்கோ நான் பார்த்துக்கறேன்”

ரெயிலில் இருந்து வெளியே ப்ளாட்பாரம் வந்ததும் 

“நீங்க காபி இல்ல டீ ஏதாவது குடிக்கறேங்களா”

“எங்கம்மா குடிச்சிட்டாலும்”

“இல்ல மாப்ள ஒண்ணும் வேண்டாம் சீக்கிரம் வீட்டுக்கு போயிடுவோம் வாங்கோ”

அனைவருமாக ஒரு ஆட்டோவில் ஏறினர் வர வழியில் மிருதுளா 

“அம்மா நவீன் நீங்க எல்லாரும்  வர்றதுக்கு  முன்னாடி எழுதிய பரீட்சையை க்ளியர் செய்து விட்டார் இன்னும் ஒரே ஒரு பரீட்சை தான் பாக்கி இருக்கு”

“ஓ அப்படியா வாழ்த்துக்கள் மாப்ள. மிருது நீயும் அதே மாதிரி வர்ற நவம்பர் ல பரீட்சை எழுதி பாஸ் ஆகணும் சரியா”

என பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்ததும்….

“மிருதுளா அவர் ஆட்டோவை கட் செய்து வரட்டும் அதுக்குள்ள நீ கதவ தொறயேன்”

“என்னமா அவசரம்”

“ப்ளீஸ் மா”

“சரி சரி…நவீன் சாவியை தாங்கோ நாங்க ஆத்துக்குள்ள போறோம் நீங்க காசு கொடுத்துட்டு சாமான்களை எடுத்துண்டு வாங்கோ”

என மிருதுளா சாவியை வாங்கிக்கொண்டு கதவைத் திறந்ததும் அம்புஜம் வேகமாக பாத்ரூமிற்குள் சென்றாள்.

நவீன் பெட்டி பேக் எல்லாவற்றையும் வீட்டினுள் வைத்து விட்டு ஆபீஸ் சென்றான்.

சற்று நேரம் கழித்து பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் அம்புஜம்…

“அப்பாடி…”

“என்னமா ஏன் இப்படி சொல்லற”

“பின்ன ஒன்றரை நாளா டாய்லெட் போகாம இருந்தா வயிறு அழுத்தாதா. கல்லு மாதிரி ஆகிடுத்து என் தொப்பா. அது எவ்வளவு பெரிய சங்கடம் தெரியுமா?”

“ஏன் மா!!! நீ வந்த கம்ப்பார்ட்மென்ட்ல டாய்லெட் இல்லையா என்ன?”

“ம்….நக்கலா!!! எல்லாம் இருந்தது ஆனா பெட்டி பேக் எல்லாத்தையும் விட்டுட்டு போக பயமாயிருந்தது தெரியுமா. சரி சாப்ட ஏதாவது இருக்கா மிருது”

“என்னம்மா? ஏன் இப்படி? சாப்பிடவும் இல்லையா!!! சாப்பாடு எல்லாம் கட்டிண்டு தானே வண்டியே ஏறிருப்ப ….இதோ தோசை சுட்டுத்தறேன் சட்னி எல்லாம் ரெடி.”

“சொன்னாலும் சொல்லாட்டினாலும் அது தான் உண்மை. கட்டிண்டு வந்தேன் ஆனால் சாப்டலை,  தண்ணீக்கூட குடிக்கலை ஏன்னா ….சரி அத விடு ….குடு நானே சுட்டுக்கறேன். ஆமாம் மாப்ள எங்கே நீங்க ரெண்டு பேரும் சாப்ட்டாச்சா”

“அட பாவி அம்மாவே இப்படியா சாப்டாம வருவ !!! நீ மொதல்ல உட்கார்ந்து நிதானமா சாப்டு. இந்தா தோசையும் சட்னியும். நானே வார்த்துத்தறேன். நாங்க ரெண்டு பேரும் சாப்ட்டாச்சு. அவர் நம்மள ஆத்துல விட்டுட்டு ஆபீஸ் போயாச்சு”

அம்புஜம் சாப்பிட்டு முடித்ததும் இருவருமாக படுத்துக்கொண்டே பேசினார்கள். 

“ஏய் மிருது நீ என்ன இப்படி இளைச்சுப்போயிருக்க!!! சரியா சாப்பிடணும் மா. அப்போ தானே குழந்தை ஆரோக்கியமா பொறக்கும்”

“சாப்பிடவே பிடிக்க மாட்டேங்கறது எதை சாப்பிட்டாலும் வாமிட் வர்றது என்ன பண்ணுவேன்? 

“அப்படித்தான் இருக்கும் மிருது அதுக்கா சாப்பிடாம இருக்கக் கூடாது. வாமிட் வந்தா எடுத்துட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடணும். உன் குழந்தைக்காக நீ சாப்பிட்டு தான் ஆகணும். டாக்டர் என்ன சொன்னா. கொழந்த எப்படி இருக்காம்?” 

“குழந்தை நல்லா இருக்காம். அடுத்த வாரம் செக்கப்புக்கு போகணும்.”

“நான் இருக்கப் போகும் இந்த ஒரு மாசமும் நான் சமைச்சு தர்றதை ஒழுங்க சாப்பிடணும். புரியறதா? உனக்கு என்னெல்லாம் சாப்பிடணும்ன்னு தோணறதோ கேளு செய்துத் தர்றேன்.”

“ஓகே அம்மா. அதெல்லாம் சரி. எப்படி அப்பாவும் வேனுவும் நீ இல்லாம இருக்கப் போறா? என்ன பண்ணுவா?”

“அவா ரெண்டு பேரும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கறோம்ன்னு சொன்னா மிருது. அப்பா பார்த்துப்பா …..பார்த்துப்பா என்ன பார்த்துண்டு தான் ஆகணும்”

என பேசிக்கொண்டே உறங்கிப் போனாள் அம்புஜம் அதைப் பார்த்த மிருதுளா அம்மாவின் தலையை தூக்கி தலையணையை வைத்து விட்டு….

“பாவம்!!! தூங்கறத பார்த்தா ஒன்றரை நாள் தூங்கிருக்கவும் மாட்டான்னு தான் தோணறது. தூங்கட்டும்”

என்று தானும் சற்று கண் அசந்தாள் மருதுளா. ரெயிலில் தூங்கிவிட்டதாக எண்ணி சட்டென எழுந்துப் பார்த்தாள் அம்புஜம். அருகில் மிருதுளா தூங்குவதைப் பார்த்ததும் தான் ஆசுவாசமானாள். பின்பு மணியைப் பார்த்தாள் மணி ஒன்று ஆகியிருந்தது. அடுப்படியில் சென்றுப் பார்த்தாள். மிருதுளா …குக்கரில் சாதமும், சாம்பாரும் பீன்ஸ் பொறியலும் செய்து வற்றல் வடாமும் வறுத்து வைத்திருந்தாள். அம்புஜம் சாம்பாரை மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி கொதிக்க வைத்து இறக்கி வைத்துவிட்டு ஹாலுக்கு வந்து பார்த்தாள் மிருதுளாவும் எழுந்து பாத்ரூம் சென்றிருந்தாள். அவளும் எழுந்து விட்டதால் அம்புஜம் சாப்பாட்டை ஹாலில் வைத்தாள். மிருதுளா வந்ததும்..

“வா வா மிருது மணி ஒன்றரை ஆயாச்சு சாப்பிடலாம் வா”

“அச்சோ சாப்பாடா !!! வேண்டாமே மா பாளீஸ்”

“அப்படி இருக்கக்கூடாதுன்னு காலை ல தானே சொன்னேன். வா வந்து உட்காரு”

மிருதுளாவும் அமர்ந்தாள் அம்புஜம் குக்கரைத் திறந்ததும் மிருதுளா பாத்ரூமிற்கு சென்று வாந்தி எடுத்தாள். உடனே அம்புஜம் குக்கரை அடுப்படியில் வைத்துவிட்டு சாதத்தை மட்டும் எடுத்து வந்து ஹாலில் வைத்தாள். வெளியே வந்த மிருதுளாவிடம் மீண்டும் சாப்பிடும் படி கூறினாள். குக்கர் அங்கில்லாததால் அவளுக்கு மீண்டும் வாந்தி வராமல் சாப்பிட்டாள். மகபேறு காலத்தில் சில பெண்களுக்கு சில வாசனைகள், சில சாப்பாட்டு வகைகளால் இப்படி வாந்தி வருவது சகஜமே ஆனால் அந்த நேரங்களில் அப்பெண்கள் ஓய்ந்து போவதனாலயே மீண்டும் ஏதாவது செய்து சாப்பிடுவதற்கு தயங்குகிறார்கள் அதனால் பல நேரம் சாப்பாட்டை தவிர்க்கவும் செய்கிறார்கள். அது போல் தான் நம்ம மிருதுளா இருந்து வருகிறாள். இனி அவள் அன்னையின் பராமரிப்பினால் அப்படி இருக்க மாட்டாள்…அம்புஜமும் அப்படி இருக்க விடமாட்டாள்.

ஆனால் இது போன்ற நேரங்களில் கணவன்மார்கள் அவர்கள் மனைவியைப் புரிந்துக்கொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருதலே சிறந்தது அப்போது தான் தன் மனைவியின் வலியும் வேதனையும் புரிந்துக் கொள்வார்கள். மனைவியின் இன்பத்திலும் சந்தோஷத்திலும் மட்டுமே பங்கு போட்டுக்கொள்வதல்ல வாழ்க்கை. இங்கே நம்ம நவீன் என்னவானாலும் தனது மனைவியை தானே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் ஆனால் விவரமாக தனது மாமியாரை வரவழைத்து தனது பங்களிப்பை சற்றே தளர்த்திக் கொண்டுள்ளான்.

அம்புஜமாவது வர மறுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நவீனுக்கு மிருதுளா மேல் புரிதலும் அக்கரையும், பொறுப்பும் இன்னும் கூடியிருக்க ஏதுவாக இந்த சூழல் இருந்திருக்கலாம். ஆனால் பாவம் தாயுள்ளம் ஆயிற்றே மகள் வேதனைப் படுகிறாள் என்று கேட்டதும் தனக்கும் தன்னை சார்ந்த குடும்பத்தினருக்கும் இருந்த கஷ்டங்களை சமாளித்துக்கொண்டு உதவிக்கரம் நீட்டிவிட்டாள்.

தாய்மார்கள் என்றும் தங்கள் பிள்ளைகள் வேதனைப் படுவதை விரும்ப மாட்டார்கள். பர்வதம் போன்றவர்கள் சிலர் இதற்கு விதிவிலக்குகளே. அதற்காக எல்லா இடங்களிலும் அவர்கள் தாயுள்ளம் முந்திக் கொண்டால் சில சமயங்களில் அவர்கள் பிள்ளைகளுக்கு அது நன்மை பயக்காமல் போய்விடுவதும் உண்டு. 

ஒரு மாதம் அம்புஜம் அங்கிருந்து நன்றாக மிருதுளாவை கவனித்துக் கொண்டு அவள் கேட்டவைகளை எல்லாம் செய்து கொடுத்து அவளை நன்றாக தேற்றினாள். அந்த ஒரு மாதம் நவீன் அவன் வேலை, படிப்பு என இருந்து அப்பப்போ செக்கப்புக்கு மட்டும் கூட்டிச் சென்று வந்தான். காலையில் ஒரு வாக் நவீனுடன் பின்பு மாலையில் ஒரு வாக் அம்மாவுடன் என மிருதுளா மகிழ்ச்சியாக இருந்தாள். வந்ததிலிருந்து வீட்டிற்குள்ளேயே இருப்பதனால் சற்று வெளியே எங்காவது போய் வரலாம் என மிருதுளா கூறியதுக்கு அம்புஜம் மறுத்து விட்டாள். நாட்கள் கிடு கிடுவென ஓடி அம்புஜம் ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நாளான அக்டோபர் ஒன்றாம் தேதி வந்தது. 

அன்று இரவு ரெயில்வே ஸ்டேஷனில் நவீனிடம் …

“இந்த ஒரு மாசம் நான் என் பொண்ணை பார்த்துண்ட மாதிரியே நீங்களும் வரும் ஒன்றரை மாசம் பார்த்துக்கோங்கோ. அடுத்த மாசம் தீபாவளிக்கு வந்துடுவேங்களே அப்போ உங்க அம்மா நான் எல்லாரும் இருப்போமே நாங்க பார்த்துப்போம்”

“ஆமாம் ஆமாம் பார்த்துப்பா பார்த்துப்பா”

“என்னடி ஒரு மாதிரி சொல்லற ஏன் நான் உன்னை நல்லா பார்த்துக்கலையோ”

“அட க்ராஸ் டாக் உன்னை இல்ல.. சரி சரி வண்டில ஏறுமா…நான் உள்ளே வரலை …என்னால வேகமா எல்லாம் இறங்க முடியாது. நீ உள்ள போய் ஜன்னல் பக்கம் வா வண்டி கிளம்பும் வரை பேசலாம்”

“இந்த தடவை நீங்க எந்த கவலையுமில்லாமல் பாத்ரூம் போகலாம், தூங்கலாம் சரியா ….நான் இதோ உங்கள் பெட்டி , பேக் எல்லாத்தையும் இந்த சங்கிலி போட்டு கட்டி பூட்டிட்டேன் இந்தாங்கோ சாவி. நிம்மதியா போயிட்டு வாங்கோ. அடுத்த மாசம் பார்க்கலாம்”

என்று நவீன் கூறியதும் அம்புஜத்திற்கு வெட்கம் வர அதைப் பார்த்த மிருதுளா…

“அம்மா இதுல வெட்கப் பட ஒண்ணுமே இல்லை. அப்பா வேனு எல்லாரையும் கேட்டதா சொல்லு”

“ஆமாம் அவாள கேட்டதா சொல்லுங்கோ அன்ட் என்னோட தாங்க்ஸையும் சொல்லுங்கோ. நீங்க வந்ததுக்கும் ரொம்ப தாங்கஸ்”

“இதுக்கென்னதுக்கு தாங்கஸ் எல்லாம் சொல்லிண்டிருக்கேங்கள். என் பொண்ண பார்த்துக்க நான் வராமல் யார் வருவா…. விடுங்கோ..அச்சச்சோ மணி அடிச்சுட்டானே அப்போ வண்டி கிளம்பப்போறதே”

“ஆமாம் பின்ன நீ இப்படி ஜம்முன்னு வண்டிக்குள்ளேயும் நாங்க வெளில நின்னுண்டும் பேசிண்டே இருக்கவா இங்க வந்தோம்”

என்று மிருதுளா நகையாடினாலும் அவள் கண்களிலும் அம்புஜம் கண்களிலும் கட கடவென கண்ணீர் உருண்டோடியது.  

“மிருதுமா பார்த்து பத்திரமா இருந்துக்கோ. டைம்முக்கு சாப்பிடு. மாப்ள அவள நல்லா பார்த்துக்கோங்கோ.”

என்று ஜன்னல் வழியாக கூறிக்கொண்டிருக்கையிலே வண்டி சற்று வேகம் எடுத்தது…

“அம்மா நீயும் பத்திரமா போயிட்டு வா. நாங்க அப்பா கிட்ட ஃபோன் பண்ணிச் சொல்லிடறோம். வேனுவோ அப்பாவோ வந்து உன்னை ஸ்டேஷன்ல இருந்து கூட்டிண்டு போவா. நாங்க நாளான்னைக்கு ஃபோன் பண்ணி உன்ட்ட பேசறோம்”

ரெயில் வண்டி இன்னும் வேகம் பிடிக்க…

இருவர் கண்களிலும் கண்ணீர் வழிவதிலும் வேகம் கூடியது. 

“பை மிருது”

“பை அம்மா”

என்று அந்த ப்ளாட்பாரம் எல்லை வரைச் சென்று அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்து ரெயில் சென்ற வழியையே பார்த்து அழதவாறு அமர்ந்தாள் மிருதுளா. நவீன் அவளருகே அமர்ந்து

“ஹலோ மேடம் ரெயில் போயாச்சு நாம ஆத்துக்கு கிளம்பலாமா இல்லை இங்கேயே உட்கார்ந்துக்கலாமா”

கண்கள் முழுவதும் கண்ணீருடன் நவீனைப் பார்த்து

“உங்களுக்கு கிண்டலா இருக்கு இல்ல!!”

“அப்படி இல்ல மிருது. அம்மா வந்தா.. உனக்கு நல்லா ஹெல்ஃப்புல்லா இருந்தா. உன்னை நல்லா பார்த்துண்டா எவ்வளவு நாள் தான் உன் கூட மட்டுமே இருப்பா சொல்லு அங்கே வேனுவும் அப்பாவும் உங்க அம்மாவுக்காக வெயிட் பண்ணிண்டிருக்க மாட்டாளா. அம்மா அவாளையும் பார்த்துக்கணுமில்லையா. புரிஞ்சுக்கோ மா. கண்ணைத் தொடச்சுக்கோ எழுந்திரு வா ஆத்துக்கு போகலாம்”

மிருதுளா கண்களை துடைத்துக் கொண்டு இருவருமாக அங்கிருந்து கிளம்பி ஆட்டோவில் வீட்டிற்குச் சென்றாலும் அவளின் உள்ளம் தன் அம்மாவை நினைத்து தேம்பியது. இது திருமணமாகி முதல் கருவுற்ற எல்லா மகள்களுக்கும் உள்ளதே.

அந்த மாதம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு நான்கு தடவை ஆட்டோவில் சென்று வந்தது,  மிருதுளாவை ஆட்டோவில் மூன்று முறை செக்கப்புக்கு கூட்டிச்சென்றது அவளுக்காக பழங்கள் காய்கறிகள் என அதிகமாக வாங்கியது என செலவு சற்று எகிறிபோனது. அக்டோபர் மாத சம்பளமும் (காந்தி ஜெயந்தி விடுமுறையினால்) வர இன்னும்  மூன்று நாட்கள் இருந்தது. கையில் வெரும் பத்து ரூபாய் தான் மீதமிருந்தது. நவீன் அவன் மனைவிக்காக மாமியார் கேட்டுக்கொண்ட காய்கறிகள் பழ வகைகள், தின்பண்டங்கள் செய்வதற்காக எண்ணெய் என கணக்குப் பார்க்காமல் வாங்கிப் போட்டான். சாப்பாடு செய்வதற்கான பொருட்கள் காய்கறிகள் எல்லாம் மீதம் இருந்தன. 

அவர்கள் வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது குல்ஃபி வண்டி சத்தம் கேட்டதும் மிருதுளா நவீனிடம் வாங்கித் தரச்சொல்ல நவீனும் ஒரே ஒரு குல்ஃபி வாங்கி வந்தான். அதைப் பார்த்த மிருதுளா…

“ஏய் நவீ என்ன ஒண்ணு தான் வாங்கிருக்கேங்கள்.”

“ஏன் உனக்கு ரெண்டு வேணுமா. சொல்லு நான் போய் வாங்கிண்டு வந்துடறேன் அவன் தெரு முனைவரை தான் போயிருப்பான்”

“எனக்கில்லை பா உங்களுக்காக தான் கேட்டேன்”

“எனக்கென்னவோ இன்னைக்கு குல்ஃபி சாப்பிடறா மாதிரி இல்ல மிருது அதுனால தான் வாங்கலை. நீ சாப்டு மா. ஏய் மிருது வீ டிட் அ ப்ளன்டர்!!!”

“என்ன சொல்லறேங்கள் குஃல்பி வாங்கினதில் என்ன ப்ளன்டர்?”

“அட அது இல்லை. ச்சே!!! நீயாவது ஞாபகம் படுத்திருக்க வேண்டாமா?”

“எதைப் பத்தி பேசறேங்கள்ன்னே எனக்கு தெரியலை அப்பறம் எப்படி ஞாபகம் படுத்துவேன்?”

“உங்க அம்மா கிட்ட ஒண்ணுமே வாங்கிக் குடுக்கலை”

“என்ன வாங்கி கொடுக்கறதா இருந்தேங்களாம்!”

“ஏய்!!! ப்ளீஸ் சீரியஸா பேசறேன். அட்லீஸ்ட் ஒரு சுவீட் பாக்ஸாவது வாங்கி குடுத்தனுப்பிருக்க வேண்டாமா?”

“ஓ!!! அமாம் நானும் மறந்தே போய்யிட்டேன். பரவாயில்லை விடுங்கோ என் ஃபேமிலி மெம்பர்ஸ் எதையும் எதிர் பார்த்து செய்யறவா கிடையாது…என் அப்பா அவர் தம்பியை படிக்க வச்சு வேலையும் வாங்கிக்கொடுத்தா ஆனா இதுவரைக்கும் எதுமே கேட்டதுமில்லை எதையுமே எதிர் பார்த்ததுமில்லை அதே போல தான் என் அம்மா வீட்டு ஆட்களுக்கும் எல்லாருக்கும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பினால் மட்டுமே இரண்டு பேரும் செஞ்சா…இப்போ எனக்கு செய்யறா இது அதைவிட இரட்டிப்பு அன்பினால் “

“அவா எதிர் பார்ப்பான்னு இல்ல மிருது நாமளா வாங்கி குடுத்திருக்கனும்ன்னு சொல்லறேன்”

“நோ ப்ராப்ளம் நவீ. அம்மா, அப்பா அன்ட் வேனுவிடம் நான் ஃபோனில் பேசும் போது சாரி சொல்லிக்கறேன். அவா எல்லாம் எதுவுமே தப்பா நினைக்க மாட்டா…நீங்க கவலைப் படாதீங்கோ”

நவீனுக்கு அப்படி செய்ய தவறியதில் வருத்தமாகவே இருந்தது. ஆனால் ஞாபகம் இருந்திருந்தாலும் காசுக்கு எங்கே போயிருப்பான்? அதனாலோ என்னவோ கடவுள் அவனைமறக்கச் செய்துள்ளார் என்றே நாம் எடுத்துக்கொள்வோமே. ஒரு குல்ஃபியின் விலை ஐந்து ரூபாய். இரண்டு வாங்கினால் கையில் காசே இல்லாமல் போய்விடுமே என்று மிருதுளாவிற்கு மட்டும் வாங்கிக்கொடுத்தான் நவீன். இந்த நிலையில் எங்கிருந்து எப்படி சுவீட் வாங்கிருப்பானோ!!!! 

மிருதுளா குல்ஃபி சாப்பிட்டு விட்டு இருவரும் உறங்குவதற்காக படுத்துக்கொண்டனர். நவீன் அன்று முழுவதும் ஆபீஸ், க்ளாஸ், ரெயில்வே ஸ்டேஷன் என அலைந்ததில் படுத்ததும் தூங்கிப்போனான். மிருதுளாவிற்கு தன் அம்மாவின் நினைப்பினாலும், இனி எப்படி தன்னைத்தானே பார்த்துக்கொண்டு நவீனுக்கும் வேண்டியதை செய்ய போகிறோமோ என்ற எண்ணத்தினாலும்  ரொம்ப நேரம் புரண்டு புரண்டு படுத்தும் நான்கு முறை பாத்ரூம் சென்று வந்தும்… நள்ளிரவு தாண்டியே தூங்கினாள்.

மிருதுளா தன் அம்மா வந்ததினாலும் அவளின் உடல் அசதி, வாந்தி போன்ற உடல் உபாதைகளினாலும் அந்த மாத கணக்கு வழக்கில் துளியும் நாட்டம் காட்டாமல் இருந்ததாள். அவள் நவீனிடம் இருப்பது பத்து ரூபாய் தான் என்பதை அறியாதிருந்தாள். அதை நவீனும் அவளிடம் சொல்லி வருத்தப்பட வைக்க விரும்பவில்லை. ஆனால் மிருதுளாவிடம் சொல்லாமல் ஐந்தே ரூபாயில் எப்படி மீதமுள்ள மூன்று நாட்களை கடக்கப் போகிறான் நவீன்?

தொடரும்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s