அத்தியாயம் – 34: மகப்பேறு காலம் ஆரம்பம்

மனதில் வருத்தம், கண்களில் கண்ணீர் நடையில் வேகம் என சென்றுக் கொண்டிருந்த மிருதுளாவின் பின்னால் வேகமாக நடந்தும் ஓடியும் அவளை பிடிக்க சென்றான் நவீன்.  அவள் நேராக வீட்டின் வாசலில் சென்று அமர்ந்தாள். ஒரு இரண்டு நிமிடங்களில் நவீனும் வீட்டிற்கு வந்து சேரந்தான். வாசலில் அமர்ந்திருந்த மிருதுளாவிடம்..

“ஏய் என்ன மிருது இவ்வளவு வேகமா நடந்துண்டேயிருக்க. நான் வர்றேனா இல்லையான்னு கூட பார்க்காம நீ பாட்டுக்கு வந்துண்டிருக்க!! என்ன ஆச்சு ஏன் இப்போ உன் கண்லேருந்து கண்ணீர் வர்றது? சரி ஆத்துக்குள்ள ஃபர்ஸ்ட் வா.”

என்று கதவைத் திறந்தான் நவீன். மிருதுளா வேகமாக வீட்டினுள் நுழைந்து நேராக கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். என்ன நேர்ந்தது என்று புரியாமல் “என்ன ஆச்சு?” என்ற கேள்வியை அவளிடம் இரண்டு மூன்று முறை கேட்டும் பதில் இல்லாததால் நவீனும் பேசாமல் அவளருகே அமர்ந்தான்.  சிறுது நேரம் மௌனத்திற்கு பிறகு எழுந்து நவீனைப் பார்த்து …

“ஏன் நவீ நான் கன்சீவ் ஆனதில் உங்களுக்கு சந்தோஷம் தானே?”

“இது என்ன கேள்வி மிருது?”

“ப்ளீஸ் சொல்லுங்கோ”

“ஆஃப்கோர்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான். நானும் அப்பா ஆக போறேன்னு எனக்கு சந்தோஷம் இருக்காதா என்ன! இப்போ ஏன் உனக்கு சடன்னா இப்படி ஒரு டவுட்டு”

“இல்ல இன்னிக்கு நான், நீங்க, என் பேரன்ட்ஸ் எல்லாருமே அந்த செய்திக்காக எதிர்ப்பார்த்து தெரிஞ்சதும் எவ்வளவு ஹாப்பியானோம் … இவ்வளவு ஏன் அதை சொல்லும் போது டாக்டரும் கூட எவ்வளவு சந்தோஷமா சொன்னா… எல்லாருக்கும் மகிழ்ச்சி கொடுத்த விஷயம் ஏன் உங்க ஆத்துல யாருக்குமே பிடிக்கலை?”

“ஆமாம் நானும் கவனிச்சேன் ஏதோ சொல்லனுமேன்னு “சந்தோஷம்ன்னு” சொன்னா…அதுக்கு நீ ஏன் கவலை படணும்? ஏன் கண்கலங்கின?”

“அதோட நிப்பாட்டிருந்தா எனக்கும் பெரிசா சங்கடம் இருந்திருக்காது ஆனா உங்க அம்மா வெடுக்குன்னு …”

“என்ன சொன்னா ? அதை தானே அப்போலேந்து கேட்டுண்டிருக்கேன்!”

“”என்னத்துக்கு  இவ்வளவு அவசர பட்டே” ன்னு கேக்கறா!!! எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கோ. எந்த ஒரு அப்பா அம்மாவும் அவா தாத்தா பாட்டி ஆக போறான்னா சந்தோஷமா தான் ஃபீல் பண்ணுவா ஆனா இவா என்னடான்னா என்னத்துக்குன்னு கேட்கறா. உங்க ரம்யா சித்திக் கூட நாம ஃபர்ஸ்ட் டைம் போனபோது ப்ளானிங் ன்னு எல்லாம் குழந்தைய தள்ளிப் போடாதீங்கோ மாக்ஸிமம் ஒரு ஆறு மாசம் நம்மளுக்குன்னு எடுத்தா போறும்ன்னு சொன்னா தெரியுமா!! உங்க அம்மாக்கு நான் பிடிக்காத மாட்டுப்பொண்ணாவே இருந்துட்டுப் போறேன் ஆனா எப்படி அவா பேரக் குழந்தை வரப்போறத கூட என்னை அசிங்க படுத்தவே யூஸ் பண்ணறா…ச்சீ …என்னை வந்த நாள்லேருந்து என்னென்னவோ சொல்லிருக்கா … நான் எதையாவது உங்ககிட்ட வந்து சொல்லிருக்கேனா? இல்லை அவா கிட்டதான் சண்டைக்கு போனேனா? இத என்னால தாங்க முடியலை…இப்படியுமா பழிவாங்கறதுக்காக பேசுவா? நான் அப்படி என்ன தான் அவாளுக்கு செய்துட்டேன்?  எனக்கு ஆற மாட்டேங்கறது!!!” 

“அது ஒண்ணுமில்லை நான் உன்னை கல்யாணம் பண்ணிண்டது அவாளுக்கு பிடிக்கலை. அவா உன்னை வேண்டாமன்னு சொல்லியும் நான் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி அத செய்தது அவாளுக்கு கோபம். சொன்னா சொல்லிட்டுப் போறா விட்டுத்தள்ளு மிருது. நாம சந்தோஷமா இருக்கோமா அது தான் முக்கியம் புரிஞ்சுதா!!”

“அதெல்லாம் உங்களுக்குள்ள அதுல என் தப்பு என்ன சொல்லுங்கோ? நாம என்ன லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிண்டோம்? என் மேல ஏன் அந்த வெறுப்ப கொட்டணும்? எப்படி அப்படி ஈசியா விட்டுட சொல்லறேங்கள் நவீ ? ஏதாவது மூணா மனுஷா சொல்லிருந்தா விட்டுடலாம் ஆனா சொன்னது உங்க அம்மா …இந்த வலி என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் நவீ”

“புரியறது மிருது சொல்லிட்டா இப்போ அள்ளவா முடியும்?”

“அவாளால அள்ளவும் முடியாது என்னால மறக்கவும் முடியாது. அவா சொல்படி நான் அவசரப்பட்டு  வந்த என் குழந்தையைப்  பத்தி இனி நான் அவா கிட்ட எதையுமே ஷேர் பண்ணமாட்டேன். நீங்களும் என்னை சொல்ல சொல்லி வற்புறுத்தக் கூடாது. ஓகே வா?”

“அவா அப்படி பேசி அவா உரிமைய இழந்துட்டா ஸோ நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். நீ மொதல்ல கண்ணை தொட மிருது. அழறத நிப்பாட்டு ப்ளீஸ்”

“ஓகே ஓகே”

வெளியே குல்ஃபி வண்டி மணி ஓசை கேட்டதும் …

“உன் ஃபேவரைட் வண்டி வந்துடுத்து மிருது. என் வீட்டு பெரிய குழந்தை அழறதேன்னு குல்ஃபிகாரன் நம்ம ஆத்து வாசலேருந்து நகராம இங்கேயே நிக்கறான் பாரேன் !!! நாம வாங்காம நகர மாட்டான் போல….இரு நான் போய் ரெண்டு குல்ஃபி வாங்கிண்டு வந்துடறேன்”

“இரண்டு கேசர் குல்ஃபி குடுப்பா. நாளைலேருந்து இப்படி இங்கேயே நின்னா நாங்க வாங்குவோம்ன்னு நினைக்காதே சரியா. வேணும்னா நாங்களே வாசலில் நிப்போம்.”

“இந்தா மிருது உனக்கு பிடிச்ச கேசர் குல்ஃபி”

“என்ன குல்ஃபி குடுத்து ஐஸ்ஸா!!!” 

“அச்சசோ அதெல்லாம் ஒண்ணுமில்லைமா… ஏதோ அவன் இந்த நேரம் பார்த்து வந்தான் …சரி உனக்கும் பிடிக்குமேனுட்டு வாங்கினேன். குல்ஃபி குடுத்து குழந்தை அழறத நிப்பாட்டலாமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் வாங்கினேன்”

“எந்த குழந்தை அழறதாம் இங்க?”

“ம்….என் மாமியார் அம்புஜத்தின் குழந்தை மிருது பாப்பா தான் வேற யாரு?”

“ம்…ம்… அப்படியா அப்போ இந்த பாப்பா சாப்பிட்ட குல்ஃபி ஐஸ் குச்சியை பாப்பாக்கிட்டேருந்து வாங்கிண்டு போய் டஸ்ட்பின்ல போடுங்கோ பார்ப்போம்” 

“போட்டுட்டா போச்சு!! அதுக்கு பாப்பா எனக்கு ஒரு உம்மா தருமாமே”

“ஐய்யே அதை எல்லாம் உன் பொண்டாட்டி மிருதுளான்னு இருக்கா ல அவகிட்ட கேளு போ போ”

ஹா! ஹா! ஹா! ஹா! ஹா! ஹா! 

என இருவருமாக சிரித்து நடந்ததை சற்று மறந்து உறங்கினார்கள். 

செவ்வாய்க்கிழமை விடிந்ததும் வழக்கம் போல் நவீன் ஆபீஸுக்கு கிளம்பினான். அப்போது மிருதுளா..

“என்னப்பா நீங்களும் ஆபீஸுக்கு போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்குமே”

“நல்லாருக்கே அதுக்காக நான் லீவெடுக்க முடியுமா பெண்ணே!!! சரி நீ ஒழுங்கா சாப்பிடு. மாத்திரையை கரெக்டா போட்டுக்கோ. நான் வரட்டுமா. நீ டிவி பாரு இல்லாட்டி உன் படிப்பை கன்டின்யூ பண்ணு. கீப் யுவர் செல்ஃப் பிசி. ஓகே வா. சிரிச்ச முகத்தோட வழியனுப்பு மிருது. இந்த உம்மு மூஞ்சி உனக்கு செட் ஆகலை”

“ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ போறுமா”

“அம்மாடியோ இது கொஞ்சம் ஓவரா இருக்கே”

“சரி சரி பத்திரமா ஆபீஸ் போயிட்டு வாங்கோ. பை நவீ”

“பை மிருது டேக் கேர்”

நவீன் ஆபீஸ் சென்றதும் கதவை தாழிட்டு உள்ளே வந்தவளுக்கு தனது அம்மா அப்பா தம்பிகள் எல்லாரும் அமர்ந்திருப்பது போல தோன்ற சற்று கண்ணில் கண்ணீர் வடிந்தது. வேகமாக அதை துடைத்துக்கொண்டு அடுப்படிக்குள் சென்று வேலைகளை முடித்து பின் குளித்து சற்று நேரம் படித்துக்கொண்டே உறங்கிப்போனாள். சட்டென பசியால் கண்விழித்து பார்த்தாள் மணி இரண்டாகியிருந்தது. மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி சென்று சாப்பாடு சாப்பிட்டு பின் டிவியை போட்டாள் அதில்  திரைப்படம் ஒடிக்கொண்டிருந்தது. அப்படியே தலையணையை தரையில் போட்டு படுத்தவாறே திரைப்படத்தைப் பார்த்து முடிக்கவும் மணி நாலாகவும் சரியாக இருக்க எழுந்து முகம் கை கால் கழுவி விளக்கேற்றி வாசல் கதவைத் திறந்து வைத்து வெளிய வாசல் படியிலிருந்து  கேட் வரை நடந்துக்கொண்டே நவீனுக்காக காத்திருந்தாள். அப்போது பக்கத்து வீட்டு லதா மிருதுளாவிடம்..

“என்ன மிருதுளா ஹஸ்பன்ட்டுக்காக வெயிடிங் ஆ!!”

“ஆமாம் லதா அக்கா.”

“என்ன முகமெல்லாம் பிரகாசமா இருக்கே. எனி குட் நியூஸ் மிருதுளா?”

“ஆமாம் லதா அக்கா  நான் கன்சீவ் ஆகிருக்கேன்”

“வாவ்!! வாழ்த்துக்கள்” 

“அம்மா அம்மா என்னோட ரெக்கார்ட் புக்க பார்த்தயா நான் டியூஷன் போறதுக்கு நேரமாச்சு”

“சரி மிருதுளா நாம அப்பறம் பேசலாம் அவன டியூனுக்கு அனுப்பனும் நான் வரேன். டேக் கேர்”

“ஓகே லதா அக்கா”

“ஹேய் மிருது வாசல்ல என்ன பண்ணிட்டு இருக்க?”

“உங்கள் வரவுக்காக தான் வெயிட்டிங்”

“இரு பைக்கை நிப்பாட்டிட்டு வந்துடறேன்”

“வாங்கோ. இந்தாங்கோ காபி. இன்னைக்கு ஏன் லேட்? க்ளாஸ் வேற போகணுமில்லையா!”

“ஆமாம் மிருது இன்னைக்கு கொஞ்சம் வர்க்லோடு அதிகம் அதுதான் லேட் ஆயிடுத்து. க்ளாஸுக்கும் நேரமாகிடுத்து. எப்பவும் போல காபி சூப்பர். நான் க்ளாஸுக்கு போயிட்டு வரேன் பத்திரமா இரு. பை”

“ஓகே பை”

க்ளாஸ் முடிந்து வந்ததும் இருவருமாக இரவுணவு உண்டபின் கணக்கு பார்க்க அமர்ந்தனர்‌. ஊரிலிருந்து வந்தவர்களை வெளியே கூட்டிக்கொண்டு சென்றது, சுற்றுலா ஏற்பாடு செய்தது,  அவர்களுக்கு டிரஸ் எடுத்துக்கொடுத்தது மற்றும் அவர்களுடன் வெளியே சாப்பிட்டது என எல்லாவற்றையும் கூட்டி அவற்றை கையிருந்த பணத்திலிருந்து கழித்தால் கையில் மீண்டும் ஐநூறே மிஞ்சியது. அதுவும் அது ஜூலை மாத ஆரம்பம் தான் ஆகியிருந்தது. 

ஒரு மாதம் அவர்கள் அந்த ஐநூறில் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கையிலே மிருதுளா அடுப்படிக்குள் சென்று ஒரு ஐநூறு ரூபாய் எடுத்து வந்தாள். எங்கிருந்து வந்தது அந்த ஐநூறு என நவீன் கேட்க அது தனது அப்பாவும் அம்மாவும் ஊருக்கு செல்லும்முன் வற்புறுத்தி அவள் கையில் திணித்த பணம் என்றும் அதை அஞ்சறைப் பெட்டியினுள் போட்டு வைத்தது ஞாபகம் வந்ததென்றும் கூறி நவீனிடம் கொடுத்து …

“மளிகை ஜாமான்கள் மீதமிருக்கு மாதாமாதம் வாங்குவது போல வாங்க வேண்டியிருக்காது. காய்கறிகள் அப்பா வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்தது ஒரு இரண்டு வாரததுக்கு வரும்… ஆக வெளியே செல்வது சாப்பிடுவதை மட்டும் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தால் போறும்… என்ன சொல்லறேங்கள் நவீ”

“ஓகே நீ சொன்னா அதுக்கு அப்பீலே கிடையாது மேடம். அப்படியே ஆகட்டும். ஆனா அதுக்காக உனக்கு ஏதாவது சாப்பிடனும்னு தோணித்துன்னா காசில்லையேன்னு எல்லாம் யோசிக்காம கேட்கனும் சரியா”

“ஷுவரா கேட்கறேன்”

ஜூலை மாதத்தை மிகவும் ஜாக்கிரதையாக செலவழித்து கழிக்க முடிவெடுத்து அதுபடியே நடந்துக்கொண்டனர் இருவரும். ஆகஸ்டு மாதம் வந்தது கையில் மீதமிருந்தது முன்னூறு ரூபாய். அந்த மாதம் சம்பளம்  எல்லா பிடிப்பும் போக ஐயாயிரம் வந்தது. ஆனால் அந்த மாதம் எல்லா மளிகையும் அரிசி உற்பட வாங்க வேண்டியிருந்தது. பால், காய்கறி, பழங்கள், என எல்லா செலவுகளும் போக கையிருப்பு அதே ஆயிரம் தான். அந்த மாதம் திருமணத்திற்கு பின் முதல் முறை இருபதாம் தேதி மிருதுளாவின் பிறந்தநாள் வந்தது. அதற்கு அவளுக்கு விலைவுயர்ந்த பரிசுப் பொருள் வாங்கிக்கொடுக்க மனமிருந்தும் பணமில்லாமல் போனது நவீனுக்கு.  அன்றைய தினம் அவளை கோவிலுக்கு கூட்டிச் சென்று தலைநிறைய பூ வாங்கிக் கொடுத்து வைத்துக்கொள்ளச் செய்து வீட்டுக்கு வந்ததும் அவளுக்கென அவளுக்கு பிடித்த ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் ஒரே ஒரு பீஸ் மட்டும் வாங்கிக்கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெறிவித்தான் நவீன்….மிருதுளாவும் மகிழ்ச்சியாக அதை கட் செய்து நவீனுக்கு ஒரு பீஸ் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டாள். அதைப் பார்த்த நவீன்…

“ஏன் ஒரே ஒரு பீஸ் கேக் தான் வாங்கிருக்கேங்கள்ன்னு கேட்க மாட்டியா மிருது. ஆர் யூ அப்செட் வித் மீ”

“நாட் அட் ஆல் நவீ. நம்ம நிதி நிலவரம் தெரிந்தும் நான் எப்படி அப்படி கேட்பேன்னு நீங்க நினைக்கலாம்?  உங்க கிட்ட நிறைய பணமிருந்து எனக்கு செய்யலைன்னா கேட்டிருப்பேன். நாம ரெண்டு பேருமா தானே வரவு செலவெல்லாம் பார்த்துக்கறோம் அப்புறம் என்ன கேள்வி இது”

“சரி சாரி”

“என்னது”

“ஓகே மை சாரி வாப்பஸ் வாங்கிக்கறேன். இப்போ நாம ரெண்டு பேருமா நம்ம கேன்டீன் பக்கத்துல இருக்கற டாபாக்கு போய் டின்னர் சாப்பிடலாம் வா”

“ஆர் யூ ஷுவர் அபௌட் ஹாவிங் டின்னர் அவுட் சைட்?  நவீ!!”

“அதுக்கு வேணும்ன்னு தான் நான் கேக்கை கட் ஷாட் பண்ணிட்டேன். வா போயிட்டு வந்துடலாம்”

இருவருமாக சென்று உணவருந்தியதும் நவீன் …

“ஹேய் மிருது உங்க அப்பா அம்மாட்ட பேசணுமா”

“பேசலாம் ஆனா”

“என்ன ஆனா. வா பேசிட்டே போகலாம். மீட்டர்ல ஒரு கண்ணு வச்சுக்கோ எழுபத்தி அஞ்சு ரூபாய் வரைக்கும் நோ ப்ராப்ளம்”

“எனக்கே வா…ஓகே ஓகே நான் பார்த்துக்கறேன்.”

என கூறி அந்த கண்ணாடி ரூமிற்குள் சென்று பேசலானாள். சரியா ஐம்பது ரூபாயை எட்டியதும் பை சொல்லி ஃபோனை கட் செய்து வெளியே வந்து…

“உங்களை விசாரிச்சதா சொல்ல சொன்னா”

“இன்னும் இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு பேசிருக்கலாமே ஏன் அவசரம் அவசரமா கட் பண்ணிட்ட?”

“என்னத்த அதே தான் …பத்திரமா இரு, ஒழுங்கா சாப்பிடு, உடம்பை பார்த்துக்கோ இப்போ நீ தனி ஆள்ளில்லை இரண்டு பேருக்கு சாப்பிடனும்ன்னு சொன்னா எல்லாரும் நல்லாயிருக்காலாம் நாமும் நல்லா இருக்கோம்ன்னு சொன்னேன் அவ்வளவு தான் மீதி நேர்ல பார்க்கும் போது பேசிக்க வேண்டியது தான்”

“ஓ ஓகே தென் வீட்டுக்கு போகலாமா?”

“எஸ் போகலாம்”

அன்றிரவு தூக்கத்தில் மிருதுளா எழுந்து நவீனிடம் சாதமும் அவியலும் வேணுமென்று சொல்ல நவீன் செய்வதறியாது மறுநாள் விடிந்ததும் செய்து தருவதாக சொல்லி தண்ணீர் குடிக்க வைத்து அவளை தூங்க வைத்தான். 

மறுநாள் காலை எழுந்து காபி குடித்ததும் வாந்தி எடுத்தாள் மிருதுளா. அதைப் பார்த்ததும் என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று பயந்துப் போனான் நவீன் அப்போது டாக்டர் சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது உடனே அவள் நெற்றியை பிடித்துக் கொண்டான். இதே போல் காலை காபி குடித்ததும், குக்கர் திறந்ததும் என ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்து எடுத்து எதுவும் சரியாக சாப்பிடாமலானாள் மிருதுளா. மகப்பேறு காலத்தின் ஆரம்ப கால பிரச்சனைகளைப் பார்த்த நவீன் அதை தனது ரம்யா சித்தியிடம் கூற அவரும் மிருதுளாவிற்கு பிடித்த இனிப்பு பலகாரம் எது என்று நவீனிடம் கேட்டு அதேபோல தெறட்டிப்பால் செய்து எடுத்துக் கொண்டு மிருதுளாவை பார்க்க வந்தார். 

“ஹை ரம்யா சித்தி வாங்கோ வாங்கோ. எவ்வளவு நாளாச்சு உங்கள பார்த்து”

“ஹேய் மிருதுளா வாழ்த்துக்கள். அம்மா ஆக போற. நவீன் நேத்து ஃபோன் பண்ணிருந்தான். ஆமாம் நீ சரியாவே சாப்பிடறதில்லையாம். என்ன யாம்…பார்த்தாலே தெரியறதே..ஆளு பாதியாகிருக்க. இங்க பாரு மிருது வாந்தி எல்லாம் அப்படி தான் வரும் அதுக்காக சாப்பிடாம இருக்கக் கூடாது புரியறதா. நீ இப்படி இருந்தா பாவம் நவீனுக்கு எவ்வளவு கஷ்டம்…புரிஞச்சுக்கோமா”

“ஓகே சித்தி டிரை பண்ணறேன். காபி யா டீ யா எது போடட்டும்”

“ஒண்ணும் வேண்டாம் இதோ இந்த ஐஸ் வாட்டர் போறும். நான் கிளம்பறேன் என் பொண்ணுகளும், சித்தப்பாவும் வீட்டுக்கு வர்ற நேரமாச்சு மா. நான் வரட்டுமா. நவீன்ட்ட சொல்லு. இன்னொரு நாள் நாங்க எல்லோருமா வர்றோம். பை”

நவீன் தனது மாமியாரிடமும் மிருதுளா படும் பாட்டை ஃபோன் போட்டு சொல்ல அம்புஜத்திற்கு இருப்பு கொள்ளாமல் தனது கணவன் மற்றும் மகனிடம் ….தான் குஜராத் சென்று மிருதுளாவை ஒரு மாசம் பார்த்துக்கொண்டு அவளுக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட்டு வருவதாகவும் அந்த ஒரு மாதம் கணவரும் மகனும் அட்ஜஸ்ட் செய்யுது கொள்ளமுடியுமா என்றும் கேட்டாள்.  அதற்கு வேனு..

“அம்மா நாங்க ரெண்டு பேரும் இருந்துப்போம் நீ போய் மிருதுக்காவுக்கு என்ன வேணுமோ செய்து கொடும்மா நாங்க எங்களைப் பார்த்துக்கறோம் என்னப்பா உனக்கும் ஓகே தானே?”

“எனக்கும் ஓகே தான். ஆனா அடுத்த மாசம் என்ன பண்ணுவா”

“இந்த மாசம் தான் வாந்தி எல்லாம் ரொம்ப இருக்கும் அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் தீபாவளிக்கு இங்க வந்துடுவாளே.”

“ஓ சரி சரி அப்போ எப்போ டிக்கெட் புக் பண்ணணும்?”

“வர்ற சனிக்கிழமை கிளம்பட்டுமா”

“சரி அப்போ சனிக்கிழமைக்கே புக் பண்ணிடுறேன். நாளைக்கு மாப்ளைக்கும் ஃபோன் போட்டு சொல்லிடறேன். நீ சம்மந்திட்ட சொல்லிடு”

“சரி அப்படியே செய்துடறேன். டேய் வேனு பத்திரமா இருடா. அவனுக்கு வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுங்கோ”

“அம்மா அதெல்லாம் நானும் அப்பாவும் பார்த்துக்கறோம். நீ நிம்மதி யா போய் அக்காவ பார்த்துக்கோ”

மறுநாள் காலை ராமானுஜம் நவீனின் ஆபீஸுக்கு ஃபோன் போட்டு உதவிக்கு அம்புஜம் புறப்பட்டு வருவதாக கூற அதற்கு நவீன் தனது நன்றியை தெரிவித்தான். அம்புஜம் பர்வததிற்கு ஃபோன் போட்டு தான் மீண்டும் குஜராத் செல்லவிருப்பதை கூற அதற்கு பர்வதம் ..

“இன்னும் ரெண்டே மாசம் கழிச்சா அவாளே வர்றப் போறா அப்புறம் என்னத்துக்கு இப்போ போறேங்கள்?”

“இல்ல மாமி மிருதுக்கு வாந்தி, தல சுத்தல் எல்லாம் ஜாஸ்த்தியா இருக்காம். சரியா சாப்ட மாட்டேங்கறாளாம். மாப்ளைக்கும் லீவு போட முடியலையாம். இந்த ஒரு மாசம் மட்டும் போய் பார்த்துண்டுட்டு வந்திடலாம்ன்னு இருக்கேன். பாவம் கொழந்தை எவ்வளவு கஷ்டப்படறாளோ.”

“அப்படி எதுவும் எங்ககிட்ட அவன் சொல்லலையே….சரி சரி நீங்க குஜராத் போயிட்டா அப்போ உங்காத்து மாமாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா?”

“அவா ரெண்டு பேரையும்..அவாளே பார்த்துப்பா. ஒரு மாசம் தானே. நான் மிருது படற கஷ்டத்தை சொன்னதும் ரெண்டு பேருமே மொதல்ல போய் அவளப் பார்த்துக்கோன்னு தான் சொன்னா”

“ஓ அப்படியா. சரி எப்போ கி‌ளம்பறேங்கள்”

“வர்ற சனிக்கிழமை நைட். அதுதான் உங்ககிட்டயும் ஒரு வார்த்த சொல்லிடலாம்ன்னு ஃபோன் பண்ணினேன் மாமி. மாமா கிட்டயும் சொல்லிடுங்கோ.”

“சரி சரி போயிட்டு வாங்கோ உங்க பொண்ணாத்துக்கு. நான் ஃபோனை வச்சுடவா”

“சரி மாமி. உங்க புள்ளட்ட இல்ல மிருதுட்ட ஏதாவது சொல்லணுமா….”

என்று அம்புஜம் கேட்டதுக்கு பதில் ஏதும் கூறாமல் ஃபோனை கட் செய்தாள் பர்வதம். அதிலிருந்தே அம்புஜத்திற்கு புரிந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது. ஆனால் அதை எல்லாம் பார்த்தால் தன் மகள் தான் கஷ்டப்படுவாள் என்று மனதில் எண்ணிக்கொண்டு ஃபோனை வைத்து விட்டு ஊருக்கு கிளம்ப தயார் ஆனாள். 

அன்று மாலை நவீன் ஆபீஸிலிருந்து வந்ததும் 

“மிருது….நீ சந்தோஷப் படறா மாதிரி ஒரு நியூஸ் கொண்டு வந்திருக்கேன்”

“என்னது நவீ?”

“வர்ற திங்கட்கிழமை காலை ல உன்ன பார்த்துக்க… உனக்கு பிடிச்சதெல்லாம் செய்து தர …ம்…ம்…நீ கேட்ட அவியல் செய்து தர உன் அம்மா இங்கே வரப் போறா”

“ஹேய் என்னப்பா சொல்லறேங்கள் நிஜமாவா!!”

“ஆமாம் இன்னைக்கு காலை ல உன் அப்பா ஃபோன் பண்ணிச் சொன்னார்”

“அப்போ அப்பாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா? அம்மா இங்க வந்துட்டான்னா?”

“அவா ரெண்டு பேருமே அவாள பார்த்துக்கறோம்ன்னு சொல்லி உங்க அம்மாவை உனக்காக அனுப்பி வைக்கறா. தே ஆர் கிரேட்”

“ஒரு பக்கம் அம்மா வராளேன்னு சந்தோஷமா இருந்தாலும் …. அப்பாவையும் வேனுவையும் நினைச்சா பாவமாயிருக்கு”

“லெட்ஸ் வெயிட் ஃபார் மன்டே”

சனிக்கிழமை வந்தது அம்புஜத்தை ரெயிலில் ஏற்றி விட்டனர் ராமானுஜமும் வேனுவும். அதுவரை தனியாக எந்த வெளி மாநிலத்துக்கும் (வெளியூருக்கு கூட) பிரயாணம் செய்திராத அம்புஜம் ஏதோ பெண்ணை பார்க்க வேண்டும் அவளுக்கு பிடித்ததை எல்லாம் செய்துக் கொடுத்து அவளை தேற்ற வேண்டுமென்ற ஆசையில் ரெயில் ஏறிவிட்டாள். ரெயிலும் புறப்பட்டது. 

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s