அத்தியாயம் – 32: மீண்டும் இருவர் மட்டும்

 ஊருக்கு கிளம்ப மீதமிருந்த ஐந்து நாட்களும் பசங்க மூவரும் சுற்றுலா கதையையே மிருதுளாவிற்கும் நவீனிற்கும் விவரித்துக் கொண்டிருந்தனர்.  அம்புஜம் மகளுக்கு வேண்டிய புளி காய்ச்சல், ஊறுகாய்கள் என மகள் கேட்டுக்கொண்டதை எல்லாம் செய்து டப்பாக்களில் போட்டு வைப்பதில் மும்முரமாக இருந்தாள். நவீன் ஆபிஸ் க்ளாஸ் என்று ஓடிக்கொண்டே இருந்தான். ராமானுஜம் பக்கத்திலிருக்கும் கடைக்கு தினமும் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தியில் பேசி காய்கறிகள், பழங்கள் என வாங்கி வந்து அதை அலம்பி வெட்டி காய்களை ஃப்ரிஜில் கவர்களில் போட்டும் பழங்களை அன்றன்றே நறுக்கி அனைவருக்கும் கொடுத்தார். இதனால் மிருதுளா தினமும் நிறைய பழங்கள் சாப்பிட்டு வந்தாள். 

வெள்ளிக்கிழமை நவீன் ஆபீஸுக்கு லீவுப் போட்டு காலை உணவருந்திய பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் மார்க்கெட்டுக்கு சென்றனர் மிருதுளாவும் நவீனும். அங்கே ஒரு கடையினுள் சென்று மூன்று பசங்களிடமும் அவர்களுக்கு வேண்டிய டிரஸ் எடுத்துக்க சொன்னார்கள். அதில் வேனு ஒரு செட், பவின் ஒரு செட் என எடுத்துக்கொண்டனர் ஆனால் ப்ரவின் மட்டும் அனைத்து துணிகளையும் ஆராய்ந்து புரட்டிப்போட்டு இரண்டு செட் எடுத்து வந்தான். அதைப் பார்த்த மிருதுளா வேனுவிடமும் பவினிடமும் இன்னும் ஒரு செட் டிரஸ் எடுத்துக்கச் சொன்னாள் அதற்கு இருவரும் அவர்களுக்கு ஒரு செட் போதும் என்று கூற நவீன் பில் செட்டில் பண்ணி விட்டு 

அவரவர் துணிப் பையை அவரவரிடம் கொடுத்தான். கொஞ்ச நேரம் மற்ற கடைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே நடந்தவர்களை மற்றுமொரு கடைக்குள் நுழையச் சொன்னாள் மிருதுளா. அது புடவைக் கடை அதில் தனது அம்மாவை செலக்ட் செய்ய சொல்ல அதற்கு அம்புஜம் மறுக்க பின் மிருதுளாவே நல்ல  காட்டன் புடவை இரண்டு ஒரே மாதிரி டிசைன் ஆனால் கலர் வேறு வேறாக எடுத்து அதையும் பில் போட்டுப் பெற்றுக்கொண்டு பக்கத்துக் கடைக்குள் சென்றனர். அங்கிருந்து ஒரே மாதிரியான இரண்டு சட்டைகள் வெவ்வேறு நிறத்தில் எடுத்துக்கொண்டு பின் அங்கேயிருந்த டாபாவில் மத்திய உணவருந்தினர். அம்புஜத்திற்கு வெறும் சாதமும் தயிரும் மட்டும் வாங்கிக் கொடுத்தாள் மிருதுளா. அம்புஜம் அதற்கு தொட்டுக்கொள்ள அவள் செய்த ஊறுகாயிலிருந்து கொஞ்சத்தை ஒரு சின்ன டப்பாவில் போட்டு எடுத்து வந்திருந்தாள் அதைத் தொட்டுக்கொண்டு சாப்பிட அனைவரும் சிரித்துக்கொண்டே அவரவர் ஆர்டர் செய்ததை ரசித்து ருசித்து உண்டனர்.  சாப்பிட்டதுக்கு பில் செட்டில் செய்யும் போது வேனு..

அத்திம்ஸ் எங்க அம்மா சாப்பாட்டுக்கு தான் ஜாஸ்த்தி சார்ஜ் பண்ணிருப்பா பாருங்கோ

என கூறியதும் அனைவரும் சிரித்தனர். அப்போது ப்ரவின்…

மாமி ஸ்பெஷல் ஐட்டம் இல்லையா சாப்ட்டுருக்கா.

என்று கேலியும், கிண்டலும், சிரிப்புமாக அனைவரும் ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். சற்று நேரம் அவர்கள் வாங்கின டிரெஸ் எல்லாம் பார்த்தனர் பின் அவரவர் பெட்டியில் வைத்து அடுக்கத்துவங்கினர். அப்போது மிருதுளா ப்ரவினிடம் ஒரு பையை கொடுத்து அதையும் சேர்த்து பேக் பண்ண சொன்னாள் அதற்கு ப்ரவின்…

என்னது இது மன்னி?”

இது இந்த ஊரு ஸ்பெஷல் சுவீட்ஸ் மோஹன்தால் அன்ட் சூரத்தி காரி. இரண்டு சுவீட்டுமே சூப்பரா இருக்கும். அப்பறம் அம்மா அப்பாக்கு புடவை அன்ட் ஷர்ட் இருக்கு இதை எல்லாம் அம்மாட்ட குடுத்துடு

மிருதுக்கா சுவீட் ஒன்லீ ஃபார் மாமியாரா. எங்களுக்கு இல்லையா?”

இதோ இது உனக்கும் அப்பா அம்மாவுக்கும் வச்சுக்கோ இதையும் சேர்த்து பேக் பண்ணிடுமா. இருங்கோ அந்த சுவீட்ஸ் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க இதோ இந்த டப்பாவை திறங்கோ எல்லாருமா சாப்பிடலாம்” 

என்று கூறி சுவீட் டப்பாவை நவீனிடம் கொடுத்தாள் மிருதுளா. அதை வாங்கி திறந்து அனைவருக்கும் கொடுத்தான் நவீன். 

வாவ் சூப்பரா இருக்கு இந்த சுவீட் மிருதுக்கா

ஆமாம் மன்னி செம டேஸ்ட்டியா இருக்கு.” 

அம்மா நீயும் சாப்பிடலாம். இதில் எஸன்ஸ் எதுவுமில்லை.

சரி ஒரு சின்ன பீஸ் குடு சாப்ட்டு பார்க்கறேன்

நல்லாருக்கே இந்த சுவீட். நாம எப்பவும் சாப்டுற நம்ம ஊரு சுவீட்லேந்து ஒரு வித்தியாசமான சுவீட்டா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.என்றார் ராமானுஜம்

அட ஆமாம் நல்லா தான் இருக்குஎன அம்புஜம் இன்னொரு பீஸ் கேட்டு வாங்கி சாப்பிட்டாள். 

ஊருக்கு போட்டுக்கொண்டு போக வேண்டிய டிரஸை மட்டும் வெளியே வைத்துவிட்டு மற்றவைகளை பெட்டிகளில் அடுக்கி எல்லா பேக்கிங்கையும் தயார் செய்து ஒரு ஓரத்தில் வரிசையாக பேக் மற்றும் பெட்டிகளை அடுக்கி வைத்து விட்டு இரவு உணவருந்தி விட்டு அனைவரும் எழுந்ததும் மிருதுளாவும் அம்புஜமும் சாப்பிட அமர்ந்தனர். அப்போது அம்புஜம்..

மிருது டைம்க்கு சாப்பிடு. நல்லா சாப்பிடு. உடம்ப பார்த்துக்கோ. திங்கட்கிழமை உன்ட்ட இருந்து வர போற நல்ல செய்திக்காக  நான் ஆவலா காத்துண்டிருப்பேன் மறக்காம ஃபோன் பண்ணிச் சொல்லு

அது என்ன திங்கட்கிழமை செய்தி மாமி?” என்று ப்ரவின் கேட்க உடனே நவீன்

அவா ஏதோ பேசிக்கறா உனக்கென்ன டா. நீ ஏன் அவா பேசறதுல உன் மூக்கை நுழைக்கற. பேசாம டிவியைப் பாரு” 

வெளியே ஏதோ மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் பவினும் வேனுவும் கதவைத்திறந்து பார்த்தனர். உள்ளே வந்து வேனு….

மணி சத்தம் வேற எதுவும் இல்லை குல்ஃபி வண்டி வந்திருக்கு. எல்லாரும் குல்ஃபி சாப்பிடலாமா? யார்யாருக்கு வேணும்ன்னு சொல்லுங்கோ

இந்தா டா வேனு. ஒரு பத்து வாங்கிண்டு வா. வேணுங்கறவா எடுத்துக்கட்டும் மீதியிருந்தா ஃப்ரிஜ்ல வச்சுக்கலாம்என்று ராமானுஜம் வேனுவிடம் காசு கொடுத்து அனுப்ப வேனுவும் தன் அப்பா சொன்னது போலவே பத்து வாங்கிவந்து அனைவருக்கும் கொடுத்தான். மீதமிருந்த அஞ்சு குல்ஃபியை ஃப்ரிஜில் வைத்துக்கொண்டே….

அம்மா அன்ட் மிருதுக்கா உங்க ரெண்டு பேரோடதும் சேர்த்து உள்ள வைக்கறேன். நீங்க சாப்ட்டுட்டு எடுத்துக்கோங்கோ

தாங்கஸ் டா வேனு. நாங்க அப்பறமா எடுத்துக்கறோம். அம்மா நீ எதுவும் நினைச்சு கவலைப் படாதே. நிச்சயம் ஃபோன் பண்ணறேன். என்ன நீங்க எல்லாரும் போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்கும்.

அதுக்கென்ன பண்ண முடியும் மா. அப்பாக்கு ஆபிஸ் போகணும். வேனுக்கு காலேஜ் போகணும். என்ன பண்ண!

இருவருமாக பேசிக்கொண்டே உணவருந்தி பின் குல்ஃபியை சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்….

மிருதுக்கா ஒரு கேம் கார்ட்ஸ் விளையாடலாமா

டேய் வேனு மணி ஒன்பதாச்சுடா

அம்மா நாளைக்கு இந்த நேரம் ரெயில்வே ஸ்டேஷன்ல இருப்போம். இன்னைக்கு மட்டும் ஒரு பத்து மணி வரைக்கும் விளையாடலாமே

சரி டா வேனு நான் வறேன்”  நவீன் சொல்ல

நாங்களும் வறோம்என்றனர் பவினும் ப்ரவினும்.

மெஜாரிட்டி ஆண்கள் பக்கம்  என்பதால் மிருதுளாவும் அம்புஜமும் வேறு வழியின்றி விளையாட சம்மதித்து அவர்களின் சீட்டாட்ட குழுவில் சேர்ந்துக்கொண்டனர். அனைவருமாக இரவு பத்து மணி வரை விளையாடிவிட்டு பின் உறங்க படுத்துக்கொண்டாலும் சில மணி நேரம் அரட்டை அடித்த பின்னரே உறங்கலானார்கள். 

மறுநாள் சனிக்கிழமை அன்று அம்புஜம் விருந்து சமையல் சமைத்தாள். சாம்பார், ரசம், அவியல், இரண்டு பொறியல், பாயசம் என அனைத்தும் சமைத்து ராமானுஜத்திடம் வாழை இலை வீட்டின் பின்னாலிருந்து வெட்டி வரச்சொல்லி அனைவருக்கும் வாழை இலைப் போட்டு சாப்பாடு பரிமாறினாள். அப்போது மிருதுளா…

என்ன மா இன்னைக்கு ஊருக்கு போற குஷி ல சும்மா சூப்பரா சமச்சிருக்க…இவ்வளவு ஐட்டம்ஸ் பண்ணிருக்க.

இல்லமா இன்னைக்கு போனா இனி எப்போ மறுபடியும் வர வாய்ப்பு கிடைக்கும்ன்னு தெரியலை அதுனால என் பொண்ணுக்கும் மாப்ளைக்கும் இப்படி சமைச்சேன் நல்லாருக்கில்லையா!!

சூப்பரா இருக்கு மாமி. நீங்க அண்ணா மன்னிக்கு மட்டும் சமச்சேங்கள்ன்னா ஏன் எங்களுக்கும் பரிமாறினேங்கள்என பவின் கேட்க

எல்லாருக்குமாக செய்தேன் போறுமா. நன்னாயிருக்கோனோ எல்லாரும் நல்லா சாப்டுங்கோ.

அனைவரும் சாப்பிட்டப்பின் சற்று நேரம் ஓய்வெடுத்தனர். மாலை நான்கு மணிக்கெல்லாம் காபி குடித்து விட்டு பிரயாணத்துக்கு வேண்டிய சாப்பாட்டை செய்து ஹாலில் கொண்டு வந்து வைத்தாள் அம்புஜம். அவற்றை ஐந்து ஐந்து பொட்டலங்களாக கட்டி, பாட்டில்களில் தண்ணீர் நிறப்பி, வடாமை ஒரு கவரில் போட்டு கட்டி, எல்லாவற்றையும் ஒரு கட்டப்பையில் அடுக்கி வைத்தார் ராமானுஜம். 

ஒருவர் பின் ஒருவராக குளித்து கிளம்ப சரியாக இருந்தது. நவீன் தனது நண்பன் ஓம்னி வேனை எடுத்து வந்து அதில் பெட்டிப் படுக்கைகள் என அனைத்து சாமான்களையும் ஏற்றினார்கள் பவின், ப்ரவின் மற்றும் வேனு. எல்லாரும் தயார் ஆனதும் வேனில் ஏறி ரெயில்வே ஸ்டேஷனை எழரை மணிக்கு சென்றடைந்தனர். அங்கே ஸ்டான்டில் வண்டியை பார்க் செய்து விட்டு அவரவர்  சாமான்களை அவரவர் தூக்கிக்கொண்டு அவர்கள் செல்லவிருக்கு ரெயில் நிற்கும் ப்ளாட்பாரத்திற்கு எட்டு மணிக்கு சென்றனர். அங்கே அவர்கள் ரெயில் நின்றுக்கொண்டிருந்தது. அதில் பொருட்களை ஏற்றி செட் செய்தப்பின் வண்டியிலிருந்து அனைவருமாக கீழே இறங்கி வண்டி கிளம்ப பதினைந்து நிமிடங்கள் இருப்பதால் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மிருதுளா தனது அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு மௌனமாக இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் மடை திறக்க காத்திருக்கும் நதி போல உருண்டோட காத்திருந்தது. அதை கவனித்த அம்புஜம் தன் மகளின் கையை தட்டிக் கொடுத்துக் கொண்டே ….

சரி மா… சரி ரெண்டு பேரும் நல்லா சந்தோஷமா இருங்கோ. மாப்ள எங்க பொண்ண நல்லா தான் பார்த்துக்கறேங்கள். இதே போல எப்பவும் அவள பார்த்துக்கோங்கோ. அவள சந்தோஷமா வச்சுக்கோங்கோ.” 

ரெயில் கிளம்ப போகிறது என்பதற்கான  சங்கு ஊத அனைவரும் வேகமாக ரெயிலில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்ததும் ரெயில் மெல்ல நகர ஆரம்பித்தது….

பை அண்ணா மன்னி

அப்பா அம்மாவ கேட்டதா சொல்லுங்கோ பவின் அன்ட் ப்ரவின்என்றாள் மிருதுளா

பை மிருதுக்கா.. பை அத்திம்ஸ்” 

பை டா வேனு. டேக் கேர்.

அம்மா அம்மா அம்மா பை !! அப்பா பை!

பை மா மிருது. பை மாப்ளஎன்றாள் அம்புஜம் கண்ணில் கண்ணீரோடு

நாங்க போயிட்டு வறோம் மாப்ள. வறோம் மா மிருதுஎன்று கறகறத்த குரலில் சொன்னார் ராமானுஜம். 

ஓகே எந்த கவலையும் இல்லாம போயிட்டு வாங்கோஎன்றான் நவீன் தனது மாமனார் மற்றும் மாமியாரிடம்.

ரெயில் கொஞ்சம் வேகம் எடுக்க மெல்ல மிருதுளா கைகளிலிருந்து அவள் அம்மாவின் கை நழுவியது. அம்புஜம் முடிந்த வரை தனது கையை ஜன்னல் வெளியே விட்டு ஆட்டிக்கொண்டே சென்றாள். சிறிது நேரத்தில் கும்பலாக இரந்த அந்த ப்ளாட்பாரம் ஆள் நடமாட்டமில்லாமல் ஆனது. அதுவரை மிருதுளா அங்கேயே அமர்ந்து அழ அவளை சமாதானம் படுத்த மிகவும் சிரம பட்ட நவீன்….

மிருது எல்லாரும் போயாச்சு ப்ளாட்பாரமே காலியா இருக்கு. ரெயில் போய் இருபது நிமிஷமாச்சு. அது தான் இன்னும் மூணு மாசததுல நாமளே ஊருக்கு போக போறோமே அப்பறம் என்ன!! வா கண்ண தொடச்சுக்கோ. மணி வேற ஆகறது. நாம வந்த வண்டியை  திருப்பிக்குடுக்கனுமில்லையா. எழுந்திரி மிருது போகலாம்.

மிருதுளா சமாதானம் ஆகாவிட்டாலும் வீட்டுக்கு போயாக வேண்டுமே என்றோ!!! இல்லை தங்களுக்குதவிய நண்பனின் வண்டியை திருப்பி நேரத்துக்கு குடுக்க வேண்டுமென்றோ!! இரவுநேரம் வேற  ஆகிறதென்றோ!!!  ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது இவ்வனைத்து காரணத்தினாலோ சட்டென கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனுடன் வீட்டுக்கு புறப்பட்டாள் ஆனால் அவள் கண்கள் வற்றவில்லை அதில் கண்ணீர் பெருக்கெடுத்துக்கொண்டே தான் இருந்தது.

அவர்கள் கேம்ப்புக்குள் வந்ததும் நேராக வண்டியை நவீன் நண்பனிடம் ஒப்படைத்து விட்டு இருவருமாக நடந்து வீட்டுக்குச் செல்லும் போது …மிருதுளா …

இவா எல்லாரும் ஏன் வரணும், நாம எல்லாருமாக ஏன் அவ்வளவு ஜாலியா இருந்திருக்கனும் அப்பறம் ஏன் இப்படி நம்மள அம்போன்னு விட்டுட்டு அவா எல்லாரும் கிளம்பி போகணும்?”

அது தான் மா லைஃப் மிருது. இனி இப்படி தான் எப்பவாவது எல்லாருமா நம்மள பார்க்க, நம்மளோட இருக்க வருவா அப்புறம் கிளம்பி போவா. நீ அவா வந்துட்டு போற ஒவ்வொரு தடவையும் இப்படி தான் அழப்போறயா என்ன?” 

மனசு ரொம்ப சங்கடப்படறது நவீ. எனக்கு வீட்டுக்குள்ள போகவே என்னவோ மாதிரி இருக்கு. யாருமே இல்லாத வீடு போல தோணும்

மூணு வாரத்துக்கு முன்னாடி வரை நம்ம ரெண்டு பேரு மட்டும் தானே இருந்தோம் அப்போ பிடிச்சிருந்தது இல்ல அது மாதிரிதான் இப்போவும். இங்க பாரு மிருது யாரு வேணும்னாலும் நம்ம லைஃப் ல வரலாம் போகலாம் ஆனா கடைசி வரைக்கும் இனி நாம மட்டும் தான் புரியறதா?”

அதெல்லாம் புரியறது ஆனா மனசு அதை ஏத்துக்க மாட்டேங்கறது நவீ

இப்போ அப்படி தான் இருக்கும் இன்னும் சில வருஷம் போனா மனசு புரிஞ்சுக்கும் அதை ஏத்துக்கவும் செய்யும் அதுவரை கொஞ்சம் காத்திருக்க தான் வேணும். உன் மனசும் நானும்

ஆமாம் ஆமாம் பார்ப்போம் பார்ப்போம்

என்று கூறினாலும் அவள்  கண்களிலிருந்து கண்ணீர் பல நாட்களாக ஸ்டாக் வைத்திருந்தது போல பொல பொலவென உரண்டோடிக்கொண்டே தான் இருந்தது. அதை பார்த்த நவீன் மீண்டும்…

என்ன மிருது உனக்குள்ளேயே நிறைய உறுப்புகள் சரியான குவார்டினேஷனே இல்லாம இருக்கு !!!! வாய் பார்க்கலாம்ன்னு சொல்லறது ஆனா கண்ணு அதை ஏத்துக்காம நிக்காம மழை பொழிஞ்சிண்டே  இருக்கே. சரி மன்டே காலை ல டாக்டர்ட்ட போகணும் ஞாபகம் இருக்கா?” 

என்று பேச்சை திசைத் திருப்ப வீடும் வந்தது. வீட்டைத் திறந்தான் நவீன். இருவருமாக உள்ளே நுழைய மிருதுளாவிற்கு அவள் அப்பா அம்மா மற்றும் தம்பிகள் ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு இருப்பது போல தெரிய மீண்டும் அவள் கண் கலங்கினாள். ஆனாலும் அதை துடைத்துக் கொண்டே…

ஓ!!! நல்லா ஞாபகம் இருக்கே. ஐ ஆம் வேயிட்டிங் ஃபார் மன்டே நவீ” 

இருவரும் முகம் கை கால் அலம்பி விட்டு சற்று நேரம் டிவி பார்த்தப் பின் அம்புஜம் அவர்களுக்கும் சுட்டு வைத்திருந்த சப்பாத்தியையும் மசாலாவையும் சாப்பிட்டனர். அதே குல்ஃபி காரன் மணி அடிக்க அதைக் கேட்ட மிருதுளா…

ஹேய் நவீ நேத்து வேனு வாங்கின குல்ஃபி ப்ரிஜ்ல இருக்கு சாப்பிடலாமா!

ஓ எஸ்என கூறிக்கொண்டே ஃப்ரிஜை திறந்துப் பார்த்தான் நவீன் ஆனால் அதில் குல்ஃபி இருக்கவில்லை. 

அட இங்கே ஒரு குல்ஃபி கூட இல்லை மிருது எப்போ யாரு சாப்ட்டானே தெரியலையே நாமளும் இங்கே இருந்திருக்கோம் பாரேன்!

ஓ !!! ஆமாம் ஆமாம் இன்னைக்கு மத்தியானம் பசங்க சாப்ட்டா. சாரி நான் தான் மறந்துட்டேன்

சரி இரு நான் போய் ரெண்டு வாங்கிண்டு வரேன்

நவீன் குல்ஃபி வாங்கி வர… மிருதுளாவும் நவீனுமாக திரைப்படம் பார்த்துக்கொண்டே அதை உண்டு முடித்து பின் உறங்க படுத்துக்கொண்டனர். மிருதுளா திரும்பி படுத்துக் கொண்டு மெல்ல அழுவதை கவனித்த நவீன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு ….

டோன்ட் வரி மிருது ஜஸ்ட் மூணு மாசம் தான் வீ வில் கோ தேர் அன்ட் பி வித் தெம். நீ சமாதானம் ஆயிட்டன்னு நினைச்சேன் மறுபடியும் ஆரம்பிக்கற. ப்ளீஸ் ஜஸ்ட் ரிலாக்ஸ் அன்ட் ஸ்லீப்.

என கூற மிருதுளாவும் கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனை கட்டிக்கொண்டு உறங்கினாள். 

ஆக மீதமிருந்த ஐந்து நாட்களும் விருந்தினருடன் சந்தோஷமாக கழித்ததாலும் ஸ்பெஷல் விருந்தினரான பவின் அன்ட் ப்ரவினும் ஏதும் அனாவசியமாக பேசாததினாலும் வாசகர்களாகிய நமக்கு சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்தது போல இருந்தாலும்… உணர்ச்சிகள் பொங்கி வழிந்ததை நம்மால் உணர முடிந்தது இந்த வாரம்.  உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத சுமையாகிவிடும், ரசனை இல்லாமல் போய் விடும் பின் நல்லவை நமது கண்களுக்கு புலப்படாமல் இருந்துவிடும். நவீன் கூறியது போல திருமணம் என்ற பந்தம் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கடைசி வரை வரக்கூடிய ஒரே பந்தமாகும். 

இவர்களும் அது போலவே இருந்தால் நல்லது தான் இல்லையா

தொடரும்…….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s