அத்தியாயம் – 3 நிச்சயதார்த்தத்திற்கு முன்

நவீன் வீட்டார் அனைவரும் பெண் பார்க்கும் படலம் முடிந்தபின் வேனில் பர்வதம் வீட்டிற்கு திரும்பும்போது பெண் வீட்டாரையும் அவர்களின் விருந்தோம்பலையும் பற்றி பேசிக்கொண்டு வந்தனர்.

 நவீன் பெரியம்மா 

நவீன் உனக்கு நல்ல பொன்னா அமைஞ்சிருக்காப்பா. ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு”

நவீனின் பெரியப்பா சுரேஷ் கிருஷ்ணா..

ஈஸ்வரா ஆத்துக்கு மாட்டுப்பொன் வரப்போரா… இனி உனக்கு ருசியா சாப்பாடு கிடைக்கப்போறது …என்ன சரியா…ஓகே பர்வதம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” 

பர்வதம் தனக்குள் முனுமுனுத்தாள்

ஆமாம் விளையாடராராம் …வேற வேலை இல்லை. அவர் தான் அப்படி சொல்லரார்னா இவரும் கேட்டுண்டு கெக்க புக்க னு சிறிச்சுண்டு இருக்கறத பாரு..என்னத்த சொல்ல” 

நவீன் பெரியப்பா …

என்ன பர்வதம் ஏதோ முனுமுனுன்னு சொல்லற!!! சத்தமாதான் சொல்லேன் எல்லாரும் கேட்ப்போமோனோ”

உடனே அக்காளை காக்க வந்தார் தம்பி பிச்சுமணி.

அத்திம்பேர் எல்லாருக்கும் கேட்கனும்னா அக்கா சத்தமாவே சொல்லிருப்பாளே….நீங்க புரிஞ்சுக்காத மாதிரி இப்படி கேட்க்கலாமா !!!”

என்னடா நவீன் இங்க தானே இருக்க?”

என்று பிச்சுமணி கேட்டதும் அனைவரும் நவீனை நகையாடி சிரிப்பு மழையில் நனைந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். பிச்சுமணியின் மனைவியை என்றுமே பர்வதம் மதித்ததில்லை. அதைப்பற்றி பிச்சுமணியும் அக்காவை எதிர்த்து கேட்டதும் இல்லை. அதனால் அவர் மனைவி அம்பிகா மிகவும் அவமானப்படுத்தப்பட்டார். அன்று பெண் பார்ப்பதற்கு கூட பர்வதம் கூட்டிக்கொண்டு போகவில்லை. அவர்கள் அனைவரும் வந்ததும் அம்பிகா ஓடி வந்து விவரங்களை கேட்டாள் அதற்கு பர்வதம் 

ம்ம்ம்… எல்லாம் சொல்லறோம் இப்ப தானே வந்துருக்கோம்”

அம்பிகா உடனே தான் பார்த்து வளர்ந்த நவீனிடம் கேட்டாள்

என்ன நவீன் பொன்னு ஓகே வா? டும் டும் டும் கல்யாணமா?”

ஆமாம் மாமி எனக்கு பொன்ன பிடிச்சிருக்கு ஓகே சொல்லிட்டேன் இனி நீங்க எல்லாருமா நிச்சயதார்த்ததுக்கு ஒரு டேட் பிக்ஸ் பண்ணுங்கோ. நான் இந்த மாசம் இருபத்தைந்தாம் தேதி டில்லிக்கு ரிட்டேர்ன் ஆகனும்.. 

அதுக்குள்ள நடந்ததுனா நல்லாருக்கும்.‌..இல்லைனா தென் பிப்பிரவரி மாதம் தான் லீவ் கிடைக்கும்”

நவீன் பெரியப்பா ….

என்ன இவன் இப்படி சொல்றான். இன்னைக்கு பண்ணடு தேதி ஆகறது, இவன் இருப்பத்தைந்து கிளம்பறான் இடைல 13 நாட்கள் தானே இருக்கு!”

நான் என்ன பண்ண பெரியப்பா…என்னை குஜராத் காந்தி நகருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்கா அன்ட் ஒன்னாம் தேதி அங்க ரிப்போர்ட்  பண்ணனும் ஸோ டில்லி போய் திங்க்ஸ் எல்லாம் பாக் செஞ்சு பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணிண்டு ஃர்ஸ்ட் காந்தி நகர் யூனிட்டில் இருக்கனும்.”

என்று கூறி உடை மாற்ற சென்றான் நவீன்.

உடனே நவீனின் மாமாவும் பெரியம்மாவும் காலண்டரில் நல்லநாள் பார்க்க ஆரம்பித்தனர். பின் பிச்சுமணி தன் அக்காவைப்பார்த்து …

என்ன அக்கா நாங்க எல்லாரும் இன்னும் 13 நாள் தான் இருக்குனுட்டு நல்ல நாளெல்லாம் பார்க்கறோம் நீ என்ன ஏதோ யோசிச்சிண்டு இருக்க?”

உடனே பெரியப்பா சுரேஷ் மீண்டும் …

அது வேறோன்னும்மில்லடா பிச்சு மாமியாராக போராளோனோ அந்த கெத்து வந்துடுத்து போல. என்ன பர்வதம் கரெக்ட்டா சொன்னேனா….ஹா..ஹா..ஹா”

அத்திம்பேர் ப்ளீஸ் பீ சீரியஸ்…இப்போ அக்காவை கிண்டல் பண்ணறதுதான் முக்கியமா?”

ஓகே டா ….பர்வதம் காவலா. இனி உன் அக்காளை ஒன்னும் சொல்ல மாட்டேன்..போருமா?”

பர்வதம் அக்கா, ஈஸ்வரன் அத்திம்பேர் வர வாரம் பத்தொன்பதாம் தேதி சுப முகூர்த்த நாள்ன்னு காலண்டரில் போட்டிருக்கு நவீன் கிளம்பற தேதிக்குள்ள இந்த நாள் மாத்தரம் தான் சுப முகூர்த்த நாள். அன்னைக்கே நிச்சயம் பண்ணிண்டுடலாமா? என்ன சொல்லறேங்கள்?”

பர்வதம் உடனே…” நவீனிடம் கேட்டுக்கோங்கோ” என்று கூறி அடுப்படிக்கு சென்று விட்டாள்.

இதை கேட்டுக்கொண்டே வந்த நவீன் 

அது ஒன்னுமில்லை மாமா…. அம்மா வேண்டாம் என்று சொன்ன பொன்னை நான் ஓகே சொன்னதால் தான் இந்த ரியாக்ஷன்…அவள் நிறம் கம்மியாம் ஆள் தடியாம் …நீங்க எல்லாரும் பார்த்தேங்களே ….பெரியம்மா சொல்லுங்கோ.”

பொன்னு அத்தர நிறம் கம்மி எல்லாம் இல்லையே!! ஆளும் அவ ஹைட்டுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கா…ஏன்டி பர்வதம் உன் கண்ணுல ஏதாவது பிரச்சினையா?”

என்று பர்வதத்தின் அக்கா ரமணி கூற அனைவரும் சிரித்தனர்.

நவீனுக்குதான் பிடிக்கனும் அவன் தான் அவளோட வாழப்போறவன். அவனுக்கு பிடிச்சிருக்கு ஸோ இதுல இனி நாம பெரியவாளா லட்சணமா கொழந்தகள ஆசிர்வாதம் பண்ணுவோம்”

 இரவு உணவு உண்டு அனைவரும் அவரவர்கள் வீடுகளுக்கு சென்றனர். பர்வத்திற்கு அன்று உறக்கம் வரவில்லை. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தியே ஆக வேண்டுமென யோசித்தாள்… மனதில் திட்டம் ஒன்று உதிக்க நிம்மதியாக உறங்கினாள்.

மறுநாள் காலையில் பர்வதம் தனது வீட்டு தெருவில் மிருதுளாவின் அப்பா வேலை பார்க்கும் அதே அலுவலகத்தில் பண்ணிப்புரியும் ரமணன் என்பவர் வீட்டிற்கு சென்று வந்தாள். 

அன்று மிருதுளாவின் தந்தை ராமானுஜத்தை அலுவலகத்தில் போய் சந்தித்தார் ரமணன். 

என்ன ராமானுஜம் மாமா பொன்னுக்கு கல்யாணமாமே! சொல்லவேயில்லை”

உனக்கு எப்படி தெரியும் நேத்துதான் பொன்ன பார்த்துட்டுப்போயிருக்கா அதுக்குள்ள உனக்கு ….”

ரொம்ப யோசிக்காதீங்கோ …நான் உங்களுக்கு சம்மந்தி ஆக போர ஈஸ்வரன் மாமா பர்வதம் மாமி ஆத்து பக்கத்துல தான் இருக்கேன். மாமி என்னாண்ட ஒரு விஷயம் சொல்லி உங்கள்ட்ட சொல்ல சொன்னா”

என்னவாம்?” என்றார் ராமானுஜம்.

(அப்பொழுதும் தன் பெண் வாழ போகும் வீட்டிற்கு பக்கத்தில் வசிப்பவராயிற்றே அவர்களைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றில்லை ராமானுஜத்திற்கு. அவ்வளவு பொறுப்பானவர்.)

அது ஒன்னும்மில்லை மாமா நிச்சயத்திற்கு மாப்பிள்ளைக்கு ஒரு ப்ரேஸ்ளெட்டும், மோதிரமும் போடனுமாம் அத சொல்ல மறந்துட்டாளாம் அது தான் என்னாண்ட சொல்லி அனுப்பினா…நானும் சொல்லிட்டேன் வரேன் மாமா”

இதை கேட்டதும் சுர்ரென்று கோபம் தலைக்கேறியது ராமானுஜத்திற்கு. உடனே ஒரு மணிநேரம் பெர்மிஷன் போட்டு வீட்டிற்குச் சென்று…

ஏய் அம்புஜம் அடியே அம்புஜம்.”

என்ன …னா  என்ன ஆச்சு ஏன் இவ்வளோ கோவமா இருக்கேங்கள்?”

என்ன நினைச்சுண்டிருக்கா அவா? நேத்தே தெளிவா பேசிடலாம்முனு சொன்னதுக்கு எங்களுக்கு ஒன்னும் வேண்டாம் அது இதுனு சபைல சொல்லிட்டு இப்போ அதுவும் அந்த ரமணனை தூது ஆனுப்பி மாப்பிள்ளைக்கு நிச்சயத்துக்கு மோதிரம், ப்ரேஸ்ளெட் போடனும்முனு சொல்லி அனுப்பிருக்கா!!!! அவனெல்லாம் யாரு அவன் வந்து என்கிட்ட என்ன நக்கலா சொல்லறான் தெறியுமா? அப்படியே வேணும்னாலும் ஏன் அவாளுக்கு ஃபோன் போட்டு சொல்ல முடியாதோ? எனக்கு இந்த இடம் சரிவரும்முனு தோனலை” 

அச்சசோ அவசரப்படாதீங்கோ இத அவா தான் சொல்லி அனுப்பிருக்காளானு நமக்குத்தெரியாது இல்லையா? அதனால பேசாம இருப்போம்… அப்போ… அவாளே ஃபோன் போட்டு கேப்பாளோனோ… அவா கேட்கச்சொல்லிருந்தா! ” 

என்னமோ போ… சரி சாப்பாட்ட போடு வந்தது தான் வந்தேன் அத முடிச்சுட்டுப்போறேன்”

மறுநாள் காலையிலும் ரமணன் சென்று ராமானுஜத்தை சந்தித்து …

ஹலோ மாமா எப்படி இருக்கேங்கள்?”

இது வரைக்கும் நல்லாதான் இருந்தேன். இன்னைக்கு என்ன விஷயமா வந்திருக்க?”

அது ஒன்னுமில்லை மாமா”

அப்படினா என்ன சும்மா பார்க்கறதுக்காக இத்தர தூரம் வந்தியாகும்?”

உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதான் போங்கோ”

அய்யோ ராமா!!! விஷயத்தை சொல்லரயா நேக்கு நிறய வேல இருக்கு”

பர்வதம் மாமி உங்களாண்ட சொல்ல சொன்னதை சொல்ல தான் வந்தேன்”

என்னவாம் அந்த மாமிக்கு?”

அவாளுக்கு வரலட்சுமி விரதம் உண்டாம்  அதனால வெள்ளில ஒரு சொம்பும் அம்மன் முகமும் தந்திடுங்கோனு சொல்ல சொன்னா சொல்லிட்டேன்”

நீ யாரு அந்த மாமியோட புறாவா தூது அனுப்பிண்டே இருக்கா”

அவா சொல்ல சொன்னா சொல்லிட்டேன் இதெல்லாம் நீங்களே அவாள்ட்ட பேசிருந்தா அவா ஏன் என்ட்ட இப்படி சொல்லி அனுப்பப்போறா மாமா…சரி நான் வரேன்” 

என்று ரமணன் கூறியதும் ராமானுஜம் ஆத்திரம் அடைந்து அன்று லீவ் போட்டு வீட்டிற்கு சென்று …

அம்புஜம் நான்தான் அப்பவே சொன்னேனோ இல்யா இந்த இடம் நமக்கு ஒத்து வராது…சும்மா ஒவ்வொரு நாளும் அந்த ரமணனை அனுப்பி அது வேணும் இது வேணுமுனு கேட்கறது நல்லாவா இருக்கு? அவா பண்ணறது சரியில்லை இப்பவே ஃபோன போட்டு இந்த சம்மந்தத்தில் நம்மளுக்கு இஷ்டமில்லைனு சொல்லிடபோரேன்”

ஏன் இன்னிக்கு என்ன கேட்டு அனுப்பிருந்தா?”

அவா வரலட்சுமி விரதத்திற்கு வெள்ளில முகமும் சொம்பும் வேணுமாம்…அந்த ரமணன் சொல்லறான் இதலெல்லாம் க்ளியரா பேசிருக்கனும்முனு ….ஏன் நான் பேசலையா அவாள்ட்ட நேரடியா கேட்கலையா சொல்லு”

என்னது வரலட்சுமி விரதமா!! கேரளா காராளுக்கு கிடையாதே பின்ன ஏன் கேட்டா? சரி இனி இத இப்படியே தொடர விட கூடாது நான் கெளம்பறேன். நம்ம ரெண்டு பேரும் இப்பவே அவா ஆத்துக்குப்போய் நேரடியா விஷயத்த சொல்லி என்ன ஏதுனு கேட்டுண்டு வரலாம் வாங்கோ”

இருவரும் புறப்பட்டு நவீன் வீட்டிற்கு சென்றனர். அங்கு நவீனும் பர்வதமும் மட்டும் இருந்தனர். மாடியிலிருந்து அம்புஜமும், ராமானுஜமும் வருவதை கண்ட பர்வதம் ….நவீனை அவன் நண்பன் சதீஷ் வீட்டுக்கு போகுமாறு வற்ப்புறுத்தினாள். ஆனால் நவீன் போகவில்லை. அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து விட்டனர் உடனே பர்வதம்…

வாங்கோ வாங்கோ என்ன திடிர்னு வந்திருக்கேங்கள் ” என்றதும் 

ராமானுஜம் சட்டென்று கோபத்தில்

நீங்களும் திடிர் திடிர்னு தானே ஒவ்வொன்னா கேட்டு அனுப்பறேங்கள்”

நவீன் எட்டிப்பார்த்தான் பின் எழுந்து சென்று..

வாங்கோ வாங்கோ உள்ள வாங்கோ”

நீங்களும் ஆத்துல தான் இருக்கேளா ரொம்ப நல்லதா போச்சு. “

என்ன சொல்லறேங்கள் எனக்கு ஒன்னும் புரியலை” 

உடனே அம்புஜம் 

இல்லை விஷயம் என்னனா…”

என்னத்துக்கு அவாள மாதிரியே இழுக்கறாய்? நான் நேரடியாவே கேட்கறேன் …..நீங்க என் பொன்னைப்பார்க்க வந்தப்போவே உங்கள் எதிர்பார்ப்புகளை சொல்லச்சொன்னேனா இல்லையா அப்போ ஏதோ எனக்கு எதுவும் வேண்டாம்னு சொன்னேங்கள் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது எல்லாம் ஒகே ஆனால்  என் கூட வேல பார்க்குர ரமணன் கிட்ட மோதிரம்ப்ரேஸ்ளெட், வெள்ளில முகம், சொம்பு அது இதுனு ஒவ்வொரு நாள் ஒவ்வொன்னா கேட்டு அனுபறேங்களே இது நல்லா இருக்கா சொல்லுங்கோ சபேல வேண்டாம்னு சொல்லிட்டு தனியா இப்படி அதுவும் மூனாம் மனுஷாள விட்டு கேட்க சொல்லலாமா? எனக்கு மனசு கேட்கலை அதுதான் நாங்க ரெண்டு பேரும் நேரா பேசி க்ளியர் பண்ணிக்கலாம்னு வந்திருக்கோம்!”

ராமானுஜம் ஆவேசத்தில் பேசி முடித்ததும் அம்புஜம்

தப்பா எடுத்துக்காதீங்கோ அவர் ஏதோ டென்ஷன்ல பேசிட்டார் ஆனாலும் உண்மை தானே மத்தவாள விட்டு கேட்க சொன்னதுக்கு பதில் நீங்களே ஒரு ஃபோன் போட்டு கேட்டுருக்கலாம்”

நடந்தது அனைத்தும் அப்பொழுது தான் நவீனுக்கு தெறிய வந்தது…அவன் யோசித்துக்கொண்டே …

ஆமாம்… ரமணன் மாமாட்ட இதெல்லாம் எங்காத்தேந்து யாரு கேட்க சொன்னாலாம்?”

பர்வதம் மாமி தான் கேட்க சொன்னதா சொன்னான்” என்றார் ராமானுஜம்

அதை கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது பர்வதத்திற்கு ஆனாலும் சுதாரித்துக்கொண்டு

நானா ? நான் எந்த ரமணன் குமணன் கிட்ட எல்லாம் எதுவும் கேட்க சொல்லலையே” என்று முழு பூசணிக்காயை மறைக்கப்பார்தாள்.

ராமானுஜம் விடுவதாக இல்லை …” ஓ அப்படியா விஷயம் ஒகே மாமி ரமணனுக்கு என் பொன்னுக்கு நிச்சயம் ஆக போறத பத்தி நாங்க யாரும் சொல்லலை அது பாய்ண்ட் நம்பர் ஒன் இன்னும் பத்து நிமிஷத்துல ரமணனே வீட்டுக்கு வந்திடுவான் அவன் உங்க தெருவில் தான் இருக்கானாமே கூப்பிட்டு உங்க முன்னாடியே ஏன் அப்படி பொய் சொன்னான்ங்கறதையும் கேட்டு தெரிஞ்சுண்டே போறோம்”

பர்வதம் ரமணன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததையும் தனது தாய் குணத்தை தெரிந்ததனாலும்…இந்த பிரச்சினை பெரிசாகாமலிருக்க….நவீன் 

ஓகே நீங்க ஸ்டேரைட் ஃபார் வேர்ட் ஆ இருக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.  நடந்ததெல்லாம் விடுங்கோ தப்பு எங்க யாரு பண்ணிருக்கா எல்லாம் நான் பார்த்துக்கறேன். ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்கோ இதெல்லாமே எனக்கு தெரியாமல் நடந்திருக்கு ஆனாலும் மண்ணிப்பு கேட்டுக்கறேன். இனி இது மாதிரி நடக்காது. எதுவா இருந்தாலும் நீங்கள் என்னிடம் டைரக்ட்டா பேசிடுங்கோ அதுதான் எல்லாருக்கும் நல்லதுனு நான் நினைக்கறேன். அன்ட் நிச்சயதார்த்தம் 19த் வச்சுக்கலாமானு டிஸ்கஸ் பண்ணி சொல்லுங்கோ. ஏன்னா நான் இருபத்தைந்தாம் தேதி டில்லிக்கு திரும்பனும் என்னை குஜராத் காந்தி நகருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்கா அன்ட் ஒன்னாம் தேதி அங்க ரிப்போர்ட்  பண்ணனும் ஸோ டில்லி போய் திங்க்ஸ் எல்லாம் பாக் செஞ்சு பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணிண்டு ஃர்ஸ்ட் அன்னைக்கு காந்தி நகர் யூனிட்டில் இருக்கனும்.  இத விட்டா அப்பறம் பிப்ரவரியில் தான் லீவு கிடைக்கும். இன்னைக்கு சாயங்காலம் ஃபோன் போட்டு சொல்லலாம் என்று இருந்தோம் நீங்களே நேரா வந்ததனால சொல்லிட்டேன்”

ஐயோ மாப்பள மண்ணிப்பு எல்லாம் நாங்க எதிர் பார்க்கலை இனி இப்படி நடக்காம இருந்தா போரும். எதுவா இருந்தாலும் டைரெக்ட்டா எங்கள்ட்டயே கேளுங்கோ ப்ளீஸ். அப்போ கல்யாணத்துக்கு அப்பறம் எங்க மிருது குஜராத்துக்கு வரனுமா ” என்றாள் அம்புஜம்

அப்படியே ஃபாலோ பண்ணுவோம் அன்ட் எஸ் நாங்க குஜராத் தான் போகனும்”

மழ வரா மாதிரி இருக்கு நாங்க கிளம்பரோம். வரோம் மாமி. ஈஸ்வரன் மாமா வ விசாரிச்சதா சொல்லுங்கோ. வரோம் மாப்பள” என்றார் ராமானுஜம்.

அவர்கள் சென்றதும் நவீன் பர்வதத்தைப் பார்த்து 

ஏன் இப்படியெல்லாம் செய்யராய்? இனி இப்படி ஏதாவது பண்ணினயோ வேண்டாம் இதுவே கடைசியா இருக்கட்டும்”  என்றதும் ஒன்றுமே நடக்காததுபோல….

நிச்சயதார்த்தத்திற்கு பொன்னுக்கு புடவை எடுக்கனும் மற்ற செலவெல்லாம் இருக்கு “

என்று கூறி பணம் வாங்கிக்கொண்டாள். 

ஈஸ்வரன் ஒரு பொறுப்பான  தந்தையாக என்றுமே இருந்ததில்லை. அவர் பொறுப்புடன் இருந்திருந்தால் நவீன் விருப்பப்பட்ட மருத்துவப்படிப்பு முடித்து ஒரு மருத்துவராக இருந்திருப்பான். அவரின் பொறுப்பின்மை மற்றும் கெட்ட பழக்கங்களால்  வேலையை இழந்தார். ஒரு காலத்தில் பெரிய குடிமகன், புகை அணையாத புகைவண்டி, வெற்றிலை பாக்கே தன்னை பார்த்து சற்று ஓய்வு கொடுக்க கெஞ்சும் அளவுக்கு வெளுத்துக்கட்டும் வெற்றிலை பிரியர். பிள்ளைகளை விளையாட அனுப்பிவிட்டு அவர்களை தேடும் பெற்றோர்கள் பற்றி அறிந்துள்ளோம். ஆனால் ஏழாவது படிக்கும் நவீனுக்கு தன்னை விட நான்கு மடங்கு எடையுள்ள தன் தந்தையை தேடி அலைந்து கண்டு பிடித்து அவரை சுமந்து  வீட்டில் கொண்டு சேர்ப்பதற்குள் பாதி உயிர் போய்விடும். பிள்ளைகள் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி அவர்களை மீட்டெடுக்க போராடும் பெற்றவர்களைப்பற்றி நாம் அறிந்ததே ஆனால் இங்கோ அது தலைகீழாக இருந்தது. தனது தந்தையை தீய பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்க பல வழிகளில் பலர் உதவியோடு போராடி வெற்றிக்கண்டான் நவீன்.

பர்வதம் பொறுப்பில்லாத, பேராசைக்கும் பொறாமைக்கும் சொந்தக்காரி ஆவாள். இப்படிப்பட்ட பெற்றவர்களையும், கூட பிறந்த தம்பிகளையும் காப்பாத்த வேண்டி பல சொந்தங்கள், நண்பர்கள் என எல்லார் வீட்டு வாசலிலும் பணத்திற்க்காக தனது தாயால் நிற்க வைக்கப்பட்டான் நவீன் தனது பண்ணி ரெண்டு வயதிலிருந்து. நல்ல தாய் என்றால் தனக்கு தெரிந்த ஏதாவது ஒரு வேலையை செய்து ஏன் பத்து வீட்டுக்கு பத்துப்பாத்திரம் தேய்த்தாவது கௌரவமாக பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்திருப்பாள். ஆனால் பர்வதம் நவீனை ஒரு ஏடிஎம் போலவே வளர்த்து வந்தாள். 

பெற்றோர்கள் பாலூட்டி சீராட்டி தோள்மீது தூங்க வைத்து வளரவேண்டிய குழந்தை தன் பெற்றோர்களை தோள்மீது சுமக்க ஆரம்பித்தது. ஊனமுற்ற பெற்றோர்கள் என்றால் அதில் ஒரு நியாயம் உண்டு ஆனால் பொறுப்பற்ற சுயநலமான பெற்றோர்கள் என்றால் வாழ்க்கை நரகமே. ஆனாலும் அசரவில்லை நம் நாயகன் நவீன். 

பணத்திற்காக அடுத்தவர்களிடம் போய் நின்றால் என்னென்ன அவமானங்கள் நேரும் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்ததனால் தான் ப்ளஸ்டூ முடித்ததும் ஆர்மியில் சேர்ந்துவிட்டான். அவனது முதல் தம்பி கவினுக்கு வேலை கிடைத்து அவன் குவைத்தில் பணிமாற்றம் ஆன பிறகு தான் நவீன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளான். இப்பொழுது புரிகிறதா நம்ம பர்வதத்திற்கு ஏன் இந்த சம்மந்தம் பிடிக்கவில்லை என்று. இந்த சம்மந்தம் என்றில்லை அவளுக்கு நவீன் திருமணம் செய்துக்கொள்வதிலேயே இஷ்டம் இல்லை. 

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s