இரவு எப்போது முடியுமோ !!! என்ற யோசனையில் நவீன் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே காலை பொழுது விடிவதற்காக காத்துக்கொண்டிருந்தான். இரவு முழுவதும் தூக்கமின்றி, காலையில் ஆதவனின் ஒரு தலை முடியான கதிர் வீச்சை கண்டதும் எழுந்து எவரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் மெதுவாக நடந்து குளித்து முடித்து குளியலறையிலிருந்து வெளியே வந்ததும் மிருதுளா போடும் காபி வாசம் அவனை அடுப்படிக்கு இழுத்துச் சென்றது. அங்கே மிருதுளா காபி போட்டுக்கொண்டிருந்தாள். மெல்ல அவளருகே சென்று …
“ஹாய் மிருது. குட் அன்ட் ஹாப்பி மார்னிங்.“
“குட் மார்னிங் நவீ. காபி குடிச்சிட்டு தான் எப்பவும் குளிக்க போவேங்கள் ஆனா இன்னைக்கு என்ன!! சார் குளிச்சிட்டு காபிக்கு வந்திருக்கார்!!!“
“நான் நைட் ஃபுல்லா தூங்கவே இல்லை. அதுதான் சீக்கிரமா குளிச்சிட்டேன். ஆமாம் நீ ஏன் சீக்கிரம் எழுந்துண்ட?? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்க வேண்டியதுதானே?”
“உங்களுக்கு மட்டும் தான் தூக்கம் வரலைன்னு நீங்க நினைச்சுண்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”
“ஹேய் அப்போ நீயும் தூங்கலையா?”
“ஆமாம். எனக்கு மட்டும் ஆசை, பதற்றம் இல்லையா பின்ன?”
“ஆனா டைம் ஆறு தான் ஆகறது இன்னும் மூன்று மணிநேரமிருக்கே. எப்போதும் போல இன்னைக்கு காபி சூப்பர்“
இவர்கள் இருவரும் அடுப்படியில் உரையாட அதற்குள் அம்புஜமும் ராமானுஜமும் எழுந்து குளித்துவிட்டு அமர்ந்திருந்தனர். நவீன் காபியை ருசித்துக்கொண்டே ஹாலில் வந்ததும் தனது மாமனார் மாமியார் அமர்ந்திருப்பதைப் பார்த்து …
“என்ன நீங்க ரெண்டு பேரும் இப்பவே குளிச்சிட்டேள். மிருது இவாளும் எழுந்துண்டுட்டா. இவாளுக்கும் காபி போட்டுண்டு வா“
“இல்லை பரவாயில்லை. நானே எங்களுக்கு போட்டுக்கறேன் மிருது. நீ போய் உட்கார்ந்து உன் காபியை குடி போ. நீங்க ரெண்டு பேரும் மும்முரமா பேசிண்டிருந்தேங்களா… சரி…என்னத்துக்கு டிஸ்டேர்ப் பண்ணனும்னு நாங்க குளிச்சிட்டு வந்துட்டோம்“
என கூறிக்கொண்டே இரண்டு காபி போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை தன் கணவரிடம் கொடுத்துவிட்டு மற்றொரு காபி தம்பளருடன் அமர்ந்தாள் அம்புஜம். மிருதுளா அவர்களிடம் ..
“அப்பா அம்மா நாம எல்லாருமா இன்னைக்கு ஒரு ஒன்பதரை மணிக்கு கேன்டீன் கடைக்கு போகணும் அதனால ரெடி ஆகிடுங்கோ. நீங்க எல்லாரும் கடையில் பொருட்களை பார்த்துண்டு இருங்கோ. நாங்க டாக்டர்ட்ட செக்கப்புக்கு போயிட்டு வந்திடரோம் அப்புறம் நீங்க பார்த்து வச்ச பொருளெல்லாம் வாங்கிண்டு ஆத்துக்கு வருவோம் ஓகே வா.“
“ஓகே மா.“
“யாருக்கு உடம்புக்கு என்ன? ஏன் டாக்டர்ட்ட போகணும்?”
“நான் உங்களுக்கு அப்பறமா சொல்லறேன். எல்லாம் நல்லதுக்கு தான்“
“ஓகே“
இவர்கள் அனைவருமாக காபி வித் மிருதுளா போல அமர்ந்து பேசி முடித்து கூட்டத்தைக் கலைக்கும் போது மணி எட்டானது. அதுவரை மிருதுளா படுத்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாள். இப்படியே உட்கார்ந்திருந்தால் சரிவராது என்று கூறிக்கொண்டே அம்புஜம் அனைவருக்கும் டிஃபன் செய்யத்துவங்கினாள். மிருதுளா குளித்து ரெடி ஆகிக்கொண்டிருந்தாள் நவீன் தம்பிகள் பவினையும் வேனுவையும் எழுப்பி கேன்டீன் செல்வதற்கு ரெடியாக சொன்னான். அனைவரும் காலை உணவருந்தியதும் தயார் ஆனார்கள். நவீன் தனது பைக்கில் சென்று மெயின்ரோட்டிலிருந்து ஒரு ஆட்டோவை அழைத்து வந்து…
“மிருதுளா நீ வேனு, அப்பா, அம்மாவோட ஆட்டோல வா. நானும் பவினும் பைக்கல வரோம் சரியா“
“ஓகே அப்படியே ஆகட்டும் மை லார்ட்“
விட்டு விடுவாரா நம்ம ஒற்றன் பவின்!!!
“அண்ணா நான் ஆட்டோல வரேன் நீ வேனுவ பைக்ல கூட்டிண்டு வா“
“டேய் அவா ஆட்டோல வரட்டும்டா.“
“சரி..சரி விடுங்கோ இதுக்கு ஏன் தேவையில்லாம ஒரு ஆர்க்யூமென்ட். வேனு நீ அதிம்பேரோட பைக்ல வா. பவின் நீ எங்களோட ஆட்டோலயே வா.”
அட்டோ அவர்களை கேன்டீன் வளாகத்திற்குள் இறக்கி விட்டு பணத்தை வாங்கியதும் அங்கிருந்து கிளம்பியது. நவீன் பைக்கை ஸ்டான்டில் நிப்பாட்டி விட்டு வேனுவுடன் வந்து மற்றவர்களோடு சேர்ந்து கேன்டீனுக்குள் நுழைந்தான். மிருதுளா காலையில் கூறியது போலவே அவர்களை அங்கே விட்டு விட்டு நவீனுடன் ஹாஸ்பிடல் சென்றாள். அவர்கள் செல்வதைப் பார்த்த பவின்…
“அண்ணா, மன்னி” என கூப்பிட அதற்கு அம்புஜம்…
“மிருதுளாக்கு டாக்டர்ட்ட போணுமாம் அதுனால அவா ஹாஸ்பிடல் போறா பவின். அவா வர வரைக்கும் நாம இங்க இருக்குற பொருட்களைப் பார்ப்போம் வா“
“மன்னிக்கு என்ன ஆச்சு? அம்மாட்ட சொன்னாலா“
“ஒண்ணுமில்லை நேத்து கரை அணைல வாந்தி எடுத்தாளோனோ அதப் பத்தி தான் கேட்க போயிருக்கா. அதெல்லாம் உங்க அம்மாட்ட சொல்லுவா கவலைப்படாதே வா இந்த ஃப்ரிட்ஜ் நல்லா இருக்கான்னு சொல்லு“
என்று ஒரு வழியாக பெருமூச்சு விட்டுக்கொண்டே பவினை கூட்டிச்சென்றாள் அம்புஜம். ஹாஸ்பிடலில் டென்ஷனாக அமர்ந்திருந்தனர் நவீனும் மிருதுளாவும். டாக்டர் ரூமிலிருந்து “மிருதுளா” என பெயர் கூப்பிடப்பட்டதும் …
“எஸ் ஆம் ஹியர். மே ஐ கம் இன்“
“எஸ் கம்“
“தாங்யூ டாக்டர்“
(டாக்டரும் மிருதுளாவும் ஹிந்தியில் உரையாடிதை எனது வாசகர்களுக்காக தமிழில் )
“சொல்லுமா என்ன பிரச்சினை“
“பிரச்சினை ஒண்ணும் இல்லை டாக்டர். எனக்கு நாள் ஒரு மாசம் தள்ளி போயிருக்கு அது தான் டெஸ்ட் பண்ணிக்கலாம்னு வந்திருக்கேன்“
“ஓ ஓகே. நியூலி மாரிட்டா“
“எஸ் டாக்டர்“
“கல்யாணமாகி எவ்வளவு மாதம் ஆகிறது“
“நாலு மாசம் ஆகறது டாக்டர்“
“ஓகே உள்ள போய் படுங்க இதோ நான் வந்து டெஸ்ட் பண்ணறேன்“
டாக்டர் மிருதுளாவை பரிசோதனை செய்தார் …பின்
“இட் ஈஸ் பிரக்னென்சீ பட் ஒரு நாற்ப்பத்தைந்து நாளாவது ஆகட்டும் அப்பறம் ஸ்கேன் செய்து கன்பார்ம் பண்ணறேன்“
“ஏன் டாக்டர் ஏதாவது ப்ராப்ளமா?”
“நோ நோ அதெல்லாம் ஒண்ணுமில்லை. டு நாட் வரி. இன்னும் ஒரு பதினைந்து நாள் தானே இருக்கு. நீங்க மிருதுளாவை ஒரு டூ வீக்ஸ் கழிச்சு மறுபடியும் கூட்டிட்டு வாங்க சில டெஸ்டெல்லாம் எடுக்கணும். அதெல்லாம் எடுத்துட்டு அதோட ரிசல்ட்டை பார்த்துட்டு சொல்லறேனே டில் தென் ப்ளீஸ் வேயிட். கீப் யுவர் செல்ஃப் ஹாப்பி மிருதுளா. ஓகே தென் வில் மீட் யூ ஆஃப்டர் டூ வீக்ஸ். டேக் கேர்“
“ஷுவர்…தாங்யூ டாக்டர். எஸ் ஐ வில்.“
டாக்டர் ரூமிலிருந்து வெளியே வந்ததும் மிருதுளா கண்ணில் கண்ணீர் தேங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த நவீன்….
“ஏய் மிருது என்ன ஆச்சு“
“ஏதாவது ப்ராப்ளமா இருக்குமோ….அதுனால தான் வேயிட் பண்ண சொல்லறாளா டாக்டர். நான் டெஸ்டுக்கு போயிருந்தப்போ உங்க கிட்ட ஏதாவது சொன்னாலா“
“மிருது நீ ரொம்ப யோசிக்கற. என்கிட்ட நீ பிரக்னென்ட்ன்னு தான் சொன்னா. ஆனா கன்பார்ம் பண்ண இன்னும் டூ வீக்ஸ் வேயிட் பண்ண சொல்லிருக்கா அவ்வளவு தான். உன் முன்னாடி தானே கவலைப்படறதுக்கு ஒண்ணுமே இல்லை பீ ஹாப்பின்னு சொன்னா. கண்ண தொட மொதல்ல. கம் ஆன் சியர்அப் மிருது. வா அவா எல்லாரும் நமக்காக காத்துண்டு இருப்பா“
நவீனின் பேச்சில் சற்று தெம்பாகி கண்களைத் துடைத்துக் கொண்டாள் மிருதுளா. பின் இருவருமாக கேன்டீனுக்குள் சென்றனர். அங்கே அம்புஜம் மிருதுளாவைப் பார்த்ததும் ஓடிச் சென்று ….
“என்ன மா டாக்டர் என்ன சொன்னா“
“பிரக்னென்சி தானாம் ஆனா இன்னும் ரெண்டு வாரம் கழிச்சுத் தான் சில டெஸ்டுகள் எடுத்து கன்பார்ம் பண்ணுவேன்னு சொல்லிட்டா…ஏதோ நாற்பத்தைந்து நாள் ஆகணுமாமே அதுனாலன்னு சொல்லறா“
“ஓ !!! சரி சரி ரெண்டு வாரம் தானே. அதெல்லாம் ஓடிடும். அடுத்த சனிக்கிழமை வரைக்கும் நாங்க இருப்போமே அதுனால எல்லா வேலைகளையும் நாங்க பார்த்துப்போம் நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ சரியா. எல்லாம் நல்லதாகவே நடக்கும். வா நாங்க உங்களுக்கு ரெண்டு மாடல் ஃப்ரிட்ஜும் டிவியும் செலக்ட் பண்ணிருக்கோம் அதில் எது உனக்கும் மாப்ளைக்கும் பிடிச்சிருக்கோ அதை பில் பண்ணலாம் வா“
“இதுதான் நாங்க செலக்ட் பண்ணிருக்கற இரண்டு பிராண்டு ப்ரிட்ஜ் அன்ட் டிவி. இதுல உங்களுக்கு எது பிடிச்சிருக்குன்னு சொல்லுங்கோ…இங்க நீங்க சொன்னா மாதிரி ரேட் எல்லாம் கம்மியா தான் இருக்கு.” என ராமானுஜம் நவீனிடம் சொல்ல
தொன்னூறுகளில் பிரபலமான டிவியான “அக்கம்பக்கத்து வீட்டுக்கார்களின் பொறாமை, உரிமையாளரின் பெருமை” என்ற வாசகத்துடன் சிரித்துக் கொண்டே நம்மை பார்க்கும் சிவப்பு கொம்பு மனிதன் உள்ள பிராண்ட் டிவியையும், நீர்ச்சுழி பிராண்ட் ஃப்ரிட்ஜையும் தேர்ந்தெடுத்தனர் நவீனும் மிருதுளாவும். நவீன் தனது மாமனாரிடம்….
“இங்க எங்களுக்கு விலை கம்மியா தான் தருவா. உங்களுக்கு ஏதாவது வாங்கணும்னா வாங்கிக்கோங்கோ.“
“எங்களுக்கு ஒண்ணும் வேண்டாம். அப்படி வாங்கினாலும் எப்படி தூக்கிண்டு அவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணறது. அதெல்லாம் சிரமம்“
“ஓகே அப்போ இதை மட்டும் பில் பண்ணலாமா“
“ஆமாம். பண்ணலாம். இந்தாங்கோ பணம்“
“என்கூட பில்லிங் கவுன்டருக்கு வாங்கோ நீங்களே உங்க கையால குடுங்கோ.“
அனைவருமாக ஃப்ரிட்ஜ் மற்றும் டிவி ஆர்டர் கொடுத்துவிட்டு அருகிலிருந்த குட்டி கடையில் பிரெட் பக்கோடாவும் ஒரு டீயும் அருந்தினார்கள். அம்புஜம் டீ மட்டும் குடித்தாள். அங்கிருந்து மீண்டும் ஒரு ஆட்டோவில் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேனுவுடன் பைக்கில் ஆட்டோ பின்னாலேயே சென்றான் நவீன்.
வீடு வந்து சேர்ந்ததும் ஆட்டோவை கட் செய்து விட்டு பார்த்தால் நம்ம ப்ரவின்… வீட்டு வாசலில் அமர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மிருதுளா…
“ஹலோ ப்ரவின் இப்பவாவது உங்க சித்தி ஆத்துலேருந்து நம்ம ஆத்துக்கு வர மனசு வந்துதா“
“எங்க எல்லாருமா போயிட்டு வரேங்கள்?”
“நாங்க எல்லாரும் கேன்டீனுக்கு போயிட்டு அப்படியே பிரெட் பகோடா அன்ட் டீ குடிச்சிட்டு வரோம்“
என கூறிக்கொண்டே கதவைத் திறந்தாள் மிருதுளா.
“வா வா ப்ரவின். எல்லாரும் உள்ள வாங்கோ“
“ஹாய் ப்ரவின் வெல்கம் பேக்” என்றான் வேனு.
“என்ன ?? மன்னி நீங்கெல்லாம் கேன்டீனுக்கு போயிட்டு வர்றதா சொல்லறா ஆனா யாரு கையிலேயும் பையைக் காணமே“
“அவா வாங்கியிருக்கறது பையில அடங்காது வண்டில மத்தியானத்துக்கு மேல வரும்” என்றான் பவின்
“அப்படி என்ன வண்டில வர்றது“
“அதுவா அப்பாவும் அம்மாவும் ஃப்ரிட்ஜ் அன்ட் டிவி வாங்கியிருக்கா…” என மிருதுளா முடிப்பதற்குள் ப்ரவின் முந்திக்கொண்டு…
“என்னது டிவியும், ஃப்ரிட்ஜுமா!!! அதை எப்படி ஊருக்கு எடுத்துண்டு போவா“
“ஹலோ!!! ப்ரவின் அது எங்க அக்காவுக்கும் அத்திம்ஸ்க்குமாக எங்க அப்பா அம்மா கிஃப்ட்டா வாங்கிக் குடுத்திருக்கா பிரதர்“
“ஓ!!! அப்படியா“
“அப்படி தான்“
“ஏன்டா ப்ரவின்! என்ன என்கிட்ட கூட சொல்லாம நீயா அதுவும் அங்க சித்தி ஆத்துல வச்சு அங்க தங்க போறதா சொல்லற….“
“ஆமாம் அண்ணா எனக்கு அன்னைக்கு காலை ல தான் தோனித்து சரின்னு டிரெஸெல்லாம் பாக் பண்ணிண்டுட்டேன்“
“அதெல்லாம் சரி …எல்லாரும் ஒன்னா தானே அவா ஆத்துக்கு போனோம் அப்ப பஸ்ஸிலயாவது சொல்லிருக்கலாமில்லையா“
“நான் பவின்ட்ட சொன்னேனே…“
“ஓ!! இது பவின் சாருக்கும் தெரியுமா!!! ஆனா ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்தானே“
“சரி சரி விடுங்கோ நவீன். ஆனா ப்ரவின் நீ எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர்ட்ட சொல்லியிருக்கணும். பரவாயில்லை அடுத்த தடவை சொல்லிடு. ஹேய் பவின் !!! நீ வாயே தொறக்கலையே!!!! ப்ரவின் நீ சொல்லு எங்கெங்கே உன் சித்திப் பொண்ணுகளோட போன?”
” பக்கத்துல இருந்த பார்க்குக்கு அப்பறம் அவா அப்பார்ட்மெண்ட் கீழே இருக்கற ஐஸ்கிரீம் ஷாப்புக்கு“
“அவ்வளவு தானா வேற எங்கயுமே போகலையா?”
“வேற எங்க போகணும்?”
“டேய் ப்ரவின் நாங்க எல்லாருமா சாப்பாடெல்லாம் கட்டிண்டு அத்திம்ஸோட நண்பன் கார்ல ஒரு நாலஞ்சு இடம் போயிட்டு வந்துட்டோம். செம ஜாலியா இருந்தது இல்ல பவின்“
“ஆமாம் ஆமாம்”
“என்ன ஆமாம்?? அண்ணா நான் வர்ற வரைக்கும் வேயிட் பண்ணிருக்கலாமில்ல“
“நான் அண்ணாட்ட சொன்னேன்” என்றான் பவின். அதற்கு நவீன்…
“ஏதோ அன்னைக்கு காலை ல தான் எனக்கு தோனித்து ஒரு டிரிப் போகலாம்னு உனக்கு தோனித்தே அதே மாதிரி….லீவு கேட்டேன் கிடைச்சுது கிளம்பிட்டோம். சிம்பிள்“
“என்ன அண்ணா ஊருக்கு போனதும் என் நண்பர்கள் குஜராத்ல என்ன பார்த்தன்னு கேட்டா நான் என்னத்த சொல்லுவேன்…இப்படி பண்ணிட்டியே“
“உன் சித்திப் பொண்ணுகள பார்த்தேன் அவா கூட பார்க்குக்கு போனேன் ஐஸ்கிரீம் சாப்பிட்டேன்னு சொல்லு” என்றாள் மிருதுளா.
“என்ன கிண்டல் பண்ணறேங்களா? சித்தி ஆத்துக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா நான் உடனே கிளம்பி வந்திருப்பேனே“
“எங்களுக்கு தோனலை ப்ரவின் வெரி சாரி” என்றாள் மிருதுளா.
எவரிடமும் சொல்லாமல் தானே ஒரு முடிவெடுத்து அப்படி தங்கியது தவறு என்று உணர்ந்திருப்பானா ப்ரவின். பர்வதத்தின் மகனாயிற்றே நிச்சயம் அப்படி உணர வாய்ப்பேயில்லை. அது அவன் பேசும் விதத்திலிருந்தே வெளிப்படுகிறதே.
அனைவருமாக மத்திய உணவு உண்டபின் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்த போது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது நவீனுக்கு, உடனே எழுந்து திறந்தான். காலை ஆர்டர் கொடுத்த டிவி மற்றும் ஃப்ரிட்ஜ் வந்திருந்தது. எல்லாரும் எழுந்து அவற்றை அதற்குண்டான இடத்தில் வைக்க நகர்ந்துக் கொண்டனர். டெலிவரி கொடுத்துவிட்டு கையெழுத்து வாங்கிக்கொண்டு அவர்கள் சென்றதும், வேனுவும், நவீனும் அவற்றின் பேக்கிங்கை பிரித்து செட் செய்தார்கள். பவினும், ப்ரவினும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் உதவ முன்வரவில்லை. எல்லாம் முடித்தப் பின் பவின்…
“அண்ணா கேபிள் கனெக்ஷென் கொடுக்க ஏற்பாடு பண்ணு.“
“சொல்லிருக்கேன். ஈவினிங் வந்து கனெக்ஷென் கொடுக்கறதா சொல்லிருக்கா பார்ப்போம்” என கூறிக்கொண்டிருக்கும் போதே “சாப்” “நவீன் சாப்” என வாசலில் இருந்து குரல் கேட்டது. நவீன் எட்டிப்பார்த்து…
“வாங்க வாங்க உங்களுக்கு நூறு ஆயிசு. இப்பத்தான் நீங்க ஈவினிங் வந்து கனெக்ட் பண்ணுவீங்கன்னு சொல்லிட்டிருந்தேன்….நீங்களே வந்திட்டீங்க“
“கேம்ப்க்குள்ள வண்டி வர்றத பார்த்தேன். உங்க வீட்டுக்கு தான் இருக்கும்ன்னு நினைத்தேன் சரி பார்த்திட்டு வந்திடுவோமேன்னு வந்தேன். இப்போ கனெஷென் கொடுக்கலாமா?”
“ஓ ஷுவர் தாராளமா“
டிவி கனெஷென் கொடுத்துவிட்டு அதற்குண்டான பணத்தையும் வாங்கிக்கொண்டு விடைப்பெற்றார் கேபிள்காரர்.அனைவருமாக அமர்ந்து டிவி பார்க்கலானார்கள்.
இரவு முழுவதும் உறக்கமின்றி ஆவலாக அனைவருடனும் சந்தோஷத்தைப் பகிரவும், அவர்களே மகிழ்ச்சியில் துள்ளவும் எதிர்ப்பார்த்து காத்திருந்த விஷயம் அவர்களை இன்னும் இரண்டு வாரத்திற்கு காக்கவைத்தது.
தொடரும்….