மறுநாள் காலை கதிரவன் சோம்பல் முறித்து மெல்ல எழ ஆரம்பிக்கும் போதே அப்புஜமும், ராமானுஜமும் எழுந்து பல் துலக்கி, முகம் கை கால் அலம்பி பின் மற்றவர்கள் எழுந்திருக்கும் வரையில் அவர்களை தொந்தரவு செய்யாமல் மீண்டும் படுத்துக் கொண்டனர். அவர்கள் எழுந்து ஒரு மணி நேரம் கழித்து எழுந்தாள் மிருதுளா. எழுந்ததும் தனது அம்மாவையும் அப்பாவையும் பார்த்து….
“நீங்க எழுந்துண்டாச்சா? எப்போ எழுந்தேங்கள்? ப்ரஷ் பண்ணிட்டேளா? ஆமாம் நீங்க தான் காலை ல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கறவாளாச்சே…சரி இருங்கோ நான் போய் ப்ரஷ் பண்ணிட்டு காபி போட்டுத் தரேன்”
“சரி சரி அவாள டிஸ்டர்ப் பண்ணாம போயிட்டு வா“
மிருதுளா டிகாக்ஷன் போட்டு சுட சுட ஃபில்டர் காபியை தனது பெற்றோருக்கு கொடுத்து தானும் குடிக்க அமர்ந்தாள். நவீன் எழுந்து ..
“ஆஹா காபி வாசம் தூக்கறதே..என்னை தூக்கத்திலிருந்து எழுப்பிடுத்து. டைம் என்ன ஆச்சு மிருது?”
“மணி ஆறரை ஆச்சு நவீன்“
“ஓ !!ஒரு ஃபைவ் மினிட்ஸ் எழுந்துடறேன்“
“ஏன்டீ மாப்பிள்ளையை தொந்தரவு செய்யற? அவர் தூங்கட்டுமே“
“அம்மா என்ன நீ என்னவோ நான் தான் அவரை எழுப்பினா மாதிரி சொல்லற!! என் காபி தான் எழுப்பித்து“
“நிஜமாவே காபி சூப்பரா இருக்கு மிருது“
“நன்றி தந்தையே“
நவீன் எழுந்து ஆஃபிஸ் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். ப்ரவின், பவின் மற்றும் வேனு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். மிருதுளா அடுப்படியில் மும்முரமாக நவீனுக்கான காலை டிபன் மற்றும் மத்திய உணவை தயார் செய்துக் கொண்டிருந்தாள். அம்புஜமும், ராமானுஜமும் நவீன் குளித்தப் பின் ஒவ்வொருவராக சென்று குளித்துவிட்டு வந்தனர். அம்புஜம் குளித்துவிட்டு நேராக அடுப்படிக்கு சென்று..
“ஏய் மிருதுளா நான் செய்யறேன் டீ. நீ அவர் ஆஃபிஸ் போறதுக்கு என்ன செய்யனுமோ அதை செய் போ“
“அம்மா அவருக்கு தான் செய்திண்டிருக்கேன். நீ இப்போ இடையில கடலடின்னு வராதே. ப்ளீஸ் மா“
“சரி சரி சித்த நகந்துக்கோ நான் வீட்டிக்கு பின்னாடி போய் பார்க்கட்டும். நேத்து சரியா பார்கலை“
“ம்…இதோ போ… என்னப் பா உனக்கும் கொள்ளப் பக்கம் போகனுமா?”
“தாங்க் யூ“
அம்புஜத்திடம் ராமானுஜம் அந்த ஏரியாவைப் பற்றி விரிவாக சொல்ல அதற்கு அம்புஜம்
“என்னமோ ஃபுல்லா பார்த்தா மாதிரி சொல்லறேங்கள்“
“ஆமாம். நேத்து மத்தியானம் நீங்க எல்லாரும் தூங்கும் போது நான் ஒரு மணி நேரம் வெளியே போய் இந்த கேம்பஸை ஃபுல்லா சுத்திப் பாத்தேன்“
என இருவருமாக அலவலாவிக் கொண்டிருக்கும் போது நவீன் கையில் ஹெல்மட்டுடன் வந்து…
“ஓகே நான் ஆஃபிஸ் போயிட்டு வரேன். நீங்க எல்லாரும் இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்கோ நான் நாளைக்கு லீவ் கிடைக்கறதான்னு கேட்டுப் பார்க்கறேன்“
“சரி மாப்ள நீங்க போயிட்டு வாங்கோ. உங்களுக்கு லீவ் கிடைக்காட்டினாலும் பரவாயில்லை எங்களுக்கு எங்க பொண்ணோட இருந்தாலே போதும்.“
“அதுக்காக எங்கேயும் வரமாட்டேளா? ஃபர்ஸ்ட் டைம் குஜராத் வந்திருக்கேங்கள் சுத்திப் பார்க்க வேண்டாமா?”
“அது தான் சனி ஞாயிறு இருக்கே அன்னைக்கு பார்த்துண்டா போறது“
“நான் லீவுக்கு டிரைப் பண்ணறேன் கிடைச்சா ஓகே இல்லாட்டி சனி அன்ட் ஞாயிறு தான் போகணும். கல்யாணத்துக்கே நிறைய லீவ் எடுத்துட்டேனா அதுதான்….“
“புரியறது மாப்ள. ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்க ஆஃபிஸ் போயிட்டு வாங்கோ“
“ஓகே பை….பை மிருது. பார்த்துக்கோ நான் ஈவ்னிங் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவேன் எல்லாரும் ரெடியா இருங்கோ நாம எங்க சித்தி ஆத்துக்கு போயிட்டு வருவோம்“
“ஓகே எல்லாருமா எப்படி போவோம் நவீன்?”
“இங்கேருந்து பஸ்ஸில போயிட்டு அங்கேருந்து ரெண்டு ஆட்டோ வச்சுண்டா போச்சு… அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ ரெடியாகி எல்லாரையும் ரெடியாக இருக்கச் சொல்லு ஓகே வா. சரி நேரமாகறது பை பை“
என்று வண்டியை ஸ்டார்ட் செய்து ஆஃபிஸ் சென்றான் நவீன். அவனது லீவுகள் கல்யாணத்தினால் மட்டுமில்லை அதற்கு பிறகு மிருதுளா பைக்கிலிருந்து விழுந்த போதும் எடுத்ததனால் தான் இப்பொழுது லீவ் கிடைப்பது சிரமம் என்று சொல்ல முடியாமல் மழுப்பினர் நவீனும் மிருதுளாவும்.
நவீன் கிளம்பிச் சென்றதும் மிருதுளா குளித்து விட்டு பெற்றோருக்கும் தனக்கும் டிபன் கொண்டு வந்து ஹாலில் வைத்து மூவருமாக சாப்பிட ஆரம்பிக்கும் போது அம்புஜம் ….
“மிருது மா நீ நல்லா இருக்கயா?”
“என்னமா நேத்தே கேட்டுட்டியே மறுபடியும் ஏன் கேட்கற?”
“இல்லமா நீ சந்தோஷமா இருக்கயா? உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே!“
“அம்மா நான் சந்தோஷமா இருக்கேன் எனக்கு எந்த வித பிரச்சனையும் இங்கு இல்லை. ஓகே வா நீ நிம்மதியா டிபனை சாப்பிடு“
“அதுக்கில்லடீ மாப்ள உன்ன நல்லா கவனிச்சுக்கறாரா?”
“அவர் என்னை நல்லா தான் பார்த்துக்கறார் மா அதனால தானே சந்தோஷமா இருக்கேன்னு சொல்லறேன்“
“இல்லமா….“
“ஹாய் மன்னி குட் மார்னிங்! அண்ணா ஆஃபிஸ் போயாச்சா?”
“ஹாய் ப்ரவின் குட் மார்னிங். ஆமாம் அவர் கிளம்பி ஒரு ஒன் ஹவர் ஆகறது. நீ ப்ரஷ் பண்ணிட்டு வா காபி போட்டுத் தரேன்“
“ஓகே மன்னி….மாமி ஏதோ கேட்டுண்டிருந்தாளே ….நீங்க கன்டின்யூ பன்னுங்கோ நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்“
“அம்மா க்கு என்ன ஏதாவது கேட்டுண்டே தான் இருப்பா. நீ போயிட்டு வா.“
என்று ப்ரவினை அனுப்பி விட்டு தனது தாயிடம் செய்கையில் பிறகு பேசலாம் என காட்டி விட்டு சாப்பிட்ட தட்டை தேய்த்து வைத்தாள். அடுத்தடுத்து பவின் மற்றும் வேனு எழுந்தனர். அவர்கள் அனைவருக்கும் காபி குடுத்த பின் அனைவரும் குளித்து விட்டு வந்து டிபன் அருந்தினர். மிருதுளா மத்திய சமையலும் செய்து முடித்துவிட்டதால் அனைவருமாக அமர்ந்து சீட்டு விளையாடினர். அம்புஜம் தன் மகளிடம் மனம் விட்டு பேச முடியாமல் அல்லாடினாள். அப்பொழுதுதான் அவள் ப்ரவின் மற்றும் பவினை ஏன் தங்களுடன் கூட்டி வந்தோம் என வருந்தினாள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொண்டால் தன் மகளுக்கு கஷ்டமாகி விடுமே என அமைதியாக இருந்தாள்.
சீட்டு விளையாட்டு முடிந்தப் பின் வேனு பவினையும் ப்ரவினையும் கொஞ்ச நேரம் அப்படியே வெளியே போய் அந்த கேம்பஸை சுற்றி பார்க்க அழைத்தான். ஆனால் பவின் மட்டும் வேனுவுடன் போக தயார் ஆனான். அப்போது மிருதுளா…
“ஏய் ப்ரவின் நீயும் வேனு, பவின் கூட வெளிய சும்மா போயிட்டுத் தான் வாயேன். இங்க நாங்க சாதம் வச்சுட்டு வீட்டை கூட்டி சுத்தம் செய்வோம். நீ உட்கார்ந்துண்டு என்னப் பண்ணப் போற. உனக்கு போர் அடிக்கும்.“
“இல்லை மன்னி ….பவின் மாத்திரம் போயிட்டு வரட்டும் நான் இங்கேயே இருக்கேன்“
“என்ன ப்ரவின் !!! நாங்க இங்க தங்க மலை ரகசியம் எதுவும் பேசப் போவதில்லை அதனால நீ எதையும் மிஸ் பண்ணமாட்ட அதுக்கு நான் கியாரண்டி. போயிட்டு வா“
“அச்சோ மன்னி அதெல்லாம் ஒன்றுமில்லை…ஐ மீன் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ன்னு சொல்லவந்தேன்“
“சரி அப்படியே இருக்கட்டும். டேய் வேனு நீயும் பவினும் போயிட்டு வாங்கோ” என ஒரு நக்கல் சிரிப்புடன் கூறினாள் மிருதுளா. வேனுவும் பவினும் சென்ற பிறகு அவள் சொன்னது போலவே பெட்டிகளை எல்லாம் ஒரு புறமாக அடுக்கி வீட்டை கூட்டிச் சுத்தம் செய்து பின் குக்கரில் சாதம் வைத்து விட்டு ஹாலில் வந்தமர்ந்தாள். அப்போது ராமானுஜம்…
“நம்ம குவார்டர்ஸுக்கும் இந்த இடத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. மளிகை ஜாமன் எல்லாம் எங்க வாங்குவேங்கள் மிருது ? கேம்புக்குள்ள ஒரு கடை பார்த்தேன் அங்கயா?”
“இல்லைப் பா பாதி அங்க மீதி இவருக்கு கேன்டீன்னு இவாளுக்கு மாத்திரமான கடையிருக்கு அங்க வெளில விக்கறதவிட ரொம்ப கம்மியா இருக்கும் ஸோ அங்க வாங்குவோம்…அங்க தான் இந்த மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வாங்கினோம்”
“ஓ இதெல்லாம் கூட மலிவா கிடைக்குமா? அப்போ டிவி, ஃபிர்ஜ் எல்லாம் வாங்க வேண்டியது தானே.“
“வாங்குவோம் …மெது மெதுவா ஒவ்வொரு மாசம் ஒவ்வொன்னா வாங்கலாம்ன்னு இருக்கோம்.“
“சரி அப்போ டிவியும் ஃபிர்ஜும் நாங்க வாங்கித் தறோம். என்ன சொல்லறேங்கள் நாம வாங்கிக் கொடுக்கலாம் தானே” என்று அம்புஜம் ராமானுஜத்தைப் பார்த்தாள்…
“வாங்கிட்டா போறது அங்க எவ்வளவு கம்மியா கிடைக்கும் மிருது“
“அப்பா கவலை படாதே நீங்க ஒன்னும் வாங்கித் தர வேண்டாம்“
“நீ சும்மா இரு மிருது நாங்க தான் வாங்கித் தருவோம். மாப்ள கிட்ட எங்கள அந்த கடைக்கு வர சனிக்கிழமை கூட்டிண்டு போகச் சொல்லு போதும். என்ன யோசிச்சிண்டிருக்கேங்கள் சரின்னு சொல்லுங்கோ“
“சரி சரி வாங்கிடலாம்“
இவர்கள் பேசுவதை உன்னித்து கவனித்துக் கொண்டிருந்தான் ப்ரவின்.
அதை உணர்ந்த அம்புஜம் தனது கணவரிடம்…
“சரி நீங்க நம்ம ப்ரவின் கிட்ட பேசிண்டு இருங்கோ. நான் ஆத்துக்கு பின்னாடி என்னென்ன செடிகள் மரங்கள் எல்லாம் வச்சிருக்கான்னு பார்த்துட்டு வரேன்“
“அது தான் காலையிலேயே நாம ரெண்டு பேருமா பார்த்தோமே“
“நான் சரியா பாக்கலை அதனால மறுபடியும் போறேன் தப்பா?”
“தப்பே இல்லம்மா நீ போ”
அம்புஜம் வீட்டின் பின்புறம் சென்றதும் சிறிது நேரத்தில் ….
“மிருது …மிருது இங்கே சித்த வாயேன்.“
“என்ன மா என்ன வேணும்?”
“எழுந்து இங்க வாயேன்டீ இது என்ன செடி வச்சிருக்க?”
“இதோ வந்துட்டேன்….சொல்லு எந்த செடியை கேக்கறாய். நான் எதுவும் வைக்கலை இந்த வீட்டு ஓனர் வச்சிருக்கறது“
“இங்க வாடி“
“என்ன மா இப்படி இழுக்கற.“
அம்புஜம் கதவை சாத்திவிட்டு பேசலானாள்…
“என்னடி உன் மச்சினர்கள் இங்கிதம் இல்லாம இப்படி இருக்கா. அவாளும் வரேன் சொன்னப்போ சரி நம்ம வேனு வோட சுத்த ஆசைப்பட்டு தான் சொல்லறான்னு கூட்டிண்டு வந்தா இங்க நாம பேசக் கூட முடியாத அளவுக்கு மாத்தி மாத்தி ஒருத்தன் காவலுக்கு இருக்கானே…இதை நான் கொஞ்சம் கூட எதிர்ப் பார்க்கலை“
மிருதுளா புன்னகைத்தாள்…
“என்னடி சிரிக்கற!!! நான் என் பொண்ணுட்ட அவா புக்காம் பத்தியும் என் பொண்ணு எப்படி இருக்கானுட்டும் கேட்டு தெரிஞ்சுக்க இப்படி ரகசிய மாநாடு போட வேண்டியிருக்கே!!“
“சரி நாளைக்கு சாயந்தரம் நாம ரெண்டு பேரும் வாக்கிங் போகலாம் அப்போ உனக்கு என்னனென்ன கேட்கனுமோ கேட்டுக்கோ சரியா. இப்போ உள்ள போகலாம் இல்லாட்டி….” என்று மிருதுளா முடிப்பதற்குள்
“மன்னி என்ன இவ்வளவு நேரமாவா அந்த செடியப் பத்தி சொல்லறேங்கள்!!! எனக்கு ஒரு கப் சாய் தறேளா ப்ளீஸ்”
“அது ஒன்னுமில்லை ப்ரவின் எங்க அம்மாவுக்கு எக்ஸ்ப்ளேயின் பண்ணிட்டிருந்தேன். இப்போ போய் சாய் கேட்கற சாப்பிட டைம் ஆகறதே!“
“ஓ அப்படியா ஓகே தென் வேனுவும் பவினும் வந்ததுக்கப்புறம் சாப்பாடே சாப்பிடலாம்”
என்று கூறிக் கொண்டே உள்ளே சென்றான் அவன் பின்னாலே மிருதுளாவும் தனது தாயிடம் அமைதியாக இருக்கும் படி சொல்லிவிட்டுச் சென்றாள். வேனுவும் பவினும் வீட்டிற்கு திரும்பி வந்து அவர்கள் பார்த்ததை எல்லாம் ப்ரவினிடம் கூறினர். அப்போது மிருதுளா…
“பார்த்தயா ப்ரவின் நீயும் அவாளோட போயிருந்தா இதெல்லாம் கேட்டுண்டில்லாம பார்த்துட்டே வந்திருக்கலாம். நீ எதையோ யோசிச்சுண்டு யூ மிஸ்டு இட். ஓகே எல்லாரும் கை அலம்பிட்டு சாப்பிட வாங்கோ“
அனைவருமாக சாப்பிட்டப் பின் மீண்டும் சிறிது நேரம் சீட்டுக் கச்சேரியில் மூழ்கினர். மணி நாலானதும் அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு சித்தி வீட்டிற்கு போவதற்காக கிளம்பச் சொன்னாள். எல்லோரும் கிளம்பினர். மணி அஞ்சடித்ததும் நவீன் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. நவீன் வீட்டினுள் நுழைந்தான் அனைவரும் தயாராக இருப்பதைப் பார்த்து ….
“ஓ எல்லாரும் ரெடியா இருக்கேங்களே…இதோ ஒரு ஃபைவ் மினிட்ஸ் ல நானும் டிரஸ் சேஞ்ச் பண்ணி ரெடி ஆகிடறேன்.“
நவீன் டிரஸ் சேஞ்ச் செய்து வருவதற்குள் மிருதுளா ஒரு தட்டில் ஊரிலிருந்து வந்த பட்சணங்கள் கொஞ்சமும் சூடான ஒரு கப் காபியும் கொண்டு வந்து மேஜை மீது வைத்தாள். பின்பு பின் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் மூடினாள். நவீன் அந்த பட்சணங்களில் கொஞ்சம் மட்டும் சாப்பிட்டு, காபியை குடித்து விட்டு ….
“ஓகே கிளம்பலாமா?”
அனைவருமாக நவீன் காலையில் கூறியது போலவே பஸ்ஸில் சென்று பின் பஸ்டாப்பிலிருந்து இரண்டு ஆட்டோ வைத்து அவர்கள் சித்தி வீட்டைச் சென்றடைந்தனர். ரம்யா சித்தியும் சித்தப்பாவும் அவர்களை வரவேற்று சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கையில் ரம்யா சித்தி அம்புஜத்திடம்….
“எங்க நவீன் உங்க மிருதுளாவ கட்டிண்டதுலேருந்து அவன் மிருதுதாசனாவே ஆயிட்டான். அவன் பேரே இனி மிருது தாசன்னு ஆக போறது ன்னா பாருங்கோளேன்“
என்று குதர்க்கமாக பேசியதில் அம்புஜத்திற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் அசடு வழிந்துக் கொண்டிருந்தாள் ….மற்றவர்கள் ஏதோ பெரிய ஜோக் கேட்டது போல சரித்துக் கொண்டிருந்தனர்…நவீன் உட்பட. அதைப் பார்த்த மிருதுளாவிற்கு சுர் என்று கோபம் தலைக்கேறியது ஆனாலும் நிதானமாக ரம்யா சித்தியைப் போலவே சிரித்துக் கொண்டே …
“ஆமாம் ஆமாம் சித்தி எல்லாம் உங்க ஃபேமிலி டிரென்டு போல….என சிரித்தாள்“
“நீ என்ன சொல்ல வர மிருதுளா?”
“அது ஒன்னுமில்லை சித்தி….சித்தப்பா எவ்வழியோ மகன் நவீனும் அவ்வழியே. ரைட்டா. உங்க ஆத்துல ஒரு ரம்யா தாசன் போல எங்காத்துல மிருது தாசன் தட்ஸ் இட்”
என மிருதுளா சொன்னதும் ரம்யா சித்தி சட்டென்று எழுந்து உள்ளே போனாள். அதை கவனித்த நவீன் மிருதுளாவை முறைத்தான். அதுவே மிருதுளாவை முதன்முதலாக நவீன் கோபமாக முறைத்துப் பார்த்தது. அதைப் பார்த்ததும் மிருதுளா தனக்குள்….
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன் அவா மட்டும் அப்படி ஒரு ஜோக் என்ற பெயரில் என்னையும் என் பெற்றோரையும் அவமானப்படுத்தலாமாம் ஆனா நான் அதையே சொன்னா ஏன் முறைக்கறாரோ தெரியலை”
நவீனும் அங்கிருந்து எழுந்து உள்ளே தன் சித்தியிடம் பேச்சுக் கொடுக்கச் சென்றான். அவன் சித்தப்பா சற்று நேரத்தில் வருவதாக சொல்லி விட்டு வெளியே எங்கோ புறப்பட்டுச் சென்றார். ப்ரவினும், பவினும் அவர்கள் சித்தி மகள்களுடன் வெளியே மொட்டை மாடிக்குச் சென்றனர். ஹாலில் மிருதுளா குடும்பம் மட்டும் யாருமின்றி அமர்ந்திருந்தனர். வேனு தன் அக்காவிடம்….
“என்ன மிருதுக்கா இப்படி நம்மள உட்கார வச்சிட்டு ஆளாளுக்கு போயிட்டா!!! பின்ன எதுக்கு நம்மள வரச்சொன்னாலாம்“
இதைக் கேட்ட அம்புஜம்…
“டேய் வேனு வாயை வச்சுண்டு கொஞ்ச நேரம் சும்மா இருடா. ஏண்டி மிருது நீ ஏன் அவாள்ட்ட அப்படி கேட்ட? பேசாம சிரிச்சிண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தானே மா“
“அம்மா மிருதுக்கா ஒன்னுமே தப்பா சொல்லலையே. அத்திம்பேரோட சித்தி செட் அ வெரி பேட் ஜோக்“
“சரி சரி இத விடுங்கோ. இங்க இப்போ இதப்பத்தி நாம பேச வேண்டாம். ஆத்துல போய் பேசிக்கலாம். நானே உள்ள போய் என்ன நடக்கறதுன்னு பார்த்துட்டு வரேன். நீங்க மூணு பேரும் இங்கயே இருங்கோ“
“என்ன சித்தி நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?”
நவீன் மீண்டும் அவளை முறைத்து விட்டு ஹாலுக்குச் சென்றான்.
“இல்ல இல்ல எல்லாம் ரெடி. வாங்கோ எல்லாருமா சாப்பிடலாம்“
அனைவருமாக இரவு உணவை உண்ட பின் அங்கிருந்து கிளம்பினார்கள். அப்போது ப்ரவின்…
“ஓகே எல்லாருக்கும் பை. நான் இங்க சித்தி ஆத்துல இரண்டு நாள் தங்கிட்டு வரேன். நீங்க எல்லாரும் போயிட்டு வாங்கோ“
“என்ன சொல்லற ப்ரவின். உன் டிரெஸ் எல்லாம் வேண்டாமா!” என கேட்டான் நவீன்
“இதோ வேண்டிய டிரஸ் எல்லாம் எடுத்துண்டு வந்திருக்கேன் அண்ணா. வரும்போதே டிசைட் பண்ணி தான் வந்தேன்”
“மிருது உன்கிட்ட ப்ரவின் சொன்னானா?”
“இல்லை எனக்கும் இப்போ அவன் சொல்லித் தான் தெரியறது“
“அப்போ ரெண்டு நாள் கழிச்சு நீயே பஸ்ஸு பிடிச்சு ஆத்துக்கு வந்திடு சரியா“
“ஓகே அண்ணா நான் பார்த்துக்கறேன்“
இதுவே நவீனுக்கும் மிருதுளாவிற்கும் ப்ரவின் கொடுத்த மரியாதை!!!!!
ரம்யா குடும்பத்தினருக்கு பை சொல்லி விட்டு பஸ்ஸில் ஏறினர். பஸ் பயணத்தின் போது நவீன் மிருதுளாவிடம்…
“நீ ஏன் என் சித்தியிடம் அப்படி சொன்ன?”
என்று கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்து…
“இதே கேள்வியை உங்க சித்தியிடம் கேட்டிருக்க வேண்டியது தானே. கேட்டேங்களா?”
என்றதும் சட்டென எழுந்து வேனுவை மிருதுளா பக்கத்தில் உட்காரச் சொல்லி விட்டு நவீன் பவின் அருகில் சென்று அமர்ந்தான். நடந்தவையை பார்த்த அம்புஜம் மனதிற்குள்….
“அச்சோ இந்த பொண்ணு ஏன் அப்படி சொல்லனும் இப்போ மாப்ளயோட பிரச்சினை ஆகனும். அதுவும் நாங்க வந்த நேரமா இப்படியெல்லாம் நடக்கனும். அம்மா தாயே மாப்ளையோட கோபத்தை சீக்கிரம் தணித்துடுமா“
அம்புஜம் தொன்னூறுகள் தாய் மார்களின் ஓர் எடுத்துக்காட்டு. இதே இந்த கால தாய்மார்கள் தங்கள் பெண் செய்தது தான் சரி என்று மாப்பிள்ளையிடமே சண்டையிடவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அன்றோ மாப்பிள்ளை முன் வருவதற்கே சங்கோஜப் படுவார்கள். தனது பெண் தனக்காக தன் தன்மானத்தைக் காக்க தன்மையாக திருப்பி பேசியதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் அவளிடம் இப்படி ஏதாவது பேசி அவளின் தன்னம்பிக்கையை தளர்த்தாமல் இருந்தாலே நல்லது.
நவீனின் இந்த திடீர் மாற்றம் மிருதுளாவை மட்டும் அல்ல நம்மையும் குழப்பம் என்ற குழியில் தள்ளியுள்ளது. மிருதுளா நவீனிடம் பஸ்ஸில் கேட்டது சரியா? நவீனின் கோபம் சரியானதா? அம்புஜத்தின் பரிதவிப்பு தேவையானதா?
இதை எப்படி கையாளப் போகிறாள் மிருதுளா!!!!!
தொடரும்…..