மகிழ்ச்சியாக மீதமிருந்த விடுமுறை நாட்களை நவீன், மிருதுளா இருவருமாக கழித்தனர். திங்கட்கிழமை வந்தது. நவீன் வேலையில் ஜாயின் பண்ணுவதற்காக கிளம்பிக்கொண்டிருந்தான். மிருதுளா அடுப்படியில் தன் கணவனுக்காக காலை உணவையும் மத்திய உணவையும் தயார் செய்வதில் மும்முரமாக இருந்தாள். இருவருமாக காலை உணவை ஒன்றாக அமர்ந்து அருந்தினர். பின் மத்தியத்திற்கு சாம்பார் சாதமும் பீன்ஸ் பொறியலும் வைத்திருப்பதாக சொல்லி அது எப்படி இருந்தது என்பதை மாலையில் சொல்ல வேண்டுமென கட்டளையிட்டு நவீன் கையில் கொடுத்தாள் மிருதுளா. அதற்கு நவீன்..
“அப்படியே ஆகட்டும் தாயே” என்று சொல்லி ஆஃபீஸுக்குச் சென்றான். நவீனை ஒரு வாரம் முன் பார்த்த நண்பர்கள் அன்று அவனைப்பார்த்து ….
“அடே அப்பா ஒரே வாரத்தில் என்ன தேஜஸாயிட்ட நவீன்!!!!” என்று அவனின் உள்ளத்திலிருந்த மகிழ்ச்சி முகத்தில் பளிச்சிட்டதைப் பார்த்துக் கேட்டனர். பல்பீர்…
“ஹவ் ஈஸ் யுவர் வைஃப் நவீன்?…நானும் என் மனைவியும் உங்க வீட்டுக்கு வரலாமென நினைத்தோம்…அப்புறம் ஏன் நியூலி வெட்டெட் கப்புளை டிஸ்டர்ப் பண்ணனும்னு விட்டுட்டோம்….வில் கம் அன்ட் சீ ஹெர் திஸ் வீக் என்ட்“
“ஹவ் அபௌட் ஆல் ஆஃப் அஸ் கோ அன்ட் விஸிட் தெம் திஸ் வீக் என்ட்” என்றார் மற்றொரு நண்பர். அதற்கு நவீன்..
“ஓகே யாரெல்லாம் இந்த வீக் என்ட் வரீங்களோ தயவுசெய்து முன்னாடியே சொல்லிடுங்கப்பா..அட் லீஸ்ட் நாளைக்கு.“
நவீனின் நெருங்கிய நண்பர்களில் பல்பீர் மட்டுமே திருமணமானவர் ஆகையால் மீதி நால்வரும் ப்லபீருடன் கலந்து பேசி உடனே டிசிஷன் எடுத்து சனிகிழமை நவீன் வீட்டிற்கு வருவதாக கூறினர். நவீனும் எப்போ என்று மிருதுளாவைக்கேட்டு சொல்வதாக சொல்ல …அனைவரும்…
“ஓ!!! ஹோ!!” என ஒன்றாக கோஷமிட்டனர்.
நவீனை நண்பர்கள் மத்திய உணவருந்த மெஸ்ஸுக்கு கூப்பிட்டனர். மிருதுளா தனக்காக சமைத்துக் குடுத்தனுப்பியிருக்கிறாள் என்பதால் அவர்கள் அழைப்பை மறுத்துவிட்டான். பின்பு அவனது டிஃபன் பாக்ஸை திறந்து சாப்பிட்டான். மிருதுளா அன்புடன் கட்டிக்கொடுத்த அன்னம் அமிர்தமாக இருந்தது. அதை அவளிடம் சொல்ல மாலை நேரத்திற்காக காத்திருந்தான்.
கடிகாரம் நாலு நாப்பது காட்டியதும் தனது வேலை மேஜையை சுத்தமாக்கி விட்டு நண்பர்களுக்கு பை சொல்லிவிட்டு வேக வேக மாக வீட்டிற்குச் சென்று வீட்டின் கதவைத்தட்டினான். கதவை மிருதுளா திறந்ததும் ….
“ஹாய் நவீன். குட் ஈவ்னிங். ஹவ் வாஸ் தி டே” என்றாள்
நவீனுக்கு ஏதோ தேவ லோகத்தில் நுழைந்தது போல வீடே ஊதுவத்தி மணம் கமழ சுத்த பத்தமாக இருந்தது. மிருதுளாவும் லக்ஷ்ணமாக நெற்றியில் குங்குமம் விபூதியுடன் பளிச்சிட்டாள். நவீனால் அவளைப் பார்த்து பேசி பாராட்டக்கூட நேரமில்லாமல் கிடு கிடுவென ஈவினிங் கிளாஸுக்கு தயாராகிக்கொண்டே மத்திய உணவைப் பற்றியும் வீட்டை நேர்த்தியாக வைத்திருக்கும் அழகையும் வர்ணித்தான். மிருதுளா அவனுக்கு ஒரு தட்டில் நிலக்கடலை சுண்டலும் ஒரு கப் சூடான காபியும் கொடுத்தாள். சுண்டலை சாப்பிட்டு, காபியை குடித்து விட்டு ….
“சூப்பர் மிருது…சரி நான் கிளம்பறேன் அன்ட் வில் பீ பேக் பை நைன் தர்ட்டி. பத்திரமா இரு. இங்க சேஃப் தான் ஸோ கவலை வேண்டாம். பை பை“
என தனது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிச் சென்றான். மிருதுளாவும் பை சொல்லி விட்டு வீட்டினுள் சென்று காபி பாத்திரங்களை தேய்த்து வைத்துவிட்டு. இரவுக்கு மசால் செய்து, பூரிக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு அவளின் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள்.
அன்று இரவு நவீன் சொன்னதைப் போலவே ஒன்பதரை மணிக்கு கதைவைத் தட்ட மிருதுளா திறந்தாள். உடைகளை மாற்றி சற்று ரிலாக்ஸாக அமர்ந்தான்.
“ஏய் மிருது என்ன பண்ணற?”
தட்டில் சூடான பூரி மசாலை போட்டு நவீனிடம் கொடுத்தாள்.
“ஓ வாவ்!!! மிருது இப்படியே நீ வித விதமா செய்து தந்து நானும் அளவு தெரியாம சாப்பிட்டு வேயிட் போடப் போறேன்“
“போட்டா என்னவாம்!! நல்லா தான் இருப்பேங்கள்“
“நான் நல்லா இருக்கறது இருக்கட்டும்….என்ன அப்பறம் வேயிட் குறைக்கனும்ன்னு மெடிக்கல் டெஸ்ட் ல சொல்லிடுவா…அது ஒரு பெரிய ப்ராஸஸ்…“
“ஓ அப்படி வேற இருக்கா?”
“எஸ் எஸ்!! ஐ ஹாவ் டூ மேய்டேயின் மை வேயிட். சரி நீ சாப்ட்டயா?”
“இதோ இத மட்டும் போட்டு எடுத்துட்டேனா ஆச்சு. நானும் சாப்பிடலாம்“
“வா வா !! உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.“
“இதோ வந்துட்டேன். சொல்லுங்கோ“
“என் நண்பர்கள் ஒரு ஆறு பேரு வர சனிக்கிழமை நம்ம ஆத்துக்கு வரேன்ங்கறா எப்போ வரச்சொல்லலாம் நீயே சொல்லு அன்ட் உன்னால அத்தனைப் பேருக்கும் ஏதாவது சாப்பிட செய்ய முடியுமா இல்லை டாபாலேருந்து வாங்கிண்டு வரட்டுமா“
“என்னத்துக்கு வாங்கிண்டு வரனும்!!! நானே சமைக்கறேன் மத்திய சாப்பாட்டுக்கு வரச்சொல்லுங்கோ.“
“ஓகே சொல்லிடறேன். நான் இதை எல்லாம் எடுத்து ஒதுக்கி வைக்கறேன். நீ சாப்ட்டு அந்த தட்டை மட்டும் தேச்சுக்கோ. அதுக்குள்ள இதை எல்லாம் நானே தேச்சுட்டு வரேன்…அப்போ தான் நேரத்துக்கு தூங்க முடியும்” என்று கண்ணடித்துக் கொண்டே சொன்னான் நவீன்.
“நீ படிச்சியா? உனக்கு நேரமிருந்துதா? ஏன்னா நீ இதெல்லாம் பண்ணறதுக்கே டைம் ஆகிருக்குமே பின்ன எப்போ படிச்ச?? நாளையிலேருந்து இப்படி எல்லாம் டிஃபன் பண்ண வேண்டாம். மத்தியானம் செய்ததையே சாப்பிடலாம் சாதம் மட்டும் வச்சுண்டா போதும் என்ன சொல்லற? அப்போ தான் உனக்கும் படிக்க டைம் கிடைக்கும்“
“அதெல்லாம் இருக்கு நவீன். டிஃபன் நல்லா இருக்கா இல்லையா?”
“நல்லா இல்லாம என்ன!!! சூப்பரா தான் இருக்கு. ஆனா உனக்கு தான் வேலை அதிகமாகும்ன்னு சொன்னேன்“
“நோ ப்ராப்ளம் …என்னால டிஃபன் செய்தும் தரமுடியும் என் படிப்பையும் படிச்சுக்க முடியும்“
“உனக்கு ஓகேன்னா தென் ஃபைன் கோ அஹெட். எனக்கும் வித விதமா டின்னர் கிடைச்சா வேண்டாம்ன்னா சொல்லப்போறேன். எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுலேருந்து இந்த வேலைக்கு சேர்ந்த வரைக்கும் தயிர் சாதம் தான் சாப்பாடு… பல நாட்கள் ல அதுவும் இருக்காது… அதுக்கப்புறம் இதோ எங்க மெஸ் சாப்பாடு தான். இப்போ நீ வந்ததுக்கப்பறம் தான் வித வித மா சாப்பிடறேன்“
“எங்காத்துல காலையிலும் மாலையிலும் டிஃபன் தான் மத்தியானம் மட்டும் தான் சாப்பாடு…நான் அதையே ஃபாலோ பண்ணட்டுமா இல்லை உங்களுக்கு ராத்திரி சாதம் வேணுமா?”
“இல்லை உனக்கு கஷ்டமில்லை என்றால் டிஃபனே ஓகே தான்“
“டன். வர வெள்ளிக்கிழமை ஈவ்னிங் மார்கெட் போய் காய்கறிகள் எல்லாம் வாங்கிண்டு வருவோமா“
“ஓகே நான் அன்னைக்கு என் கிளாஸுக்கு சுட்டிப் போடறேன். நாம போய் வேண்டியதை எல்லாம் வாங்கிண்டு வருவோம். சரி இப்போ படுக்கலாமா. காலை ல சீக்கிரம் எழுந்திரிக்கனுமே!!“
வெள்ளிக்கிழமை வந்தது. மார்கெட்டிலிருந்து வாங்கி வந்த காய்கறிகளை நறுக்கி வைத்துவிட்டு உறங்கினர் நவீனும் மிருதுளாவும்.
சனிக்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து சமையலில் மும்மரமானாள் மிருதுளா. சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், பாயசம், வடை, அப்பளம் என ஃபுல் மீல்ஸ் தயார் செய்து அழகாக பரிமாறுவதற்கு தகுந்தாற்போல் வரிசையாக அடுப்படி மேடையில் அடுக்கி வைத்தாள். மத்தியம் பன்னிரெண்டு மணிக்கு நண்பர்கள் அனைவரும் வந்தனர். அவர்களை வரவேற்று அவர்களுக்கு ஜுஸ் கொடுத்து, குக்கரில் சாதம் வைத்து விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்தாள்.
நவீனின் நண்பனான ஹரீஷ் என்பவர்…
“நவீன் சரியான கஞ்சன்ங்க….எங்க மெஸ் சாப்பாட்ட முகம் சுளிக்காம சாப்பிடர ஒரே ஆள் இவன் தான். நாங்க எல்லாரும் பல நேரம் மெஸ் சாப்பட்டை குற்றம் சொல்லிட்டு வெளியே போய் சாப்பிடுவோம் ஆனா நவீன் மட்டும் தான் எங்களோட வராமா மெஸ் சாப்பாட்டை சாப்பிடுவான்“
“அதற்கு “கஞ்சன்“ன்னு ஏன் சொல்லனும் சாப்பாட்டுக்கு மரியாதைக் குடுக்கறவர்ன்னு கூட சொல்லலாமே!” என்று மிருதுளா சொன்னதும் நவீனின் முகம் மலர்ந்தது. அதை கேட்ட நண்பன் …
“சூப்பர்ங்க அத அப்படியும் சொல்லலாம்”
மற்ற நண்பர்கள் எல்லோருமாக
“ஓய் அசடு வழியாதே டா…” என்றதும் மிருதுளா..
“தப்பா எடுத்துக்காதீங்க. உங்கள சங்கடப்படுத்தனும்ன்னு சொல்லலை“
“அச்சசோ சிஸ்டர் ஃப்ரீயா விடுங்க…நீங்க உங்க கணவருக்கு இதே போல சப்போர்டிவ்வா இருந்து எங்க நவீனை நல்லா பார்த்துக்கோங்க”
“அந்த கவலை இனி நண்பர்களான உங்களுக்கு வேண்டாம். நான் உங்க நவீனை நல்லா பார்த்துக்கறேன் இப்போ எல்லாரும் சாப்பிட வரீங்களா?”
அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். மிருதுளா வாழை இலையை போட்டாள். பின்பு பரிமாற துவங்கினாள். முதலில் சாப்பிட சற்று தயங்கிய நண்பர்கள்…ருசியாக இருக்கிறது என்றுணர்ந்ததும் வெளுத்துக்கட்டினார்கள். அனைவரும் சாப்பிட்டப் பின் சற்று நேரம் அமர்ந்து பின் கிளம்பளானார்கள். அப்போது அனைவரும் மிருதுளாவின் சாப்பாட்டை போற்றினர். பல்பீரின் மனைவி தான் உண்ட தென்னாட்டு சாம்பாரை கற்றுக்கொள்வற்காக ஒரு நாள் வருவதாக கூறினாள். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன் நண்பர்கள் ஒன்றாக…
“யூ ஆர் அ லக்கி மேன் நவீன். எஞ்சாய்“
என்று கூறி விடைப்பெற்றனர். அவர்கள் சென்ற பின் மிருதுளா நவீனைப் பார்த்து…
“நிஜமா என் சமையல் நல்லா இருந்துதா நவீன். இல்லை இவா எல்லாரும் சும்மா சொல்லிட்டுப்போறாளா?”
“நிஜமாவே ரொம்ப சூப்பரா சமச்சிருந்த மிருது. தாங்கஸ் ஃபார் தி லவ்லி லஞ்ச் மை வைஃப்….தாங்கஸ் சொல்லக்கூடாதுன்னு தான் சொல்லிருக்கேன் ஆனா நீ இன்னைக்கு சமையல் மட்டுமில்லை எனக்காக பேசினதிலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன் அதனால் தான் சொன்னேன்“
“அதெல்லாம் சரி இப்போ வீட்டை சுத்தம் செய்ய எனக்கு ஹெல்ப் வேணுமே“
“அதனால் என்ன நான் செய்யறேன்“
மூன்று மாதங்கள் காலையில் வேலை, மாலையில் படிப்பு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே சுற்றுவது என மகிழ்ச்சியாக உருண்டோடின.
ஒரு சனிக்கிழமை மாலை நவீனின் நண்பன் ராமகிருஷ்ணனும் அவர் மனைவியும் வீட்டுக்கு வந்து ஒரு சுவீட் பாக்ஸை கொடுத்து தாங்கள் அப்பா அம்மா ஆக போவதாக சொல்ல அதைக் கேட்டு நவீனும் மிருதுளாவும் மகிழ்ச்சியில் அவர்களை வாழ்த்தி ஹோட்டலில் டின்னர் கொடுத்தனர். மறுநாள் மிருதுளா வருத்தமாக இருந்ததைப் பார்த்த நவீன்…
“மிருது நீ ஏன் டல்லா இருக்க? என்ன ஆச்சு?”
“நேத்து உங்க நண்பரும் மனைவியும் பட்ட சந்தோஷம் நமக்கு ஏன் இன்னும் வரலைன்னு ஒரே யோசனையா இருக்கு. நம்மளுக்கும் கல்யாணமாகி மூணு மாசமாயாச்சு ஆனா…” என்று சொல்ல அவளின் கண்கள் இரண்டிலும் கண்ணீர் ததும்பி வழிய ஆரம்பித்தது
“ஹேய் மிருதுளா !! என்ன அசடு மாதிரி இருக்க?? அதெல்லாம் நடக்கும் போது நடக்கும்…இதுக்கு நீ ஏன் இப்போ அழற?”
“இல்லை எனக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்குமோன்னு பயமாருக்கு“
“அட அசடே!!! நமக்கு கல்யாணமாகி மூணே மாசம் தான் ஆகறது மூணு வருஷம் ஆகலை.“
என்று மிருதுளாவின் கண்களைத் துடைத்து விட்டு அவளை இறுக்கமாக தன்னோடு அணைத்துக்கொண்டான்.
ஒரு நாள் நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் மிருதுளாவிடம் அவளது அப்பா, அம்மா, தம்பி… இருவரையும் காண அடுத்த வாரம் குஜராத் வருவதாக சொன்னான். அதைக் கேட்டதும் சந்தோஷத்தில் செய்வதறியாது துள்ளினாள் மிருதுளா. பின் நவீனிடம்…
“நவீன் நாம இன்னும் ஒரு நாலு தலைகாணி, போர்வை, பாய் எல்லாம் வாங்கனும்.“
“ஓகே வாங்கிடலாம்“
மறுநாள் காலை நவீன் ஆஃபீஸுக்கு ஈஸ்வரனிடமிருந்து ஃபோன் கால் வந்தது. அதில் நவீனின் கடைசி இரண்டு தம்பிகளும் அவன் மாமனார் குடும்பத்தினருடன் வருவதாக கூறினார். அதைக் கேட்டதும் நவீன்…
“அவா ஏன் இப்போ மிருதுளா ஃபேமிலியோட வரனும்? அவா ரெண்டு பேரும் டிசம்பர் லீவில் வரலாம் இல்லையா?”
“ஏன் இதில் உனக்கு என்ன கஷ்டம். உன் மாமனார் மாமியாரே ஒன்னும் சொல்லலை அப்புறம் என்ன?.. ப்ரவினுக்கும், பவினுக்கும் டிக்கெட் புக் பண்ணியாச்சு அவாளும் வராங்கறத இன்ஃபார்ம் பண்ண தான் ஃபோன் பண்ணினேன். பை“
என நவீனையோ மிருதுளாவையோ பற்றி நலனேதும் விசாரிக்காமல் தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு ஃபோன் கால் ஐ துண்டித்தார் நவீனின் தந்தை. இதை மிருதுளா எப்படி எடுத்துக்கொள்வாள் என்ற எண்ணத்திலேயே வீட்டிற்கு சென்று நடந்ததைக் கூறி மிருதுளாவையே பார்த்தான்…
“ஓ!! ப்ரவின் அன்ட் பவினும் வராலா…சூப்பர் சூப்பர். அப்போ செம ஜாலியா இருக்கப்போறது. இன்னும் சில பொருட்கள் எல்லாம் வாங்கனும் நவீன். நாம இந்த வீக் என்ட் போய் வேண்டியதை எல்லாம் வாங்கிண்டு வந்திடுவோம் ஓகே வா?”
என்று வெள்ளேந்தியாக பேசிய மிருதுளாவைப் பார்த்துக்கொண்டிருந்த நவீன் அப்பாடா என பெருமூச்சு விட்டான். அதை கவனித்த மிருதுளா…
“ஏன் ஏதோ டென்ஷனா இருக்கேங்கள்?”
“இதை சொன்னா நீ எப்படி எடுத்துப்பன்னு தான் டென்ஷன்“
“இத வேற எப்படி எடுத்துக்கனும்“
“ஒன்னுமில்லை மா ஒன்னுமில்லை என் டென்ஷன் எல்லாத்தையும் நீ போக்கிட்ட“
நவீனுக்கே ஏதோ தவறாக தெரிந்த இந்த விஷயத்தில், மிருதுளாவிற்கு எந்த வித தவறும் தெரியவில்லை என்பதிலிருந்தே மிருதுளா வெள்ளேந்தியான நல்ல மனம் படைத்தவள் என்பதை நவீனும் நாமும் புரிந்துக்கொள்ளத் தான் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் அந்த கடவுள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
மிருதுளா குடும்பத்தின் வரவுக்காக காத்திருப்போம்.
தொடரும்……