அத்தியாயம் – 23: கடவுளின் புதுக் கணக்கு

பணமில்லாதது ஒரு பிரச்சினை என்பதை விட நவீன் அப்படி ஒரு வார்த்தைக் கேட்டதில் மனமுடைந்த மிருதுளா அழுதுகொண்டே படுத்ததில் சற்று கண் அசந்துப்போனாள். டக்..டக்..டக் என கதவு தட்டும் சத்தம் அவளுக்கு எங்கோ தூரத்தில் கேட்பது போல இருந்தது. மீண்டும் பலமாக கதவைத் தட்டும் சத்தம் மிருதுளாவை சட்டென எழச்செய்தது. ஒரு நிமிடம் தான் எங்கிருக்கோம் என்பதை மறந்தவள் போல் சுற்றும் முற்றும் பார்த்தாள்….டக்டக்டக்டக்டக் …என இடைவிடாமல் கதவு தட்டும் சப்தம் அவளை சுயநினைவுக்கு கொண்டுவந்தது. ஓடிப்போய் கதவைத் திறந்தாள். தவிப்புடன் நின்றிருந்த நவீனைப்பார்த்தும் ஏதும் பேசாமல் உள்ளே சென்றாள். நவீன் கதவடைத்துக்கொண்டே ….

கதவ தொறக்க ஏன் இவ்வளவு நேரமாச்சு…நான் பயந்தேப் போயிட்டேன்

என்னத்துக்கு பயப்படனும்….கவலைப் படாதீங்கோ…என்னால இன்னும் எத்தனை பொய்களை எல்லாம் ஏத்துக்க முடியும் ங்கறத நானும் தெறிஞ்சிக்கற வரைக்கும் எதுவும் பண்ணிக்கவும் மாட்டேன்…எங்கேயும் போயிடவும் மாட்டேன்

கம் ஆன் மிருது…நானா உன்கிட்ட என் சம்பளத்தை அதிகமாக சொன்னேன்?”

அத விடுங்கோ உங்க பேரன்ட்ஸ் சொன்ன பொய்கள் ல அதுவும் ஒன்னுன்னு கணக்கில் வச்சுக்கலாம்.‌…ஆனா நீங்க எப்படி அப்படி ஒரு வார்த்தையை கேட்கலாம்? நான் தெரிஞ்சின்டத உங்கள்ட்ட கேட்டேன்..கொஞ்சம் என்னோட இடத்தில் இருந்து இந்த சிட்டுவேஷனை நினைச்சுப்பாருங்கோ ….உங்களுக்கு ஷாக்கிங்கா இருக்குமா! இருக்காதா? என்ட்ட நான் கேட்ட மாதிரி கேட்பேளா மாட்டேளா!!!??”

அப்படி உன் பேரன்ட்ஸ் ஏதையாவது என்ட்ட சொல்லி …அது உண்மை இல்லாட்டா …நான் உன்ட்ட அப்படி கேட்க மாட்டேன் ஏன்னா எனக்கு நீ சொல்லறது தான் முக்கியமே தவிர உன் அப்பா அம்மா சொல்லறது இல்லை.

ஆமாம் ஆமாம் அப்படி ஒன்னும் நடக்காத வரை இப்படி எல்லாம் ரொம்ப பெருந்தன்மையுடன் பேசலாம்….ஒரு தடவ தப்பாவோ இல்லை பொய்யோ சொன்னா தெரியாம பண்ணிட்டான்னு விடலாம் ஆனா இது வரிசையா ரயில் வண்டி மாதிரின்னா ஒவ்வொன்னா வர்ரது” 

ஓகே இப்போ என்ன தான் பண்ணறது. நான் என் சம்பளம் டிட்டேய்ல்ஸை சொல்லிட்டேன். நான் சொல்லறது தான் உண்மை. எனக்கு சம்பளம் இவ்வளவு தான் என்ன செய்லாம்ன்னு சொல்லு

இப்போ என்னத்த பண்ண!! அதுக்குள்ளயே அட்ஜஸ்ட் பண்ணிண்டு வாழ வேண்டியது தான். ஆனால் இதுவே கடைசி முறையா இருக்கட்டும்….நாம கையில ஒரு ரூபாய் இல்லாட்டியும் பரவாயில்லை, அதற்காக எவரிடமும் நீங்கள் இனி பணம் கேட்டு வாங்கக்கூடாது சரியா

சரி நிச்சயமா யாருகிட்டேயும் நான் பணம் கேட்டு வாங்க மாட்டேன்

தாங்கஸ் ….சரி சூட்டோட சூடா இன்னொரு விஷயமும் கேட்டுடவா?”

அம்மாடி இன்னொன்னா!!! அது என்ன அதையும் கேட்டுவிடு

நாம ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி நாள் ஏன் உங்க அப்பா கிட்ட பணம் கேட்டுட்டிருந்தேங்கள் ங்கறதுக்கு எனக்கு பதில் கிடைச்சிடுத்து ஆனா நீங்க கேட்டும் அவர் தர்ரத்துக்கு ரொம்ப யோசிச்சா மாதிரி தெரிஞ்சுது அன்ட் அதுவும் இல்லாம அடுத்த மாசமே திருப்பி அனுப்பச் சொன்னாரே அதுக்கு நீங்களும் தலையை ஆட்டிண்டு இருந்தேங்களே அது ஏன் அன்ட் எப்படி அவர் அப்படி சொல்லும் போது பேசாம நின்னுண்டிருந்தேங்கள்

அது ….அவரிடம் பணம் இல்லையாம் அதனால வந்த மொய்ப் பணத்திலேருந்துதான் தந்தாராம் அதனால திருப்பி உடனே சம்பளம் வாங்கினதும் அனுப்பச் சொன்னா

அத அனுப்பிட்டேங்களா?”

இன்னும் இல்லை ….அத கேட்டு அவா நான் ஆஃபீஸ் ஜாயின் பண்ணின அன்னைக்கே எனக்கு ஃபோன் போட்டு சித்தப்பாட்ட இருந்து வாங்கின பணத்திலிருந்து உடனே அனுப்பச்சொல்லி கேட்டாச்சு…அனுப்பித்தரேன்னு சொல்லி கால் ஐ கட் செய்தேன்… நானே நீ விழுந்த டென்ஷன் ல இருந்தேன் இதுல இவா வேற எப்பவும் போல பணம் தா பணம் தா ன்னுட்டு….என் ஆபீஸுக்கு இன்னைக்கு காலை ல கூட கால் பண்ணிருக்கா என் நண்பன் கிட்ட அந்த மூவாயிரத்தை என்னை அனுப்பித்தர சொல்ல சொல்லிருக்கா…அவன் காலை ல நான் கடைக்கு சிப்ஸ் வாங்க போனப்போ என்ட்ட சொன்னான்…நான் அந்த கடுப்புல இருக்கும் போது தான் இந்த  சம்பளம் மேட்டர் பேச்சு வர டென்ஷன்ல அப்படி உன்கிட்ட கேட்டுட்டேன்

வேயிட் ! வேயிட் ! வேயிட்! ….சித்தப்பாட்ட நீங்க பணம் வாங்கினது எப்படி அவாளுக்கு தெரிஞ்சுது

என் சித்தி தான் சொல்லிருப்பா

அப்போ பணம் வாங்கிண்டு போனத சொன்ன சித்தி நான் கீழே விழுந்ததைச் சொல்லாமலா இருந்திருப்பா?!!!”

நான் சொல்ல வேண்டாம் ன்னு சொன்னேன் !!!! ஆனாலும்…. என் பணம்,.. நான் வாங்கினத ஃபோன் போட்டு சொல்லிருக்கான்னா…. நீ விழுந்ததையும்  சொல்லியிருக்கலாம்

ஆனா அன்னைக்கு ஆஃபீஸுக்கு ஃபோன் போட்டப்போ உங்க அப்பா அம்மா அதைப்பத்தி ஒன்னுமே கேட்கலை இல்லையா!!!

ஆமாம் ஒன்னுமே தெரியாதது போல தான் பேசினா

சரி… நீங்க ஏன் அந்த பணத்தை அனுப்பாம இருக்கேங்கள்

எனக்கு இருக்கும் டென்ஷன் ல  அனுப்ப மறந்துட்டேன்

இந்த தடவை இந்த பாலிசி பணம் வந்திருக்கு அனுப்பிடுங்கோ ஆனா அடுத்த தடவை கேட்டா என்ன பண்ணப் போறேங்கள் ?? 

நீங்க வாங்கறதே ஆறாயிரம் தான் இதுல நமக்கு வீடு அலாட் ஆகும் வரைக்கும் இந்த வீட்டுக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வாடகை குடுக்கனும். வீட்டு செலவுக்கு எப்படியும் மூவாயிரம் தேவை அது போக உங்க பைக் டியூ எழுநூத்தி ஐம்பது ரூபாய், பெட்ரோல் ஒரு முன்னூறு ரூபாய்…எங்கயாவது கூட்டிண்டு போனேள்ன்னா…உங்க படிப்புக்கு எப்படியும் ஆயிரம் தேவை ….எல்லாத்தையும் கூட்டினா ஆராயிரத்தி ஐநூறு வர்ரதே!!! சரி நான் நம்ம ஆத்து செலவ குறைச்சிண்டாலும் ஒரு ஆயிரம் ரூபாய் தான் கொறச்சுக்க முடியும் அப்படியானாலும் மீதம் ஐநூறு தானே வரும் ….இதுல உங்க அப்பா கேட்டா …எப்படி? எங்கேருந்து குடுக்கப்போறேங்கள்?”

இல்லன்னு சொல்லுவேன்…அது தான் பதினோரு வருஷமா குடுத்துண்டிருக்கேனே…அதுக்கு முன்னாடியும் ஸ்கூல் படிக்கும் போது கூட என்னால முடிஞ்ச வேலைகளை லீவ் நாட்கள் ல பார்த்து காசு குடுத்துண்டே தான் இருந்திருக்கேன் !!

ஆனா இப்போ தரமாட்டேன்னு சொன்னேங்கள்னா அந்த பழி என் மேல தான் விழும்….உண்டா இல்லையா?”

அது எப்படி உன்ன சொல்லுவா? நான் என் நிலைமையை எடுத்துச்சொல்லுவேன், எங்க அப்பாக்கு பென்ஷன் வேற வர்ரதுஅதுவும் இல்லாம இப்போ தான் கவின் குவைத் ல சம்பாதிக்கறானே அவன் பார்த்துக்கட்டுமே

நீங்க என்ன தான் சொன்னாலும் என்னை தான் குற்றம் சொல்லுவா…எங்கடான்னு காத்திருக்கறவா வாயிக்கு கரும்பு குடுக்கப் போறேங்கள் அத நன்னா மென்னு கடிச்சு துப்பப்போறா….எனக்கு இந்த டீட்டேயில்ஸ் அப்பவே தெரிஞ்சிருந்தா எங்க அப்பா குடுத்த பத்தாயிரத்தை தாங்கோன்னு கேட்டிருப்பேன்

ஹா !!ஹா !!ஹா!!!

என்ன சிரிக்கறேங்கள்? சிரிக்கறா மாதிரி நான் இப்போ என்ன சொல்லிட்டேன்

எனக்கே தெரியாம என் பெயரை யூஸ் பண்ணி உங்க அப்பாட்ட இருந்து பணம் வாங்கிருக்கா எந்த வித கூச்ச நாச்சமும் இல்லாம அப்படி இருக்கறவாள்ட்ட போய் நீ கேட்டு …அதுக்கு அவா அப்படியா நாங்க எதுவும் அப்படி வாங்கவே இல்லைன்னு சொன்னா….சொன்னா !!!என்ன !!!! இவ்வளவு செய்தவா சொல்லுவா அப்போ நீ என்ன பண்ண முடியும் மிருது வீணா உனக்கு தான் மனசு கஷ்டம்

ஓ அப்படி வேற சொல்லுவாலோ!!!! அந்த கடவுள் இருக்கார் …அவருக்குத் தெரியும்…..அப்படி எல்லாம் சொல்லி என்னை ஏமாத்தலாம் ஆனா அந்த ஆயிரம் கண்ணுடையாளை ஏமாத்த முடியாது

பிரேஸ்லெட் விஷயத்துலயும் என்ன தைரியமா நான் வாங்கினத கவின் வாங்கினதா உங்க கிட்ட சொல்லிருக்கா ….அப்படிப் பட்ட வா எப்படி வேணும்னாலும் பேசறவான்னு இன்னுமா உனக்கு புரியலை…நான் இது மாதிரி சில விஷயங்கள் பார்த்திருக்கேன்…கேட்டும் இருக்கேன்… அப்போ எல்லாம் அவா செஞ்சது என்னை பாதிச்சுது….ஆனா அதை எல்லாம் நான் பெரிசா எடுத்துக்கலை..அது தான் நான் செய்த தவறு…. 

ஃபார் எக்சாம்பிள்… நான் தஞ்சாவூர் போஸ்டிங்க ல இருந்தப்போ எனக்கு சம்பளம் ஆயிரத்தி இருநூறு தான்… அங்க ஒரு பட்டுப்புடவை வீவ் பண்ணும் ஃபேமிலி என் நண்பன் மூலம் எனக்கு தெரிய வந்தது, அதை நான் வீட்டில் சொன்னேன்…மறுநாள் என்னிடம் கூட சொல்லாமல் என் அம்மா அவ அக்கா ரமணி பெரியம்மாவுடன் அவர்கள் வீட்டுக்குப் போய் இரண்டு புடவை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு எடுத்துக்கொண்டு காசை என்னிடம் வாங்கிக்கச் சொல்லிட்டு போயிக்கா…

சரி வாங்க வர்ரத தான் சொல்லலை அட்லீஸ்ட் வாங்கிருக்கேன்னாவது சொல்லிருக்கனுமா இல்லையா!!! அதுவும் சொல்லலை. எனக்கு என் நண்பன் மூலமா தான் தெரிஞ்சுது…கையில் காசு இல்லாத நேரத்துல இப்படிப் புடவை எடுக்கனுமா சொல்லு!!! அப்புறம் நான் கொஞ்சம் கொஞ்சமா அவாள்ட்ட கொடுத்து அந்த புடவைக்கடனை அடைத்தேன்! வீட்டுக்கு வந்து ஏன் அப்படி செஞ்சான்னு கேட்டதுக்கு அந்த புடவைகளை கொடுத்து போய் திருப்பிக்கொடுத்துக்கோன்னு திமிரா சொல்லிட்டு அவா பாட்டுக்கு அவா வேலையை பார்க்க போயிட்டா

சரி இதை இத்தோட விட்டு விடுவோம் அந்த ஆண்டவன் அவாளுக்கு அதுக்கு தகுந்த கூலி குடுப்பார். ஆனா இனி என்கிட்ட இருந்து எதையும் மறைக்காதீங்கோ…நானும் இனி எதையும் மறைக்க மாட்டேன்

ஷுவர் மிருது. வரியா நடந்துப் போய் நம்ம ரோஹித் டாபா ல ஒரு ஆலுடிக்கியும் சாய் யும் குடிச்சிட்டு வருவோம். உன்னால அவ்வளவு தூரம் நடக்க முடியுமா?”

ஓ எஸ் முடியும் ஆனா அழுது அழுது என் முகமெல்லாம் வீங்கிருக்கே!!!

பேஸ் வாஷ் பண்ணு சரியாயிடும்

ஓகே ஒரு பத்து நிமிஷத்துல ரெடி ஆயிடறேன்” 

இருவருமாக அமர்ந்து பேசி சமாதானம் ஆகி பின் மெல்ல நடந்து சென்று மாலை நேரத்தை இனிதே கழித்தனர். அன்று காலை மகிழ்ச்சியாக தொடங்கி…இடையில் நவீன் அவன் பெற்றோர்களின் ஃபோன் கால் லால் டென்ஷனாகி, விளக்கு தேய்க்க பூதம் கிளம்பியதைப்போல சம்பள விஷயம் கிளம்பி இருவருக்குள்ளும் வந்த சிறிது நேரப் பிரிவு அவர்களை அவர்களே நிதானித்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.  பின் இருவருமாக அமர்ந்து பேசியதில் தெளிவடைந்து ரோஹித் டாபா டீ அன்ட் ஆலுடிக்கியுடன் மீண்டும் சந்தோஷம் துளிர்விட ஆரம்பித்தது.

எந்தப் பிரச்சினையும் பத்து நிமிடம் உட்கார்ந்து பேசினால் சரியாகி விடும் என்பார்கள் ஆனால் அப்படி பேசுவதற்கு இரு தரப்பினரும் சம்மதிக்க வேண்டும், பேசும் மனநிலையில் இருக்க வேண்டும். நீ பெரியவானா !!! நான் பெரியவளா !!!என்று பட்டிமன்றத்திற்கு தயாராகக் கூடாது. அப்படியே ஒருவர் நினைத்தாலும் மற்றொருவர் விட்டுக்கொடுத்து இறங்கிப் பேச வேண்டும். அப்படி பட்ட பேச்சு வார்த்தையே வெற்றியைத் தரும்.

மிருதுளா நினைத்திருந்தால் நவீனை அவன் பெற்றோருடன் பல காரணங்களுக்காக சண்டையிட வைத்திருக்க முடியும் ஆனால் அவள் அதை விரும்பவில்லை. சண்டையிடுவது தான் அவள் நோக்கம் என்றால் அதை அவள் திருமணமான அடுத்த நாளிலிருந்தே செய்திருக்கலாமே. அவளைப் பொருத்த வரை நவீனை நடந்தவற்றை எல்லாம் சரிவர புரிந்துக்கொள்ள வைக்க வேண்டும் அவ்வளவு தான். ஏனெனில் அவன் சரியாக புரிந்துக்கொண்டாலே வாழ்க்கை இனிதாகும் என்று நம்பினாள். சின்ன சின்ன விஷயத்துக் கெல்லாம் புருஷனைத் தூண்டி விட்டு சண்டையிட வைக்கும் பெண்களுக்கிடையே மிருதுளா தனித்துவம் வாய்ந்தவளே.

நவீனைப் பெற்றவர்கள் அவனை பணத்திற்காக எல்லார் வீட்டு வாசலிலும் நிற்க வைத்தார்கள் ஆனால் அவன் கட்டிக்கொண்ட மனைவியோ சாப்பிடுவதற்கு வழி இல்லாவிட்டாலும் எவரிடமும் கையேந்தக் கூடாதென்கிறாள். இதைத் தான் என்னவென்று சொல்ல. இது தான் கடவுளின் விளையாட்டு. 

நவீனை அவன் திருமணத்திற்கு முன் எவ்வளவு அவமானங்கள், வேதனைகள், பணத்திற்காக பிச்சைக்காரரை போல் சொந்தக் காரர்கள் வீட்டின் வாசலில் அவனைப் பெற்றவர்கள் எனும் உறவு மூலம் நிற்க வைத்த கடவுள் இன்று அதை அப்படியே அழித்துவிட்டு புதுக் கணக்கை மனைவி எனும் உறவுக் கொண்டு எழுத ஆரம்பித்துள்ளார். இந்த கணக்குக்கு மறு கணக்கு  உண்டா !!! என்பதை போக போக படித்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s