இரவு நன்றாக உறங்கி எழுந்தாள் மிருதுளா. நவீன் அடுப்படியில் ஏதோ செய்துக் கொண்டிருந்தான். மிருதுளா மெல்ல கட்டிலை விட்டு இறங்கிச் சென்று குளித்து ஃப்ரெஷாகி …
“குட் மார்னிங் நவீ“
“ஹேய் குட் மார்னிங். இரு உனக்கு காபி தரேன் கொஞ்சம் வேயிட் பண்ணு….இதோ போட்டுண்டே இருக்கேன் …இதோ போட்டுட்டேன் …ஹியர் யூ கோ“
“வாவ்!!! சூப்பர் நவீ தாங்க்ஸ். ஓ ! ஓகே ஓகே என்னோட தாங்க்ஸ் வாப்பஸ் ப்ளீஸ்…ஹா ஹா ஹா“
என சந்தோஷமாக ஆரம்பித்தது அன்றைய தினம்.
“காயங்கள் எல்லாம் ஆறப்போறது அநேகமா எல்லாம் இன்னும் ஒரு நாள்ல காஞ்சிடும்ன்னு நினைக்கிறேன்…டாக்டர் சொன்ன மாதிரி ஒரு வாரமெல்லாம் ஆகாது“
“ஸோ வாட்? இன்னும் ஒரு மூணு நாள் ரெஸ்ட் எடு அவ்வளவு தானே. சரி இந்தா பிரெட் பட்டர் அன்ட் ஜாம். இதுதான் நம்ம பிரேக்ஃபாஸ்ட்.“
“நீங்க குளிச்சாச்சா?”
“இல்லை இனி தான் போய் குளிக்கனும் நீ எழுந்திரிக்கறதுக்கு ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான் நான் எழுந்துண்டேன்“
“சரி அப்போ நீங்க போய் குளிச்சிட்டு வாங்கோ நான் எல்லாத்துலயும் பட்டர் அன்ட் ஜாம் தடவி வைக்கறேன்“
“ஓகே ஒரு அஞ்சு நிமிஷத்தில் வந்திடறேன்“
பிரெட் சாப்பிட்டுவிட்டு இருவருமாக
சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே மிருதுளா எடுத்துக்கொண்ட மாத்திரைகளினால் மீண்டும் உறங்கிப்போனாள். நவீன் மெதுவாக எழுந்து அடுப்படிக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு மத்தியத்துக்கு தால் மற்றும் சாதம் வைத்து, கடையிலிருந்து இரண்டு பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிட்டு தனது பாட புத்தகத்தில் முழ்கினான்.
ஒரு இரண்டு மணிநேரம் கழித்து எழுந்துப் பார்த்தாள் மிருதுளா…நவீன் மும்முரமாக படித்துக்கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்ய வேண்டாமென எண்ணி அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டே படுக்கையை விட்டு எழாமலிருந்தாள். சற்று நேரம் கழித்து சட்டென்று திரும்பிப் பார்த்தான் நவீன்…
“மிருது எழுந்துட்டயா !!! இரு இந்த சாப்ட்டரை மட்டும் முடிச்சுட்டு வந்துடறேன்.“
“நீங்க படிங்கோ. நான் பேசாம படுத்துக்கறேன்“
“அடுத்த வாரத்திலிருந்து நான் எவ்வெரி டே ஈவினிங் சி.ஏ கிளாஸுக்கு போகனும். எக்ஸாம் தேதி வேற நெருங்கறது. ஆமாம் நீ உன் எக்ஸாமை எப்ப எழுதப் போற?”
“நான் நவம்பர் ல போய் எழுதலாம்னு இருக்கேன். எப்படியும் தீபாவளிக்கு ஊருக்கு போக தான் வேணும் அப்படியே பரீட்சையையும் முடிச்சிட்டு வரலாம்னு இருக்கேன் என்ன சொல்லறேங்கள்?”
“நல்ல ஐடியாவா தான் இருக்கு ஆனா அதுக்கு இன்னும் ஏழு மாசம் இருக்கு அப்போ பார்த்துப்போம். நான் ஈவினிங் கிளாஸ் போகணும்னு சொன்னேனே அதுக்கு உன்னிடமிருந்து ஒரு ரியாக்ஷனும் காணமே!!“
“என்னன்னு ரியாக்ட் பண்ணனும். கிளாஸ் இருக்குன்னா போய் தான் ஆகனும். ஆமாம் எவ்வளவு நேரமாகும் கிளாஸ் முடியறத்துக்கு?”
“ஆஃபீஸ் முடிச்சிட்டு ஒரு ஐந்து மணிக்கு ஆத்துக்கு வந்துட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு ஆறு மணிக்கு கிளம்பினேனா ஒன்பது மணிக்கு முடியும் ஸோ ஒரு ஒன்பதரை மணிக்கு வந்திடுவேன்“
“அப்போ நான் அதுவரை என் படிப்பை படிக்கறேன்“
“ஸோ எவ்விரிடே ஈவ்னிங் எக்செப்ட் சனி அன்ட் ஞாயிறு சிக்ஸ் டூ நைன் படிப்புக்காக என்று வைத்திடுவோம்.“
“அப்படியே ஆகட்டும் மை லார்ட். பேசிண்டே இருக்கேங்களே!!! சீக்கிரம் படிச்சு முடிங்கோ“
“இதோ முடிச்சிட்டேன். ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்….ஆச்சு“
“ஓ டைம் ஒன்னாக போறது!! நீங்க படிங்கோ என்னால முடிஞ்சத நான் சமைக்கப் பார்க்கறேன். இப்போ அவ்வளவா வலியில்லை அன்ட் புண்களும் நல்லா ஆறியிருக்கு.“
“என்ன சமைக்கப் போற…அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ ரெஸ்ட் ரூம் போயிட்டு ஃப்ரெஷாகிட்டு வா நாம சாப்பிடலாம்.“
“என்ன இன்னைக்கும் டாபாலேருந்து வாங்கிண்டு வந்திருக்கேளா என்ன?”
“நீ ரெஸ்ட் ரூம் போயிட்டு வா. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு“
மிருதுளா வேகமாக ஃப்ரெஷாகி ஹாலுக்கு வந்தாள். தரையில் குக்கர், இரண்டு சிப்ஸ் பாக்கெட், தயிர் டப்பா, பிரியா ஊறுகாய் பாட்டில், மூடியிட்டு ஒரு பாத்திரத்தில் தால், இரண்டு தட்டு எல்லாமிருந்தது. அதைப்பார்த்த மிருது….
“ஹேய் நவீ என்னது இதெல்லாம்!!! எப்படி !!! எனக்கு குக்கர் விசில் சத்தம் கூட கேட்கலையா இல்லை கேட்காத அளவுக்கு கும்பகர்ணி மாதிரி தூங்கிருக்கேனா?”
“எல்லாம் நீ சாப்பிட்ட மாத்திரையின் எஃபெக்ட் தான் நீ தூங்கினது. நான் அடுப்படி கதவை சாத்திண்டு இதெல்லாம் செய்தேன். எப்படி இருக்குன்னுட்டு நீ தான் சாப்பிட்டு சொல்லனும்“
“ஸோ நைஸ் ஆஃப் யூ கணவா. சரி வாங்கோ சாப்பிடலாம்.“
இருவரும் சாப்பிட அமர்ந்தனர். சாப்பாட்டை ஒரு வாய் சாப்பிட்டு மிருதுளா…
“ஆஹா !!!ஆஹா!!! சூப்பரா இருக்கு இந்த தால் அன்ட் ரைஸ் வித் ஊறுகாய் அன்ட் சிப்ஸ். கலக்கிட்டேங்கள் போங்கோ. சமைக்க தெரியாதுன்னுட்டு சூப்பரா சமச்சிருக்கேங்கள்!!!! இந்த… நல்லா படிக்கற பசங்கள் பரீட்சைக்கு முன்னாடி படிக்கவே இல்லைன்னு சொல்லுவாஆனா ஃபுல் மார்க் வாங்குவாளே அதே மாதிரி இருக்கு நீங்க அன்னைக்கு சொன்னதும் இன்னைக்கு ரிசல்ட்டும்“
“அட ஆமாம் நல்லா தான் செஞ்சிருக்கேன்!!! நீ சும்மா சொல்லறயோன்னு நினைச்சேன். பரவாயில்லை சாப்பிடற மாதிரி இருக்கு. மிருது நான் பாஸ் ஆயிட்டேன்“
என்று இருவருமாக உணவருந்தியப் பாத்திரங்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்தார்கள். பின் மிருதுளாவின் மாத்திரைகளை கொடுத்து சாபப்பிடச் சொன்னான் நவீன்…
“அச்சோ இந்த மாத்திரைகளைப் போட்டாலே தூக்கம் வந்திடுமே…கொஞ்சம் நேரம் கழிச்சு போட்டுக்கறேனே“
“இல்லை இல்லை சாப்பிட்டதும் போடனும்னு டாக்டர் சொல்லிருக்கா. ஒழுங்கா நீ மாத்திரைகளை சாப்பிட்டதால்தான் புண்ணெல்லாம் இவ்வளவு சீக்கிரம் ஆறியிருக்கு. இந்தா புடி சாப்டு“
“இன்னும் எவ்வளவு நாள் சாப்பிடனும் இந்த மாத்திரைகளை?”
“நாளையோட முடிஞ்சிடும் அவ்வளவு தான்“
“அப்பாடா இன்னும் நாலு தடவ சாப்பிட்டா போதும்“
பின்பு அவர்கள் வாழ்க்கை, படிப்புப் பற்றி
பேசிக்கொண்டிருக்கையில் மிருதுளா மனதில் நவீன் அவன் சித்தப்பாவிடம் பணம் கேட்டு வாங்கியது ரியாலிட்டி ஷோ போல ஓட அதை அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவளைப் பார்த்து நவீன்…..
“என்ன மிருது என்ன பலத்த யோசனைல இருக்க!! என்ன ஆச்சு”
“ஆங்…..ஆமாம் என் மனசுல நிறைய விஷயங்கள் உங்ககிட்ட கேட்கறதுக்கு இருக்கு அதில் முந்தாநாள் நடந்ததைப் பற்றி கேட்கலாமா!!“
“கேளு அதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?”
“நீங்க தான் மாசம் பன்னிரெண்டாயிரம் சம்பாதிக்கறேங்களே அப்புறம் ஏன் உங்க சித்தப்பாக்கிட்ட பணம் கேட்டு வாங்கினேங்கள்? உங்கள்ட்ட பணமில்லையா?”
“என்னது பன்னிரெண்டாயிரமா!!!! சரியா போச்சுப்போ“
“ஏன் அப்படி சொல்லறேங்கள்?”
“உனக்கு யாரு நான் பன்னிரெண்டாயிரம் சம்பளம் வாங்கறேன்னு சொன்னது?”
“உங்க அப்பா அம்மா தான் என் பேரன்ட்ஸ் கேட்டதுக்கு …பிடிப்பெல்லாம் போக கையில் பன்னிரெண்டாயிரம் வாங்கறான்னு சொன்னா …நானும் அதைக் கேட்டேன்…ஏன் அதுக்கென்ன இப்போ?”
“இங்க பாரு மிருது என் அப்பா ஏன் அப்படி சொன்னானு எனக்குத் தெரியலை. உனக்கு தெரிஞ்சிண்டிருக்கனும்ன்னா நீ டைரெக்டா என்னிடம் கேட்டிருக்கனும்“
“சரி இப்போதாவது சொல்லுங்கோ…டைரெக்டா கேட்கறேன்…உங்கள் சம்பளம் எவ்வளவு?”
“எனக்கு வீடு + கேன்டீன் சலுகை அது இல்லாம கிராஜுட்டி, பிஎஃப், எல்லா பிடிப்பும் போக பாங்கில் விழும் மாத சம்பளம் ஆறாயிரம் ரூபாய்.”
“என்னது!!!! இதை உங்க பேரன்ட்ஸ் எங்ககிட்ட டபுளாக சொல்லிருக்கா!!!!! அவாகிட்ட நீங்க வாங்கற சம்பளத்தை சரியா சொல்லலையா!“
“என் சம்பள விவரமெல்லாம் புள்ளிவிவரமாக அவாளுக்கு நல்லாவே தெரியும் ஆனாலும் ஏன் அப்படி சொல்லிருக்காங்கறது தான் தெரியலை“
“என்னவாயிருக்கும் ??? ஒருவேளை அவா நினைத்திருக்கலாம் ….எங்கடா ஆறாயிரம்ன்னு சொன்னா பொண்ணு தரமாட்டாளோன்னு அதனால பொய் சொல்லிருப்பான்னு நினைக்கறேன்!!!! சரி இப்போ உண்மை தெரிஞ்சுடுத்தே இப்போ நான் விட்டுப்போனா என்ன பண்ணுவா!!!“
“இங்க பாரு மிருது நான் உன்ட்ட சொல்லலை. அவா சொன்னதுக்காக என்னை விட்டுட்டு போவியா?”
“கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்துக்கும் உங்க கிட்ட கேட்க முடியாது நவீ அதை நீங்க புரிஞ்சுக்கனும். உங்க பேரன்ட்ஸ் சொல்லறத தானே நாங்க நம்ப முடியும்…பிரேஸ்லெட் விஷயத்திலயும் இதே தான் நடந்தது. அவா ஒன்னு சொல்லிருக்கா ஆனா நீங்க ஒன்னு சொல்லறேங்கள்….பத்தாயிரம் நீங்க கேட்டதா சொல்லி தான் வாங்கினா ஆனா நீங்க கேட்கவேயில்லைன்னு சொல்லறேங்கள்… முன்னுக்கு பின் முரணாக இருக்கு அவா சொன்னதும் நீங்க சொல்றதும். எனக்கு ஒரே கன்ஃபூஷனா இருக்கு“
“அதுதான் நான் இப்போ சொல்லிட்டேனே இன்னமும் ஏன் குழப்பம்?”
“சரி அத விடுங்கோ நீங்க ஏன் சித்தப்பாட்ட பணம் வாங்கினேங்கள் உங்கள் பணமெல்லாம் என்ன ஆச்சு??”
“நான் சித்தப்பாட்ட ஒரு பாலிசி போட்டிருந்தேன் அது மெச்சூர்ட் ஆகி ஒரு மாசம் ஆச்சு ஆனா பணம் வரலை அதைத்தான் சித்தப்பா தன் கையிலிருந்து என்னிடம் கொடுத்துட்டு வரதை தான் எடுத்துக்கறதுக்காக ஃபார்ம்ல கையெழுத்து வாங்கிண்டார்“
“ஓ!! சாரி நான் தான் நீங்க அவர்கிட்டயும் பணம் கடனாகவோ இல்லை செலவுக்கு கேட்டு வாங்கவோ செய்யறேங்கள்ன்னு தப்பா நினைச்சுட்டேன்“
“நீ நினைச்சதுல பாதி கரெக்ட் தான்…அதாவது என் செலவுக்காக தான் நான் அவசரமாக அவர்கிட்ட இருந்து வாங்கினேன். ஆனா அது என் பணம் நான் கடனெல்லாம் வாங்கலை..புரியறதா?”
“ஏன்? அந்த பணம் வந்தா தான் உங்களிடம் செலவுக்கு பணமிருக்கா என்ன!!! வேற பணம் ஏதும் இல்லையா!!! நீங்க தான் பதினாறு வயசுலேயே வேலை ல சேர்ந்தாச்சுன்னு சொன்னாலே…. பதினோரு வருஷம் சம்பாதிச்சதுல ஒரு ஐந்தாயிரம் கூடவா இல்லை“
” உண்மைய சொல்லனும்னா ….இல்லை மிருதுளா…என் அக்கௌன்ட் ல வெரும் நூறு ரூபாய் தான் இருக்கு.“
“என்ன சொல்லறேங்கள்“
“எஸ்….நான் பதினோரு வருடம் சம்பாதிச்சதில் படிச்சேன், என் குடும்பத்துக்கு கொடுத்தேன், மூன்று தம்பிகளை படிக்க வைத்தேன், வீடு வாங்கினேன், பைக் நம்ம நிச்சயத்துக்கு அப்புறம் தான் வாங்கினேன் அதோட ஈ.எம்.ஐ இன்னும் போயிட்டிருக்கு, நம்ம கல்யாணத்துக்கு ஐம்பதாயிரம் எங்க பேரன்ட்ஸ்ட்ட கொடுத்தேன் அது தவிர எப்படியும் இன்னும் ஒரு இருபதாயிரம் செலவாகியிருக்கு …. இது எல்லா செலவுகளும் போக நூறு தான் பாக்கி“
“அப்போ என்னை கல்யாணம் பண்ணிண்டு வரும் போது உங்க கையிருப்பு நூறு ரூபாய் தானா!!!“
“என்ன லட்சாதிபதியா இருப்பேன்னு நினைச்சயோ!!“
“லட்சாதிபதியா இருப்பேங்கள்ன்னும் நினைக்கலை இப்படி பிட்சாதிபதியா இருப்பேங்கள்ன்னும் நினைக்கலை“
“என்ன இப்படி எல்லாம் பேசற”
“பின்ன நீங்க அப்படி கேட்டா நானும் இப்படி தான் பதில் சொல்ல முடியும். உங்களை கல்யாணம் பண்ணி ஒரு மாதம் ஆயாச்சு என்னைக்காவது பணம் பற்றி பேசிருக்கேனா? இப்படி ஷாக் மேலே ஷாக்கா அடிச்சா வேற எப்படி பேசறது நவீ? இன்னும் என்னென்ன பொய்களோ!!! எத்தனைப் பொய்களோ!!! அந்த பகவதி தான் எனக்கு மனதைரியத்தைக் குடுக்கனும்“
நவீன் சட்டென்று எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு வெளியேச் சென்றான். மிருதுளாவும் சென்றுப் பார்த்தாள் அவன் தெரு முனையை கடப்பதைப் பார்த்துவிட்டு கதவடைத்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டோடின….உடல் வலிகள் ஒரு பக்கமிருக்க …ஏமாந்தது ஒரு வலி, கையில் பணமேயில்லாமல் வாழ்க்கை துவங்கியிருப்பது எதிர்காலத்தை இருட்டாக காட்டியதில் பெரும் வலியாக உருவெடுத்தது அவளது உள்ளத்தில். அவள் மனம் குழப்பத்தில் இருந்ததால் மாத்திரை உண்டும் உறக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
ஈஸ்வரன் பர்வதம் போட்ட முடிச்சுகள் பல
அதில் இரண்டு அவிழ்ந்தாலும் பிரச்சினை பெரிதாகவில்லை
பிரேஸ்லெட் எனும் முதல் முடிச்சு அவிழ்ந்ததும்
நவீன் மனவருத்தமடைந்ததை உணர்ந்த மிருதுளா அவன் மீது வைத்த நம்பிக்கை அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
ரூபாய் பத்தாயிரம் எனும் இரண்டாம் முடிச்சு அவிழ்ந்ததும்
நவீன் தனது பெற்றோர்கள் இப்படி தனக்கே தெரியாமல் செய்திருக்கிறார்களே என்று வருந்த அதைப்பார்த்த மிருதுளா ரூபாய் பத்தாயிரத்தோட போச்சே என்று விட்ட பெருமூச்சில் அதுவும் காற்றோடு கறைந்து போனது.
ஆனால் இந்த மூன்றாவது முடிச்சான சம்பளம் எனும் பொய் முடிச்சவிழ்ந்ததில் இருவருமே குழம்பிப்போனார்கள். குழப்பத்திலிருந்தால் பேச்சைத் தவிர்த்தல் அல்லது சற்று நிதானமாகிக்கொண்டு பேசுவது சிறந்தது என்பதை நவீனும் மிருதுளாவும் மறந்திட பேச்சு முற்றி இறுதியில் மூத்த தம்பதியின் திட்டமே நடந்தேறியது.
மிருதுளா சொன்ன மாதிரி பொண்ணு கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சம்பளத்தை தவறாக ஈஸ்வரனும், பர்வதமும் சொல்லவில்லை வேண்டுமென்றே தான் பொய் சொல்லியிருக்கவேண்டும்…ஏனெனில் சம்பளம் பற்றிய பேச்சு வார்த்தை நிச்சயதார்த்தம் முடிந்து திருமண நாளுக்கு முஹூர்த்த பட்டுப்புடவை எடுக்க போனபோதுதான் ஹோட்டலில் வைத்து மிருதுளாவின் பெற்றோர்கள் கேட்டுள்ளனர்…. மேலும் மிருதுளா நவீன் திருமணத்தில் பர்வதத்துக்கும் ஈஸ்வரனுக்கும் துளிக்கூட இஷ்ட்டமில்லை என்பது நவீனிடம் மிருதுளாவை தவிர்க்க சொன்னதிலிருந்தே புரிகிறதே அப்படிப்பட்ட எண்ணமுடையவர் நிச்சயமாக சம்பளத்தைக் குறைத்துச் சொல்லி தடுக்க நினைத்திருப்பார்களே தவிர அதிகமாக சொல்லியிருக்க மாட்டார்கள்.
எப்படியோ திருமணம் வரை வந்துவிட்டதால் மிருதுளாவை தங்களுடனே வைத்துக்கொண்டு சில பல சகுனி, கூனி வேலைகளை செய்து அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் பிரிக்க திட்டமிட்டிருந்ததாலும்…..அதையும் மீறி ஏதாவது நல்லது நடந்துவிட்டால் இது போல சில பொய்களாவது நிம்மதியைக் குலைக்கட்டும் என்றெண்ணி அவர்கள் பத்த வைத்த பல ஓல வெடிகளில் ஒன்று அவர்கள் நினைத்தது போலவே இன்று வெடித்துள்ளது.
இந்த வெடி புஸ்ஸாக போகிறதா இல்லை வெடித்து சிதறப்போகிறா?
தொடரும்.…….