அத்தியாயம் – 19: ரூபாய் பத்தாயிரம்

ஞாயிறு காலை சூரியன் பார்வை படுவதற்கு முன்னதாகவே மிருதுளா எழுந்து குளித்து புத்தாடை அணிந்து நெய்வேத்தியத்திற்கு வெண்பொங்கலும், கேசரியும் செய்துக்கொண்டிருக்கையில் நவீன் எழுந்து ….

என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துண்டு என்ன பண்ணற?”

நீங்க ஏன் இப்பவே எழுந்துண்டு வந்தேங்கள்?”

கிட்சனிலிருந்து வாசம் வந்து என்னை எழுப்பிடுத்து. சரி மறுபடியும் தூக்கம் வராது நான் போய் குளிச்சிட்டு வரேன்

ஓகே. நானும் அதுக்குள்ள இங்கத்த வேலைகளை முடிச்சிடுவேன்

நவீனுக்கு புது வேஷ்டி மற்றும் சட்டை எடுத்து கொடுத்து அணியச் சொல்ல அவனும் அதை அணிந்து வர இருவருமாக சேர்ந்து விளக்கை ஏற்றி பூஜை செய்தனர். அப்பொழுது மிருதுளா மனதில்…

அம்மா எங்களது இந்த புதிய வாழ்க்கை துவக்கம் நல்லதாகவும் இனி வரும் காலங்களிலும் நல்லபடியாக நாங்கள் வாழ்வதற்கும் நீயே துணை. உன் கால்லடியில் எங்கள் வாழ்க்கையை வைத்துவிட்டேன் தாயே. நல்லவற்றையே தந்தருள்வாயாக. ஏதாவது கஷ்டமென்றால் அதை தாங்கும் சக்தியையும் அதிலிருந்து மீண்டு வருவதற்கும் உன் அருள் வேண்டும் அம்மா சமயபுரத்தாயே நீயே துணைஎன்று கண்களை மூடி வேண்டிக்கொண்டிருந்ததைப் பார்த்த நவீன் 

என்ன மிருது சாமிகிட்ட பயங்கர வேண்டுதல் வச்சயே அது என்னதுன்னுட்டு நான் தெரிஞ்சுக்கலாமா?” 

ஓ எஸ் தாராளமா தெரிஞ்சுக்கலாமே. நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும்னு வேண்டின்டேன்

அதுக்கு இவ்வளவு நேரமா!!

நீங்க என்ன வேண்டின்டேங்கள்

சாமி எல்லாம் நீயே! நல்லபடியா வச்சுக்கோன்னு ஷாட் அன்ட் சுவீட்டா ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுட்டேன் இனி எல்லாம் அவன் செயல்

சரி வாங்கோ டிபன் சாப்பிடலாம்” 

காலை உணவான வெண்பொங்கலையும் கேசரியையும் சாப்பிட அமர்ந்தனர். மிருதுளா நவீனுக்கு பரிமாறி அவனைப் பார்த்துக்கொண்டே பரீட்சை எழுதி மதிப்பெண்களுக்காக காத்திருக்கும் மாணவர் போல காத்திருந்தாள். 

சூப்பரா இருக்கு மிருது. ஆத்துல அன்னைக்கு நீ பண்ணின கிச்சடியும் சரி இன்னைக்கு இந்த பொங்கலும் கேசரியும் சரி எல்லாமே ருசியோ ருசி போ. ஆம் எ லக்கி ஃபெலோ. இன்னும் கொஞ்சம் போட்டுக்கறேன். ஆமாம் நீயும் சாப்பிட வேண்டியது தானே. ஏன் என்னையே பார்த்துண்டிருக்காய்?”

உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும் எனக்கு வயிறு ரொம்பிடுத்து. தாங்க்ஸ் ஃபார் யுவர் அப்ரிசியேஷன்

ஹலோ இந்த தாங்க்ஸ் எல்லாம் வெளி ஆட்கள்கிட்ட வச்சுக்கோ நம்மளுக்குள்ள எல்லாம் நோ சாரி நோ தாங்க்ஸ் ஓகே. மொதல்ல நீயும் உட்கார்ந்து சாப்பிடு.

நவீனின் பேச்சு, பழக்கங்கள் எல்லாம் மிருதுளாவிற்கு மெல்ல மெல்ல அவன் மீது காதலை வரவைத்தது. அதே போல நவீனும் மிருதுளா மீது கொள்ளை ஆசையும் பிரியமும் வைத்திருந்தான்… ஆனாலும் இருவரின் மனதிலும் ஏதோ சில நெருடல்கள் இருந்து கொண்டு அதை முழுவதுமாக அனுபவிக்க தடுத்தது. 

மிருதுளாவிற்கு நவீனிடம் கேட்டு க்ளியர் பண்ணிக்கொள்ள  வேண்டிய விஷயங்கள் பல உள்ளது அவற்றை நவீனிடம் எப்படி கேட்பது? என்ன நினைப்பார்? வருத்தப்படுவாரா? சரியான பதில் கிடைக்குமா? என்பதனால் தயக்கம். நவீனுக்கு பிரேஸ்லெட் விஷயத்தில் ஒரு பொய்யை தனது பெற்றோர் சொல்லி தன்னை தாழ்த்தியதில் வருத்தம். இருவருமே அதை வெளிக்காட்டாமல் மனதினுள் பூட்டி வைத்தனர். 

இதுதான் நிச்சயிக்கப்பட்ட திருமணமத்தின் ஆரம்ப கால தயக்கங்களும் தவிப்புகளும். இவை அனைத்தும் சரியாக சில நாட்கள் / மாதங்கள் ஆகலாம். பல தம்பதிகளுக்கு சில வருடங்களும் ஆகலாம். சில தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளாமலே போவதும் உண்டு.  அதனால் தான் திருமணமானதும் கணவன் மனைவி பிரிந்திருக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறியுள்ளனர். இதில் நம்ம நவீன் மிருதுளா புரிதலுக்கு சில நாட்களாகபோகிறதா, மாதங்களாகபோகிறதா இல்லை வருடங்களாகப்போகிறதா!!!  பர்வதம் ஈஸ்வரன் சொன்னது போல மிருதுளா அவர்களுடனே இருந்திருந்தால் அவர்களுக்குள் புரிதலே வராதபடி செய்திருப்பார்கள் அந்த மூத்த தம்பதியர்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்

இரு மனங்கள் இணைவதில்

காலதாமதம் ஆவதில்

தவறேதுமில்லை! ஆனால்

இணையாமல் போனால்

அவர்கள் வாழ்க்கை மட்டுமல்லாமல்

இரு குடும்பத்தினரின் வாழ்க்கையும்

ஆட்டம் கண்டுவிடும்

அதிலிருந்து மீள்வதற்கு காலதாமதம் ஆகும்

பலரால் மீண்டு வந்து விடமுடியும்

சிலரால் முடியாமல் அவர்கள் வாழ்க்கை அழிந்துவிடும்.

திருமண வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் புரிதல் என்பது மனசு விட்டு பேசுவதனால் மட்டுமே வந்துவிடாது அது பல சந்தர்ப்ப சூழ்நிலைகளை சார்ந்தும் தான் ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலைகள் நிறைய காத்திருக்கிறது நம்ம மிருதுளா நவீன் வாழ்க்கையில். அவர்கள் அவற்றை புரிந்துக்கொள்கிறார்களா என்பது தான் கேள்வி அதற்குண்டான பதிலைத்தேடி தான் நாம் அவர்கள் கதையை படிக்கின்றோம்.

மிருதுளா மந்திய சாப்பாட்டுக்கு ரசமும் உருளைக்கிழங்கு ஃப்ரையும் செய்ய முற்பட்டபோது…

மிருது மத்தியத்திற்கு வேணும்னா நம்ம கேம்ப்புக்குள்ளயே இருக்கிற வெஜ் டாபாலேருந்து லஞ்ச் வாங்கிண்டு வரேன்.

வேண்டாம் நவீ. வெளியே சாப்பிட்டு அலுத்துடுத்து. எனக்கு ரசம் சாதம் சாப்பிடனும் போல இருக்கு. அதுதான் செய்துண்டிருக்கேன். இதோ ரசமும் உருளை பொறியலும் ஆயாச்சு. சாதம் மட்டும் வச்சுட்டேன்னா வேலை ஆச்சு. நான் ஒன்னு கேட்கவா?” 

கேளு. என்ன?”

உங்களுக்கு சமைக்கத்தெரியுமா?”

நாட் அட் ஆல் மிருது. சின்ன வயசுலயே வேலைல சேர்ந்துட்டேன் அன்னேலேருந்து இன்னிக்கு நீ சமைச்சு தந்தது வரைக்கும் எனக்கு எங்க ஆர்மி மெஸ் சாப்பாடு தான் கைகுடுத்திருக்கு. மெஸ் இருந்ததால நான் சமைக்கனும்ங்கற அவசியம் வரலை அதனாலயோ என்னமோ அதை கத்துக்கணும்ன்னு தோணலை.

ஓ!!! அப்படியா? சரி சப்போஸ் எனக்கு உடம்புக்கு சரியில்லாமல் போச்சுன்னா?”

அப்போ இருக்கவே இருக்கு நம்ம ரோஹித் டாபா. அங்கிருந்து வாங்கி சாப்பிடுவோம் என்ன சொல்லற

அப்பவும் கத்துக்க மாட்டேங்கள்ங்கறது நல்லா புரியறது

அதெல்லாம் பார்த்துக்கலாம் இப்போ ஏன் உடம்பு முடியாமல் போறத பத்தி எல்லாம் பேசற. விடு வேற ஏதாவது பேசுவோம்

சாதம் ஆயாச்சு. சரி வாங்கோ நாம ஹாலுக்கு போவோம்

இந்த கோட் சூட்டை கவர்ல போட்டு வைக்கனும் இல்லைன்னா டஸ்ட் படியும்.  இப்போ சொல்லு நேத்திக்கு என்கிட்டே ஏதோ கேட்க வந்து கேட்காம விட்டுட்ட என்னதது?”

நம்ம ரிசப்ஷன் டிரஸ் தானே எஸ் எஸ் அப்படியே வையுங்கோ. சரி நேத்திக்கு கேட்க வந்தது இருக்கட்டும் இப்போ இந்த கோட் சூட்டை பார்த்ததும் இன்னொரு விஷயம் ஞாபகம் வருது கேட்கட்டுமா? கோபப்படாமல் பதில் சொல்லனும்

எனக்கு கோபமே வராது அதெல்லாம் ஒரு காலத்துல பயங்கரமா இருந்தது…இப்போ அப்படி இல்லை‌. அதனால கேளு

ஆமாம் நீங்கள் தான் சம்பாதிக்கறேங்கள் அதுவுமில்லாம வரதட்சணை ஏதும் வேண்டாம் என்றும் அதைப்பத்தி என் அப்பா மீண்டும் பேச ஆரம்பிச்சபோது எழுந்து வெளியே போனேங்களே

ஆமாம் நான் வேண்டாம்னு சொன்னதுக்கப்புறமும் உன் அப்பா அதைப்பத்தி மறுபடியும் பேசினார் அதுதான் போனேன்

ஓகே ஓகே நீங்க அன்னைக்கு சொன்னது செய்தது எல்லாம் சரிதான் ஆனா அதுக்கப்புறம் உங்க அப்பா அம்மாட்ட ஏன் ரிசப்ஷன் டிரஸ், ஷூ எல்லாம் வாங்க பணம் கேட்டிருக்கேங்கள்?”

என்ன சொல்லற நீ? நான் எப்போ அவாகிட்ட பணம் கேட்டேன்? எதுக்கு கேட்கனும்? நானே தான் எல்லாம் டில்லியில் எடுத்துண்டேன்

இதை கேட்டதும் மிருதுளாவிற்கு ஊருக்கு கிளம்புவதற்கு முன்தினம் நவீன் அவர் அப்பாவிடம் பணம் கேட்டு வாங்கியது நினைவுக்கு வந்தது. ஆனால் அதை இப்போது கேட்டால் தானும் குழம்பி நவீனையும் குழப்பிவிடுவோம் என்றெண்ணி அதை இன்னொரு நாள் கேட்கலாம் என்று முடிவு செய்து…அதுதான் சரி என தலையை அசைத்து….

என்ன சொல்லறேங்கள்? அப்போ நீங்க அவாகிட்ட டிரஸ் எடுக்க பணம் ஏதும் கேட்கலையா? ஆனா அவா ரெண்டு பேரும் நீங்க கேட்டதா சொல்லித்தான் எங்க அப்பாகிட்ட இருந்து ரூபாய் பத்தாயிரத்த பஸ் ஸ்டாப் ன்னு கூட பார்க்காம அங்கேயே குடுக்கச்சொல்லி வாங்கிண்டு தான் உங்க ஊர் பஸ்ஸிலயே ஏறினா. எங்க அப்பா கூட சாயந்தரம் ஆத்துக்கு வந்து தரேன்னு சொன்னதுக்கு, “இல்ல இப்பவே அவனுக்கு நாங்கள் மணி ஆர்டர் பண்ணனும்ன்னு சொன்னாலே!!!

என்னது பத்தாயிரமா!!! அப்படியா சொல்லி வாங்கினா? ஏன் உங்க அப்பா கொடுத்தா? என்ட்ட ஒரு வார்த்தை கேட்டுருக்கலாமோனோ!!! அந்த வெள்ளி சொம்பு, முகம் விஷயத்தில எப்படி நேரா வந்து பளிச்சுன்னு கேட்டா?”

என்ன சொல்லறேங்கள்? அது மூனாம் மனுஷர் வந்து கேட்டதால் என் அப்பா அம்மா நேரா கேட்டா, அதுவும் இல்லாம நீங்க அப்போ அங்க இருந்தேங்கள் அதனால க்ளியர் ஆச்சு ஆனா இது அப்படியில்லையே கேட்டது உங்க அப்பா அம்மா அவாள்ட்ட அப்படி எப்படி கேட்க முடியும்? அதுவும் நீங்க டில்லில இருந்தேங்கள்

ஒரு ஃபோன் பண்ணி கேட்டிருக்கலாமே

அந்த கொடுக்கல் வாங்கல் நடந்தப்போ நானும் அங்கிருந்தேன். எனக்கு உங்க மேல தான் கோபம் வந்தது. அன்னைக்கு நைட் நீங்க ஃபோன் பண்ணினேங்கள் அப்போ அதை சொல்லனும்ன்னு ஆரம்பிச்சேன் என் சித்தி தான்அதெல்லாம் ஃபோன் ல சொல்லக்கூடாது…இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நேர்ல பேசரா மாதிரி வராது நீ ஏதாவது அவர்ட்ட இப்போ சொல்ல அத அவர் டில்லியிலிருந்து அவா பெத்தவாள்ட்ட கேட்க அவா உன்னை தப்பா நினைச்சுடுவான்னு சொன்னது ஞாபகம் வர அப்படியே சொல்ல வந்ததை விட்டுட்டேன். அதுக்கப்புறம் நான் அதை மறந்துட்டேன் இப்போ தான் ஞாபகம் வந்தது கேட்டேன்” 

ஓ மை காட்!!! என்கிட்ட எங்க அப்பா அம்மா உன் பேரன்ட்ஸ் கிட்டருந்து பணம் வாங்கியதா சொல்லவுமில்லை, தரவுமில்லை” 

அப்போ அந்த பத்தாயிரம் என்ன தான் ஆச்சு! எங்க போச்சு!!

தெரியலையே!!! ச்சே ஏன் இப்படி எல்லாம் பண்ணிருக்கா? சரி கல்யாணமானதுக்கப்புறமாவது ஆத்துல இருந்தப்போவே சொல்லிருந்தே னா நேரா கேட்டிருக்கலாமில்லையா?”

நானும் கல்யாண டென்ஷன் அன்ட் ஒருவித பயம் கலக்கம் எல்லாத்தோடையும் இருந்ததுனால மறந்துட்டேன்” 

என்னன்னு சொல்லுவேன் போ. பசிக்கறது சாப்பிடலாமா

மொத்தத்துல எங்க அப்பாவுக்கு பத்தாயிரம் நஷ்டம். சரி வாங்கோ சாப்பிடலாம்.

வரதட்சணை வேண்டாம் என நவீன் சொல்லியிருந்தாலும்

அவன் பெற்றோர் வேறு வழியில் அதைப் பெற்றுச் சென்றிருந்தாலும்

அதை மகனிடமிருந்து மறைத்திருந்தாலும் 

உண்மை மிருதுளா மூலம் வெளி வந்ததால்

பர்வதம் ஈஸ்வரன் போட்ட முடிச்சுகளில் இரண்டாவதும் அவிழ்ந்தது.

முடிச்சுகள் பல போட்டதால்

இருவரும் இணைந்தால்

ஒவ்வொன்றாக அவிழும் என்பதால்

மிருதுளாவை போகாமல் 

தடுத்துள்ளனர் மூத்த தம்பதியினரான பர்வதம் ஈஸ்வரன்

என்னதான் அவர்கள் முடிச்சுகள் போட்டிருந்தாலும் ஆண்டவன் முடிச்சு என்று ஒன்றிருப்பதை மறந்துவிட்டார்கள் போலும். அவர்கள் போட்ட முடிச்சு காலப்போக்கில் தளர தளர  மிருதுளாவிற்கும் நவீனுக்கும் ஆண்டவன் போட்ட முடிச்சு தளராமலிருக்க அவரே அருள் புரிய வேண்டும். 

இருவரும் உணவருந்தியதும் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு நவீனின் ஒன்னு விட்ட சித்தி வீட்டிற்கு கிளம்பலானார்கள். மிருதுளா பட்டுப்புடவையுடுத்தி தயார் ஆனாள். அவளைப்பார்த்த நவீன் 

ஏதோ குறையுதே

என்ன !! என்ன குறையறது? ஓ !! ஐ காட் இட். தலையில் பூ ரைட்டா?”

எஸ் ரைட். போற வழியில் பூக்கடை இருக்கு அங்க வாங்கிக்கலாம்

பூக்கடையில் வண்டியை நிறுத்தி பூ வாங்கிக்கொடுத்தான் நவீன். அதை தன் தலையில் சூடிக்கொண்டாள் மிருதுளா. இருவருமாக பைக்கில் மீண்டும் பயணத்தை தொடர்ந்த சில மணி நேரத்தில்ஐய்யோ அம்மாஎன்று ஒரு அலறல் சத்தம் …..

தொடரும்…….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s