காலை கதிரவன் கண்விழித்துப்பார்க்களானார். ஜன்னல்களுக்கு திரைச்சீலை இல்லாததால் அவரின் பார்வை மிருதுளாவை தூங்க விடாமல் எழச்செய்தது. எழுந்து நவீனைப்பார்த்தாள் அவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்யாமல் ஃப்ரெஷ்ஷாகி வந்து மெதுவாக கொண்டு வந்த அட்டைப்பெட்டிகள் மற்றும் சூட்கேஸ்களை திறந்து உள்ளிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் ஹாலில் பாத்திரங்கள், மளிகை, ஸ்நாக்ஸ், டிரஸ்ஸை, சாமி படங்கள் என பிரித்து அடுக்கி வைத்தாள். சாமி படங்களை எங்கே மாட்டுவது என்று சுற்றும் முற்றும் பார்த்து ஓர் இடத்தில் பேனாவால் குறியீடு போட்டு வைத்தாள்.
ஒரு பேப்பரில் கடையில் வாங்க வேண்டிய டப்பாக்கள் (மளிகை சாமான்களைப் போட்டு வைக்க), பால் போன்றவைகளை லிஸ்ட் போட்டாள். டக்..டக்…டக்..டக் என கதவு தட்டும் சத்தம் கேட்டது. அச்சச்சோ இந்த சத்தம் நவீனின் தூக்கத்தை தொந்தரவு செய்யுமே என்ற எண்ணம் தோன்ற உடனே தாவி குதித்துக்கொண்டு இன்னும் ஒருமுறை தட்டுவதற்குள் கதவை திறந்தாள். நடுத்தர வயது பெண்மணி கையில் ஒரு டிரேவில் இரண்டு கப் டியுடன் நின்றுக்கொண்டிருந்தார். அந்த பெண்ணைப் பார்த்ததும் …
“நீங்க தமிழா?”
“ஆமாம். எங்க ஊரு திருநெல்வேலி. உங்க பக்கத்து வீடுதான். நீங்க வீட்டை இன்னும் செட் செய்திருக்க மாட்டிங்கன்னு தெரியும் அதுதான் காபி கொண்டு வந்தேன்“
“ஓ!! ரொம்ப நன்றிங்க. என் பெயர் மிருதுளா. உங்க பெயர் என்ன?”
“என் பெயர் லதா. எதுக்குங்க தாங்க்ஸ் எல்லாம். நான் கல்யாணமாகி வந்த புதுசுல இப்படித்தான் எங்க அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க ஹெல்ப் பண்ணினாங்க. சரி சரி காபி ஆறிட போவுது குடிங்க. என் பசங்கள ஸ்கூலுக்கு கிளப்பனும். நீங்க மொதல்ல செட்டில் ஆகுங்க அப்புறம் பேசுவோம். சரியா மிருதுளா.“
“ஓகே பை” என கதவை சாத்தி டிரேவுடன் திரும்பினாள் நவீன் “தாங்க்ஸ்” என்று கூறிக்கொண்டே ஒரு கப்பை எடுத்துக்கொண்டு…
“ஹேய் எப்போ எழுந்தே நீ? எல்லாத்தையும் அடுக்கி வச்சுருக்கறத பார்த்தா நீ எழுந்துண்டு ஒரு ஒன் ஆர் ஆகிருக்குமே!! ஏன் என்னை எழுப்பலை“
“நீங்க எப்போ எழுந்தேங்கள்?”
“நீ நம்ம பக்கத்தாத்து லதாவோடு இன்ட்ரோ ஸெஷன் நடத்தினியே அப்போவே எழுந்துட்டேன்“
“சரி சரி குளிச்சிட்டு வாங்கோ கடைக்கு போகணும் சில சாமான்கள் எல்லாம் வாங்கணும். இதோ லிஸ்ட் ரெடி. இன்னைக்கு போய் எல்லாத்தையும் வாங்கிண்டு வந்து எல்லாத்தையும் செட் பண்ணிட்டோம்ன்னா நாளைக்கு விளக்கு ஏற்றி சமையலை தொடங்கிடுவேன்“
“என்ன இவ்வளோ வேகமா இருக்க? நான் எல்லாம் கொஞ்சம் ஸ்லோ தான் மா.”
“எனக்கு பழைய நியூஸ் பேப்பர் வேணுமே. எங்கே கிடைக்கும்“
“என்னத்துக்கு?”
“எல்லா செல்ஃப்லையும் விரிக்கத்தான்.“
“ஓகே நான் குளிச்சிட்டு போய் எடுத்துண்டு வரேன்.“
“எங்கேருந்து?”
“என் நண்பர்கள் ரூமிலிருந்து தான்.“
“அந்த இடம் ரொம்ப தூரமா“
“இல்லை நடந்தே போயிட்டு வந்துடுவேன். ஒரு நாலு தெரு தள்ளி தான் இருக்கு“
“அப்படின்னா இப்பவே போயிட்டு வாங்கோளேன். வந்துட்டு குளிச்சுக்கோங்கோ. ப்ளீஸ்…“
“சரி போயிட்டு வரேன்.“
நவீன் வருவதற்குள் பக்கத்து வீட்டு டிரே, காபி கப் எல்லாவற்றையும் தேய்த்து அலம்பி வைத்தாள். நவீன் பேப்பர்களை மிருதுளாவிடம் கொடுத்துவிட்டு குளிக்கச்சென்றான். அவன் ரெடி ஆவதற்குள் துணிமணிகளை பீரோவில் அடுக்கி வைத்தாள். அடுப்படியில் எல்லா இடத்தையும் ஒரு துண்டு கொண்டு துடைத்து, படிகளில் எல்லாம் பேப்பரை விரித்து, பாத்திரங்களை எல்லாம் அடுக்கி வைத்தாள். நவீன் அனைத்தையும் பார்த்துவிட்டு..
“அம்மாடி நீ என்ன சூப்பர் உமன்னா!!! அதுக்குள்ள எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டயே!!!”
“இதை எல்லாம் செய்ய சூப்பர் உமன்னா இருக்கனும்ங்கற அவசியமில்லை எந்த எந்த வேலைகளை எப்போ செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும்ன்னு மனசுல கணக்கு போட்டு வேலைப் பார்த்தா சுலபமாக முடியும் அவ்வளவுதான்.“
“ஓ அப்படியா!!! இப்போ புரியுது நான் ஏன் ஃபாஸ்ட்டா செய்ய மாட்டேன்ங்கறது.“
“ஏன்“
“ஏன்னா நான் மாத்தமாட்டிக்கஸ்ல வீக் அதுதான்“
“அச்சோ கடி ஜோக். சரி சீக்கிரம் ரெடி ஆகுங்கோ. இன்னைக்கு பிரேக்ஃபாஸ்ட் எங்க? எனக்கு பசிக்கறது“
“இன்னைக்கு நாம கேண்டீனுக்கு தானே போறோம் அதுக்குப்பக்கத்திலயே ஒரு சின்ன வெஜ் ஹோட்டல் இருக்கு அங்கயே சாப்பிடலாம் சரியா.“
“நாங்கெல்லாம் கேண்டீனுக்கு போனா அங்கதான் சாப்பிடுவோம் அதுக்கு வெளியே இருக்கிற ஹோட்டல்களில் சாப்பிட மாட்டோம்“
“அம்மாடி உன் அறிவ பார்த்து அப்படியே புல்லரிச்சுடுத்து போ…அசடே இங்க கேண்டீன்னா சாப்பாடு தரும் இடமில்லை… நம்ம ஆளுகளுக்கு மலிவான விலையில் பொருட்கள் விற்கும் எ ஸ்மால் கடை மாதிரின்னு வச்சுக்கோயேன். வா பார்க்கத்தானே போற“
“ஓ… அப்படியா…சாரி எனக்கு அது தெரியாது….இந்த டிரே அன்ட் கப்பை லதா ஆத்துல குடுத்துட்டு வரேன் நீங்க கதவைப்பூட்டிட்டு ரெடியா இருங்கோ“
“ஓகே ஓகே போயிட்டு வா“
பக்கத்துவீட்டு கதவை தட்டினாள் மிருதுளா. லதா அடுப்படியிலிருந்தே எட்டிப்பார்த்து…
“வா வா மிருதுளா உள்ள வா“
“இல்ல நாங்க வெளில கிளம்பறோம். இன்னொரு நாள் வரேன். இதோ இதை குடுத்துட்டுப்போகலாமேன்னு வந்தேன்.“
“இது என்ன முறுக்கு, அதிரசமெல்லாம் வச்சிருக்க!“
“ஆமாம் எங்க கல்யாண பட்சணம். சாப்பிடுங்க நல்லாருக்கும்.“
பைக் ஹான் சத்தம் கேட்டதும் மிருதுளா…
“சரி நான் வரேன் அவர் தான் ஹான் அடிச்சுக்கூப்பிடறார். அப்புறம் பேசலாம். பை“
“ஓ கே மா பை.“
இருவரும் கேண்டீன் பார்க்கிங்கில் வண்டியை நிப்பாட்டிவிட்டு காலை உணவருந்த ஹோட்டலுக்குள் சென்றனர். நவீன் ஒரு பிரெட் பக்கோடா அன்ட் ஒரு ஆலு பரோட்டா ஆர்டர் செய்தான். அதற்கு மிருதுளா….
“இங்க இட்டிலி தோசை எல்லாம் இருக்காதா?…எப்படி எப்ப பார்த்தாலும் ரொட்டியவே சாப்பிடறாளோ தெரியலைப்பா.“
“நாம எப்படி எப்பப்பார்த்தாலும் இட்டிலி தோசை சாப்பிடறோமோ அப்படி தான் அவாளுக்கும்.“
“மொதல்ல எல்லாத்தையும் செட் செய்துட்டு இட்டிலி தோசைக்கு மாவு அறைத்து வைக்கணும்“
“உனக்கு தான் அறைக்க தெரியாதே பின்ன எப்படி!!!“
“உங்க அம்மா அன்னைக்கு செய்ததை எல்லாம் பார்த்து தெரிஞ்சுண்டேன். ஆமாம் அது என்ன பிரெட் பகோடா?”
“இதோ வந்துடுத்தே இது தான் சாப்பிட்டுப்பார்த்து சொல்லு.“
“அப்பா சுட சுட இருக்கு. ம்…ம்…ம்…சூப்பரா இருக்கு. இது தான் ஃபர்ஸ்ட் டைம் இப்படி பிரெட் சாப்பிடறேன். இதுக்குள்ள ஆலு ஸ்டஃப் பண்ணிருக்காளோ.“
“எஸ் ஆலு தான். இதுலயே பன்னீர் பிரெட் பகோடாவும் இருக்கு. அடுத்த தடவை வாங்கித்தறேன்.“
“பரவாயில்லை எனக்கு இந்த ஊரு டிஷ் எல்லாம் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு. இன்னும் ஒரு வருஷத்துல எல்லாம் கத்துண்டு ஆத்துலயே செய்து தறேனா இல்லையான்னு பாருங்கோ. சரி உங்க ஆத்துக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேளா நாம பத்திரமா வந்து சேர்ந்தாச்சுன்னு?”
“ம் ம்..ம் அதெல்லாம் சொல்லியாச்சு. நீ உங்க அப்பா அம்மாட்ட பேசணுமா? இதோ இங்க ஒரு எஸ்.டி.டி பூத் இருக்கு. பேசறயா?”
“ம். …பேசறேன்.“
மிருதுளா வீட்டுக்கு ஃபோன் போட்டுக்குடுத்து
“எவ்வளவு ஆச்சுன்னுட்டு மேலே காட்டும் பார்த்து பேசு” என்றான் நவீன்.
மிருதுளா அவள் அம்மா அப்பா மற்றும் தம்பியுடன் பேசிக்கொண்டே மேலே பார்த்தாள் அறுபது என்று காட்டியதும் அவசர அவசரமாக பை சொல்லி கால்லை கட் செய்தாள். இதைப்பார்த்த நவீன்…
“ஏன் என்ன ஆச்சு? நூறு ருபாய் வரைக்கும் பேசிருக்க வேண்டியது தானே“
“அத நீங்க முன்னாடியே சொல்லிருக்கனும். இப்போ சொல்லறேங்கள்“
“ஹா! ஹா! ஹா! வா வா பொருட்களை வாங்குவோம் அப்புறமா வேணுனா நைட் பேசலாம். நம்ம கேம்ப்புக்குள்ளயே ஒரு எஸ்.டி.டி பூத் இருக்கு. ஓகே வா“
வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். வீட்டில் முதலில் சாமி படங்களை சுவரில் ஆணி அடித்து மாட்டினார்கள். அதற்காக வாங்கி வந்த ஸ்டாண்டையும் ஃபிக்ஸ் செய்தான் நவீன். மிருதுளா எடுத்து வந்த எல்லா சாமி பொருட்களையும் அந்த ஸ்டாண்டில் அடுக்கி வைத்தாள். மளிகை ஜாமான்களை எல்லாம் டப்பாக்களில் இருவருமாக போட்டு அடுப்படியில் அடுக்கினர். அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் வாங்குவதற்கு மிருதுளாவிடம் பணம் கொடுத்திருந்தார் ராமானுஜம். ஆனால் அதை அவர்கள் வாங்க மறந்ததால் மீண்டும் போக ஆயத்தம் ஆனார்கள். அப்பொழுது நவீன்…
“ஏய் மிருது எப்படியும் மத்திய சாப்பாட்டுக்கு வெளியே தான் போகணும் அப்போவே போய் மிச்சத்த வாங்கிண்டு உன்னை ஆட்டோல ஏத்திவிட்டுட்டு பின்னாடியே நானும் பைக்ல வரேன் என்ன சொல்லுற….இல்லாட்டி இப்ப ஒரு தடவை அப்புறம் ஒருதடவைன்னுட்டு ரெண்டு மூணு டிரிப் அடிக்கனும்“
“ஓகே அதுவும் சரி தான் அப்படியே செய்வோம். ஆனா அதுக்கு இன்னும் ரெண்டு ஆர் மூணு மணிநேரமிருக்கே! அதுவரை என்ன செய்வோம்…என்ன மறுபடியும் படுத்துட்டேள்“
“ஆமாம் ..வா நீயும் வந்து படுத்துக்கோ.“
மிருதுளாவிற்கு நவீனிடம் காசு இல்லாமல் போனது ஏன் என்ற நினைப்பு மனதிலிருந்ததை நவீனிடமே கேட்டாக வேண்டும் என்று எண்ணி ஆரம்பித்தாள்…
“என் மனசுல ஒரு விஷயம் உருத்திண்டே இருக்கு அதை உங்கள்ட்ட கேட்கலாமா!!“
“கேளு..அதுக்கு ஏன் இழுக்கறாய்…?”
“இல்லை நீங்க ஏதாவது நினைச்சிட்டா…“
“ஏய் சொல்லுமா” என்று கையை பிடித்திழுத்தான் நவீன், உடனே ஆ…என சத்தமிட்டாள் மிருதுளா.
“என்ன ஆச்சு ? ஏன் கத்தின?”
“இந்த பிரேசிலட் கீரிடுத்து அதுதான் கத்தினேன். கழட்டி வைக்க மறந்துட்டேன்“
“ஏய் நானும் மறந்தே போயிட்டேன் பாரேன்!!!! உனக்கு இந்த பிரேசிலட் பிடிச்சிருக்கா? இதை கல்யாண நாள் அன்றைக்கே கேட்கனும்ன்னு நினைத்தேன் அந்த டென்ஷன்ல மறந்துட்டேன்.“
“நல்லா தான் இருக்கு ஏன் இதுக்கு என்ன ஸ்பெஷலாம்!!! ஓ!!! மச்சினர் வாங்கி தந்ததாச்சே அதனாலயா? நீங்கதான் எனக்கு ஒன்னுமே வாங்கித்தரலையே!!! அதுல எனக்கு கொஞ்சம் மன வருத்தம் தான்“
“ஹலோ என்ன சொல்லுற? எந்த மச்சினன் வாங்கினதுனு நினைச்சிண்டிருக்க? இது நான் உனக்காக கடை கடையா ஏறி பார்த்து வாங்கியது மா“
“என்ன சொல்லறேங்கள் எங்க ஃபேமிலி ஆட்கள்கிட்ட உங்க அம்மா தான் சொல்லிருக்கா!!! அவா என்கிட்ட சொன்னா“
“என்னத்த சொன்னா உன் மாமியார்“
“ஏன் உங்க அம்மான்னு சொல்லமாட்டேளோ!!!“
“இப்ப அதுதான் ரொம்ப முக்கியம் பாரு. மொதல்ல என்ன நடந்ததுனு சொல்லறயா“
“உங்க தம்பி கவின் குவைத்திலிருந்து அவன் மன்னிக்காக வாங்கிண்டு வந்ததுனு உங்க அம்மா சொன்னதால் நாங்கள் அனைவரும் அதை உண்மைன்னு நம்பி கல்யாணத்தன்னைக்கு மண்டபத்தில எல்லார்கிட்டயும் அதையே தான் சொன்னோம், அதுக்கு என் சித்திக்கூட சொன்னா தட் ஐ ஆம் லக்கின்னு. அப்போ என் தோழி காயத்திரி கூட கேட்டா “உன் மச்சினனே உனக்கு பிரேஸ்லட் எல்லாம் வாங்கித்தரார் உன்னவர் ஒன்னும் தரலையா” னுட்டு“
“ஆமாம் …ஆமாம் …அவன் ஒன்னும் வாங்கலை இது நான் வாங்கினது“
“இதை நீங்க ஏன் அப்பவே என் கிட்ட சொல்லலை?”
“சரி விடு கல்யாண டென்ஷன்ல மறந்துட்டேன்… இப்போ தெரிஞ்சுண்டுட்ட ல அது போறும். நீ ஏதோ கேட்கணும்னு சொன்னயே என்னதது“
“இந்த பிரேஸ்லட் இஷ்ஷுல இனி அது வேறயா !!! வேண்டாம் பா வேண்டாம். நான் இன்னொரு நாள் கேட்கறேன்.“
“ஏன் அப்படி என்ன விஷயம் அது?”
“இல்ல இல்ல விடுங்கோ…ஏன் உங்க அம்மா அப்போ அப்படி சொன்னா? நீங்க வாங்கினத கவின் வாங்கினதா ஏன் சொல்லனும்? அதுனால என்ன கிடைச்சது அவாளுக்கு?”
“அதை நீ அவாகிட்ட தான் கேட்கனும். என்னிடம் கேட்டா!!“
“அப்பவே நீங்க என்னிடம் சொல்லிருந்தா நிச்சயமா கேட்டு இருப்பேன். இனியாவது எதுவும் மறக்காமல் சொல்லுங்கோ. சரி நேரமாயிடுத்து நாம போய் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், பெட், பில்லோ ரெண்டு எல்லாம் வாங்கிண்டு வரலாமா“
“ஓகே டன். சரி சரி போகலாம் வா“
இருவரும் போய் வேண்டிய அனைத்தையும் வாங்கிக்கொண்டு வந்து எல்லாவற்றையும் அது அது இடத்தில் ஃபிக்ஸ் செய்தனர். இரண்டு கட்டில்கள் மட்டும் தான் குவார்டர்ஸில் தந்திருந்தார்கள் அதில் மெத்தைப்போட்டு புது பெட் ஷீட் விரித்து புது கவரிட்ட தலையணையை வைத்து விட்டு நவீனைப்பார்த்து…..
“அப்பாடா எல்லாம் செட் பண்ணியாச்சு. நாளைக்கு காலைல சீக்கிரம் எழுந்து சுவாமிக்கு நெய்வேத்தியத்திற்கு கேசரி செய்து பூஜைப் பண்ணனும். அதுக்கப்புறம் என்னோட ரெகுலர் சமையலைத் தொடங்கனும்.“
“அதெல்லாம் ஓகே நாளைக்கு ஈவ்னிங் நாம ரெண்டு பேரும் என்னோட ஒன்னுவிட்ட சித்தி இங்க இருக்கா அவா ஆத்துக்கு டின்னருக்கு போகணும் சரியா“
“ஓ இங்கேயும் நம்ம சொந்த காரா இருக்காளா. சூப்பர். ஓ எஸ் போயிட்டு வரலாம்“
நவீன் போட்டதோ மூன்று முடிச்சு
அவன் பெற்றோர் போட்டதோ பல முடிச்சு
இன்று அதில் அவிழ்ந்தது ஒரு முடிச்சு
பிரேஸ்லட் என்னும் பொய் முடிச்சு…
நம்ம மிருதுளாவும் நவீனும் தனிக்குடித்தனம் தொடங்கிய இரண்டே நாளில் பர்வதம் ஈஸ்வரன் போட்ட முடிச்சுகளில் …பிரேஸ்லட் எனும் முதல் முடிச்சு அவிழ்ந்து இருவருக்கும் உண்மையை விளங்கச்செய்தது. இன்னும் எத்தனை முடிச்சுகள் வரிசையாக நம்ம மிருதுளா நவீன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தால் அவிழப்போகிறதென்பதை வரும் நாட்களில் படித்து தெரிந்துக்கொள்வோம்.
தொடரும்……