சாபர்மதி ஆற்றின் மேற்குக் கரையில், குஜராத்தின் தலைநகரான காந்திநகரில் கால்லடி எடுத்து வைத்தாள் மிருதுளா. இரண்டு நாள் பயணித்தும் அசதியேதுமின்றி புத்துணர்ச்சியுடன் புதிய வாழ்க்கையை வாழ தனது முதல் அடியை நவீனுடன் எடுத்து வைத்ததும். ஆயியே ஆயியே மிஸர்ஸ் அன்ட் மிஸ்டர் நவீன், வாங்க வாங்க திருமதி மற்றும் திரு நவீன் அவர்களே, ரண்டி ரண்டி மிஸர்ஸ் அன்ட் மிஸ்டர் நவீன் சார். வரூ வரூ மிஸ்டர் அன்ட் மிஸர்ஸ் நவீன். காந்திநகரலெக்கு சுவாகதம். என அனைத்து மொழிக்காரர்களும் வரவேற்றனர். மிருதுளா அனைவருக்கும் வணக்கம் என்று கூறினாள். நவீன் தனது நண்பர்கள் அனைவரையும் மிருதுளாவிற்கு அறிமுகப் படுத்தினான். பின் அனைவருமாக அவர்களின் ஆர்மி வண்டியில் ஏறி காந்திநகர் யூனிட்டுக்குள் சென்று ஒரு சிறிய வீட்டின் முன் நிறுத்தினர்.
அதுதான் நவீன் மிருதுளாவிற்காக பார்த்துவைத்திருந்த வீடு. அனைவரும் இறங்கி பெட்டிகள் அனைத்தையும் வீட்டினுள் வைத்துவிட்டு அவர்களை ஃப்ரெஷ் ஆக சொல்லிவிட்டு விடைப்பெற்றனர். மிருதுளா வீட்டைச்சுற்றிப்பார்த்தாள். ஒரு பெரிய ஹால் நடுவில் ஒரு சுவர் தடுப்பு, டாய்லெட் பாத்ரூம், மிக சிறிய அடுப்படி, அடுப்படி வழியே வீட்டின் பின்புறம் செல்வதற்கு கதவு. அவ்வளவேதான் அவள் வாழப்போகும் வீடு. அவள் எல்லாத்தையும் பார்த்துவிட்டு வருவதற்குள் நவீன் குளித்துவிட்டு வந்தான்…
“என்ன மிருது வீடு ஓகே வா! இது எனக்கு அலாட் ஆன குவார்ட்ஸ் இல்லை. நான் வாடகைக்கு தான் எடுத்துருக்கேன். இன்னும் ஒரு ஆறு மாசத்தில நம்மளுக்குன்னு நம்ம வீடு அலாட் ஆகிடும். அது நல்ல ஸ்பேஷியஸா இருக்கும்.“
“எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு. நாம ரெண்டு பேருக்கு இதே போறுமே!.“
“சரி நீ போய் சீக்கிரம் குளிச்சு ரெடி ஆகு“
“ஏன்“
“நம்மள ரிசீவ் பண்ண ஸ்டேஷன் வந்தார்ல பல்பீர் சிங் அவங்க வீட்ல பிரேக் ஃபாஸ்டுக்கு வரச்சொல்லிருக்கா. நாம அவா ஆத்துக்கு போனும் …ம்..ம்.. சீக்கிரம் ஆகட்டும்“
டக் டக் டக் டக் என வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் நவீன். பல்பீர் சிங்கின் பத்து வயது மகள் கையில் ஒரு டிரே அதில் இரண்டு கப் டீ மற்றும் பிஸ்கெட்டோடு மலர்ந்த முகத்துடன்…
“அங்கிள் பப்பா நே ஆப்கோ சாய் தேனே கேலியே போலா” என்று தனது அப்பா நவீனுக்கும் மிருதுளாவும் டீ கொடுக்க சொன்னதாக கூறி டிரேவை நீட்டினாள். நவீன் அதை வாங்கிக்கொண்டு தாங்கள் இன்னும் சிறுது நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு வருவதாக பலபீரிடம் சொல்லச்சொல்லி அந்த சிறுமியிடம் டீ கொண்டு வந்ததற்கு தாங்க்ஸ் என்று ஹிந்தியில் சொல்லி அனுப்பிய பின் கதவை சாத்திவிட்டு உள்ளே வருவதற்குள் மிருதுளா ஃப்ரெஷ்ஷாகி வந்தாள்…
“யாரு வந்தது. சரி நீங்க பேசிண்டு இருந்தேங்களா அதுதான் நான் போய் குளிச்சு ஃப்ரெஷ்ஷாயிட்டு வந்தேன். ஆமாம் இந்த காபியும் பிஸ்கெட்டெல்லாம் எங்கேர்ந்து வந்தது?”
“இது காபி இல்லை டீ. இனி இங்க எங்க போனாலும் டீ தான் தருவா. காபி நாம நம்ம வீட்டுல போட்டு குடிச்சா உண்டு. இதை நமக்காக பல்பீர் வீட்டுலருந்து அவா பொண்ணுட்ட அனுப்பிருக்கா.“
“ஓ அப்படியா!!! சரி அவா நான்வெஜ் சாப்பிடுவாளா?”
“ஆமாம், அவா பஞ்சாபி ஆச்சே நிச்சயம் சாப்பிடுவா. அதுனால என்ன? ஏன் இப்போ இதைக்கேட்ட?”
“அச்சச்சோ அப்படீனா எனக்கு வேணாம். நான் அவா ஆத்துக்கும் டிஃபன் சாப்பிட வரலை“
“அவாளுக்குத் தெரியும் நாம நான்வெஜ் சாப்பிட மாட்டோம்ன்னு ஸோ அவா அதெல்லாம் செய்திருக்க மாட்டா. ஏதாவது வெஜ் டிஷ் தான் பண்ணிருப்பா அதனால நீ தைரியமா சாப்பிட வரலாம்“
“இல்லை அதுக்கில்லை….“
“என்ன இழுக்கற…என்ன உன் ப்ராப்ளம் தயங்காம சொல்லு மிருது“
“இதுவரைக்கும் நான் நான்வெஜ் சாப்பிடறவா ஆத்துல எல்லாம் சாப்பிட்டது இல்லை. அதுவும் இல்லமா என்னதான் அவா சைவ சாப்பாடு செய்திருந்தாலும் அதை அசைவம் சமைத்த பாத்திரங்களாக தானே இருக்கும் …ஸோ நான் சாப்பிடும் போது அந்த நினைப்பு வந்து எனக்கு வாந்தி வந்துடுத்துன்னா? “
“ஹேய் நீ பேசறது அசட்டுத்தனமா இருக்கு. அவா என்ன பாத்திரங்களை தேய்த்து கழுவாமலா இருப்பா!!! என்ன இது …இனி இது மாதிரி எவ்வளவு கெட்டுகெதர் எல்லாம் நடக்கும் அப்போ எல்லாம் நீ எப்படி சாப்பிடுவ? சைவம், அசைவம் ரெண்டுமிருக்குமே! நானும் தான் நான் வெஜ் சாப்பிட மாட்டேன் ஆனா. வெஜ் டிஷ் யாரு சமைத்தாலும் எங்க வேணும்னாலும் சாப்பிடுவேன். நீ இப்போ வரலைன்னா அவா தப்பா எடுத்துப்பா. நீ வா கொஞ்சமா சாப்பிடு அதுக்கப்புறம் வேணும்னா ஏதாவது ஹோட்டலுக்கு போகலாம் சரியா“
“சரி நான் உங்களுக்காக ட்ரைப் பண்ணுறேன்“
“சரி எனக்கு ஒரு டவுட் கேட்கட்டுமா?”
“கேளுங்கோ“
“ஹோட்டல்ல சாப்பிடுவியா?”
“ஓ எஸ்!! இஃப் இட்ஸ் வெஜிடேரியன் ஹோட்டல். இது என்ன டவுட்?”
“அதுக்கில்லை வெஜிடேரியன் ஹோட்டல்ல சமைக்கரவா யாராவது நான்வெஜ் சாப்பிட்டுட்டு வந்து அதே கையாலா உனக்கு பொங்கல் செய்து தந்தா சாப்பிடுவியா?”
“அய்யோ என்ன பேசறேங்கள் நவீன். இனி ஹோட்டல்ல எப்போ சாப்பிட்டாலும் இந்த நினைப்பு வந்து என்னை சாப்பிட விடாதே!!!!“
“அம்மா தாயே!!! இப்படி இருந்தே எனக்கு ரொம்ப கஷ்ட்டம்மா!!!“
“நீங்க மட்டும் அவா ஆத்துக்கு போயிட்டு உங்க வைஃப் ரொம்ப டையர்டா இருக்கானுட்டு சொல்லிடுங்கோளேன். எப்படி என் ஐடியா?”
“அப்படி சொன்னாலும் அவா சாப்பாட்டை பேக் பண்ணி என்னிடம் குடுத்தனுப்பிடுவா…இதெல்லாம் தப்பு. மொதல்ல என் கூட அவா ஆத்துக்கு வா. உன்னை நிறைய மாத்த வேண்டியிருக்கும் போல தெரியறது…வா வா“
அறை மனதுடன் நவீனுடன் சென்றாள் மிருதுளா. நண்பர் வீடு அடுத்தத் தெருவில் இருந்ததால் இருவரும் நடந்தே அவர்கள் வீட்டுக்கு சென்றனர்.
“ஆயியே ஆயியே!!! நியூலி வெட்டெட். வாங்க வாங்க வண்கம்!! ஹவ் ஈஸ் மை டமில்“
“அச்சா ஹை” நல்லா இருக்கு என்று மிருதுளா பதிலளித்ததும் பல்பீர்
“உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?”
“ஓரளவு தெரியும். நல்லா புரிஞ்சுக்குவேன் ஆனால் பேச கொஞ்சம் பயம். ஸ்கூல்ல படிச்சிருக்கேன்.” என்று சரளமாக ஹிந்தியில் பதிலளித்தாள்.
பல்பீரின் மனைவி லெஷ்யா
“இங்க வந்துட்டிங்க என் கூட பேசி பேசி கூடிய சீக்கிரம் பஞ்சாபியும் பேசப்போறீங்க பாருங்க”
என்று பேசிக்கொண்டே டிஃபன் பரிமாறினார்கள். மிருதுளா நவீனைப் பார்க்க நவீன் சாப்பிடு என்று கண்ணசைக்க அதைப்பார்த்த லெஷ்யா..
“கவலை வேண்டாம் அனைத்தும் வெஜ்டேரியன் தான். சாப்பிடுங்கள்” என்றாள்
மிருதுளா மெல்ல எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். ஒரே ஒரு பரோட்டாவோடு போதும் என்று சொல்லி எழுந்தாள். அனைவரும் டிஃபன் சாப்பிட்டப்பின் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
“என்ன மிருதுளா வாமிட் வந்ததா?”
“வரமாதிரி இருந்தது ஆனா அப்படியே அடக்கிண்டுட்டேன்.“
“எல்லாத்துக்கும் உன் மனசு தான் காரணம் தெரியுமா!! நீ மனசுல இருக்கும் “வாந்தி வந்திடும்” என்கிற எண்ணத்தை அழிச்சுடு எல்லாம் சரியாகிடும்“
“கொஞ்சம் நாளாகும் ஆனா நிச்சயமா என்ன மாத்திக்க முயற்சிப் பண்ணறேன் உங்களுக்காக“
“சரி நீ சரியாவே சாப்பிடலயே ஹோட்டலுக்கு போலாமா?”
“இல்லை இல்லை வேண்டாம் அவா குடுத்த அந்த ஒரு பரோட்டாலயே பசி அடங்கிடுத்து“
“ஆமாம் உனக்கு ஹிந்தி தெரியும்ன்னு நீ சொல்லவே இல்லையே. இன்னைக்கு நீ அவாள்ட்ட பேசும்போது எனக்கு ஆச்சர்யமா இருந்தது தெரியுமா“
“நீங்க என்கிட்ட கேட்கலை நானும் சொல்லலை. ஏன் ஆச்சர்யம்!!!சரியா தானே பேசினேன்!!“
“கரெக்ட்டா பேசின ஒரு தப்பும் இல்லை. இது மாதிரி பேச பேச இன்னும் சரளமா வந்திடும். மத்தியானம் நாம நம்ம ராமகிருஷ்ணன் வீட்டுக்கு லஞ்சுக்கு போகணும். அவா வீடு இந்த காம்ப்புக்கு வெளியே இருக்கு நாம நம்ம பைக்ல போயிட்டு வந்திடலாம் அதுவரைக்கும் ரெஸ்ட் எடுத்துக்கோ. ஈவ்னிங் எங்க போகலாம் டெம்பிள் ஆர் பார்க்?”
“கோவில் போயிட்டு பார்க் போகலாம் டைம் இருந்தா“
“கோவில் 7:30 மணி வரைக்கும் திறந்திருக்கும் ஆனா பார்க் ஏழு மணி வரைதான் ஓப்பனா இருக்கும். “
“அப்போ இன்னைக்கு கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவோமா? கல்யாணமாகி மொதோ மொதோ இந்த ஊருக்கு வந்திருக்கேன் கோவிலேர்ந்தே ஆரம்பிக்கலாமேன்னுட்டு தான் சொன்னேன்… உங்களுக்கு பார்க் போகணுமா“
“இல்லை இல்லை உன் விருப்பம் எதுவோ அதுபடியே செய்வோம். இங்கேருந்து ஒரு பத்து நிமிஷத்துல ஒரு அம்மன் கோவில் இருக்கு. இன்னைக்கு அங்க போயிட்டு அப்படியே டின்னர் வெளியே சாப்பிட்டுட்டு வருவோம். நாளைக்கு காலைல சுவாமிநாராயண் கோவில் அக்ஷர்தாம்ன்னுட்டு இருக்கு. ரொம்ப அழகா இருக்கும், அதுக்கு கூட்டிண்டு போறேன்.“
“நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓகே ஈவ்னிங் அப்போ நீங்க சொன்னப்படியே செய்யலாம்.“
இருவரும் சற்று நேரம் படுத்துறங்கிறனர். பின் நண்பர் வீட்டில் மத்திய உணவருந்த கிளம்பினார்கள். நவீன் தனது பைக்கை துடைத்து சுத்தமாக வைத்திருந்தான் அதன் ஹான்ட்பாரில் “மிருது” என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததைப்பார்த்து …
“இது யாரு மிருது?” என்றாள் மிருதுளா
“ஓ அது என் லவ்வர் பெயர்.“
“ஓ உங்களுக்கு லவ்வர் எல்லாம் இருக்காளோ?”
“ஏன் இருக்கக்கூடாதோ!“
“இருக்கலாமே எனக்கு ஒரு “நவீ” இருப்பதுப்போல் உங்களுக்கு ஒரு மிருது இருந்துட்டுப்போட்டுமே”
என்று சிறு புன்னையுடன் மிருதுளா கூற, நவீனும் புன்னகைக்க…
“சரி வந்து பைக்ல ஏறு“
மிருதுளா ஏறி உட்கார சிரமப்படுவதைப்பார்த்த நவீன் …
“ஏன் இவ்வளவு கஷ்டப்படறாய் சும்மா ஏறி உட்கார்ந்துண்டு என்னை பிடிச்சுக்கோ” என்றான்
திருமணமான நாளிலிருந்து அன்றுதான் முதன் முதலாக இருவரும் சற்று ஃப்ரீயாக பேசத்தொடங்கினார்கள். மிருதுளா பைக்கில் ஏறி நவீனை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள், ஏனெனில் அன்றுதான் முதல் முறையாக பைக்கில் ஏறுகிறாள் என்பதால் சற்று பயத்துடனே பயணித்தாள். நண்பன் வீட்டில் விருந்துண்டு இருவருமாக வீட்டுக்கு வந்து சற்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் குளித்து ஆடைகளை மாற்றிக்கொண்டு கோவிலுக்கு பைக்கில் சென்றனர். அம்மனை தரிசனம் செய்துவிட்டு சற்று நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் பின் அங்கிருந்து நவீன் அவன் நண்பர்களுடன் எப்பொழுதும் வீக்என்டில் சாப்பிடும் ஒரு சிறிய டாபாவிற்கு அழைத்துச்சென்று…
“இதுதான் நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட ரெகுளரா சாப்பிடற டாபா. சாப்பாடு ரொம்ப சூப்பரா இருக்கும் அன்ட் இது ஷுத்த ஷாக்காஹாரி டாபா. ஊப்ஸ்…சுத்தமான சைவ ஹோட்டல்“
“எனக்கு புரிஞ்சுதே! என்னத்துக்கு டிரான்ஸிளேட் பண்ணினேங்கள்!“
“ஓ !!! உனக்கு ஹிந்தி தெரியும் என்பதை மறந்துட்டேன். சரி வா சாப்பிடலாம்“
நம்ம மிருதுளாவின் குஜராத்தில் முதல் நாள் இனிதே முடிந்தது. அவர்களும் சற்று நிம்மதியாக அவர்கள் நேரத்தை அவர்களுக்கானதாக்கிக்கொள்ளட்டும்.
தொடரும்….