அத்தியாயம் – 15: போராட்டத்தின் முடிவா!! துவக்கமா!!

மறுநாள் காலை விடிந்தது. மிருதுளா யாராவது வந்து கதவை தட்டி விட போகிறார்களோ என்ற பயத்தில் அலாரம் வைத்து ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கீழே போனாள்.  வாசல் கதவு சாத்தி இருந்தது. அனைவரும் உறங்குகிறார்கள்  அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி (இதுதான் மனிதாபிமானம்) பாத்ரூம் டாய்லெட் எல்லாமே வீட்டுக்கு வெளியே இருந்ததால் குளித்து ரெடியாகி துணிகளை காயவைக்க மாடிக்கு போய் துணிகளை கொடியில் காயவைத்துக்கொண்டிருக்கையில் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என பெல் ஒலித்தது. நவீன் சட்டென்று எழுந்தான்.

என்ன அது மறுபடியும் பெல் சத்தம்என கண்களை கசக்கிக்கொண்டே ரூமை விட்டு வெளியே வந்தவன் மிருதுளா துணிகளை கொடியில் போட்டுக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே கீழே சென்று…

என்ன ஒரு பெல் சவுன்டு அது ? நேத்தே கேட்கனும்னு நினைச்சேன் மிருது பேரன்ட்ஸ் இருந்ததால அப்படியே விட்டுட்டேன். இது என்ன புதுசா பெல்லு? யார் பண்ணின வேலை இது?”

ஆமாம் உன் பொண்டாட்டிய ஒவ்வொரு தடவையும் கீழேருந்து கத்தி கத்தி கூப்பிட முடியாது அதுவும் இல்லாம அவள எழுப்பிவிட நாங்க மேல ஏறி வந்து கதவெல்லாம் தட்ட முடியாது அதனால தான் இந்த பெல்லை ஃபிக்ஸ் பண்ணினோம் நேத்து. அப்படி பெல் அடிச்சும் உன் ஆத்துக்காரி எழுந்து வந்தாளா?”

ஏதாவது பேசனமேனுட்டு பேசாதே. அவ எழுந்து குளிச்சு துணியை எல்லாம் தோச்சு மாடில காய வச்சிண்டிருக்கா. அவ எப்பவோ எழுந்துண்டாச்சு. மொதல்ல அந்த பெல்லை கழட்டி எறிங்கோ. அதோட சத்தம் ஸோ இரிடேட்டிங். இந்த தெருவுல எல்லாரையும் எழுப்பிருக்கும் அதோட சத்தம்

என்று சொல்லிவிட்டு பல் துலக்க சென்றான் நவீன்‌. மிருதுளா கீழே வந்து துணி கொண்டுபோன பக்கெட்டை பாத்ரூமுல வச்சுட்டு அடுப்படிக்குள் காபி போட சென்றவளைப் பார்த்து பர்வதம்…

இன்னைக்கு என்ன அதிசயமா காலங்காத்தால எழுந்திரிச்சிருக்க? நாங்க யாரும் எழுப்பாமையே!!!!

மொதோ ரெண்டு மூணு நாள் கல்யாண அசதில தூங்கிட்டேன். கல்யாண டென்ஷன்ல ஒரு வாரமா சரியாவே தூங்கலை அப்பறம் இது புது இடம் அதனால தூக்கம் வர கொஞ்சம் லேட் அனதாலதான் காலையில எழுந்திருக்க கொஞ்சம் லேட்டாச்சு. இப்போ அசதி இல்லை, இடம் பழகிடுத்து அதனால நல்லா தூங்கி காலையே எழுந்துட்டேன்

உன் அம்மா காலைல வரேன்னு சொல்லிருக்கா அதுனால எழுந்துன்ட்டு அதை எவ்வளவு அழகா மாத்தி சொல்லற

நான் சொன்னதுதான் உண்மையான காரணம் மா. ஏன் எல்லாத்துக்கும் தப்பாவே திரிச்சு விடறேங்கள்!என பொறுமை இழந்து கேட்டாள் மிருதுளா.

ஆமான்டிமா நான் தான் எல்லாத்தையும் திரிச்சுண்டு இருக்கேன் நீயும் உன் அம்மாவும் அப்படியே ரொம்ப உத்தமிகள் தான் பாரு

என்ன என்ன வேணுபம்னாலும் சொல்லிக்கோங்கோ ஏன் என் அம்மாவை எல்லாம் இழுக்கறேங்கள்?”

ஓ…. என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ நான் அப்பிடி தான் இருப்பேன்ங்கறயோ….என்ன காலங்காத்தால என்னோட சண்டை போட தான் ஃப்ரெஷ் ஆ இருக்கயோ

மிருதுளா தன்னை தானே சற்று நிதானித்துக் கொண்டு பின்…

சாரி மா. எழுந்துண்டாலும் குத்தம் சொல்லறேள்…எழுந்திரிக்களேனாலும் குத்தம் சொல்லறேள் அப்போ நான் என்ன தான் செய்யட்டும் நீங்களே சொல்லுங்கோ

நீ என்னத்தையோ செய் போ!

மிருதுளா இரண்டு டம்ளரில் காபி போட்டுக்கொண்டு ஹாலில் இருந்த நவீனிடம் ஒன்றை கொடுத்து விட்டு தானும் அமர்ந்து காபியை அருந்தலானாள். இவ்வளவு பர்வதம் பேசியும் அந்த வீட்டு ஆண்கள் யாருமே அவளை அடக்கவில்லையே!!! நவீனும் ஏதோ ஒன்றுமே நடக்காதது போல காபியை குடித்துக்கொண்டிருக்கிறானே!!  என்ற ஆச்சர்யம் நம் அனைவருக்கும் எழுகிறது அல்லவா? ஆனால் சில வீடுகளில் உள்ள மருமகள்களின் நிலைமை இதுதான். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க  வீட்டுக்கு தன்னை நம்பி வந்த பெண்ணை காத்து அவளுக்கு சுவாத்தியமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது எல்லா கணவன்மார்களின் தலையாய கடமையாகும்.  பல கணவன்மார்கள் இதை செய்ய தவறுவதால் அந்த பெண் பல இன்னல்களுக்கு ஆள் ஆகிறாள்.  இங்கு நவீனும் அப்படிப்பட்ட ஆண்களில் விதிவிலக்கல்ல. 

காபியை குடித்த பின் மிருதுளா அடுப்படிக்குள் சென்று என்ன டிஃபன் செய்ய வேண்டும் என பர்வதத்திடம் கேட்டாள். அதற்கு பர்வதம் அவளே செய்துக்கொள்வதாக சொன்னதால் மிருதுளா நவீனை பேக்கிங் செய்ய மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

இருவருமாக அவர்களின் துணிமணிகளை பேக் செய்தனர். பின் சீர் சாமான்களிலிருந்து மிருதுளாவிற்கு தேவையான பாத்திரங்களை மட்டும் ஒரு அட்டைப்பெட்டியில் பேக் செய்து மற்ற எவர்சில்வர் பாத்திரங்கள், பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் தனிதனியாக அட்டைப்பெட்டியில் அடுக்கி பரண் மீது அடுக்கி வைத்துவிட்டு கீழே செல்லலாம் என்று கதவை சாத்தும்போது மறுபடியும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என ஒலித்தது பெல். 

இத மொதல்ல கழட்டி எறியனும். அடிக்காதே என சொல்லிட்டும் ஏன் இப்படி அந்த பெல்லை அடிக்கறாளோ

என அலுத்துக்கொண்டே கீழே சென்றனர் நவீனும், மிருதுளாவும். கீழே ஹாலில் மிருதுளாவின் அம்மா அம்புஜமும், தம்பி வேனுவும் வந்திருந்தனர். பர்வதம் அவர்களிடம்…

உங்க பொண்ணு எப்ப பார்த்தாலும் மாடில போய் உட்கார்ந்துக்கறா எங்களால கத்தி கத்தி கூப்பிட முடியாததால இந்த பெல் ஃப்க்ஸ் பண்ணிருக்கோம். இது உங்க பொண்ணுக்கு பிடிக்கலை போல அதுதான் நவீன்ட்ட சொல்லி நேத்து நீங்க வந்திருக்கும் போது கூட கத்திண்டே வந்தானே…நீங்களும் கேட்டேளே!

என குற்றப்பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தாள். நவீனும், மிருதுளாவும் அவர்களை வரவேற்றனர். அம்புஜம் இரண்டு அட்டைப்பெட்டிகளை பக்காவாக பேக் செய்து எடுத்து வந்திருந்தாள். மிருதுளாவிடம்…

மிருது இதுல மளிகை ஜாமான்கள் எல்லாம் ஒரு மாசத்துக்கு வேண்டியது இருக்கு. அதுல உனக்கு பிடித்த வத்தல் வடாம் எல்லாம் இருக்கு

அச்சசோ ஆல்ரெடி நாங்க ரெண்டு சூட்கேஸ் அன்ட் ஒரு பெரிய அட்டைப்பெடில பாத்திரங்கள் என மூணு லக்கேஜ் ஆயாச்சு இதுல இன்னும் ரெண்டு ஃபாக்ஸ் ஆ!!!என கேட்ட நவீனிடம்

என்ன நாமளா தூக்கிண்டு போகபோறோம் இங்கேருந்து பாதியை அப்பா அம்மா கார்ல எடுத்துண்டு வருவா நாம நம்ம சூட்கேஸை மட்டும் எடுத்துண்டு டிரெயின்ல போவோம்என்றாள் மிருதுளா. 

அம்மா நீ மாடியை பார்க்கவே இல்லையே வா காட்டறேன்

இல்ல மிருது பரவாயில்லை.

போங்கோ உங்க பொண்ணு கூப்பிடறாளோனோ போய் பார்த்துட்டுதான் வாங்கோளேன். உங்க பொண்ணுக்காக நாங்க கட்டின ரூமைஎன்றாள் பர்வதம்

மிருதுளாவும், அம்புஜமும், வேனுவும் மாடிக்குச்சென்றனர். ரூமைப்பார்த்ததும் வேனு..

என்ன மிருதுக்கா இந்த தமாதுண்டு ரூமுக்குள்ள வா நீயும் அதிம்ஸும் இருக்கேங்கள்!!! இட்ஸ் வெரி ஸ்மால் ஈவன் ஃபார் டூ ஆச்சே!!

டேய் வேனு மெதுவாடா அவா காதுல விழுந்திட போறது!

ஏம்மா இப்படி பயந்து சாகறாய். அவா என்ன உன்ன கடிச்சு திண்ண போறாளா என்ன?”

போடா உனக்கு இதெல்லாம் புரியாது. ஏண்டி மிருது நீ ஏன் அடிக்கடி மாடிக்கு வந்து உட்கார்ந்துக்கறாய்? கீழே அவளோட எல்லாம் பழகினா தானே உங்காத்து மனுஷால புரிஞ்சிப்ப அது படி நடந்துப்ப!

அம்மா நான் மாடிக்கு டிரெஸ் மாத்தவும், ராத்திரி தூங்கவும் மட்டும் தான் மேலே வருவேன். ஆனாலும் அவா ஏன் அப்படி சொன்னானு நீ அவாள்ட்ட தான் கேட்கனும்!

சரி சரி விடு. வாங்கோ கீழே போகலாம் இல்லாட்டி ஏதாவது சொல்லப்போறா. நாளைக்கு காலைல வரோம் மா. சரியா

கீழே வந்ததும்

ஓகே மாமி நாங்க கிளம்பறோம் நாழி ஆயிடுத்து. நாளைக்கு எல்லாருக்கும் மத்தியத்துக்கு சாப்பாடு நான் கட்டிண்டு வரட்டுமா?” என அம்புஜம் பர்வதத்திடம் கேட்க 

அதெல்லாம் என்னத்துக்கு போற வழியில் ஏதாவது கடைல சாப்பிட்டுக்கலாமேஎன்றாள் பர்வதம்

அப்போ சரி மாமி நாங்க நாளைக்கு கார்த்தால வந்திடறோம். மாமாட்டயும் சொல்லிடுங்கோ

என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றனர் அம்புஜமும், வேனுவும். 

அவர்களை வழி அனுப்பிவிட்டு டிஃபன் சாப்பிட அடுப்படிக்குள் சென்றாள் மிருதுளா. அங்கு இரண்டே ரெண்டு இட்டிலி தான் மீதம் இருந்தது. நவீனிடம்..

நீங்க டிஃபன் சாப்பிடறேளா? கொண்டு வரட்டுமா?” 

நான் சாப்ட்டாச்சு நீ சாப்பிடு இப்பவே ரொம்ப லேட் ஆச்சு

அனைவரும் சாப்பிட்டு விட்டு மிதமிருந்ததுதான் அந்த இரண்டு இட்டிலி அதை தட்டில் போட்டுக்கொண்டு சட்னி பாத்திரத்தை தேடினாள் அது காலியாகி அலம்ப போடப்பட்டிருந்தது. சரி இட்டிலி பொடியாவது இருக்குமே என டப்பாக்களை திறந்து பார்த்தாள். இதை அனைத்தையும் கவணித்துக்கொண்டிருந்த பர்வதம் மெல்ல அடுப்படிக்குள் வந்து

நீ ரெண்டு தானே அன்னைக்கு சாப்பிட்ட அதனால்தான் அடுப்பை நிப்பாட்டிட்டேன். என்னத்த தேடிண்டிருக்க?”

இட்டிலி பொடியை தேடறேன்

அது திந்து போய் நாலு நாள் ஆச்சு. இப்போ தேடினா!!

அப்போ இட்டிலிக்கு எதை தொட்டுண்டு சாப்பிடுவேன்?”

இன்னைக்கு ஒரு நாள் தயிர் தொட்டுக்கோ

எனக்கு தயிர் மோர் பிடிக்காதே

அப்போ சக்கரையை தொட்டுக்கோ

என்னடா இது சோதனை என்றெண்ணி சக்கரையை தொட்டுக்கொண்டு ஒரு இட்டிலியை மட்டும் சாப்பிட்டுவிட்டு ஹாலில் சென்று அமர்ந்தாள். பீன்ஸை கொண்டு வந்து மிருதுளாவிடம் கொடுத்து பொறியலுக்கு நறுக்கி வைக்க ச் சொன்னாள் பர்வதம். மிருதுளாவும் அவள் அம்மா நறுக்குவது போலவே பொடி பொடியாக நறுக்கி கொடுத்தாள். அதை பார்த்த பர்வதம்…

என்னதிது இப்படி வெட்டினேனா இரண்டு கிலோ பீன்ஸ் வேணும் நம்மாத்துக்கு…போ இந்த காரெட்டையும் நறுக்கு…கொஞ்சம் பெரிசாவே நறுக்கு. இவ்வளோ பொடியா நறுக்கிடாதே

காரெட்டை நறுக்கி கொடுத்துவிட்டு காய்ந்த துணிகளை எடுக்க மாடிக்கு சென்று எடுத்து அவள் துணிகளை மடித்து மாடி ரூமிலே வைத்துவிட்டு, மற்ற அனைவரின் துணிகளையும் மடித்து கீழே எடுத்து வந்து கட்டிலின் மேல் வைத்தாள்.

அன்று மாலை அனைவரும் ஒன்றாக ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது. நவீன்..

மிருது நம்ம கல்யாண பட்சணங்கள் எடுத்துண்டு போகனும். என் ஃப்ரெண்ட்ஸ் கேப்பா. ஒரு பத்து பாக்கெட் எடுத்துக்கோ போஎன சொன்னதும் மிருதுளா உள் ரூமுக்குள் சென்று பார்த்தாள் அங்கு அந்த அட்டப்பெட்டியை காணவில்லை. வெளியே வந்து பர்வதத்திடம் கேட்டாள் அதற்கு பரவதம்…

அதுவா அதெல்லாம் கெட்டுப்போச்சு குப்பைல தூக்கிப்போட்டுட்டேன்

அது எப்படி கெட்டு போகும் ஒரு மாசத்துக்கு நல்லா இருக்கும்னு கேட்டரிங் காரா சொன்னாளே

ஒரே சிக்கு வாடை அது தான் தூக்கிப்போட்டுடேன்

அவ்வளவையுமா!!! அக்கம் பக்கத்தில் குடுத்தயா இல்லையாஎன நவீன் கேட்க

கெட்டத எப்படி கொடுப்பேன் அதனால யாருக்கும் குடுக்கலை

என்ன சொல்லறேங்கள் மா அவ்வளவு பட்சணமுமா கெட்டு போயிடுத்து

என்ன இது ஏதோ நான் பொய் சொல்லறா மாதிரி கேட்கிற?”

என கூறிக்கொண்டே வெளியே பக்கத்துவீட்டு சிநேகிதிகளுடன் அரட்டை அடிக்கச்சென்றாள் பர்வதம்

சரி நோ ப்ராப்ளம் நவீன். உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் ஒரு நாள் லஞ்ச்சுக்கு நம்ம ஆத்துக்கு கூப்பிடுவோம். நான் சமைக்கறேன். என்ன சொல்லறேங்கள்

ஓகே மிருது உன்னால அத்தனை பேருக்கும் சமைக்க முடியுமா?”

நான் இதுவரை சமைத்ததில்லை பட் நிச்சயமா டிரை பண்ணறேன் நவீன்“.

இப்படி ஊருக்கெல்லாம் சமைச்சு அவன் காச கறைக்க வா அவனோட போற?” என்றார் ஈஸ்வரன்

சற்று அமைதி நிலவியது. வெளியே இருந்து பர்வதம் மிருதுளாவை வரச்சொல்லி கூப்பிட்டாள். மிருதுளாவும் சென்றாள். அங்கிருந்த அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்கள் மிருதுளாவைப் பார்த்து..

ஏன் மா மிருதுளா கல்யாணமாகி வந்து பத்து நாள் ஆக போறது ..நவீன் கூட வெளியே போற வர மத்தப்படி உன்ன ஆளயே வெளில காணமே..என்னதான் பண்ணர வீட்டுக்குள்ளே?” 

எனக்கு வெளில வந்து இப்படி நின்னுண்டு பேசி எல்லாம் பழக்கம் இல்லை. சாரி அதுனாலதான் வரலை

இதுக்கு ஏன்மா சாரி எல்லாம் சொல்லுற!! நீ உங்க மாமியார் பர்வதத்துக்கு நேர் எதிரா இருக்கமா. உன் மாமியார் எப்பப்பாரு வெளில யார் வீட்டுக்குள்ளயாவது உட்கார்ந்து பேசிகிட்டே இருப்பாங்க. என்ன பர்வதம் உங்களுக்கும் உங்க மாட்டுப்பொண்ணுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது போல தெரியுதே!” 

என பர்வதம் நினைத்தபடி இல்லாமல் அவளுக்கு எதிராக அவள் செயல் திரும்ப உடனே ..

ஏய் மிருதுளா போய் குக்கர்ல சாதம் வை போ. இதோ நானும் வரேன்.

என்று கூறி மிருதுளாவை வீட்டுக்குள்ளே அனுப்பினாள் பர்வதம். உள்ளே நுழைந்த மிருதுளா கண்ட காட்சி அவளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தது. நவீன் தன் தந்தையிடம்…

நாளைக்கு ஊருக்கு கிளம்பனும் அதற்கு பணம் வேணும்என்று கேட்டுக்கொண்டிருந்தான். அதற்கு ஈஸ்வரன் ஒரு கட்டு பணத்திலிருந்து மூவாயிரம் எடுத்து நவீனிடம் கொடுத்து …

அடுத்த மாசமே திருப்பி அனுப்பிடனும் என்ன சரியா!!என்று கூறி கொடுத்தைக்கண்டாள். 

சம்பாதிக்கும் என் கணவன் ஏன் சம்பாதிக்காத தந்தையிடமிருந்து பணம் கேட்டு வாங்க வேண்டும். சிறு வயது முதல் குடும்பத்தை காப்பாத்தி வந்திருக்கும் நவீன் ஏன் காசுக்காக அவர் தந்தையிடம் நிற்கிறார்!!!என பல எண்ணங்கள் அவள் மனதில் அந்த காட்சியை கண்ட சில மணி துளிகளில் உதித்தது. அவள் வருவதைக்கண்ட ஈஸ்வரன் ..

சரி சரி இப்போ போய் உன் வேலைகளை பாருஎன நவீனிடம் கூற நவீனும் அந்த ரூமிலிருந்து வெளியே சென்றான். 

பொறுப்பில்லாத குடிகார தந்தையாக இருந்த ஈஸ்வரனிடம் கட்டாக பணம்… பதினாறு வயதிலிருந்து உழைத்து குடும்ப பொறுப்புகளை ஏற்றக்கொண்டிருக்கும் மகன் கையில் பணமில்லை. புது மனைவியுடன் ஊருக்குச் செல்ல கூட பணமில்லாதது ஏன்? சம்பாதித்த பணமெல்லாம் என்ன ஆனது? இதற்கான விடை நவீனிடம் தான் உள்ளது. இதை அவனிடம் கேட்டு தெரிந்துக்கொள்கிறாளா மிருதுளா

பர்வதத்துடன் இருந்து வந்த போராட்டத்தின் கடைசி நாள் இதுவாக இருந்தால் நல்லது ஆனால் அடுத்த போராட்டம் நவீனுடன் துவங்கப்போகிறதா? என்பது பற்றி வரும் வெள்ளிக்கிழமை தெரிந்துக்கொள்வோம். 

தொடரும்…..

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s