அத்தியாயம் – 14: விருந்து எச்சரிக்கை மருந்து.

 

நவீன், மிருதுளா, பவின் மூவரும் வருவதைப்பார்த்த பெரியப்பா ராசாமணி…

வாங்கோ, வாங்கோ புது மாப்பிள்ளை அன்ட் புது பொண்ணு

நமஸ்காரம் பெரியப்பா. எப்படி இருக்கேங்கள்?”

நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் மா. நீ எப்படி இருக்க உன் புக்காம் எல்லாம் எப்படி இருக்கா?”

நான் நல்லா இருக்கேன் புக்காமும் நன்னா இருக்கு

உங்க நிச்சயதார்த்தம் இங்க தானே நடந்தது. ஞாபகம் இருக்கோனோ

ஓ நல்லா ஞாபகம் இருக்கு. அதுக்குள்ள மறந்திடுவேனா பெரியம்மா

சற்று நேரம் பொது விஷயங்கள் எல்லாம் பேசி முடித்தப் பின் அனைவரும் ஒன்றாக  அமர்ந்து உணவருந்தினார்கள். மிருதுளா  அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் இலைகளை எடுத்து ஒரு குப்பைக் கவரில் போட்டுவிட்டு, பாத்திரங்களை எல்லாம் அடுப்படிக்குள்ளே கொண்டு வைத்து சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரனின் மூத்த அக்கா சொர்ணம் தன் மகள் துளசியை பார்த்துக்கொண்டே மிருதுளாவிடம்…

ஏன் மா மிருது உன் மாமியார் என்ன மாமியார்தனத்தை ஆரம்பிச்சுட்டாளா? ஆரம்பிச்சுருப்பா ஆரம்பிச்சுருப்பா !!! அவளாவது சும்மா இருப்பதாவது?”

அப்படி எல்லாம் ஒன்னுமில்லை சொர்ணம் அத்தை. என்னை நல்லா தான் பார்த்துக்கறா

நம்பிட்டேன் மா அப்படியே நம்பிட்டேன். பர்வதத்துக்கு போய் இப்படி ஒரு நல்ல மாட்டுப்பொண்ணு வந்திருக்கா பாரேன் துளசி.

அம்மா சித்த சும்மாதான் இரேன்…மா..நீ ஒன்னும் நினைச்சுக்காத மிருது அம்மா எப்பவும் இப்படி தான்

சொர்ணம் தன் மகள் துளசியை தனது தம்பி ராசாமணிக்கே திருமணம் செய்து கொடுத்து அவர்களுடனே இருக்கிறார்.

ஏய் மிருது உன் மாமியார் எங்க ஈஸ்வரனை கல்யாணம் பண்ணின்டு வந்த அடுத்த நாளே கால் மேல கால போட்டுண்டு அவளுக்கு பியர்ஸ் சோப்பு இருந்தா தான் குளிப்பேனுட்டா.!! அப்பறம் ராசாமணி கடைக்கு போய் வாங்கிண்டு வந்து கொடுக்கற வரைக்கும் குளிக்காம உட்கார்ந்துண்டு நுயூஸ் பேப்பர் வாசிச்சா…வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சலம் வேணுமாம். கல்யாணத்துக்கு முன்னாடி அவா குடும்பம் எவ்வளோ கஷ்டம் பட்டுண்டிருந்ததுனு எல்லாம் எங்களுக்கு நன்னா தெரியும்ங்கறது அவளுக்கும் தெரியும் ஆனாலும் இங்க வந்து வெட்டி பந்தா. எங்க அம்மாவ அவ எப்படி எல்லாம் கொடுமை படுத்திருக்கா தெரியுமா?? அவ நல்லாவே இருக்க மாட்டா…புள்ளகளை பெத்து பெத்து கொண்டு வந்து எங்க அம்மாட்ட விட்டு புருனை கூட்டிண்டு போயிடுவள். நவீன் ஆஞ்சு வயசு வரைக்கும் எங்க அம்மாட்ட தான் வளர்ந்தான். அதுவரை புள்ள எப்படி இருக்கான் என்ன பண்ணறான் என எந்த அக்கறையும் இல்லாதவள் நவீன் அவன் வேலைகளை அவனே செய்து கொள்ள ஆரம்பிச்சதும் வந்து கூட்டிண்டு போயிட்டா…அவள் ஆடிய ஆட்டமெல்லாம் ஒன்னா ரெண்டா ….அடே அப்பா…அவளும் அவ நடையும்… வந்துடுவள் ஆட்டி ஆட்டிண்டு.

அம்மா ஏன் மா !!! கொஞ்சம் சும்மா இரு மா. மிருது நீ வா நாம ஹாலுக்கு போயிடலாம். இங்க இருந்தா எங்க அம்மா உன் மாமியாரை பத்தி பொலம்பிண்டே தான் இருப்பா

ஏண்டி அவள கூட்டிண்டு போற!!! நான் என்ன இல்லாததயா சொல்லிட்டேன். நடந்ததை தானே சொன்னேன். இப்படியே எல்லாரும் அவ அப்படி தான் அப்படி தான் சொல்லி சொல்லி அவளை இன்னும் நல்லா ஆட விடுங்கோடி ஆட விடுங்கோ….எனக்கென்ன வந்தது. மிருது ஜாக்கிரதையா இருந்துக்கோமா!!!

மிருதுளாவிற்கு மனதில் ஒரு கலக்கம் வந்ததுஎன்னடா இது!!! மாமா வீட்டிலும் மாமியாரை குற்றம் கூறினார்கள் ஜாக்கிரதையா இருந்துக்கோனு சொன்னா. இப்போ சொர்ணம் அத்தை என்னனமோ சொல்லறா!!! இவாளும் ஜாக்கிறதையா இருந்துக்கோங்கறா !!! நம்ம மாமியார் என்ன புலியா!! சிங்கமா? நான் ஜாக்கிரதையா இருந்துக்க!!! அப்படி என்ன என் மாமியார் அவ்வளவு கெட்டவளா என்ன? ஏதோ பொஸஸிவ்னஸ்னு நான் நினைச்சா இவா இப்படி சொல்லறாளே !!! நவீனை பெத்து அவா மாமியார்ட்ட விட்டுட்டு அஞ்சு வயசு வரைக்கும் எட்டிப் பார்க்காத ஒரு அம்மாவுக்கு எங்கேருந்து இருக்க போறது பொஸஸிவ்னஸ்? இதுல என்னமோ இருக்கு. எங்கயோ இடிக்கறதே…. பொறுத்திருந்து தான் தெரிஞ்சுக்கனும்

என்ன மிருதுளா ஏதோ யோசனையில் இருக்க? எங்காத்து சாப்பாடு பிடிச்சிருந்துதா?”

ஓ! நல்லா இருந்தது பெரியப்பா. சூப்பரா சமைச்சிருந்தா பெரியம்மா.

சரி பெரியப்பா நாங்க கிளம்பறோம்.

என்னடா நவீன் அதுக்குள்ள!! இரு காபி குடிச்சிட்டு வெயில் தாழ போனா போரும்

சாரி பெரியப்பா. நாளன்னைக்கு ஊருக்கு கிளம்பனும் அதனால வேலை நிறைய இருக்கு. அடுத்த தடவை வரும்போது நிச்சயம் இருந்துட்டு போறோம்

அப்படியா சரி. நீயும் உன் வேலையை பார்க்கணுமே. ஓகே நீங்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்.

வராம இருப்போமா பெரியப்பா!!

என்று கூறி பெரியப்பா பெரியம்மா இருவரையும் நமஸ்காரம் செய்து ஆசிர்வாதத்துடன் புடவை, வேஷ்டி, பூ, பழம், வெற்றிலை பாக்கு வைத்த தாம்பாளத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள் மூவரும். பஸ்ஸில் ஏறி வீடு வந்து சேரும் போது மணி ஆறானது. வழக்கம் போல் நவீன் டிரெஸ் மாற்ற நேராக மாடிக்குச் சென்றான் மிருதுளா ஹலுக்கு போய் நடந்தவற்றை கூற முயலும்போது பர்வதம் பவினிடம் 

நீ சொல்லுடா அங்க எல்லாரும் எப்படி இருக்கா? என்ன சொன்னா? உங்க பெரியம்மா என்ன சமச்சிருந்தா?”

என்று கேட்க மிருதுளா சட்டென்று எழுந்து மாடிக்கு சென்றுவிட்டாள்.  போன தடதை மாமா வீட்டில் நடந்ததை சரியாக நவீனும் மிருதுளாவும்  சொல்லவில்லை என்ற எண்ணத்தில் இம்முறை விவரமாக தெரிந்து கொள்ளவே பவீனை கூட அனுப்பிஉங்களிடமிருந்து எங்களுக்கு எதுவும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லைஎன்பது போல நடந்துக்கொண்டார்கள் பர்வதமும், ஈஸ்வரனும். அதனால் மனம் வருத்தப்பட்டு சென்றாள் மிருதுளா.

நவீன் டிரெஸ் மாற்றிவிட்டு சற்று அங்கேயே கட்டிலில் படுத்திருந்தான். மிருதுளா ரூமுக்குள் நுழைந்ததும்….

ஹேய் மிருது எனக்கென்னவோ ரொம்ப டையர்டாயிருக்கு…உனக்கும் தான் அப்படி இருக்கும் ஒரு காபி போட்டு குடிப்போமா!!!

போட்டு தாங்கோளேன் நான் குடிக்க ரெடி

பார்தயா….ப்ளீஸ் ஈவ்னிங் காபி குடிகலையோனோ அதுதான் லைட்டா தலைவலிக்கறா மாதிரி இருக்கு

அச்சசோ.!! இருங்கோ அமிர்தான்ஜன் தடவி தரேன் அப்பறம் போய் காபி போட்டுண்டு வரேன்

என்று சொல்லிக்கொண்டே நவீன் நெற்றியில் அமினர்தான்ஜனை தடவி நன்றாக அழுத்தி கொடுத்தாள்.

ஆஹா என்ன சுகமா இருக்கு தெரியுமா மிருது!!

ஏன் இதுவரைக்கும் யாரும் உங்களுக்கு இப்படி தலைவலிக்கும் போது செய்து தந்ததில்லையா?”

இல்லவே இல்லை இது தான் முதல் தடவை. எனக்கு நெற்றியில் தைலம் தடவி நீவி விட்ட முதல் ஆள் நீ தான்.

ஏன் உங்க அம்மா அப்பா யாருமே செய்ததில்லையா?”

ஆமாம்… நல்லா கேட்ட போ… ஒரு தடவ நான் கிரிக்கெட் ஆடி கால்ல நல்லா அடிபட்டு நானே ஆஸ்பத்திரி போய் கட்டெல்லாம் போட்டுண்டு வீட்டுக்கு வந்தேன் அத பார்த்துக்கூட என்ன ஆச்சு ஏதாச்சுனுட்டு வீட்ல யாருமே கேக்கலை அவாளா தைலம் தடவி விடப்போறா.

அப்பிடியா!!!! ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு நீங்க சொல்லறதை கேட்க. எனக்கு தலைவலினாலும் சரி என் தம்பி வேனுவுக்கு தலைவலினாலும் சரி எங்க அம்மா தைலம் தடவி ஐஸ்வாட்டர் ஒத்தடம் கொடுப்பா

யூ கைஸ் ஆர் லக்கி” 

இப்படி பேசிக்கொண்டிருக்கலயில் திடீரென அவர்கள் ரூமில்….

டர்ர்ர்ரர்ர்ர்ர்ரர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர…என ஒரு பெல் பயங்கர சப்தத்தில் ஒலித்தது. அதை கேட்டது நவீனும் மிருதுளாவும் கட கட வென கதவை திறந்து கீழே போனார்கள்…நவீன் படிகளில் இறங்கி சத்தமாக…

என்ன பெல் சத்தம் அது எங்க ரூம்ல? யார் பிக்ஸ் பண்ணினது அன்ட் யார் அடிச்சது?”

என கோபத்தோடு கேட்டுக்கொண்டே ஹாலுக்குள் நுழைய அங்கு மிருதுளாவின் பெற்றோரும் அவள் தம்பி வேனுவும் அமர்ந்திருந்தைப்பார்த்ததும் ..

வாங்கோ வாங்கோ எப்படி இருக்கேங்கள்? ஹேய் வேனு எப்படிடா இருக்க?” என்றான் நவீன்

நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை நீங்க நல்லா இருக்கேங்களா?” என கேட்டார் ராமானுஜம்

ஓ எஸ் நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம்

அம்மா !!அப்பா !!! டேய் வேனு எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? ” 

ஹேய் மிருது நீ எப்படி மா இருக்க? எங்களை எல்லாம் மறந்துட்ட போல தெரியறதே!!!என அம்புஜம் கேட்க

அச்சோ அம்மா அப்படி எல்லாம் மறந்திடுவேனாமா…இப்போ கூட உங்களை பத்தி தான் நாங்க ரெண்டு பேரும் பேசிண்டிருந்தோம். நீங்களே வந்துட்டேங்கள்

ஆமாம் ஆமாம் கல்யாணமாகியும் இன்னமும் உங்க மிருதுளா உங்க நினைப்பில் தான் இருக்கா எங்களை எல்லாம் எங்க நினைக்கறா இந்தாங்கோ காபி எடுத்துக்கோங்கோஎன சலித்துக் கொண்டே காபியை நீட்டினாள் பர்வதம் சற்று நேரம் அமைதி நிலவியது …பின் வேனு தரையில் அமர்ந்திருந்த மிருதுளா மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டே…

மிருதுக்கா நீ இல்லாம வீடே டல்லா இருக்கு. எனக்கும் சண்ட போட ஆளில்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்கு” 

இருக்கும் டா இருக்கும். நல்லா வேணும் உனக்கு.என கூறிக்கொண்டே தம்பியின் தலைமுடியை கோதிவிட்டாள். 

உங்க அக்கா நல்லா சண்ட போடுவாளா!என நக்கலாக பர்வதம் கேட்க

ஆமாம் மாமி நாங்க ரெண்டு பேரும் அடிச்சுக்குவோம்.ஹா ஹாஹா!! என்ன அக்காஎன வெகுளித்தனமாக வேனு பதிலளிக்க

ஓ அப்படியா!!! சரி என்ன கல்யாணமான உங்க அக்காள் மடில இப்படி தலை வச்சுண்டு படுத்திருக்க எழுந்திரிஎன்று பர்வதம் அதட்ட

மாமி மிருதுக்காவுக்கு கல்யாணமானாலும் எனக்கு அக்கா தானே அவ மடில படுத்தா என்ன தப்பு?”

இதை இப்படியே விட்டா இதுவே பிரச்சினை ஆகிவிடும் என உணர்ந்து மிருது சட்டென 

சரி டா எனக்கும் கால் கடுக்கறது கொஞ்சம் எழுந்து சேர்ல உட்காரு வேனு ப்ளீஸ்என்று கூறி வேனுவை எழுப்பி விட்டாள் மிருதுளா. வேனுவும் சேரில் அமர்ந்தான். பின் அம்புஜம் ..

நாளன்னைக்கு ஊருக்கு கிளம்பறேளோனோ அதுக்கு யாரெல்லாம் சென்னை வரைக்கும் போறோம்? என்ன ஏதுனுட்டு விசாரிச்சுட்டு போகலாமேனு வந்துருக்கோம்

என்னத்துக்கு எல்லாருமா வரனும்? எனக்கும் மிருதுவுக்கும் இங்கெருந்து சென்னை அப்பறம் அங்கேருந்து குஜராத்துக்கு டிரெயின் புக்  பண்ணிருக்கேனே. நாங்களே போயிக்கறோம்

அதுக்கில்லை எங்க பொண்ணு மொதோ மொதோ வெளியூருக்கு கல்யாணமாகி போறா நாங்க வந்து வழியனுப்பனும்னு ஒரு ஆசை அது தான் கார் ஏற்பாடு பண்ணிருக்கோம் வேனுக்கு காலேஜ் இருக்கு ஸோ அவன் வரமாட்டான் நீங்க ரெண்டு பேரும் பேசாம டிரெயின் டிக்கெட் கேன்ஸல் பண்ணிட்டு எங்களோட கார்லயே வரளாமே என்ன சொல்லறேங்கள்?” என்றார் ராமானுஜம்

அதுவும் சரிதான் ஆனா இப்போ கேன்ஸல் பண்ணினா காசு நிறைய போகுமேனு யோசிக்கிறேன்என்று நவீன் சொன்னதும்

பர்வதமும் ஈஸ்வரனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பர்வதம் ஏதோ கண்ணால் சொல்ல உடனே ஈஸ்வரன்…

அதனால என்ன இப்போ நீயும் மிருதுளாவும் டிரெயின்ல வாங்கோ நாங்க எல்லாரும் மாமா மாமி கூட கார்ல வரோம். அப்படியே உன் பெரியப்பா பொண்ணு ஆத்துக்கு போயிட்டு ஃப்ரெஷ் ஆகிண்டு பின்ன டிரெயின் ஏறுங்கோ. என்ன மாமா நான் சொல்லறது. நாங்க நாலு பேரு நீங்க மாமி நம்ம ஆறு பேரும் ஒரே கார்ல போகலாமோனோ?”

போகலாம்…என தயங்கினார் ராமானுஜம். 

என்ன போகலாம்னு இழுக்கறேங்கள். போகலாம்னு சொல்லுங்கோஎன்றார் ஈஸ்வரன்

சரி மாமா அப்படியே ஆகட்டும்

மிருதுளா நாளைக்கு சில சாமான்கள் எல்லாம் எடுத்துண்டு வரேன் அதையும் சேர்த்து பேக் பண்ணிடு. மாமி அங்குமணி சீர் இருக்கோனோ அதை அப்படியே இவாள்ட்ட கொடுத்தனுப்பிடலாம். ரெண்டு பேரும் போனதும் மளிகை எல்லாமா வாங்கண்டாமோனோ. மிருது அதையும் ஒரு ஃபாக்ஸ் ல போட்டு பேக் பண்ணிடு.என்று அம்புஜம் படபட என அடுக்க குறிக்கிட்டாள் பர்வதம்…

மாமி அங்கு மணி சீர் மாப்பிள்ளை ஆத்துக்கு அதெல்லாம் எப்போவோ தீர்ந்தாச்சு. உங்க பொண்ணுக்கு நீங்க வேணும்னா மறுபடியும் வாங்கி குடுத்து அனுப்புங்கோ” 

என்னது கல்யாணம் ஆகி பத்து நாள் தானே ஆக போறது !!!! அங்கு மணி சீர் ஒரு மாச ஜாமான்களாச்சே!!!! அதுக்குள்ளேயே தீர்ந்துடுத்தா என்ன?” 

என ராமானுஜம் கேட்க 

இதுவே பெரிய பிரச்சினை ஆகிடுமோ என எண்ணி மிருதுளா 

இப்போ அதுனால என்ன நாங்க அங்க போய் வாங்கிக்கறோமே அது தான் மாசத்துக்கு என்னென்ன வேணும்ன்னு லிஸ்ட் போட்டு குடுத்திருக்கேங்களே அத வெச்சு வாங்கிக்கறோம்.” 

சரி அப்போ நாங்க இப்போ கிளம்பறோம் நாளன்னைக்கு கார்த்தால காரோட வரோம் ரெடியா இருங்கோ.போயிட்டு வரோம் மாமா மாமி. மாப்பிள்ளை நாங்க வரோம் மிருது வரட்டுமா!!என அனைவரிடமும் கூறினாள் அம்புஜம்..

அம்மா நீ நாளைக்கு பேக்கிங்க்கு ஹெல்ப் பண்ண வரயா? “

ஓ வரேனே நான் தான் சில பொருளெல்லாம் தரனும்னு சொன்னேனே அதனால நிச்சயம் வருவேன் அப்போ ஹெல்ப் பண்ணறேன். சரியா வரேன். குட் நைட்.

அத்திம்பேர் அன்ட் மிருதுக்கா பை. மாமா, மாமி, கவின் அண்ணா, ப்ரவீன், பவின் எல்லாருக்கும் பை‌. குட் நைட்

என விடைப்பெற்றனர் மிருதுளாவின் குடும்பத்தினர். 

நவீன் வீட்டார் அனைவரும் இரவு உணவருந்திய பின் அவரவர் உறங்கச்சென்றனர். மிருதுளாவும் எல்லா வேலைகளும் முடித்து விட்டு மாடிக்குச் சென்று உறங்கினாள். 

மிருதுளா வீட்டார் வந்து போனதில் அந்த பெல்லின் பிரச்சனை அப்படியே அமுங்கி போனது. அந்த பிரச்சினை மீண்டும் வெடிக்குமா என்பதை பொறுத்திருந்து விடிந்ததும் தெரிந்துக்கொள்ளலாம். அதுவரை பொறுத்திருக்கவும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி🙏

தொடரும்…….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s