அடுப்படிக்குள் சென்ற மிருதுளாவை பார்த்து பர்வதம்
“நான் இட்டிலிக்கு மாவு அரைக்க போரேன் அதனால நீ தான் டிஃபன் பண்ணனும் சரியா“
“ஓகே அம்மா என்ன பண்ணட்டும்?”
“எதையாவது பண்ணு. உனக்கு மாவு ஆட்ட தெரிஞ்சிருந்தா உன்ன செய்ய சொல்லிட்டு நான் டிஃபன் பண்ணிருப்பேன்… உனக்கு தான் தெரியாதுன்னுட்டயே…நேத்தே… பின்ன நீ தான் பண்ணனும்“
“கிரைண்டர்ல அரிசியை போடனும் தானே அத நான் போடறேனே…எப்போ எடுக்கனும்னு சொல்லுங்கோ எடுக்கறேன்“
“ஏன் வேற டிஃபன் ஏதும் உனக்கு பண்ண தெரியாதோ??”
“இல்லை மா நான் ரெண்டும் பண்ணறேனே. நீங்க மாவு அரைக்க மட்டும் சொல்லித்தாங்கோ“
“உனக்கு கிளாஸ் எடுக்க எல்லாம் இப்போ எனக்கு டைம் இல்லை. நீ போய் டிஃபனையாவது பண்ணறியா?”
“ஓ அதுக்கு தான் இந்த காய் எல்லாம் கட் பண்ணிண்டே உங்கள்ட்ட கேட்டுண்டும் இருக்கேன்“
“என்னத்துக்கு இப்போ காரட், பீன்ஸ், தக்காளி, பட்டாணி எல்லாம் எடுத்திருக்காய்? என்னவாக்கும் பண்ண போறாய்? தேங்கா வேற துருவி வச்சிருக்க!!! இதெல்லாம் செய்துண்டே தானா என்னாண்ட பேசின!!!“
“ஆமாம் மா ரவா, சேமியா போட்டு கிச்சடியும் தேங்காய் சட்னியும் பண்ணிண்டிருக்கேன்“
“அச்சசோ உப்புமா பண்ணறியா!!! அப்பாக்கு பிடிக்கவே பிடிக்காதே!!!“
“இல்லை இது உப்புமா இல்லை நல்லா இருக்கும். நான் செய்து தரேன் சாப்பிட்டுட்டு சொல்லுங்கோ“
“இன்னிக்கு எல்லாரும் பட்டினியா? உப்புமாக்கு என்னத்துக்கு பாசிபருப்பு வேக வச்சிருக்காய்?”
“அம்மா நான் தான் சொன்னேனோல்யோ இது உப்புமாவுக்கு ஒரு படி மேலே உள்ள டிஷ் நல்லா இருக்கும். எனக்கு கொஞ்சம் டைம் குடுங்கோ. இந்த காய்கள் அன்ட் வேக வைத்த பாசிப்பருப்பு எல்லாத்தையும் போட்டுதான் இத பண்ணுவா. இன்னும் பத்தே நிமிஷத்துல ரெடி ஆகிடும்.“
என்று பர்வதம் என்ன பேச்சுக்குடுத்தாலும் மிருதுளா தனது காரியத்தில் கண்ணாக இருந்து வேலைகளை எல்லாம் செய்து முடித்து அடுப்பு மற்றும் அடுப்பு மேடையை சுத்தம் செய்து, கிச்சடியையும் தேங்காய் சட்னியையும் ஹாலில் கொண்டு வைத்து அனைவரையும் சாப்பிட அழைத்தாள். ஈஸ்வரன் உள்ரூமிலிருந்து …
“பர்வதம் என்ன பண்ணிருக்காய் வாசம் தூக்கறதே“
“அப்பா இன்னைக்கு டிஃபன் நான் பண்ணிருக்கேன்”
வேகமாக சொன்னாள் மிருதுளா ஏனெனில் காலை காபி போற்றுதல்களை மாமியாருக்கு விட்டுக்கொத்தாகிவிட்டது😉 ஆகையால் டிஃபனை தான் ஏற்றுக்கொள்ள முடிவெடுத்து அவ்வாறு முந்திக்கொண்டாள்😁. பொறுக்குமா பர்வதத்துக்கு…
“ஏதோ கிச்சடியாம் அதுதான் இன்னைக்கு உங்களுக்கு எல்லாம் டிஃபன்…சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ”
என்று நக்கலாக சொன்னாள்.
அனைவரும் டிஃபன் சாப்பிட அமர்ந்ததும் சட்டி மூடியிருந்த தட்டை எடுத்தாள் மிருதுளா. சட்டியில் இருந்த கிச்சடியைப்பார்த்து …
“என்னத்துக்கு இவ்வளவு பண்ணிருக்க? இந்த தெருவுக்கே டிஃபன் நம்ம ஆத்துலதானா? அதுவும் உப்புமா!!!“
எடுத்துக்கொடுத்ததும் ஈஸ்வரன் கப்பென்று பிடித்துக்கொண்டு…
“என்னது உப்புமாவா!!!! எனக்கு பிடிக்காதே!!!“
“அப்பா இது உப்புமா இல்ல கிச்சடினு சொல்லுவா. இதை சட்னியோட சாப்பிட்டா நல்லாருக்கும். ப்ளீஸ் சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கோ.“
விடுவாளா நம்ம மா…மாமியார்…
“ரவை சேமியா போட்டுட்டு பெயரை மட்டும் மாத்திட்டா உப்புமா இல்லைனு ஆயிடுமா“
இட்டிலி தோசைக்கு மாவும் இல்லை இருப்பதை வைத்து ஏதோ தன்னால் முடிஞ்சதை செய்த மிருதுளாவை தொணதொணப்பு செய்ததுமில்லாமல் நக்கல் நையாண்டி செய்து சாப்பிட வந்தவர்களையும் தூண்டி விட்டுக்கொண்டிருந்தாள் பர்வதம். இதை புரிந்துக்கொண்ட மிருதுளா தட்டில் சுட சுட ஆவி பறக்கும் கிச்சடியைப்போட்டு சட்னியை ஊற்றி தனது மாமனார் ஈஸ்வரனிடம் கொடுத்து
“இந்தாங்கோ பா சாப்பிட்டுட்டு சொல்லுங்கோ“
என்று தட்டை நீட்ட அவரும் அதிலிருந்து வந்த வாசத்தினால் தட்டை கையில் வாங்கிக்கொண்டு…
“இதுல நெய் ஊத்திருக்கயா மிருதுளா? வாசம் சூப்பர்.. இரு சூடா இருக்கு சாப்பிட்டு சொல்லறேன்..நீங்க எல்லாம் ஏன்டா என் வாயை பார்த்துண்டு நிக்கறேங்கள் தட்டெடுத்து போட்டு சாப்பிடுங்கோடா“
இன்னொரு தட்டில் போட்டு நவீனிடம் கொடுத்தாள் பின் பர்வதத்தைப்பார்த்து
“அம்மா உங்களுக்கும் இப்போவே தரட்டுமா?”
“எனக்கும் உப்புமா பிடிக்காது. என்ன செய்ய அது தானே செய்திருக்க….இப்போ வேண்டாம் நான் அப்பறமா சாப்பிட்டுக்கறேன்.“
கவினும், ப்ரவீனும் சாப்பிட்டுட்டு
“வாவ் மன்னி இது சூப்பரா இருக்கு. சட்னி இன்னும் கொஞ்சம் ஊத்துங்கோளேன்.“
என்றதும் சந்தோஷத்தில் குடு குடு வென ஓடி போய் பரிமாறினாள் மிருதுளா. ஈஸ்வரன் ரசித்து உண்டு கொண்டிருந்தார்.
“மிருதுளா எனக்கு இன்னும் கொஞ்சம் கிச்சடி போடுமா நல்லாருக்கு” என்றார்
“உங்களுக்கு உப்புமா பிடிக்காதே அப்பறம் என்ன இன்னொரு தடவை கேக்கறேங்கள்?” என பர்வதம் சொன்னதும்
“சரி மா மிருதுளா எனக்கு போதும்.” என்றவருக்கு இன்னும் கொஞ்சம் கிச்சடியை தட்டில் போட்டு
“அப்பா இன்னைக்கு ஒரு நாள் இந்த கிச்சடி என்கிற உப்புமாவை சாப்பிடுங்கோ பரவாயில்லை, ஒன்னும் ஆகிடாது“
என்னதான் அனைவரும் சூப்பர் என்று பாராட்டினாலும் தன்னவன் பாராட்டுக்காக ஏங்கியது மிருதுளாவின் உள்ளம். அதை எண்ணிக்கொண்டே அவனை பார்க்க முனையும் போது சட்டென்று பவின்
“மன்னி எனக்கும் இன்னும் கொஞ்சம் கிச்சடி அன்ட் சட்னி போடுங்கோ” என்றதும் அவனுக்கு பரிமாற சென்றாள் அப்பொழுது நவீன்
“மிருது திஸ் கிச்சடி ஈஸ் சிம்ப்ளி சூப்பர்ப். ரொம்ப நல்லா பண்ணிருக்க. நல்ல டேஸ்ட்டா இருக்கு. இது மாதிரி உப்புமா செய்தா தினமுமே சாப்பிடலாம் என்னப்பா சொல்லுற!!!”
இதை கேட்டதும் மிருதுளாவுக்கு மனதில் சந்தோஷம் இருந்தாலும் அச்சசோ மாமியார் முன்னாடி இப்படி சொல்லிட்டாரே தன்னவன் என்ற மைன்ட் வாய்ஸில்
“அச்சச்சோ இவர் டேஸ்ட்டா இருக்ககுங்கறதோட நிப்பாட்டிருக்கக்கூடாதா. அடுத்த வரி அம்மாவை சங்கடப்பட வைத்திருக்குமே”
என எண்ணி
“ஆமாம் ஆமாம் என்னைக்காவது செய்தால் தான் ஆஹா ஹோ ஹோனுட்டு எல்லாரும் சாப்பிடுவா நீங்க சொல்லறா மாதிரி தினந்தோறும் செஞ்சா அலுத்துப்போகும்“
அனைவரும் சாப்பிட்டு எழுந்த பின்
“அம்மா வரேளா நாம சாப்பிடலாம்?”
“சரி எனக்கும் தட்டுல போட்டு குடு. என்னமோ உன் புருஷனும், மாமனாரும், மச்சினன்களும் பாராட்டரா மாதிரி அப்படி என்ன இருக்குனு பார்க்கட்டும்”
மிருதுளாவுக்கு மனதில் சரிப்பு வந்தது. அதை அடக்கிக்கொண்டு தன் மாமியாருக்கு பரிமாறி பின் தானும் தட்டில் போட்டுக்கொண்டு இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
“அம்மா நிறைய பண்ணிருக்கேன்னு சொன்னேளே இப்போ பாருங்கோ எல்லாம் காலி ஆயிடுத்து. நான் பண்ணும்போது பத்தாதோனு நினைச்சுட்டேன். ஆனா கரெக்ட்டா இருக்கு.”
“சரி…சரி…சட்டுபுட்டுன்னு சாப்பிட்டுட்டு ரெண்டு பேருமா கிளம்புங்கோ. ராசாமணி பெரியப்பா ஆத்துல இன்னைக்கு உங்களை விருந்துக்கு கூப்பிட்டிருக்கா. போயிட்டு வாங்கோ.“
“சரி..மா“
சாப்பிட்ட பின் பாத்திரங்களை எல்லாம் கழுவிட்டு விருந்துக்கு கிளம்ப மாடிக்கு சென்றாள் மிருதுளா. அப்பொழுது அவளை கீழேயிருந்து கூப்பிட்டாள் பர்வதம். உடனே கீழே வந்தாள் மிருதுளா. வந்தவளிடம் தனக்கு தலைவலிப்பதாகவும் ஒரு காபி போட்டு தந்துவிட்டு கிளம்பும்படி சொன்னாள். மிருதுவும் அவ்வாறே செய்துவிட்டு மீண்டும் மாடிக்கு சென்று டிரெஸ் பண்ணிக்கொண்டு வந்தாள்.
நவீனும் ரெடி ஆகி கீழே வந்து
“என்ன மிருது கிளம்பலாமா?”
“ஓ நான் ரெடி கிளம்பலாம். அம்மா அப்பா நாங்க பெரியப்பா ஆத்துக்கு போயிட்டு வரோம்“
“உங்க கூட பவினும் வரானாம். கூட்டிண்டு போங்கோ” என்றாள் பர்வதம்
“நாங்க எங்க கல்யாண விருந்துக்கு போறோம் என்னத்துக்கு பவின் எங்ககூட” என்றான் நவீன்
பர்வதம் எதிர் பார்த்தது போலவே கேள்வி வர…
“ஏன் அவனையும் உங்களோட கூட்டிண்டு போனால்தான் என்ன? ஏன் ஆத்துக்காரி வந்தததும் தம்பி எல்லாம் வெளியே கூட்டிண்டு போக கூடாதூனுட்டாளோ! இல்ல எங்களை தொந்தரவா நினைக்கறாளா?” என்றாள்
“என்ன பேசற நான் என்ன சொல்லறேன் நீ என்னத்த பேசற !!! கொஞ்சமாவது பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசு” என்று நவீன் சொன்னதும் மிருதுளா குறுக்கிட்டு
“ஏன் இதுக்கெல்லாம் இப்படி பேசறேங்கள் நவீன். பவினும் நம்ம கூட வரட்டுமே. அதனால என்ன இப்போ? பவின் நீ ரெடியா”
“ஓ எஸ் அம்மா என்ட்ட எழுந்ததும் சொல்லிட்டா பெரியப்பா ஆத்துக்கு உங்க ரெண்டு பேரு கூட போயிட்டு வரச்சொல்லி. அதனால நான் அப்பவே ரெடி”
மிருதுளாவுக்கும் பவின் அவர்களுடன் வருவதில் இஷ்டம் இல்லை. அவள் மனதிற்குள்
“புதுசா கல்யாணமானவர்கள் தனியாக வெளியே போயிட்டு வரட்டும்னு இல்லாம கூட ஒரு ஸ்பை வேற. ஏன் இவனை அவா தம்பி ஆத்துக்கு போனப்போ எங்க கூட அனுப்பலை!!! ஏன் பெரியப்பா ஆத்துக்கு மட்டும் கூட எஸ்கார்ட் அனுப்பறா?”
என போராட்டம் இருந்தாலும் அவள் மனம் படக் படக் என அடித்துக்கொள்ள ஆரம்பித்தது ஏனென்றால் மறுபடியும் வெளியே செல்லும்போது ஒரு சண்டை வந்தால் அந்த டென்ஷனோட தான் போயிட்டு வர வேண்டி இருக்கும் அதுவுமில்லாமல் இன்னும் மூணு நாள்ல குஜராத் போய் விடுவார்கள் அங்க போனா இருவர் மட்டும் தனியாக தானே இருக்க போகிறார்கள் என்பதால் நவீனைப்பார்த்து …
“ஓகே இப்போ நாம மூணு பேரும் சேர்ந்து கிளம்பலாமா!“
நவீன், மிருதுளா, பவின் மூவரும் வீட்டிலிருந்து புறப்பட்டு பஸ்ஸில் ஏறி ராசாமணி வீட்டுக்கு போய் சேரட்டும். அதுவரை நமது வேலைகளை எல்லாம் நாமும் முடித்துவிட்டு விவரங்களை தெரிந்துக்கொள்ள மீண்டும் வருவோம்.
தொடரும்…..