அத்தியாயம் – 12: பர்வத களம்

பஸ்ஸில் இருந்து இறங்கி நவீனும் மிருதுளாவும் வீட்டிற்கு மெல்ல பேசிக்கொண்டே நடந்தனர். மிருதுளாக்கு  அந்த வீட்டிற்குள் செல்வது என்றாலே ஏதோ ஒரு யுத்த களத்தில் வெறியோடு தன்னைத்தாக்க எதிரி காத்துக்கொண்டிருப்பது போலவே ஒரு நினைப்பு அவளை மெல்ல மெல்ல அடி எடுத்து நடக்கச் செய்தது. இதை அவள் நவீனிடம் பகிர்ந்து கொண்டால் அவன் தவறாக எண்ணி விடுவானோ என்ற பயம். மாமியாரிடமேஏன் இப்படி என்னை எதிரியாக பார்க்கிறீர்கள்என்று கேட்டால் அதை வைத்தே மற்றுமொரு சண்டையை உருவாக்கிவிடுவாளே என்ற அச்சம். நவீனாவது தனது மனைவியின் சங்கடமான நிலைமையை புரிந்துக்கொண்டு அவளுக்கு ஒரு கம்ஃபர்டான சூழலை தனது வீட்டில் உருவாக்கியிருக்க வேண்டும். அவன் வீட்டார் சுபாவம் அதுவாகவே இருந்தாலும், தான் இருபத்தி இரண்டு வருடம் வாழ்ந்த வாழ்க்கை அப்படியே விட்டு விட்டு நவீனையும் அவனது குடும்பத்தினரையும் நம்பி வந்தவளுக்கு அவர்கள் கொடுக்கும் இந்த பதற்றமான வாழ்க்கை துளியும் சரியானது அல்ல ஆனால் இதை மனம் விட்டு நவீனிடம் மிருதுளா பேசாததும் ஒரு காரணம். இது அரேஞ்ச்டு கல்யாணத்தின்  ஒரு குறைபாடாக தான் இருந்துள்ளது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்.

 மனதில் குழப்பத்துடனே நவீன் பேசுவதைக் கூட காதில் வாங்காமல் நடந்து கொண்டிருந்தவளை பார்த்து நவீன் …

ஹேய் மிருது என்ன நீ ஏதோ யோசிச்சிண்டே இப்படி ரொம்ப ஸ்லோவா நடக்கறாய்!!! இன்னைக்கு மாமா ஆத்துக்கு போறவரைக்கும் நல்லா இருந்த அங்கேந்து கிளம்பி வந்ததிலருந்து ஏதோ தீவிரமான யோசனையிலேயே இருக்கியே!! என்ன? எங்க பாட்டி கதையை எல்லாம் கேட்டு பயந்துட்டயோ…அவா எல்லாம் அந்த காலத்து மனுஷா அப்படி இருந்திருக்கா என்ன பண்ண…அதை எல்லாம் மனசுலே போட்டு குழப்பிக்காதே..என்ன சரியா!!

ம்….சரிஎன்ற பதில் ஒரு சிறு புன்னகையுடன்…

வீடு வந்து சேர்ந்தனர். உள்ளே நுழைந்ததும் யாருமே யாரையுமே பார்க்காதது போலவே பாவனை செய்ய மிருதுளாவிற்கு ஒரு இறுக்கமான சூழலை உருவாக்கியது. நவீன் வந்ததும் சர்ரென்று நேராக மாடிக்கு ஆடையை மாற்ற சென்றான். மிருதுளாவிற்கு வீட்டின் பெரியவர்களிடம் ஏதும் விவரம் கூறாமல் அப்படி நேராக மாடிக்கு செல்ல சற்று சங்கடமாக இருந்தது. எனவே ஹாலில் போய் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும் அனைவரும் அங்கிருந்து எழுந்து நாலாபக்கமும் சென்றுவிட்டனர். மிருதுளாவிற்கு தான் என்ன தவறு செய்தோம் ஏன் இப்படி அவள் வந்தததும் அனைவரும் ஒன்றும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டனர் என்று மனதில் குழப்பம் ஆனாலும் அவர்கள் அப்படி நடந்துக்கொண்டாலும் அதை பெரிதாக எடுத்துக்கக்கூடாது என்று முடிவு செய்து அடுப்படியில் இருந்த தனது மாமியாரிடம்   பேச்சை ஆரம்பிக்க முயர்ச்சித்தாள். 

அம்மா நாங்க பாங்க் போய் நகையை லாக்கரில் வைத்துவிட்டு அப்படியே மாமா ஆத்துக்கும் போயிட்டு….

என்று அவள் முடிப்பதற்குள் பர்வதம் குறிக்கிட்டு தனது கடைக்குட்டி மகனிடம்…

டேய் பவின் போய் அப்பா கவின், ப்ரவீன் எல்லாரையும் சாப்பிட அழைச்சுண்டு வா

என மிருதுளா சொல்வதை காதில் வாங்கதவள் போல பேச மிருதுளாவிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் 

அம்மா நான் உங்ககிட்ட தான் சொல்லிண்டிருக்கேன்என்றாள்

அதற்கும் பர்வதத்திடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. அப்படி ஒருத்தி அங்கு நின்று கொண்டு பேசுகிறாள் என்பதையே எவரும் கண்டுகொள்ளாதது போலவே இருந்தார்கள். மிருதுளா தனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு விருட்டென்று மாடிப் படிகளில் ஏற துவங்கினாள். எதிரே நவீன் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தான். மிருதுளா வேகமாக படியில் ஏறுவதைப்பார்த்த நவீன்..

மிருது மெதுவா மெதுவா விழுந்திட போற…நீ ஏன் இன்னும் டிரஸ் மாத்தாம இருக்க? போ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. நான் கீழே போய் முகம் கை கால் எல்லாம் அலம்பி கொஞ்சம்  ரிப்ஃப்ரெஷ் ஆகிக்கறேன். ஓகே.

அதற்கு பதில் ஏதும் கூறாமல் மேலே ஏறிச்சென்றாள் மிருதுளா. அதைப்பார்த்த நவீன் தனது தோள்பட்டையை உயர்த்தி புரியாதது போல கீழே சென்றான். ஒன்றாக அமர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் மிருதுளா சென்றதும் எப்படி நடந்துக்கொண்டனரோ அதே போலவே நவீன் ஹாலில் நுழைந்ததும் நடந்துக்கொண்டனர். ஆனால் நவீன் அதை துளியும் கண்டுக்கொள்ளாமல் டிவியை ஆன் செய்து செய்திகள் பார்க்கலானான். அதைப்பார்த்த பர்வதம் ஈஸ்வரனிடம் ஏதோ கண்ணைக்காட்ட உடனே..

ஏண்டா ….புருஷனும் பொண்டாட்டியுமா வெளியே போயிட்டு வந்திருக்கேங்களே அத பத்தி ஏதாவது வீட்டுப்பெரியவானுட்டு இருக்கோமே எங்களாண்ட உங்களுக்கு சொல்லனும்னு தோனித்தோ!!! ஏதோ வநத சர்ரெனு மாடிக்கு போயிட்ட அப்போ இங்க நாங்களெல்லாம் என்னத்துக்கு இருக்கோமாம்? “

அப்பா டிரஸை மாத்திட்டு கொஞ்சம் ரிப்ஃப்ரெஷ் ஆயிட்டு சொல்லலாம்னு இருந்தேன் அது தப்பா ஆனா மிருது சொல்லிருப்பாளே

ஆமாம் சொன்னா சொன்னா சொரக்காய்க்கு உப்பில்லைனுஎன்று முனுமுனுத்தாள் பர்வதம்

என்ன என்ன சொன்ன இப்போ. எதுவானாலும் சத்தமா சொல்லு அப்போதான் பதில் கிடைக்கும்என நவீன் பர்வதத்தைப்பார்த்து சொல்லிக்கொண்டிருக்கும் போது மிருதுளா உள்ளே நுழைய அனைவரும் மீண்டும் கப்சிப் ஆனார்கள். அதைப்பார்த்த மிருதுளா …

ஏன் எல்லாரும் ஸடன்னா பேசறதை நிப்பாட்டிட்டேங்கள். என்னாலயா? நான் வேனும்னா மாடிக்கே போயிடட்டுமா?”

ஹே மிருது உன்னால எல்லாம் இல்லை. நீ உள்ளே வந்து உட்காருஎன்று நவீன் கூற மிருதுளாவும் ஹாலில் ஒரு புறம் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்தாள். பர்வதம் சட்டென்று எழுந்து அனைவரையும் இரவு உணவருந்த வருமாறு அழைத்தாள். அனைவரும் அவரவர் தட்டுகளை அலம்பி எடுத்துக்கொண்டு சென்று வரிசையாக அமர்ந்தார்கள். மிருதுளா அனைவருக்கும் பரிமாறினாள். அனைவரும் எழுந்த பின் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து பின் தனது மாமியாருடன் சாப்பிடக்காத்திருந்தாள். பர்வதம் அவள் பாட்டுக்கு தட்டில் சாப்பாடு போட்டு சாப்பிட ஆரம்பித்தாள். மிருதுளாவிற்கு தட்டு இருக்கவில்லை உடனே வெளியே தேய்க்க போட்டிருந்த தட்டில் ஒன்றை எடுத்து தேய்த்து எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள். சாதம் மிக குறைவாக இருந்தது. குழம்பு பொறியல் பாத்திரங்கள் எல்லாம் காலியாக இருந்தது. மிருதுளா மோர் தயிர் சாப்பிடமாட்டாள் என்பது பர்வதத்திற்கு நன்றாக தெரிந்திருந்தும் மோர் பாத்திரத்தை எடுத்து மிருதுளா முன் வைத்தாள். மிருதுளாவிற்கு நல்லவேளை அவ்வளவாக பசியில்லை என்பதால் மோரைத்தவிர ஏதாவது மீதமுள்ளதா என்று பார்த்தாள். ரசம் கொஞ்சம் மிஞ்சியிருந்தது அதை ஊற்றி கடகடவென சாப்பிட்டு பாத்திரங்களை எல்லாம் கழுவி கமுத்தி வைத்துவிட்டு மீண்டும் ஹாலுக்குள் நுழைந்தாள். யாரும் ஒன்றும் பேசவில்லை ஈஸ்வரன், கவின், ப்ரவீன் மற்றும் பவின் உள் ரூமில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். பர்வதம் மறுநாள் அரைப்பதற்கு அரிசி உளுந்து ஊறவைத்துக் கொண்டிருந்தாள்.  அதைப்பார்த்த மிருதுளா மாமியார் என்ன செய்கிறார் என போய் பார்த்து அப்படியே பேச்சுக் கொடுக்கலாம் என நினைத்து பர்வதம் அருகே சென்று…

என்ன மா பண்ணறேங்கள். எல்லா வேலைகளும் ஆயாச்சுனு நினைச்சு தான் போய் உட்கார்ந்தேன்

உனக்கு இட்டிலி தோசைக்கு மாவுக்கு அரிசி உளுந்து ஊறவெக்க அது ஊறினதும் அரைக்க தெரியுமா?” 

இல்லை அம்மா. எனக்கு தெரியாது. என் அம்மா செய்றத பார்த்திருக்கேன் ஆனா நான் செய்ததில்லை.என்று தனக்கு தெரியாததை தெரிந்தது போல பொய் ஏதும் கூறாமல் அப்பாவியாக உண்மையைச்சொல்ல…. அதை புரிந்துக்கொண்டு ..அதற்கென்ன போக போக தெரிந்துக்கொள்வாய் என பெரிய மனுஷிப்போல நடந்துக்கொள்ளாமல் இதுதான் சான்ஸ் என்று பர்வதம் என்ற பகடை உருள ஆரம்பித்தது…

என்னத்த வளர்த்திருக்கா உங்க அம்மா!!! ஒரு பொண்ணுக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டாமோ!!! நீ தனியா நவீனோட குஜராத் போய் என்னத்த வடிச்சுக்கொட்டப்போறயோ!!! இங்கேயே இருந்திருந்தா நானாவது சொல்லிக்குடுத்திருப்பேன் அதுக்கும் மாட்டேன்னு அடம்பிடிச்சு அவனோட இன்னும் அஞ்சு நாள்ல கிளம்ப வேற போற. பெரியவா சொன்னா அதுபடி கேட்டு நடக்க உங்க அம்மா சொல்லித்தறலையா? இதெல்லாம் விட்டுட்டு வேற என்னத்தான் சொல்லிக்குடுத்திருக்காளோ?”

இனி இதற்கு மேலிருந்தால் அது விபரீதம் என்று எண்ணி அங்கிருந்து எப்படியாவது நழுவிட நினைத்து… என்ன சொல்லி நழுவுவது என்று நெளிந்த வண்ணம் மிருதுளா நின்றிருக்க… நவீன் ஹாலில் இருந்து தண்ணீர் கேட்க ….இதுதான் சமயம் என..

அம்மா நவீன் தண்ணீர் கேட்கிறார் நான் போய் குடுத்துட்டு வரேன்” 

அது என்ன ஆத்துக்காரரை பெயர் சொல்லி கூப்பிடற பழக்கம் !அது  அப்பாக்கு சுத்தமா பிடிக்கலை இனி எங்க முன்னாடி அப்படி கூப்பிடாதே…போ தண்ணீ குடு

இந்தாங்கோ தண்ணீ” 

தாங்க்ஸ் மிருது

என்னத்துக்கு எனக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லிண்டிருக்கேங்கள்

நான் மாடிக்கு போறேன். உனக்கு வேலை எல்லாம் ஆயாச்சா?”

ஆ ஆயாச்சு

அப்போ நீயும் வா போகலாம். இப்போ இவாளும் எல்லாரும் படுத்துக்க பாயைப்போடுவா. கம் லெட்ஸ் கோ

என்று நவீன் சொன்னதும் அவளுக்கு அதற்கு முன்னாடி நாள் அவளிடம் யாரும் பேசாமல் அவரவர் படுக்கையை தயார் செய்து படுத்துக்கொண்டது, ஒருத்தி நின்றுக்கொண்டிருக்கிறாளே என்பதைக்கூட பொருட்படுத்தாமல் நடந்துக்கொண்டது எல்லாம் ஞாபகம் வர இன்றும் அதேபோல் நடந்தால் என்ற எண்ணம் அவளை நவீனுடன் மாடிக்கு ஏற வைத்தது. 

ஆனாலும் அவளது இந்த சங்கடங்களை நவீனிடம் பகிர்ந்துக்கொள்ளவில்லை. 

மூன்றாவது நாள் விடிந்தது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். மீண்டும் டக்…டக்…டக்… என கதவு தட்டும் சத்தம். மிருதுளா எழுந்து கடிகாரத்தைப்பார்த்தாள் மணி ஐந்து தான் ஆகியிருந்தது. நவீனை எழுப்ப அவன் பக்கம் திரும்பினாள் ஆனால் அவன் ஆழந்து உறங்கிக்கொண்டிருப்பதைப்பார்த்து எழுப்ப மனசு வரவில்லை. தானே எழுந்து கதவைத்திறந்து பார்த்தாள், இம்முறை இருட்டில் நின்று கதவைத்தட்டியது பக்கத்துவீட்டுக் குட்டிப்பையன் கார்த்திக் இல்லை, காலேஜ் செல்லும் நவீன் வீட்டுக் கடைக்குட்டி பவின். 

ஹாய் பவின் குட் மார்னிங். என்ன காலங்காத்தால கதவ தட்டற?”

மன்னி டைம் அஞ்சு ஆச்சு. உங்களை கீழே வரச்சொன்னா அம்மா” 

ஏய்தவள் கீழே இருக்க அம்பை நோவானேன் என நினைத்து

சரி சரி வரேன்னு போய் சொல்லு

சிறிது நேரம் கழித்து மாற்றுத்துணிகளுடன்  கீழே சென்று குளித்துவிட்டு துணிகளை காயப்போட்டுவிட்டு அடுப்படிக்குள் நுழைந்து தனது அம்மாவிடம் கேட்பது போலவே …

அம்மா காபி” 

வேனும்னா போட்டுக்குடி. உனக்கு காபி போடவாவது தெரியுமா? அதையாவது சொல்லிக்கொடுத்திருக்காளா ஒங்க அம்ம்மாஎன்று காலையிலேயே  பர்வதப்பாதம் ஆரம்பமானது…

பர்வதப்பாதத்தை காதில் வாங்காதது போலவே மிருதுளா தானே காபிப்போட்டுக்கொண்டு  ஹாலுக்கு சென்று அமர்ந்துக்கொண்டாள். அப்பொழுது நவீன் உள்ளே வர உடனே தனது காபியை அவனுக்கு குடுத்துவிட்டு தனக்கு காபி போட மீண்டும் அடுப்படிக்குள் சென்று காபி போட்டுக்கொண்டிருக்கும் போது நவீன் ஹாலில் இருந்து 

இன்னைக்கு காபி சூப்பரா இருக்கே என்ன விஷேசம்? காபி பொடி மாத்திட்டயா என்ன…இனி இதே ப்ராண்ட் காபி  பொடி வாங்கு.என்று பர்வதத்திடம் சொல்ல…எறிந்துக்கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றியது போலானது. அப்பொழுதும் மிருதுளா தான் போட்ட காபி என்று நவீனிடம் சொல்லவில்லை. சொன்னால் வரக்கூடிய விளைவுகளை நன்கு மூன்றே நாளில் கற்றுக்கொண்டு விட்டாள். ஆகையால் அமைதியாக தனக்கு தானே போட்ட காபியோடு வந்து நவீன் அருகே அமர்ந்து அருந்தலானாள். இங்கு நடந்தது ஏதும் தெரியாத ஈஸ்வரன் …நவீன் சொல்வதைக்கேட்டுவிட்டு

ஏய் பர்வதம் காபி பொடி மாத்திட்டயா சொல்லவே இல்ல…ஆனா எனக்கு எப்பவுமே தர காபி தானே இன்னைக்கு காலையிலும் தந்த!!! ஒரு வித்யாசமும் தெரியலையே. சரி போய் எனக்கு புது காபிப் பொடி போட்டு நவீனுக்கு கொடுத்த மாதிரியே ஒரு காபி போட்டுண்டு வா” 

பர்வதத்திற்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது…

காலை ல ஒரு காபி தான். ரெண்டாவது காபி ..புது பழக்கமா இருக்கு?? இது என்ன காபி கடையா? காபி போட்டுண்டே இருக்க. இன்னும் கொஞ்சம் நேரத்துல டிஃபன் சாப்பிடனும் இப்போ என்னத்துக்கு காபி கீபி எல்லாம் அது பசியை முறிச்சுடும். போங்கோ உங்க நியூஸ்ஸை ரேடியோவில் கேளுங்கோ

இதை பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த மிருதுளாவிற்கு சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டென ஒரு சிரிப்பு சிரித்தாள். அதைப் பார்த்த நவீன் 

என்ன மிருதுளா காபி குடிக்கும் போது இப்படி ஒரு சிரிப்பு

அது …அது… எதையோ நினைத்தேன் சிரிப்பு வந்துடுத்து… மனசுக்குள்ள சிரிக்கறதா அல்லவா நினைச்சேன். சாரி

என்னத்துக்கு சிரிச்சதுக்கெல்லாம் சாரி கேட்கிற?”

இவர்களின் உறையாடலைக் கேட்ட பர்வதம் மிருதுளாவை முறைத்துக்கொண்டே அடுப்படிக்குள் போய் ..

ஏய் மிருதுளா எத்தர நேரமா ஒரு கிலாஸ் காபி குடிப்ப? இங்க வா

என்றழைக்க….பர்வதத்தின் அடுத்த களம் என்னவாக இருக்கும் அதை எப்படி சமாளிப்பது என்ற எண்ணங்கள் மிருதுளா மனதில் தாறுமாறாக ஓட…

என்ன மா சொல்லுங்கோஎன தன்னை தயார் படுத்திக்கொண்டு எதுவானாலும் எதிர்க்கொள்ள அடுப்படிக்குள் சென்றாள்.

வெகுளிப் பெண்ணாக வந்தும் வீட்டின் பெரியவர்களின் செயல்களால் வந்தவளும் தனது குணத்தை அங்கிருப்பவர்களுக்கு தகுந்தார் போல் மெல்ல மாற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.  இதுவே மிருதுளா எடுத்து வைத்த முதல் அடி. மிருதுளா மாறுவது தவறா இல்லை பர்வதம் மாறாதது தவறா.!!!! 

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s