அத்தியாயம் 101: வாய்ப்பும்! வம்பும்!

சஸ்பென்ஸ் தாங்க முடியாது மிருதுளாவும் சக்தியும் நவீனிடம் கேட்க அவனோ சற்று நேரம் அவர்களுக்கு விளையாட்டுக் காட்ட…இருவரும் எழுந்துச் செல்ல முற்பட்டப் போது அவர்களைப் பிடித்து அமரச்செய்து

“ஓகே !! ஓகே!! சாரி மை டியர் கேர்ள்ஸ்”

“பின்ன என்ன நவீ எவ்வளவு நேரமா நாங்களும் என்ன? என்னனு கேட்டுக்கிட்டிருக்கறதாம்? அதுதான் எழுந்துப் போகப் பார்த்தோம். இப்பவாவது சொல்லுவேங்களா?”

“ம்…ஓகே. இன்னைக்கு என் கம்பெனி சி.இ.ஓ என்னுடன் பேசினார். அவருக்கு குவைத்தில் இருக்கும் எங்களோட ப்ராஞ்ச் ல புதுசா ஒரு டிவிஷன் ஓபன் பண்ணி அதை விரிவாக்கணுமாம். அதுனால என்னை குவைத்துக்கு வர முடியுமான்னு கேட்டார். நான் யோசிச்சு சொல்லறேன்னு சொல்லிருக்கேன். என் ஏஞ்சல்ஸ் நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்லறேங்கள்?”

“நல்ல நியூஸ் தான். ஆனா எப்படி உங்களை மட்டும் அங்கே வரச்சொல்லியிருக்காரா இல்லை ஃபேமிலியோடவா?”

“ஃபேமிலியோட ரீலொக்கேட் பண்ண விருப்பமான்னு தான் கேட்டார்.”

“ஓ! ஓகே!! ஆனா நம்ம சக்தி டென்த் முடிக்கணுமே!! எக்ஸாம்ஸ் வர்றதே”

“நான் மொதல்ல ஏப்ரல் மாசம் போயிட்டு ஒரு மாசத்துல மத்த எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டு வந்து உங்களைக் கூட்டிண்டுப் போறதுக்கு எப்படியும் ஜூன் ஜூலை ஆர் ஆகஸ்ட் ஆகிடும். அதுக்குள்ள நம்ம சக்தி எக்ஸாம் எழுதி சூப்பர் மார்க்கும் எடுத்திருப்பா”

“என்ன சக்தி அப்பா சொல்லறதைக் கேட்டே ல!! உனக்கு படிப்பை அங்கே போய் கன்டிண்யூ பண்ண ஓகே வா? இல்லாட்டினாலும் சொல்லு அம்மா உன் கூட உன் படிப்பு முடியுற வரைக்கும் இங்கேயே இருக்கேன். உன் படிப்பு முடிஞ்சிட்டு நாம அங்க போகலாம். என்ன சொல்லுற?”

“எனக்கு நோ ப்ராப்ளம் அம்மா. இவ்வளவு வருஷமா இந்தியாக்குள்ளேயே ஸ்கூல் மாத்தி மாத்திப் படிச்சிட்டிருந்தேன்… இப்ப..வெளிநாட்டுல போய் படிக்கப்போறேன். ஸோ எனக்கு ஒரு டிஃப்ரன்ஸும் இல்ல. ஐ ஆம் ஓகே வித் இட்”

“அதுதான் சக்தியே சொல்லியாச்சே அப்புறமும் எதை யோசிச்சிக்கிட்டிருக்க மிருது?”

“இல்ல நவீ இப்பத்தான் நாம நம்ம புது வீட்டுல வந்து ஒரு ஆறு மாசம் தான் ஆச்சு அதுக்குள்ள மறுபடியும் ஷிஃப்டிங்கான்னு யோசிச்சிட்டிருக்கேன்”

“முதல்ல நான் போய் ஒரு மாசம் இருந்துட்டு ஊர் எப்படின்னு பார்த்துட்டு வர்றேன். அப்புறமா ஷிஃப்டிங் பத்தி டிசைட் பண்ணலாம் ஓகே வா”

“ஓகே!! நவீ”

“அப்பா அப்போ என் போர்டு எக்ஸாம்ஸ் நடக்கும் போது நீ இங்க இருக்க மாட்டியா?”

“இருப்பேன் சக்தி. மார்ச் போயிட்டு ஏப்ரல் மிடில்ல வந்துடேவேன். என்ன ஃபர்ஸ்ட் டூ எக்ஸாம்ஸ்க்கு மட்டும் இருக்க மாட்டேன்.”

“அப்போ ஓகேப்பா”

“சரி மிருது…இந்த ஏரியாவுல இப்போதைக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும் தனியா இருக்கறதுங்கறது அவ்வளவா சேஃப் இல்ல ஸோ…”

“ஸோ?”

“உன் அப்பா அம்மாவை இங்கே கூட்டிண்டு வந்துடலாமா?”

“வேற யாரு வருவாளாம்? என் அப்பா அம்மா தான் அன்னேலேந்து இன்னே வரைக்கும் இந்த மாதிரி நேரத்துல எல்லாம் நமக்கு கைக் கொடுக்கறவா! ஹெல்ப்பு பண்ணிட்டு உங்க கூட்டத்துக்கிட்டேந்து கெட்டப் பெயரும் வாங்கிக்கறா.”

“அவா நம்க்கு பண்ணின, பண்ணற உதவி …நம்ம ரெண்டு பேருக்கும்… அந்த கடவுளுக்கும் தெரியும் அது போதும். மத்தவாளுக்கென்ன வாய் சும்மா இருக்கேன்னு இவாளைப் போட்டு மென்னுண்டிருக்கா. அதையெல்லாம் விட்டுத் தள்ளு மா”

“ஆமாம் நீங்க ரொம்ப ஈஸியா சொல்லிட்டேங்கள். சரி சரி நாம அப்போ அடுத்த வீக்கென்ட் போய் அப்பா அம்மாவைக் கூட்டிண்டு வருவோம்”

“நாளைக்கு ஃபோன் போட்டு அவாகிட்ட சொல்லிடு. ஆனா நாம அங்கே ஷிஃப்ட் ஆகப் போறதை நான் ஊர்லேந்து திரும்பி வந்துட்டு நாம சேர்ந்து முடிவு பண்ணிட்டு சொல்லிக்கலாம் சரியா”

“ஓகே நவீ டன். ஆமாம் நவீ நம்ம கவின் சாரும் கஜேஸ்வரி மேடமும் அங்கேத் தானே இருக்காங்க அவங்க கிட்ட நீங்க அங்க வர்றதை சொல்ல வேண்டாமா? அப்புறம் அதுக்கும் ஏதாவது சொல்லப் போறா!!”

“ஆமாம் ஆமாம் அவா இங்கே இருந்தப்போ நாம அவா ஆத்துக்கு போனதையே சொல்லிக் காட்டினக்கூட்டம் அது அங்கே நான் ஏனீ போகப் போறேன். எவாகிட்டேயும் இப்போ எதைப்பத்தியும் நானும் சொல்லமாட்டேன் நீயும் சொல்லிக்க வேண்டாம் புரியறதா?”

“ம்…ஓகே…என்னமோ போங்கோப்பா”

“நான் சொல்லறதைக் கேளு மிருது. இப்போ நாம அவாகிட்ட சொல்லிட்டு அங்க நான் என் ஆஃபீஸ் விஷயமா போயிட்டு வந்தா அதை அப்படியே டிவிஸ்ட் செய்து அவன் தான் எனக்கு அங்க வேலையே வாங்கிக் கொடுத்தான்னு எல்லார்கிட்டேயும் ஃபோன் போட்டுச் சொல்லுவா தெரியுமா?”

“அது எப்படி சொல்லுவா? நீங்க இங்க வேலைப்பார்த்த அதே கம்பெனில தானே அங்கேயும் வேலைப் பார்க்கப் போறேங்கள் அப்புறம் எப்படி அவு வாங்கிக் கொடுத்ததுன்னு சொல்லுவா?”

“மிருது நீ ப்ராக்ட்டிக்கல்லா பேசுற அதெல்லாம் அங்கே துளிக்கூட எடுப்படாது. அவா பொய்யை எப்படி அழகா உண்மை மாதிரியே பரப்புவான்னு மறந்துட்டயா?”

“ஆமாம் ஆமாம் நீங்க சொல்லறதும் உண்மை தான். இப்போதைக்கு நான் யார்கிட்டேயும் வாயைத் திறக்க மாட்டேன்ப்பா!!”

“அப்படியே இரு”

“நீங்க பத்திரமா போயிட்டு வாங்கோ அப்புறமா சொல்லிப்போம். ஆனா எனக்கு ஒரு டவுட்டு”

“என்ன?”

“அங்கே வச்சு அவா உங்களை எங்கேயாவது பார்த்துட்டான்னா? இல்லாட்டி ஏன் எங்காத்துக்கு வரலைன்னு அப்புறமா விஷயம் தெரிஞ்சுக் கேட்டான்னா”

“அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல மிருது. என் ஆஃபீஸ் எதிர்க்க இருக்குற ஹேட்டல் ல தான் நான் தங்கப் போறேன் ஸோ ஆஃபிஸ் விட்டா ரூம். ரூம் விட்டா ஆஃபீஸ்ன்னு இருப்பேன். இதுல எங்க அவாளைப் பார்க்கறது. வெளில எங்கேயாவது போனா தானே பார்ப்பேன். அதுவுமில்லாம அவா எந்த ஏரியாவுல இருக்கான்னு கூட நமக்குத் தெரியாது அப்புறம் எப்படி போறது? நீ அந்த கஜேஸ்வரி கிட்ட அவா குழந்தைக்கு பர்த்டே கிஃப்ட் அனுப்பறதுக்காக அவா வீட்டு அட்ரெஸ் கேட்டப்போ அவ குடுக்கலை இல்லையா விடு நமக்கு அவா அட்ரெஸ் தெரியாது ஸோ போகலை…ஆஸ் சிம்பிள் ஆஸ் தட்”

“ஓ ஆமாம் ஆமாம் யூ ஆர் ரைட்.”

அவர்கள் பேசிக்கொண்டதைப் போலவே அடுத்த வாரக் கடைசியில் சென்று அம்புஜத்தையும் ராமானுஜத்தையும் அழைத்து வந்தனர். மார்ச் இரண்டாவது வாரம் நவீன் கிளம்பி குவைத்துக்குச் சென்றான். ஏப்ரல் முதல் வாரத்தில் சக்தி இரண்டு பரீட்சையை எழுதினாள். இரண்டாவது வாரம் நவீன் சொன்னது போலவே மைசூருக்கு வந்து சேர்ந்தான். வந்த அடுத்த நாள் மிருதுளாவிடம்

“மிருது எனக்கென்னவோ நமக்கு அந்த ஊர் செட்டாகும்ன்னு தோணறது. நல்லா தான் இருந்தது அதுனால என் பாஸ் கிட்ட ஓகேன்னு சொல்லி விசா எல்லாம் பண்ணிட்டேன். சாரி உங்க ரெண்டு பேர் கிட்டேயும் கேட்காம பண்ணிட்டேன்”

உங்களுக்கு ஓகேன்னா எங்களுக்கும்உங்க வேலை வாய்ப்புகளுக்காக நானும் சக்தியும் எதையும் பொறுத்துப்போம். எப்படியும் அட்ஜஸ்ட் பண்ணிப்போம். அது தானே லைஃப். அப்போ நாம குவைத்துக்கு ஷிஃப்ட் ஆகப் போறோம். கன்ஃபார்ம் தானே? ஏன்னா என் அப்பா அம்மாகிட்ட சொல்லறதுக்காகக் கேட்கறேன்…நானும் இந்த ஒரு மாசமா சொல்லாம ரொம்ப சிரமப் பட்டுட்டேன். சொன்னா சந்தோஷப்படுவா.”

“ஓ! எஸ் மிருது. தாராளமா இப்போ சொல்லிக்கோ. அது தான் ஓகே பண்ணியாச்சே”

“நாளைக்கு காலையில சொல்லிடறேன். எனக்கு மனசுல ஒண்ணு தோணறது அது சரியா தப்பான்னு எனக்குத் தெரியலை. ஒரே குழப்பமா இருக்கு….ஒரு மனசு நான் அப்படி நினைக்கறது தப்புன்னு சொல்லறது இன்னொரு மனசு இல்லவே இல்லை நீயும் மனுஷி தானேன்னு சமாதானம் படுத்தறது நவீ”

“நீ அப்படி என்னத்தை நினைச்ச …உன் மனசு உன்னைப் படுத்தறதுக்கு?”

“உங்க தம்பி அந்த கவின் அன்னைக்கு எங்க அம்மா முன்னாடி உங்களுக்கு டெக்னிக்கல் ஸ்கில்ஸ் இல்ல அதுனால உங்களுக்கெல்லாம் அந்த ஊர்ல வேலைக் கிடைக்காதுன்னு சொன்னான் இல்லையா!”

“ஆமாம் சொன்னான் அதுக்கு ஏன் உன் மனசு உன்னைப் படுத்தணும்?”

“ஆனா அந்த ஆண்டவன் இப்போ நம்மளை அதே ஊருக்கு கூட்டிட்டுப்போறதை நினைச்சேனா…அதுதான் என்னோட ஒரு மனசு….பாருடா கவின் உங்க அண்ணன்…. எந்த வித டெக்னிக்கல் ஸ்கில்ஸ் இல்லன்னு நீ சொன்ன அதே நவீன் .‌…இப்போ உங்க ஊர்லயே வந்து வேலைப் பார்க்கப் போறார்ன்னு….சத்தமா சொல்லித்தா அதைக்கேட்ட என்னோட இன்னொரு மனசு வேண்டாம் மிருது அடக்கம் தான் இப்போ ரொம்ப முக்கியமானதுன்னு சொல்லி என்னை அடக்கிடுத்து”

“நீ நினைச்சது ஒண்ணும் தப்பிலை மிருது. நாமளும் மனுஷா தானே…இட்ஸ் ஓகே லீவ் இட். இதுக்கெல்லாம் இவ்வளவு யோசிச்சு உன்னை நீயே குழப்பிக்காதே சரியா”

“ம்…ஓகே நவீ. சரி நாம எப்ப கிளம்பணும் நம்மளோட இந்த வீட்டுப் பொருட்களையெல்லாம் என்னப் பண்ணப் போறோம்?”

“எல்லாத்தையும் வித்துட வேண்டியது தான்.”

“அச்சச்சோ!! எல்லாமே புதுசா வாங்கினது நவீ. இதை எல்லாம் இப்போ வித்தா பாதி காசு தான் கிடைக்கும்….அது வாங்கி ஆறு மாசமானாலும் சரி ஆறு வருஷமானாலும் சரி”

‘ஓ!! ஓகே அப்போ நாம நம்ம கூடவே எடுத்துண்டு போயிடலாம்.”

“அப்பாடி அதுக்கு எவ்வளவு ஆகுமோ?”

“அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படறாய்? எவ்வளவானாலும் அதை என் கம்பெனிப் பார்த்துக்கும். ஸோ டோன்ட் வரி மிருது. பீ கூல்”

“அப்படின்னா சரி. நாம உங்க ஃபேமிலி கிட்ட இந்த விஷயத்தை சொல்ல வேண்டாமா?”

“ம்…ம்…சொல்லிக்கலாம் சொல்லிக்கலாம். இப்போ வேண்டாம் ரெண்டு நாள் போகட்டும்”

மறுநாள் விடிந்ததும் நவீனும் சக்தியும் ஆஃபீஸ் ஸ்கூல் போனப் பின் தன் அப்பா அம்மாவிடம் விவரத்தைச் சொன்னாள். இருவரும் சந்தோஷமானார்கள். அப்போது அம்புஜம் அதுவரை மிருதுளாவிடம் சொல்லாததை சொன்னாள்….

“முதல்ல அந்த அம்பாளுக்குத் தான் நன்றி சொல்லணும் மிருது. இரு சுவாமி கிட்ட சொல்லிட்டு வர்றேன்.”

“சரிமா சொல்லிட்டு வா”

“மிருது இது நாள் வரைக்கும் என் மனசை அறுத்துண்டு இருந்த ஒரு விஷயத்தை இப்போ நான் உன்கிட்ட ஷேர் பண்ணலாம்னு இருக்கேன்”

“என்னமா அது?”

“பல வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் உன் மச்சினன் அந்த கவின் நம்ம நவீனை டெக்னிக்கல்…. என்னமோ இல்லை அதுனால அவருக்கெல்லாம் அங்க வேலைகிடைக்கச் சான்ஸே இல்லைன்னு என்னை வச்சுண்டே நக்கலா சொன்னான் இல்லையா…அது எனக்கு ரொம்ப சங்கடமா போயிடுத்து டி…அதை அவா அண்ணா தம்பிக்களுக்குள்ள சொல்லியிருக்கலாம் இல்லாட்டி நீங்க எல்லாருமா இருக்கும் போது கூட சொல்லியிருக்கலாம் ஆனா நான் அங்கே இருக்கும் போது அவரை அப்படி பேசினதும் ….நான் உடனே அந்த அம்பாள்ட்ட இப்படி ஏளனம் செய்யறவா முன்னாடி என் பொண்ணும் மாப்பிள்ளையும் அதே ஊர்ல போய் வேலைப் பார்க்கணும் தாயின்னு வேண்டின்டேன் தெரியுமா!! அதை உன்கிட்ட சொன்னா நீ சங்கடப்படுவியேன்னு தான் அப்போ அதை நான் உன் கிட்ட சொல்லலை. இப்போ அந்த அம்பாள் செய்திருக்கும் இந்த அதிசயத்தைப் பார்த்ததும் எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலைமா. நீ வந்து இப்போ இதைச் சொன்னதைக் கேட்டதும் அப்படியே புல்லரிச்சுப் போச்சு. நீங்க ரெண்டு பேரும் இன்னும் இன்னும் மேன்மேலும் நல்லா வருவேங்கள் பாரு. எங்க ஆசிர்வாதம் எப்பவுமே உங்க ரெண்டு பேருக்கும் உண்டு. சந்தோஷமா போயிட்டு வாங்கோ”

“ம்….உனக்குப் பட்டது போலவே தான் என் மனசிலேயும் அப்போ பட்டுது மா. கடவுள் இருக்கார் மா இருக்கார்.”

“சரி உங்க மாமனார் மாமியார் கிட்ட சொல்லியாச்சா? இதைக் கேட்டா அவாளும் சந்தோஷப்படுவாயில்லையா!!”

“ம்….ம்….சொல்லணும் சொல்லணும்”

“சரி அதுதான் மாப்பிள்ளை ஊர்லேந்து வந்துட்டாரே நாங்க சென்னைக்குப் போகலாமா?”

“ஏன்மா? என்ன அவசரம்? நாங்க இன்னும் இரண்டு மாசத்துல குவைத்துக்கு போயிடுவோம் அப்புறம் வருஷத்துக்கு ஒரு தடவைத் தான் பார்த்துக்க முடியும் ஸோ….இங்கேயே எங்கக் கூட இருந்துட்டு நாங்க ஊருக்குப் போற அன்னைக்கு எங்க கார்லேயே நீங்க சென்னைப் போயிடுங்கோ. அந்த காரை நீங்க யூஸ் பண்ணிக்கோங்கோ”

“யாரு ஓட்டறதாம்?”

“இங்கேந்து சென்னை போக நாங்க டிரைவர் ஏற்பாடு பண்ணறோம். அங்க லோக்கல் ல நீங்க ஏற்பாடு பண்ணிக்கோங்கோ”

“இவ்வளவு நல்ல வண்டியை டிரைவரை நம்பி எல்லாம் குடுக்கலாமா மிருது”

“உங்களால ஓட்ட முடியாது இல்ல அப்போ குடுத்துத்தான் ஆகணும். ஒண்ணும் ஆகாது மா. வண்டியை யூஸ் பண்ணாம வச்சிருந்தாலும் வேஸ்ட்டாகிடும்.”

“ஓ!! அப்படி வேற இருக்கா? பேசாம வித்திடுங்கோளேன்”

“பாதி காசுக் கூட கிடைக்காது மா. அதுக்கு நீங்க யூஸ் பண்ணிக்கோங்கோளேன்”

“ம்….பார்ப்போம் பார்ப்போம்”

“அதுக்கு பெட்ரோல் போடுற காசுல நாங்க நாலு மாசம் எலக்ட்ரிக் ட்ரெயின் ல போயிட்டு வருவோம் மிருது.”

“அப்பா…. என்னமோ பண்ணுங்கோ.”

அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் அன்று அனைவருக்கும் கால் செய்து விஷயத்தை சொல்லலாமென்றிருந்தனர் நவீனும் மிருதுளாவும். அதுபடியே முதலில் ஈஸ்வரன் வீட்டுக்குக் கால் செய்தனர்.

“ஹலோ அப்பா நான் மிருது பேசறேன்”

“ஆங் நான் ஈஸ்வரன் பேசறேன் சொல்லு. எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”

“நாங்க நல்லா இருக்கோம். ஒரு குட் நியூஸ் சொல்லத் தான் நாங்க கால் பண்ணினோம்ப்பா”

“அப்படியா என்னது?”

“நாங்க குவைத்துக்கு ஷிஃப்ட் பண்ணப்போறோம். நவீன் அங்கே ஜாப் ல ஜாயின் பண்ணப்போறார்.”

“ஓ!! அப்படியா…அதுதான் நீங்க ரொம்ப வருஷமா ட்ரை பண்ணினது தானே!! ஓகே ஓகே”

என்றதும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. உடனே நவீன் ஈஸ்வரனிடம்

“நான் அங்கே ட்ரைப் பண்ணி போகலை!! நான் இப்போ வேலைப் பார்க்குற கம்பெனியே என்னை அங்கே அனுப்பறா. நாங்க ரொம்ப வருஷமா ட்ரைப் பண்ணறோம்னு உனக்கு யார் சொன்னா?”

“இல்லடா கவின் கிட்டக் கூட நீ சொல்லியிருந்தயே!!! அவன் தான் சொன்னான்.”

“ஆமாம் ஆமாம் அவன் அதுவும் சொல்லுவான்…அதுக்கு மேலேயும் சொல்லுவான். இந்த வேலையே அவன் தான் வாங்கிக் குடுத்தான்னும் சொல்லுவான் உன் புள்ளை….சரி நான் ஃபோனை வைக்கறேன்”

“ம்…இருங்கோ நவீ. என்கிட்டக் குடுங்கோ.‌.அப்பா… அம்மாகிட்டேயும் குடுங்கோ சொல்லறேன்.”

“ம்…அவ இங்க இல்ல வெளியப் போயிருக்கா. சரி வச்சுடறேன்”

என்று ஃபோனைக் கட் செய்தார் ஈஸ்வரன். அதைக் கேட்டதும் நவீன் மிருதுளாவிடம்

“பார்த்தையா மிருது…மனசார ஒரு கங்க்ராட்ஸ் டான்னு கூட சொல்ல வாய் வரலைப் பார்த்தையா!!! என்னத்துக்கு அந்த லேடி கிட்ட பேசணும்னு சொல்லி அசிங்கப் பட்ட ?? உனக்கு தேவையா? இதுக்குத் தான் நான் சொன்னேன் இவா கிட்ட எல்லாம் ஒண்ணும் சொல்லிக்க வேண்டாம்னு…”

“சரி சரி விடுங்கோ நவீ…நாம நம்ம கடமையை சரியா செஞ்சிடுவோமே. நாம என்ன அவா வாழ்த்தணும்னு எதிர்ப்பார்த்தா விஷயத்தை சொன்னோம்?”

“ஏன் மா ஒரு நல்ல விஷயத்தை சொல்லும் போது எல்லாருமே வாழ்த்த தானே செய்வா…”

“சரி நாம அடுத்து உங்க தம்பிகள்ட்ட பேசலாம்”

“ஏன் அன்னைக்கு கிரகப்பிரவேசத்துக்கு கூப்பிடப்போய் ஒருத்தி ஃபோனை ஆன் பண்ணினது கூட தெரியாத மாதிரி திமிரா பேசினா…இன்னொருத்தன் ஃபோனையே எடுக்கலை..தேவையா நமக்கு? அதுதான் அவா அப்பா கிட்ட சொல்லியாச்சு இல்ல அவர் சொல்லிப்பார். அது போதும் விடு நாம நம்ம ஃப்ரெண்ட்ஸ் அன்ட் அதர் ரிலேட்டிவ்ஸ்க்கு சொல்லுவோம்.”

என்று எல்லோரிடமும் தாங்கள் வெளிநாட்டுக்கு செல்வதாச் சொல்லி முடித்ததும் நவீன்

“இங்க பாரு மிருது இந்த விஷயத்தையும் ஏதாவது வேற விதமா பரப்பி உன்னை நிம்மதியா இருக்க விடமா பண்ணுவா. ஸோ நீ கூலா இரு சரியா”

“ம்…ம்…ஓகே. ஆனா இந்த விஷயத்தை என்னப் பண்ணுவா? சொல்ல முடியாது இதையும் நீங்க சொல்லறா மாதிரி ஏதாவது சொல்லிப் பரப்பியிருப்பா இன்னேரம்”

“ஆங் அப்படி எதிர்ப்பார்த்துண்டே இரு அப்போ ஏமாற்றமே இருக்காது.”

சக்தி எல்லாப் பரீட்சைகளையும் முடித்து, அதில் தொன்னூற்றி ஐந்து சதவிகிதம் மார்க் எடுத்து பத்தாவது வகுப்பில் தேர்ச்சியானாள். புது நாட்டில் தன் அப்பா பார்த்து வைத்திருந்த ஐந்து பள்ளிகளிலும் அப்ளை செய்து, நேர்காணலில் பங்கெடுத்துப் பேசி… அனைத்திலிருந்தும் அவளுக்கு அட்மிஷன் கிடைத்தது. அதிலிருந்து அவளுக்குப் பிடித்தப் பள்ளிக்கூடத்தை அவளே தேர்வும் செய்தாள். ஆக பள்ளிக்கூட அட்மிஷன் எந்தவிதப் பிரச்சினையுமின்றி நடந்தது. அடுத்து தங்குவதற்கு வீடு…அதைப் பற்றி மிருதுளா கேட்டதற்கு நவீன்

“அதெல்லாம் நோ இஷ்ஷூஸ் மிருது. என் கம்பெனி ஒன் மந்த் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் தந்திடுவா. அதுக்குள்ள நாம வீடுப் பார்த்துக்கலாம். அவாளும் ஹெல்ப் பண்ணுவா”

“ஓ!! அப்போ ஓகே”

ஒரு நாள் கஜேஸ்வரியிடமிருந்து வாட்ஸ்அப் கால் வந்தது. அதை அட்டென்ட் செய்தாள் மிருதுளா

“ஹலோ கஜேஸ்வரி எப்படி இருக்க? அட கவினும் இருக்கான்!! இன்னைக்கு லீவா?”

“இல்ல மன்னி இதோ கிளம்பிட்டேன். சரி உங்ககிட்ட பேசிட்டிப் போகலாமேனு வெயிட் பண்ணறேன்”

“அப்படியா என்ன விஷயம்?”

“எங்க பையனோட உபநயனம் வர்ற ஜூன் மாசம் 28 ஆம் தேதி வசாசிருக்கோம் அதுக்கு இன்வைட் பண்ணத் தான் கால் பண்ணினோம். பத்திரிகை எல்லாம் அடிச்சாச்சு. அதை எல்லாருக்கும் அனுப்பவும் ஆரம்பிச்சாச்சு.‌‌நவீன் கிட்ட அப்புறமா கால் பண்ணி சொல்லிக்கறேன்”

என்று கவின் சொல்லி முடிப்பதற்குள் கஜேஸ்வரி முந்திக்கொண்டு

“ஆமாம் மன்னி அப்புறமா கூப்பிடவே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது இல்லையா அதுதான் எல்லாரையும் கூப்பிட்டு சொல்லிடலாம்ன்னு தான் கால் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்.”

“கூப்பிடலைன்னா கூப்பிடலைன்னு தான் சொல்லுவா கஜேஸ்வரி. ஒருத்தரை நாம இன்வைட் பண்ணினா அவா ஏன் பண்ணலைன்னு சொல்லப்போறா? அப்படி எல்லாம் யாருமே சொல்ல மாட்டா….எஸ்பெஷலி நாங்க அப்படி சொன்னதில்லை சொல்லவும் மாட்டோம்”

“அய்யோ மன்னி நான் பொதுவா தான் சொன்னேன்”

“நான் பொதுவாவும் ப்ளஸ் எங்களையும் சேர்த்து தான் சொன்னேன்.”

“அந்த ஃபங்ஷன் முன்னாடி சுமங்கலிப் பிரார்த்தனை வைக்கலாம்னு இருக்கேன். நாங்க இந்தியாவுக்கு இரண்டு வாரம் முன்னாடி தான் வருவோம் …ஸோ‌..அது தான் ரெண்டு டேட் இருக்கு ஒண்ணு இருபத்தி இரண்டு இன்னொன்னு இருபத்தி ஆறு. உங்களுக்கு எது வசதியான தேதினு சொல்லுங்கோ அன்னைக்கே வச்சுக்கலாம்”

இதைக் கேட்டதும் மிருதுளா மனதிற்குள்

“என்னடா இது ….இது நாள் வரை ஏன் ஏதுனு கேட்கக்கூட ஆள்ளில்லாம இருந்தோம்.‌..இப்போ என்னடான்னா என் வசதி எல்லாம் கேட்கிறாளே!!! இல்லை இதுல ஏதோ ஒண்ணு இருக்கு…உஷார் மிருது”

“மன்னி என்ன நான் பாட்டுக்கு கேட்டுண்டே இருக்கேன் நீங்க ஏதோ யோசனையில இருக்கீங்க?”

“ம்‌…ஆங்…‌ஆங்…எதுக்கு என் வசதி எல்லாம் பார்த்துண்டு!!! உங்களுக்கெல்லாம் எது வசதியோ அதை செய்ய வேண்டியது தானே….அது தானே உங்க வழக்கமும்.”

“இல்ல மன்னி இதுவரை நம்மாத்துல நடந்த சுமங்கலிப் பிரார்த்தனைக்கு உங்களால வரமுடியலை இல்லையா அது தான் இந்த தடவை உங்க டேட் எல்லாம் முடிஞ்சு நீங்க ஃப்ரீயா இருக்குற நாளா சொல்லுவீங்களேன்னு தான் இரண்டு டேட் சொன்னேன்.”

“அப்படி மாத்தி சொல்லாதே கஜேஸ்வரி. என்னால வர முடியாததால நான் வரமா இல்லை. என்னை வரவிடாம சில பேர் பார்த்துண்டா அதுனால தான் நான் அட்டென்ட் பண்ணலை. ஓகே….அதுனால எனக்கு ஒண்ணும் இல்லை ஆனா ஒரு சுமங்கலியை வரக்கூடாது என்று நினைத்து பண்ணினவாளுக்கு தான் அந்த மகாபாவம் போய் சேரும்!”

“சரி மன்னி இப்போ சொல்லுங்கோ இருபத்தி இரண்டா இல்ல இருபத்தி ஆறா?”

“நீ என்னவோ ரொம்ப வற்புறுத்தி கேட்கிறதால சொல்லறேன் ….இருபத்தி அஞ்சு எனக்கு டேட்… ஸோ இருபத்தி இரண்டு எனக்கு ஓகே போதுமா”

“அச்சச்சோ அப்படியா?”

“ஏன் என்னாச்சு?”

“இல்ல எனக்கு இருபத்தி இரண்டு டேட்….அது தான் யோசிக்கறேன்….அதுவுமில்லாம இருபத்தி ஆறு வச்சுண்டா விசேஷத்தை ஒட்டி வர்றதால எல்லாரும் இதுக்கும் வந்துட்டு அப்படியே விசேஷத்தையும் அட்டென்ட் பண்ணிட்டு போயிடுவாளேன்னு யோசிச்சோம்”

“இதுக்கு தான்… நான் முன்னாடியே சொன்னேன் உன் இஷ்டத்துக்கு வச்சுக்கோன்னு. சரி ரெண்டு தேதியை முடிவு பண்ணும் போது உனக்கு தெரியாதா இருபத்தி இரண்டு உனக்கு ஒத்து வராதுன்னு!!”

“தெரியும் மன்னி அது தான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்”

“அப்போ எப்படி அன்ட் எதுக்கு என் கிட்ட ரெண்டு தேதியை எல்லாம் சொல்லி என்னமோ என் வசதிப்படி வைக்கறா மாதிரி எல்லாம் டிஸ்கஸ் பண்ணின? எப்படியும் எப்பவும் போல உன் வசதிப்படி நான் இல்லாத மாதிரி தான் வைக்கப் போற ….அதுக்கு எதுக்கு இவ்வளவு நேரம் வேஸ்ட் பண்ணின?”

“அய்யோ!! மன்னி இன்னும் நாங்க டிசைட் பண்ணலை.”

“ம்….நீ கேட்ட நான் சொல்லிட்டேன். இனி உன் இஷ்டம். சரி அதை விடு. உன் மாமா உன்கிட்ட நாங்க குவைத் ஷிஃப்ட் ஆகப் போறதைப் பத்தி சொன்றாரா?”

“இல்லையே !!!”

“என்னது இல்லையா?! நம்பறா மாதிரி இல்லையே கஜேஸ்வரி. உன் மாமா உன் கிட்ட எதையுமே சொல்லாம இருக்க மாட்டாரே!!”

“ஆங் ..ஆங் ….சொன்னா….சொன்னா! நாங்க கொஞ்சம் இந்த ஃபங்ஷன் வேலைகள்ல பிசியா …அது தான் ஞாபகமில்லை”

என்று கஜேஸ்வரி சொல்லி முடிக்கவும் கவின் டக்கென்று

“நவீன் இங்கே எந்த கம்பெனியில் ஜாயின் பண்ணப்போறான்?”

“அவர் இப்போ வேலைப் பார்க்கற கம்பெனியோட ப்ராஞ்ச் அங்கேயும் இருக்கு அதுல தான்.”

“ஓ !!! அப்போ விசா எல்லாம்”

“அவருக்கு கிடைச்சாச்சு. எங்களுக்கு டூரிஸ்ட் விசால அங்கே வந்துட்டு தான் டிப்பென்டன்ட் விசாக்கு மாத்தணும்”

“ஓ!! நவீனுக்கு விசா ஆயிடுத்தா? அப்படின்னா அவன் இங்கே வந்திருக்கணுமே”

“ஆமாம் ஒரு மாசம் அங்கே தான் இருந்தார்”

“அப்படியா!!! சொல்லவேயில்லையே!!”

“அதை நீ அவர்கிட்ட தான் கேட்கணும்”

“சரி அப்போ வீடெல்லாம் பார்த்தாச்சா?”

“இல்லை இல்லை…அங்க நாங்களும் வந்ததுக்கப்புறமா தான் பார்க்கணும்”

“ஓ! அப்போ இங்கே வந்ததும் தங்கறதுக்கு ஆஃபிஸே அக்காமடேஷன் தந்திடறாளோ”

“ஆமாம் ஒன் மந்த் ஒன் டவர்ஸ்ன்னு ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் தந்திருக்கா. அதுக்குள்ள வீடு தேடணும். சரி நீங்க இருக்குற ஏரியா எது?”

“நாங்க ஏர்போர்ட் கிட்ட இருக்கோம். எங்காத்துலேந்து பார்த்தா ப்ளைட்ஸ் டேக் ஆஃப் லேண்டிங் எல்லாமே தெரியும்”

“அப்படின்னா ரொம்ப நாய்ஸியா இருக்குமோ”

“இல்ல பால்கனி கதவை திறந்தா நான் சவுண்டு வரும்…இல்லாட்டி எதுவும் கேட்காது. சக்திக்கு ஸ்கூல் பார்த்தாச்சா?”

“ஆங்!! அதெல்லாம் பார்த்து அட்மிஷனும் கிடைச்சாச்சு. நாங்க ஜூலை பத்தாம் தேதி கிளம்பலாம்னு இருக்கோம். இன்னும் டிக்கெட் புக் பண்ணலை. பார்ப்போம்”

“ம்…சரி மன்னி நான் வேலைக்கு போகணும் டைம் ஆயிடுத்து நீங்க கஜேஸ்வரிட்ட பேசிண்டிருங்கோ”

என்று அண்ணனுக்கு ஒரு வாழ்த்து சொல்லக்கூட மனமின்றி விவரங்களை மட்டும் சேகரித்துக் கொண்டதும் கிளம்பிவிட்டான் கவின். அவன் சென்றதும் கஜேஸ்வரி மிருதுளாவிடம்

“ஓ!! மன்னி நீங்க உங்க புது வீட்டுல இருக்கீங்க இல்ல…அதுதானே என்னடா பின்னாடி அந்த புத்தர் ஃபோட்டோவைப் பார்த்ததும் நினைச்சேன்…..சரி அப்படியே வீட்டை வீடியோவிலேயே சுத்திக் காட்டுங்கோ”

மிருதுளாவும் வீட்டை தன் கைபேசி மூலம் சுற்றிக் காண்பித்து வந்து சோஃபாவில் அமர்ந்தாள். அப்போது கஜேஸ்வரி

“ம்…மன்னி கடகடன்னு காமிச்சிட்டு வந்துட்டேங்கள். சரி மன்னி எனக்கு வேலையிருக்கு பை. அப்புறமா பேசறேன்”

என்று அவள் காரியம் முடிந்ததும் ஃபோனை வைத்தாள் கஜேஸ்வரி. கவின் கஜேஸ்வரி இருவருமே மிருதுளா அவர்கள் ஊருக்கு வருவதாக சொல்லியும் தங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைக்காதிருந்தனர். இப்படியும் சில மனிதர்கள்….கூடப்பிறந்தவர்கள்!!!!!

அன்று மாலை நவீன் வந்ததும் மிருதுளா கவின் கஜேஸ்வரியின் கால் பற்றிய விவரங்கள் அனைத்தையும் கூறி….

“நவீ அவா ஒரு வாழ்த்துக் கூட சொல்லலை. நான் இன்ன தேதிக்கு வருவோம்னு சொல்லியும் எங்க தங்கப் போறேங்கள்னு உங்க தம்பி கேட்டானே ஒழிய ஆத்துக்கு வாங்கோனு சொல்லலைப்பா. இது நாள் வரைக்கும் அவா நம்மளை அவா நடத்தின எந்த விசேஷத்துக்கும் மதிச்சு கூப்பிட்டதே இல்லை ஆனா இப்போ என்னடான்னா என்னோட வசதி எல்லாம் கேட்கறாளேன்னு நானும் அவ சொன்ன இரண்டு தேதில ஒண்ண சொன்னா உடனே அந்த இன்னொரு தேதி தான் அவளுக்கு வசதினு டக்குனு ப்ளேட்டை மாத்திட்டா தெரியுமா!!! என்னமோ எனக்கு முக்கியத்துவம் குடுக்கறா மாதிரி பேசிட்டு கடைசியில அவ டிசைட் பண்ணிருக்கறதை தான் சொன்னா தெரியுமா….அப்பப்பா என்னமா பேசறாப்பா!!!”

“மிருது உனக்கு இன்னமும் ஒரு விஷயம் புரியலை”

“அவா ஏன் நான் இருக்கும் போது கால் பண்ணாம…நான் ஆஃபீஸ் போன நேரமா பாத்து பேசிருக்கா? எல்லாம் வம்பு. நான் இருக்கும் போது பேசியிருந்தா இவ்வளவு விஷயங்களை அவாளால கலெக்ட் பண்ணிருக்க முடியாதே!!! அதுவுமில்லாம இது வரை நம்மை எதுக்குமே கால் பண்ணி இன்வைட் பண்ணாதவா திடீர்னு இப்படி பண்ணறான்னா!!!! ….திருந்திட்டான்னு எல்லாம் தப்புக் கணக்குப் போட்டுடக் கூடாது!!! எல்லாமே விஷயம் தெரிஞ்சுக்கறதுக்காக மட்டுமே. அதுனால தான் அவாளுக்கு வேண்டிய விஷயத்தை மட்டும் தெரிஞ்சுண்டதும் கிளம்பிட்டா. இனி இந்த விவரங்களை எல்லாம் வச்சுண்டு என்ன டிராமா போடப்போறாளோ!!!”

“அச்சச்சோ அப்போ நானா அவாகிட்ட சொல்லிருக்கக்கூடாதோ? சாரிப் பா”

“நீயா சொல்லாட்டாலும் அவா உன் கிட்டேந்து எப்படி கேட்டு வாங்கணுமோ அப்படி பேசி விவரத்தை வாங்கியிருப்பா. இன்னைக்கு அவாளோட கால் பர்பஸ்ஸே அதுதான். ஸோ நீ வருத்தப் படாதே. ஆனா இனி நல்லா உன் மனசுல ஒண்ணு வச்சுக்கோ எப்பவுமே இந்த ஆளுகள்ட்ட எல்லாத்தையும் விலாவாரியா சொல்லாதே. விஷயத்தை சொன்னா மாதிரியும் இருக்கணும் ஆனா சொல்லாத மாதிரியும் இருக்கணும்”

“அது எப்படி நவீ சொன்னா மாதிரியும் இருக்கணும் சொல்லாத மாதிரியும் இருக்கணும்”

“ஃபார் எக்ஸாம்பிள்….இன்னிக்கு நீயா சொல்லாட்டினாலும் அவாளா கேட்டிருப்பா அப்போ நீ ஆமாம் வர்றப்போறோம்னு மட்டும் சொல்லிட்டு மத்ததுக் கெல்லாம் எனக்கு தெரியாது அதை நீங்க நவீன்ட்ட தான் கேட்கணும்னு சொல்லியிருந்தேன்னா அங்கேயே கால் கட் ஆகியிருக்கும். ஸோ நீ நாம ஷிஃப்ட் ஆகறதை சொன்ன ஆனா ஃபுல் டிட்டேய்ல்ஸும் சொல்லலை இது மாதிரி தான். இன்னும் க்ளியரா சொல்லணும்னா உன் மச்சினன் அந்த கவின் எப்படி அவா இருக்கற இடத்தைப் பத்தி சொன்னான் ஆனா இடத்தின் பெயரை சொல்லலை இல்லையா அது மாதிரி….உன் ஓர்பிடி அந்த கஜேஸ்வரி எப்படி தேதி எல்லாம் சொல்லறா மாதிரி சொன்னா ஆனா கரெக்ட்டான தேதி இன்னமும் உனக்குத் தெரியலை அது மாதிரி….புரிஞ்சுதா?”

“ஆங்!!! புரிஞ்சுது நவீ. இனி நீங்க சொன்னா மாதிரியே நடந்துக்கறேன். இப்போ இருபத்தி ஆறாம் தேதி சுமங்கலிப் பிரார்த்தனை வச்சிண்டான்னா நான் இந்த தடவையும் அட்டென்ட் பண்ண முடியாதே நவீ”

“விடு மிருது அவா எல்லாம் நல்ல மனசோட எதுவுமே பண்ணறதில்லை அதுனால அதுல கலந்துக்காட்டாலும் தப்பில்லை. நீ மனசார வருஷத்துக்கு பதினைந்து சுமங்கலிகளுக்கு நவராத்திரி சமயத்துல செஞ்சிண்டு வர இல்ல அது போதும். அந்த அம்பாளின் ஆசிர்வாதம் நமக்கு எப்போதுமிருக்கும்.”

“ஓகே நவீ டன்”

“சரி இன்னைக்கு என் ஆஃபீஸ் டிராவல்ஸ்லேந்து ஃபோன் பண்ணினா அவா ஜூன் பத்தாம் தேதிக்கு டிக்கெட் புக் பண்ணிட்டாளாம். பேக்கிங்க்கு இன்ட்டர் நேஷனல் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸும் ஏற்பாடு பண்ணிட்டாளாம். அவா ஜூன் எட்டாம் தேதி வந்து எல்லாத்தையும் பேக் பண்ணி ஷிப் பண்ணிடுவா. நமக்கு குவைத்துல ஒரு மாசம் கழிச்சு தான் நம்ம பொருள் எல்லாம் வந்து சேரும்ன்னும் சொல்லிட்டா. ஸோ நமக்கு எக்ஸாக்ட்டா ஒரு மாசம் தான் இன்னும் இருக்கு”

“அச்சச்சோ ஜூலைப் பத்திலிருந்து ஜூன் பத்தாகிடுத்தா?”

“ஆமாம் மிருது”

“சரி அப்போ நம்ம பொருள் குவைத் வந்து சேரும் வரைக்கும் நாம எப்படி சமைக்கறது சாப்பிடறது?”

“அதுதான் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் இருக்கே மிருது”

“ஓ!! சாரி மறந்துட்டேன். அப்படின்னா நாம கவின் புள்ளையோட விசேஷத்துக்கு இருக்க மாட்டோமா?”

“ம்..ஹூம் மாட்டோம். ஆமாம் நமக்கு தான் மொதோ பத்திரிகை வர்றப் போறது பாரு!!! அதெல்லாம் சும்மா மிருது எப்பவும் போல அவாளோட பத்திரிகை டிராமாவைப் போடப் போறா”

“அப்படி சொல்லாதீங்கோ நவீ…மனுஷான்னா மாறாமையே வா இருப்பா? நீங்க வேணும்னா பாருங்கோ நாம குவைத் போணோம்னா… நாம இருக்குற இடத்துத்துக்கு வந்து நம்மளை கூப்பிடுவா. நாமும் குழந்தையை ஆசிர்வாதம் பண்ணுவோம் பாருங்கோ.”

“அதெல்லாம் நடக்கவே நடக்காது மிருது. வீணா கற்பனை எல்லாம் பண்ணாதே. நாம நம்ம வேலையைப் பார்ப்போம்…நாம தங்கப் போற இடம் அவாளுக்கு தெரியாதே அப்புறம் எப்படி வருவா?”

“நான் சொல்லி இருக்கேன் நவீ.”

“சூப்பர் மிருது. குட் ஜாப். சரி சரி இனிமே இப்படி எல்லாத்தையுமே டிட்டேய்லா சொல்லிண்டிருக்காதே. நீ சொன்னாலும் அவா வரமாட்டா”

“பார்ப்போமே!! சரி நவீ நமக்கு இப்படி ஒரு சந்தோஷமான விஷயம் நடக்கப் போறது ஸோ நாம நம்ம பேரன்ட்ஸ் நாலு பேருக்கும் பட்டுப் புடவை அன்ட் வேஷ்டி சட்டை எடுத்துக் குடுத்து அவாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிண்டு தான் இங்கேந்து புறப்படணும்”

“இங்க பாரு மிருது உன் பேரன்ட்ஸுக்கு வேணும்னா எடுத்துக் குடு அவா உண்மையிலேயே சந்தோஷப்படுவா ஆனா என் பேரன்ட்ஸ் பார்த்தே இல்ல நல்ல விஷயம் சொன்னதுக்கே ஒரு வாழ்த்து இல்ல சந்தோஷப்படலை…நாம எப்போ எது எடுத்துக் குடுத்தாலும் அதுல ஏதாவது குத்தம் தான் சொல்லிருக்கா…ஏன்??… உன் மாமியார்ட்ட இன்னுமா உன் மாமனார் விஷயத்தை சொல்லிருக்க மாட்டார்…அவ ஒரு ஃபோன் போட்டு வாழ்த்திருக்கலாமில்லையா…..நீ உன் அப்பாகிட்ட மட்டும் ஏதாவது சொல்லிட்டு வச்சிருந்தா அதை உன் அப்பா உன் அம்மா கிட்ட சொன்னதும் உன் அம்மா உடனே உனக்கு ஃபோன் போட்டு விஷ் பண்ணிருக்க மாட்டா? ஆனா இங்கே பாரு!!”

“விடுங்கோ நவீ. அவா குணம் அது. அதுக்காக நாம ஏன் நம்ம குணத்தை மாத்திக்கணும்? நான் எப்பவுமே சொல்லறது தான் நவீ…நாம நம்ம கடமையைச் செய்வோம்.”

“ரொம்ப செஞ்சாச்சு மிருது.”

“ப்ளீஸ்ப்பா.”

“சரி சரி என்னமோ பண்ணு”

“நாம இந்த வீக்கென்ட் போய் எல்லாம் வாங்கிண்டு வருவோம் சரியா”

“ம்…ம்…ஓகே!

என்று இருவரும் பேசிவிட்டு உறங்கச் சென்றனர்.

அந்த வார இறுதியில் கடைக்குச் சென்று தங்கள் பெற்றவர்களுக்கு இரண்டுப் பட்டுப் புடவை மற்றும் இரண்டு வேஷ்டி சட்டை எல்லாம் எடுத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டிய உடைகளையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து காரிலிருந்து இறங்கியதும் அம்புஜத்தின் சமையல் வாசம் வாசல்வரை வந்தது. உடனே வேகமாக வீட்டினுள் சென்று கை கால் அலம்பி விட்டு சாப்பிட அமர்ந்தனர்.
அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் மிருதுளாவும் அம்புஜமுமாக சப்பிட்ட இடத்தை எல்லாம் சுத்தம் செய்து விட்டு வந்து ஹாலில் அமர்ந்தனர். அப்போது மிருதுளா ஒரு பையை இழுத்து தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு அதிலிருந்து இரண்டு கவர்களை எடுத்து நவீனை தன் பக்கத்தில் வரவழைத்து அப்பா அம்மாவிடம் இருவருமாக கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினர். அதை வாங்கிக் கொண்ட அம்புஜமும் ராமானுஜமும்

“என்னது இது?”

“பிரிச்சுப் பாருங்கோ”

“அட பட்டுப் புடவையா? என்னத்துக்கு இப்போ?”

“சட்டை வேஷ்டி!! உங்களுக்கே இப்போ ஷிஃப்டிங் அது இதுனு எக்கச்செக்க செலவிருக்கு இதுல ஏன்ம்மா இதெல்லாம்?”

“அப்பா அதெல்லாம் என் கம்பெனி பார்த்துக்கும். எங்களுக்கு ஒரு செலவுமில்லை. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கா?”

“ஓ! ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க குழந்தைகள் நீங்க வாங்கித் தந்தது பிடிக்காம போயுடுமா!”

“அது!”

“சரி மா நாங்க குவைத்துக்கு போறதுக்கு நாலு நாள் முன்னாடி ஒரே ஒரு நாள் நவீ ஊருக்குப் போயிட்டு எங்க மாமனார் மாமியார்கிட்டேயும் வாங்கின புடவையையும் வேஷ்டி சட்டையையும் குடுத்துட்டு அன்னைக்கு நைட்டே திரும்பி வந்திடறோம். நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருந்துப்பேங்கள் இல்ல”

“ஓ!! தாராளமா போயிட்டு வாங்கோ நாங்க இருந்துப்போம். அதுதான் எங்களுக்கு இங்க ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டாளே!! அதுவுமில்லாம காலையில போயிட்டு நைட்டு வந்திடப் போறேங்கள் அப்புறம் என்ன?”

“ஆங் !! நாங்க ஜூன் பத்தாம் தேதி காலையில அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பி பெங்களூர் ஏர்போர்ட் போயிட்டு அங்கேந்து ப்ளைட் பிடிச்சுப் போகணும். உங்களுக்கு ஒன்பதாம் தேதி டிரைவர் ஏற்பாடு செய்திருக்கேன். அவர் வந்து உங்களை நம்ம காரிலேயே சென்னை கூட்டிண்டு போய் விட்டுவிடுவார்.”

“சரி மாப்ள.”

குவைத்துக்கு கிளம்பும் முன் ஊருக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும் சக்தியும். அங்கே ஈஸ்வரன் பர்வதத்திடம் வாங்கி வந்ததைக் கொடுத்து காலில் விழுந்து நமஸ்காரம் செய்தனர். அப்போது பர்வதம்

“சரி அப்போ அந்த மைசூர் வீட்டை என்னப் பண்ணப் போறேங்கள்?”

“அதைப் பூட்டிப் போட்டுட்டுப் போகப்போறோம்”

“வாடகைக்கு விட வேண்டியது தானே!”

“இல்லை இல்லை ஒரு தடவை வாடகைக்கு விட்டுட்டே படாத பாடு பட்டுட்டோம். போதும்ப்பா போதும்”

“வீடு மேல வீடு வாங்கினாலும் அதுல இருக்குற பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கறதில்லை இல்லையா”

என்று பர்வதம் சொன்னதும் நவீனும் மிருதுளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்போது ப்ரவீனும் துளசியும் குழந்தைகளுடன் ஈஸ்வரன் வீட்டிற்குள் நுழைந்தனர்.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s