காலை ஆறு மணி ஆனது. நவீன் மிருதுளா ரூமின் கதவு டக் டக் டக் டக் என பலமாக தட்டும் சத்தம் கேட்டு மிருதுளா கடிகாரத்தை பார்த்தாள் மணி ஆறு காட்டவும் பதறியடித்து எழுந்து கதைவைத்திறந்தாள் யாரையும் காணவில்லையே என எண்ணிக்கொண்டே திரும்பலானாள் அப்பொழுது பார்த்தாள் பக்கத்துவீட்டு சிறுவன் கார்த்திக் நின்று கொண்டிருந்ததை.
“ஏய் குட்டி பையா நீ தான் கதவ தட்டினியா?”
“ஆமாம் அக்கா. பர்வதம் மாமிதான் மணி ஆறாச்சு நீங்க இன்னும் எழுந்திரிக்கல னு என்னை கதவ தட்டி எழுப்பிவிடச் சொன்னாங்க. அக்கா நானே எழுந்துருச்சிட்டேன் நீங்க இன்னுமா தூங்கரீங்க..நவீன் அண்ணா எங்க” என்று உள்ளே செல்ல முயன்ற சிறுவனை தடுத்து தாங்கள் கீழே வருவதாக பர்வதம் மாமியிடம் சொல்லும்படி சொல்லி அனுப்பினாள்.
மிருதுளாவை விடிந்ததும் சிறுவனின் மூலம் அவமானப்படுத்த துவங்கினாள் பர்வதம். கீழே வந்து பல் துலக்கியவுடன் குளிக்கச் சென்றாள் மிருதுளா. அது அவளது வழக்கம். குளித்து முடிந்ததும் ஹாலுக்கு வந்தாள். அவளருகே காபிவை வைத்துவிட்டு…
“இந்தா காபி. உனக்கு இதுதான் காலை அஞ்சு மணியோ?” என முனுமுனுத்துக்கொண்டே அடுப்படிக்குள் சென்றாள்.
மிருதுளாவிற்கு என்ன சொல்வது… என்ன செய்வதென்று தெரியாமல் காபியை குடித்துவிட்டு அந்த டம்பளரையும் மற்ற அங்கு கிடந்த பாத்திரங்களையும் தேய்த்து வைத்து அடுப்படிக்குள் சென்று ஏதாவது செய்ய வேண்டுமா என்று கேட்க அதற்கு பர்வதம்
“இவ்வளவு லேட்டா வந்து கேட்டா. எல்லாம் ஆயாச்சு” என்று கூறி வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டாள். அங்கு இருந்த தனது மச்சினர்களை பார்த்து “ஹாய் குட் மார்னிங்” என்றாள் அவர்களும் “குட்மார்னிங்” என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்கலானார்கள்.
மாமனார் உள் ரூமிலிருந்து வரவும் மிருதுளா எழுந்து “குட்மார்னிங்” என்று சொல்ல அவரும் வெறுமனே தலையை மட்டும் அசைத்துவிட்டு ரேடியோவை ஆன் செய்து செய்திகளைக் கேட்கலானார். அவரகள் யாருமே ஒருத்தி அங்கு செய்வதறியாது நிற்கிறாளே தானாக பேச்சுக்குடுக்க முன்வருகிறாளே என்று துளியும் புரியாதது போலவே பாவனை செய்து கொண்டிருந்தார்களா இல்லை அவர்கள் குடும்பமே அப்படி தானா என்ற சந்தேகம் மிருதுளாவின் மனதில் எழுந்தது.
மிருதுளாவிற்கு ஏதோ ஒரு அன்னிய வீட்டினுள் யாருமே இல்லாமல் தனித்து நிற்பது போல் இருந்தது. நவீன் எப்போது எழுந்து வருவார் என மனதில் நினைத்துக்கொண்டே மாடிப்படியை பார்த்தாள் நவீன் கீழே இறங்கி வந்துக்கொண்டிருந்ததைப் பார்த்து “அப்பாட” என பெருமூச்சு விட்டாள். அவன் ஃப்ரெஷ் அப் ஆகி வந்ததும் மிருதுளாவைப் பார்த்து
“ஹே மிருது அதுக்குள்ள குளிச்சிட்டயா. குட் குட் ” என கூறிக்கொண்டே பர்வதம் கையிலிருந்து காபியை வாங்கிக்கொண்டான். நவீனுடனும் அவர்கள் அவ்வளவாக யாருமே பேசவில்லை. அதனால் அவர்களின் சுபாவமே அதுதான் என மனதில் நினைத்துக்கொண்டாள் மிருதுளா.
“நான் மன்டே டூ ஃப்ரைடே உன்ன மாதிரிதான் எழுந்ததும் குளித்துவிட்டு தான் வருவேன் ஆனால் சாட்டர்டே சன்டே மத்தியான சாப்பாட்டுக்கு முன்னாடிதான் குளிப்பேன். சரி நீ சீக்கிரம் ரெடி ஆகு நாம வெளில போகனும்” என்றதும் மிருதுளாவின் மனம் அப்பாட இந்த இறுக்கமான இடத்திலிருந்து சற்று நேரம் ரிலீஃப் கிடைக்கப்போகிறதே என சந்தோஷத்தில் துள்ளியது. அதில் மண்ணைப்போட்டு அணைத்தது போல பர்வதம் குறுக்கிட்டு
“இனைக்கு எதுக்கு வெளில போகனும் அதுவும் வெயில்ல ஒன்னும் வேண்டாம்”
ஏதோ புதிதாக திருமணம் ஆனவர்கள் வெளியே போயிட்டு வரட்டும் சந்தோஷமா இருக்கட்டும் என்றில்லாமல் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைத்தாள் பர்வதம். ஆனால் நவீன் உடனே
“இங்க இருந்துண்டு என்ன பண்ணப்போறோம். இட் வில் பி போரிங் ஃபார் அஸ். கொஞ்சம் டவுன் வரைக்கும் போயிட்டு வரோம். உனக்கு ஏதாவது வாங்கிண்டு வரனுமா?”
“எனக்கென்ன வேனும்!!“என்று அலுத்துக்கொண்டாள் பர்வதம். ஆமாம் அவளுக்கு வேண்டியது கடையில் கிடைக்காது ஏனெனில் அவளுக்கு வேண்டியது மிருதுளாவின் நிம்மதி, சந்தோஷம் என்பது இதுவரை படித்ததை வைத்து நமக்குத்தானே தெரியும். என்ன மக்களே நான் சொல்வது உண்மை தானே??
“சரி எங்க கல்யாணத்துக்கு பக்ஷணம் தந்தாலே அதெல்லாம் நம்ம தெரு ஆட்களுக்கெல்லாம் கொடுத்தயா? நேத்து என் நண்பன் ஆத்துக்கு போனேனே அவா அம்மா சொன்னா கல்யாண பக்ஷணமே வரலயேனுட்டு“
“இவாளுக்கெல்லாம் கொடுக்க எங்கப்போறது!! உன் மாமனார் ஆத்துல அவளவா கொடுத்தா?” இதை கேட்டதும் ஈஸ்வரன் பர்வதத்தைப்பார்த்து …
“ஏண்டி இப்படி சொல்லற…உள்ள அவா கொடுத்தனுப்பிய பக்ஷணம் எல்லாம் அட்டப்பெட்டியோட அப்படியே இருக்கே. உன் ஆத்துக்காராளுக்கெல்லாம் கொடுத்தது போக எவ்வளோ மீதி இருக்கு !!!” என்றதும் பர்வதம் அவரை ஒரு முறை முறைத்தாள். மனிதர் கப்சிப் ஆனார்.
“ஆமாம் மிருது ஆத்துலேருந்து நிறைய பக்ஷணம் எல்லாம் அவ தம்பி வேனு நம்ம வேனுல ஏத்தும்போது நான் கேட்டேன் என்னது இவ்வளவு டப்பா ஏத்தறேங்கள் னு அப்போ அவன் சொன்னான் எல்லாம் சீர் பக்ஷணங்கள் னுட்டு“
“ஆமாம் ஆமாம் அவன் அக்கா சூட்கேஸை எல்லாம் பக்ஷணம் டப்பா னுட்டு சொல்லிருக்க போறான்” என்று நக்கலாக சொன்னாள் பர்வதம்
மிருதுளாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் காலை முதல் தன்னை வம்புக்கு இழுப்பது போலவே பேசும் தனது மாமியாரிடம் ஒன்றுமே பதில் அளிக்காமல் விலகிச்சென்றாள். ஆம் மிருதுளா நினைப்பதும் சரிதான் பதிலுக்கு பதில் பேசி வந்ததும் சண்டை போடுறா என்கிற பேரை அவளுக்கு பட்டமளிக்க வோ? இல்லை சண்டைக்கு இழுத்து அவர்கள் மன நிம்மதியை குலைக்க வா!!!… என்னவோ ஏதோ ஆனால் மிருதுளாவை முனுமுனுத்துக்கொண்டே சீண்டிக்கொண்டு இருந்தாள் பர்வதம். இப்படியும் சில மனிதர்கள்.
அனைவரும் காலை உணவு அருந்த அமர்ந்தனர். மிருதுளா தயங்கி நின்றிருந்தாள் அப்போது நவீன் மிருதுளாவையும் அமரும்படி சொல்ல பர்வதத்திற்கு கோபம் வந்து..
“ஏன் இவ்வளவு நாள் மிருதுளா கூடதான் சாப்பிட்டயோ!!! அவள் பக்கத்தில் இல்லாமல் சாப்பாடு இறங்காதோ” என்று கேட்க
“அதுக்கில்ல அவள யாருமே கூப்பிடலை அதுதான் நான் கூப்பிட்டேன் ஏன் இதுல என்ன இருக்கு? இதுக்கு ஏன் இப்படி சொல்லற?” என நவீன் திருப்பி கேட்டதும் சுதாரித்துக்கொண்டாள் பர்வதம்
“அவளும் நானும் அப்பறமா சாப்பிட்டுக்கறோம் முதல்ல நீங்கெல்லாம் சாப்பிட்டு எழுந்திரிங்கோ” என்றாள்
“ஓகே மிருது நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்கோ ஆனா சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகிடு“
“சரி” என்று புன்னகையித்தால் மிருதுளா.
நவீன் சாப்பிட்டுவிட்டு மாடிக்குச்சென்றான். அனைவரும் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தாள் மிருதுளா. பின் மாமியாருடன் சாப்பிட தட்டு எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள். இட்டிலி என்று ஒன்றை சுட்டு வைத்திருந்தாள் பர்வதம் அதை மிருதுளா சாப்பிட்டதும் அவளின் அம்மா நினைப்பு வந்தது அவளுக்கு. அவள் அம்மா சுடும் இட்டிலி பஞ்சுப்போல இருக்கும். ஏதோ ஒரு நாள் கொஞ்சம் ஹார்டான இட்டிலி சுட்டதற்கு வேனுவும் மிருதுளாவும் அவர்கள் அம்மாவை கல்லிட்டிலி அம்பு என கிண்டலடித்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதைவிட பல மடங்கு கனமான இட்டிலியை அன்று நவீன் வீட்டில் தான் முதல் முறையாக பார்க்கிறாள். அதையும் ஒன்றும் சொல்லாமல் ஐந்தைந்து உண்டு எழுந்த தனது மாமனார், கணவர், மச்சினன்களை பாவம் என்று மனதில் எண்ணிக்கொண்டே ஒரே ஒரு இட்டிலி மட்டும் சாப்பிட்டு எழலானாள் அப்போது பார்த்து பர்வத்திற்கு எங்கிருந்தோ பாசம் மடைத்திறந்து தாவும் நதியலைப்போல
“என்ன இது ஒரு இட்டில எழுந்திரிக்கறாய் உட்காரு “என இன்னும் இரண்டு தட்டில் கேட்காமல் போட திரு திருவென முழித்துக்கொண்டு சாப்பிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு சாப்பிட்டு முடித்து தட்டைக்கழுவி வைத்து விட்டு தான் டிரஸ் மாற்ற போவதாக சொல்லிவிட்டு மாடிக்குப் போனாள். அங்கே நவீன் ரெடியாகி அமர்ந்திருந்தான். மிருதுளாவை பார்த்ததும் அவளிடம்..
“ஹே மிருது நீ உன் நகைகளை எல்லாம் ஒரு பேக்கில் போட்டு எடுத்துக்கோ நம்ம பிச்சுமணி மாமா பாங்கில் லாக்கருக்கு சொல்லிருக்கேன் அங்க போய் வச்சுடலாம். இந்த ஏரியா அவ்வளவு ஸேஃப் இல்ல மோரோவர் அப்பாவும் வயசானவர் அதுனால தான் சொல்லறேன். நீ என்ன சொல்லற”
“ஓகே வச்சுடலாம் எனக்கு வேண்டியதை மட்டும் வச்சுக்கறேன் மத்ததை எல்லாம் பாங்க் லாக்கர்ல வச்சுடலாம்”
என பேசிக்கொண்டு கையில் பேக்குடன் கீழே இறங்கி வந்தவர்களை பார்த்து பர்வதம்
“என்ன அது பேக்?”
“இது எனக்கு இப்போதைக்கு தேவையில்லாத நகைகள் அம்மா. இத ஊருக்கும் எடுத்துண்டு போகவேண்டாமாம் நவீன் சொல்றார். அவர் பிச்சுமணி மாமா பாங்க் லாக்கர்ல வைக்கலாம் னு சொன்னார் அதுதான் எடுத்துண்டு போறோம்”
காலை முதல் சண்டைக்காக காத்திருந்த பர்வதம் இதையே பிரச்சினை ஆக்க முடிவெடுத்து ஆரம்பித்தாள்
“இதோ பாருமா இது மாதிரி உன் எண்ணங்களை எல்லாம் நவீன் சொன்னான் என்று அவன் மேல போட்டுட்டு ஒன்னுமே தெரியாததுபோல நின்னுட்டா நாங்க நம்பிடுவோமா. எல்லாத்தையும் மேலே அவனுக்கு சொல்லிக்குடுத்துட்டு இப்போ என்னவோ அவனே சொன்னா மாதிரியும் உனக்கு ஒன்னும் தெரியாதது போலவும் சொல்லற!!“
“அவளுக்கு ஒன்னும் தெரியாதுதான் நான் அவளுக்கே இப்போ தான் சொன்னேன்“
“அப்படிப்போடு ஒரு நாள்லயே இவளோ மாறிட்ட பேஷ். சரி அப்படியே வச்சுப்போம்…“
“வச்சுக்க எல்லாம் வேண்டாம் அதுதான் உண்மை“
“சரிடா அப்படியே இருக்கட்டும். நீ சொன்ன சரி நாங்க ரெண்டு பேரு ஆத்துல இருக்கோமே எங்களாண்ட இது மாதிரி வைக்கலாம் னு இருக்கேன் என்ன சொல்லறேங்கள் னுட்டு ஒரு வார்த்த கேட்டயாடா?”
“அது மிருதுளாவோட நகை அத லாக்கர்ல வைக்கறதுக்கு உங்கள்ட்ட ஏன் கேட்கனும்? மிருதுளாட்ட தான் கேட்கனும் அதுதான் கேட்டேன். அவளும் சரினுட்டா. இதுல இப்போ உனக்கென்ன ப்ராப்ளம்?”
“என்ன ப்ராப்ளமாமே நன்னாருக்குடா நன்னாருக்கு நீ பேசறது ரொம்ப நன்னாருக்கு. எல்லாத்துக்கும் இவதான் இவளேதான் காரணம். பெரியவானுட்டு ஒரு மரியாத இல்லை அவாள்ட்ட சொல்லிட்டு எதாருந்தாலும் செய்வோம்னு இல்ல எல்லாம் அவ இஷ்டம் இல்லையா!!!“
“அத தான் மிருது இப்போ சொன்னாளே பின்ன என்ன. நாங்க சொல்லாம போயிட்டு வந்தா நீ சொல்லறா மாதிரி கூட வச்சுக்கலாம் ஆனா அவ தான் இப்போ கீழே வந்ததும் சொன்னாலே“
“எப்போ சொன்னா? எப்போடா சொன்னா? நானா கேட்டதுக்கப்பறம் தானே சொன்னா? என்னமோ தானா ஓடி வந்து சொன்னா மாதிரி சொல்லற“
“அய்யோ எப்ப சொன்னா என்ன? சொன்னாளா இல்லையா?
என பர்வதத்திற்கும் நவீனுக்கும் பேச்சு முற்றி விடுவதற்குள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி மிருதுளா
“சாரி மா அவர் உங்கள்ட்ட சொல்லிருக்கனும் அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்கள மன்னிச்சுடுங்கோ”
“ஏய் மிருதுளா நாம மன்னிப்பு கேட்குற அளவுக்கு ஒரு தப்புமே பண்ணல தென் வை ஆர் யூ ஆஸ்க்கிங் சாரி?” என்றான் நவீன்
மிருதுளா தடாலென்று சாரி கேட்டதும் அதை எதிர்பார்க்காத பர்வதம்
“சரி சரி ஏதோ இந்த தடவ மன்னிச்சுடரேன் இத தொடராமா பார்த்துக்கோங்கோ.” என கூறி உள் ரூமிற்குள் சென்றாள்.
இப்படியாக வெளியே கிளம்பியவர்களிடம் சண்டையிட்டு மன நிம்மதியை குலைத்து விட்டு மன திருப்தியுடன் உள்ளே சென்றாள் பர்வதம். அவள் காலை முதல் மிருதுளா ஏதாவது தன்னை எதிர்த்து பேசுவாள் என்று பலவற்றை முயற்சித்து நடக்காததால் சற்று வருத்தமாகவும் இருந்தாள். பர்வதத்திற்கு என்னதான் ஒரு பிரச்சினையை கிளப்பின திருப்தி இருந்தாலும் அவள் எதிர்பார்த்தது மிருதுளாவை சீண்டினால் அவள் திருப்பி பேசுவாள் அதை வைத்து ஒரு பெரிய பூகம்பத்தையே உருவாக்கலாம் என்று ஆனால் மிருதுளாவின் மௌனம் அவளை ஏமாற்றமடையச் செய்து புஸ்ஸுவானமாக்கியது.
இப்படி வம்புக்கென்றே திட்டம் தீட்டும் பர்வதத்துடன் மீதமிருக்கும் ஒரு வாரம் காந்தி நகர் செல்லும் வரை என்னவெல்லாம் நம்ம மிருதுளா எதிர்கொள்ள வேண்டிருக்கப்போகிறதோ? பொறுமையை இழக்க நேரிடுமா? அதைப்பற்றி வரும் செவ்வாய் தெரிந்துகொள்ளலாம். இப்போ நம்ம நவீனும் மிருதுளாவும் நிம்மதியாக வெளியே சென்று வரட்டும்.
தொடரும்…..