RTA வில் இருந்து வந்த குறுஞ்செய்தியை திறந்து பார்த்தேன். அதில் நான் எட்டாம் தேதி பதிவு செய்திருந்த ரோட் டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும். அந்த டெஸ்ட்டை மார்ச் 13 ஆம் தேதி எடுக்கும் படியும் இருந்தது. அதைப் பார்த்ததும் “அச்சச்சோ அதுக்கு இன்னும் அஞ்சு நாளு இருக்கே! அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்துட்டேன்னா!!!என்று எண்ணி அதற்கு முன்னதாக ஏதாவது டேட் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று கூறிக்கொண்டே வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தேன். விவரத்தை கூறி ஏன் எனது பரீட்சை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று முதலில் கேட்டேன். அதற்கு அந்த பக்கமிருந்த பெண்மணி ஏதோ RTA வில் சிஸ்டம் இஷுஸ் என்று கூற…சரி என்னவோ இருக்கட்டும், எனக்கு 13 ஆம் தேதிக்கு முன்னாடி ஏதாவது ஸ்லாட் கிடைக்குமா என்று கேட்க அனைத்து ஸ்லாட்டுகளும் ஃபுல் என்றும் வேண்டுமெனில் அதற்கு அடுத்த ஸ்லாட்டான பதினாறாம் தேதி பதிவு செய்துக் கொள்லாம் என்று கூறினாள். அதை கேட்டதும் வேக வேகமாக “இல்லை இல்லை பதிமூன்றாம் தேதியை இருக்கட்டும். பரவாயில்லை. தாங்க்ஸ்” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு கணவரை பார்த்தேன். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவர். “பரவாயில்லை அதெல்லாம் ஒண்ணும் மறக்க மாட்ட. சைக்கிள், சுவிம்மிங், கார் இதெல்லாம் ஒரு தடவ காத்துண்டா எப்போதும் மறக்காது. ஸோ ஜஸ்ட் சில்” என்று கூறி சென்றார். வேற என்ன பண்ணுவது? பதிமூன்றாம் தேதிக்கு காத்திருந்தேன்.
மார்ச் பதிமூன்றாம் தேதி வந்தது. இம்முறை பரீட்சை காலை எட்டு மணிக்கு பதிவாகி இருந்தது. இந்த தடவை வேறு ஒரு முக்கியமான கால் இருப்பதால் என் கணவர் வரவில்லை. என் மகன் தான் அவரின் காரில் அழைத்துச் சென்றார். நான் ஏழரை மணிக்கெல்லாம் பெண்களுக்கான காத்திருப்பு அறையில் சென்று அமர்ந்தேன். மணி எட்டு ஆனது. மகனிடமிருந்து ஒரு மெஸேஜ் வந்தது. டெஸ்ட் ஸ்டார்ட்டட்டா? என்று. அதற்கு நான் இன்னும் இல்லை காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தேன். உடனே “நோ டென்ஷன். கம் அவுட் வித் லைசென்ஸ். ஆல் தி பெஸ்ட்” என்று மீண்டும் ஒரு மெஸேஜ் அனுப்பினார். நானும் “தாங்க்ஸ். வில் டூ மை பெஸ்ட்” என்று டைப் செய்து அனுப்பியதும் என் பெயரை அழைத்தார் அரபு நாட்டு பெண் ஆய்வாளர். உடனே எழுந்து “எஸ்” என்று கூறினேன். அன்று போலவே இன்னும் இருவர் பெயர்களை அழைத்தார். ஆனால் மூவரில் இருவர் மட்டுமே இருந்தோம். அந்த ஆய்வாளர் மூன்றாவது நபருக்காக காத்திருக்காது எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கார் பார்க்கிங்கிற்குள் சென்றார்.
அங்கே போனதும் என்னுடன் வந்திருந்த பெண்மணியை முதலில் காரை ஓட்ட சொன்னார். என்னை இரண்டாவதாக ஓட்டச் சொன்னார். அதை கேட்டதும் அப்பாடா! என்று எனக்கு இருந்தது. அந்த பெண் முதலில் காரில் ஏறியதும் சில மணி துளிகள் ஆய்வாளர் அவரிடம் மிகவும் சகஜமாக பேச்சுக் கொடுத்தார். பிறகு காரை வெளியே எடுக்க சொன்னார். அந்த பெண்ணும் நிதானமாக காரை வெளியே எடுத்து ஓட்டத் துவங்கினாள். அவரை உள் சாலைகளில் எல்லாம் ஒரு பத்து நிமிடங்கள் ஓட்ட வைத்துவிட்டு காரை ஓரமாக நிப்பாட்ட சொன்னார். பின் நெக்ஸ்ட் என்று கூறியதும். அந்த பெண் பின்னால் வந்து அமர நான் முன்னால் டிரைவர் சீட்டில் அமர்ந்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்கையில் ஆய்வாளர் என்னிடம் நான் அணிந்திருந்த டிரஸ் நன்றாக இருப்பதாகவும் அதை எங்கு வாங்கினேன் என்றும் கேட்டார். நானும் இந்தியாவில் வாங்கினேன் என்று பதில் கூற, அவரோ வாவ். இட்ஸ் வெரி நைஸ் டாப்ஸ் என்று கூறி வண்டியை எடுக்க சொன்னார். அவருடனான அந்த சில மணித் துளி உரையாடல் என் பதற்றத்தை குறைத்தது. அதற்காக தான் அவர் பேச்சுக் கொடுத்தாரோ என்னவோ!!
அதன் பின் வண்டியை எடுத்தேன். உள் சாலைகளில் சற்று நேரம் இடது வலது என்று திருப்பி திருப்பி ஓட்ட வைத்தவர் நேராக பிரதான சாலையில் சென்று இணையும் படி கூறினார். நானும் வகுப்பில் கற்றுக் கொண்டது போலவே ஓட்டினேன். அறுபது ஸ்பீடில் ஓட்டிக் கொண்டிருந்த என்னிடம் சட்டென ரைட் லேனுக்கு மாறும் படி கூறினார் ஆய்வாளர். நானும் மாறினேன். பின் ரைட் கட் எடுத்து பிரதான சாலையில் இருந்து உள் வழி சாலைக்கு போக சொன்னார். போனேன். பத்து நிமிடங்கள் ஓட்டி முடித்ததும் கடைசியில் “டேக் ரைட் ப்ளீஸ்” என்றார், பார்த்தால் எங்கிருந்து புறப்பட்டோமோ அதே இன்ஸ்டிடியூட் வாசலில் வந்து விட்டோம். காரை எடுத்த இடத்தில் கொண்டு போய் நிப்பாட்டும்படி சொன்னார். நானும் நிப்பாட்டினேன்.
வண்டியை நிப்பாட்டியதும் அவர் எங்கள் இருவரையும் பார்த்து
“நீங்கள் இருவரும் நன்றாக ஓட்டினீர்கள். தவறுகள் எதுவும் இழைக்காததால் இருவருமே பாஸ். முதல் தளத்திற்கு சென்று உங்கள் லைசென்ஸை பெற்றுக் கொள்ளுங்கள்”
என்று கூறினார். அதைக் கேட்டதும்
நாங்கள் இருவருமே மகிழ்ச்சியில் அந்த ஆய்வாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு நாங்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம். பின் அங்கிருந்து நேராக என் மகன் அமர்ந்திருந்த வரவேற்பு அறைக்கு சென்று
“ஆதி! அம்மா பாஸ் ஆயிட்டேன்”
என்று கூறி கட்டிக்கொண்டேன் அவரும்
“வாழ்த்துக்கள் மா”
என்று என்னை தட்டிக் கொடுத்தார். பின் இருவரும் முதல் தளத்திற்கு சென்று கட்ட வேண்டிய பணத்தை செலுத்தியதும் “நியூ டிரைவர்” என்ற ஸ்டிக்கரை என் கையில் தந்து, ஒரு டோக்கனையும் தந்து அமர்ந்திருக்கும் படி கூறினர். நாங்களும் அமர்ந்திருந்தோம். அப்போது என் கணவருக்கு ஒரு மெஸேஜ் அனுப்பி நான் பாஸ் ஆனதை தெரிவித்தேன். சற்று நேரமானதும் எனது டோக்கன் நம்பர் பளிச்சிட்டது. உடனே சென்று எனது அடையாள அட்டையை கொடுத்தேன். சில நொடிகளில் என் கையில் பிரிண்ட்டரில் இருந்து சுட சுட லைசென்ஸை தந்தனர். அதை பெற்றுக் கொண்டு அதில் எனது பெயர் மற்றும் லைசென்ஸ் எக்ஸ்பிரேஷன் தேதி போன்றவற்றை சரி பார்த்து நன்றி தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தேன். என் மகனிடம் லைசென்ஸை கொடுத்தேன். அவரோ அதை ஃபோட்டோ எடுத்து அவர் அப்பாவுக்கு அனுப்பி வைத்தார்.
இருவருமாக இன்ஸ்டிடியூட்டில் இருந்து வெளியே வந்தோம். என் மகன் அவரின் காரில் “நியூ டிரைவர்” ஸ்டிக்கரை ஒட்டினார். பிறகு என்னை அவரின் காரை ஓட்ட சொன்னார்.
“ஆ!!! அப்பாவோட வரும் போது ஓட்டரேனே”
என்றேன்.
“அதுதான் லைசென்ஸ் குடுத்துட்டா இல்ல. அப்புறம் என்ன? சும்மா ஓட்டுமா”
என்று கூறி அவர் டிரைவர் சீட் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டார். எனக்கோ தயக்கம்! ஏனெனில் எங்கள் வீடு இருபது கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது மேலும் துபாய் ஷேக் சாயத் ரோடு வழியாக தான் எங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும். அந்த ரோட்டில் ஸ்பீடு லிமிட் நூற்றி இருபது. இவை எல்லாத்தையும் மனதில் அசைப்போட்டுக் கொண்டே காருக்கு வெளியே நின்றிருந்த என்னிடம் காரின் கதவை திறந்த என் மகன்,
“அம்மா உன்னால ஓட்ட முடியும்ன்னு தானே லைசென்ஸ் குடுத்திருக்கா. அப்புறம் என்னமா. வா மா ஓட்டு பயப்படாதே!”
என்றார். அவரின் வார்த்தைகள் ஒரு தெம்பு கொடுத்தது உடனே சரி என்று டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
அன்று வரை அதே ஷேக் சாயத் ரோட்டில் கணவர் அல்லது மகன் காரை ஓட்ட நான் அமர்ந்து சென்றது தான் அதிகம். அந்த ரோட்டில் நான் கார் ஓட்டுவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் நடந்துக் கொண்டிருந்தது. காலையில் நாங்கள் நேராக பரீட்சைக்கு சென்றதால் பிரேக்பாஸ்ட் அருந்தவில்லை. எனவே நேராக என் மகனுக்கு மிகவும் பிடித்த பிக்கானேர் வாலா ரெஸ்டாரன்ட்டுக்கு ஓட்டிச் சென்றேன். அதை பார்த்த மகன்
“அம்மா எங்க போற?”
என்று கேட்க.
“ம்…உனக்கு ட்ரீட் தர தான். வா… வா”
என்று அவரை அழைத்துக் கொண்டு சென்று அவருக்கும் எனக்கும் பிடித்த உணவை ஆர்டர் செய்தோம். அப்போது அலுவலக காலில் இருந்த என் கணவர் அது முடிந்ததும் எங்களது மெஸேஜை பார்த்து என்னை கைப்பேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருக்கு பிடித்த உணவையும் பார்சல் செய்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு நேராக வீட்டுக்கு ஓட்டிச் சென்று எங்கள் அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில் காரை பார்க் செய்தேன். பின் என் மகனிடம்
“எப்படி ஓட்டினேன்”
என்று கேட்டேன். அவரோ
“சூப்பரா ஓட்டின”
என்று கூறியதும் மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பானது.
இதற்கு முன் பல பரீட்சைகள் எழுதியுள்ளேன். பல போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் வராத பதற்றம் ஏன் இந்த கார் டிரைவிங் பரீட்சைகளில் வந்தது? என்று யோசித்தேன். அதன் விளைவாக ஒன்றை கற்றுக் கொண்டேன். அது என்னவென்றால்
ஒரு விஷயத்தை நாம் செய்ய முற்படும்போது பலர் பலவிதமான அபிப்பிராயங்களை கூறுவர் ஆனால் அதை கேட்டுக் கொண்டு அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது இல்லை அதில் எவ்வளவு நமக்கு வேண்டியது உள்ளது என்பதை மட்டும் பிரித்தறிந்துக் கொண்டோமே என்றால் வாழ்க்கை சிறக்கும். அதை விடுத்து கேட்டது அனைத்தையும் மனதில் ஏத்திக் கொண்டோமே என்றால் குழப்பம் தான் நீடிக்கும்.
கார் டிரைவிங் லைசென்ஸ் எடுக்கப் போகிறேன் என்று சொன்னதுமே பலர் என்னிடம் அது மிகவும் கஷ்டம், அவ்வளவு எளிதில் லைசென்ஸ் கிடைத்து விடாது. பணமும் நேரமும் தான் விரயம் ஆகும், போன்ற அபிப்பிராயங்களை பகிர்ந்துக் கொண்டனர். அது அவர்கள் கடந்து வந்த பாதையாக இருக்கலாம் அல்லது அவர்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் சொல்லி கேட்டிருக்கலாம் இல்லையா! அவற்றை பிரித்து பார்க்காது அவை அனைத்தையும் மனதிற்குள் பதிய வைத்ததால் பயம் என்னும் வேதாளம் என் மேல் தொற்றிக் கொண்டது. அதனால் பதற்றம் ஏற்பட்டது. பதற்றம் ஆனதால் பல முறை தோல்வியுற்றேன். ஆனால் விடா முயற்சியால் வெற்றியும் கண்டேன்.
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயன்றால் முடியாதது என்று ஒன்றுமில்லை, முயற்சி திருவினையாக்கும் ஆகிய அனைத்து வாக்கியங்களும் என் விஷயத்தில் நிரூபணமானது.
எனக்கு இருந்த பயத்திற்கு இன்னுமொரு முக்கிய காரணம் நான் அந்த வகுப்புகளுக்கும் பரீட்சைகளுக்குமாக செலவழித்த பணம். கஷ்டப்பட்டு சம்பாதித்தது வீணாகிவிடக் கூடாதே என்ற எண்ணம் பயத்தை கொடுத்தது. பயம் பதற்றத்தை கொடுத்தது. பதற்றம் பல முறை தோல்வியுறச் செய்தது. இறுதியில் உழைத்த காசு என்றும் வீணாவதில்லை என்ற உண்மையை மீண்டும் புரிய வைத்தது.
காரணமின்றி காரியமில்லை. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த மார்ச் மாதம் வரை நான் மேற்கொண்ட டிரைவிங் வகுப்புகள் மற்றும் பரீட்சைகள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம்! வாழ்க்கை நமக்கு பலவிதத்தில் பலவகையான பாடங்களை பல ரூபங்களில் கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அவற்றை கற்றுக் கொண்டு அதற்கேற்றார் போல் வாழ்வதும் சரி இல்லை அதற்கு மாறாக அவற்றை கற்க மறுத்து வாழ்க்கையில் வீழ்வதும் சரி அவரவர் விருப்பம்.
எனது இந்த ஓட்டுனர் உரிமம் கட்டுரையை படித்து என்னுடன் எனது வகுப்புகளிலும் பரீட்சைகளிலும் பயணித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என் பயணம் தொடரும். உங்கள் அனைவரின் பயணங்களும் இனிதாக அமைந்திட எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
❤️முற்றும்❤️