பிப்ரவரி இருபத்தி மூன்றாம் தேதி வந்தது. அன்று மகனுக்கு கல்லூரியில் வகுப்பு இருந்ததால் அவரால் வர முடியவில்லை. கணவர் அவர் காரில் அழைத்துச் சென்றார். மதியம் 1 மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பரீட்சை 2 மணிக்கு தான். அதுவரை என்ன செய்வது என்று யோசித்தோம். கணவர் அவரின் லேப்டாப்பை திறந்து வேலையில் மூழ்கினார். நானும் சற்று என் வேலையை பார்க்கலாமென்று நினைத்து எனது லேப்டாப்பை திறந்தேன். ஆனால் மனம் முழுவதும் ரோட் டெஸ்ட்டில் மூழ்கி இருந்தது. என்னை கவனித்த என் கணவர். நீ இப்போ வேலையெல்லாம் செய்ய வேண்டாம். பேசாம அமைதியா உட்காரு போதும் என்றார். வேலையில் நாட்டம் இல்லாதிருந்த நானும் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு சற்று நேரம் அமைதியாக அமரலாம் என்று நினைத்து கண்களை மூடினேன். அப்ப பார்த்து நான் டிரைவிங் வகுப்புகளில் செய்த தவறுகள் ஒவ்வொன்றாக வரிசைக் கட்டிக்கொண்டு நான்… நீ என்று போட்டிப் போட்டுக்கொண்டு கண்முன் வர சட்டென கண்களை விழித்துக் கொண்டேன். கை கடிகாரத்தைப் பார்த்தேன் நேரம் ஒன்றரை என்று காட்டியது உடனே கணவரிடம் சொல்லிக்கொண்டு (போருக்கு போகும் கணவன் மனைவியிடம் சொல்லிக் கொண்டு செல்வது போல்😉) பெண்களுக்கான காத்திருப்பு அறைக்குள் சென்று அமர்ந்தேன்.
பக்கத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் பேச்சுக் கொடுக்க நானும் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடனான அந்த பேச்சு என்னை சற்று நேரம் பரீட்சை பற்றிய எண்ணத்தில் இருந்து விடுவிக்க ஏதுவாக இருந்தது. அப்போது கருப்பு நிற ஹிஜாப் அணிந்திருந்த அரபு நாட்டை சேர்ந்த அழகான பெண்மணி ஒருவர் கண்களில் கூலர்ஸுடன் உள்ளே நுழைந்தார். நுழைந்தவர் முதலில் “பார்வதி” என்று என் பெயரை அழைக்க நான் “எஸ்” என்று எழுந்து அவர் அருகே சென்றதும், அவர் இன்னும் இரண்டு பெண்களின் பெயர்களை அழைக்க அவர்களும் எழுந்து வந்ததும். எங்கள் மூவரையும் அவர் பின்னால் வரச் சொன்னார். நாங்களும் அவர் பின்னால் சென்றோம்.
RTA ரோட் டெஸ்ட்டுக்கான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. அங்கே சென்றதும் அவர் எங்கள் பக்கம் திரும்பி “பார்வதி நீங்கள் தான் முதலில் காரை ஓட்ட வேண்டும் அடுத்தது நீங்கள் அதுக்கு அடுத்தது நீங்கள்” என்று எங்களிடம் கூறி ஒரு வண்டியை காட்டி ஏறச் சொன்னார்.
முதலில் நானா!! என்ற எண்ணம் மனதில் தோன்றியதுமே வேதாளம் வந்து என்னை தொற்றிக் கொண்டது. காருக்குள் ஏறி அமர்ந்தேன். அப்போது அந்த அரபு நாட்டு பெண் ஆய்வாளர் எனது அடையாள அட்டையை கேட்க. நான் எனது கைப்பையில் இருந்து அதை எடுத்துக் அவரிடம் கொடுக்கும் போது எனது கை நடுங்கியது. அதை பார்த்த அந்த பெண்மணி
“டோண்ட் பி டென்ஸ்டு. டிரைவ் சேஃப். நீங்கள் தயார் என்றால் வண்டியை எடுக்கலாம்”
என்றார். நானும் வண்டியை எடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து முடித்ததும். அவர் என்னிடம்
“வெரி குட். நவ் டேக் இட் அவுட்” என்றார்.
நானும் மெல்ல வண்டியை ரிவர்ஸில் எடுத்தேன். அவசரம் ப்ளஸ் டென்ஷனில் சற்று முன்னதாகவே இடது பக்கமாக வண்டியை திருப்ப முயன்றதால் பக்கத்தில் இருக்கும் காரின் மீது இடிக்க போய்விட்டேன். உடனே அவர் என்னை சற்று நேரம் நிறுத்த சொன்னார் (அப்போதே எனக்கு எனது ரிசல்ட் தெரிந்து விட்டது). பின் என்னைப் பார்த்து “என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டார். நான் “சாரி” என்று கூறி மீண்டும் பார்க்கிங் உள்ளேயே சென்று பின் வெளியே எடுத்தேன். இம்முறை சரியாக எடுத்தேன். ஓட்டிச் சென்றேன். ஆனால் ஏழு நிமிடத்தில் காரை நிறுத்த சொன்னார். நானும் ரோட்டின் சாலிட் லைனை தாண்டி ஓரமாக வண்டியை நிப்பாட்டினேன். அவர் உடனே நெக்ஸ்ட் என்று கூறினார். நானும் எனது சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு காரில் இருந்து இறங்கி பின்னால் சென்று அமர்ந்துக் கொண்டேன். எனக்கு அடுத்ததாக வரிசையில் இருந்த பெண்மணி காரை அங்கிருந்து ஓட்ட ஆரம்பித்தார்.
பின்னால் அமர்ந்ததும் எனது கணவருக்கு கைப்பேசியில் மெஸேஜ் டைப் செய்ய ஆரம்பித்தேன். கை விரல்கள் அனைத்தும் நடு நடுங்கியது. நடுக்கத்துடனேயே “நான் நிச்சயம் இந்த ரோட் டெஸ்ட்டில் ஃபெயில் ஆகிவிடுவேன்” என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். அவரோ “பரவாயில்லை. பி கூல். அடுத்த தடவை பார்த்துக் கொள்ளலாம்” என்றொரு பதிலை அனுப்பினார். ஆனாலும் எனக்குள் இருந்த பதற்றம் அடங்கவில்லை. எப்படி?!! எடுத்ததும் அப்படி ஒரு தவற்றை செய்தேன் என்று என் மனம் என்னை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.
வண்டியில் இருந்த மூவரின் பரீட்சையும் முடிந்தது. மூன்றாவதாக காரை ஓட்டிய பெண்மணி மீண்டும் காரை இன்ஸ்டிடியூட்டிற்குள் ஓட்டி வந்து பார்க் செய்தார். அப்போது அவர் கோணலாக வண்டியை நிப்பாட்ட அதற்கு ஆய்வாளர் சரியாக நிப்பாட்டும் படி உத்தரவிட அந்த பெண் சற்று பதற்றமானாள். பின் இரண்டு முறை முயற்சித்த பின் சரியாக பார்க் செய்தாள். மூவரும் ஆய்வாளரை பார்த்தோம். அவர் நாங்கள் ஒவ்வொருவரும் செய்த தவறுகளை பட்டியலிட்டு மூவருமே ஃபெயில் என்றும், பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து, நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டு, பின் மீண்டும் முயற்சிக்கும் படி கூறிவிட்டு சென்றார். நான் வழக்கம் போல வெளியே காத்திருந்த கணவரிடம் கூற அவரோ வழக்கம் போல் அடுத்த முறை பார்த்துக் கொள் என்று கூற.
மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து அடுத்த RTA ரோட் டெஸ்ட்டுக்கு டேட் எப்போது கிடைக்கும் என்று கேட்டேன். அவரோ மார்ச் 8 ஆம் தேதி இருப்பதாக கூற உடனே RTA ரோட் டெஸ்ட்டுக்கு மார்ச் 8 ஆம் தேதி பதிவு செய்தேன். அதற்கு முன் 6 மற்றும் 7 ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்தேன்.
ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்பு இரண்டு நாட்களும் சிறப்பாக நடந்தேறியது.
நம்பிக்கை கூடியது.
RTA ரோட் டெஸ்ட்டில் என்னென்ன செய்ய சொல்வார்களோ அத்தனையையும் செய்து காட்ட சொல்லி பயிற்சி அளித்தார் எனது பயிற்றுவிப்பாளர்.
அதாவது காரை எடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள், உள் சாலைகளில் வேகம் நாற்பதுக்கு மேல் இருக்கக் கூடாது. பிரதான சாலைகளில் 60 அல்லது 80 என
ரோட் சைனில் குறிப்பிடப்பட்டுள்ள வேகத்தை கடைபிடிக்க வேண்டும். அதற்கு மேலும் போகக்கூடாது அதைவிட கம்மியான வேகத்திலும் போகக் கூடாது. லேன் சேஞ்ச் எப்படி எப்போது செய்ய வேண்டும், அது செய்வதற்கு முன் செய்ய வேண்டியவை. வலது, இடது புறம் காரை திருப்புவது. சிக்னலில் எப்படி எப்போது நிறுத்த வேண்டும். சிக்னல் பச்சை ஆனதும் எப்போது புறப்பட வேண்டும். உள் வழி சாலையில் இருந்து பிரதான சாலைகளில் இணையும் போது செய்ய வேண்டியவை. U டர்ன் எப்படி செய்வது. ரவுண்ட் அபௌட்டில் எப்போது நுழைய வேண்டும், எந்த கோட்டிற்குள் எப்போது செல்வது. அதற்கான சிக்னல் எதை எப்போது கொடுப்பது போன்ற அனைத்தையும் பயிற்சி செய்து முடித்ததும். எனது பயிற்றுவிப்பாளர் என்னிடம்
“RTA ரோட் டெஸ்ட்டுக்கு என்று பதிவு செய்திருக்கிறீர்கள்”
என்று கேட்க நானோ
“நாளை. எட்டாம் தேதிக்கு தான் பதிவு செய்திருக்கிறேன்”
என்று கூற. அதை கேட்ட அவர்
“அப்படியா!! இருக்காதே!! உங்களுக்கு RTA வில் இருந்து ஏதாவது மெஸேஜ் வந்ததா?”
“ஆமாம். நேற்று மாலை வந்தது. எட்டாம் தேதி பரீட்சை இருக்கிறது என்று ஒரு ரிமைன்டர் மெஸேஜ் வந்தது.”
என்றேன். அவர் என்னை எதற்கும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு சரி பார்த்துக் கொள்ளும் படி கூற
“ஏன் என்ன ஆயிற்று? பரீட்சை நடக்காதா?”
என்று பதற்றத்தில் நான் கேட்டேன். அதற்கு அவர், RTA புது ரூல் ஒன்றை அமல் படுத்தி இருப்பதாகவும். முதல் அட்டெம்ட்டில் தேர்ச்சி பெறாவிட்டால் இரண்டாவது முறை பயிற்சி வகுப்பு எடுத்த நாற்பத்தி எட்டு மணிநேரத்திற்கு பிறகு தான் ரோட் டெஸ்ட் எடுக்க முடியும் என்றும் கூறினார். அதன்படி பார்த்தால் நான் மறுநாள் அதாவது எட்டாம் தேதி பரீட்சையை எடுக்க முடியாது. ஏனெனில் எனது பயிற்சி வகுப்பு முடிந்து நாற்பத்தி எட்டு மணிநேரம் முழுமை அடைந்திருக்காது. என்ன செய்வது என்ற யோசனையில் இருந்த என்னிடம் தான் விடைப்பெற்றுக் கொள்வதாகவும் கஸ்டமர் கேருக்கு கால் செய்து பார்க்கும் படியும் கூறியவரிடம் எனது நன்றியை தெரிவித்துக் கொண்டேன். அவரும் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு என்னை எனது வீட்டில் இறக்கி விட்டுவிட்டு சென்றார். அப்போது எனது கைபேசியை எடுத்துப் பார்த்தேன். அதில் அந்த இன்ஸ்டிடியூட்டில் இருந்து அழைப்பு வந்திருந்தது. கார் டிரைவிங் வகுப்பின் போது கைபேசியை சைலண்ட்டில் போடுவது வழக்கம். அதனால் ரிங் கேட்கவில்லை. உடனே அந்த எண்ணை அழைத்தேன். எவரும் எடுக்கவில்லை. சரி வீட்டுக்கு போன பிறகு மீண்டும் முயற்சிப்போம் என்றும், அதுவே நான் அந்த இன்ஸ்டிடியூட்டில் எடுக்கும் கடைசி பயிற்சி வகுப்பாக இருக்க வேண்டும் ஆண்டவா என்றும் எண்ணிக் கொண்டே லிஃப்ட் பொத்தானை அழுத்திவிட்டு நின்றிருந்த என் முன் லிஃப்ட்டின் கதவு திறந்தது.
வீட்டிற்கு சென்றேன். கணவரிடம் விவரத்தை விவரித்தேன். மீண்டும் ஒரு முறை வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைப்பு விடுத்து பார்க்கலாமென்று கைப்பேசியை எடுத்தேன். அப்போது RTA வில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அதை திறந்து பார்த்தேன்.
🚗பயணம் தொடரும்….🚗