RTA பார்க்கிங் பரீட்சையின் முதல் அட்டெம்ட்டில் தேர்ச்சி பெற முடியாது போனதும் மனம் தளர்ந்து போனது. அப்போது சட்டென நம்ம பாரதியாரோட
“துன்பம் நெருங்கி வந்த போதும்
நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா!”
என்ற பாட்டு மனதில் உதித்தது. உடனே தெம்பு பிறந்தது.
“மீண்டும் ஓர் முயற்சி செய்வோம் அதில் வெற்றியை மட்டுமே காண்போம்”
என்ற நம்பிக்கையுடன் அடுத்த முயற்சிக்கு பதிவு செய்தேன். வழக்கம் போல் குறித்த நாளில் (புதன்கிழமை) குறித்த நேரத்தில் (3 pm) RTA பார்க்கிங் பரீட்சை நடக்கும் வளாகத்திற்கு சென்றேன்.
இந்த தடவை உள்ளே நுழைந்ததும் அங்கே வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த அரபு நாட்டவர் மற்றொரு மாணவரிடம் “நீங்கள் பாஸ்” என்று கூறுவதை கேட்டுக் கொண்டே நுழைந்ததில் “நல்ல சகுனம் பார்வதி” என்று
என் மனம் கூறியது எனக்கு கேட்க
மனதிலும் முகத்திலும் மகிழ்ச்சி பொங்க அடையாள அட்டையை கொடுத்தேன். எனது முறைக்கு காத்திருந்தேன்.
ஏதாவது ஒன்றை நாம் மீண்டும் மீண்டும் செய்தாலோ அல்லது ஏதாவது ஒன்று மீண்டும் மீண்டும் நமக்கு நடந்தாலோ அதை நம் மனம் முதல் தடவை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அடுத்தடுத்த முறை அதுவே பழகி போய்விடுவது போல எனக்கு இந்த தோல்வி என்பது பழக்கமாகி விட்டதாலோ என்னவோ இம்முறை எந்தவித கலக்கமும் இன்றி அமர்ந்திருந்தேன்.
அன்று நிறைய நபர்கள் பரீட்சை கொடுத்துக் கொண்டிருந்தனர். நான் அமர்ந்திருந்த அந்த பதினைந்து நிமிடங்களில் மூன்று நபர்கள் பார்க்கிங் பரீட்சையில் தேர்ச்சி பெற்று சந்தோஷத்தில் துள்ளித் குதித்து சென்றனர். அதைப் பார்த்ததும் என் மனதில் “பாவம் எத்தனை முறை முயற்சித்தார்களோ!” என்று தான் எண்ண தோன்றியது. மேலும் நான் தேர்ச்சி பெற்றால் எப்படி ரியாக்ட் செய்வேன் இல்லை செய்வது என்ற யோசனையை புள்ளி கோலம் போல் வரைந்து பார்க்க முயற்சித்து நாளு புள்ளி வைப்பதற்குள் எனது பெயர் அழைக்கப்பட்டது.
உடனே புள்ளிகள் அழிக்கப்பட்டது.
கார் எண் 4 என்று கூறப்பட்டது. பார்க்கிங் யார்டுக்குள் செல்லும் கதவு திறக்கப்பட்டது.
அந்த கதவு வழியே பார்க்கிங் யார்டுக்குள் சென்று எனக்கான காரின் கதவை திறந்ததும் விக்ரமாதித்தன் தோளில் தொற்றிக் கொள்ளும் வேதாளம் போல் தொற்றிக் கொண்டது ஒரு வகை பயம் என்னும் வேதாளம். ஏனென்று தெரியவில்லை. வேதாளம் ஏன் தொற்றிக் கொண்டது என்று ஆராய்வதற்கெல்லாம் நேரம் இல்லாததால் அதை சுமந்து கொண்டு காரில் ஏறினேன்.
ஹில் மற்றும் கராஜ் இரண்டில் தேர்ச்சி பெறாததால் அவ்விரண்டையும் தான் செய்ய வேண்டும். அதனால் இம்முறை நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையையும் சுமந்துகொண்டு நேராக ஹில் பார்க்கிங் செய்து காட்ட சென்றேன். போன முறை பீப் சப்தம் வரும் முன் நிப்பாட்டி விட்டதால் இம்முறை அந்த சப்தத்திற்காக காத்திருந்தேன் அது ஒலித்ததும் சரியாக நிப்பாட்டினேன். பின் கார் என்னிடம், அடுத்த பார்க்கிங் செய்து காட்ட செல்லும் படி கூறியதும் அங்கிருந்து அடுத்ததாக கராஜ் பார்க்கிங் செய்ய காரை ஓட்டிச் சென்றேன்.
போன முறை செய்த தவற்றை இம்முறை செய்யக்கூடாது என்ற கவனம் கூடுதலாக இருக்க, கார் எந்த கோட்டிலும் பட்டுவிடாது மெல்ல பார்க் செய்தேன். எனக்கு தெரிந்து எந்த தவறும் இம்முறை செய்யவில்லை என்ற மனத்திருப்தியில் பார்க் செய்ததும் சில நோடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் பார்க்கிங் பிரேக் போட்டேன். கார் என்னை அடுத்த பார்க்கிங்கிற்கு செல்ல உத்தரவிட்டது. அப்பாடா எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுப்பா என்று காரை எங்கிருந்து எடுத்து ஓட்டி சென்றேனோ அங்கேயே ஓட்டி சென்று பார்க் செய்து, காரில் இருந்து இறங்கி நேராக வரவேற்பு அறைக்கு சென்றேன். அங்கிருந்த வரவேற்பாளர் என்னை காத்திருக்கும் படி சொன்னார்.
மனதில் அனைத்து கடவுள்களையும் வேண்டிக்கொண்டு அமர்ந்திருந்த என்னை அழைத்தார். எழுந்து சென்று அவர் மேஜையின் முன் நின்றேன். அவர் என்னைப் பார்த்து
“நீங்கள் நன்றாக தான் பார்க் செய்தீர்கள் ஆனால்… அந்த வீடியோவை பாருங்கள்”
என்று கூறி மீண்டும் அங்கிருந்த டிவியை பார்க்க சொன்னதும்
“போச்சுடா மறுபடியும் அவுட்டா?!!!”
என்று என் மனம் என்னிடம் கேட்க, பதற்றம் தொற்றிக் கொள்ள, வாடிய முகத்துடன் டிவியை பார்த்தேன். முதலில் ஏதாவது கோட்டில் கார் பட்டுவிட்டதா என்று தான் என் கண்கள் தேடின. ஆனால் சரியாக தான் பார்க் செய்திருந்தேன். பின்பு ஏன் அவர் ஆனால் என்று இழுத்தார்!!!! என்ற குழப்பம் முகத்தில் பளிச்சிட அவரை பார்த்தேன். அதைப் பார்த்த அவர் விளக்கமளிக்க துவங்கினார்
“நீங்கள் பார்க்கிங் சரியா செய்தீர்கள் ஆனால் ஏன் ஹேண்ட் பிரேக் போட லேட்டாச்சு? காரை பார்க் செய்ததும் ஹேண்ட் பிரேக் போட வேண்டுமல்லவா?”
அதை கேட்டதும் அதிர்ந்து போனேன். உடனே சுதாரித்துக் கொண்டு
“இல்லை… நான் எந்த கோட்டிலும் படாது பார்க் செய்த மனத்திருப்தியில் சற்று அமர்ந்து விட்டேன். அதுவும் சில நொடிகள் தான் எடுத்துக் கொண்டேன். பின் உடனே பார்க்கிங் பிரேக்கை போட்டு விட்டேனே!”
என்று விளக்கமளித்தேன். அதை கேட்டவர் சிரித்துக் கொண்டே
“ரிலாக்ஸ் மேடம். ரிலாக்ஸ். யூ ஆர் பாஸ்”
என்றார். அதை கேட்டதும் சந்தோஷத்தில் செய்வதறியாது நான் காண்பது கனவா இல்லை நிஜமா என்பது போல் சற்று நேரம் நின்றதும்
“பார்வதி நிஜம் தான் நிஜம் தான் நிஜமே தான்”
என்று திருவிளையாடல் தருமியை போல என் மனம் எனக்கு உணர்த்தியதும் முதலில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு வேக வேகமாக வெளியே வந்து எனக்காக காத்திருந்த என் மகனிடமும் கணவரிடமும் சொல்லி மகிழ்ந்தேன். அவர்களும் அடுத்ததாக RTA ரோட் டெஸ்ட்டுக்கு உடனே பதிவு செய்ய சொன்னார்கள். ஏனெனில் அதற்கான பரீட்சை தேதி கிடைக்க காலதாமதமாகலாம்.
அவர்கள் இருவரிடமும் என்னை கடைசி நேரத்தில் தொற்றிக் கொண்ட வேதாளத்தை பற்றி கூறியதும். இருவரும் ஒன்றாக
“எதற்கு பயம் ? இட்ஸ் ஜஸ்ட் எ பார்க்கிங் டெஸ்ட் அவ்வளவு தானே.! யூ ஆர் டேக்கிங் இட் டூ சீரியஸ். தேவையே இல்லை. அதுவும் நீ இந்தியால கார் ஓட்டி இருக்க வேற!! அப்புறமென்ன?”
என்று கேட்டதும்.
“ஆமாம்! நீங்க ரெண்டு பேரும் சொல்றது கரெக்ட் தான்…இருந்தாலும் அந்த பார்க்கிங் யார்டுக்குள்ள போனாலே எனக்கு ஏதோ ஒரு மாதிரி ஆயிடுது என்ன பண்ண?!”
“அம்மா அந்த மாதிரி எல்லாம் ரோட் டெஸ்ட் ல ஆகக்கூடாது மா. பார்த்துக்கோ!”
என்று மகன் சொன்னதை தலையசைத்து ஆமோதித்தார் கணவர். நான் சிரித்துக் கொண்டேன். கைபேசியை எடுத்தேன் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைப்பு விடுத்தேன். RTA ரோட் டெஸ்ட்டுக்கு பதிவு செய்தேன். பரீட்சைக்கான நாள் வியாழக்கிழமை, பிப்ரவரி இருபத்தி மூன்றாம் தேதி மதியம் இரண்டு மணி. தேர்ச்சி பெற்றால் உடனே கையில் லைசன்ஸ். சொல்லவும் கேட்கவும் நன்றாக தான் இருக்கும் ஆனால் நடந்தது என்ன? அடுத்த பதிவில்.
🚗பயணம் தொடரும்…🚗