ஓட்டுனர் உரிமம் – பாகம் 4

“இப்போது இந்த இன்டர்ணல் டெஸ்ட்டுக்கு நீங்கள் இந்த வண்டியை ஓட்ட போவதில்லை இந்த கார் RTA டெஸ்ட்டின் போது தான் உங்களுக்கு தருவார்கள். நீங்கள் RTA டெஸ்ட்டின் போது ஓட்ட வேண்டிய ஸ்மார்ட் காரை பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்வதற்கான ஒரு இருபது நிமிட வகுப்பு தான் இது.”

என்று கூறி வேறொரு காரின் அருகே சென்று

“இந்த கார் இப்போது உங்களுடையது. இதை நீங்கள் வகுப்புகளில் எப்படி ஓட்டினீர்களோ அப்படியே ஓட்டி பார்க் செய்து காட்டுங்கள். இப்போ இந்த இன்டர்ணல் பரீட்சையை இந்த காரில் எடுத்து பாஸ் ஆகுங்கள். ஆல் தி பெஸ்ட்”

என்று அவர் கூறியதை கேட்டதும் “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன் அதற்கு எந்தவித சேதமுமின்றி கொண்டு வந்து இங்கேயே என்கிட்ட விட்டுடுமான்னு” சிவாஜி ஸ்டைலில் சொன்னது போல் ஒரு நிமிட கற்பனை பளிச்சிட என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். உடனே அவர் என்னை “என்னடா பரீட்சை எடுக்கறதுக்கு முன்னாடி ஏன் இவங்க இப்படி சிரிக்கிறாங்க? ஒரு வேளை முடிவு தெரிஞ்சிடிச்சோ!!! அப்படிங்கற மாதிரி பார்க்க, சாரி என்று நான் கூறி ரைட் இன்டிகேட்டரை போட்டு காரை ஆங்கிள் பார்க்கிங்கில் இருந்து பின்னால் மெல்ல எடுத்து பின் வளைத்து நேரே சென்றேன்.

முதலில் சுலபமான ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங் முடித்து விடலாம் என்று மனதில் ஒரு கணக்குப் போட்டு அதன்படி முதலில் ஹில் டெஸ்ட் எடுக்க சென்றேன். அந்த மலை மீது இரு கோடுகள் குறுக்கே வரையப்பட்டிருக்கும். நாம் நமது காரை அந்த இரு கோட்டிற்கு நடுவில் நிறுத்தி ஹேண்ட் ப்ரேக் போட வேண்டும். இது தான் சரியான முறை. அதை தான் நான் கற்றும் கொண்டேன். அன்று வரை வகுப்பு பயிற்சிகளில் இந்த வகை பார்க்கிங்கில் எந்த தவறும் இன்றி செய்து வந்ததால் கொஞ்சம் கூடுதல் தன்னம்பிக்கையோடு மலை மீது ஏறினேன். அந்த சிறிய மலை மீது ஏறியதும், முன் சொன்னது போல் கார் அந்த இரண்டு கோடுகளுக்கு நடுவில் வந்ததும் நிறுத்த வேண்டும்.

நான் பரீட்சை எடுத்தது இரவு ஏழரை மணிக்கு. அன்று வரை எந்த வகுப்பும் இரவு நேரத்தில் இருக்கவில்லை. மலை மீது காரை ஏத்தினேன். கண்ணாடிகளில் பார்த்தேன் வெள்ளைக் கோடு தெரிந்தது உடனே காரை நிறுத்தி ஹேண்ட் ப்ரேக் போட்டேன். எனது கார் அருகே வேகமாக வந்த ஆய்வாளர் என்னை சற்று எனது கார் எங்கே இருக்கிறது என்று இறங்கி பார்க்க சொன்னார். நானும் இறங்கினேன். பார்த்தேன்😲 கார் முதல் கோட்டின் மேல் நின்று கொண்டிருந்தது. ஐய்யோ! என்று தூக்கிவாரிப் போட்டது. எப்பிடி டி!!!! அப்படின்னு என் மனம் என்னை கேட்டது. செய்வதறியாது முழித்துக் கொண்டிருந்த என்னிடம் காரை அடுத்த பார்க்கிங்கிற்கு ஓட்டி செல்லும் படி கூறினார் ஆய்வாளர்.

நானும் காருக்குள் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கி அடுத்ததாக எமர்ஜென்சி பார்க்கிங்கிற்கு செல்ல ஆயத்தம் ஆனேன். இன்டர்ணல் ரோட் டெஸ்ட் அஸஸ்மெண்ட்டில் செய்ததைப் போலவே இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட்டிலும் எடுத்ததும் தவறிழைத்து விட்டதை எண்ணி என் நெத்தியில் நானே எனது வலது கையால் தட்டிக் கொண்டே எமர்ஜென்சி பார்க்கிங் முன் வந்து சேர்ந்தேன். பின் பயிற்றுவிப்பாளர் கற்று தந்ததை போலவே காரை இருபதுக்கு மேல் இருபத்தி ஐந்துக்குள் ஸ்பீடு இருக்கும் படி ஓட்டிச் சென்றேன். ஆய்வாளர் ஸ்டாப் என்று சொன்னதும் உடனே ப்ரேக்கை முதலில் செய்த தவற்றை மனதில் கொண்டு எனது முழு பலத்தையும் திரட்டி ஒரு மிதி மிதித்து காரை நிறுத்தினேன். ஏனெனில் கார் ப்ரேக் அழுத்தியதும் உடனே அதே இடத்தில் நிற்க வேண்டும் அவ்வளவு பலமாக அழுத்த வேண்டும் இல்லையேல் வண்டி சற்று முன்னால் செல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படி சென்றால் நாம் அதில் ஃபெயில்!

ஆய்வாளர் நெக்ஸ்ட் என்று சொல்ல உடனே காரை அங்கிருந்து ஆங்கிள் பார்க்கிங்கை நோக்கி ஓட்டி சென்றேன்‌.
எனது பயிற்றுவிப்பாளர் சொல்லி கொடுத்ததை போலவே திருப்பினேன். ஆங்கிள் பார்க்கிங் பாக்ஸ்க்குள் காரை சரியாக ஓட்டி சென்று நிறுத்தி ஹேண்ட் ப்ரேக் போட்டு ஆய்வாளர் முகத்தைப் பார்த்தேன். அவர் தலையை இடது வலது புறமாக ஆட்டிக்கொண்டே என்னை காரிலிருந்து வெளியே வர சொன்னார். போச்சுடா!!! இதுவும் அவுட்டா என்று என் மனம் என்னிடம் கேட்டது அவருக்கு தமிழ் தெரிந்திருந்தால் நிச்சயம் புரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏன்னா அவ்வளவு சத்தமாக மைண்ட் வாயிஸ் என்றெண்ணி நானே சொல்லிவிட்டேன். ஒரு முறை காரை சுற்றி பார்த்தேன். கார் சரியாக தான் பார்க்கிங் பாக்ஸுக்குள் நின்றிருந்ததை பார்த்ததும் அப்பாடா என்று இருந்தது. கார் பார்க்கிங் பாக்ஸுக்குள் தானே நிற்கிறது பின்பு ஏன் என்னை இறங்கி பார்க்க சொன்னார் ஆய்வாளர் என்று என் முகத்தில் ஒரு பெரிய ஆச்சர்ய குறியுடன் அவரை நோக்கினேன்.

என்னருகே வந்து நின்றவர் என்னிடம், நான் சரியாக தான் ஆங்கிள் பார்க்கிங்கிற்குள் வண்டியை ஓட்டி வந்ததாகவும், கார் ஆங்கிள் பார்க்கிங் பாக்ஸுக்குள் நிருத்தியதாகவும் கூறி அதன் பின் ஆனால்…என்று ஒரு இழு இழுத்து….காரை நன்றாக உள்ளே ஓட்டி வந்து பார்க் செய்வதற்கு பதில் சற்று முன்னதாகவே நிறுத்தி பார்க்கிங்கில் வண்டியை போட்டதாக கூறினார். அப்போது மீண்டும் காரை நன்றாக பார்த்தேன் அது சில சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தான் முன் கோட்டில் இருந்து சற்றே பின்னால் இருந்தது. அதைப் பார்த்ததும் நான் பாஸ் தானே என்ற குழப்பமான முகத்துடன் அவரைப் பார்த்தேன். அதற்கு அவர்

“இப்படி நீங்க RTA பார்க்கிங் டெஸ்ட் ல பார்க் பண்ணுனீங்கன்னா நிச்சம் ஸ்மார்ட் கார் உங்களை ஃபெயில் ஆக்கி விடும்”

என்று கூற

“அச்சச்சோ! மறுபடியும் மொதல்லேந்தா!!” என்ற வடிவேலு டையலாக் தான் அந்த இடத்தில் ஞாபகம் வந்தது. ஆய்வாளர் என்னை மீண்டும் காருக்குள் ஏறி அடுத்த பார்க்கிங் செய்து காண்பிக்க சொன்னார். தெம்பு குறைந்த மனதுடன் காருக்குள் ஏறி அடுத்த கராஜ் பார்க்கிங்கை நோக்கி காரை மெல்ல ஓட்டி சென்றேன்.

காரை ரோட்டின் நடுவே இருக்கும் வெள்ளை நிற கோட்டிற்கு மிக அருகே இருக்கும் படி ஓட்டி சென்று பின் ரிவர்ஸில் சரியான இன்டிகேட்டர் கொடுத்து பின்னால் எடுத்து வந்து சரியாக அந்த கராஜ் பார்க்கிங் பாக்ஸுக்குள் நிறுத்த வேண்டும். நானும் அது படியே செய்து வண்டியை அதன் பாக்ஸிற்குள் நிப்பாட்டி ஹேண்ட் ப்ரேக் போட்டு காருக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆய்வாளர் முகத்தை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். அவர் முகத்தில் எந்தவித ரியாக்ஷனுமின்றி அடுத்த பார்க்கிங்கிற்கு செல்லும் படி கூறினார். அப்பாடா பாஸ் என்று எண்ணிக் கொண்டு அடுத்ததாக என்னை சோதிக்க காத்திருந்த பாரலல் பார்க்கிங்கை நோக்கி காரை ஓட்டி சென்றேன்.

பாரலல் பார்க்கிங்கிற்கு காரை பார்க்கிங் அருகே இருக்கும் வெள்ளைக் கோட்டில் இருந்து ஒரு அடி தள்ளி ஓட்டி சென்று பின் ரிவர்ஸ் கியரில் சரியான இன்டிகேட்டர் கொடுத்து வண்டியை மெல்ல பாரலல் பார்க்கிங் பாக்ஸிற்குள் நுழைத்து வகுப்பில் கற்றுக் கொண்டதை போலவே பார்க் செய்தேன். ஹேண்ட் ப்ரேக் போட்டேன். ஆய்வாளரை பார்த்தேன். அவர் கார் கதவை திறந்து உள்ளே வந்து டிரைவர் சீட்டுக்கு அருகே இருக்கும் சீட்டில் அமர்ந்து சீட் பெல்ட்டை அணிந்துக் கொண்டதும் என்னை நேராக முதன் முதலில் எங்கிருந்து பார்க்கிங் டெஸ்ட்டுக்கு காரை வெளியே எடுத்து வந்தேனோ அதே பார்க்கிங்கிற்கு ஓட்டி சென்று பார்க்க செய்ய சொன்னார். நானும் அவர் கூறிய படியே பாரலல் பார்க்கிங்கில் இருந்து வண்டியை வெளியே எடுக்கும் முன் செய்ய வேண்டிய சிக்ஸ் பாயிண்ட் செக் ஆகிய சம்பிரதாயங்களை செய்து வெளியே எடுத்து அவர் கூறிய பார்க்கிங்கில் காரை பார்க் செய்தேன்.

ஆய்வாளர் என்னைப் பார்த்து ” நீங்கள் ஹில் பார்க்கிங்கில் கோட்டின் மீது காரை நிறுத்தி விட்டீர்கள், ஆங்கிள் பார்க்கிங்கில் சில சென்டிமீட்டர் முன்னதாகவே வண்டியை நிறுத்தி விட்டீர்கள், கராஜ் பார்க்கிங்கில் காரை பாக்ஸிற்குள் சரியாக தாங்கள் கொண்டு வரவில்லை சற்று முன்னதாக வண்டியை திருப்பியதால் கோட்டின் மீது வண்டியின் டயர் ஏறியது. எமர்ஜென்சி பார்க்கிங் அன்ட் பாரலல் பார்க்கிங் மட்டும் தான் பாஸ் ஆகி இருக்கிறீர்கள். எனவே மீண்டும் ஒரு இரண்டு மணி நேர வகுப்பிற்கு புக் செய்து நன்றாக கற்றுக்கொண்ட பின் மீண்டும் இன்டர்ணல் டெஸ்ட் கொடுங்க. ஆல் தி பெஸ்ட்.”

என்றார். அதை கேட்டதும். எங்கோ கேட்ட குரல் போல் இருக்க…

“அட பார்வதி! உனக்கு இந்த கார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் இன்டர்ணல் டெஸ்ட்டில் இரண்டாவது முயற்சியில் தான் பாஸ் ஆக வேண்டுமென்பது எழுதப்படாத விதியோ!!!”

என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு வெளியே எனக்காக காத்திருந்த என் கணவரிடம் சென்று

“நான் ஃபெயில் ஆகி விட்டேன்”

என்று சொன்னதும்

“அதெல்லாம் டிரைவிங்கில் சகஜமப்பா” என்றார்.

அவர் ஏற்கனவே லைசென்ஸ் எடுத்துள்ளதால் அவருக்கு என் கஷ்டம் புரிந்தது. ஆனாலும் எனக்கு அந்த பரீட்சையின் பதற்றம் குறைய சில மணி நேரம் ஆனது.

வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் சற்று நிதானித்து கொண்டு

“அடுத்த முறை பார்த்துக்கலாம்”

என அடுத்த இரண்டு மணி நேர வகுப்புக்கு கால் சென்டர் எண்ணை அலைபேசியில் அழைத்து பதிவு செய்தேன். நாம எது செய்தாலும் அதில் சில வெற்றிகளும் பல தோல்விகளும் இருப்பது தான் வாழ்க்கை. இல்லையா! இரண்டாவது முயற்சியில் பாஸ் ஆனேனா? இல்லையா!!!! அடுத்த பதிவில் காண்போம்.

🚗…பயணம் தொடரும்…🚗

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s