அப்பேற்பட்ட சுப வார்த்தைகளால் ஆரம்பிக்கப்பட்ட எனது ஓட்டுனர் வகுப்பில் அன்று முதல் கப்சிப்😷 சரி அவர் சொல்வது போலவே நடந்துக் கொள்வோம் என்று காரை ஓட்ட ஆரம்பித்தேன். அங்கே பார், இங்கே பார், ஷோல்டர் செக் பண்ணு, ஓட்டும் போது மூன்று கண்ணாடிகளையும் பார், சாலையில் நடப்பவர்களுக்கு நின்று வழிவிட வேண்டும். ரோட்டில் டாட்டட் லைனில் நிதானித்து வண்டி ஏதுமில்லை என்றால் வேகமாக செல் வண்டியை நிறுத்தாதே. ரோட்டில் சாலிட் லைன் இருந்தால் கட்டாயம் வண்டியை நிறுத்திவிட்டு தான் செல்ல வேண்டும். வண்டி அந்த கோட்டையும் தொடக்கூடாது இந்த கோட்டையும் தொடக்கூடாது நடுவில் செல்ல வேண்டும். மஞ்சள் கோட்டை தொடவே கூடாது. நாற்பது ஸ்பீடு லிமிட் என்றால் நாற்பது முதல் நாற்பத்தைந்து வரை தான் செல்ல வேண்டும் அதை விட அதிக வேகம் கூடாது. அதே நேரம் அதை விட கம்மி வேகத்திலும் செல்லக் கூடாது. ரோட்டில் குறிப்பிட்டுள்ள வேகத்தை தான் கடைப்பிடிக்க வேண்டும். வண்டி ஜெர்க் ஆக கூடாது. ஸ்மூத்தாக ஓட்ட வேண்டும். ரோட்டில் இருக்கும் பெரிய வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது ஸ்பீடு இருபதை தாண்ட கூடாது. சிறிய வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது ஸ்பீடு ஜீரோவில் இருக்க வேண்டும். இண்டிகேட்டர் போடாது வண்டியை திருப்பக்கூடாது. ரவுண்ட் அபௌட்டில் எப்போது இண்டிகேட்டர் குடுக்க வேண்டும் எந்த இண்டிகேட்டர் குடுக்க வேண்டும் என தியரியாக படிக்கும் போது இருந்ததை விட ரோட்டில் காரை ஓட்டும் போது சற்றே நம்பிக்கை தளர்வதை உணர்ந்தேன். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேர வகுப்பு. வாரத்திற்கு இரண்டே வகுப்புகள் என பத்து மணிநேர வகுப்பு முடிந்ததும் அவர்கள் இன்ஸ்டிடியூட்டின் இன்டர்ணல் டிரைவிங் அசஸ்மெண்ட் டெஸ்ட் இருப்பதாகவும் அதை நான் எடுக்க வேண்டும் என்றும் கூறினர். சரி என்று அதற்கு பதிவு செய்தேன். அதற்கான நாள் வந்தது. இன்ஸ்டிடியூட் சென்றேன். பெண்களுக்கான வரவேற்பரையில் அமர்ந்தேன். சற்று நேரமானதும் ஒரு பெண்மணி வந்து எனது பெயரை அழைத்தார். நான் எழுந்து அவர் பின்னால் சென்றேன். என் கையில் கார் சாவியை கொடுத்து ஓர் காரை காட்டி அதில் ஏறும்படி கூறினார். நானும் ஏறி எனது பயிற்றுவிப்பாளர் சொன்னதை போலவே சீட் பெல்ட் போடுவதற்கு முன் செய்ய வேண்டி சடங்குகள் (அது படி தான் செய்ய வேண்டும்) ஆன இஞ்சின் ஸ்டார்ட் செய்வது, ஏ.சியை ஆன் செய்வது, கண்ணாடிகளை சரி செய்வது போன்றவற்றை முடித்தேன். சீட் பெல்ட்டை அணிந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த ஆய்வாளரும் சீட் பெல்ட் போட்டிருக்கிறாரா என்றும் நாம் பார்க்க வேண்டும். அதையும் பார்த்தேன். பின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆய்வாளர் வண்டியை நிதானமாக வெளியே எடுத்து ஓட்டச் சொன்னார். சிக்ஸ் பாயிண்ட் செக் என்று சொல்லப்படும் வலது புற கண்ணாடி, ஷோல்டர் செக், இடது புற கண்ணாடி ஷோல்டர் செக், வண்டிக்கு பின்னால், காரின் சென்டர் மிரர் ஆகியவைகளை சரி பார்த்த பின் காரை இன்ஸ்டிடியூட்டிலிருந்து வெளியே ஓட்டி வந்தேன். அதுவரை எல்லாம் நல்லபடியாக தான் சென்றது.
அன்று வரை இன்ஸ்டிடியூட்டில் இருந்து வண்டியை அத்தனை முறை வெளியே எடுத்து வந்துள்ளேன். ஆனால் அன்று பதட்டத்தில் அதன் வாசலில் இருந்த ஸ்டாப் சைனை கவணிக்க தவறிவிட்டேன். நான் அந்த பரீட்சையில் தோல்வியுற்றதாக ஆய்வாளர் கூறி வலது புறம் வண்டியை திருப்பி ஓட்டச் சொன்னார். அதை கேட்டதுமே அவ்வளவுதான் என்று என் மனம் என்னிடம் கூறியது. அடுத்து பதினைந்து நிமிடங்கள் ஆய்வாளர் சொன்னபடி காரை ஓட்டி இருக்கிறேன். ஆனால் எப்படி என்று எனக்கு தெரியவில்லை ஏனெனில் என் மனம் முழுவதும் எடுத்ததும் நான் செய்த தவற்றை எண்ணிக் கொண்டே இருந்தது. ஒரு வழியாக இன்ஸ்டிடியூட்டிற்குள் வந்து காரை நிறுத்தினேன். சீட் பெல்ட்டை கழற்றினேன். பக்கத்தில் இருந்த ஆய்வாளர், வண்டி ஓட்டிய அந்த பதினைந்து நிமிடங்களில் நான் செய்த தவறுகளை பட்டியலிட்டார். அய்யோ! பார்வதி நீ என்னடான்னா ஒரே ஒரு தப்ப நினைச்சுட்டு இருக்க இங்க இந்தம்மா என்னடான்னா இருபது தவறுகளை அடுக்கறாங்களே! என்று என் மனம் என்னை ஏளனம் செய்தது எனக்கு கேட்டது. உடனே நான் ஆய்வாளரிடம்,
“முதலிலேயே நான் ஒரு பெரிய தவற்றை செய்து விட்டதால் பதற்றத்தில் அடுத்தடுத்து தவறுகளை இழைத்து விட்டேன். மன்னியுங்கள்”
என்றேன். அதற்கு அவர்
“எதற்கு மன்னிப்பு? ஒரு போதும் வண்டி ஓட்டும் போது பதற்றம் இருக்க கூடாது. தன்னம்பிக்கை வேண்டும். நீங்கள் கொஞ்சம் பயப்படுகிறீர்கள். அதனால் தான் தவறு நேர்கிறது. இம்முறை நீங்கள் இந்த பரீட்சையில் தோல்வி அடைந்துள்ளீர்கள். மீண்டும் வகுப்புகள் எடுத்து நன்றாக பயிற்சி பெற்றதும் வாருங்கள் வண்டியை ஓட்டி காட்டுங்கள். இங்கே நாங்கள் வைக்கும் பரீட்சையில் நீங்கள் பாஸ் ஆனால் தான் உங்களை நாங்கள் RTA ரோட் டெஸ்ட்க்கு அனுப்புவோம். ஆல் தி பெஸ்ட்”
என்று கூறினார். நன்றியை தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். மனம் சற்று சோர்வடைந்து தான் இருந்தது. ஆனால் மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணமும் உதித்தது. நான்கு மணிநேர வகுப்புக்கு சென்றேன். மீண்டும் அதே இன்டர்ணல் டெஸ்ட் எடுத்தேன். இம்முறை சற்று தன்னம்பிக்கை கூடியிருந்தது. சரியாக ஓட்டி, அப்படியும் ஆறு சிறிய தவறுகள் செய்தேன். பத்து வரை சிறிய தவறிழைக்கலாம் என்பதால் பாஸ் ஆனேன்.
அடுத்ததாக பார்க்கிங் கிளாஸில் சேர வேண்டும் என்று கூறினார்கள். அதற்கான வகுப்புகளை பதிவு செய்ய சென்றேன். இரண்டு நாட்கள் நான்கு மணி நேர வகுப்பை பதிவு செய்துவிட்டு வீட்டிற்கு வந்தேன்.
பார்க்கிங் பரிதாபங்கள் நாளைய பதிவில்😊
🚗பயணம் தொடரும்…