ஒரு பக்கம் சுசிலா அவர்கள் சொசைட்டி குழந்தைகளுக்கு பாரதியார் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். குழந்தைகளும் சத்தமாக நம் மகாகவியின் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்கள்.
மறுபக்கம் அவளின் பக்கத்து வீட்டுக்காரர்களான வசந்தியும் ராதாவும் பேசிக் கொண்டிருந்தனர்.
வசந்தி: ஏய் ராதா இன்னிக்கு நம்ம கண்ணம்மா வேலைக்கு உன் வீட்டுக்கு வந்தாளா?
ராதா: இல்லையே வசந்தி. நானும் அவளுக்கு தான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன். நீ என்னடான்னா என்கிட்ட வந்து கேட்கிற!!!
வசந்தி: என்ன ஆச்சு அவளுக்கு? இந்த சுசிலா வேற ஞாயிறு ஆச்சுன்னா பாரதியார்… பாட்டுன்னு ஆரம்பிச்சிடறா!!!
ராதா: விடுப்பா. இந்த மாதிரி யாராவது சொல்லிக்கொடுத்தா தான் இந்த காலத்து குழந்தைங்க பாரதி யாருன்னே தெரிஞ்ப்பாங்க.
வசந்தி: நான் அந்த கண்ணம்மாக்கு ஃபோன் செஞ்சும் பாத்தேன். ஆனா அவ எடுக்கல!!
ராதா: அவ நம்ம கிட்ட வேலை கேட்டு வந்தப்ப எப்படி இருந்தா!! ஆனா இப்ப!!! ஞாயிறு லீவு வேணுமாம், சம்பளத்த Gpay or phonepay பண்ணுங்கறா!! அதை கேட்ட நான் பப்பேன்னு முழிச்சுக்கிட்டு நின்னேன்!!!
வசந்தி: நீ சொல்லறதும் கரெக்ட் தான் ஒண்ணும் தெரியாதவளா இருந்தவ நம்மக்கே அட்வைஸ் சொல்லற அளவுக்கு என்ன வாய்?
ராதா: அத சொல்லு வசந்தி. சரி சரி விடு! என்ன பண்ண! ஒரு வேளை அவளுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையோ என்னமோ!! ஏய் அதோ நம்ம சுசிலா வரா!!
வசந்தி: ஆமாம் ஆமாம்!! அவ குடுக்குற தைரியத்துல தான் இந்த கண்ணம்மா ரொம்ப ஆட்டம் போடறா!
ராதா: சும்மா இரு வசந்தி. சுசி! ஏய் சுசி!
சுசிலா: ஹே ராதா. எப்படி இருக்க? ஹாய் வசந்தி நீ எப்படி இருக்க? ஆஃபீஸ் வேலையெல்லாம் எப்படி போவுது?
ராதா: நான் நல்லா இருக்கேன் சுசி.
வசந்தி: ம்…ம்…நல்லா தான் இருக்கேன். சரி இன்னைக்கு அந்த கண்ணம்மா உன் வீட்டுக்கு வேலைக்கு வந்தாளா?
சுசிலா: இல்ல வரல!
வசந்தி: அப்படீன்னா அவ இன்னைக்கு நம்ம காலனிக்குள்ளயே வரலையா! ஞாயித்துக்கிழமையும் அதுவுமா அவ பாட்டுக்கு லீவு போட்டா நாம என்ன பண்ணறது?
சுசிலா: இப்படி நின்னு பேசறதுக்கு பதிலா வேலையை பார்க்கலாமே!! அவளும் மனுஷி தானே. அவளுக்கும் வாரத்துல ஒரு நாளாவது ஓய்வு வேண்டாமா?
வசந்தி: உனக்கென்னமா உன் வீட்டுல நீயும் உன் பொண்ணும் மட்டும் தான் ஆனா என் வீட்டுல அஞ்சு டிக்கெட் அப்படீன்னா எவ்வளவு பாத்திரம் சேரும்? எவ்வளவு வேலை இருக்கும்ன்னு யோசிச்சுப் பாரு!
சுசிலா: சரி சரி! எனக்கு நேரமாச்சு நான் வரேன்.
வசந்தி: நியாயமான கேள்வி கேட்டா எப்படி தப்பிக்கறா பாரு!!
சுசிலா: என்ன சொன்ன வசந்தி!! நான் தப்பிக்கல. எனக்கு வேலை இருக்குப்பா. “புறஞ்சொல்லலாகாது பாப்பான்னு” நம்ம பாரதி சொன்னது பாப்பாக்கு மட்டுமில்ல நம்மளுக்கும் தான். அதுவுமில்லாம கண்ணம்மா அவ கனவ நெனவாக்க போயிருக்கா. அவ இன்னைக்கு வர்றது டவுட் தான். சும்மா பேசிட்டு இருக்காம ரெண்டு பேரும் வேலையை போய் பாருங்க.
ராதா: பார்த்தியா வசந்தி!! அப்படீன்னா அந்த கண்ணம்மா இன்னிக்கு வரமாட்டேன்னு இவகிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கா!
வசந்தி: ஏன் நம்மகிட்டயும் சொல்லிருக்கலாம் இல்ல
ராதா: நாம விட மாட்டோம்ன்னு தான் சொல்லலையோ என்னவோ!
வசந்தி: சரி சரி!! நம்ம சுசிலா மாதிரி நானும் ஒரு பாரதியார் லைன் எ இந்த சிட்டுவேஷனுக்கு ஏத்தா மாதிரி சொல்லவா…
ராதா: என்னது? சொல்லேன் கேட்போம்!
வசந்தி: “துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா” சாரி ராதா! ராதா! போ நீயும் போய் உன் வேலையை பாரு.
என்று பாத்திரத்தை தேய்ப்பது போல் பாவனை காட்டிக் கொண்டே சொன்னாள் வசந்தி.
ராதா: எனக்கு தோனுற பாட்டு என்ன தெரியுமா “கண்ணம்மா கண்ணம்மா சீக்கிரம் வேலைக்கு வந்துடுமா”
மறுநாள் ஆனது
கண்ணம்மா: வசந்தி மா வசந்தி மா!!
வசந்தி: வாடி மா வா! நேத்து ஏன் மகாராணி வரலை?
கண்ணம்மா: நேத்திலேந்து நான் என் வேலைய விட்டு விலகிட்டேன் மா.
வசந்தி: என்னடி சொல்லுற?
கண்ணம்மா: அம்மா! அதுதான் இங்கிலிஷ் ல சொல்லுவாங்களே!! ரெஸிக்னேஷன் அத செய்யறேன் மா.
வசந்தி: என்னடி கண்ணம்மா! குண்ட தூக்கி போடற? ராதா க்கு தெரியுமா?
கண்ணம்மா: அவங்க கிட்டயும் சொல்லிட்டேன்ம்மா. இப்போ நம்ம காலனில ஒரு மீட்டிங் வச்சிருக்கேன் மறக்காம வந்திடுங்க. நான் வரேன்.
வசந்தி: ஆஃபீஸ் இருக்கே!
கண்ணம்மா: அம்மா அதுதான் ஒர்க் ஃப்ரம் ஹோம் தானேமா! ஒரு பத்து நிமிஷம் தான்ம்மா… வாங்கமா!
வசந்தி: சரி சரி வரேன்.
என்று கண்ணம்மாவிடம் கூறிய வசந்தி நேராக ராதாவிடம் சென்றாள்
வசந்தி: ராதா…
ராதா: வசந்தி….என்ன நடக்குது?
வசந்தி: எனக்கும் ஒண்ணும் புரியல. சரி வா நாம போய் அப்படி என்னத்த இந்த கண்ணம்மா சொல்ல போறான்னு கேட்போம்.
என்று இருவரும் அவர்களின் மற்றொரு தோழியான மாவையும் அழைத்துக் கொண்டு சென்றனர். அங்கே ஏற்கனவே வந்து அமர்ந்திருந்த காயத்ரி இவர்களை பார்த்ததும்…
காயத்ரி: ஹே உமா, ராதா, வசந்தி என்ன நம்ம கண்ணம்மா எல்லாம் மீட்டிங் போட்டிருக்கா?
உமா: அவ ரொம்ப நாளா அவளுக்கு ஒரு கனவு இருக்கு இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தா…அது…இந்த மீட்டிங் தானோ!!!
ஹீ ஹீ ஹீ ஹீ… என்று அவர்களுக்குள்ளேயே சிரித்து கேலி செய்துக் கொண்டனர். அப்போது அங்கு ஏதோ பேப்பர்களை அடுக்கிக் கொண்டிருந்த கண்ணம்மா அவர்கள் பேசுவதை கவனிக்கவில்லை. பேப்பர்களை அடுக்கி கையில் ஏந்திக் கொண்டு வந்து அங்கிருந்த அந்த காலனி பெண்களைப் பார்த்து பேசலானாள்.
கண்ணம்மா: ம்….எல்லாரும் வந்துட்டீங்கன்னு நினைக்கறேன். இன்னேலேந்து நம்ம காலனில நான் வேலைப் பார்க்க போறதில்ல.
வசந்தி: அதத்தான் ஏற்கனவே சொல்லிட்டியே!
கண்ணம்மா: ஆனா ஏன்னு காரணத்த சொல்லணுல்லமா.
உமா: என்னடி மா…அந்த காரணம்!!
கண்ணம்மா: அது என்னன்னா!!! எனக்குள்ளேயும் நிறைய கனவு இருக்கு. அதுல ஒண்ணு நல்லா படிக்கணும்ங்ற கனவு, பன்னெண்டாம் வகுப்பு மட்டுமே படிச்ச நான் நம்ம சுசிலா அம்மா தயவால டிகிரி முடிச்சிட்டேன். என்னோட ஒரு கனவு பலிச்சிடுச்சு.
Gayathri: அதுக்கும் நீ வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லறதுக்கும் என்ன கண்ணம்மா சம்மந்தம்?
கண்ணம்மா: இருங்க இருங்கம்மா. என்னோட இன்னொரு கனவு சுயம்மா ஒரு தொழில் பண்ணனும்ன்னுங்கறது. அதுக்கும் சுசிலா மா சொல்லி தந்த பாரதியார் பாட்டு தான் எனக்கு ஊந்துகோலா இருந்துச்சு.
வசந்தி: அப்படி என்ன பண்ணின?
கண்ணம்மா: நேத்து ஒரு ஏஜென்சி எடுக்குற இன்டர்வியூ விஷயமா போயிருந்தேன். அந்த ஆர்டர் எனக்கு கிடைச்சிருக்கு. இனி இந்த காலனி மட்டுமில்லாம இன்னும் நிறைய காலனிகளுக்கும் “கண்ணம்மா ஹோம் க்ளீனிங் சர்வீஸஸ்” லேந்து என்னோட ஸ்டாஃப் தான் உங்க வீடெல்லாத்தையும் பளபளக்க செய்வாங்க.
வசந்தி: அப்பாடா. வயத்துல பால வார்த்த கண்ணம்மா!
கண்ணம்மா: இருங்க அதுக்கும் சில விதிமுறைகள் எல்லாம் இருக்கு அதெல்லாம் இந்த ஃபார்ம்ல இருக்கு இதுக்கெல்லாம் உட்படறவங்க மட்டும் கையெழுத்து போட்டு தந்தா உங்க வீட்டுவேலைக்கு ஆள் வருவாங்க. இல்லாட்டி இல்ல. அவங்கள மரியாதையா நடத்தணும்.
என்று அவள் கையில் வைத்திருந்த ஃபார்ம்களை அனைவருக்கும் குடுத்தாள். அதை வாங்கி பார்த்தனர் அக்காலனி பெண்கள். அப்போது ராதா கண்ணம்மாவிடம்…
ராதா: சரி கண்ணம்மா! உனக்கு இவ்வளவு விஷயங்களும் தைரியமும் எங்கேந்து வந்தது?
கண்ணம்மா: சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பான்னு பாரதியார் பாட்டு நீங்க கேட்டதில்ல? அதுக்கு ஏத்தா மாதிரி படிப்பை தொழுது படிச்சேன்.
ராதாவை பார்த்து சொன்னாள்
ராதா: ஓ!!!!
வசந்தி: சரி படிச்ச. ஆனா தைரியம் எப்படி வந்துச்சு?
கண்ணம்மா: பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்! உங்களுக்கு மட்டுமில்ல மா என்னை மாதிரி இருக்கறவங்களுக்கும் தான்
வசந்தியை பார்த்து சொன்னாள் கண்ணம்மா.
வசந்தி & ராதா: ஆங் (என்று வாய் பிளந்து நின்றனர்)
கண்ணம்மா: வாயை மூடுங்கம்மா ஈ இல்ல கொசு போயிட போகுது. நளைக்குள்ள ஃபார்ம் ஃபில் செஞ்சு குடுங்க. சரியா.
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”ன்னு
இருக்குற இந்த காலத்துலன்னு இல்லங்க எந்த காலமா இருந்தாலும் நம்ம பாரதியார் சொல்லி இருக்குறா மாதிரி ஒரு பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி அவங்க படிப்பும் அறிவும் உழைப்பும் என்னென்னைக்கும் வீண் போனதில்லை, வீண் போகாது.
ஒரு பொண்ண நல்லா படிக்க வச்சீங்கன்னா அடுத்த சந்ததியையும் சேர்த்து படிக்க வைக்கிறது சமம்ங்க.
சுசிலா: சபாஷ் கண்ணம்மா. சரியா சொன்ன.
கனவு மெய்ப்பட வேண்டும்ங்கற நம்ம பாரதியார் வரிகளுக்கு ஏத்தா மாதிரி கண்ணம்மா கண்ட கனவு நெனவாகிடுச்சு. நீங்க எல்லாரும் எதுக்கு காத்திட்டு இருக்கீங்க? ம்…உங்க கனவுகளை நிஜமாக்க புறப்படுங்க. உங்கள் அனைவரின் கனவுகளும் மெய்ப்பட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
🙏நன்றி🙏
நா. பார்வதி