மையின் சாரல்கள் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் வேண்டி இக்கதையை எழுத இருக்கிறேன். இக்கதை முழுக்க முழுக்க எனது கற்பனைக் கதையாகும். இதில் வரும் கதாபாத்திரங்கள், இடம், காலம் மற்றும் பொருள் அனைத்தும் என்னுள் தோன்றியதை வைத்து படைத்துள்ளேன். நமது தமிழ்நாட்டின் வீர மங்கைகளாக திகழ்ந்த/ திகழ போகிற மூன்று பெண்கள் பற்றிய கதையாகும்.
வீரத்திலும், விவேகத்திலும்
ஆளுமையிலும், ஆன்மீகத்திலும்
ஆனந்தத்திலும், ஆக்ரோஷத்திலும்
பாசத்திலும், பண்பிலும்
அன்பிலும், அக்கறையிலும்
ஆவலிலும், ஆர்பாட்டத்திலும்
என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய நமது பெண் சிங்கங்களின் அருமைப் பெருமையையும் அதே போல் இன்றும் நம்முள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பெண் சிங்கங்களின் ஆற்றலையும் உணரச் செய்திடும் கதையாக இது அமையும் என்ற முழு நம்பிக்கையுடன் எழுதத் துவங்கியுள்ளேன்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம், பெண் சுதந்திரம், பெண்கள் அதிகார பதவி வகித்தல் என்று பலர் பலவிதமாக போர்க்கொடி உயர்த்தியும், பல இடங்களில் இதைப் பற்றி முழக்கமிட்டும், வானொலி, தொலைக்காட்சி, கீச்சகம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் ஆக்கப்பூர்வமாக பேசியும், எழுதியும், படங்களாகவும் பதிவிட்டு வருகின்றனர். இவற்றால் மாற்றங்கள் நேர்ந்ததா? என்றால் அதற்கு முழுமனதோடு ஆம் நிகழ்ந்துள்ளது, என்று கூற முயன்றாலும் முடியாது மீண்டும் அதே பல்லவியை பாட ஆரம்பிக்கின்றோம். ஏனெனில் அனைத்திற்கும் ஓர் முற்றுப் புள்ளி வைக்க தவறுகிறோம் என்பதே உண்மை. ஆங்காங்கே இன்றளவும் பெண்களுக்கு எதிராக பெண்களே/ஆண்களே செய்து வரும் வக்ரங்களை பற்றிய செய்திகளை காணும் போதும், படிக்கும் போதும் பிறரிடமிருந்து கேள்விப்படும்போதும் மனம் பத பதைக்கத் தான் செய்கிறது. இல்லையா! ஏன் அப்படி? என்றால் நம்முள் இன்னமும் கொஞ்சம் ஈரம் மிச்சம் உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
அந்த ஈரத்தை வைத்து ஏதாவது செய்யலாமென்று ஒரு அடி முன் வைத்தால் அதற்குள் அடுத்த சம்பவம் ஒன்று நடந்தேறி, அது அடுத்த நாள் நாளிதழ், செய்திகள், மீம்ஸ் என்று அனைத்திலும் பளிச்சிட நாம் முதலாவது சம்பவத்திற்காக கொடி பிடிப்பதா? இல்லை இரண்டாவதாக நடந்த சம்பவத்திற்கு போராட்டம் செய்வதா? என்று ஒரு முடிவெடுத்து இரண்டிற்குமாக ஏதாவது செய்ய முயலும் போது மூன்றாவதாக ஏதேனும் ஒன்று நிகழ்ந்து விடுகிறது.
அந்த காலத்தில் பெண்கள் படிப்பறிவு அவ்வளவாக இல்லாதவர்களாக இருந்தாலும் நுண்ணறிவு நிறைந்தவர்களாக திகழ்ந்துள்ளனர்.
பாசம், அன்பு, பண்பு, பொறுப்பு, அக்கறை என்று நிறைந்திருந்தாலும் தன் குடும்பத்தினருக்கு ஏதேனும் ஒன்று நேர்ந்து விட்டால் தன் உயிரைக் கொடுத்தாவது போராடி அவர்களை காப்பாற்றுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே!
முப்பெரும் தேவியர்களாக திகழ்ந்த மூன்று பெண் சிங்கங்கள் கர்ஜித்தால் என்னவாகும் என்பதை பற்றியது இந்த கதை. முப்பெரும் தேவியர் என்றதும் சரஸ்வதி, லட்சுமி மற்றும் சக்தி என்று சட்டென எண்ணிக் கொள்ளாதீர்கள். இக்கதையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் நான் கூற வரும் முப்பெரும் தேவியர் யார் என்பது உங்களுக்குத் தெரிய வரும். குடும்பத்திற்காக, நாட்டு மக்களுக்காக, பொது மக்கள் நலனுக்காக, நாட்டையும் வீட்டையும் மீட்டெடுப்பதற்காக என போராடிய / போராடிக் கொண்டிருக்கும் முப்பெரும் தேவியரை பற்றிய கதை தான் இது.
மரணத்தை துணிந்து ஏற்றுக்கொண்ட அக்கால பெண்களும், அவர்களுக்காக மரணம் வரை சென்று மீண்டு வரும் இக்கால பெண்களும் என மாறி மாறி நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்த உள்ளனர்.
சில கதைகளை படித்ததும் பிடித்துவிடும். சில நாட்களில் மறந்தும் போய்விடும். ஆனால் சில கதைகள் படித்ததும் பிடித்து விடாது, மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தால் அதன் உள் அர்த்தங்களும், அதில் புதைந்து கிடக்கும் உண்மைகளும், கதாபாத்திரத்தின் உருவாக்கமும் புரிய ஆரம்பித்ததும் மனதில் பச்சைக் குத்தியது போல ஒட்டிக்கொள்ளும். அப்படிப் பட்ட கதை நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும். அது போன்ற கதையாக இக்கதை அமைய வேண்டுமென்ற ஆசையுடன் எழுதியுள்ளேன்.
பரபரப்பு நிறைந்த இக்கதையை படித்துப் பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு உற்சாகம் மட்டுமின்றி உத்வேகத்தையும் கொடுக்க வல்லமைப் பெற்றதாகும்.
எனவே தொடர்ந்து படியுங்கள்
விமர்சனங்களை அள்ளித் தாருங்கள்
என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டு வாருங்கள். மீண்டும் வாருங்கள்.
நன்றி
நா. பார்வதி.