நளபாகம்

நளபாகத்தின் ஒரு பாகமான மத்திய விருந்தில் நடந்த சம்பாஷணை;

நடக்கிறதோ இல்லையோ யாமறியேன் பராபரமே!
ஆனால் நடந்தால் எப்படி இருக்கும்?
கற்பனை பிறந்தது
சம்பாஷணை நடந்தது.

வாழை இலை 1 : அப்பாடா மூச்சு முட்ட முட்ட எங்களை ஒருவர் மீது ஒருவர் என அடுக்கி வைச்சதிலிருந்து விடுதலை விடுதலை விடுதலை…

வாழை இலை 2: என்னத்த விடுதலை! இதோ இப்போ நம்ம மேல தண்ணீயை தெளித்து ஒவ்வொன்னா வைக்க ஆரம்பிப்பாளே..

வாழை இலை 3: அதோ வர ஆரம்பிச்சுட்டா! முதலில் என்னது?

சுவீட் : ஹாய் வாழை இலை..நான் வந்துட்டேன்.

பாயசம் : நானும் வந்துட்டேன்…ஆனா! இப்போ எல்லாம் என்னை இந்த கப்புல வச்சுடறா. என்ன பண்ண!

சுவீட் : உன்னை வாழை இலையில் ஊத்தினா நீ தான் எல்லாத்தோடயும் கலந்து எல்லாத்தையுமே இனிக்க வச்சுடறயே. அதுனால இருக்குமோ!

வாழை இலை 4 : அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்! ஆனா… என்னக்கென்னவோ அந்த காலத்துல இருந்த பாயசம் மாதிரி இல்லாம… இப்பெல்லாம் உன்னை தண்ணியாட்டம் செஞ்சுடறாளா அதுனால குடிக்க வசதியா இருக்குமேன்னு கப்புல வச்சிருக்கா போல!

வாழை இலை 5: சுவீட்டும் அதைத் தானே சொன்னா!!

வாழை இலை 6: எதுவா இருந்தா என்ன நம்ம தலையில விழறதுல ஒரு ஐட்டம் கம்மி ஆகிடுத்துன்னு நெனைச்சு நாம சந்தோஷப் பட்டுப்போம். இதோ அடுத்தது வந்துண்டிருக்கு பாருங்கோ.

சுவீட் பச்சடி : என்ன! என்ன! இங்கே ஒரே கூச்சலும் குழப்பமுமா இருக்கு?

சுவீட் : வாடி என் பச்சடி. நீயும் இனிப்பு நானும் இனிப்பு. பின்ன எதுக்கு நம்ம ரெண்டு பேரையும் பரிமாரறாளோ தெரியலை?

சுவீட் பச்சடி : ஏன் பாயசம் மட்டும் என்ன கசப்பா!!! அது மாதிரி தான். நான் வந்ததுல உனக்கென்ன கஷ்டமா போச்சு?

சுவீட் : எனக்கென்ன கஷ்டம்? நான் தான் ஃபர்ஸ்ட் டு பி சர்வ்டு ஆக்கும்.

சுவீட் பச்சடி : க்கும்!!

வாழை இலை 7: ரெண்டு பேரும் நிப்பாட்டுங்கோ!! ஏய் சுவீட் பச்சடி எங்கடி உன் சிநேகிதி தயிர் பச்சடி? அவளும் நீயுமா தானே ஜோடி போட்டுண்டு வருவேள்! இன்னைக்கு ஏன் நீ மட்டும் வந்திருக்க?

சுவீட் பச்சடி : ஹா ! ஹா! ஹா! எப்போ நான் மட்டும் வந்திருக்கேன்? இதோ என் பக்கத்திலேயே சத்தமில்லாம உட்கார்ந்திருக்காளே! வெள்ளரி தயிர் பச்சடி. ஏன் உன் தலையில அவ உட்கார்ந்தது தெரியலையோ!!

சுவீட் : அது ஒண்ணுமில்லை ரெண்டு பேரையும் ரெட்டைப் பிரவிகளாட்டம் டக்கு டக்குன்னு போட்டுட்டுப் போயிட்டாளோனோ! அது தான் வாழை இலைக்கு ஒண்ணு போல தோனிருக்கு!

வாழை இலை 8: சரி சரி அதோ அங்க வரது நம்ம பாசிபருப்பு கோஸ்மல்லி தானே!

வாழை இலை 9: சாக்ஷாத் அவனே தான்.

பாசிபருப்பு கோஸ்மல்லி : டன்டடான் ஹாய் படீஸ்

தயிர் பச்சடி : வாடா வா. வந்து ஐக்கிய மாகிக்கோ!

பாசிபருப்பு கோஸ்மல்லி : என்ன தச்சு பச்சு அக்கா!

சுவீட் பச்சடி : டேய்! நீ அப்படி அவளை கூப்பிடறது நல்லா தான் இருக்கு டா. ஹீ ஹீ ஹீ!

தயிர் பச்சடி : ம்…இருக்கும் இருக்கும்!! ஏன் போன முஹூர்த்துக்கு அந்த ஜட்ஜ் ஆத்து சஷ்டியப்தபூர்த்தி பந்தில உன்ன அவன் எப்படி கூப்பிட்டான்னு ஞாபகம் இருக்கா?

சுவீட் பச்சடி : அச்சச்சோ! அது ஏன் இப்போ?

தயிர் பச்சடி : ஆங்! அது! அப்போ நான் என்ன அவனோட சேர்ந்துண்டு உன்னை கேலி செஞ்சேனா! இல்ல ஹீ ஹீ ஹீன்னு எகத்தாளமா சிரிச்சேனா!

சுவீட் பச்சடி : மன்னிச்சுக்கோமா தாயே! சரி சரி நம்ம உருளை காரகறி உருண்டுண்டே வந்து விழறத எல்லாரும் பாருங்கோளேன்!

பாசிப்பருப்பு கோஸ்மல்லி : டேய் ! உருளை செத்த நகந்துக்கோயேன்டா! எப்பப் பார்த்தாலும் உருண்டுண்டே என் மேல வந்து விழறதே உன் பொழப்பா போச்சு!

உருளை காரகறி : சாரி அண்ணா! நானாவா வந்து உங்க மேல விழறேன்!! அதோ பறிமாறறாரே அந்த சுப்புணி பண்ணற வேலையாக்கும்! அவருக்கு என்ன அப்படி தலபோற அவசரம்ன்னு தெரியலை. இப்படி என்னை படக் படக்னு இலையில உருட்டி போட்டுட்டு அவர் பாட்டுக்கு போயிண்டுருக்கார். ம்…இதோ நம்ம இலைக்கு முன்னாடி உட்கார்ந்துண்டு இருக்குற புன்னியவதி என்னை உங்க மேலேந்து நகர்த்தி வச்சுட்டா. நிம்மதியாச்சா?

பாசி பருப்பு கோஸ்மல்லி: பின்ன! ஆங் ஆங்! சரி சரி

உருளை காரகறி : அண்ணா இதோ நம்மகூட அளவலாவ பீன்ஸ் உசிலி துள்ளிண்டு வந்துட்டான் பாருங்கோ!

பீன்ஸ் உசிலி : எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய் சொல்லிக்கறேன்! என்ன நான் வர்றதுக்குள்ள நிறைய பேசிறிப்பேளே! நான் என்னத்த மிஸ் பண்ணினேன்னு வரிசையா சொல்லுங்கோ பார்ப்போம்!

தயிர் பச்சடி : ஐய்யயோ!!

பீன்ஸ் உசிலி : என்ன ஆச்சு பச்சடி அக்கா?

தயிர் பச்சடி : நம்மளை எல்லாரையும் சேர்த்து செஞ்ச மாதிரி இருப்பானே! அவன் வந்துட்டான் டா வந்துட்டான்!

பீன்ஸ் உசிலி : நம்மளை சேர்த்து செஞ்சா மாதிரியா? ஓ! ஓ! ஓ! ஆங்! ஆங்! ஆங்! ஆமாம்! அதுவும் என் பக்கத்துலயே வந்து உட்காருவானே…ம்…உட்கார்ந்துட்டன்… ஹலோ மிஸ்டர் அவியல்

அவியல் : ஹாய் மை டியர் தோழர்களே! தோழிகளே!

உருளை காரகறி : இவரே ஒரு கலப்படம்! இதுல மொழி கலப்படம் வேறயா! ஹாய்

அவியல் : உருளை நீ ஏதோ சொன்னா மாதிரி இருந்துதே!

உருளை காரகறி : ஒண்ணுமில்ல மாமா!

அவியல் : இப்படியே மெயின்டேயின் பண்ணிக்கோ! சரியா! உன்னோட இந்த வாயால தான் உன்னை என்னோட சேர்த்துக்க மாட்டேங்கறேன்!

உருளை காரகறி : ஓகே ஓகே! அதுதான் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேனே மாமா!

அவியல் : அச்சச்சோ! இவளா! இவளைப் பார்த்தாலே புளிப்பு மண்டைக்கு ஏறுமே!

பீன்ஸ் உசிலி : வாம்மா மின்னல்!

இஞ்சிப்புளி : எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? நலமா?

அவியல் : ம்க்கும்! எங்க!! அதுதான் நீ வந்துட்டியே!

இஞ்சிப்புளி: நான் மட்டும் தனியா வரலை இதோ இவளும் வந்திருக்கா. ஏன்டி ஒரு ஹாய் சொன்னா தான் என்னவாம். உனக்கு ஊறும் காய்ன்னு பேரு வச்சாலும் வச்சா நீ அப்படியே ஊறி போயிட்டயாக்கும்.

ஊறுகாய்: ஹாய்

இஞ்சிப்புளி: ம்க்கும்! இப்படி சுரத்தே இல்லாம சொல்லறதுக்கு நீ சும்மாவே இருந்திருக்கலாம் போ.

வாழை இலை 10: வந்துட்டாங்கப்பா கொற கொறன்னு சத்தம் குடுக்கற டிவின்ஸ்! வாங்க அப்பளம் சார் அன்ட் மொறு மொறு வடை சார்.

அப்பளம் : என்ன இந்த பந்தில வரவேற்பு கொஞ்சம் கம்மியா இருக்கறா மாதிரி இருக்கே! நீ என்ன சொல்லற வட்டு என்கிற வடையாரே?

வடை : அட ஆமாம்! அப்பு என்கிற அப்பளமாரே நீர் சொல்லறது சரி தான். நமக்கு முன்னாடியே வந்து ப்ரைம் ஸ்லாட்டை பிடிச்சுண்டு உட்கார்ந்துக்கறதால ரொம்ப தான் பண்ணறா!! இருக்கட்டும்! இருக்கட்டும்! அடுத்த பந்தில நாம இல்லாம போனோம்ன்னா தெரியும் இவாளோட கதி!

இஞ்சிப்புளி : அதை விடுங்கோ அப்பு அன்ட் வட்டு. இதோ வந்திருக்கானே இவனை போட்டு தான் நம்ம எல்லாரையும் தயார் பண்ணறா! ஆனாலும் இவனை எதுக்கு இப்படி நம்மளோட சேர்த்து பந்தில வாழை இலை மூலையில வைக்கறாளோ தெரியலை!

அப்பளம் : என்ன தான் இவனைப் போட்டு உங்களை செய்திருந்தாலும் சிலருக்கு இவன் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா தேவைப்படுறான் அதுதான் காரணம். என்னடா உப்பு நான் சொன்னது சரி தானே!

உப்பு : சரி தான் அய்யா! உங்களிலும் நான் இருக்கிறேன்! ஆனால் ஏனோ நீங்கள் அதை மறந்து விடுகிறீர்கள். பரவாயில்லை.

அப்பளம்: இதோ வந்துடுத்து வழவழ கொழ கொழ வாழைப்பழம்.

வாழை இலை 11: அச்சச்சோ! அதோ சாதம் வந்துண்டிருக்கே! சுட சுட வந்து என் தலையில அவளை போடுவாளே! தயாரா இருங்கோ அவளோட ஆவி உங்க மேலயும் படும்.

சாதம்: சூடான சாதம் நான், சுட சுட சுட இருப்பேனாம். ஈடில்லா சூடு சாதம் இதை நீங்க பாருங்க. ஓ….

வாழை இலை 12: அச்சச்சோ இவளையே தாங்க முடியல இதுல இவ பாட்டு வேற!!! இவளவிட சூடா ஒருதன் வருவானே அவனெங்க?

பருப்பு: ….ஆங் அவனுக்கு முன்னாடி நான் தான் வருவேன்.

நெய்: நானும் தான்!

வாழை இலை 12: வந்துட்டான்யா வந்துட்டான் எல்லாரையும் நகர்ந்துக்க சொல்லுவான்…நானும் அவன் பேச்சை கேட்டு நகர்ந்துண்டேன்னா என்னாகும்?

சாம்பார் : ஏய்!! எல்லாரும் தள்ளுங்கோ தள்ளுங்கோ வரிசைப்படி நான் தான் ஃபர்ஸ்ட் …நீங்க எல்லாரும் நெக்ஸ்ட்.

பொறியல்கள் : ஹலோ மிஸ்டர் சாம்பார் உங்களை மட்டும் ஊத்தி சாப்பிட்டா ருசியிருக்காது எங்களையும் தொட்டுண்டா தான் ருசிக்கும்

அவியல் : எல்லா காய்கறிகளையும் என்னோடு சேர்த்துண்டு, ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான அவியல் ஆகிய நான் இல்லாத விருந்தே கிடையாது தெரியுமா!

இவைகள் பேசிக்கொண்டிருக்கும் போதே சாம்பர் சாதத்தோடு கைக்கோர்த்து பொறியலை அதனுள் அனுமதித்து, எஜமானரின் வயிற்றுக்குள் சென்று வயிற்றை நிரப்பியது.

சாதம்: அச்சச்சோ! இவாளுக்கு சரி பசி போல, அதுதான் இவ்வளவு சீக்கிரமா நான் மறுபடியும் பிரவேசிக்க வேண்டியதா போச்சு.

ரசம்: “வெண்ணிற சாதமாய் வெந்தவனே! தக்காளி ரசம் என்னை பாராய்”

என்று பாட்டாவே படிச்ச ரசம்… சாதத்துடன் கைக்கோர்த்து, அப்பளத்தை அதில் நொறுக்கிப் போட்டு, மீதமுள்ள காய்கறிகளுடன் இணைந்து எஜமானருக்கு ஜீரன சக்தியை அதிகரித்தது.

சாதம்: மறுபடியும் நானா!!

தயிர்: நீயும் வெள்ளை நானும் வெள்ளை ஒன்றாய் சேர்ந்தால்!!! குடலில் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குவோமே. அதுனால தான் நம்மை விருந்தில் கடைசியா சாப்படறா!! லேட்டாக வந்தாலும் லேட்டெஸ்ட்டாக எப்போதும் திகழும் தயிர் சாதம் ஆகிய நான் என்னை உட்கொண்டவருக்கு அருமருந்தாகி இந்த விருந்தை நிறைவு செய்கிறேன்.

என்று தயிர் சாதம் சொன்னதும்

வாழை இலை 13: அச்சச்சோ! இப்போ நம்ம மேல பரிமாறப்பட்டதுல மீதமிருக்கறதெல்லாத்தையும் ஒண்ணாக்கி நடுவுல வச்சுட்டு நம்மள மூடிடுவாளே!!

வாழை இலை 14: ஆமாம்! அவ்வளவு தான் நம் வாழ்க்கை அவ்வளவு தான்.

வாழை இலை 1: இதுக்கு நாம பேசாம ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துன்னு இருந்திருக்கலாம் இல்ல!

வாழை இலை 15: அப்படி இருந்திருந்தா நாம யாருக்குமே பிரயோஜனம் இல்லாம காஞ்சு போயிருப்போம். அதுக்கு இது எவ்வளவோ மேல்.

வாழை இலை 16: ஆமாம்! ஆமாம்! வெரி வெரி கரெக்ட். நம்மகிட்ட இருந்த சத்துக்கள் எல்லாத்தையும் நம்மள உபயோகப்படுத்தினவாளுக்கு கொடுத்துட்டோம்.

வாழை இலை 17: அடுத்தது என்ன?

வாழை இலை 18: அடுத்தது என்ன!!
குப்பையில் போடப்படுவோம்
ஆடும் மாடும் நம்மள நன்னா மென்னு தின்னும்.
இப்படி ஒரு விருந்து சாப்பாட்டோட சுவடே இல்லாம போயிடும்.

வாழை இலை 19: அது மட்டுமில்லக்கா நம்மளால ஆரோக்கியம் பன்மடங்காகும்.

வாழை இலை 20: ஆட்களுக்கும் ஆடு மாடுகளுக்கும்ன்னு குறிப்பிட்டு சொல்லுமா…
ஓகே அடுத்த விருந்தில் மீண்டும் பிறப்போம்
இதே போல சுவையான உணவோடு இணைவோம்
நம்ம அரட்டையை தொடர்வோம்.

வாழ வைக்கும் வாழை இலையில் உணவு உட்கொள்ளுங்கள்
வாழ்க்கை முழுதும் ஆரோகிய குறைபாடுகள் ஏதுமின்றி நல்வாழ்வு வாழ்ந்திடுங்கள்.

பொறுமையாக படித்தமைக்கு நன்றி. பிடித்திருந்தால் பகிரலாமே.

நன்றி
நா. பார்வதி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s