
“மகேஷ் நேரமாயிடுச்சு பா. கிளம்பலாமா”
“ஏய் கீதா எல்லாத்தையும் எடுத்துக்கிட்டயா?”
“ஆங் ஆங்!”
“பாஸ்போர்ட்?”
“ஆங்.”
“கோவிட் டாக்யூமென்ட்ஸ்”
“ஆங்”
“சரி சரி பத்திரமா போயிட்டு வா.
நான் நம்ம சுட்டியை நல்லா பார்த்துக்கறேன்”
“அம்மா நானும் அப்பாவும் சமத்தா இருப்போம் மா. நீ காலேஜுக்குப் போயிட்டு வா மா”
“சரிடா கண்ணா.
உம்ம்மா…
ஓகே மகேஷ் நான் போயிட்டு வரட்டா.”
“ஓகே கீதா. ஒன்ஸ் அகேயின் கங்ராட்ஸ் அன்ட் ஹாவ் எ சேஃப் டிராவல்”
“தாங்க்யூ மகேஷ்”
“என்ன கண்ணனுக்கு மட்டும் தானா எனக்கில்லையா?”
“அச்சச்சோ பாரு கண்ணா உன் அப்பாவ!
சரி அப்பாக்கும் குடுத்திடட்டுமா?”
“ம்…சரிமா. அப்பாவும் பாவம் தானே. குடுத்துட்டுப் போ”
“சரி நம்ம பையன் பர்மிஷன் தந்துட்டான்.
வரேங்களா”
“எல்லாம் என் நேரம்.
இந்த சுண்டெலி பர்மிஷன் எல்லாம் தேவைப்படுதுப்பா.”
“ஹலோ வறேங்களா!
இல்லை நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்.”
“அப்பா போப்பா”
என்று சுட்டிக் கண்ணன் தன் அப்பாவைத் தள்ளிவிட மகேஷ் கீதா மீது சாய இருவரும் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். சட்டென கீதா விலகி
“மகேஷ் ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு. இப்படியே நின்னுட்டிருந்தா அப்புறம் ஃப்ளைட்டை மிஸ் பண்ணிடுவேன்”
“ஊப்ஸ்!
சரி சரி பத்திரமா போய்ட்டு சீக்கிரமா வா”
“இதையே எத்தனைத் தடவை சொல்லுவீங்க?
வாங்க ரெண்டு பேருமா என்னை ஏர்போர்ட்டில் ட்ராப் பண்ணிட்டு ஊர் சுத்த கிளம்பிக்கோங்க”
“ம்….ஓகே கண்ணா.
நாம போய் அம்மாவ ஃப்ளைட் ஏத்தி விட்டுட்டு வருவோமா?”
“எஸ் அப்பா.
போகலாம்.”
என்று மூவரும் காரில் ஏறினர். மகேஷ் காரை ஓட்டிச்சென்று லாஸ் ஏஞ்சல்ஸ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சென்றான். கீதாவை இறக்கி விட்டுவிட்டு அவளுக்கு கையசைத்து பறக்கும் முத்தங்களை வாரி வழங்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர் மகேஷும் அவன் மகன் கண்ணனும்.
கீதா ஏர்போர்ட் சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்து விட்டு அங்கிருந்த ஒரு காஃபி ஷாப்பில் ஒரு காஃபி வாங்கி அதை கையில் வைத்துக் கொண்டு விமானத்தில் ஏறுவதற்காக அதற்குண்டான வாயிலின் அருகேயிருந்த ஒரு சோஃபாவில் அமர்ந்து மெல்ல ரசித்துக் குடித்தாள். காஃபி தீரவும் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வரவும் சரியாக இருந்தது. விமானத்திற்குள் தனது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள். தரையிலிருந்து வானில் விமானம் பறந்து அமெரிக்க மண்ணை மெல்ல கடந்து அட்லாண்டிக் பெருங்கடல் மீது சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது கீதா அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணிடம் தன்னை எதற்கும் தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் தனக்கு ஏதாவது தேவை என்றால் தானே வந்து கேட்டு வாங்கிக்கொள்வதாகவும் கூறிவிட்டு விமானத்தில் கொடுத்த கம்பளியை நன்கு சுற்றிக்கொண்டு மெல்ல ஜன்னலில் சாய்ந்தாள். விடியற் காலையில் எழுந்ததால் அவளின் கண்கள் அவள் பேச்சைக் கேட்க மறுத்தன.
மெல்ல அவளது கண்கள் அவளின் அனுமதியின்றி மூடிக்கொண்டன. அவளை அவளின் நினைவலைகள் இழுத்துச் சென்றன.
சிறு வயது முதல் ஒரு பெரிய பதவியில் பணிப்புரிய வேண்டுமென்ற எண்ணம்/ஆசை கீதா மனதிற்குள் இருந்து வந்தது. அதற்காக நன்றாக படித்தாள். பல திறமைகளை வளர்த்துக் கொண்டாள். ஆனால் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்திருந்தாள். வெட்கத்தினாலா? இல்லை அடுத்தவர்கள் ஏதாவது கூறிவிடுவார்களோ என்ற அச்சத்தினாலா? என்று அவளுக்கே தெரியாதிருந்த பள்ளி மற்றும் கல்லூரி காலம் அது. வணிகவியல் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்த சமயம்…ஒரு நாள் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் கீதாவை அழைத்ததாக அவள் தோழி லதா சொன்னதைக் கேட்டதும் கீதாவின் மனதிற்குள் பயம் அப்பிக்கொண்டது.
“நான் எந்த தவறும் செய்யவில்லையே பின்பு ஏன் என்னை வர சொல்லியிருப்பார்?”
என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். கல்லூரி மாணவ மாணவிகளை துறைத் தலைவர் அவர் அறைக்கு அழைக்கிறார் என்றால் ஏதோ நன்றாக திட்டு வாங்கப் போகிறோம் என்று தான் முதலில் அவர்கள் மனதில் தோன்றும். (அந்த காலத்தில்) அதே போல கீதாவுக்கும் தோன்றியது. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாது உடனே ஆசிரியர்கள் அமர்ந்திருக்கும் அறைக்குச் சென்று கதவை தட்டி உள்ளே வரலாமா என்று கேட்டு நின்றாள். உள்ளே வாருங்கள் என்ற கம்பீரக் குரல் ஒன்று ஒலித்தது. அது தான் அவளின் வணிகவியல் துறைத் தலைமை ஆசிரியையின் குரல். உள்ளே சென்றாள். அவளைக் கண்டதும் ஆசிரியைகள்
“வாழ்த்துக்கள் கீதா.”
என்றனர். திட்டுவதற்காக தன்னை அழைக்கவில்லை என்று மகிழ்வதா இல்லை வாழ்த்தியதற்காக மகிழ்வதா என்ற குழப்பத்திலேயே
“நன்றி மிஸ்.
எதுக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
“நிச்சயமா. அதுக்கு தானே உன்னை வர சொல்லியிருக்கோம். நமது வணிகவியல் கலாச்சார நிகழ்வுகள் செயலாளராக உன்னை நியமித்துள்ளோம்”
என்று அவர் கூறியதைக் கேட்டதும் கீதாவின் மனதிற்குள் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து ஓடினாலும் கூடவே பயமும் தொற்றிக் கொண்டதில் கண்கள் குளமாகின. அதைக் கண்ட ஆசிரியை
“ஏய் என்ன ஆச்சு? ஏன் அழற?”
“மிஸ் எனக்கு இந்த பதவி வேண்டாம். என்னால் இதை செய்ய முடியாது. என்னை மன்னியுங்கள்”
“உன்னால் முடியுமா முடியாதா என்று எங்களுக்கு தெரியும்.
நாங்கள் சும்மா உன்னிடம் இந்த பதவியைக் கொடுக்க வில்லை. இரண்டு வருடங்களாக உன்னை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
எல்லா ஆக்டிவிட்டிஸ்லேயும் நல்லா பர்ஃபார்ம் பண்ணிருக்க.
உன்னால் முடியும்ன்னு நாங்க நம்பறோம்.
மேலும் உன்கிட்ட இருக்கிறயான்னு ஆலோசனைக் கேட்கலை…
இருன்னு சொல்லறோம்.
புரிந்ததா.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் பதவி ஏற்பு விழாவில் நமது வணிகவியல் துறை சார்பாக நீ பேச வேண்டும். ம்…இப்போது நீ உன் வகுப்பறைக்கு செல்லலாம்.”
“மிஸ்…”
“உன்னை நீ நம்பு.
ம்…அடுத்த வார நிகழ்வுக்கு தயாராக இரு.
இப்போது நீ போகலாம்.”
“நன்றி மிஸ்”
என்று கூறி கண்களில் நீர் வழிய ஆசிரியைகள் அறையிலிருந்து வெளியே வந்த கீதாவைப் பார்த்த அவள் தோழி லதா
” ஏய் கீதா. ஏன் அழுதுகிட்டே வர? என்ன ஆச்சு?”
“என்னை நம்ம டிப்பார்ட்மென்ட் கல்ச்சுரல்ஸ் செக்கரெட்டரியா நியமிச்சிருக்காங்களாம். அடுத்த வாரம் பதவி ஏற்பு விழாவுல நான் நம்ம டிப்பார்ட்மென்ட்டுக்கா பேசணுமாம்”
“சரி அதை சொல்லவா உன்னை அழைச்சாங்க?”
“ஆமாம்”
“நீ தான் சூப்பரா பேசுவியே! அதுக்கு ஏன் அழுதுகிட்டே வெளியே வர?”
“பேசறதைப் பத்தி இல்ல லதா.
என்னால எல்லாம் இந்த பதவி ல எல்லாம் இருந்துகிட்டு… முடியாதுப்பா! அதுதான் பயத்துல கண்ணு கலங்கிடுச்சு.
இது வரைக்கும் நான் அப்படி எல்லாம் எந்த பதவிலேயும் இருந்ததில்லைப்பா.”
“எல்லாரும் எல்லா பதவியிலேயும் இருந்துட்டு தான் பதவி ஏத்துக்கணும்னா அப்புறம் எந்த பதவியும் இருந்திருக்காது.
யாரும் எந்த பதவியும் ஏத்துக்கிட்டிருக்கவும் மாட்டாங்க. எல்லாத்துக்கும் எல்லாருக்கும் முதல் படின்னு ஒண்ணு இருக்கும்.
அதுபோல உன்னோட ஃப்ர்ஸ்ட் ஸ்டெப் இதுன்னு எடுத்துக்கிட்டு மேலே போவியா…
அத விட்டுட்டு பயப்படறாளாமே!
இந்த பதவிக்கு நம்ம டிப்பார்ட்மென்ட்ல எத்தனை பேர் ஆசைப்பட்டுக்கிட்டிருக்காங்கன்னு உனக்கு தெரியுமா.
உன்ன கூப்பிட்டுக் குடுத்திருக்காங்கன்னா உன்கிட்ட ஏதோ ஒரு தனித்திறமை இருக்கறத அவங்க தெரிஞ்சிட்டிருந்திருப்பாங்க. கண்ணைத் துடைச்சிகிட்டு வேலையைப் பாருப்பா”
என்று அன்று கீதாவின் தோழி லதா அவளிடம் கூறியது அவள் மனதில் பச்சைக் குத்தியது போல் பதிந்து விட்டது. மனம் அதை ஏற்றுக் கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும் இறுதியில் தன்னால் முடியும் என்ற எண்ணம் அவளுக்குள் உதித்தது. சரி என்று ஒப்புக்கொண்டு அந்த ஆண்டில் நடந்த அனைத்து கலாச்சார நிகழ்வுகளையும் தனது கல்லூரி தோழிகளின் உதவியுடன் சிறப்பாக நடத்தி வந்தாள் கீதா.
அந்த ஆண்டில் இந்திய சுதந்திர தின விழாவிற்காக உப்பு சத்தியாகிரகம் பற்றிய ஒரு டாப்ளோ எனப்படும் குறிப்பிடத்தக்க காட்சி படம் ஒன்றை தயார் செய்தாள் கீதா. அதில் நடிப்பதற்கான தோழிகளை அனைவருமாக அமர்ந்து அனைவரோடும் கலந்து பேசி தேர்ந்தெடுத்தாள். அதற்கான நகரும் ஆளுயுர பேனர்களை கீதாவே வடிவமைத்துக் கொடுத்தாள். அதை அனைவருமாக இணைந்து செய்து முடித்தனர். மற்றும் அதற்கான எழுத்து வடிவத்தையும் தயார் செய்தாள். அதை கீதாவும் அவளது உயிர் தோழியுமான லதாவும் திரைக்கு பின்னாலிருந்து காட்சிக்கு தகுந்தாற் போல பேசினர். அது போல ஒரு நிகழ்வை எவருமே அக்கல்லூரியில் செய்து காட்டியதில்லை என்ற விவரம் அன்று தான் கீதாவுக்கும் அவளின் தோழிகளுக்கும் தெரிய வந்தது. அவர்களின் வணிகவியல் துறைக்கு பல ஆண்டுகளுக்கு பின் பரிசு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் தலைமை ஆசிரியை அவரது அறைக்கு வரும்மாறு அழைத்தார். கீதாவும் சென்றாள். ஆனால் இம்முறை மனதில் எந்த பயமுமின்றி குழப்பமுமின்றி தெள்ளத் தெளிவான மனதுடன் சென்று அறை கதவை தட்டினாள். மீண்டும் கம்பீர குரலில் உள்ளே வர சொன்னார் துறை தலைமை ஆசிரியை. உள்ளே சென்றவளிடம்
“என்ன உன்னால முடியாதுன்னு சொன்ன! இப்போ எப்படி முடிஞ்சுது? உன்கிட்ட இருக்கும் திறமை எங்களுக்கு தெரிந்ததால் தான் உன்னை தேர்ந்தெடுத்தோம்.
நீ உன் வாழ்வில் இன்னும் நிறைய சந்திக்க வேண்டியிருக்கும்.
உன்னால் முடியும் என்று நீ நம்பினால் போதும் எல்லாம் இனிதே நடந்தேறும்.
நீ கதவை தட்டிய விதத்தில் இருந்தே தெரிகிறது உனக்குள் தெளிவு பிறந்திருக்கிறது என்று.
அதை கெட்டியாக பிடித்துக் கொள் வாழ்வில் பல சாதனைகளை நிகழ்த்து. வாழ்த்துக்கள்.
இப்போது நீ உன் வகுப்பறைக்கு செல்லலாம்.”
“நன்றி மிஸ்.”
என்று மட்டும் கூறினாள் கீதா. வேறெதுவும் கூற வாய் வரவில்லை ஏனெனில் அவள் மனம் முழுவதும் அவரின் வார்த்தைகள் நிறைந்திருந்தது.
மேலும் அந்த ஆண்டின் கல்லூரி இதழில் கீதா மற்றும் அவள் தோழிகள் அறங்கேற்றிய டாப்ளோவான உப்பு சத்தியாக்கிரகம் இதழின் அட்டைப் படமானதைக் கண்டு அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
“ஹேய் கீதா உன்னால முடியாது முடியாதுன்னு வருஷ ஆரம்பத்துல அழுத!
இப்ப என்னடான்னா அந்த இங்லீஷ் டிப்பார்ட்மென்ட்டை வீழ்த்தி நம்ம டிப்பார்ட்மென்ட் ப்ரோகிராம நம்ம கல்லூரி இதழோட அட்டைப் படமா மாத்திட்டயே!
யூ ஆர் ரியலீ க்ரேட் டி.”
“நம்ம கீதாவுக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்கப்பா”
“ஓ !!!! ஓ!!!”
அந்த சப்தம் கேட்டதும் விருட்டென எழுந்து சுற்றி முற்றிப் பார்த்த கீதா மெல்ல தன் நெற்றியில் வலது கையால் செல்லமாக தட்டிக்கொண்டே புன்னகைத்தாள். பின் மனதிற்குள்…
“ம்…எல்லாம் இப்போ நடந்தா மாதிரி இருக்கு.”
என்று கூறிக் கொண்டே எழுந்து சென்று வாஷ்ரூம் போய்விட்டு பேன்ட்ரியிலிருந்து சூடா ஒரு கப் காபி மட்டும் வாங்கி அங்கேயே நின்று குடித்துவிட்டு மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்து கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கலானாள்.
கீதாவுக்கே தெரியாதிருந்த அவளது திறமையைத் தெரிந்துக் கொண்டதோடு நின்றிராமல் அதை வெளிக்கொணர்ந்து அவளுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டி அவளுக்குள் அதுவரை இருந்து வந்த பயம், அச்சம், தயக்கம் ஆகியவைகளை உடைத்தெறிய செய்த அவளது கல்லூரி வணிகவியல் தலைமை ஆசிரியைக்கு கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டாள்.
நமக்குள் இருக்கும் திறமைகளை நாம் தான் வெளி கொண்டு வரவேண்டும். மற்றவர்கள் அதை செய்ய மாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு
அதற்கான வழியில் செல்ல தயக்கம் கொண்டு
இடையில் அச்சம் ஆட்கொண்டு
ஊருக்குள் இருக்கும் அந்த நாலு பேர் பற்றி எண்ணி கவலை கொண்டு
மனதில் பயத்தை வளர்த்துக் கொண்டு
திறமைகளை அப்படியே மனமெனும் பாதாள சுரங்கத்திற்குள் வீசி தாழிட்டுக் கொண்டு
ஆட்டு மந்தைக் கூட்டத்தோடு கூட்டமாக கலந்துக் கொண்டு
தலையை ஆட்டிக்கொண்டு
இருந்த நேரத்தில்
கீதாவுக்கு கலங்கரை விளக்கு போல் வழிகாட்டி, அவள் வாழ்வில் ஒளி வீச செய்த அந்த தலைமை ஆசிரியையை சந்திக்க பத்து வருடங்களுக்கு பிறகு
ஒன்றரை நாள் பயணம் மேற்கொண்டு சென்னை விமானநிலையம் சென்றிறங்கினாள்.
நேராக தன் தாய் வீட்டுக்குச் சென்று குளித்து அம்மா கையால் சாப்பிட்டு, நன்றாக உறங்கி மத்தியம் ஒரு இரண்டு மணியளவில் எழுந்து மீண்டும் அம்மா கையால் மத்திய உணவு உண்ட பின் கிளம்பி உறவினர்கள் வீடுகளுக் கெல்லாம் சென்று அங்கு அனைவரோடும் பேசிவிட்டு அவர்களுக்காக வாங்கி வந்ததை எல்லாம் அவரவர்களுக்குக் கொடுத்து மகளாகவும் மருமகளாகவும் தனது கடமைகளை இரண்டே நாட்களில் முடித்து எதற்காக சென்னை சென்றிருந்தாளோ அதற்கான வேலையில் இறங்கினாள் கீதா. மூன்றாவது நாள் விடியற்காலையில் எழுந்து குளித்து தயாராகி காரில் சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி சென்றாள்.
திருச்சியிலிருந்த பெண்கள் கல்லூரி ஒன்றின் வாசலில் கார் சென்று நின்றது. கீதா மெல்ல காரிலிருந்து இறங்கினாள். உடனே எங்கிருந்தோ ஒரு பெண் ஓடி அவளருகே வந்து
“ஹாய் மேம்.
ஐ ஆம் லதா.
தேர்டு இயர் காமர்ஸ் டிப்பார்ட்மென்ட் மேம்.
வெல்கம் டூ அவர் காலேஜ்”
என்று அன்று பூத்த மலர் போல மலர்ந்த முகத்துடன் லதா கீதாவின் கையில் பூச்செண்டை கொடுத்து வரவேற்றாள். லதா என்ற பெயரைக்கேட்டதுமே கீதாவுக்கு ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! பாடல் மனதில் ஒலிக்க ஆரம்பித்தது. பூச்செண்டை வாங்கிக்கொண்டு
“தாங்ஸ் லதா.
என்னுடைய உயிர் தோழி பெயரும் லதா தான்.”
“வாவ் ஈஸ் இட்!”
“எஸ்.
நான் இங்க இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினரா வந்ததற்கு அவளும் ஒரு காரணம்.”
“அப்படீன்னா நானும் உங்க பிரெண்டா இருக்கலாமா மேம்.”
“ஷுவர் மிஸ். லதா”
என்று இருவரும் பேசிக்கொண்டே அவர்கள் வணிகவியல் துறையை சென்றடைந்தனர். அங்கே கீதா சென்றதும் அவளுக்கு அவளின் கல்லூரி நாட்கள் மீண்டும் ஞாபகம் வந்தது. அப்போது ஆசிரியை அறைக்குள் இருந்து வெளியே வந்த துறை தலைமை ஆசிரியை கீதாவைப் பார்த்ததும்
“ஓ மை சைல்டு!
வெல்கம்.
எப்படி இருக்க மா?
ஐ ஆம் ஸோ ப்ரௌட் ஆஃப் யூ மை கேர்ள்”
என்று கீதாவை அணைத்துக் கொண்டார்.
“மேம் நைஸ் மீட்டிங் யூ.
இட்ஸ் மை ப்ளஷர் மேம்.
என்ன மேம் உங்க கம்பீர குரல் கொஞ்சம் குறைஞ்சிருக்கு!”
“வயசாயிடுச்சு இல்ல மா.
சரி சரி உள்ளே வா.
இந்த இடம் ஞாபகமிருக்கா?”
“ம்…நல்லாவே இருக்கு மேம்.
நான் நின்னு அழுத இடம்.
என் வாழ்க்கையையே மாற்றிய இடம். இந்த ரூம் அப்படியே இருக்கு மேம். “
“ம்…எஸ் மை சைல்டு. ஹாவ் தி காஃபி கீதா”
“தாங்ஸ் மேம்.”
“தென் ஹவ் இஸ் லைஃப்”
“உங்களால ரொம்ப நல்லாவே இருக்கு மேம்.”
“ஏய் எல்லாம் உன்னோடு உழைப்பு உன்னோட திறமை மா.
இதுல நான் என்ன செஞ்சேன்?”
“மேம் என்ன இப்படி சொல்லிட்டீங்க? நீங்க மட்டும் எனக்கு அந்த பதவியை தந்திருக்கலேனா நான் இன்னமும் அச்சத் தோடவே இருந்திருப்பேன்.”
“அப்படி எல்லாம் இல்லமா நான் இல்லாட்டி வேற யாராவது அதை செஞ்சிருப்பாங்க.
அவ்வளவு தான்.
இல்லாட்டி நீயே அதை எல்லாம் உடைத்தெறிந்து வெளிவந்திருப்ப…
சரி சரி நாம நிகழ்ச்சி நடக்குற அரங்குக்கு போகலாமா?
எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க”
“எஸ் மேம்.”
என்று கல்லூரி காலங்களில் தலைமை ஆசிரியையிடமிருந்து பத்தடி தள்ளி நின்று பேசிய கீதா இன்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அவருடன் அரங்கிற்கு நடந்து சென்றாள்.
அரங்கில் கல்லூரி மாணவிகளும் ஆசிரியைகளும் அமர்ந்திருந்தனர். மேடையில் ஐந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தது அதில் கீதாவுக்கென்று தனி இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் அவளின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்து அவள் மனம் பூரித்து போனது. அவளை அங்கே அமர செய்து விட்டு தலைமை ஆசிரியை மெல்ல நடந்து சென்று அங்கிருந்த ஒலிபெருக்கியில் அனைவரையும் வரவேற்கும் வண்ணம் வரவேற்புரை ஆற்றினார். இறுதியில் அவர்
“நமது இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்புற செய்வதற்காக நமது கல்லூரியின் முன்னாள் மாணவியும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் மிகப் பெரிய நிறுவனமான ஏஞ்சல்ஸ் இன்ஃபோடெக்கின் ஃபௌண்டர் அன்ட் சி.ஈ.ஓவுமான திருமதி கீதா கிருஷ்ணகுமார் அவர்களை சிறப்புரையாற்ற அன்போடு அழைக்கிறேன்”
என்று கூறி மெல்ல நடந்து சென்று அவருக்கான இருக்கையில் அமர்ந்தார். கீதா எழுந்து சென்று ஒலிபெருக்கியை சற்று மேலே தன் உயரத்துக்கு ஏற்றார் போல் தூக்கி சரி செய்து தனது உரையை துவங்கினாள்
“அனைவருக்கும் வணக்கம்.
இன்று நான் இங்கு உங்கள் முன் நின்று இப்படி பேசுவதற்கு முழு காரணமும் என் தலைமை ஆசிரியையான திருமதி ஏஞ்சல் டிசோசா அவர்களையே சேரும். ஆம் எனது நிறுவனத்திற்கு அவர் பெயர் தான் வைத்துள்ளேன்.
நம்ம திறமைகளை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரம் மற்றவர்கள் நம்மிடமிருக்கும் திறமைகளை கண்டு அதை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை அளித்தால் அதை நாம் தவற விடக்கூடாது.
ஆம் நான் என் வாழ்க்கையில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டேன் ஆனால் அனைத்தையும் என்னுள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் என் தலைமை ஆசிரியை அதை கண்டுப்பிடித்து எனக்கான ஒரு வாய்ப்பை தந்தார். அப்போதும் எனது பயம், கூச்சம் என்னை மறுக்க செய்தது.
ஆனால் அவர் கண்டிப்பாக இருந்து என்னுள் இருந்த திறமை என்னும் விதையை விருட்சமாக்கினார்.
அவர் இல்லையெனில் அது விதையாகவே இருந்திருக்குமா, இல்லை மெல்ல ஒரு சாதாரணமான குட்டி செடியாகியிருக்குமா என்று எனக்கே தெரியாது.
என்னைப் போல பலர் இருந்திருப்பார்கள் உங்களுள் இருந்துக்கொண்டும் இருப்பீர்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை தெளிவிக்க விரும்பவது என்னவென்றால் நமக்கு கனவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என நிறைய இருக்கலாம் ஆனால் அதை எந்த வித தங்கு தடைகள் இன்றி வாய்ப்பு கிடைக்கும் போது வெளி கொண்டு வர வேண்டும்.
அப்படி ஒரு முறை…
ஒரே ஒரு முறை நமது திறமை வெளி வந்து…
அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு மேலே எழ ஆரம்பித்தால் நீங்கள் ஒவ்வொரு வரும் இந்த கீதா கிருஷ்ணகுமார் என்ன!
அவளை விட பெரிய இடத்திற்கு போகலாம்.
பல சாதனைகளை படைக்கலாம்.
இன்று நான் சிறந்த பிஸ்னஸ் உமன் என்று பல பட்டங்களும் பதவிகளும் பெரும்போது என் தலைமை ஆசிரியையை தான் மனதில் நினைத்துக் கொள்வேன்.
ஒரு பருக்கு அரிசியை தனது இருப்பிடத்திற்கு ஒரு எறும்பு எடுத்து செல்லும் போது வழியில் ஏதேனும் தடையிருந்தால் அதாவது ஒரு கல் அல்லது ஒரு காகிதம் என ஏதாவது கிடந்தால் அது சும்மா இருக்காது அதை தாண்டி செல்லவே முயற்சிக்கும். அதுவும் அந்த அரிசி பருக்கையோடு. அப்படி பல திறமைகளை சுமந்துக் கொண்டு வழியிலிருந்த தடைகளான அச்சம், கூச்சம், சமுதாயம் ஆகியவைகளில் இருந்து தவித்துக் கொண்டிருந்த அந்த எறும்பை ஒரே ஒரு குச்சி அதாவது கல்ச்சுரல்ஸ் செக்கரெட்டரி என்ற குச்சியை பாலமாக வைத்து தாண்ட உதவி புரிந்ததில் உங்கள் முன் நான் ஒரு நிறுவனத்தின் ஃபௌண்டர் அன்ட் சி.இ.ஓ வாக நிற்கிறேன்.
நம்ம அப்துல் கலாம் சார் சொன்ன மாதிரி நிறைய கனவு காணுங்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அச்சம் தவிருங்கள், நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முயற்சியுங்கள் அல்லது கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள் வாழ்க்கையில் முன்னேருங்கள்.
நீங்கள் கண்ட கனவை நிஜமாக்கும் வரை ஓயாதீர்கள்.
முயற்சி என்றுமே நம்மை கைவிடாது என்றாவது அதற்கான மெய்வருத்த கூலி தரும் என்று கூறி என்னை மீண்டும் எனது கல்லூரிக்குள் வலம் வர வாய்ப்பளித்த நமது கல்லூரி தலைவர் அவர்களுக்கும், எனது வணிகவியல் துறைத் தலைமை ஆசிரியைக்கும் மற்றும் இங்குள்ள அனைத்து நல்லூள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்.”
என்று கீதா தன் நீண்ட உரையை முடித்ததும். சற்று நேரம் அமைதி நிலவியது. அதன் பின் பலத்த கரகோஷம் எழுந்ததில் அரங்கமே அதிர்ந்தது. ஒரு கல்லூரியில் நன்றாக படித்து நல்ல பெயருடன் வெளியே வருவதென்பதே மிக பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலத்தில்…தான் படித்த போதும், படித்து முடித்து இவ்வளவு வருடங்களாகியும் கீதாவை மறக்காது மீண்டும் கல்லூரிக்கு அழைத்து கௌரவப்படுத்தி அடுத்த சந்ததி மாணவிகளுக்கு நல்வழி காட்டி ஊக்கமளித்துள்ளனர் கீதாவின் கல்லூரி ஆசிரியைகள். கல்லூரியில் கீதாவுக்கு அன்று இரவு டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவளும் தனது ஆசிரியைகளுடன் இரவு உணவு உண்டு பழைய கதைகளை எல்லாம் பேசிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள். அனைவரும் உண்டு முடித்ததும் கீதாவிடம் ஒரு பரிசை கொடுத்தார் அவளுக்கு மிகவும் பிடித்த அவளது துறை தலைமை ஆசிரியை. அதை கீதாவின் கைகளில் கொடுத்து
“மை டியர் சைல்டு.
இதை நீ உன் வீட்டுக்கு சென்ற பின் உன் குடும்பத்தினருடன் சேர்ந்து திறந்துப் பார்.
சரியா”
“ஷுவர் மிஸ்.
நீங்க சொன்னா தட்டாம செய்வேன் மிஸ்.
நான் அமெரிக்கா சென்று என் கனவர் மற்றும் மகன் முன் வைத்து தான் இதை திறந்து பார்ப்பேன் மிஸ்.”
“இந்த மரியாதையான குணமும், நன்னடத்தையும் தான் மா உன்னை இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்திருக்கு.
இனியும் நீ வளரணும்.
உன்னோட ஸ்பீச் மிக அருமையா இருந்தது மா.”
“தாங்க்ஸ் மேம். சரி மேம் எனக்கு நேரமாயிடுச்சி நான் இப்போ கிளம்பினா தான் நைட் ஒரு பன்னிரெண்டு மணிக்காவது என் வீட்டுக்கு போய் சேர முடியும்.
நான் கிளம்பட்டுமா? நாளைக்கு நள்ளிரவு நான் அமெரிக்காவுக்கு கிளம்பணும்.”
“ஓ! ஷுவர் மை சைல்டு.
எங்களை மதித்து எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து இந்த நாளை இவ்வளவு பிரகாசமாக்கியதற்கு நன்றிமா.”
“ஓ! ஓ! மிஸ் நீங்களெல்லாம் நன்றி சொல்ல கூடாது.
எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்த உங்களுக்கெல்லாம் தான் நான் நன்றி சொல்லணும்.”
என்று பேசிக் கொண்டே கீதாவின் கார் நின்று கொண்டிருந்த இடம் வரைக்கும் வந்தனர். கார் அருகே வந்ததும் கீதா காரின் கதவை திறந்து உள்ளே சென்று அமர்ந்து
“சரி மேம் நான் போயிட்டு வரேன்.
டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்”
“நிச்சயமா மா.
தாங்ஸ் டியர்.
பத்திரமா போயிட்டு வா.
இன்னும் பல சாதனைகளை புரிய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மா.
பை பை.
ஹாவ் எ சேஃப் ட்ரிப்”
“பை மேம்.”
என்று கீதா அங்கிருந்து விடைப் பெற்று திருச்சியிலிருந்து சென்னையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள். அவள் மனம் முழுவதும் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதே மகிழ்ச்சியோடு அமெரிக்காவிலிருக்கும் தனது கனவருக்கு கால் செய்தாள்.
“ஹலோ கீதா மேடம்.
எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் மகேஷ்.
நீங்க எப்படி இருக்கீங்க?
நம்ம சுட்டிப் பையன் எப்படி இருக்கான்? ரெண்டு பேரும் நான் இல்லாம என்ன பண்ணறீங்க?”
“அம்மா!”
“கண்ணா. உம்ம்மா.”
“அம்மா நீ உன் காலேஜுக்கு போனயே. உன் மேம் என்ன சொன்னாங்க மா?”
“ம்….நான் ரொம்ப குட் கேர்ள்னு சொல்லி இதோ இந்த கிஃப்ட் கொடுத்தாங்க. இதை உன் முன்னாடி தான் ஓபன் பண்ணணும்னு சொல்லிட்டாங்க.
சோ நான் நம்ம வீட்டுக்கு வந்ததும் நாம மூணு பேரும் சேர்ந்து ஓபன் பண்ணி பார்க்கலாம். சரியா”
“அது எனக்கு குடுத்திருக்காங்களா மா?”
“நமக்கு குடுத்திருக்காங்க கண்ணா.
சரி உனக்கு நான் என்ன இங்கேந்து வாங்கிட்டு வரணும்?”
என்று கனவர் மகனுடன் பேசிக்கொண்டே பயணித்ததில் நேரம் போனது தெரியாது போக தனது தாய் வீட்டுக்கு சட்டென வந்து சேந்தது போல இருந்தது கீதாவுக்கு.
மறுநாள் ஷாப்பிங் சென்று வேண்டியவைகளை வாங்கிக் கொண்டு அன்று முழுவதும் தனது அப்பா அம்மாவுடன் இருந்துவிட்டு அன்றிரவு உணவு உண்ட பின் தன் பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்று கொண்டு ஏர்போர்ட்டுக்கு புறப்பட்டுச் சென்றாள் கீதா.
அதே ஒன்றரை நாள் பிரயாணம். மீண்டும் அமெரிக்க மண்ணில் கால் வைத்தாள். மகேஷும் கண்ணனும் அவளுக்காக காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் தூரத்திலிருந்தே “ஹாய்” என்று கூறினாள். கண்ணன் அவளை கட்டியணைக்க ஓடி வந்ததும் அவனை தடுத்தாள் கீதா. இப்போதிருக்கும் இந்த காலம் நம் குழந்தைகள் ஆசையாக ஓடி நம்மிடம் வரும்போது அவர்களை உடனே தூக்கி கொஞ்ச அனுமதிப்பதில்லையே!! கலி காலம் என்று நொந்துக் கொள்ள வேண்டியது தான். அதை போலவே கீதாவும் தன் குழந்தையை தடுத்து நிறுத்தி
“கண்ணா அம்மா டிராவல் பண்ணிட்டு வந்திருக்கேன் இல்ல…
இப்போ உன்ன தூக்கிக்க முடியாதுப்பா..
உனக்கு தெரியும் தானே?
வீட்டுக்கு போய் குளிச்சிட்டு அம்மா உன்னை தூக்கிக் கொஞ்சறேன் சரியா கண்ணா”
“ஓகே அம்மா. அப்பா சொன்னா.”
“குட் பாய்.”
என்று வீட்டுக்கு சென்றதும் குளித்துவிட்டு தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வைத்தாள். அப்போது கண்ணன்
“அம்மா உன் மேம் குடுத்த கிஃப்ட் எது மா?
நாம அதை ஓபன் செஞ்சுப் பார்ப்போமா?”
“ஷுவர் கண்ணா.
இதோ இது தான் அது.
நாம ஓபன் பண்ணுவோமா”
“ம்…அப்பா நீயும் வாப்பா”
“நானும் வந்துட்டேன்.”
என்று தலைமை ஆசிரியை சொன்னது போலவே மூவருமாக அதிலிருந்த ரிப்பனை அவிழ்த்தனர். பின் மகேஷ் அதன் மேலிருந்த கிஃப்ட் ராப்பரை அவிழ்த்தான். அதனுள் ஒரு மரப் பேழை இருந்தது. அதை கீதாவிடம் கொடுத்தான். கீதா அதை கண்ணனிடம் கொடுத்து திறக்கச் சொன்னாள். கண்ணனும் மெல்ல திறந்தான். அதனுள்ளே இருந்து ஒரு பெண் சிலை வெளிவந்தது. அது தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள ஆரம்பித்தது. அப்போது பின்னணியில் ஒரு மெல்லிய இசையோடு தலைமை ஆசிரியையின் குரலும் ஒலித்தது.
“ஒரு பெண் என்பவள் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் வல்லமைப் பெற்றவள் ஆவாள்.
ஆனால் அவளை அவளே செதுக்க கல் வேண்டுமல்லவா.
அது தான் அவளை பெற்றவர்கள். உளியின்றி அவள் எப்படி அவளை செதுக்க முடியும்?
அந்த உளியாக அவளின் கனவனும் அவளின் குடும்பமும் இருந்தால் போதும் அவள் அழகிய சிற்பமாக மட்டுமல்லாது சிறந்த சிற்பியாகவும் திகழ்வாள். உங்களையும் செதுக்கி அழகுறச் செய்வாள்.
வாழ்க வளமுடன்”
என்று கூறி நின்றது ஆனால் அந்த மரப்பேழையை மூடும் வரை அந்த பெண் சிலை தன்னை செதுக்குவதை நிறுத்தவில்லை. அதைப் பார்த்ததும் மகேஷ் கீதாவை கட்டியணைத்து அவளின் நெற்றியில் முத்தமிட்டு
“ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் யூ மை டியர் கீதா”
என்றான். அவள் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் உருண்டோடியது. அதைத் துடைத்த கண்ணனின் பிஞ்சுக் கைகளை பற்றிக்கொண்டு முத்தமிட்டாள் கீதா. வானத்தை நோக்கி கண்களை மூடிக்கொண்டு மனதிற்குள்
“ஐ ஆம் ப்ளெஸ்டு.
தாங்யூ காட்.
இதற்கு மேல் எனக் கெதுவுமே தேவையில்லை.
என்னை போலவே எல்லா பெண்களுக்கும் இது போன்ற வாழ்வையும் உணர்வையும் கொடு ஆண்டவா.”
முற்றும்
நா. பார்வதி