விஷாலின் கார் திறக்காததால் சக்தி அவனிடமிருந்த சாவியை வாங்கி திறக்க முயற்சித்தாள். பின் தன் கையிலிருந்த சாவியை நன்றாக பார்த்த சக்தி…
“ஹலோ வி! உன் கார் எப்படி திறக்கும்?”
“ஏன் தி?”
“இது என் காரோட சாவி!”
“ம்…அப்படியா?”
“இதோ இங்கே பாரு!
என் கார் திறந்திருக்கு!”
“அட ஆமா!”
“என்ன ஆமா?
சரி எப்படி என் கார் சாவி உன்கிட்ட வந்தது?”
“அது தானே எப்படி வந்தது?”
“டேய் விஷால் என்ன சக்தி கேட்கிற கேள்வியை அப்படியே திருப்பிக் கேட்குற?
எப்படி உன்கிட்ட அவங்க கார் சாவி வந்ததுன்னு மொதல்ல சொல்லுடா”
“அதுவா!
நாம எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தோம் இல்லையா அப்போ அவ டேபிள் மேல வச்சிருந்தா,
சாப்பாடு கொண்டு வந்த வில்லியம்ஸ் தட்டுகளை வைக்க நான் தான் சாவியை எடுத்து என் பாக்கெட்டில் போட்டுண்டேன்”
“ஓ! ஓகே ஓகே!
இது என்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம்.
எப்பவுமே சாவியை பேக் உள்ள போடணும்னு நினைப்பேன்…
ஆனா மறந்து கையிலேயே வச்சுப்பேன் அப்புறம் எங்கயாவது மறந்து வச்சுடுவேன்.”
“சரி சரி இரு என் கார் சாவியை எடுக்கிறேன்.
ம்…இதோ என் கார் கீ.
இப்போ பாருடா ஜேம்ஸ்”
“வாவ்! சூப்பர்ப் கார் விஷால்.
சரி நீ தான் கார் வச்சிருக்கியே அப்புறமும் ஏன் சக்தி கார்ல போற?”
“ஒண்ணா போயிட்டு ஒண்ணா வரலாமேன்னு…”
“ஓ! ஓ! ஓகே ஓகே! நடத்து நடத்து.
சரி ரெண்டு பேரும் பத்திரமா வீடு போய் சேருங்க.
எனக்கென்னவோ உங்களை எப்பவும் யாரோ ஃபாலோ பண்ணிகிட்டே இருக்காங்களோன்னு தோணுது.”
“அப்படியா சொல்லுற?”
“ஆமாம்…ஸோ எப்பவுமே ஜாக்கிரதையா இருங்க.
நாளைக்கு டாக்டர் வசுந்தரா வீட்டுல சந்திப்போம்.”
“அப்போ நாளைக்கு என் ஆஃபிஸுக்கு நீங்க வரலையா? என் ஆஃபிஸ் வரேன்னு சொன்னீங்களே! அதுவுமில்லாம நீங்க பாரிஸ் போகணும்னும் சொன்னீங்களே!
அப்புறம் எப்படி வசுந்தரா வீட்டுல மீட் பண்ணலாம்ன்னு சொல்லறீங்க?
“அச்சச்சோ எத்தனை கேள்விகள்?
சக்தி நாளைக்கு காலையில ஏழரை மணிக்கு வசுந்தரா வீட்டுக்கு போவோம்.
அதுக்கப்புறமா நான் பாரிஸ் போறேன்.
நீங்க ஆஃபிஸ் போங்க.
பாரிஸுலேந்து நான் திரும்பி இங்க வரும்போது உங்க ஆஃபிஸுக்கு வந்து சிசிடிவியை செக் பண்ணிக்கறேன்.
இப்போ எல்லாம் கரெக்ட்டா இருக்கா?”
“எஸ் எஸ் இப்போ எல்லாம் ஓகே.
அப்படீன்னா நானும் நாளைக்கு வசு வீட்டுக்கு ஏழரைக்கு வரணும் இல்ல!”
“அஃப்கோர்ஸ் சக்தி.
இதுல என்ன கேள்வி?”
“இல்ல வி…
இப்பவே மணி என்னாச்சுப் பாரு…
இதுல காலையில ஏழரை மணிக்கெல்லாம் வசுந்தரா வீட்டுல இருக்கணும்னா!
நான் ஆறு மணிக்கெல்லாம் எழுத்துக்கணுமேன்னு யோசிச்சேன்.”
“அடிப் பாவி நாங்களும் தானே அவ்வளவு சீக்கிரம் எழுந்து வரணும்!”
“சரி சரி இங்கேயே நின்னுட்டு இப்படியே மாறி மாறி பேசிட்டிருந்தா காலை ஆறு மணி ஆயிடும்.
பேசாம கிளம்பி போய் ஒரு நாலஞ்சு மணி நேரமாவது தூங்கிட்டு வாங்க.
போங்க போங்க..
நானும் கிளம்பறேன். பை.”
“ஓகே டா ஜேம்ஸ்.
பை.
குட் நைட்”
“ஓகே ஓகே.
குட் நைட்”
“சக்தி என்னோட நம்பருக்கு அந்த டாக்டர் அட்ரெஸை ஷேர் பண்ணிடுங்க.”
“ஷுவர்.
இதோ இப்பவே பண்ணிடறேன்.”
என்று உடனே ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் சக்தி. அது கிடைத்ததை சக்தியிடம் சொன்ன ஜேம்ஸ் அவன் காரில் புறப்பட்டுச் சென்றதும் சக்தி விஷாலை பார்த்து
“சார் என்ன என் வண்டில ஏறப் பாக்குறீங்க?”
“அப்புறம் என்ன பண்ணுவேன் தி?”
“அதோ உங்க கார் இருக்கே!
அதை எடுத்துட்டு பாரிஸ் கிளம்ப வேண்டியது தானே!”
“என்ன தி!
என்னை துரத்தி விடற?”
“பின்ன என்னவாம்?”
“இப்பவே டைம் பதினொன்னு ஆயிடுத்து!
இதுக்கு மேல நான் டிரைவ் பண்ணி பாரிஸ் ரீச்சாகறதுக்கு இரண்டு ஆர் மூணு மணி ஆயிடும்.
அப்புறம் மறுபடியும் காலையில உன் வீட்டுக்கு வரணும்!
நான் பாவம் தானே!”
“அதுக்கு நான் என்ன பண்ணறது?”
“என்ன இப்படி சொல்லற?
ஏன் உன் வீட்டுக்குள்ள என்னை அலௌ பண்ண மாட்டியா என்ன?”
“நோ வே வி.
நமக்கு கல்யாணம் ஆகுற வரை ராத்திரியில் ஒண்ணா தங்குறதெல்லாம் சரி கிடையாது.”
“எந்த காலத்துல இருக்க நீ?”
“ஒண்ணா தங்கினா என்னவாம்?
அவா அவா ஒண்ணா அஞ்சாறு வருஷம் லிவ்ங் டுகெதர்ன்னு சொல்லி இருந்துட்டு தான் கல்யாணமே பண்ணிக்கறா…
நீ என்னடான்னா?”
“நான் இப்படி தான் வி.
எனக்குன்னு சில பாலிஸிஸ் இருக்கு.
நான் அது படிதான் நடந்துப்பேன்.
யாருக்காகவும் அதை மாத்திக்க மாட்டேன்.
நம்மளோட கல்யாணம் வரை நோ நைட் ஸ்டே”
“ஏன் உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லையா?”
“வாட்?
மொதல்ல நீ கிளம்பு வி.
நான் கிளம்பறேன்.
பை. பை. குட் நைட்”
“தி…தி…தி…
அடி போடி.
இவளும் இவளோட பாலிஸியும்.
பொல்லாத பொடலங்கா பாலிஸி!
முன்னாடியே சொல்லியிருந்தான்னா நான் ஜேம்ஸோட அவன் வீட்டுக்காவாவது போயிருப்பேன்.
இப்படி நடு ராத்திரி தனியா பொலம்ப விட்டுட்டுப் அவ பாட்டுக்கு போயிட்டாளே!
என்ன பண்ணலாம்.
சரி பேசாம ஜேம்ஸ் வீட்டுக்கே போக வேண்டியது தான்.
வேற வழி?”
என்று தனக்குத் தானே பேசிக்கொண்டே காரை ஜேம்ஸ் வீட்டிற்கு விட்டான். அங்கே அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தான். அப்போது கதவைத் திறந்த ஜேம்ஸ்
“டேய் விஷால் என்ன? என்னாச்சு?
சக்தி எங்க?
ஏன் நீ மட்டும் வந்திருக்க?”
“ஹலோ வீட்டுக்கு யாராவது வந்தா முதல்ல உள்ள வாங்கன்னு கூப்பிடணும் தெரியுமா?
அதை விட்டுட்டு ஏதேதோ கேள்வி மேல கேள்வியா அடுக்கிக்கிட்டே போற?”
“சரி சரி வா வா உள்ள வா”
“ம்…வீட்டை நல்லா தான் வச்சிருக்க!
ஆங் இப்போ கேளு”
“அது தான் அப்பவே கேட்டுட்டேனே!
பதில் சொல்லு”
“அவ அவளோட வீட்டுக்கு போயிட்டா!
நான் நடு ரோட்டுல நின்னுட்டிருந்தேன்.
அது தான் நம்ம நண்பன் நீ இருக்கயேன்னு நேரா இங்க வந்துட்டேன்”
“ஏன் நீ அவங்களோட அவங்க வீட்டுக்கு போகலை?
சம் பியர்”
“நோ தாங்க்ஸ்!
எங்க கல்யாணம் முடியற வரைக்கும் நாங்க ஒரே வீட்டுல ஒண்ணா நைட்டு தங்கக் கூடாதாம்.
அது அந்த அம்மணியோட பாலிஸியாம்”
“அதுவும் சரி தான்.
ஆனா நீ அவங்கள தனியா விட்டுட்டு வந்திருக்கக் கூடாது டா!”
“வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னதுக்கப்புறம் நான் எப்படி அவ கூட போவேன் ஜேம்ஸ்”
“நீ அவங்க கூட போயிருக்க வேண்டாம்.
ஆனா அவங்க வீடு வரைக்கும் பின்னாடியே போயி விட்டுட்டு வந்திருக்கலாம்.
ஏன்னா அவங்களை சுத்தி ஏதோ ஒரு பெரிய ஆபத்து இருக்குது இல்ல!”
“அட ஆமா இல்ல.
எனக்கு இது தோணலப் பாரேன்!”
“எப்படி தோணும்?
உன் மனசுல கோபம் நிறைஞ்சிருந்தா இப்படியெல்லாம் எப்படி தோணும்?”
“ச்சே! ஆமாம் ஜேம்ஸ்.
நான் தப்பு பண்ணிட்டேன்”
“சரி சரி அவங்களுக்கு ஃபோன் போட்டு வீட்டுக்கு போய் சேர்ந்துட்டாங்களான்னாவது கேளுடா”
“ம்…இரு இரு…
இப்பவே கேட்கிறேன்..
ஆங்…ரிங் போறது!”
“ஹலோ வி”
“ஹாய் தி.
வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சா?”
“இல்ல இதோ இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல ரீச் ஆயிடுவேன்.”
“ஓகே நீ ரீச் ஆனதும் எனக்கு கால் பண்ணு”
“வேண்டாம் வேண்டாம் வி.
நீ டிரைவ் பண்ணிண்டிருப்ப…நான் டிஸ்டர்ப் பண்ணலை.”
“ஹலோ மெட்ஸ் ல உன் வீட்டைவிட்டா எனக்கு தங்குறதுக்கு இடமா இல்லை.”
“எங்க தங்கியிருக்க?”
“என் நண்பன் ஜேம்ஸ் வீட்டுல தான்”
“ஓகே ஓகே.
காலையில் மீட் பண்ணுவோம்.
பை”
என்று பேசி முடித்ததும் வீட்டு வாசலில் சென்று காரை நிறுத்திவிட்டு, காரை பூட்டி, வீட்டை திறந்து உள்ளே சென்று
“ஹேய் ப்ளூ.
நீ வெளிய வரலாம்.
ப்ளூ கேட்குதா?”
“ம்…ம்…
கேட்குது நல்லாவே கேட்குது.
இதோ வரேன்”
“வா வா வா மை டியர் ப்ளூ கண்ணா.
உம்மா…”
“ஆமா ஆமா! காலையிலேந்து அந்த பேஸ்மென்ட்டுலேயே கிடக்கேனாம்…
இப்ப வந்து கண்ணாவாம்…
உம்மாவாம்….
அட போ மா”
“அடடே என் ப்ளூ செல்லத்துக்கு கோவமாக்கும்?”
“பின்ன இருக்காதா?
அந்த வி வந்ததிலேந்து நீ ஆளே சரியில்ல பார்த்துக்கோ… அவ்வளவு தான் சொல்லிட்டேன்”
“ஹலோ! சும்மா அலுத்துக்காதப்பா!
நாங்க தான் இவ்வளவு நேரம் வீட்டுலேயே இருக்கலையே!
அப்புறம் என்ன?
ப்ளூ ஐய்யா சுதந்திரமா சுத்தியிருப்பாரே!”
“ஆங்…ஆங்!!
சுத்தினேன்! சுத்தினேன்!
எப்படா உன் கார் சத்தம் வரும் ஓடி ஒளிஞ்சுக்கணும்னு தவிச்சுக்கிட்டே சுத்திட்டிருந்தேன் தெரியுமா!
நிம்மதியாவா சுத்தினேன்?”
“ஓ !! அது தான் மேட்டரா?”
“சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் தி.
நீ போன காரியம் என்ன ஆச்சு?”
“அது ஒரு பெரிய கதை ப்ளூ.
நிறைய டிவிஸ்ட் அன்ட் டர்ன்ஸ் இருக்கு.
என்னன்னு சொல்லறது?”
“பரவாயில்லை இந்தா உன்னோட ஃபேவரைட் காபியை குடிச்சுக்கிட்டே சொல்லு.
கேட்கிறேன்”
“ஹலோ! டைம் என்ன ஆச்சுன்னு பார்த்தியா?
உனக்கு தூக்கம் எல்லாம் தேவையே இல்லப்பா…
ஆனா எனக்கு அட்லீஸ்ட் ஒரு அஞ்சு மணி நேரமாவது தூங்கி ஆகணும்.
அப்போ தான் நாளைக்கு என்னால ஆஃபிஸ் போக முடியும்.
அதுனால கதையை நாளைக்கோ இல்ல எனக்கு எப்போ ஃப்ரீ டைம் கிடைக்குதோ அப்ப சொல்லறேன்.
சரியா.
இப்போ நான் போய் தூங்கறேன்.
குட் நைட் ப்ளூ.”
“இதுக்கு எதுக்கு என்ன கூப்பிட்ட?”
“உன்னை காலையிலேந்து நான் பார்க்கலையா அதுதான் கூப்பிட்டு பார்த்தேன்.”
“சரி சரி பார்த்து படியேறி போ தி.”
“ஆங்! ஏய் ப்ளூ! இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே!”
“என்னது?
பார்த்து! பார்த்து! படியில மெதுவா இறங்கி வா தி…
விழுந்துட போற”
“நம்ம பக்கத்து வீட்டு மிஸ்ஸர்ஸ் டேவிட் இருக்காங்க இல்ல…
அவங்க இன்னைக்கு அங்க வீட்டுல இல்ல.
அவசரமா கிளம்பி எங்கயோ போயிருக்காங்களாம்.
அவங்க வீட்டுல வேலை செய்வானே ஒரு பையன் அவன் தான் சொன்னான்.”
“நீ அவங்கள கடைசியாக எப்ப பார்த்த தி?”
“இன்னைக்கு!
ஓ மணி ஒண்ணா ஆயிடுச்சோ!
அப்படீன்னா நேத்து காலையில் ஆஃபிஸ் போகும் போது பார்த்தது தான் ப்ளூ.
அதுக்கப்புறம் மத்தியானம் நானும் வி யுமா வீட்டுக்கு திரும்பி வந்தோம் இல்லையா அப்போ அவங்க அங்க இருக்கலை.
காலையில அவங்க எதுவுமே சொல்லவுமில்லை!”
“ஆனா அந்த பாட்டி எதுவானாலும் உன்கிட்ட சொல்லுவாங்களே!
இப்படி திடுதிப்புன்னு ஊருக்கு கிளம்பி போயிருக்காங்கன்னா உன்னை ஃபோன் ல பிடிக்க முடியலைன்னாலும் மெஸேஜாவது அனுப்பி இருப்பாங்களே தி!”
“ஆமாம் ப்ளூ…
அதுதான் எனக்கும் காலையிலேந்து ஒரே வருத்தமா இருக்கு.”
“சரி இப்போ… உனக்கு அஞ்சு மணி நேரம் தூக்கம் வேண்டாமா தி?”
“ஊப்ஸ்…
சரி சரி மீதியை அப்பறமா யோசிச்சுப்போம்.
குட் நைட் ப்ளூ”
“குட் நைட் குட் நைட் போ போ போய் தூங்கு தி”
என்று ப்ளூ சொல்லி முடிப்பதற்குள் சக்தி அவள் அறையினுள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். பின் உடையை மாற்றிவிட்டு படுத்துறங்கலானாள்.
மறுநாள் காலை சரியாக ஆறு மணியளவில் வழக்கம் போல ப்ளூ சக்தியை எழுப்பி விட அவள் அறைக்குள் வந்தது. ஆனால் சக்தி படுக்கையில் இருக்கவில்லை. அவளின் படுக்கையும் அழகாக விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ப்ளூ தனக்குத் தானே
“என்ன இது உலகமகா அதிசயமா இருக்கே!
இந்த தி நான் எழுப்புறதுக்கு முன்னாடியே இப்ப எல்லாம் எழுந்துக்கறாளே!
தி…தி…தி…
குளிச்சிட்டிருக்கியா?”
“ஆமாம் ப்ளூ.
நீ போ நான் ரெடியானதும் கீழே வரேன்.”
“ஓகே. வா வா.”
ஆஃபீஸுக்கு கிளம்பி கீழே வந்த சக்தியை மேலிருந்து கால் வரைப் பார்த்த ப்ளூ
“தி என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமே கிளம்பிட்ட?”
“நான் தான் நேத்து நைட்டே சொன்னேனே ப்ளூ.
இன்னைக்கு நிறைய வேலையிருக்குன்னு…
அதுதான் கிளம்பிட்டேன்.”
“சரி…உன் காபி இந்தா.”
“இல்ல ப்ளூ.
எனக்கு நேரமாயிடுச்சு.
நான் இப்ப வசுந்தரா வீட்டுக்கு தான் போறேன்.
அங்கேயே காபி டிபன் எல்லாம் சாப்பிட்டுக்கறேன்.
நீ உன் வேலைகளை முடிச்சுட்டு பேஸ்மென்ட்டுக்கு போயிடு.
ஏன்னா நான் வியோட இங்க வந்தாலும் வருவேன்.”
“அப்படீன்னா இன்னைக்கும் எனக்கு பேஸ்மென்ட் தானா!!
இப்பவே எல்லாம் போக மாட்டேன்.
உன் கார் சத்தம் கேட்டதுக்கப்புறமா வேணும்னா போறேன்.”
“என்னமோ பண்ணு.
நான் போயிட்டு வரேன் ப்ளூ.
பை”
“பை தி.”
என்று ப்ளூவிடமிருந்து விடைப் பெற்று வெளியே வந்து வீட்டின் கதவை பூட்டிய சக்தியின் கண்கள் பக்கத்து வீட்டுப் பாட்டியை தேடியது. அப்போது அவளது கைப்பேசி அதிர்வுற்றதில் கிடுகிடுவென கதவைப் பூட்டிவிட்டு கைப் பேசியை அழுத்தி
“குட் மார்னிங் வி.”
“ம்…குட் மார்னிங். குட் மார்னிங்”
“நாங்க உன் தோழி வசுந்தரா வீட்டுக்கு கிளம்பிட்டோம்.
நீ உன் வீட்டிலிருந்து புறப்பட்டாச்சா?”
“ஆங்! ஆங்! புறப்பட்டாச்சு புறப்பட்டாச்சு!
சரி அது என்ன நாங்க?”
“ம்…நானும் என் நண்பனும் தான்.
எனக்கு நேத்து நைட்டு ரூம் தந்த புண்ணியவான்”
“ம்…ஓகே ஓகே.
நான் கால் ஐ கட் பண்ணிட்டு காரை ஸ்டார்ட் பண்ணட்டுமா?
இல்ல இப்படியே உன் கூட பேசிட்டே இருக்கட்டுமா?”
“சரி சரி சீக்கிரமா வந்து சேருமா.
நான் வச்சுடறேன்”
என்று கூறி விஷால் ஃபோனை வச்சதும் வீட்டிலிருந்து புறப்பட்ட சக்தி நேராக வசுந்தரா வீட்டு வாசலில் வண்டியை நிப்பாட்டினாள். அவள் காரிலிருந்து இறங்கிய போது அவளருகில் சர்ரென இரு கார்கள் வந்து நின்றது. சக்தி திரும்பிப் பார்த்தாள். அதிலிருந்து இறங்கினர் விஷாலும் ஜேம்ஸும்.
அவர்களைப் பார்த்ததும் சக்தி
“குட் மார்னிங் ஜேம்ஸ்.”
“குட் மார்னிங் சக்தி.”
“ஓ நீங்க தான் வி க்கு ரூம் குடுத்த வள்ளலோ”
“ஆமாம் என்ன பண்ண? ராத்திரி வந்து பாவமா வீட்டு வாசல்ல நின்னவனை வேற என்ன பண்ணுவேன் சொல்லுங்க”
“ரோல்ஸ் ராய்ஸ் வச்சிருக்கறவனுக்கு ஒரு ஹோட்டல்ல ரூம் போட முடியலையாக்கும்!”
“அதுதானே! அதை சொல்லுங்க சக்தி”
“அடேய் ராத்திரி பதினோரு மணிக்கு ஹோட்டல் ஹோட்டலா ரூம் கேட்டு ஏறி இறங்க முடியுமா?
அதைவிட பெஸ்ட் என் ப்ரெண்ட் வீட்டுக்கு போறது தானே!
இதை எல்லாம் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னவங்க எல்லாம் பேச வேண்டாம்ன்னு சொல்லு ஜேம்ஸ்”
“அச்சச்சோ! உங்க சண்டைக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டுட்டு இப்போ நாம வசுந்தரா வீட்டுக்குள்ள போகலாமா?
இதை முடிச்சுட்டு நான் பாரிஸ் வேற போகணும்”
“சாரி ஜேம்ஸ்.
வாங்க போகலாம்.”
“ம்…நீங்க ஃபர்ஸ்ட் போங்க சக்தி.
நாங்க ரெண்டு பேரும் உங்களை ஃபாலோ பண்ணி வறோம்”
“ம்…ஷுவர். வாங்க வாங்க.
வசு…வசு…”
“ஹலோ மேடம்! கொஞ்சம் நல்லா பாருங்க”
“அட ஆமாம்! என்ன வீடு பூட்டியிருக்கு?”
“உங்க கிட்ட ஏதாவது உங்க பிரெண்ட் சொன்னாங்களா சக்தி?”
“இல்லையே! ஒரு வேளை அவ அப்பா அம்மா பொண்ணு மூணு பேரும் எங்கயாவது வெளிய பேயிருப்பாங்கன்னு நினைக்கறேன்.”
“நாம பார்க்க வந்தது உன் தோழி வசுந்தராவ தானே!”
“ஆமா வி. ஆனா வசு க்ளினிக்கை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டாளே!! ஜேம்ஸ் நாம அவ க்ளினிக் போய் பார்ப்போமா?”
“ம்..சரி அவங்க க்ளினிக் எங்க இருக்கு?”
“நான் லொக்கேஷன் ஷேர் பண்ணியிருக்கேன் பாருங்க.
நீங்க ரெண்டு பேரும் அங்க வந்துடுங்க.
நானும் அங்க வந்துடறேன்”
“சரி கொஞ்சம் சீக்கிரமா போகலாமா?”
“ம்…இதோ நான் கிளம்பிட்டேன்”
என்று மூவருமாக அவரவர் காரில் வசுந்தராவின் க்ளினிக் சென்றனர். அங்கே சென்றவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. வசுந்தரா முன்தினம் மாலை டியூட்டி முடிந்து ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்கு சென்றுவிட்டார் என்ற செய்தி தான் கிடைத்தது. ஆனால் அங்கிருந்த ஒரு நர்ஸ் நைட் ட்யூட்டி முடித்து விட்டு பரபரப்பாக வீட்டுக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டே ஜேம்ஸைப் பார்த்தாள். அவள் கண்கள் ஜேம்ஸிடம் ஏதோ சொல்ல துடித்ததை உணர்ந்த ஜேம்ஸ் மெல்ல சக்தி விஷாலை அங்கேயே இருக்க சொல்லி விட்டு அந்த நர்ஸை பின் தொடர்ந்து சென்றான். அவள் லிஃப்ட்டிற்குள் நுழைந்தாள். ஜேம்ஸும் அதே லிஃப்ட்டிற்குள் நுழைய ஓடிச் சென்றான் ஆனால் லிஃப்ட்டின் கதவுகள் மூடியதால் அவன் அந்த நர்ஸ் ஏறிய லிஃப்ட் எங்கே செல்கிறதென்று நின்று பார்த்தான். அது அந்த கட்டிடத்தின் கூரை தளத்திற்கு சென்றது.
பக்கத்து லிஃப்ட்டை எடுத்தால் ஜேம்ஸ் அந்த நர்ஸை தவரவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் …ஏனெனில் ஒரு வேளை அவள் அவனை ஏமாற்ற அங்கு சென்று விட்டு மீண்டும் கீழே ஏதாவது தளத்தில் இறங்கினால்! என்று யோசிக்க சில வினாடிகளே எடுத்த ஜேம்ஸ் படிகளில் ஏறிச் சென்றான். அப்படி ஏறுவதால் அவள் இடையில் எந்த தளத்தில் இறங்கினாலும் அவனிடம் அகப்படுவாள்.
ஜேம்ஸ் வேக வேகமாக படிகளில் ஏறிச் சென்றான். ஆனால் மேலே கூரை தளத்திற்கு சென்ற லிஃப்ட் கீழே வரவேயில்லை. அவனும் கூரை தளத்தை சென்றடைந்தான். அங்கே பீப் பீப் பீப் என்ற ஒலியுடன் லிஃப்ட் மூடாமல் திறந்திருந்தது. யாரோ ஒருவரின் கால்கள் லிஃப்ட்டின் கதவுகளை மூடவிடாது குறுக்கே தடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ஜேம்ஸ் வேகமாக லிஃப்ட் அருகே சென்று பார்த்தான். அவன் யாரைத் தேடி வந்தானோ அந்த நர்ஸ் தான் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்திருந்தாள். அதைப் பார்த்த ஜேம்ஸ் உடனே சக்தியை கைபேசியில் அழைத்து டாக்டர்களுடன் வேகமாக கூரை தளத்திற்கு வருமாறு கூறினான்.
ஜேம்ஸின் பேச்சில் இருந்த படபடப்பு ஏதோ ஆபத்தான விஷயம் நடந்துள்ளது என்பதை சக்திக்கு உணர்த்தியது. உடனே அவள் அங்கிருந்த வரப்வேற்பாளரிடம் சென்று அவசரம் என்று கூறி இரண்டு டாக்டர்கள் மற்றும் இரண்டு நர்ஸுகளுடன் லிஃப்ட்டை நோக்கிச் சென்றாள். அப்போது விஷால் அவளிடம்
“ஏய் தி…தி…தி…எங்க போற?
ஜேம்ஸ் எங்க”
என்று கேட்டுக் கொண்டே அவள் பின்னால் செல்ல அவனும் அவர்களுடன் லிஃப்ட்டிற்குள் சென்றான். லிஃப்ட்டின் கதவுகள் மூடியது. சக்தி கூரை தளம் செல்வதற்கான பொத்தானை அழுத்தினாள்.
தொடர்வாள்….