
இன்று நம் மத்தியில் சிறு வயது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உபயோகிக்கும் பெரிய வார்த்தை, அதற்காக ஒரு தனி படிப்பு, தனி பிரிவு என்று பெரிய அளவில் இயங்கிக்கொண்டிருக்கும் மருத்துவமனைகள் என்று பூதாகரமாக நம் முன் படமெடுத்து ஆடும் அந்த வார்த்தை… வேறொன்றுமில்லை “மன அழுத்தம்” என்பதே ஆகும். இந்த பதிவில் தற்போது குழந்தைகளுக்குள் நிலவும் இந்த சொல்லின் தொல்லைப் பற்றியும், அதன் சில காரணங்கள் பற்றியும், விளைவுகள் பற்றியும் காண்போம்.
என்னடா நம் நாடே இதை பெரிய அளவில் பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இவர் வேறொன்றுமில்லை மன அழுத்தம் தான்னு சாதாரணமாக சொல்லுகிறாரே என்ற எண்ணம் முதல் பத்தியைப் படித்ததும் நிச்சயம் அனைவருக்கும் தோன்றியிருக்கும். அது தாங்க மன அழுத்தத்திற்கான முதல் படி.
அடுத்தவர்களை வைத்து நம்மை நாம் மதிப்பிடுவது நம்மை மிகப் பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடியதாகும். அந்த காலத்தில் நமது பெற்றோர்களுக்கு இல்லாத மன அழுத்தமா? இல்லை நம் பாட்டி தாத்தாக்களுக்கு இல்லாத மன அழுத்தமா? ஆனால் அதை அப்போது பெரிதாக எவரும் எடுத்துக்கொள்ளவில்லை “குடும்பம்னா நாலும் இருக்கும் பா” “இதெல்லாம் வாழ்க்கையில சகஜம் பா” என்ற மூன்றே வார்த்தைகளில் அதற்கு முழுக்குப் போட்டுவிட்டு அவரவர் வேலைகளில் மூழ்கிடுவர். அதே போல அன்றைய காலக்கட்டத்தில் பள்ளிக்கூடம் பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்ததோடு மகிழ்ச்சியையும் அளித்து வந்துள்ளது. மேலும் பெற்றவர்கள் அவ்வளவாக படிக்காததாலோ என்னவோ அவர்கள் தங்கள் பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்களைப் பார்த்து மகிழ்ந்தனரே இன்றி அடுத்த வீட்டு பையன் எவ்வளவு எடுத்திருக்கிறான் என்று எண்ணிக் கூட பார்க்காதிருந்தனர்.
ஆரம்ப பள்ளிகளில் மதிப்பெண்கள் வழங்கக் கூடாதென்றும், அது சிறுவயது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை அளிக்கும் என்றும் எடுத்துரைத்ததில் ஆண்டாண்டு காலமாக நடந்து வந்த கல்வி முறையை மாற்றி அதை எல்லா பள்ளிகளிலும் செயல்படுத்தியும் ஆகிவிட்டது. ஆனால் அதே வயது குழந்தைகள் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் மதிப்பிடப் படுகிறார்கள், மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாது அவர்களுக்கிடையே குறைந்த மதிப்பெண் வாங்கியுள்ள குழந்தைகள் யார் யார் என்றும் அவர்களை முன்னால் நிறுத்தி அதை பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் மட்டுமின்றி உலகத்திற்கே பகிர்கிறார்களே! இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட மாட்டார்களோ என்னவோ!
மன அழுத்தம் என்பது நமது உடல் ரீதியாக அதாவது உடல் பருமன் காரணமாக அல்லது குடும்ப வம்சாவழி காரணமாக உதித்தால் அதற்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து கட்டுப்படுத்தலாம். ஆனால் அதுவே மன ரீதியாக உதித்தால் அதை சரி செய்வதென்பது சற்று கடினமானது தான். ஆனால் முயன்றால் முடியாதது என்று ஒன்றுமில்லை. எனவே மன ரீதியாக மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்களுக்கு அவர்களே அதற்கான மருந்தும் ஆவர். ஆம் அவர்களே நினைத்தால் தான் அதிலிருந்து வெளிவர முடியும். மன ரீதியாக மன அழுத்தம் ஏன் வருகிறது? என்று சற்றே ஆராய்ந்து பார்த்தோமே என்றால்
அது ஒவ்வொருவரின் ஆசைகள், ஏக்கங்கள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் அதனால் எழக்கூடிய பொறாமை, கோபம், சமுதாய நெருக்கடி, சமூக ஊடகங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவைகளின் பிரதிபலிப்பே மன அழுத்தம் ஆகும்.
இப்படி நமக்கு வெளியிலிருந்து நம்மைத் தாக்கி நம்மை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் அனைத்தையும் நாம் பெரிதாக பொருட்படுத்தாமல் நம்மை விட்டு தள்ளி வைக்கக் கற்றுக்கொண்டு விட்டோமே என்றால் அது அப்படியே அடுத்த நிகழ்வு ஏதாவது நடந்ததும் மறைந்து, மீண்டும் எழுவதற்கு தெம்பில்லாமல் அப்படியே புதைந்து போய்விடும். பின் இதற்காகவா நாம் மன வேதனைக்கு உள்ளானோம் ச்சே! என்று நினைக்க வைக்கும். உதாரணத்திற்கு ஒரே ஒரு விஷயத்தை பற்றி மட்டும் விவரிக்க விரும்புகிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இதுவும் ஒன்று. நாம் நமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் அல்லது கலைகளில் சிறந்து விளங்க வேண்டுமென்றெல்லாம் எண்ணுவதில் தவறேதுமில்லை ஆனால் அவர்களை அவர்களின் நண்பர்களோடு அல்லது பெற்றவர்களின் நண்பர்கள் பிள்ளைகளோடு ஒப்பிட்டு, ஏன் அவர் மகன்/மகள் போல என் மகன்/மகள் மதிபெண் எடுக்க மாட்டிங்கிறாள்/ன் அல்லது ஏன் அவர்களைப் போல இந்த துறையில் மிளிர மாட்டிங்கிறான்/ள்? ஆமாம் எப்ப பார்த்தாலும் விளையாடிக் கொண்டேயிருந்தால் எங்கிருந்து முன்னேறுவது என்றெல்லாம் எண்ணங்கள் மனதில் உதிக்க ஆரம்பித்து விட்டால் நாமே மன அழுத்தமென்னும் புதைக் குழிக்குள் விழ ஆரம்பித்துவிட்டோமென்று அர்த்தமாகும்.
இவ்வாறு எண்ணும் பெற்றவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதே போல பிள்ளைகள் அவர்கள் நண்பர்களின் பெற்றவர்களோடு தங்களின் பெற்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அது பெற்றவர்களுக்கு வேதனையளிக்கும் அல்லவா! பின்பு ஏன் அதே வேதனையை பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் அளிக்க வேண்டும்? இதை செய்வதால் பெற்றவர்கள் பிள்ளைகள் இருவரும் பாதிக்கப் படுகிறார்கள்.
குழந்தைகள் எது செய்தாலும் அவர்களை தட்டிக்குடுக்கிறோம் என்ற பெயரில் அவர்களை ஒழுங்குப் படுத்த தவறுகிறார்கள் நவீன உலகப் பெற்றோர்கள். சுவற்றில் கிறிக்கினால் கிறுக்கட்டுமே அவள்/அவன் பெரிய ஓவியராக வரட்டுமே! அதிகப்பிரசங்கித்தனமாக பேசினால்… பேசட்டுமே பெரிய பேச்சாளராக போகிறார்கள்! என்பதெல்லாம் சரிதான் ஆனால் அதே குழந்தைகளுக்கு ஒரு காகிதம் அல்லது புத்தகத்தைக் கொடுத்து அதில் படம் வரையும் படி பொறுமையாக கற்றுக் கொடுத்தால் எந்த குழந்தையும் முதல் இரண்டு முறை கேட்காவிட்டாலும் மூன்று அல்லது நான்காவது முறை நிச்சயம் கேட்கவும் செய்யும், அது படி நடக்கவும் பழகிக்கொள்ளும். பெரிய ஓவியர்களாகவும் ஆவார்கள். அதிகப்பிரசங்கித்தனமாக பேசாதே என்று ஓரிரு முறை பொறுமையாக எடுத்துச் சொல்லிக்கொடுத்தால் அக்குழந்தை அதன் குழந்தைத் தனம் மாறாது வளர ஏதுவாக இருக்கும். குழந்தைகளைக் குற்றம் சொல்வானேன்! அவர்கள் அனைத்தும் அறிந்து கொண்டு பிறப்பதில்லையே! அவர்களை சுற்றியிருக்கும் பெரியவர்களிடமிருந்து தானே அனைத்தும் கற்றுக் கொள்கிறார்கள்.
மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றி பிள்ளைகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவர்களைப் பெற்றவர்கள் அடிக்கக் கூடாது திட்டக்கூடாது என்றெல்லாம் கூட சட்டங்கள் வர ஆரம்பித்தாகிவிட்டது. அப்படி இருந்தால் அது பிள்ளைகளுக்கு எவ்வளவு நன்மைகள் தரும் தெரியுமா என்றெல்லாம் முழக்கமிட்டு அமல் படுத்தியவர்கள், அது எந்தவிதத்தில் நன்மை அளித்துள்ளது என்பதைப் பற்றிய விவரங்கள் எங்கே என்று தேடிக்கொண்டே இருக்க வேண்டியது தான். பார்க்கப் போனால் பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதற்கான முக்கிய காரணமாக கூட இந்த மாற்றம் அமைந்துள்ளது எனலாம். ஏனெனில் அவர்களை நெறிப் படுத்த சில நேரங்களில் கண்டிப்பு மிக அவசியமான ஒன்றாக அமைகிறது என்பதை நவீன உலகம் மறக்கடிக்கச் செய்து விட்டது எனலாம்.
அப்படி இருக்கும் மேற்கத்திய நாட்டு குழந்தைகளின் நிலை என்ன என்று சற்று அலசிப் பார்க்க வேண்டியதும் அவசியமாகும். சொல்லப் போனால் அவர்கள் நமது நாட்டின் பாரம்பரிய முறைகள் பிடித்துப் போய் அதைப் பின்பற்ற தொடங்கியுள்ளார்கள். ஆனால் நாம்? இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது இதுதானோ! கண்டிப்புடன் வளர்க்கப் பட்ட நமது நாட்டின் எழுபது, என்பது, தொண்ணூறுகளின் குழந்தைகள் எங்கே எப்படி இருக்கிறார்கள் என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அன்றைய பெற்றவர்கள் கண்டிப்புடன் வளர்த்திருந்தாலும் அவர்களின் பிள்ளைகள் எவரும் அவர்களை வெறுக்கவில்லை, ஒதுக்கவில்லை. ஆனால் இன்றோ பத்து வயது குழந்தை பெற்றவர்களைப் பார்த்தே “ஐ ஹேட் யூ” என்கிறதென்றால்!! எதிர்காலத்தை எண்ணி அஞ்ச வேண்டிய சூழல் உருவாக ஆரம்பித்து விட்டது என்று தான் தோன்றுகிறது.
ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பு பாசத்தை வாரி வழங்க வேண்டும். ஆனால் ஆறு வயது முதல் பதினைந்து வயது வரை கண்டிப்புடன் இருந்து அவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் ஆசாரங்களை கற்றுக் கொடுக்க வேண்டுமென்று சாணக்கியர் ஏன் கூறியுள்ளார்? என்று நாம் சற்று சிந்திக்க வேண்டிய நேரமும் காலமும் இதுதான் என்று தோன்றுகிறது.
இதைப் போலவே நமது எதிர்பார்ப்புகளை நமது பிள்ளைகள் மீது நாம் திணிக்க நினைத்தால் அதுவும் இருவருக்குள்ளும் தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்கும். உன்னிப்பாக கவனித்தோமே என்றால் குழந்தைகளை சுதந்திரமாக சுவற்றில் கிறுக்க விடும் அதே பெற்றவர்கள் தான் தங்கள் குழந்தைகள் மீது தங்களின் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை திணிக்கின்றனர். சுதந்திரம் கொடுக்க வேண்டும் ஆனால் அது பதினைந்து வயது வரை அவர்களை நெறிப் படுத்திய பிறகு பதினாறு வயது முதல் கொடுக்க வேண்டும். அதைத் தான் சாணக்கியரும் கூறியுள்ளார். பதினாறு வயதுக்கு பின் பெற்றோர் குழந்தைகளை நண்பர்களாக நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். சாணக்கியர் கூறியுள்ள மேலாண்மை போதனைகளை பல இடங்களில் கோடிட்டுக் காட்டும் பலர் அவரின் இந்த போதனைகளையும் பெரிதாக கருதி அவற்றை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்த முயற்சித்தால் நமது எதிர் கால சந்ததிகளும் அவர்களின் எதிர்காலமும் பிரகாசமாக அமைய வாய்ப்புள்ளது. அதே நேரம் குழந்தைகளுக்குள் நிலவி வரும் மன அழுத்தமென்னும் சொல்லை அவர்களே எரேசர் எனப்படும் அழிப்பான் கொண்டு முற்றிலுமாக அழித்தும்விடுவர்.
போதாக்குறைக்கு இரண்டு வருடங்களாக நிலவிக் கொண்டிருக்கும் இந்த பெருந்தொற்றுக் காலம் பிள்ளைகளை பெரிதும் பாதித்துள்ளது எனலாம். அவர்களால் பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை, நண்பர்களுடன் ஓடியாடி விளையாட முடியவில்லை. பாடங்கள் அனைத்தும் கணினி வழியாக நடத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொற்றுக்காலத்துக்கு பின் பள்ளிக்கு வந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றிய விவாதம் ஒன்று காட்சியாக்கப்பட்டிருந்தது. அதில் பிள்ளைகள் ஒரு புறமும், அவர்களின் பெற்றவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறுபுறமும் என்று விறுவிறுப்பாக விவாதம் நடந்துக்கொண்டிருந்தது. அதில் பிள்ளைகள் சரமாரியாக கேள்விகளைக் கேட்டனர். பெற்றவர்களும் ஆசிரியர்களும் மென்னு முழுங்கி பதிலளித்தனர். இதில் அந்த தொலைக்காட்சி நிறுவனம் செய்த ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. அது என்னவென்றால் அவர்கள் நிகழ்ச்சியில் முன்னாளில் பங்கெடுத்த ஒரு பெண்ணை வரவழைத்து அவரை அறிமுகம் செய்து வைத்தனர். அந்த பெண் முன்பு அதே நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட போது படிக்க வசதியின்றி பள்ளிக்கூடம் போக வழியின்றி இருந்ததை கூறியதாகவும் அதைப் பார்த்து பலர் அந்த பெண்ணுக்கு உதவிப் புரிந்ததையும் எடுத்துக்கூறினர். இறுதியில் அந்த பெண்ணிடம், இப்போது குழந்தைகள் இவ்வளவு பிரச்சினைகளை முன் வைக்கின்றனரே இதற்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அந்த பெண் அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து ஒன்றைக் கூறினார். அனைத்து வசதிகளைப் பெற்றும் அதற்கு மேல் பெற்றவர்களின் ஆதரவும் கிடைத்தும் இவ்வளவு குறைக் கூறுகிறீர்களே! எந்த வசதியுமின்றி குடும்ப பாரமும் சுமந்து சில நல்லுள்ளங்களின் உதவியால் படித்து இப்போது டாக்டராக இருக்கிறேன். ஆக படிப்பதற்கு எதுவுமே தடையில்லை. படிக்க வேண்டும் என்ற திடமான மனமிருந்தால் போதும் எந்த சூழ்நிலையும் நம்மை பாதிக்காது என்று கூறியதும் என்னை அறியாமல் என்னை கை தட்ட வைத்து சபாஷ் போட வைத்தது. ஆம் பெறியவர்கள் இந்த தொற்றுக் காலத்தை பெரிதாக பேச பேச அதைக் கேட்கும் குழந்தைகளும் அவ்வாறே எண்ணுகின்றனர். பெருந்தொற்றுக்காலம் பல இன்னல்களை அனைவருக்கும் அளித்துள்ளது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை தான் ஆனால் அதை ஏன் நாம் குழந்தைகள் முன் பேசி பேசி பெரிதாக்கி அவர்களை பாதிப்படைய செய்ய வேண்டும்? இதுவும் ஒரு வகையான மன அழுத்ததை பிள்ளைகளுக்கு பெரியவர்கள் கொடுப்பதாகும்.
மன அழுத்தம் என்பது இருந்துள்ளது, இருக்கின்றது, இருக்கப் போகிறது. இதில் எந்த வித மாற்றமும் இல்லை. அதை நாம் கையாண்டோம், கையாள்கிறோம், இனி கையாளவும் போகிறோம் என்பதிலும் எந்த வித மாற்றமும் இல்லை. ஆனால் எவ்வாறு கையாளப் போகிறோம் கடந்த காலத்தைப் போலவா அல்லது நிகழ்காலத்தில் அதாவது தற்போது கையாள்கிறோம் என்று கூறி ஏதேதோ செய்து வருகிறோமே அதைப் போலவா இல்லை வேறு ஏதாவது வழியிலா? கடந்த காலத்தை பின்பற்றலாமென்றால் பழையப் பஞ்சாங்கம், பின் தங்கிய சிந்தனை என்றெல்லாம் முத்திரை குத்தப்படும். ஆனால் “ஓல்டு இஸ் கோல்டு” என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
“அவங்களே வைப்பாங்களாம் அவங்களே எடுப்பாங்களாம்” என்ற நகைச்சுவை வசனத்துக்கு ஏற்றார் போல அனாவசியமாக பெரியவர்களே மன அழுத்தம் என்ற வார்த்தையை பிள்ளைகளுக்கு முன் கூறுவார்களாம் பிறகு பிள்ளைகளுக்கும் மன அழுத்தம் அதிகமாகி வருகிறது என்று கூறி கூறி அதை பிஞ்சுப் பிள்ளைகள் மனதில் விதைப்பார்களாம். அதன் பின் அதை சரி செய்ய மருத்துவர்களிடம் செல்வார்களாம்!! குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். அவர்களை சிறு வயதிலேயே பெரியவர்கள் போல் நடத்தி அவர்களின் குழந்தைத்தனத்தை தொலைக்கச் செய்திடாதீர்கள். அவர்களே நினைத்தாலும் மீண்டும் அந்த பருவம் அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. குழந்தைகளை குழந்தைகளாகவும், நண்பர்களாகவும், பெரியவர்களாகவும் நடத்த அதற்கான காலமும் நேரமும் இருக்கிறது. அது படி பெரியவர்கள் நடந்துக் கொண்டு குழந்தைகளையும் சரிவர நடக்கச்செய்து நமது எதிர்கால சந்ததியினரை நல்வாழ்வு வாழச் செய்திடுவோம். அவர்களின் உலகை சுபீட்சமாக்கிட பெரியவர்கள் ஏன் அதற்கான சரியான புள்ளிகளை சரியான விதத்தில் இணைக்க ஆரம்பிக்கக் கூடாது!
பின் குறிப்பு:- இங்கு கண்டிப்பு என்றால் அடி உதை என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவை ஏதுமின்றியும் கண்டிப்பை வெளிப்படுத்தலாம். பிள்ளைகளை நெறிப்படுத்தலாம்.
நா. பார்வதி