எக்ஸ்போ 2020

உலகின் அனைத்து வளர்ச்சிகளிலுமே முதன்மையாக இருக்க முயன்று அதை சாத்தியமாக்கிக் கொண்டு உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க செய்து வரும் அமீரகத்தின் அடுத்த பிரம்மாண்டம் தான் எக்ஸ்போ 2020. அப்படி என்றால் என்ன? எதற்காக இந்த ஏற்பாடு? இதில் என்ன இருக்கிறது? போன்ற கேள்விகளின் பதிலாக எனது பார்வை வழியாக உங்களை அழைத்து சென்று நீங்களும் அறிந்துக் கொள்ளவே இந்த பதிவு.

கடந்தகாலம் மற்றும் நிகழ்காலத்தில் பல நாடுகளில் உள்ள மனிதர்களின் பல கண்டுபிடிப்புகள், சாதனைகள், திறமைகள் ஆகியவற்றின் வரலாற்று பொக்கிஷமாகவும், எதிர்காலத்தில் வரவிருக்கும் பல அறிவியல், விஞ்ஞான, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புதுமைகளின் மாதிரியாகவும், பல்வேறு நாடுகளில் இருந்து பலதரப்பட்ட மக்கள் ஓரிடத்தில் அவரவர் நாடுகளின் கலை, கலாச்சாரம், புவியியல் ஆகியவற்றை பறைசாற்றும் வகையிலும், அதை அனைவரும் கண்டு களிக்கவும், அறிந்து கொள்ளவுமே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்

உலக நாடுகளின்
வரலாற்றை புரட்டி
எதிர்காலத்திற்கு வண்ணம் தீட்டி
நிகழ்காலத்தில் நமது கண்களுக்கு காட்சியாக்கி தந்துள்ளனர்!

என்று கூறுவது மிகையாகாது. இந்த நிகழ்வை பல நாடுகள் நன்றாக உபயோகித்துக் கொண்டு தங்கள் நாட்டின் அருமை பெருமைகளையும், எப்படி இருந்த நாங்க இப்போ எப்படி இருக்கோம் என்றும், இனி எப்படி இருக்கப் போகிறோம் பாருங்க என்றும் பல வகையான தொழில்நுட்பங்களால் நம்மை சபாஷ் போட வைத்துள்ளனர்.

எக்ஸ்போ 2020 என்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வு துபாயின் தெற்கு மாவட்டத்தில் 4.38 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
எதிர்கால சந்ததியினரும் அனைத்து இயற்கை வளங்களையும் அனுபவிக்க வேண்டி நிகழ்காலத்து மக்கள் எவ்வாறு அவற்றை உபயோகிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக பேண்தகுநிலை (sustainability),
அறிவு, சிந்தனை,எண்ணங்கள் ஆகியவற்றின் நகர் திறன் (mobility) மற்றும் நமது ஒவ்வொருவரின் ஒவ்வொரு செயலும் ஏதாவது ஒரு வகையான சிற்றலை விளைவை உருவாக்கக் கூடியது தான். அது போல கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதன் மூலம் நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறப்பு உண்டாக்கும் வகையில் வாய்ப்பு (opportunity) என மூன்று காட்சிக் கூடங்களின்(pavillions) கீழ் 192 நாடுகள் பங்கெடுத்துக் கொண்டுள்ளன.

இந்த நிகழ்வு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி துவங்கியது. இது மார்ச் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி வரை நடக்கவுள்ளது. வார நாட்களில் காலை பத்து மணி முதல் நள்ளிரவு வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் சிறப்பு தினங்களில் காலை பத்து மணி முதல் விடியற்காலை இரண்டு மணி வரை மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் நுழைவு சீட்டு ஜூலை மாதம் 2021 முதல் ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது. single entry tickets எனப்படும் ஒரு முறை நுழைவு சீட்டு, six months pass எனப்படும் ஆறு மாதத்திற்கான பாஸ், monthly pass ஒரு மாதத்திற்கான பாஸ் என பலவகையான நுழைவு சீட்டுகள் உள்ளன. இங்கு சீனியர் சிடிசன்ஸ், மாணவர்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு அனுமதி இலவசம். உள்ளே நுழைய அதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

வேலை நிமித்தம் வார நாட்களில் எங்களால் சென்று பார்க்க முடியாது. ஆகையால் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே நாங்கள் சென்று வர முடியும் என்பதாலும் ஓரிரு நாட்களில் அல்லது ஒரிரு மாத காலத்தில் 192 பெவிலியன்களையும் கண்டிட முடியாது என்பதாலும் நாங்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று பார்த்து வரும்படியான ஆறு மாத கால பாஸ் வாங்கி வைத்துக் கொண்டோம். ஒரு நாள் கட்டணம் திர்ஹாம் 45, ஒரு மாத பாஸ் திர்ஹாம் 95, ஆறு மாத பாஸ் திர்ஹாம் 495 ஆக இருந்தது. தற்போது எக்ஸ்போ முடியும் தருவாயில் உள்ளதால் திர்ஹாம் 50 க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இந்த நிகழ்வு நடக்கும் இடத்தை சென்றடைய பல்வேறு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. டாக்ஸிகள், மெட்ரோ, துபாயின் அனைத்து இடங்களில் இருந்தும் இலவச ஏசி பஸ் வசதி ஆகியவை மக்கள் எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அவரவர் வாகனங்களில் சென்றாலும் அதற்கான பார்க்கிங் வசதியும் மிக அருமையாக நிறுவப்பட்டிருக்கிறது. மேலும் பார்க்கிங்கிலிருந்து எக்ஸ்போ நுழைவாயில் சென்றிடவும் இலவச ஏசி பஸ் வசதி உள்ளது. ஆகையால் நாம் நமது காரில் சென்று அதை பார்க்கிங்கில் எங்கு நிப்பாட்டினாலும் நாம் நுழைவாயில் வரை நடக்க வேண்டுமே என்ற கவலை வேண்டாம் ஏனெனில் பார்க்கிங்கில் ஆங்காங்கே பஸ் ஸ்டாப் எனப்படும் பஸ் நிற்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நொடிக்கு ஒரு பஸ் என வந்துக் கொண்டேயிருக்கும். அதில் ஏதாவது ஒன்றில் ஏறி அமர்ந்தால் ஐந்தே நிமிடத்தில் எக்ஸ்போ நுழைவாயிலில் இருந்து ஒரு ஐம்பதடி முன் நம்மை கொண்டு இறக்கிவிடும்.

நேரடியாக நிகழ்விற்கு சென்று நான் கண்ட காட்சிகளையும், அறிந்து கொண்ட விவரங்களையும் எனது புரிதல் மூலம் உங்களுக்கு பகிர்ந்துக் கொள்ளும் ஆவலில் இந்த தொகுப்பை பதிவிட்டுள்ளேன். துபாயில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2020 க்குள் நுழைவோம் வாருங்கள்.

குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர் எளிதாக ஏறி இறங்கி பார்ப்பதற்கான வசதி அனைத்து பஸ்களிலும், அரங்குகளிலும் (Pavillions)அமைக்கப்பட்டுள்ளது. கார் பார்க்கிங், பஸ் நிலையம் முதல் நுழைவாயில் வரை அனைத்து இடங்களிலும் பல சானிட்டைசர் ஸ்டான்டுகள் பொருத்தப் பட்டிருந்தது. கொரோனா தடுப்பூசி மற்றும் பி.சி.ஆர் நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே உள் நுழைய அனுமதி கிடைக்கும். முக கவசம் இல்லை என்றால் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

நாங்கள் முதலில் சஸ்டைநபிலிடி பெவிலியன் செல்லவேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான கார் பார்க்கிங்கிற்குள் நுழைந்தால் அங்கு குறந்தது ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் கார்கள் நிற்கூடிய அளவு கடல் போல் விரிந்திருந்தது கார் பார்க்கிங். அதில் காரைப் பார்க் செய்வது கடினமல்ல ஆனால் மீண்டும் நமது காரை எப்படி அடையாளம் கண்டுக் கொள்வது என்று எங்களுக்குள் பேசிக்கொண்டே காரை பார்க் செய்துவிட்டு ஒரு ஐந்தடி நடந்து பஸ் நிலையத்துக்கு சென்றோம். அங்கே ஒரு உயரமான அந்த பஸ் ஸ்டாப்பின் எண் எழுதப்பட்ட பலகை இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே சென்ற எங்களிடம் அங்கு நின்றுக் கொண்டிருந்த உதவியாளர் அந்த பலகையில் இருக்கும் பார்கோடை எங்கள் மொபைலில் ஸ்கேன் செய்துக் கொள்ளும் படி கூறினார். ஏன்? எதற்காக? என்று கேட்டோம் அதற்கு அவர் “உங்க காரை எங்க பார்க் பண்ணிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? நீங்களே கண்டு பிடிச்சுப்பீங்களா?” னு கேட்டார். உடனே நான் “அதைப் பற்றி தான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இந்த பார்கோடை ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டால் எங்கள் கார் நிற்கும் இடத்தை காட்டுமா?” என்று கேட்க அதற்கு அந்த உதவியாளர் “உங்கள் கார் நிற்கும் இடத்தை இது காட்டாது ஆனால் நீங்கள் இந்த பஸ் நிலையத்திலிருந்து ஏறியுள்ளீர்கள் என்பதைக் காட்டும். ஆகையால் நீங்கள் திரும்பி வரும் போது இங்கு தான் இறங்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இதை வைத்து உங்கள் கார் இந்த சோனில் தான் வைத்துள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியப்படுத்தவே இது. உங்கள் கார் எந்த வரிசையில் நிப்பாட்டியுள்ளீர்கள் என்பதை உங்கள் கார் வைத்துள்ள வரிசையின் முடிவில் இதே போல் ஒன்று நிறுவப்பட்டிருக்கும் அதையும் நீங்கள் ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டால் இந்த கடல் போன்ற கார் பார்க்கிங்கில் உங்கள் காரை கண்டுப்பிடிப்பது எளிதாகிவிடும். ஆகையால் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.” என்றார். அவருக்கு நன்றி கூறிவிட்டு அவர் கூறியது போலவே இரண்டு பார்கோடுகளையும் ஸ்கேன் செய்துக் கொண்டோம். இந்த சம்பாஷணைகள் நடந்துக்கொண்டிருக்கையில் இரண்டு பஸ்கள் எங்களை கடந்து சென்றன. மூன்றாவதாக வந்த பஸ்ஸில் ஏறியதும் பஸ் ஓட்டுனருக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு அமர்ந்தோம். கார் பார்க்கிங் நடுவே வானூர்தி போல சென்று எக்ஸ்போ நுழைவாயிலில் இருந்து ஐம்பதடி முன்னிருந்த பஸ் நிலையத்தில் நின்றது. தானியங்கி கதவுகள் திறந்தன பஸ்ஸிலிருந்து கீழே இறங்கும் போது ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்துவிட்டு இறங்கினோம்.

நுழைவாயிலின் இருபுறமும் எக்ஸ்போவில் பங்கெடுத்துக் கொண்டுள்ள நாடுகளின் தேசிய கொடிகள் வானுயர்ந்து பறந்துக்கொண்டிருந்ததைப் பார்த்தால் நம்மை அந்த நாடுகள் வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்பதுப் போலவே எங்களுக்குத் தோன்றியது.

நுழைவாயிலுக்கு வெளியே அதற்கு நேராக பச்சை நிறத்தில் எக்ஸ்போ 2020 என்று பெரிதாக அழகாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதன் முன் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள மக்கள் வரிசையாக காத்திருந்தனர். வாழ்க்கையில் இது போன்ற வாய்ப்புகள் எப்போதும் கிடைப்பதில்லை என்பதால் கிடைத்த வாய்ப்பை ஏன் விடவேண்டும் என்று நாங்களும் ஐந்தாவதாக வரிசையில் நின்றுக் கொண்டோம். எங்கள் முறை வந்ததும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

எக்ஸ்போவின் நுழைவாயிலை கீழிருந்து மேல் வரைப் பார்த்தால் “ஆ” என்று வாய்பிளக்க செய்யும் விதம் நிறுவப்பட்டிருந்தது. ஆம். பிரம்மாண்டம் நுழைவாயிலில் இருந்தே தொடங்கியது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஒன்றல்ல மூன்று பிரம்மாண்டமான நுழைவாயில் மூன்று பெவிலியன்களுக்கும் தனிதனியாக அமைக்கப்பட்டிருந்தது. இதைப் போன்ற நுழைவாயில் உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காததாகும்.

21 மீட்டர் உயரமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நுழைவாயில் சுமார் பதினெட்டு டன் எடையுள்ளதாகும். இது பிரிட்டிஷ் கட்டிட கலைஞர் ஆசிஃப் கான் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தை நினைவூட்டும் வகையில் இஸ்லாமியர்களின் மஷ்ரபியா கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்டு கார்பன் இழைகளால் வடிவியல் துள்ளியத்துடன் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த மஷ்ரபியா கட்டிடக்கலையானது வெப்பத்திலிருந்து பாதுக்காப்பதோடு குளிரூட்டும் தன்மை உடையதாகவும் விளங்குகிறது. வெறும் கம்பிகளால் இணைக்கப்பட்ட கூடு போல் இருந்தாலும் இது இங்கு வரும் மக்களுக்கு இந்த அரபு நாட்டு வெப்பத்திலிருந்து குளிர்ச்சியான நிழலைத் தருகிறது. நாம் இந்த வாயிலை நடந்து கடந்து செல்லும் போது உற்றுக் கவனித்தோமே என்றால் இரண்டு மற்றும் முப்பரிமான புதிரான வடிவமைப்பின் காரணமாக இதில் எக்ஸ்போ வின் லோகோ வடிவத்தைக் காணமுடிகிறது.

எக்ஸ்போ 2020 லோகோ 4000 வருட பழமையான ஒரு மோதிரத்தின் வடிவத்தைக் கொண்டுள்ளது. இது 2002 ஆம் ஆண்டு அரபு நாட்டின் அல் மர்மூமில் சாருக் அல் ஹதீத் என்ற தொல்லியல் தளத்திலிருந்து கண்டறியப்பட்டது. இந்த மோதிரம் சாருக் அல் ஹதீத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பழமையான வரலாற்றுச் சின்னம் இனி வரப்போகும் வளமையான எதிர்காலத்துக்கான உத்வேகச் சின்னமாக இருக்கிறது. மனங்களை இணைப்போம் எதிர்காலத்தை உருவாக்குவோம் என்பதே இதன் தாரக மந்திரமாகும்.

இந்த லோகோவின் அர்த்தத்தையும் அது உருவான விதத்தையும் மற்றும் பிரம்மாண்டமான இந்த நுழைவாயில் பற்றிய விவரங்களையும் அறிந்துக் கொண்டோம் இனி எக்ஸ்போவினுள் நாம் காண காத்திருக்கும் பல நாடுகளின் பெவிலியன்கள் பற்றி அடுத்து வரவிருக்கும் பதிவில் காண்போம்.

நன்றி
-நா. பார்வதி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s