சக்தி பாரிஸ் போகவில்லை என்று அவளே சொன்னதைக் கேட்டு மீண்டும் குழப்பமடைந்த நவீன் மிருதுளா இருவரும் தெளிவு பெறவேண்டி சக்தியிடம் கேட்ட கேள்விகளுக்கு சக்தி
“அப்பா… அப்பா…அப்பப்பா…
எத்தனை கேள்விகள்?
இருங்கோ இருங்கோ…
கூல் கூல்…”
“சக்தி விளையாடாத.
அப்பா கேட்டதுக்கு பதில் சொல்லுடி”
“அம்மா…
சொல்லத்தானே கால் பண்ணிருக்கேன்.”
“அப்போ சொல்லு.”
“நீங்க ரெண்டு பேரும் என்னை எங்க சொல்ல விட்டேங்கள்?
மாறி மாறி பேசிண்டும்.
கேள்வி மேல கேள்வி கேட்டுண்டும் இருந்தா!
என்னையும் பேச விடணும் இல்ல.”
“சரி விட்டுட்டோம் சொல்லு மா.”
“நான் மீட்டிங் முடிச்சுட்டு ஆஃபிஸ் கேன்டீன்ல ஒரு சான்ட்விச் சாப்டுட்டு என்னோட கார்ல பாரீஸ் போலாம்னு கிளம்பினேன்.
ஒரு ஒன்றர மணிநேர டிராவல் பண்ணினதும் எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது.”
“என்ன மாதிரி இருந்தது சக்தி மா?”
“இருங்கோ நவீ அவ முழுசா சொல்லட்டும்.
நீ சொல்லுமா சக்தி”
“ஒரு மாதிரின்னா…
ஏதோ தல சுத்தற மாதிரி இருந்துது.
நானும் வண்டிய ஸ்லோ பண்ணி ஓட்டினேன்.
ஆனா அடுத்த ஒரு பத்து நிமிஷத்துல எல்லாம் அப்படியே ப்ளாக் அவுட் ஆகறா மாதிரி இருந்தது.
உடனே வண்டியை ஹைவேலேந்து சைட் லேனுக்கு கொண்டு போய் அங்க நிப்பாட்ட நெனெச்சேன்.
ஆனா அந்த லேன்ல எனக்கு முன்னாடி ஏதோ ஒரு பெரிய கண்டெய்னர் வண்டி நின்னுண்டிருந்தா மாதிரி இருந்தது அவ்வளவு தான் எனக்கு தெரியும்.
அதுக்கப்புறமா என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியலை.
காலங்காத்தால சட்டுன்னு முழிப்பு வந்துப் பார்த்தா
அதே லேன்ல என் காருக்குள்ள இருந்தேன்.
ஆனா என் காருக்கு முன்னாடி அப்போ அங்க அந்த கண்டெயினர் வண்டி இருக்கல.
அப்போ தான் நான் மயக்கமாயிருப்பேன்னு நெனச்சு என் ஃபோன தேடி எடுத்தேன்.
பார்த்தா சுவிட்ச்டு ஆஃபா இருந்தது.
அங்க தான் எனக்கு ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு.”
“என்ன கன்ஃப்யூஷன் சக்தி?”
“நான் மயக்கமாகறதுக்கு முன்னாடியே என்னோட ஃபோன ஆன் பண்ணி எமர்ஜன்சிக்கு கால் பண்ண ட்ரை பண்ணினதா எனக்கு ஞாபகம்.
ஆனா நான் மயக்கம் தெளிஞ்சதும் ஃபோன் மறுபடியும் சுவிட் ஆஃப்லயே தான் இருந்தது.
அப்படின்னா நான் சுவிட்ச் ஆன் பண்ணவேயில்லையா?
ஆன் பண்ணறதுக்குள்ள மயங்கிட்டேனா?”
“அப்படியே இருந்தாலும் சக்தி!
நீ மயக்கமானது எப்படியும் உங்க ஊரு மத்தியானம் ஒரு பன்னெண்டு பன்னெண்டர மணி இருக்குமா?”
“ஆங் இருக்கும் பா”
“அப்போ நீ மத்தியானம் பன்னெண்டர மணிலேந்து இன்னைக்கு விடியக்காலை வரைக்கும் உன் காருக்குள்ளேயே மயங்கிக் கிடந்தன்னு சொல்லறயா சக்தி?”
“அப்படித் தான்னு நெனைக்கறேன்.
ஏன்னா நான் மயக்கமாகும் போது என்னோட கார நிப்பாட்டின இடத்துலேயே தான் முழிச்சுப்பார்க்கும் போதும் நின்னுண்டிருந்தேன்.”
“நீ சொல்லற படிப்பார்த்தா எப்படியும் ஒரு பதிமூணு டூ பதிநாலு மணிநேரமா ஹவே சைடு லேன்ல உன் காருக்குள்ளயே மயங்கி கிடந்திருக்க.
இல்லையா?”
“ஆமாம் பா.”
“நீ மயக்கத்துல கார நிப்பாட்டிருக்க அப்படீன்னா நிச்சயம் ஒழுங்க நிப்பாட்டிருக்க வாய்ப்பில்ல.
நீ முழிச்சதும் உன் கார் சரியா பார்க் பண்ணிருந்ததா?”
“நான் கவனிக்கலப் பா.
நான் முழிச்சதும் டைம பார்த்தேன்.
அய்யோ நடு ஹைவேல இருக்கோமேன்னு நெனச்சேன்.
உடனே கார திருப்பிண்டு நேரா ஆத்துக்கு வந்துட்டேன்.”
“அதுவுமில்லாம அவ்வளவு நேரமா எப்படி அப்படி ஒரு கார் ஹைவேல நிக்கறத உங்க ஊரு ஹைவே பெட்ரோலிங் போலீஸ்கார கவனிக்காம இருந்திருப்பா?”
“எனக்குள்ள இருக்கற பெரிய டவுட்டும் அதுதான் பா.
ஒரு வேளை அவா அன்னைக்கு ஹைவே பெட்ரோலிங்குக்கு வரலயோ என்னவோ!
ஏன்னா அவா வந்திருந்தான்னா…நிச்சயம் என்ன அப்படி அங்க மயக்கமாவே விட்டுருக்க மாட்டா.
உடனே என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருப்பா.
அன்ட் என் காரையும் அங்கேந்து அகற்றிருப்பா.
ஏன்னா பதிமூணுமணிநேரம் ஈஸ் டூ மச் டைம்.”
“அதுதான் நானும் சொல்லறேன் சக்தி.
அப்படி பதிமூணு மணிநேரமெல்லாம் பெட்ரோலிங்க பண்ணாம இருக்க மாட்டா!”
“அதெல்லாம் இருக்கட்டும் நீ நல்லா தானே இருக்க சக்தி?”
“அம்மா ஐ ஆம் பர்ஃபெக்ட்லி ஆல் ரைட்.
எனக்கு எந்த வித சேதமுமில்ல.
நான் எப்படி டிரைவ் பண்ணிண்டே மயங்கினேனோ அதே மாதிரி தான் உட்கார்ந்துண்டிருந்தேன்.
என் உடம்புலேயும் எந்த விதமான காயங்களும் இல்ல.
போதுமா!”
“அதுக்கில்ல சக்தி!”
“அம்மா எனக்கு உன்னோட கவலைப் புரியறது மா.
ஆனா இது எப்படி? எதுக்கு? அப்படீங்கற கேள்விகள் தான் இப்போ என் மனசுல ஓடறது.”
“நீ எதுக்கும் ஹாஸ்பிடல் போய் ஒரு டெஸ்ட் எடுத்துண்டு வந்துடேன் சக்தி!
ஏன் மயக்கம் வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாமே.
இது மாதிரி உனக்கு முன்னாடி எப்பவாவது வந்திருக்கா?”
“இல்லப்பா இது தான் ஃபர்ஸ்ட் டைம்.”
“நீ நேத்து என்னென்ன சாப்ட்ட?
எங்க சாப்ட்ட?”
“காலையில ப்ளூ தான் ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு தந்தான்.
அதை சாப்டேன்”
“ப்ளூவா அது ஏன் உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு தந்தது?
எப்பவும் நீ தானே பண்ணிப்ப?
அது டின்னர் மட்டும் தானே பண்ணும்.”
“ஆமாம் மா.
ஆனா நேத்து நான் சீக்கிரமே கிளம்ப வேண்டியிருந்ததாலையும்,
நேத்து டின்னர் விஷாலோட சாப்ட போறேன்ங்கறதாலையும்,
ப்ளூ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணித்து”
“சரி அதுக்கப்புறம் என்ன எங்க சாப்ட்ட இல்ல குடிச்சன்னு நல்லா யோசிச்சுப் பாரு சக்தி.”
“ம்…அப்புறமா ஆஃபீஸ்ல மீட்டிங் போது ஒரு காஃபி குடிச்சேன்.
அதுக்கப்புறமா கேன்டீன்ல ஒரு சான்ட்விச் சாப்டேன்…”
“ம்…அதுக்கப்புறமா நீ ஒண்ணுமே எங்கயுமே எதுவுமே சாப்பிடவோ குடிக்கவோ இல்லையா?”
“ம்…ம்…ஆங்!! சான்ட்விச் சாப்பிட உட்கார்ந்தேனா அப்போ ரூத்ரா ஒரு டெட்ரா பேக் ஜூஸ் வாங்கித்தந்தா.
அதைக் குடிச்சேன்.
அவ்வளவு தான்.
அதுக்கப்பறமா நான் வேற எதுவுமே சாப்பிடல குடிக்கல.
ஏன்ப்பா உன் பொண்ணுக்கு யாராவது எதையாவது கலந்துக் குடுத்துட்டாளான்னு நெனக்கறையா?”
“காலம் கெட்டுக்கடக்குமா”
“எனக்கு யாருப்பா எதிரி இருக்கா?
அதுமாதிரி எல்லாம் பண்ண?
அப்படியே குடுத்திருந்தாலும் அதுல எந்த மோட்டிவும் இருக்கறா மாதிரி தெரியலையே!”
“என்ன மிருது மோட்டிவ் இல்லங்கற!”
“என்னவா இருக்கும்?”
“ஒரு வேள டிரைவிங் பண்ணும்போது நீ மயக்கமடஞ்சு ஆக்ஸிடென்ட் ஆகணுனு கூட இருக்கலாம் இல்லையா!”
“அச்சச்சோ! சக்தி யாருமா இதை செஞ்சிருப்பா?”
“அய்யோ அப்பா அன்ட் அம்மா.
ரெண்டு பேரும் ஷெர்லாக் ஹாம்ஸா மாறவேண்டாம்.
எனக்கு தெரிஞ்சு சம் விட்டமின் டெஃபிஷியன்சியா இருக்கும்.
அவ்வளவு தான்.
அதுக்குள்ள ரெண்டு பேருமா ஏதோ பெரிய த்ரில்லர் பட ரேஞ்சுக்கெல்லாம் பில்ட்அப் பண்ணாதீங்கோ”
“அதுக்கில்ல சக்தி.
எதுக்கும் நீ குளிச்சுட்டு போய் டாக்டர பார்த்து ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்துண்டு வா”
“ஓகே பா.
நான் பண்ணறேன்.
டோன்ட் வரி.
எனக்கு ஒண்ணுமே இல்ல.
நான் நன்னா இருக்கேன்.
நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருங்கோ.
நான் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் உங்களுக்கு வாட்ஸ்அப் பண்ணறேன்.
ஏன்னா நீங்க அப்போ நல்லா தூங்கிண்டிருப்பேங்கள்.
சரியா”
“ம்…அது ஓகே.
ஆனா விஷாலோட பேரன்ட்ஸ் நேத்து உனக்காக கால்ல வெயிட் பண்ணிண்டிருந்திருப்பாளே தீ!
அவாள்ட்ட என்னன்னு சொல்லுவ?”
“ம்…அப்பாடா அப்பா நார்மல்சிக்கு ரிட்டர்ன் ஆயிட்டா”
“ஏன்?
எத வச்சு சொல்லற தீ?”
“இதோ இப்போ சொன்னயே “தீ” ன்னு அத வச்சு தான்.”
“ம்…ஆமாம் மா நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பரிதவிச்சுப் போயிட்டோம்.
சரி அவள்ட்ட என்ன சொல்லப் போற?”
“நடந்தத சொல்லுவேன்.
மொதல்ல விஷால்ட்ட சொல்லுவேன்.
அவன் அவனோட அப்பா அம்மாட்ட சொல்லிப்பான்.
உங்களோட பேசி முடிச்சதும் அடுத்தது விஷாலுக்கு தான் பண்ணனும்.”
“சரி சரி நீ விஷால்ட்ட பேசி எக்ஸ்ப்ளேயின் பண்ணிக்கோ.
மொதல்ல டாக்டர்ட்ட போ.
சரியா”
“ஓகே டன்.
விஷால்ட்ட பேசி முடிச்சதும் டாக்டர்ட்ட போறேன்.
ஓகே பை.
டேக் கேர்.
லவ் யூ அப்பா அன்ட் அம்மா”
“வீ டூ லவ் யூ டா கண்ணா.
பத்திரமா இருமா.
பை”
என்று தன் பெற்றோருடன் பேசி முடித்ததும் சக்தி தனக்குள்
“ம்…அப்பா சொல்லறதுலேயும் ஏதாவது இருக்கலாம்.
டாக்டர் டெஸ்ட் பண்ணி சொன்னா தெரிஞ்சுடும்.
ஆனா அதுக்கப்புறம் அது யாரா இருக்கும்ன்னு ஒரு கன்ஃப்யூஷன் வருமே!!
அதை டெஸ்ட் ரிசல்ட்டுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்.
இப்போ வி க்கு கால் பண்ணி சொல்லுவோம்.
பாவம் அவனும் டென்ஷன்ல இருப்பான்.”
என்று விஷாலுக்கு கால் செய்தாள் சக்தி. ரொம்ப நேரம் அவன் கைபேசி ஒலித்தும் அவன் எடுத்துப் பேசவில்லை. மீண்டும் முயற்சித்தாள். ஆனால் அவனிடமிருந்து பதிலில்லை. உடனே மொபைலை மெத்தை மீது வைத்துவிட்டு
“இந்த ப்ளூ எங்க காணவே காணம்.
ப்ளூ ப்ளூ.
எங்க போயிருப்பான்?
வீட்டைவிட்டு வெளியே போக மாட்டானே.
ஆங் பேஸ்மென்ட்ல சார்ஜிங் ஸ்டேஷன்ல இருப்பான்.
போய் பார்கறேன்”
என தனக்குத் தானே பேசிக்கொண்டே அவள் வீட்டின் பேஸ்மென்ட்டுக்குச் சென்று பார்த்தாள். அவள் நினைத்ததுப் போலவே ப்ளூ சார்ஜிங் ஸ்டேஷனில் இருந்தது. அதனருகே சென்று
“ப்ளூ இப்ப எல்லாம் நீ அடிக்கடி இங்க வந்து செட்டில் ஆகிடற!!
என்ன விஷயம்?
உனக்கு என்ன ஆச்சு?”
என்று சார்ஜிங் ஸ்டேஷன் சுவிட்ச்சை பிடுங்கிவிட்டாள் சக்தி. அதிலிருந்து வெளிவந்ததும் ப்ளூ சக்தியைப் பார்த்து…
“ஹாய் சக்தி”
“ஹாய் ப்ளூ”
“என்ன? நீ எங்க போன?
விஷால பார்க்கபோன சரி.
உங்களுக்குள்ள நீங்க பேசிட்டிருக்கும் போது
நான் டிஸ்டர்ப் பண்ணிடுவேனோன்னு தானே உன் மொபைல சுட்ச் ஆஃப் பண்ணி வச்சிருந்த?”
“ம்…ஆமாம் ஆமாம்.
நீ தான் எங்க லவ்வுக்கு வில்லன்.
போதுமா.
வா வா.
உள்ள போகலாம்.”
“நான் வில்லனா ஆனா என்ன ஆகும் தீ?”
“நீயா?
வில்லனா?
ஹா! ஹா! ஹா!
காமெடி பண்ணாத ப்ளூ.”
“ம்…ம்…சரி விஷாலோட உன் மீட்டிங் எப்படி இருந்தது?”
“எங்க நான் தான் பாரிஸ் போகவேயில்லையே!”
“அப்புறம் இவ்வளவு நேரமா எங்க போயிருந்த?”
“அது ஒரு பெரிய கதை.
வா சொல்லறேன்.”
என்று தன் அப்பா அம்மாவிடம் கூறியதை ப்ளூவிடமும் பகிர்ந்துக் கொண்டாள் சக்தி. அதைக் கேட்டதும் ப்ளூ சக்தியிடம்
“இவ்வளவு நடந்திருக்கா தீ?”
“சரி அதெல்லாம இருக்கட்டும்.
காலைல நீ ஏன் எனக்கு ரெண்டு தடவ கால் பண்ணின?
நான் அந்த நேரத்துல மீட்டிங் ல இருப்பேன்னு உனக்கு தெரியுமில்ல.
அப்புறம் எதுக்கு தொடர்ந்து கால் பண்ணின?”
“உனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லலாமேன்னு தான் பண்ணினேன்.
நீ தான் என் கால ஐ அட்டென்ட் கூட பண்ணலையே!”
“ஆமாம் ஆமாம்.
உன்னால தான் நான் ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணினேன்.
அதுக்கப்புறம் அந்த விஷாலோட நெனப்புல ஆன் பண்ண மறந்துட்டேன்.
இதெல்லாம் என்னோட அப்பா அம்மாவ எவ்வளவு கஷ்டப்படுத்திருக்கு தெரியுமா?
எல்லாம் உன்னாலையும் அந்த விஷாலாலையும் தான்.”
“ம்…”
“என்ன ம்? ப்ளூ”
“ஒண்ணுமில்ல தீ”
“சரி சரி நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வரேன் ப்ளூ.”
“ஹாஸ்பிடலா!! எதுக்கு தீ? யாருக்கு என்ன ஆச்சு?”
“யாருக்கும் எதுவும் ஆகல ப்ளூ.
சும்மா ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்துக்கப் போறேன்.”
“ப்ளட் டெஸ்ட்டா!! எதுக்கு?
உனக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா தீ?”
“இல்ல ப்ளூ.
அப்பாக்கு நான் சாப்பிட்டதுல யாராவது எதையாவது கலந்திருப்பாளோன்னு ஒரு டவுட்.
அதுதான் ஒரு டெஸ்ட் எடுத்தா தெரிஞ்சுடுமேன்னு போறேன்.
நான் வரேன் ப்ளூ.
டேக் கேர்.
பை”
“பை தீ.
என்ன இவ ப்ளட் டெஸ்ட் எடுக்க போறேன்னு கிளம்பி அவ பாட்டுக்குப் போயிட்டா?”
தொடர்வாள்…