அத்தியாயம் 13: குழப்பம் சூழ்ந்தது

ஆடிட் மீட்டிங்கை முடித்துவிட்டு மத்திய சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினான் நவீன். பின் காலிங் பெல்லையும் இரண்டு முறை அழுத்தினான். மிருதுளா நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததில் அவளுக்கு கதவு தட்டும் சத்தமோ, காலிங் பெல்லின் சத்தமோ கேட்கவில்லை. நவீன் அவளின் மொபைலுக்கு கால் செய்தான். கொஞ்ச நேரம் ரிங் ஆகி கட்டானது. வீட்டினுள் மொபைல் ஒலிக்கும் சத்தம் வெளியே நவீனுக்குக் கேட்டது ஆனால் மொபைல் பக்கத்திலேயே உறங்கிக் கொண்டிருக்கும் மிருதுளாவுக்கு கேட்கவில்லை. நவீன் அவர்கள் வீட்டு நம்பருக்கு கால் செய்தான். அந்த லாண்ட்லைன் ஃபோனின் சத்தம் மிருதுளாவின் காதைத் துளைத்தது. அவள் விருட்டென எழுந்துக்கொண்டு,

“யாரு அது இந்த நேரத்துல?”

என்று கூறிக்கொண்டே அலுத்துக் கொண்டே ரிசீவரை எடுத்து

“ஹலோ! நான் மிருதுளா பேசறேன்”

“ஹலோ மிருது.
நான் தான் நவீன் பேசறேன்.”

“ம்…சொல்லுங்கோப்பா.
எங்கேந்து பேசறேங்கள்?
மணி ஒன்றரை ஆச்சு எப்போ ஆத்துக்கு வருவேங்கள்?”

“ம்….நான் நம்ம ஆத்து வாசல்லேந்து தான் கால் பண்ணறேன்.
வந்து கொஞ்சம் கதவைத் தொறக்கறையா?”

“ம்…அப்படியா!!

என்று ஜன்னலின் திரைசீலையை அகற்றிப் பார்த்து ரிசீவரை வைத்துவிட்டுச் சென்று கதவைத் திறந்து

“ஏன் ஆத்து வாசல்ல நின்னுண்டு கால் பண்ணினேங்கள்?
காலிங் பெல் அடிச்சிருக்கலாம்!
இல்ல கதவ தட்டிருக்கலாமில்லையா?”

“ரெண்டுமே பண்ணினேன்.
மூணாவதா உன் மொபைலுக்கும் கால் பண்ணினேன்.
நீ எடுக்கலை.
அதுதான் லாண்ட்லைனுக்கு கால் பண்ணினேன்.
உனக்கு என்னமோ ஏதோன்னு பதறிப்போயிட்டேன்.
உனக்கு உடம்பு சரியில்லையா?
டாக்டர் கிட்ட போலாமா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல நவீ.
நல்லா தூங்கிட்டேன்.
அதுதான்.
சரி நீங்க போய் முகம் கைக்கால் எல்லாம் அலம்பிண்டு வாங்கோ.
நான் தட்டு கரண்டி எல்லாம் எடுத்து வெக்கறேன்”

“ம்…சரி சரி இதோ வந்துயறேன்”

என்று பாத்ரூமுக்குள் சென்ற நவீன் ஃப்ரெஷாகி வெளியே வந்து மிருதுளாவுடன் சேர்ந்து மத்திய உணவருந்தினான். மிருதுளா சாப்பிட்டதும் நவீனிடம்

“நீங்க மறுபடியும் நம்ம ஆஃபீஸுக்கு போக போறேங்களா நவீ?”

“இல்ல நவீ.
நானும் நேத்து நைட்டு சரியாவே தூங்காததால ஒரு மாதிரி இருக்கு அதுனால நல்லா படுத்து தூங்கப் போறேன்.”

“ம்..அதுதான் சரி.
வேற என்ன சொன்னா உங்க பொண்ணு?”

“நான் தான் அவ சொன்னத அப்படியே உன்கிட்ட சொல்லிட்டேனே.
அதுதான்.
வேறெதுவும் அவ சொல்லல.
அதுதான் சாயந்தரமா கால் பண்ணறேன்னு சொல்லிருக்காளே!
அப்போ உன் சந்தேகங்கள் எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கோ.
என்ன பொறுத்த வரைக்கும் அவ ஸேஃபா இருக்கான்னு நான் நம்பறேன்.
அவ்வளவு தான்.”

“ம்…சாயந்தரம் அவகிட்ட பேசிப்போம்.
இப்போ போய் நீங்க படுத்து தூங்குங்கோ.”

நவீன் உறங்கச் சென்று படுத்ததும் மிருதுளா அடுப்படியில் போட்டது போட்டபடி இருந்ததை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஹாலில் சோபாவில் வந்து அமர்ந்தவள் அப்படியே ஒரு பக்கமாக படுத்தாள். மீண்டும் உறங்கிப்போனாள்.

மாலை ஐந்து மணிக்கு எழுந்து முகம் கை கால் கழுவி காபி போட்டு நவீனை எழுப்பி இருவருமாக காபி குடித்துவிட்டு சுவாமிக்கு விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்லி முடித்தாள் மிருதுளா. மணி ஆறானது.

“என்ன நவீ சக்தி கால் பண்ணுவான்னு சொன்னேங்கள்.
எங்க இன்னும் கால் வரலையே!
அவளுக்கு இப்போ டைம் மத்தியானம் ஒன்றரை ஆகறது.”

“அவ பண்ணறேன்னு சொல்லிருக்கா.
ஸோ பண்ணுவா வெயிட் பண்ணு”

என்று நவீன் பேசி முடிக்கவும் மிருதுளாவின் மொபைல் ஒலிக்கவும் சரியாக இருந்தது. உடனே மிருதுள் எடுத்துப் பார்த்து

“ம்…ம்…அவளே தான்.”

என்று சக்தியிடமிருந்து வந்த வீடியோ கால் ஐ ஆன் செய்தாள் மிருதுளா

“ஹாய் மா.
எப்படி இருக்க?
காலேல உனக்கு நான கால் பண்ணினேன்
நீ எடுக்கவேயில்ல அதுனால அப்பாட்ட பேசினேன்.
ஆமாம் நீ ஏன் கால் ஐ எடுக்கல மா?”

“ஏன்டி நான் உனக்கு நேத்தேலேந்து எத்தனை தடவ கால் பண்ணிருப்பேன் தெரியுமா?
நீ எடுத்தயா?”

“ஓ! பழிக்குப் பழியா மா!
சூப்பர் சூப்பர்”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.
நான் சுவாமிகிட்ட எங்க பொண்ண காப்பாத்துப்பான்னு வேண்டிண்டு இருந்ததுல எடுக்கலை.”

“என்னை எதுக்கு காப்பாத்தணும்?
நான் எதுல இல்ல யார்கிட்ட மாட்டிண்டிருக்கேன் என்னை அந்த சுவாமி காப்பாத்த!!”

“சக்தி விளையாடினது போதும்.
சொல்லு நேத்து நீ எங்க போயிருந்த?
உனக்கு என்ன ஆச்சு?
ஏன் உன் ஃபோன் சிவிட்ச்டு ஆஃப்ன்னே வந்தது?”

“அம்மா அம்மா.
நான் நேத்து ஆஃபீஸ் போயிட்டு ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணினேன்.
அப்போ இந்த ப்ளூ தொணதொணன்னு எனக்கு கால் பண்ணினான்.
அது மீட்டிங்கை அட்டென்ட் பண்ண விடாம டிஸ்டர்ப் பண்ணித்தா.
அதுனால என்னோட ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணினேன்.
அதை அப்படியே மறந்துட்டேன்.
அதுக்கப்புறமா ஆஃபீஸ்லேந்து கிளம்பி பாரிஸ்ல விஷாலோட வீட்டுக்கு போறதுக்காக என் கார்ல போயிண்டிருந்தேன்.”

“சரி அதை ஏன் நீ எங்ககிட்ட சொல்லலை?”

“எதை?”

“நீ விஷாலோட ஆத்துக்கு போறதை”

“அது நான் போய் பேசிட்டு வந்துட்டு சொல்லாம்னு நினைச்சேன்!”

“சரி அந்த பையனோட அப்பா அம்மா எல்லாரும் பாரிஸ்ல தான் இருக்காளா?”

“இல்ல அவா எல்லாரும் இந்தியால சென்னைல இருக்கா.”

“அப்புறம் எதுக்காக அவா பேரன்ட்ஸோட பேச நீ பாரிஸ் போகணும்?
உன் வீட்டிலிருந்த படியே வீடியோ கால்ல பேசிருக்கலாமே!”

என்று மிருதுளா கேட்டதும் நவீன்

“அய்யோ மிருது”

என்று தலையில் தன் கையால் தட்டிக்கொண்டான். அதைப் பார்த்த மிருதுளா

“இஸ்”

என புருவத்தை உயர்த்தி நாக்கை கடித்துக் கொண்டாள்.

“அப்படி வா வழிக்கு என் மிருது அம்மா.
அப்படீன்னா நான் பாரிஸுக்கு போறதும், விஷால சந்திக்க இருந்ததும், அவன் பேரன்ட்ஸோட பேச போறதும் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு.
ஆனாலும் தெரியாத மாதிரியே கேட்கறதா நெனச்சுண்டு பேசற பெரிய புத்திசாலி அம்மாவே…
ப்ளூகிட்டேந்து கறந்த விஷயங்களா?”

“ஆமாம்.
நேத்து நீ மொபைல கால் எடுக்கலன்னதும் வீட்டுக்கு கால் பண்ணினோம்.
ப்ளூ தான் இந்த விவரங்கள் எல்லாம் சொல்லித்து.
அதெல்லாம் விடு.
சரி அங்க போன வந்த.
உன்னப் பத்தின விவரம் ஏதும் தெரியாம, உன்ன உன் மொபைல்ல கான்டாக்ட்டும் பண்ண முடியாம நாங்க ரெண்டு பேரும் எப்படி தவிச்சுப் போனோம் தெரியுமா!”

“தெரியும்மா.
அதுதான் ஃபோனை ஆன் பண்ணினதும் உனக்கு தானே முதல்ல கால் பண்ணினேன்.
அப்புறம் என்னவாம்.
சரி சரி ஆம் வெரி வெரி சாரி ஃபார் தட்.”

“ம்…ஆமாம் ஆமாம்.
இந்த ரெண்டெழுத்தை சொல்லிட்டா நாங்க பட்ட மனக்கஷ்டம் மறஞ்சுடுமா என்ன?”

“அம்மா அது அஞ்சு எழுத்து வார்த்தை”

“ம்…தமிழ்ல ரெண்டு எழுத்து தான்.”

“இப்போ அம்மாவுக்கும் பொண்ணுக்கும் இதுதான் ரொம்ப முக்கியமான டாப்பிக் டு பீ டிஸ்கஸ்டு பாருங்கோ.
இங்க குடு மிருது.
நான் அவகூட பேசட்டும்.
சரி சக்தி கண்ணா பாரீஸ் போனயே விஷாலோட பேரன்ட்ஸ்ட்ட பேசினியே அவா எல்லாரும் எப்படிப்பட்டவாளா உன் மனசுக்குப் படறா?
நல்ல மனுஷா தானே!”

“ஆங் நானும் அதைப்பத்தி தான் உன்கிட்ட பேசணும்னு நெனச்சேன் சக்தி”

“அப்புறம் என்னத்துக்கு ரெண்டு வார்த்தை அஞ்சு வார்த்தைனுட்டு வார்த்தை விளையாட்டு விளையாடிண்டிருந்தயாம்?”

“நான் அவகிட்ட நல்லா நறுக்கு நறுக்குனு கேட்கணும்னு இருந்தேன்.
ஆனா எல்லாத்தையும் அவளப் பார்த்ததும் மறந்துட்டேன்.
ஆமாம் நீ கால் பண்ண ஏன்டி இவ்வளவு நேரமாச்சு?
நான் உன்கிட்டேந்து எங்க டைம் மூணு மணிக்கெல்லாம் கால் ஐ எதிர்ப்பார்த்தேன்.
தெரியுமா?”

“அம்மா நான் வீட்டுக்கு வந்ததே லேட்டு.
அப்பாட்ட பேசிட்டு நல்லா தூங்கிட்டேன்.
ஒரு மணிக்கு தான் எழுந்துண்டேன்.
நல்ல பசி வேற.
ஸோ ப்ரஷ் பண்ணிட்டு ரெண்டு பிரெட்ட டோஸ்ட் பண்ணிண்டு ஒரு கப் காஃபி போட்டுண்டு வந்து உட்கார்ந்து அதை சாப்டுண்டே உனக்கு கால் பண்ணினேன்.”

“மறுபடியும் டாப்பிக் மாறிடுத்து.
மிருது நீ கொஞ்ச நேரம் அமைதியா இருக்கயா?
சக்தி அப்பா கேட்டதுக்கு நீ ஒண்ணுமே பதில் சொல்லலையே மா!”

“எதுப்பா?”

“அதுதான் நீ பாரீஸ் போனதப் பத்தியும்,
விஷாலோட பேரன்ட்ஸ்ட்ட பேசினதப் பத்தியும் அப்பா கேட்டேனே!”

“நான் தான் பாரீஸ் போகவேயில்லையேப்பா.
அப்பறம் எங்கேந்து விஷாலோட பேரன்ட்ஸ்ட்ட பேசறது?”

“என்னது நீ பாரீஸ் போகவே இல்லையா?

என்று நவீனும் மிருதுளாவும் ஒருமித்துக் கேட்டனர்.

“ம்…ஆமாம் நான் பாரீஸ் போகலை.
போகலைங்கறத விட போக முடியலைன்னு தான் சொல்லணும்”

“நாங்க நீ அங்க போனதால தான் வீட்டுக்கு லேட்டா வந்திருக்கன்னு… இல்ல நெச்சிண்டிருந்தோம்.
நீ என்னடான்னா பாரீஸ் போகவேயில்லங்கற!!!
ஒரே குழப்பமா இருக்கு சக்தி.
அப்போ விடியக்காலேல வர எங்கபோயிருந்த நீ?
என்னதான் நடந்தது?”

தொடர்வாள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s