காலை விடிந்து மணி ஏழானது நவீனும் மிருதுளாவும் இரவு முழுவதும் அவர்களின் மகள் சக்தியை எண்ணிக்கொண்டே வெகுநேரம் தூங்காமல் இருந்ததில் மணி ஏழானது கூட தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்தனர். சட்டென்று மிருதுளா எழுந்தாள். மணியைப் பார்த்தாள். கடிகாரம் ஏழரை என்றுக் காட்டியது. சக்திக்கு ஃபோன் செய்து பார்ப்போமா என்று நினைத்து மொபைலை எடுத்தவள் அருகில் உறங்கிக்கொண்டிருந்த நவீனைப் பார்த்தாள். பின் மெல்ல அந்த அறையிலிருந்து வெளியே வந்து ஹாலில் அமர்ந்து மொபைலையே பார்த்துக்கொண்டிருந்த அவளது மனம் ஒன்று நினைத்தது ஆனால் கைகள் சக்தியின் நம்பரை அழுத்திட துடித்தது. அவள் சற்று நிதானித்துக் கொண்டு மனம் சொல்வதைக் கேட்கலானாள்.
“இப்போ சக்திக்கு விடியற்காலை ரெண்டரைலேந்து மூணு மணிக்குள்ள இருக்கும்.
ஒரு வேளை அவ நைட்டு லேட்டா வந்துட்டு இப்ப தான் தூங்க போயிருந்தான்னா!!! அப்பறம்…
நான் தேவையில்லாம குழந்தைய எழுப்பி விட்டுருவேன்.
வேண்டாம் வேண்டாம்! அவ எழுந்துரிக்கட்டும்.
சரி வீட்டு நம்பருக்கு கால் பண்ணினா என்ன?
இல்ல இல்ல அந்த ப்ளூவும் சார்ஜிங் ஸ்டேஷன்ல இருக்கும் அப்புறம் சக்தி தான் எழுந்து வரவேண்டியிருக்கும்.
அப்படி அவ வீட்டுக்கு வந்திருந்தான்னா நிச்சயம் எங்க கால்ஸை பாத்திருப்பா…
அப்படி பார்த்திருந்தான்னா உடனே எங்களுக்கு மெஸேஜாவது பண்ணிருப்பாளே!
ஏன் பண்ணல?
அப்படீன்னா அவ இன்னும் வீட்டுக்கு வரலைன்னு தானே அர்த்தம்!
கால் பண்ணிடலாமா? ம்…சரி பண்ணித்தான் பார்ப்போம்.
இதுக்கு மேல என்னால இந்த டென்ஷன தாங்க முடியாது.
ஆனா நான் கால் பண்ணி அவ மொபைல் மறுபடியும் சுவிட்ச்டு ஆஃப்ன்னு வந்துதுன்னா?”
என்று தனக்குள் ஒரு வினாவிடை அமர்வு நடத்திக்கொண்டிருக்கும் போது அவளின் தோளைப் பிடித்து உலுக்கி
“ஏய் மிருது!
காலையில மொபைலை கையில வச்சுண்டு என்ன யோசனை?
மிருது கால் பண்ணினாளா?”
“ம்…ஆமாம் நவீன்.
அவள்ட்ட பேசிட்டு இப்ப தான் வச்சேன்”
“அப்படியா!
என்னை ஏன் எழுப்பலை?
அப்போ நான் உடனே அவளைக் கூப்பிட்டு பேசட்டும்.”
“ம்..இல்ல இல்ல.
இப்ப வேண்டாமே நவீன்.”
“ஏன் வேண்டாம்ங்கற?
அப்படீன்னா நான் டென்ஷனாகக் கூடாதுன்னுட்டு நீ சும்மா சொல்லறயா?”
“அய்யோ! இல்ல நவீன்.
அவ இப்ப தான் என்கூட பேசிட்டு தூங்க போயிருக்கா.
இப்போ நீங்க அவளுக்கு கால் பண்ணி அவள எழுப்பிவிட போறேங்களா?”
“ஓ!! சரி சரி சரி அதைச் சொல்ல வேண்டியது தானே!
ஏன் அவ ஃபோன் சுவிட்ச் ஆஃப் பண்ணிருந்தாளாம்?”
“அது…அது…அது வந்து…
ஆங் நாம சொல்லிண்டா மாதிரியே தான்.
அவ ஃபிரென்ட்ஸோட அவுட்டிங் போயிருக்கா அதுக்கு முன்னாடியே ஏதோ மீடிங்குன்னு…
ப்ளூ சொல்லித்தே அப்பவே ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணினாலாம்.
அப்புறம் மறுபடியும் சுட்விச் ஆன் பண்ண மறந்துட்டாளாம்.
ரொம்ப சாரின்னு சொன்னா”
“அப்பாடா!
இப்போ தான் உயிரே திரும்பி வந்தா மாதிரி இருக்கு மிருது.”
“ம்..ஆமாம் ஆமாம் நவீ.
உங்களுக்கு திரும்பி வந்துடுத்து…”
“ம்…என்ன சொன்ன?”
“ஆங் அது ஒண்ணுமில்ல நவீ.
நீங்க ப்ரெஷ் பண்ணிட்டு வாங்கே நான் காபி போட்டு தர்றேன்.
போங்கோ”
“ஓகே டன். இதோ வந்துடறேன்”
என்று நவீன் பாத்ரூமுக்குள் சென்றதும் மிருதுளாவின் கண்கள் கலங்கின அவள் அடுப்படியிலிருந்தே அவர்கள் வீட்டு பூஜை அறையைப் பார்த்து
“அம்மா தாயே!
எங்க பொண்ணு பத்திரமா இருக்கணுமா.
மத்தியானத்துக்காள்ள அவ எங்களுக்கு கால் பண்ணும்மா.
ஏன்னா அதுக்கு மேல என்னால நவீனை சமாளிக்க முடியாதுமா.”
“என்ன மிருது காபி ரெடியா?”
“ம்…இதோ.
நீங்க உங்க பேப்பரை படிச்சிண்டிருங்கோ இதோ கொண்டு வர்றேன்.”
என்று நவீன் கண்டுப்பிடித்து விட கூடாதே என்று கண்களைத் துடைத்துக் கொண்டு முகத்தை அலம்பிக் கொண்டு காபியை எடுத்துச் சென்று நவீனிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்ட நவீன் அவளிடம்
“என்ன மிருது?
எனக்கு மட்டும் கொண்டு வந்திருக்க!
எங்க உன் காபி?”
“ம்…நான் நீங்க எழுந்துக்கறதுக்கு முன்னாடியே குடிச்சுட்டேன்.
நீங்க குடிங்கோ.
ஆறிடப் போறது.”
என்று மனதிற்குள் படக் படகென்று அவளின் இதயம் துடித்தது அவளுக்கு கேட்டது.
“ஏன் நீ ஒரு மாதிரி இருக்க மிருது?”
“ஒண்ணுமில்ல நவீ.
நீங்க போய் குளிச்சிட்டு வாங்கோ.
நான் ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு வைக்கறேன்.”
“ஆங்…அப்போ வாக்கிங்?”
“இன்னைக்கு நாம லேட்டா எழுந்துண்டோம் ஸோ நோ வாக்கிங்.”
“சரி இன்னைக்கு நம்ம ஆடிட்டர் பதினோரு மணிக்கு வர்றதா சொல்லியிருந்தார இல்ல…”
“ஆங் ஆமாம்.
அதுக்கென்ன இப்போ?”
“இல்ல நாம சக்திக்கு அப்போ காலையில ஆறரை மணி ஆகிருக்குமே!
அவ எழுந்துக்கற டைம் தானே.
அவகிட்டே ஃபோன்ல பேசிட்டா கொஞ்சம் மனசு லேசாகிடும்.
அதுதான் ஆடிட்டர் மீட்டிங்க ஒரு ஹாஃப் அன் அவர் தள்ளிப்போடட்டுமா?”
“ஏன் நவீ இப்படி இருக்கேங்கள்.
நம்ம ஆடிட்டர் எவ்வளவு பிஸியானவர்ன்னு உங்களுக்கே நன்னா தெரியும்.
அவரோட இந்த மீட்டிங்கை போன மாசம் டிசைட் பண்ணி கன்பர்மேஷனும் வாங்கிண்டோம்.
இப்போ போயி மாத்திக்க சொன்னா!
அப்பறம் மறுபடியும் அவருக்காக நாம வெயிட் பண்ண வேண்டி வரும்.
பேசாம மீட்டிங்கை அட்டென்ட் பண்ணுங்கோப்பா”
“என்னது பண்ணுங்கோ வா?
நீயும் தானே வரனும்.
உனக்கு தான் அக்கௌன்ட்ஸ் டீட்டேயில்ஸ் எல்லாம் தெரியும்.”
“ஆங்…ஆங்.
நான் எல்லாத்தையும் நம்ம அஃபீஸ் ல என்னோட செக்கரெட்ரி ரேணுகிட்ட ஃபோன்ல சொல்லிடறேன்.
அவ மீட்டிங்க்கு வேண்டிய ரெக்கார்ட்ஸ் எல்லாத்தையும் ரெடி பண்ணி வெப்பா.”
“மிருது நீ ஏன் வர மாட்டேங்கற?
நம்ம சக்தி நல்லா இருக்கா இல்லையா?”
“நவீ நம்ம பொண்ணுக்கு ஒண்ணுமே ஆகல.
அதுக்காக நான் அப்படி சொல்லலை.
நைட்டு ஃபுல்லா தூங்காததால தல வலிக்கறது அதுதான்.
வேற ஒண்ணுமில்ல.
அதுவுமில்லாம சக்தி லேட்டா தான் எழுந்துப்பேன்னு என்கிட்ட ஃபோன்ல சொன்னா.
நீங்க அவள நம்ம டைம் பதினோரு மணிக்கெல்லாம் கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணாதீங்கோ.”
“ம்…ம்…சரி.
நான் போய் குளிச்சுட்டு நம்ம ஆஃபீஸுக்கு புறப்படறேன்.”
நவீன் குளித்து வந்ததும் மிருதுளா அவனுக்கு டிபன் கொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு நவீன் ஆஃபீஸுக்கு சென்று வர காருக்குள் ஏறி காரை ஸ்டார்ட் செய்து அவர்கள் தெரு முனையைத் தாண்டியதும் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை வாசல் கதைவைத் தாழிட்டு வீட்டினுள் வந்ததும் ஹாலில் உட்கார்ந்த மிருதுளா ஓவென்று அழுதுக்கொண்டே சக்தி மொபைலுக்கு கால் செய்தாள் மீண்டும் சுவிட்ச்டு ஆஃப் என்றே வந்தது. உடனே வாய்விட்டு
“அடியே சக்தி எங்கடி போயிருக்க?
கால் ல ஏன்டி எடுக்க மாட்டேங்கற?”
என்று கூறிக்கொண்டே வீட்டு நம்பருக்கு கால் செய்தாள். ரொம்ப நேரம் கால் சென்றுக் கொண்டே இருந்தது. ஆனால் ப்ளூவும் கால் ஐ எடுக்கவில்லை. பரிதவித்துக் கொண்டிருந்த மிருதுளாவுக்கு கடவுளை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை. நேராக பூஜை அறையில் அமர்ந்துக்கொண்டு வேண்டலானாள்.
ஒரு இரண்டு மணி நேரமானதும் மிருதுளாவின் மொபைலுக்கு ஒரு கால் வந்தது. தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்த ஃபோனின் சப்தம் நின்றது. அவள் சக்தியையே எண்ணிக்கொண்டு அப்படியே உறைந்து அமர்ந்திருந்ததால் ஃபோனின் வந்த சப்தமும் அது நின்று போனதும் தெரியாதிருந்தாள்.
இன்னுமொரு பதினைந்து நிமிடங்கள் கழிந்ததும் மீண்டும் மிருதுளாவின் மொபைல் ஒலித்தது. அந்த சப்தம் எங்கோ தூரத்தில் ஒலிப்பது போல உணர்ந்த மிருதுளா சுயநினைவுக்கு வந்ததும் ஓடிப்போய் தனது மொபைலை எடுத்து யார் என்ன என்று கூட பார்க்காமல்
“ஹலோ! ஹலோ!”
“ஹலோ மிருது!
ஏன் இவ்வளவு பதட்டமா பேசற?
என்ன ஆச்சு?”
“ஓ! நீங்களா.
சொல்லுங்கோ நவீ.
ஒண்ணுமில்ல தலவலிக்கு மாத்திரை போட்டுண்டு தூங்கப் படுத்தேன்…
ரொம்ப நேரமா கால் பண்ணறேங்களோ?”
“இல்லையே இப்ப தான் பண்ணினேன்.
சரி ஒரு முக்கியமான விஷயம் பத்தி சொல்லத்தான் கால் பண்ணினேன்.
நம்ம சக்தி எனக்கு கால் பண்ணினா.”
“என்னது நம்ம சக்தி உங்களுக்கு கால் பண்ணினாளா?
என்ன சொல்லறேங்கள் நவீ?”
“ஆமாம் மிருது.
நான் மீட்டிங்குக்கு போயிண்டிருந்தப்போ அவகிட்டேந்து எனக்கு கால் வந்துது.
அவ உனக்கு தான் ஃபர்ஸ்ட் கால் பண்ணினாளாம்.
ஆனா நீ எடுக்காததால எனக்கு பண்ணினா.
அவ ரொம்ப டையர்டா இருக்காளாம்.
ரெஸ்ட் எடுத்துட்டு அவளோட ஈவினிங் டைம்ல நமக்கு மறுபடியும் கால் பண்ணறதா சொன்னா.
நானும் சரின்னுட்டேன்.”
“அச்சோ நவீ.
அவ எங்க போயிருந்தாளாம்?
எப்ப ஆத்துக்கு வந்தாளாம்?
மொபைல் ஏன் சுவிட்ச் ஆஃபா இருந்துதாம்?”
“ம்…நீ தான் காலையிலேயே அவகிட்ட பேசினேன்னு சொன்னயே!
அப்பவே இதெல்லாம் நீ அவகிட்ட கேட்கலையா மிருது?”
“ஷ்…நவீ!!
அது வந்து…”
“ஏன் மிருது? ஏன்?
இப்படி பொய்க்கு மேல பொய்யா சொல்ல முயற்சிக்கற?
அப்படீன்னா நீ அவளோட காலையில பேசல தானே!
எங்கடா நான் மறுபடியும் ஹார்ட்ட பிடிச்சுண்டு ஹாஸ்பிடல்ல போய் படுத்துப்பேனோன்னு தானே நீ என்கிட்டேந்து மறச்ச?”
“அய்யோ நவீ.
ஐ ஆம் எக்ட்ரீமிலி சாரி.
மொதல்ல நம்ம சக்தி உங்களுக்கு கால் பண்ணினது உண்மையா?
இல்ல நீங்களும் எனக்காக பொய் சொல்லறேங்களா?
ப்ளீஸ் சொல்லுங்கோ நவீ.
காலையிலேந்து தவிச்சுண்டிருக்கேன்.”
“ம்…ம்…எனக்கு அப்பவே நீ பொய் சொல்லறன்னு தோனித்து மிருது.
இல்லாட்டி ஆடிட் மீட்டிங்குக்கெல்லாம் நீ வராம இருந்ததே இல்லையே!”
“அச்சோ அச்சோ நவீ… ப்ளீஸ் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோளேன்.”
“ஆமாம் சக்தி தான் ஃபோன் பண்ணினா.
நான் பொய் சொல்லலை.
அவ ஏதோ தூக்க கலக்கத்துல பேசினா.
அவளோட ஆஃபீஸ் மீட்டிங் போது மொபைல சுவிட்ச் ஆஃப் பண்ணினாளாம்.
அதுக்கப்புறம் அதை மறந்துட்டாளாம்.
இப்போ தான் ஞாபகம் வந்துதாம்.
ஃபோனை எடுத்துப் பார்த்தாளாம் நம்மகிட்டேந்து நிறைய தடவ கால்ஸ் வந்ததால என்னமோ ஏதோன்னு கால் செய்தாளாம்.
இதை எல்லாம் உன்கிட்டயும் சொல்ல சொல்லி சொன்னா.
இல்லாட்டி நீ டென்ஷனாகிடுவேன்னும் சொன்னா.
அவ்வளவு தான் அதுக்கப்புறம் தூக்கம் வர்றதுன்னும், தூங்க போறதாவும், சாயந்தரமா பேசறேன்னும் சொல்லி ஃபோன வச்சுட்டா.
இது தான் நானும் சக்தியுமா பேசிண்டது.
ஸோ ஷு ஈஸ் ஆல்ரைட்.
அவகூட பேசினதுக்கப்பறமா தான் நிம்மதியானேன்.
இனி மீட்டிங்கை நல்லபடியா முடிச்சுட்டு ஆத்துக்கு வரேன்.
நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு மிருது.
நான் நம்ம ரெண்டு பேருக்கும் லஞ்ச் வாங்கிண்டு வரேன்.
சரியா?”
“ம்…சரி சரி.
தாங்க்ஸ் பா எனக்கு உடனே தகவல் சொன்னதுக்கு.
இல்ல நான் சமச்சுடறேன்”
“ம்..ஹூம்..
நீ ரொம்ப டென்ஷனா இருக்க.
அதுனால இன்னைக்கு நாம ஹோட்டலேந்து வாங்கியே சாப்பிடுவோம்.
பை பை ஆடிட்டர் இஸ் வெயிட்டிங்.”
“ம்…பை நவீ”
என்று மிருதுளா ஃபோனை வைத்ததும் சக்திக்குக் கால் செய்தாள். ரிங் போனது ஆனால் சக்தி ஃபோனை அட்டென்ட் செய்யவில்லை. உடனே மிருதுளா தன் மனதிற்குள்
“மனுஷால இப்படி பரிதவிக்க விட்டுட்டு இவ அப்படி எங்கதான் போனான்னு கேட்கணும்னு ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டேங்கறாளே!!
ம்…சாயந்தரம் ஃபோன் பண்ணட்டும் அப்போ வச்சுக்கறேன் அவளுக்கு.
ஆமாம் அந்த ப்ளூ ஏன் கால் ஐ எடுக்கல?
அது எங்க போச்சு?
இந்த பசங்கள வெளிநாட்டுல படிக்கவும் வேலைக்கும் அனுப்பிட்டு பெத்தவா படற பாடு இருக்கே ஆண்டவா!!!
அப்பா காலையிலேந்து பட்ட பதட்டத்துக்கு ஒரு ரிலீஃப் கிடைச்சிருக்கு.
ஆனாலும் அவ கிட்ட பேசறவரைக்கும் என்னால ஃப்ரீ ஆக முடியாது.
எனிவேஸ் கடவுளே எங்க மகள் பத்திரமாகத்தான் இருக்கான்னு எங்களுக்கு அவ மூலமாவே தகவல் தெரிவித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள்.
நான் வேண்டிண்ட படியே எல்லா நிறைவேத்திடறேன்.
அப்பாடா”
என்று அமைதியாக கொஞ்ச நேரம் படுத்துக்கொண்ட மிருதுளா. ஆழ்ந்து தூங்கலானாள்.
கடத்தப்பட்ட சக்தியிடமிருந்து ஃபோன் வந்ததாக நவீன் சொல்வது உண்மையா? அப்படியே அது உண்மையாக இருந்தாலும் அவள் எங்கிருந்து கால் செய்திருப்பாள்?
அவள் எப்படி கடத்தப்பட்டவர்களிடமிருந்து தப்பித்திருப்பாள்?
அதைப் பற்றி எல்லாம் நவீனிடம் ஏன் அவள் ஒன்றுமே கூறவில்லை?
இல்லை அவள் கூறி நவீன் மிருதுளாவிடம் சொல்லாமல் மறைத்தானா?
என பல கேள்விகளுக்கான தெளிவான பதில்களை நாமும் வரும் நாட்களில் தேடுவோம்.
தொடர்வாள்…