அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்த சக்தியை அழைத்தான் விஷால் ஆனால் அவள் அசையவில்லை. அவளின் வலது தோள் மீது கை வைத்து
“தீ…தீ…தீ…. என்ன ஆச்சு?”
என்று உலுக்கினான். சட்டென சுயநினைவுக்கு வந்த சக்தி விஷாலை நோக்கி
“ஓ தட்ஸ் க்ரேட் வி. கங்க்ராட்ஸ்.”
என்று கூறிக்கொண்டே அவள் கண்களிலிருந்து அருவி போல் வழிய இருந்த கண்ணீரை மெல்ல கண்களுக்குள்ளேயே அனுப்ப வேண்டி டேபிளில் இருந்த டிஷு ஒன்றை எடுத்து விஷாலுக்கு தெரிந்துவிடக் கூடாது என்றெண்ணி முகத்தில் புன்னகையுடன் கண்களை மெல்ல மேல் நோக்கி டிஷுவால் தூசித்தட்டுவது போல கண்களைத் தட்டினாள். அதைப் பார்த்த விஷால்
“ஹேய் தீ…நீ அழறயா?”
“ச்ச …ச்ச நோ நோ வி. ஐ ஃபீல் ஹாப்பி ஃபார் யூ”
“ம்…நம்பிட்டேன் நம்பிட்டேன். அசடு வழியற தீ. என் மேல இவ்வளவு அசையை வச்சிருக்க தானே அப்புறம் ஏன் அன்னைக்கு நான் ப்ரப்போஸ் பண்ணும் போது சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்ட? சரி போனியே..அதுக்கப்புறம் என்னை கான்ட்டாக்ட் பண்ணனும்னு ஏன் உனக்கு தோனலை?”
“விடு வி. இனி அதைப் பத்தி எல்லாம் பேசி என்ன ஆக போறது. ஜஸ்ட் ஃபர்கெட் இட்.”
“ஏன் சம்பந்தப் பட்ட நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“அதெல்லாம் விடு வி. உன் மனைவி யாரு? எப்படி இருக்கா? ஃபோட்டோ எதாவது வச்சிருந்தா காமியேன் ப்ளீஸ்.”
“எனக்கு… நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காம என் மனைவியை உனக்கு இன்ட்ரோ பண்ணி வைக்க மாட்டேன். அதனால ஒழுங்கா பதில் சொல்லு. அவளை உனக்குக் காட்டறேன். உனக்கும் அவ ரொம்ப பரிட்சயமானவ தான்.”
“அப்படியா யாருப்பா அது? நம்ம கூட காலேஜ்ல படிச்சவளா? இல்லை….”
“ஹலோ மேடம் மொதல்ல என்னோட கேள்விகளுக்கான பதில்…”
“ஓகே ஓகே…அன்னைக்கு நீ உன் காதலை என்கிட்ட சொன்னதும் என் மொபைலுக்கு ஒரு கால் வந்தது.”
“ஆமாம் ஆமாம் அதை அட்டெண்ட் பண்ணிட்டு வரதா சொல்லிட்டு போனவ தானே நீ!”
“ஆமாம் வி அட்டெண்ட் பண்ணிட்டு வந்திடலாம்னு தான் வெளியே போனேன் ஆனா அந்த கால் நம்மளை இப்படி பிரிச்சு வைக்கும்னு நான் எதிர்பார்க்கலை.”
“அப்படி நம்மளை பிரிக்கும் அளவுக்கு அந்த கால் யார்கிட்டேந்து வந்தது?”
“ப்ரொபசர் சேவியர் கிட்டேந்து தான் அந்த கால் வந்தது”
“ப்ரொபசர் சேவியரா!! அவர் நாம காலேஜ் முடிச்ச ஒரு வாரத்துல சூசைட் பண்ணி இறந்துட்டதா கேள்விப்பட்டேனே. நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்துட்டு அவர் இறந்துட்டாரேன்னு நான் நினைச்சேன். அவர் எதுக்கு உன்னை கால் பண்ணினார்? ஆமாம் ஆமாம் நீ அவரோட பெட் அன்ட் பெஸ்ட் ஸ்டூடண்ட் ஆச்சே!!! அவருக்காகவா அப்படி ஓடின?”
“அவர் அன்னைக்கு எனக்கு கால் பண்ணும் போது ரொம்ப பதட்டமா பேசினார். உடனே என்னைப் பார்த்து முக்கியமானது ஒன்னு என்கிட்ட தரணும்னு சொல்லி நான் எங்கிருந்தாலும் உடனே கிளம்பி அவர் இருக்குற இடத்துக்கு வரச்சொன்னார்.”
“சரி அதை நீ எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே! நாங்களும் வந்திருப்போமே!”
“இல்ல வி அவர் என்னை மட்டும் தனியா வரச்சொன்னார். அதுவும் உடனே…அவர் ஏதோ ஆபத்தில் சிக்கியிருக்கார்னு எனக்கு தோனித்து. அதுவுமில்லாம நானும் கொஞ்சம் பதற்றமானேன். உன்கிட்ட சொல்ல முடியலையேன்னு கண்ணு கலங்கித்து….சரி போயிட்டு வந்து சொல்லிக்கலாம்னு அங்க வந்த டாக்ஸியை பிடித்து ப்ரொபசரைப் பார்க்க புறப்பட்டுப் போயிட்டேன். “
“சரி அவர் உன்னை எங்க வரச்சொன்னார்? ஏன் வரச்சொன்னார்?”
“அவர் கால் பண்ணின கொஞ்ச நேரத்துல எல்லாம் வேறொரு நம்பர்லேந்து நான் எங்க வரணும்னு லொக்கேஷன் ஷேர் செய்தார்.”
“ஏன் அவர் நம்பருக்கு என்ன ஆச்சு? ஏன் அவர் வேறொரு நம்பர்லேந்து லொக்கேஷனை ஷேர் பண்ணனும்?”
“அந்த மெஸேஜைப் பார்த்ததும் தான் அவர் ஏதோ பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கார்னு எனக்கு தெரிய வந்தது.”
“அப்படி என்ன மெஸேஜ் அது?”
“அதுல அவர் மிகவும் ஆபத்தில் சிக்கியிருக்கிறார்னும் அதிலிருந்து தப்பி ஓடும் போது அவருடைய மொபைலை எங்கயோ தவறவிட்டுட்டார்னும் எழுதியிருந்தது.”
“அய்யயோ!! சரி அவர் ஷேர் பண்ணின லொக்கேஷனுக்கு போனயா?”
“ம் போனேன். அங்க எந்த பில்டிங் எதுவுமே இருக்கலை. ஒரே இருட்டா இருந்தது. சுத்திப் பார்த்தேன். அப்போ அந்த டாக்ஸி டிரைவர் பணம் கேட்டு தொந்தரவு செய்யவே நானும் வேகமா பணத்தை எடுத்து அவன் கையில கொடுத்தேன்… அவன் அதை வாங்கிண்டு என்னைப் பார்த்து …”இங்க எதுக்கு வந்திருக்கீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமானு” கேட்டான். அதுக்கு நான் அவனைப் பார்த்து… உன் வேலையைப் பார்னு சொன்னேன். அவன் என்னை முறைத்து விட்டு ஏதேதோ திட்டிட்டு அங்கிருந்து வண்டியை ஸ்டார்ட் பண்ணி எனக்கு முன்னாடிலேந்து நகந்தான் அவ்வளவு தான் நான் அதிர்ச்சியில் அப்படியே ஷாக் ஆகி நின்னுட்டேன்.”
“ஏன் தீ? என்ன ஆச்சு?”
“எனக்கு முன்னாடி இருந்தது ஒரு மயானம்.”
“என்னது? அப்பவாவது எனக்கு ஒரு கால் பண்ணிருக்கலாம் இல்ல.”
“உனக்கு கால் பண்ணி விவரத்தை சொல்லி உன்னை அங்கே வரச்சொல்லலாம்னு மொபைலைத் தேடினேன். அப்போ நான் இருந்த பதற்றத்துல என் மொபைலை அந்த கார்லயே விட்டது எனக்கு தெரிய வந்தது.. அவனும் அதைக் கொண்டு போயிட்டான்”
“அச்சச்சோ!!! சரி அப்புறம் நீ என்ன பண்ணின?”
“மெதுவா அங்கேயே சுத்தி சுத்தி ஏதாவது பப்ளிக் டெலிபோன் இருக்கானு பார்த்தேன். அப்போ ஒரு பெரிய மரத்துக்குப் பின்னாடிலேந்து தீ …தீ…தீ…னு என்னை யாரோ கூப்பிடறா மாதிரி இருந்தது. நானும் மெதுவா அந்த குரல் வந்த டைரெக்ஷனில் போனேன். அந்த குரல் வந்த மரத்துக்குப் பின்னாடி சாய்ந்தபடி ப்ரொபசர் சேவியர் குத்துயிரும் கொலையுயிருமா கிடந்தார். அவரை அப்படி பார்த்ததும் என்னோட பதற்றம் இன்னும் ஜாஸ்தியாச்சு…ஹெல்ப் ஹெல்ப்னு கத்த ஆரம்பித்தேன். அவர் என்னை அமைதியா இருக்கும் படி சொன்னார். நானும் சற்று நிதானமாகி ஹாஸ்பிடல் போகலாம்னு அவரை தூக்க முயற்சித்தேன்…ஆனா என்னால முடியலை. அவருக்கு என்ன நடந்ததுனு கேட்டேன்?”
“ம்…என்ன ஆச்சாம்? ம்…ம்…அவர் எப்பவும் போல சும்மா இருக்காம எங்கயாவது போராட்டம் பண்ணிருப்பார் இல்லாட்டி யாரையாவது எதிர்த்துக் கேட்டிருப்பார்…அதுதானே!!”
“இல்ல வி. அவர் ஒரு ரோபோ தயாரிச்சுட்டு இருந்தார் அது உனக்கு தெரியுமா?”
“ம்…ரோபோ வா? இல்லை எனக்குத் தெரியாதே? உனக்குத் தெரியுமா?”
“ம்…எனக்கு தெரியும் ஆனா அதை அவர் என்கிட்டேயும் பிஎச்டி ஸ்டூடண்ட் பீட்டர் கிட்டேயும் தான் சொல்லியிருந்தார். எனக்கு இந்த ரோபோவைப் பத்தி தெரியும்ங்கற விஷயம் பீட்டருக்குத் தெரியாது. ஆனா பீட்டருக்கு தெரியும்ங்கறது எனக்குத் தெரியும். ஏன்னா ப்ரொபசர் என்கிட்ட சொல்லிருக்கார். நாங்க ரெண்டே பேரு தான் அதைப் பார்த்தவர்கள். அதை அப்படியே மனிதன் போலவே மாற்றுவது தான் அவரோட கோல் ஆ இருந்தது. அதுக்காக ரொம்ப பாடுப்பட்டார். அதற்கான பேடெண்ட் வாங்க இருக்கும் நேரத்தில் அந்த பீட்டர் ஏதேதோ செய்து யார்யாரையோ வைத்து அது அவனுடையது என்றும் அதை ப்ரொபசர் திருடிவிட்டார் என்றும் எப்படியோ கதையை மாற்றிவிட்டது ப்ரொபசருக்கு அன்னைக்கு ஈவினிங் தெரிய வர உடனே அவர் தனது ரோபோவை ஒரு பத்திரமான இடத்தில் வைத்துவிட்டு தலைமறைவாக திட்டமிட்டிருக்கார்.”
“ஏன் ப்ரொபசர் சேவியர் ஒரு ஸ்டூடண்டுக்கு பயந்து தலைமறைவாக வேண்டும்?”
“ஏன்னா அந்த ஸ்டூடண்ட் இந்த நாட்டின் பெரிய அரசியல்வாதியோட புள்ளையாம்.”
“போச்சுடா எந்த நாட்டுக்கு போனாலும் இவங்க தொல்லை விடாது போல. சரி அதுதான் அவர் அந்த ரோபோவை ஒளிச்சு வச்சுட்டாரே அப்புறம் எதுக்கு உன்னை இந்த வம்புக்குள்ள மாட்டி விடப் பார்த்திருக்கார்?”
“மாட்டி விடப் பார்க்கலை அவரோட பொக்கிஷத்தை என்னிடம் ஒப்படைக்க தான் வரச்சொல்லியிருக்கார். ஏன்னா அந்த அரசியல்வாதிகள் அவரை கொலை பண்ணற அளவுக்கு போவாங்கனு அவர் நினைக்கலையாம். அதுனால அவர்கள் கைக்கு அது கிடைத்துவிடக் கூடாதுன்னு நினைச்சு அதை வைத்திருந்த இடத்தை என்னிடம் சொல்லி என்னை எடுத்துக்கச் சொன்னார். அதுல ஏதோ இருக்குன்னும் சொல்ல வந்தார் ஆனா அதுக்குள்ள இறந்துட்டார்.”
“உனக்கு லொக்கேஷனை ஷேர் பண்ணறதுக்கு…அந்த மயானத்துல அவருக்கு ஃபோன் குடுத்தது யாராம்?”
“அந்த வழியில் போன யாராவதா இருக்கலாம். அதை நான் கேட்கவும் இல்லை அதை பத்தி அவர் எனக்கு எதுவும் சொல்லவுமில்லை.”
“சரி அதுக்கப்புறம் நீ அங்கிருந்து எப்படி சிட்டிக்கு திரும்பி வந்த?”
“ஏதாவது வண்டிக் கிடைக்குதானு கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துப் பார்த்தேன் ஒன்னுமே அந்த வழியா வரலை. சுத்திலும் இருட்டா இருந்ததா அதுனால பயத்துல வேகவேகமா நடக்க ஆரம்பித்தேன். ஒரு ஆறு கிலோமீட்டர் நடந்திருப்பேன் அதுக்குள்ள தூரத்துல ஒரு டாக்ஸி தெரிஞ்சுது. அதை நிப்பாட்டி அதில் ஏறி ரூமுக்கு வந்தேன்.”
“சரி அப்பவாவது எனக்கு கால் பண்ணிருக்கலாமில்ல?”
“எப்படி எனக்கு எந்த நம்பரும் ஞாபகத்தில் இல்லையே!! சரி பக்கத்துல தானே ரோஸ் இருக்கா…அவகிட்ட போய் கேட்கலாம்னு நினைச்சு அவ ரூம் வாசல்வரைக்கும் போனேன். அப்புறம் அவளை ஏன் தொந்தரவு செய்யணும்! காலையில கேட்டுக்கலாம்னு நினைச்சு என் ரூமுக்குப் போய் நல்லா தூங்கிட்டேன்.
மறுநாள் காலை ஒரு பத்து மணிக்கு தான் எழுந்தேன். எழுந்ததும் நேரா ரோஸ் ரூமுக்கு தான் போனேன். ஆனா அவங்க எல்லாருமே விடியற் காலையில் கிளம்பி ஏர்போர்ட் போயிட்டாங்கனு தெரிய வந்தது. இனி அவங்களை தொடர்பு கொள்ளனும்னா இருபது மணி நேரம் காத்திருக்கணும்னு நினைச்சு உன்னைத் தேடி உன் ரூமுக்கு வரதுக்கு புறப்பட்டுட்டு இருந்தேன். அப்போ தான் என் ரூமுக்கு ஒரு கால் வந்தது. அதை அட்டெண்ட் செய்ததும் மறுபடியும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துப் போய் உட்காந்துட்டேன்.”
தொடர்வாள்…