அத்தியாயம் 58: ஒன்றெனக் கலந்தன

மதிநாகசுரனைத் தவிர மற்ற அசுரர்கள் அனைவரும் வட்ஸாவிலிருந்து வெளியேறியதும் சூரியனும் மற்ற எழுவரும் எல்லையினுள் நுழைந்தனர். கதிரவனின் வெட்பம் மெல்ல மதிநாகசுரனைத் தாக்க ஆரம்பித்தது. அப்போது அவன் தன் ஆசானான காற்கோடையன் கற்றுக் கொடுத்த வித்தைகளில் ஒன்றான இருள் சூழ் மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தான். இந்த மந்திரம் தெரிந்தவர்கள் காற்கோடையன், மதிநாகசுரன் மற்றும் பாற்கடையான் ஆகிய மூவர் மட்டுமே. அதில் காற்கோடையன் வயதின் காரணமாக மறைந்தார், பாற்கடையான் தந்தை மீதிருந்த பாசத்தால் மறைந்தான். இவர்களுள் உயிரோடு எஞ்சியிருந்தது மதிநாகசுரன். அவன் இருள் சூழ் மந்திரமான

“இருள் வந்தருளி
குளிர் தந்தருளி
வெட்பத்தை கொன்று
கதிரவனை வென்று
இருப்பிடம் வந்தருளி
இனியவளே காட்சித் தந்தருளி!”

என்று மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்ததில் இருள் அரசி வந்தாள், காட்சியளித்தாள், வெட்பத்துடன் சண்டையிட்டாள், கதிரவனை வெல்ல போராடினாள். அவள் வென்றிட வேண்டியும் அதற்கான ஊந்துதல் சக்தியை அவளுக்கு வழங்கிடவும் மதிநாகசுரன் மீண்டும்

“இருளரசி நீயடி
இருளே உன் ராஜ்ஜியமடி
கொன்றிடுவாய் வெட்பத்தை
வென்றிடுவாய் கதிரவனை
பாம்பாக மாறிவிடு
நம் பகைவரை வீழ்த்திவிடு
வென்றிடுவோம் கதிரவனை
காத்திடுவோம் எம் இனத்தினை
இது பரமபத ஆட்டமடி
நீயே எனது சூழ்ச்சியின் இறுதிப் பகடையடி”

என்று உச்சரித்துக் கொண்டே இருந்ததில் இருள் அரசி சற்று பலம் பெற்று கதிரவனின் ஒளிக்கதிர்கள் வட்ஸாவினுள் நுழைய விடாமல் தடுத்து மதிநாகசுரனைக் காப்பாற்ற போராடினாள். மதிநாகசுரனும் தனது ஆசான் கற்றுக் கொடுத்த சில வித்தைகளை வைத்து கதிரவனையும் அவனுடன் வந்திருந்தவர்களையும் நோக்கித் தாக்கினான். ஆனால் அந்த பதக்கம் அவனையே திருப்பித் தாக்கியது. அவனை அவர்கள் அருகே நெருங்கக் கூட விடாது அவர்களைப் பாதுகாத்தது. அதனால் கோபமடைந்த மநிநாகசுரன் அவர்களுள் தான் கொல்லக்கூடியவர் யார் என்பதை அறிந்துக் கொண்டு அவர்களை இருளரசி ராஜ்ஜியத்தினுளிருந்தே தாக்கினான். அவனது ஆக்ரோஷமான தாக்குதலால் ரங்கணும் சுப்புவும் காயமடைந்தனர். அதைக் கண்ட ஞானானந்தம், கேசவன், முழுமதியாள் மற்றும் வேதாந்தகன் ஆகிய நால்வரும் துடித்துக் கொண்டிருந்த சிப்பாய்களருகே சென்று அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையளித்தனர்.
அடுத்து வீரராகவன் மீது தன் தாக்குதலைத் தொடங்கினான் மதிநாகசுரன். அதைக் கண்ட முழுமதியாள் தங்கள் மண்ணின் தளபதியாரைக் காப்பாற்ற எண்ணி அவளருகே இருந்த கேசவனிடம்

“அண்ணா நீங்கள் மூவரும் இந்த சிப்பாய்களைப் பார்த்துக் கொள்ளுங்கள் இதோ நான் வருகிறேன்”

“மதி எங்கு செல்கிறாய்? அனைத்தையும் சூரியதேவனும், வீரராகவரும் பார்த்துக் கொள்வார்கள். நீ எதற்கு செல்கிறாய்?”

“இந்த இருள் தானே அந்த அசுரனை பாதுக்கிறது! அதனால் தானே அவன் அதனுளிருந்தே நம்மவர்களைத் தாக்குகிறான்? அதை வென்று விட்டால் அசுரனும் அழிக்கப்படுவான் இல்லையா?”

“முழுமதியாள் என்ன சொல்கிறாய்? அது நம்மால் ஆகாது பெண்ணே! அது நமது சக்திக்கு அப்பாற்பட்டது. சொல்வதைக் கேள் மதி அனைத்தையும் சூரியதேவன் பார்த்துக் கொள்வார். நீ செல்ல வேண்டாம்”

“பின் எதற்காக இந்த பதக்கம் நம்மிடம் வந்துள்ளது? இது இருக்கும் வரை நம்மை எவராலும் வீழ்த்தவோ அழிக்கவோ முடியாது என்ற நம்பிக்கை நம்மிடம் இல்லையென்றால் பின் எவ்வாறு இந்த பதக்கம் வேலை செய்யும்?

“அதெல்லாம் சரி தான் மதி ஆனால் இந்த அசுரன் மற்றும் இந்த இருளை அழிக்க கதிரவனே போராடுகிறார்…அங்கே பார். இதில் நம்மால் என்ன செய்ய முடியும்?”

“கேசவன் அண்ணா அவளை போக விடுங்கள். அவள் சொல்வதும் சரிதானே! பின்பு எதற்காக குறிப்பாக நம் நால்வரிடம் இந்த பதக்கம் வந்து சேர்ந்துள்ளது? அவளைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம் நீங்களும் ஞானானந்தம் அண்ணாவும் இந்த சிப்பாய்களைப் பார்த்துக் கொள்ளுங்கள் நான் மதியுடன் சென்று வருகிறேன்”

“அதற்கில்லை வேதாந்தகா. இதெல்லாம் நாம் செய்யக்கூடியவை தானா? எனக்கென்னவோ அதை சூரியதேவனிடமே விட்டுவிடுவது நல்லது என்று தோன்றுகின்றது”

என்று கேசவன் கூறியும் அதைக் கேட்காதது போல் முன்னோக்கிச் சென்றனர் முழுமதியாளும், வேதாந்தகனும். அவர்கள் திடமான மனதுடன் நீர்த்துளிப் பதக்கத்தின் மீதிருந்த நம்பிக்கையுடன் இருளரசியை நோக்கி அடியெடுத்து வைத்தனர். ஆனால் அவர்களால் ஓர் அளவுக்கு மேல் இருளுடனும் மதிநாகசுரனுடனும் போராட முடியாது தவித்தனர். அதைப் பார்த்த ஞானானந்தமும் கேசவனும் சிப்பாய்களை விட்டு செல்லமுடியாது தவித்தனர். அப்போது ரங்கன் கேசவனின் கைகளைப்பிடித்து

“ஐயா நீங்களும் ஞானானந்தம் ஐயாவும் சென்று உங்கள் நண்பர்களுக்கு உதவுங்கள். நாங்கள் இருவரும் இங்கேயே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறோம். அப்படியே எங்களுக்கு ஏதாவது நேர்ந்தாலும் எங்கள் தலைவர் வீரசேகரன் இருக்கிறார் அவர் எங்கள் குடும்பத்தினரை நன்றாக கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. செல்லுங்கள், வெல்லுங்கள்”

என்று ரங்கன் கூறியதற்கு சுப்புவும் ஆம் என்று தலையசைக்க ஞானானந்தம் கேசவனிடம்

“வாருங்கள் கேசவன் அந்த அசுரனையும் இருளையும் அழித்துவிட்டு வருவோம்.”

என்று இருவரும கைக் கோர்த்துச் சென்று போராடிக்கொண்டிருந்த வேதாந்தகன் மற்றும் மழுமதியாளின் கரங்களோடுக் தங்கள் கரங்களையும் கேர்த்துக் கொண்டு

“இப்போது வாருங்கள் நாம் நால்வருமாக அவர்களைத் தாக்கிடுவோம்”

என்று கேசவன் சொன்னதும் நால்வரும் கைக்கோர்த்தப் படி நீர்த்துளிப் பதக்கச் சங்கிலியை கழுத்தில் முன் பக்கமாக இருளை நேராக போட்டுக் கொண்டு மதிநாகசுரனுக்கும் வீரராகவருக்கும் நடுவே சென்றனர். அவர்கள் நால்வரும் குறுக்கேச் சென்றதும் மதிநாகசுரன் பலமிழந்தான். அதை உணர்ந்ததும் அவனின் கோபம் அந்த பதக்கத்தின் மீதும் அதைச் சுமந்துக் கொண்டிருந்த முழுமதியாள் மீதும் திரும்பியது. அந்த பதக்கத்தை அழிக்க போராடினான். ஆனால் அந்த பதக்கம் தன் உரிமையாளர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அவர்களின் தூய்மையான உள்ளத்தின் பலத்தால் வீரியம் பெற்று இருளை மெல்ல அழித்துக் கொண்டு அவர்களை முன்நோக்கி அழைத்துச் சென்றது.

இருள் அரசி மெல்ல அழிய ஆரம்பித்ததும் கதிரவன் தன் ஒளிக்கதிர்களை எல்லா இடங்களிலும் பரவவிட்டார். இருளரசி பின்னே செல்ல செல்ல மதிநாகசுரனும் அவளுடனே பின் நோக்கிச் சென்றான். ஒரு கட்டத்தில் முழுமதியாள் கழுத்திலிருந்த அந்த பதக்கச் சங்கிலி இருளின் தாக்குதலால் கீழே விழுந்தது. அது தரையில் விழுந்ததும் இருளரசி மீண்டும் நால்வரையும் பிடிக்க முன்னோக்கி நகர்ந்தாள் அப்போது நால்வரும் அந்தப் பதக்கத்தை கீழிருந்து எடுத்து அதைப் பிடித்துக் கொண்டதில் அவர்களுக்குள் ஏதோ ஒரு மின்சாரம் பாய்ந்ததுப் போலிருக்க நால்வரும் அதே பலத்துடன் இருளை மீண்டும் அழிக்கத்துவங்கினர்.

மாயாபுரி வட்ஸா எல்லையிலிருந்து இருளரசியுடனும் மதிநாகசுரனுடனும் போராடியதில் வட்ஸா கஷி எல்லைவரை வந்தனர் கதிரவனும் ஐவர் கூட்டணியும். அதற்கு மேலும் அவர்களை விட்டுவைத்தால் அது எவருக்கு நல்லதல்ல என்றெண்ணிய கதிரவன் பரந்தாமனை மனதில் எண்ணிக்கொண்டு தனது முழு சக்தியையும் பிரயோகித்து அதை அப்படியே நால்வர் பிடித்துக் கொண்டிருந்த பதக்கத்தின் மீது செலுத்தினார். அதன் பின் ஒரு நொடியில் இருளரசியும் மதிநாகசுரனும் அழிந்து மண்ணோடு மண் ஆனார்கள். பின் சற்று நேரத்தில் அங்கு ஒரு அழகிய பெண் தோன்றி அனைவரையும் வணங்கி

“என்னை இந்த அசுரகுலத் தலைவனிடமிருந்தும் அவர்கள் இனத்திலிருந்தும் விடுவித்தமைக்கு மிக்க நன்றி.”

“அதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் யார்?”

“வீரராகவரே என் பெயர் இருளரசி. நான் எனக் குறிய நேரத்தில், எனக்கு விதிக்கப்பட்ட பூமியை குளிரவைக்கும் வேலையை செவ்வனே செய்து வந்துக் கொண்டிருந்தேன். இடையில் இந்த அசுரர்களிடம் சிக்கிக் கொண்டதில் என்னை இப்படி தீயவளாக மாற்றி இந்த பூமியை அவர்கள் மட்டும் ஆள்வதற்கான ஒன்றாக மாற்றி வந்தனர். நல்ல வேளை நீங்கள் வந்து என்னை இவர்களிடமிருந்து விடுவித்தீர்கள். சூரியதேவா என்னை மன்னியுங்கள்.”

“இருளரசி உன்னை விடுவிக்கவே யான் வந்தேன். அந்த பரந்தான் துணையோடும் இந்த நல்லுள்ளங்களின் உதவியோடும் உன்னை விடுவித்து விட்டேன். இனி நீ உனக்கு விதிக்கப்பட்ட வேலை மட்டும் செய்வாயாக. அவரவர் வேலைகளை அவரவர் செய்து வந்தாலே இந்த பூமி சிறப்பாக இயங்கிட ஏதுவாக இருக்கும். சென்று வா இருளரசி.”

“ஆகட்டும் சூரியதேவா. இந்த மதிநாகசுரன் மிகவும் கொடியவனாவான். பதவி மற்றும் அதிகார வெறிப்பிடித்தவனும் ஆவான். ஆகையால் இவனின் சாம்பலைக்கூட இந்த மண்ணில் விட்டு விடவேண்டாம் என வேண்டிக்கொண்டு விடைப்பெறுகிறேன். நன்றி”

என்று கூறியதும் இருளரசி மறைந்தாள். அவள் மறைந்ததும் அசுரர்களால் ஆக்கிரமிக்கப் பட்டு இருள் சூழ்ந்திருந்த அனைத்துப் பகுதிகளிலும் சட்டென கதிரவனின் ஒளிக்திர்கள் பரவியதும் புத்துயிர் பெற்றது. ஆனால் அவள் மறைவதற்கு முன் சொன்ன வார்த்தைகள் வீரராகவன் மனதில் இருந்துக் கொண்டே இருந்தது. அதற்கான தீர்வு தான் என்ன என்று சூரியதேவனிடமே கேட்டுவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து

“சூரிய தேவா இருளரசி சொன்னது…என் மனதை ஏதோ செய்கிறது. இந்த அசுரனின் சாம்பலை என்ன செய்வது? ஒருவேளை அவன் இதிலிருந்து மீண்டும் வந்து விடுவானோ என்னவோ!”

“வீரராகவா இருளரசி கூறியதை நீ தவறாக புரிந்துக் கொண்டுள்ளாய். அவன் சாம்பலில் இருந்து மீண்டு வரக்கூடியவன் அல்ல. அவன் விதி முடிவடைந்து விட்டது. ஆனால் இது போன்ற தீய எண்ணமுடையவர்களின் சாம்பல் கூட இந்த பூமியின் மண்ணில் படக்கூடாது என்பதால் தான் அதை அகற்றச் சொன்னாள் இருளரசி. மேலும் காற்றில் இந்த தீயவனின் சாம்பல் எல்லா இடங்களிலும் பரவி விடக் கூடாது என்பதுமாகும். அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இவனின் சாம்பல் காற்றில் கூட பரவாது நான் பார்த்துக் கொள்கிறேன். உண்மை, நேர்மை, நல்லொழுக்கம், தூய்மையான உள்ளம் ஆகிய நான்கு நற்குணங்களைப் பிரதிபலிப்பதே இந்த நான்கு இதழ்கள் கொண்ட பதக்கத்தின் விளக்கம். இவை உங்களுள் இருந்ததால் தான் அந்த அசுரர்களின் பரமபத ஆட்டத்தை உங்களுக்கும் அறியாது விளையாடி வென்றுள்ளீர்கள். இந்த பரமபத ஆட்டத்தில் அசுரர்களின் இறுதிப் பகடை இருளரசி ஆனால் உங்களின் இறுதிப் பகடை நான்கு நற்குணங்கள் அடங்கிய நீர்த்துளிப் பதக்கம்.”

“அதெல்லாம் சரி சூரிய தேவா ஆனால் அந்த அசுரர்களின் இனம் முழுவதுமாக அழிக்கப்படவில்லையே!! மேலும் இப்போது உங்களின் ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் பரவி புத்தம் புது பூமியாக மாறிவிட்டது. உங்கள் சூரிய கதிர்களின் வெட்பத்தால் அவர்கள் அழிந்தனரா?”

“அதைத் தெரிந்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் வீரராகவா?”

“அவர்களையும் அழித்துவிடலாமே என்று தான் கேட்டேன்”

“ஓ!! இப்போது நீ மதிநாகசுரனை அழித்தாயே! அதுபோலவா? இல்லை இருளரசியை விடுவித்தாயே அதுபோலவா?”

என்று சூரியதேவன் கேட்டதும் தலைக்குனிந்து நின்றான் வீரராகவன். அதைப் பார்த்த கேசவன் அவருக்காக

“சூரிய தேவா அவர் நேரடியாக போராடாவிட்டாலும் இங்கு நாம் அனைவரும் வருவதற்கான காரணகர்த்தாவாக இருந்தவர்கள் தலைவர் வீரசேகரரும், தளபதி வீரராகவரும் மற்றும் பிரயாகா மக்களும். ஆகையால் இவ்வாறு அவரிடம் பேசவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால் என்னையும் மன்னித்து விடுங்கள்.”

“மன்னிப்பா! எதற்கு கேசவா? உன்னுளிருக்கும் இந்த நல்ல குணத்தை வீரராகவனுக்கு உணர்த்திடவே நான் அவ்வாறு கூறினேன். இப்போது புரிகிறதா வீரராகவா? உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இது போன்ற நான் என்ற அகங்காரம், ஆசை, கர்வம், பொறாமைப் போன்ற பல தீய குணங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதை எப்படி முறியடித்து இந்த நீர்த்துளிப் பதக்கத்தின் நான்கு இதழ்களைப் போன்ற நான்கு நற்குணங்களை வளத்துக் கொண்டு இதைப் போலவே அழகான மலராக ஒளிர்கிறீர்கள் என்பதில் தான் விஷயமே அடங்கியுள்ளது. இந்த நான்கு நற்குணங்களும் பொருந்தியிருந்தவர்கள் தான் இந்த ஞானானந்தம், கேசவன், முழுமதியாள் மற்றும் வேதாந்தகன். ஆதனால் தான் அந்த நீர்த்துளிப் பதக்கதம் அவர்களைத் தேடிச் சென்றடைந்தது. முழுமதியாள் அந்த நீர்த்துளிப் பதக்கம் இனி உங்களுக்குத் தேவையில்லை. அதுதான் அதன் நற்குணங்கள் உங்களிடமே இருக்கிறதே. இனி உங்கள் நற்குணங்கள் போதும் இந்த பூமி சுழன்றிட. எனவே அதை என்னிடம் தந்துவிடு. அதை வைத்து செய்ய வேண்டிய வேலை ஒன்று மீதமிருக்கிறது. அதை முடித்து விட்டு நான் தேவலோகம் சென்றிடுவேன். ம்…என்னிடம் அதைத் தந்துவிடு”

என்று சூரியபகவான் கேட்டதும் நால்வருமாக அந்த நீர்த்துளிப் பதக்கத்தை அவரிடம் ஒப்படைத்தனர். சூரியதேவனிடம் சேர்ந்ததும் அது இன்னும் பல மடங்காக மிளிர்ந்தது. அதன் ஒளியின் வேகத்தில் அனைவரும் கண்களைத் திறந்து வைக்க முடியாது கண்களை மூடிக்கொண்டனர். சற்று நேரத்தில் கண்களைத் திறந்துப் பார்த்தனர். சூரியன் வானில் மிளிர்ந்துக் கொண்டிருந்தார். அவரின் நான்கு ஒளிக் கதிர்கள் கரங்களாக தோன்றி ஞானானந்தம், கேசவன், முழுமதியாள் மற்றும் வேதாந்தகனை ஆசிர்வதித்து மறைந்தது.

நால்வரும் வீரராகவனுடன் சேர்ந்து அந்த இரண்டு சிப்பாய்களையும் தூக்கிக் கொண்டு பிரயாகாவை நோக்கி நடக்கலானார்கள். பிரயாகா சென்றடைந்ததும் சிப்பாய்களை மருத்துவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்கச் செய்து பின் தலைவர் உட்பட அனைவரிடமும் நடந்ததை விளக்கிக் கூறினர். அதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துப் போனார்கள்.

இதிலிருந்து அனைவரும் நன்றாக புரிந்துக் கொண்டது என்னவென்றால் நல்லவர்களுக்கு என்றும் நல்லதே நடக்கும். சில நேரங்களில் தீயவர்கள் அல்லது தீயது வலுப்பெற்றாலும் அதனால் சிலவற்றை நாம் இழந்தாலும் இறுதியில் வெல்வது நல்லவையே! நல்லவர்களே! இடையில் ஏற்படும் மாற்றங்கள், இழப்புகள் அனைத்தும் அவரவர் விதிப்படி நடப்பவையாகும். விதி வலியது! அதை வென்றிட எவராலும் முடியாது!

இவை அனைத்தையும் வைகுண்டத்து பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயணம் கொண்டப்படி பார்த்துக் கொண்டிருந்த திருமால் புன்னகைத்தார். அப்போது அங்கு வந்த நாரதர் அவரிடம்

“நாராயண, நாராயண…எம்பெருமானே வணக்கம். தங்களின் புன்னகைக்கு பொருள் என்னவோ? நான் அறியேன் ஆனால் ஏதோ ஒரு பெரிய விஷயம் நடந்தேறியுள்ளது என்பது மட்டும் புரிகிறது”

“என்ன நாரதா உனக்கு உன் பெருமானின் புன்னகைக்கு பொருள் தெரியவில்லையா? நம்பிவிட்டேன் நம்பிவிட்டேன்”

“தேவி! எதற்கு என்னுடன் இந்த கேள்வி பதில் விளையாட்டு?”

“ஆமாம் நாரதா விளையாட்டு தான் ஆனால் நீங்கள் இருவரும் விளையாடிய விளையாட்டல்ல. இது அசுரர்களுக்கும் தேவர்களுக்குமான பரமபத விளையாட்டு.”

“புரியவில்லையே சற்று விளக்கிக் கூறினால் தெளிவாக புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.”

“நாரதா உனக்கா புரியவில்லை?”

“பெருமானே நீங்கள் கூறி நான் கேட்டிடவே விரும்புகிறேன்”

“ம்…ஆகட்டும். ஒரு சமயம் முரன் என்ற அசுரன் ஈரேழு லோகங்களையும் ஆட்டிப்படைத்தப் போது அவன் திருந்துவதற்கு ஓர் வாய்ப்பளித்தும் திருந்தாதிருந்தவனை என்னுளிருந்து வந்த ஏகாசி கொன்று வீழ்த்தினாள் ஞாபகம் இருக்கிறதா?”

“ஆம் நன்றாக ஞாபகம் இருக்கிறது பெருமானே. அதற்காக தானே ஏகாதசி விரதம் என்று ஒன்று வந்தது. அதுவும் மார்கழி மாத ஏகாதசியில் விரதமிருந்து வழிபட்டால் நீங்கள் வேண்டியதனைத்தையும் தந்தருள்வீர்களே. அதுமட்டுமா வைகுண்ட பதிவியும் தந்தருள்வீரே! இவ்வனைத்துக்கும் காரணமே அந்த ஏகாதசி தானே”

“ம்…சரியாகச் சொன்னாய் நாரதா. அந்த முரன் வம்சத்தில் வந்தவன் தான் இந்த மஹாபலி என்ற அசுரனும் என்பது உனக்கு நன்றாக தெரிந்ததே”

“அந்த பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க உதவிய அசுரனா?”

“ஆம் அவனே தான். அமிர்தத்தை அந்த அசுரர்களுக்கும் சரி பங்குக் கொடுத்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்?”

“நாராயண!! நாராயண! இந்த அண்டசராசரமுமே தீமையால் சூழப்பட்டு எந்த உயிரினமும் வாழத் தகுதியின்றி ஆகியிருக்கும். நீதிநெறி எல்லாம் இருக்கும் இடம் தெரியாது அழிந்துப் போயிருக்கும். அப்படி ஒரு நிலையை நினைத்துப் பார்த்தாலே ஏதோ போல் இருக்கிறது!”

“அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாதென்பதால் தான் அவனை தேவர்கள் அழிக்க முற்பட்ட போது அவர்களை நான் தடுக்காதிருந்தேன்.”

“அதுதான் இந்திரனும் மற்ற தேவர்களுமாக அவனையும் அவனின் இனத்தையும் அழித்துவிட்டனரே!”

“இல்லை நாரதா. அதுதான் இல்லை. இந்திரன் எந்த வேலையை முழுமையாக செய்துள்ளான் கூறு.”

“ம்…அது வந்து…”

“என்ன நாரதா ம்…என்ற இழுவை…இந்திரனின் அறைகுறை செயலால் மஹாபலியின் மகனான மதிநாகசுரனும் அவனுடன் இன்னும் ஒரு ஒன்பது பேரும் தப்பித்துச் சென்றனர்.”

“ம்…அவர்களை தப்பிக்க வைத்ததே தாங்கள் தானே சுவாமி”

“அதற்கும் காரணம் இருக்கிறது லட்சுமி.
அந்த மதிநாகசுரனின் தந்தை மஹாபலி நமக்கு அமிர்தம் கிடைக்கச் செய்த உதவிக்காக அவனைப் பலமுறை காப்பாற்றி வந்தேன். அவன் திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களை வழங்கினேன். ஆனால் எந்த பிரயோஜனமுமின்றிப் போனதில் இன்று சூரியதேவன் அவனையும் கொன்று விட்டான். என்ன தான் உயிரை ஏழு கடல் ஏழு மலைத் தாண்டி ஒளித்து வைத்திருந்தாலும் அதை எடுக்க வேண்டிய நேரமும் காலமும் வந்தால் அது நம்மைவிட்டு போகத்தானே செய்யும். அதுபோல என்ன தான் நான் மதிநாகசுரனைக் காப்பாற்ற முயன்று அவனுக்கு பல வாய்ப்புகளை அளித்திருந்தாலும் அவனின் குணம் மாறாததால் அவன் முடிவு வந்தது. அதை நினைத்தேன் புன்னகைத்தேன். வேறொன்றுமில்லை”

“இப்போது அந்த மதிநாகசுரனின் இனத்தவர்கள் மீதமிருக்கிறார்களே அவர்கள் என்ன ஆவார்கள்?”

“நாரதா அவர்களுக்கும் திருந்தி வாழ வாய்ப்பளிப்போம். ஏனெனில் இந்த பூமியில் ஜனிக்கும் அனைத்து உயிர்களுக்கும் வாழ உரிமையுள்ளது. ஆனால் எப்படி வாழ்கிறார்கள் அல்லது வாழ்கிறது என்பதைப் பொருத்தே வாழும் காலம் குறிக்கப் படுகிறது. ஒருவன் கெட்டவனாகவே இருந்தாலும் அவன் திருந்துவதற்கான வாய்ப்பை பல முறை வழங்குவது தான் கடவுள்களின் வேலை இல்லையா. அப்படியும் அவன் திருந்தவில்லை என்றால் முதலில் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிவரும், சில இழப்புகளை ஏற்க வேண்டிவரும், வாக்குவாதம், விவாதம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிவரும், அதில் தோல்வியடையவும் வேண்டிவரும். இத்தனை பார்த்தும் பட்டும் திருந்தவில்லை என்றால் மரணம் வரும் அதுவும் எளிதாக வங்துவிடாது. அவன் செய்த தவறுகளும் அதற்கு நான் கொடுத்த வாய்ப்புகளில் திருந்தாததும் சேர்ந்து அவனை வாட்டி வதக்கிவிட்டுத் தான் மரணம் நேரும். அது தான் இப்போது அந்த மதிநாகசுரனுக்கும் நேர்ந்துள்ளது.”

“இதை ஏன் தாங்கள் செய்ய வேண்டும் பெருமானே? பேசாமல் என் தந்தையிடம் சொல்லி நல்லவர்களை மட்டும் படைத்திடச் செய்தால் பூலோகம் நன்றாக இருக்குமல்லவா?”

“ஹா!ஹா!ஹா! நாரதா இனிப்பின் சுவை கசப்பை உட்கொண்டால் தான் தெரியும் இல்லையா. அதுபோல பூலோகத்தை சமநிலையில் வைக்கத்தான் இது போன்ற சில படைப்புகளையும் படைக்கிறார் பிரம்ம தேவன். வாழ்க்கை ஒரு பரமபதம் ஆட்டம் போலதான் நாரதா. அதில் சில பாம்புகளான தீயவைகளும், தீயவர்களும், ஏணியைப் போல நல்லவைகளும் நல்லவர்களும் இருப்பார்கள். அதில் ஒரு மனிதனுக்கு எது அமைகிறது என்பதை அவன் விதி தான் தீர்மானிக்கிறது. ஆனால் தீயதை, தீயவர்களை ஒரு எல்லைக்கு மேல் சென்றிடாமல் பாதுக்காப்பதே என் வேலை. அப்படியே எல்லையைத் தாண்டினாலும் அவர்களை தண்டிப்பதோ அல்லது அழிப்பதோ ஈசனின் செயலாகும். நாங்கள் மூவரும் அவரவர் வேலைகளை அவரவர் சரிவர செய்து வருகிறோம். இதே போல பூலோகத்திலும் இயுந்தார்களே என்றால் வாழும் நாள் வரை நிம்மதியாக சந்தோஷமாக வாழ்வில் அனைத்து வளங்களுடன் நன்றாக வாழலாம். அது போல ஓடி அசுரகிரி வனத்தில் இருக்கும் அசுரர்கள் திருந்தி மனிதர்களோடு மனிதர்களாக வாழ ஆரம்பிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர்களுக்கான வாய்ப்பை அளித்துள்ளேன். அதை காலமும் நேரமும் தான் முடிவு செய்ய வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.”

“நாராயண! நாராயண! அசுரன் முரன் உடனான பரமபத ஆட்டம் முடிவடைந்ததும் மஹாபலியுடனான ஆட்டம் துவங்கியது. அது முடிந்ததும் மதிநாகசுரனுடனான பரமபத ஆட்டம் ஆரம்பமானது. அதுவும் நல்லபடியாக முடிவுற்றது. மானிடர்கள் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு வாழ ஆரம்பிப்பார்கள். மீதமுள்ள அசுரர்கள் திருந்தி வாழ்ந்தால் நல்லது இல்லையேல் அடுத்தப் பரமபத ஆட்டம் ஆரம்பமாகும்.”

“ஆரம்பம் ஆகுமா! நாரதா ஆரம்பம் ஆகிவிட்டது. ஆம் மீதமிருக்கும் அசுரர்களில் சிலர் திருந்திட வாய்பிருக்கிறது. ஆனால் பலர் அவர்களின் பிறவி குணத்தால் மாறாது ஆட்டத்தை தொடர்ந்திடுவர். தோல்வியைத் தழுவிடுவர். இறுதியில் மரணத்திடம் தஞ்சமடைந்திடுவர்.”

“நாராயண! நாராயண! அப்படி என்றால் சூரியதேவன் அவர்களை இப்போது அழிக்க மாட்டாரா?”

“இருளரசி கொஞ்ச காலம் அசுரர்களிடம் சிக்கியிருந்தாள். அது அவளின் விதி. அவள் முன்ஜென்ம கர்ம வினை. அவளை விடுவிப்பதற்கான காலமும் நேரமும் கூடி வந்ததும் சூரியதேவன் அவ்வாறு செய்து அவளை விடுவித்தான். அசுரர்களானாலும் எள்ளவாவது நல்ல குணம் என்றொன்றிருந்தால் சூரியதேவனின் ஒளிக்கதிர்கள் அவர்களை ஒன்றும் செய்திடாது. மீதமிருக்கும் மந்தாகிஷி, மந்திராசுரன், கோபரக்கன், யாகம்யாழி ஆகியோருக்குள் கடுகளவு நற்குணங்கள் உள்ளது ஆகையால் அவர்கள் சுதந்திரமாக வெளியில் வந்து வாழலாம். அதே போல அவர்களின் வாரிசுகள் அனைவரும் இளவயதுக் காரர்கள். அவர்கள் வாழ்வதற்கு வாய்ப்பளித்தாக வேண்டும் என்பதால் அவர்களும் சுதந்திரமாக வாழலாம்.”

“நாராயண! நாராயண!”

தீயவர்களானாலும் நல்லவர்களானாலும் வாழ்வதற்கான வாய்ப்பை அனைவருக்கும் ஒரே மாதியாகத் தான் வழங்குகிறார் கடவுள். மதிநாகசுரனுக்கு திருந்துவதற்கான வாய்ப்பை பல முறை அளித்தும் அவன் திருந்தாது பழியுணர்ச்சியில் வாழ்ந்து வீழ்ந்தான். நீர்த்துளி பதக்கம் கொண்ட நால்வருக்கும் அவர்கள் குணம் மாறுகிறார்களா என்றும் பல முறை சோதித்துள்ளார். எந்த நிலையிலும் நாம் நமது நல்ல குணங்களை விட்டுவிடாதிருந்தால் இன்றில்லை என்றாலும் என்றாவது அதற்கான பலன் நிச்சயம் கிடைத்திடும். அதேபோல தீய வழிகளில் பயணித்தோமே என்றால் அதற்கான பலனையும் ஏற்றுக் கொண்டாக வேண்டிவரும்.

இவ்வாறே நல்லவர்களும், தீயவர்களும் ஒன்றென கலந்துவிட்டனர் இவ்வுலகில்! இதில் கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி சில தீயவர்கள் நல்லவர்களாகவும், நேர்ந்த சோதனைகளில் குணம் தடுமாறி சில நல்லவர்கள் தீயவர்களாகவும் மாறி மாறி வாழ்ந்து வருகின்றனர். அப்படி பல சோதனைகளிலும் நிலை தடுமாறாது என்றும் நல்லவர்களாகவே வாழ்பவர்களால் தான் இன்னமும் இந்த பூமி சுழன்றுக் கொன்றிருக்கிறது.

அசுரர்களுக்கும் தேவர்களுக்குமான இந்த பரமபதம் ஆட்டம் முடிவுற்றது. ஆனால் மனிதர்களுக்கிடையே மனிதர்களைப் போலவே இருக்கும் அசுரர் இனத்தின் வம்சாவழியினரில் சிலர் திருந்தியிருந்தாலும் பலரின் பிறவி குணமானது இன்றும் பல இடங்களில் பல நேரங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் இது முடிவில்லா ஆட்டம் தான் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. ஆட்டக்காரர்கள் தான் காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்றார் போல மாறுகின்றனரே தவிர ஆட்டம் தொடர்ந்து ஆடப்பட்டு வருகிறது.

♥️முற்றும்♥️
🙏நன்றி🙏


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s