அத்தியாயம் 57: விதி வலியது!

சூரியதேவன் சொல்லியும் அசையாதிருந்தவர்களிடம் மீண்டும் அவர்

“அந்த அசுரர்கள் இருள் சூழச்செய்த இடங்களில் எல்லாம் எப்போது எனது ஒளிக் கதிர்கள் ஊடுருவிச் சென்றதோ அன்று முதல் அந்த இடம் பாதுக்காப்பான இடமாகவும், அசுரர்கள் நுழையக் கூட அஞ்சும் இடமாகவும் மாறிவிடும். ஆகையால் நீங்கள் முன்னோக்கி நகர்ந்திடுங்கள். இன்னும் நிறைய இடங்களை புத்துயிர் பெறச் செய்திட வேண்டும்.”

“சூரிய தேவா நீங்கள் சொல்வதை நாங்கள் நம்புகிறோம் ஆனால் எனக்கு ஒரே ஒரு சந்தேகம்…அதைக் கேட்கலாமா”

“ம்…என்ன அது கேசவா?”

“இதை நீங்கள் ஏன் முன்பே செய்யவில்லை? நீங்கள் உங்களின் ஒளிக் கதிர்களை முன்பே எல்லா இடங்களிலும் பரவிட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதல்லவா!”

“கேசவா அப்போது அசுரர்கள் கை ஓங்கியிருந்தது. அதனால் எனது கை கட்டப்பட்டிருந்தது. ஆனால் இப்போது உங்கள் நால்வரால் அந்த நீர்த்துளிப் பதக்க இதழ்கள் இணைந்தன அந்த அசுரர்களின் அழிவும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எனது பலம் என்னுடையதானது. அதாவது இத்தனை நாட்களாக அசுரர்கள் என்னும் பாம்புகளால் வெட்டப்பட்டுக்கொண்டிருந்தேன் ஆனால் இப்போது அவர்களை வெட்டப் புறப்பட்டு விட்டேன்.”

“கடவுளாகிய நீங்களுமா இப்படி கட்டிப்போடப்படுவீர்கள்?”

“விதி வலியது வேதாந்தகா! கடவுளே ஆனாலும் சில நேரங்களில் தீயவைகளின் தாக்குதல்களினால் இவ்வாறு நடக்க நேர்ந்திடும். இவையனைத்தையும் ஆட்டுவிக்கும் அந்த மும்மூர்த்திகளுக்கு தெரியாதா என்ன? சரி சரி நம்மிடம் நேரம் மிகக்குறைவாக உள்ளது சீக்கிரம் வாருங்கள்”

“ஆகட்டும் சூரியதேவா!”

என்று அனைவருமாக அடுத்து மாயாபுரியை சென்றடைந்தனர். அங்கும் கதிரன் அவர் ஒளிக்கதிர்களை பரவவிட முயற்சித்த போது சற்று கடினமாக இருந்ததை உணர்ந்த அவர் நால்வரிடமும்

“உங்களிடம் அந்த பதக்கம் இருகிறது தானே!”

“ஆங் இருக்கிறதே. நம் முழுமதியாள் கழுற்றில் இருக்கிறதே. இல்லையா மதி”

“ஆமாம் ஞானானந்தம் அண்ண. இதோ”

என்று அவள் எடுத்து வெளியேக் காட்டியதும் சூரியன் அந்த பதக்கத்தில் தனது ஒளிக்கதிர்களைப் பாய்ச்சினார் அதன் பிரதிபலிப்பில் சற்று தூரம் வரை ஒளிப் பரவியது. ஆனாலும் ஓர் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் செல்ல முடியாது ஒளிக்கதிர்களின் வீரியம் குறைய ஆரம்பித்தது. அதற்கான காரணத்தை பரந்தாமனின் துணையுடன் அறிந்துக் கொண்டார் கதிரவன். அங்கு நடந்ததைப் பார்த்த நால்வரும் திகைத்துப் போயினர். அப்போது கேசவன் சூரிய பகவானிடம்

“சூரிய தேவா இது என்ன சோதனை? ஏன் அந்த இடத்திற்கு மேல் தங்களால் செல்ல முடியவில்லை?”

“அது ஒன்றுமில்லை கேசவன். அங்கே தான் அந்த அசுரர்களின் அடுத்த தலைவனாகப் போகிறவன் ஒரு சக்தியை பெற தவம் மேற்கொண்டுள்ளான். அவன் பெயர் பாற்கடையான் என்பதாகும்.”

“அப்படி என்றால் நம்மால் ஒன்றும் செய்திட முடியாதா?”

“முடியும். இதுவரை நான் முன்னே சென்றேன் நீங்கள் பின்னே வந்தீர்கள் ஆனால் இனி இங்கிருந்து நீங்கள் உங்கள் பதக்கத்துடன் முன்னே செல்லுங்கள் நான் உங்களை தொடர்ந்து வருகிறேன்”

“ஏன் அப்படி என்று நான் தெரிந்துக் கொள்ளலாமா?”

“வேதாந்தகா சொல்வதைக் கேள். உனக்கே எல்லாம் புரியும்”

“ஆகட்டும் சூரியதேவா. மதி வா நாம் முன்னே செல்லலாம்”

நால்வரும் முன்னே செல்லச் செல்ல ஓர் பயங்கரமான குரல் ஓம்… ஓம்… என்று ஒலித்ததைக் கேட்டனர். அப்போது மழுமதியாள் சற்று நின்று அந்த குரல் வரும் திசையைத் திரும்பிப் பார்த்தாள். அப்போது வேதாந்தகன்

“மதி ஏன் நின்றாய்? அங்கே என்ன பார்க்கிறாய்?”

“அங்கே பாருங்கள் வேதா. ஒரு ராட்சதன் தவம் மேற்கொண்டிருப்பதை!.”

“ஆமாம்!! நம்மிடம் இந்த நீர்த்துளிப் பதக்கமிருந்தும் அந்த ராட்சதன் எப்படி இன்னும் தவம் மேற்கொள்கிறான்?”

“அதற்கு காரணம் இருக்கிறது வேதாந்தகா”

“அப்படியா? அது என்ன காரணம்? இந்த நீர்த்துளிப் பதக்கம் எந்த ராட்சதர்களையும் அழித்துவிடாதோ!”

“ம்…அழிக்கும் வல்லமைப் பெற்றது தான் ஆனால் அங்கே இருப்பவன் சற்று நல்ல குணங்களும் உடையவன் ஆகையால் தான் அந்த பதக்கம் இதோ இந்த தூரத்திலிருந்தும் அதன் வேலையை செய்யவில்லை.”

“அப்படியென்றால் நாம் அனைவரும் அவ்வளவு தானா? இந்த ராட்சதனிடம் மாட்டிக்கொள்ளப் போகிறோமா?”

“ஏய் சிப்பாய்களா சற்று அமைதியாக இருங்கள். ஏன் இப்படி பொலம்பிக்கொண்டிருக்கிறீர்கள்? நம்முடன் இருக்கும் ஒரு பெண்ணான நமது மழுமதியாளைப் பாருங்கள். எவ்வளவு தைரியத்துடனும், துணிச்சலுடனும் இருக்கிறாள். ஊருக்குத் திரும்பிச் சென்றதும் உங்கள் இருவரையும் வேலையிலிருந்து தூக்கிவிட்டு முழுமதியாளை உங்கள் இருவருக்குப் பதில் நமது படையில் சேர்த்திட வேண்டியது தான்.”

“சரி வீரராகவர் அவர்களே அதைப் பற்றி பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம். இப்போது அந்த ராட்சதனுடன் நாம் சண்டையிட வேண்டும். அதற்கு தயாராகுங்கள்.”

“ம்…நாங்கள் மூவரும் தயார் நிலையில் உள்ளோம். நீங்கள் நால்வரும் அந்த ராட்சதன் முன் சென்று அவனை தியானத்திலிருந்து வெளிவரச் செய்யுங்கள். பின் நாங்கள் வந்து அவனைத் தாக்குகிறோம்”

“ஆகட்டும் தளபதியாரே…ம்‌..வாருங்கள் நாம் நால்வரும் முன்னே சென்று அவனை திசைத்திருப்புவோம்.”

என்று நால்வரும் பாற்கடையான் முன் சென்றதும். அந்த பதக்கத்தின் தாக்கத்தால் பாற்கடையான் சட்டென கண் விழித்தான். அவனின் ஈசத்துவ தவம் கலைக்கப்பட்டது. விதி வலியது!!!!

அவன் முன் நின்றிருந்த நால்வரையும் ஆக்ரோஷமாக பார்த்தான். அவர்களைப் பிடிக்க கைகளை நீட்டினான். சட்டென தளபதி வீரராகவனும் இண்டு சிப்பாய்களும் அவன் முன் வந்து குதித்தனர். அவர்களைக் கண்டதும் பாற்கடையான் தான் பிடித்துக் கொண்டிருந்த கேசவனையும் ஞானானந்தத்தையும் கீழே போட்டுவிட்டு வீரராகவனையும் இரண்டு சிப்பாயாகளையும் பிடித்துத் தூக்கிப்பார்த்துக் கொண்டிருக்கையில் கேசவன் முழுமதியாளிடம்

“மதி…மதி…அவன் கால்களை பிடித்து தரையில் விழவைக்க வேண்டும் வா…”

என்று கத்திச் சொன்னதும் பாற்கடையான் சிப்பாய்களையும், வீரராகவனையும் கீழே போட்டுவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே

“தந்தையே தந்தையே!! நீங்களா!!”

என்று தேடினான். அந்த நேரம் பார்த்து கேசவனும் மழுமதியாளும் அவனின் கால்களை இழுத்து அவனைத் தரையில் விழச்செய்தனர். அவன் விழும் போது தனது வலது புறமிருந்த முழுமதியாளை தன் வலது கையால் பிடித்துத் தூக்கிக் கொண்டே விழுந்ததில் முழுமதியாளின் பதக்கச் சங்கிலி அவள் கழுத்திலிருந்து நழுவிச் சென்ளு அவன் மேல் விழுந்தது. அந்த நீர்த்துளிப் பதக்கம் பாற்கடையான் மீதுப் பட்டதும் அவன் சாம்பலானான்.

அவன் சாம்பலான அடுத்த நொடியில் சூரியதேவன் தனது ஒளிக் கதிர்களை மாயாபுரி முழுவதுமாக பரவவிட்டதில்
தீய இருள் சூழ்ந்திருந்த மாயாபுரியும் கொசம்பியைப் போலவே புத்துயிர் பெற்றது.

அசுரர்கள் பாற்கடையான் ஈசத்துவம் சக்திப் பெற சென்றிருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் உண்மையில் அவர்கள் இனத்தில் இன்னுமொரு நபர் குறைந்து விட்டார் என்பது கூட தெரியாதிருந்தனர்.

அடுத்து வட்ஸாவிற்கு செல்ல எழுவரும் ஆயத்தம் ஆகினர்.

வட்ஸாவில் இருந்த அசுரர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை நடத்தினர். அதில் மந்திராசுரன் அனைவரிடமும்

“நாம் இனியும் இந்த வட்ஸாவில் இருக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எல்லோரும் என்ன சொல்கிறீர்கள்?”

“ஏன் இப்படி ஒரு திடீர் முடிவு எடுத்துள்ளாய் மந்திரா?”

“மதி நாம் இங்கிருந்து என்ன செய்யப் போகிறோம்? நமது பாற்கடையான் வரும்வரை நாம் நம்மை பாதுக்காத்துக் கொள்ள வேண்டாமா?”

“ஏன் நமக்கென்ன நேர்ந்திடும் என்று எண்ணுகிறாய்?”

“மதி ஏதோ மனதில் பட்டதைச் சொன்னேன். என்னமோ தெரியவில்லை இன்று என் மனதில் ஒரு வகை சங்கடம் தோன்றுகிறது.”

“அப்படியா சொல்கிறாய் மந்திரா!! சரி…நம் மந்திரா கூறியதற்கு நீங்கள் அனைவரும் என்ன சொல்கிறீர்கள்?”

“ஆனால் பாற்கடையான் ஈசத்துவம் பெற்று நம்மைத் தேடி இங்கு தானே வருவான். அந்த நேரத்தில் நாம் இங்கில்லை என்றால் எப்படி?”

“யாழி அவன் ஈசத்துவம் பெற்றால் அவன் நாம் எங்கு இருந்தாலும் தெரிந்துக் கொண்டு வந்து விடுவான். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை”

“சரி நாம் எங்கு செல்வோம்?”

“கோபரக்கா நாம் மீண்டும் நமது அசுரகிரிவனத்திற்கே சென்றுவிடலாம்.”

“ஆகட்டும் ஆசானே. நாங்கள் அந்த இடத்தைப் பற்றி காற்கோடையன் ஆசான் சொல்லித்தான் கேட்டுள்ளோம். எங்களுக்கும் நமது ஊரைப் பார்க்க ஆசையாக உள்ளது. எங்கள் அனைவருக்கும் இதில் சம்மதமே! என்ன சொல்கிறீர்கள் சகோதர சகோதரிகளே?”

“நாதவேழிரி சொல்வது சரிதான். அதை நானும் ஆமோதிக்கிறேன்”

“மதி நீ என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்?”

“மந்திரா நாம் இவ்வளவு தூரம் வந்தும், நமது இனத்தவர்களைப் பறிக்கொடுத்தும் அந்த தேவேந்திரனை நெருங்க முடியாது மீண்டும் நமது இருப்பிடத்திற்கே செல்லும் படியாகிவிட்டதே!! அதை நினைத்தால் எனக்கு கோபம், வருத்தம் என மாறி மாறி வந்து என்னைக் கொல்கிறது.‌ இன்னும் ஒரு முறை முயற்சிக்கலாமா என்றும் தோன்றுகிறது.”

“மதி உன் மனநிலை எனக்கு நன்கு புரிகிறது ஆனால் சற்றே யோசித்துப் பார்…நம்மிடம் முன்பைப் போல படைபலம் இல்லை. நாமும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் எப்படி மீண்டும் முயற்சிப்பது? அப்படியே முயற்சித்தாலும் நாம் நமது இனத்தவரை மீண்டும் பறிகொடுக்க வேண்டிவரும். ஆகையால் நாம் இப்போது சற்று பின்வாங்குவதில் எந்த தவறுமில்லை. இதில் அவமானப்படுவதற்கும் ஒன்றுமில்லை. ஏனெனில் நாம் முயற்சிக்காமல் நமது ஊருக்குத் திரும்பிச் செல்லவில்லையே!! நம்மால் முடிந்தவரை முயற்சித்தோம் ஆனால் முடியாமல் போனது அவ்வளவு தானே!”

“எல்லாம் என்னால் தானே நடந்தது.”

“அது எப்படி உன் மீது மட்டும் பழிப் போட்டுக் கொள்கிறாய். இங்கு உன்னால் என்னால் என்றெல்லாம் கிடையவே கிடையாது மதி…நடந்தவை அனைத்திற்கும் நாம் அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். உன்னால் என்னால் என பிரித்துப் பார்க்க ஆரம்பித்தோமே என்றால் பின் நமக்குள் இருக்கும் ஒற்றுமை குலைந்துவிடும். அது பேராபத்தில் தள்ளிவிடும்.”

“அதற்கில்லை மந்திரா…நமது ஆசான் சொன்ன போதே நான் சற்று செவிசாய்த்து அந்த ஈசத்துவத்தை அடைந்திருக்க வேண்டும். அது மட்டும் செய்திருந்தால் இப்போது நம் நிலமையே மாறி இருக்கும் இல்லையா!! மற்ற சித்துக்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி அதுவே அந்த தேவர்களை அழிக்கப் போதுமானது என்ற எனது அகங்காரத்தால் தானே இன்று நமக்கு இந்த நிலைமை. அதனால் தான் அவ்வாறு கூறினேன்.”

“நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும் மதி. இனி நடக்க வேண்டியவைகளைப் பற்றி மட்டும் நாம் அனைவரும் சிந்திப்போம் செயல்படுவோம். நீ ஈசத்துவம் பெறவில்லை என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். அது உன் மகன் தான் பெற வேண்டும் என்றிருந்தால் அதற்கு நீ என்ன செய்வாய்? உன் மகன் பாற்கடையான் தான் நம் இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று இருந்தால் அதற்கு நாம் என்ன செய்யமுடியும். உண்மையைச் சொல்லப்போனால் அதற்கு நீ பெருமைக் கொள்ள வேண்டுமே அன்றி இப்படி வருத்தப் படக்கூடாது.”

“ம்…அதுவும் உண்மைத் தான் மந்திரா. என் மகனாவது ஈசத்துவத்தைப் பெற்று வந்து இந்த அண்டசராசரத்தையும் ஆள வேண்டும். அப்போது தான் நான் நிம்மதியடைவேன். நமது ஆசானின் ஆன்மாவும் அப்போது தான் சாந்தி அடையும்.”

“சரி சரி எல்லோரும் புறப்படுங்கள் நாம் அசுரகிரிவனம் சென்றிடுவோம்.”

“சரி மந்திரா. நாம் எப்படி செல்வோம்? முன்பு நானும் சிம்பாசுரனும் இருந்தோம் அனைவரையும் அங்கிருந்து இங்கு அழைத்து வர முடிந்தது. ஆனால் இப்போது எப்படி அது சாத்தியமாகும்?”

“கவலை எதற்கு மதிநாகசுரா? நமது இளஞ் சிங்கங்கள் இருக்கின்றனரே! அவர்கள் அனைவரும் அனைத்து சித்துக்களிலும் கைதேர்ந்தவர் ஆவர். ஆம் பாதி வித்தையை நமது ஆசானிடமும் மீதியை என்னிடம் கற்றக் கொண்டுள்ளனர். ஆகையால் நமக்கு பெரும் உதவியாக அவர்கள் இருப்பார்கள்.”

“பலே பலே!! இதை நான் எப்படி மறந்தேன்? ஆகட்டும் அனைவரும் அசுரகிரி வனம் சென்றிடுவோம். நீண்ட பயணத்திற்கு அனைவரும் தயாராகிடுங்கள். இடையில் கலிங்கா அல்லது ஓதராவில் சற்று இளைப்பாறலாம்.”

“போன முறை நாம் அங்கிருந்து இங்கு வந்தபோது முழு படைபலத்துடனும், நமது அனைத்து இனத்தவருடனும் இங்கு வந்தோம்…ஆனால் இப்போது எஞ்சியிருக்கும் நாம் பதினைந்து பேர் மட்டுமே அசுரகிரிவனம் செல்லப் போகிறோம்.”

“கவலை வேண்டாம் மந்தாகிஷி. இப்போது பதினைந்து ஆனால் பாற்கடையான் ஈசத்துவம் பெற்று வந்ததும் இந்த அண்டசராசரமுமே நமது இனத்தவர் நிறைந்திருப்பர்.”

என்று பேசி முடிவெடுத்து எஞ்சியிருந்த அசுரர்கள் அனைவருமாக வட்ஸாவை விட்டு வெளியேறி அவர்களின் இருப்பிடமான அசுரகிரிவனத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தனர்.

அசுரர்கள் அவர்களின் இருப்பிடத்திலிருந்து வெளியே வந்தனர். தூரத்தில் ஓர் ஒளித் தெரிந்ததைப் பார்த்தனர். அதைப் பார்த்ததும் மந்திராசுரன்

“இது எப்படி சாத்தியம்? மதி உடனே நாம் இங்கிருந்து சென்றிட வேண்டும். இல்லையேல் நாம் இங்கேயே அழிந்து விடுவோம். ம்…அனைவரும் புறப்படுங்கள்”

“அது என்ன ஒளி மந்திரா அண்ணா? இதுவரை நாம் பார்த்தே இல்லையே! அது ஜொலிக்கிறதே.”

“யாழி அது நமக்கு நல்லதல்ல. அதைப் பற்றி நான் நமது இருப்பிடத்திற்கு சென்றதும் விளக்குகிறேன். இப்போது பேசாமல் வா”

“மந்திரா அப்படியென்றால் நமது பாற்கடையானுக்கு ஏதாவது நேர்ந்திருக்குமா? இவன் எப்படி நாம் மாற்றிய …நமது இடங்களுக்குள் நுழைந்தான்? இவனை…”

“மதி இது நமக்கான நேரமல்ல. நாம் அப்போது பொறுமைக் காக்க வேண்டும் இல்லையேல் நாம் அனைவரும் அழிய நேரிடும். ம்…வா செல்வோம்”

“நமது பாற்கடையானுக்கு என்ன நேர்ந்தது என்று நாம் அறிந்துக் கொள்ளாது எப்படி இங்கிருந்து செல்வது மந்திரா? இல்லை நான் வரமாட்டேன் அந்த கதிரவன் எனக்கு பதில் அளித்தாக வேண்டும். அவனை விடமாட்டேன். நீங்கள் அனைவரும் அசுரகிரிவனம் சென்றிடுங்கள் நான் இந்த கதிரவனை அழித்துவிட்டு பாற்கடையானுடன் வருகிறேன்.”

“மதி எனக்கென்னவோ அது சரியாக படவில்லை. தயவுசெய்து எங்களுடன் வந்துவிடு.”

“மந்திரா…ம்…அனைவரையும் அழைத்துக் கொண்டுப் புறப்படு. அவனின் வெட்பத்தை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. சீக்கிரம். நான் அசுரகிரிவனம் வந்தால் இவர்களை அழித்துவிட்டு தான் வருவேன்.

என்று மந்திராசுரனுடன் மற்ற அனைவரையும் அசுரகிரிவனத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு சூரியதேவனை எதிர்கொள்ள தயாராக காத்திருந்தான் மதிநாகசுரன்.

தொடரும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s