அத்தியாயம் 56: கொசம்பி புத்துயிர் பெற்றது

மதிநாகசுரன் கூறியதைக் கேட்டு திகைப்பிலிருந்த கோபரக்கன் மற்றும் யாகம்யாழி சுயநினைவுக்கு வந்ததும் மதிநாகசுரனைப் பார்த்து

“மதிநாகசுரரே! தாங்கள் சொல்வது போல் நடந்திருந்தால்…நமது இனத்தில்… இன்னுமொரு உயிர்சேதமா?!”

“தெரியாது கோபரக்கா தெரியாது…இப்போது நமது சிகராசுரனுக்கு நேர்ந்ததைப் பார்த்தப் பின்பு தான் எனக்கு அப்படி தோன்றியது. அதுவுமில்லாமல் நவியாவை நாம் அனைவருமாக எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டோம். அவளை எங்குமே காணவில்லை. அவள் அப்படி எல்லாம் சொல்லாமல் நம்மை எல்லாம் விட்டு எங்கும் போகமாட்டாள். அவளின் மறைவில் ஏதோ மர்மம் இருக்கிறது. இல்லையேல் சூரிய தேவனுக்கு இரையாகிவிட்டாள் என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.”

“மதிநாகசுரரே! நீங்கள் சொன்னது போல நமது நவியாகம்ஷியும் சூரிய தேவனின் ஒளிக் கதிர்களுக்கு இரையாகியிருந்தால் அவளின் எலும்புக்கூடு இங்கேயே தானே இருந்திருக்க வேண்டும்? ஏனெனில் இப்போது நமது சிகராசுரனை அந்த சூரிய தேவன் தாக்கியபோதும் அவனின் எலும்புக்கூடு அங்கேயே தானே கிடக்கிறது!”

“சரி யாழி அப்படி நேரவில்லை என்றால் அவள் எங்கே? எங்கு சென்றிருந்தாலும் இன்னேரம் நம்மிருப்பிடம் வந்து சேந்திருப்பாளே!! ஆனால் இல்லை…அதுதான் எனது சந்தேகத்தை இன்னும் ஊர்ஜிதமாக்குகிறது.”

“இப்போது என்ன தான் செய்யப் போகிறோம்?”

“இல்லை அவள் சொல்லாமல் சென்று தவறிழைத்து விட்டாள். இனியும் அவளைத்தேடி நாம் நமது நேரத்தை வீணாக்காமல் அந்த பிரயாகாவைக் கைப்பற்றுவதில் மும்முரமாக இறங்குவோம். அவள் உயிருடனிருந்தால் நம்மைத் தேடி நிச்சயம் வருவாள். அப்படி வரவில்லை என்றால் அவள் உயிருடனில்லை என்று நாம் அர்த்தமெடுத்துக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை.”

“ஒரு வேளை நம் நவியா அந்த பிரயாக மக்களால் பிடிப்பட்டிருந்தால்?”

“இல்லை அதற்கு சாத்தியமே இல்லை யாழி”

“அது எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள் மதிநாகசுரரே”

“நானோ, மந்திராசுரனோ அல்லது நமது ஆசானோ இன்றி வேறு எவராலும் இருளைப் பரப்ப முடியாது. அதை இப்போது நீங்கள் இருவரும் பார்த்தீர்கள் அல்லவா. அப்படியிருக்கையில் நவியாவை அவர்கள் சிறையெடுத்திருக்க வாய்ப்பேயில்லை. அப்படியே எடுக்க முயன்றிருந்தாலும் அந்த சூரிய தேவன் அவளை சுட்டெரித்திருப்பான். அதனால் தான் அவ்வாறு கூறினேன்”

“ம்…நீங்கள் சொல்வதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. சரி இப்போது நாம் என்ன செய்யப்போகிறோம்”

“சூரிய தேவன் தனது ஒளிக்கதிர்களைக் கொண்டு இந்த பாதாளச் சுரங்கத்திற்குள் ஊடுருவ நிச்சயம் முயற்சிப்பான். ஏனெனில் நாம் இதனுள் இருக்கிறோம் என்று அவனுக்கு தெரிந்துவிட்டது. ஆகையால் நாம் முதலில் இங்கிருந்து வேறு இடம் செல்ல வேண்டும்”

“அதுதான் உங்களின் சக்திக் கொண்டு இருளாக்கி விட்டீரே பின்பு எப்படி சூரியன் வர முடியும்? அதுவுமில்லாமல் நமது பிடியிலிருக்கும் அனைத்து ஊர்களிலும் சூரியனால் எட்டிக்கூடப் பார்க்க முடியாது இருக்கிறாரே!”

“அது என்னவோ சரி தான் கோபரக்கா. ஆனால் அவர் ஒரு முறை ஊடுருவி வந்துவிட்டால் அது நமக்கு தான் ஆபத்து. அந்த நீர்த்துளிப் பதக்கம் அங்கிருப்பதால் தான் சூரியனின் பலமும் வேகமும் அங்கு அதிகமாக இருக்கிறது. அந்த பதக்கத்தைப் பற்றி ஆசான் நிறையக் கூறியுள்ளார். அது இருக்கும் இடத்தில் அனைத்து தேவர்களும் அனைத்து வலிமைகளும் பெற்று திகழ்வார்களாம். அதனால் தான் அதில் ஏதாவது ஒன்றையாது அழித்திட வேண்டுமென்று ஆசான் நம்மை வலியுறுத்தினார். நம்மால் தான் அதை செய்ய முடியாமல் போனது. அதைத் தவறவிட்டதால் தான் இப்போது தேவையில்லாத சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது. இன்னும் என்னென்ன நடக்கவிருக்கிறதோ! அந்த காளிமாதா தான் துணையிருக்க வேண்டும்”

“மதிநாகசுரரே! முன்பு நீங்கள் நடத்திய யாகத்தைப் போலவே இப்போதும் நடத்தினால் என்ன? அதனால் நமது காளி மனம் குளிர்ந்து அந்த பிரயாகாவை அழித்திட நமக்கான மாற்று வழியைத் தர வாய்ப்பிருக்கிறதல்லவா?”

“நல்ல யோசனை யாழி. நாமும் எல்லா ஊர்களையும் கைப்பற்றியதிலிருந்து எந்தவித யாகத்தையும் மேற்கொள்ளவில்லை. அதனால் தான் நாம் நம்முள் இத்தனை உயிர்களை இழந்திருக்கிறோம். சரி வாருங்கள் நாம் திரும்பி வட்ஸாவிற்கேச் சென்று யாகம் மேற்கொண்டு படைபலம் பெருக்கிக் கொண்டு வந்து இந்த பிரயாகாவை அழித்து அதன் மூலம் அந்த தேவர்களையும் துவம்சம் பண்ணுவோம்.”

“ஆகட்டும் மதிநாகசுரரே. அதுபடியே செய்திடுவோம்.”

என்றுக் கூறிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டு வட்ஸாவுக்குச் சென்றனர் மதிநாகசுரனும், யாகம்யாழியும் மற்றும் கோபரக்கனும். அங்கே அனைவரிடமும் கூறி ஆரம்பத்தில் காற்கோடையன் மேற்கொண்ட யாகத்தைப் போலவே இம்முறை மந்திராசுரன் தலைமையில் மதிநாகசுரனுடன் சேர்ந்து அவனின் மகன் பாற்கடையானும் செய்யத் துவங்கினான். அந்த சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்ததும் மந்திராசுரன் பாற்கைடையானை அழைத்து

“பாற்கடையானே நீ தான் எங்களின் அடுத்தத் தலைவனாகப் போகிறவன்‌. நீயும் உன் தந்தையைப் போலவே அனைத்து சித்துக்களிலும் நன்கு தேர்ச்சிப் பெற்றுள்ளாய். அதே நேரம் மதிநாசுரர் செய்த தவறை நீயும் செய்திடாமலிருக்க இன்று இந்த யாகம் முடித்த கையோடு ஈசத்துவம் சித்தியையும் பெற்றிட அனைத்தையும் செய்ய துவங்கு. மதிநாகசுரர் ஆசான் காற்கோடையன் பேச்சைக் கேட்காது தவறிழைத்து விட்டான். ஆனால் நீ அவ்வாறு இருக்க மாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மகனே நீ ஈசத்துவத்தை அடைந்தாக வேண்டும். ஏனெனில் அதுதான் நாம் ஆடிக்கொண்டிருக்கும் இந்த பரமபத ஆட்டத்தின் நமது இறுதிப் பகடையாகும். ம்..சென்று ஈசத்துவத்தை வென்று வா மகனே.”

என்று பாற்கடையானை ஆசிர்வதித்து அனுப்பிவைத்தான் மந்திராசுரன். பாற்கடையானும் தனது ஆசானான மந்திராசுரனிடமும், மதிநாகசுரனிடமும் பின் அத்தைகளான யாகம்யாழி மற்றும் மந்தாகிஷியிடமும், மாமாவான கோபரக்கனிடமும் அசிர்வாதம் பெற்றுக்கொண்டு ஈசத்துவத்தை அடைந்திட அதைத் தேடி அதற்கானவைகளை செய்திடச் சென்றான். மற்ற பிள்ளைகளுக்கெல்லாம் கற்றுவித்த வித்தைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியதற்கான பயிற்சிகளைக் கொடுத்தனர் மந்திராசுரன், மதிநாகசுரன், மந்தாகிஷி, யாகம்யாழி மற்றும் கோபரக்கன்.

எந்த பாதாளச் சுரங்கம் வழியாக பிரயாகாவைக் கைப்பற்றி அதன் மூலம் தேவர்களை அழிக்க அசுரர்கள் திட்டமிட்டனரோ அதே சுரங்கம் வழியாக சூரிய பகவான் ஊடுருவிச் செல்ல விடாமல் முயற்சித்துக் கொண்டே இருந்தார். பூலோகத்தில் பிரயாகாவைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் அசுரர்களின் கை ஓங்கியிருக்க அவ்விடமெல்லாம் இருள் சூழ்ந்திருந்தது. அந்த இருளை அகற்ற அந்த பாதாளச் சுரங்கத்தின் சிறு விரிசலை உபயோகித்துக் கொண்டார் சூரிய தேவன். அதன் வழியாக மெல்ல மெல்ல தனது ஒளிக்கதிர்களை செலுத்தி இருளை அகற்றக்கொண்டே வந்தவர் ஒரு கட்டத்திற்கு மீது அந்த பாதாளச் சுரங்கத்திற்குள் செல்ல முடியாது, செய்வதறியாது நின்ற போது அவரின் சிந்தனையில் மிளிர்ந்தது அந்த நீர்த்துளிப் பதக்கம். ஆகவே அந்த நான்கு இதழ்களைக்கொண்ட அந்த பதக்கம் தன்னருகே இருந்தால் தான் அசுரர்களின் இருள் நீக்கி தானும் பிரகாசித்து இவ்வுலகை பிரகாசிக்க வைக்கவும் முடியும் என்பதை உணர்ந்து பரந்தாமனிடம் உதவி கேட்டு அது படியே அந்த பதக்கத்துக்கு உரிமையாளர்களான கேசவன், ஞானானந்தம், வேதாந்தகன் மற்றும் முழுமதியாளை தன்னுடனே பயணிக்க ஏற்பாடு செய்தார். அதாவது மீண்டும் எல்லையிலிருந்த காவலர்களான சுப்பு மற்றும் ரங்கன் ஆகிய இருவர் கண்ணிலும் சிகராசுரனின் எலும்புக்கூடு படும்படிச் செய்தார். உடனே நவியாகம்ஷி எலும்புக்கூடுக்கு நடந்ததைப் போலவே சிகராசுரனின் எலும்புக்கூடுக்கும் நடந்தது ஆனால் இம்முறை ஒரே தடவையில் நடந்தது ஏனெனில் நால்வரும் தங்கள் நீர்த்துளிப் பதக்கத்துடன் தலைவர் மற்றும் தளபதியுடன் அந்த இடத்துக்கு வந்திருந்தனர்.

அதைக் கண்ட தலைவர் தளபதியும் தனது தம்பியுமான வீரராகவனிடம்

“வீரராகவா இப்படியே எல்லையில் அந்த அசுரர்களின் ஒவ்வொரு எலும்புக்கூடாக கிடைத்துக் கொண்டிருக்கிறதே!! இதிலிருந்து உனக்கு ஏதாவது தோன்றுகிறதா?”

“ஒன்று நன்றாக புரிகிறது அண்ணா. அந்த அசுரர்கள் இந்த பாதாளச் சுரங்கத்தை உபயோகிக்கிறார்கள் மேலும் அவர்களால் பாதாளத்தை விட்டு வெளியே வந்தால் தண்ணீரிலிருந்து வெளியே வந்தால் எப்படி மீன்களால் உயிர் வாழ முடியாதோ அது போல இவர்களாலும் முடியவில்லை என்று நினைக்கிறேன் அதுதான் யுதமின்றி ரத்தமின்றி இவ்வாறு எலும்புக்கூடுகளாக கிடக்கின்றனர். மற்றொரு காரணமாக நமது ஊரிலிருக்கும் இந்த நீர்த்துளிப்பதக்கத்தின் தாக்கத்தால் இவ்வாறு ஆகிறார்கள் என்றும் எனக்குத் தோன்றுகிறது.”

“இரண்டும் கூட இருக்கலாம் இல்லையா தலைவரே”

“ஆமாம் கேசவன் சொல்வது போல இரண்டுமே கூட இருக்க வாய்ப்பிருக்கிறது அண்ணா.”

“சரி அப்படி என்றால் நாம் ஒன்று செய்வோம். இந்த நான்கிதழ் நீர்த்துளிப் பதக்கத்துடன் நீங்கள் நால்வரும் இந்த பாதாளச் சுரங்கம் வழியாகவே செல்லுங்கள். உங்கள் காவலுக்கு வீரராகவன் மற்றும் இந்த இரு காவலர்களான சுப்பு மற்றும் ரங்கனை அனுப்புகிறேன். பாதாளத்திற்குள் சென்றிடாது மேலேயே நடந்து சென்று இது போல வேறெங்கு அசுரர்களின் எலும்புக் கூடுகள் இருக்கின்றன என்று தெரிந்து வாருங்கள்.”

“ஆகட்டும் தலைவரே”

“அதுமட்டுமல்ல நீங்கள் மேற்கொள்ளப் போகும் இந்த பயணத்தில் அந்த அசுரர்களை சந்திக்கும் சந்தர்ப்பமும் வரலாம். ஆகையால் ஜாக்கிரதையாக சென்று வாருங்கள். வெற்றி நமதே”

என்று தலைவர் வீரசேகரன் கூறியதும் உடனே வீரராகவனுடன் செயலில் இறங்கினர் நால்வரும். சூரிய பகவானுக்கும் அவர் எதிர்பார்த்ததுப் போலவே நடந்ததில் மகிழ்ச்சியானார். அந்த நான்கிதழ் பதக்கத்துடன் பாதாளச் சுரங்கத்தின் மேல் தளத்தில் நடந்து வந்துக் கொண்டிருந்தனர் நான்கு பேரும், தளதியாரும், இரண்டு சிப்பாய்களும். அவர்களுக்கு முன்னே சற்று தூரத்தில் சென்றக் கொண்டிருந்த சூரிய பகவான் மெல்ல மெல்ல தனது ஒளிக் கதிர்களைக் கொண்டு அந்த பாதாளச் சுரங்கத்திற்குள் ஊடுருவி இருளை நீக்கிக் கொண்டே வந்தார். அப்படி நடந்தும் குதிரையில் ஏறிக் கொண்டும் தளபதியாரும், நால்வரும் முதலில் கொசம்பியை சென்றடைந்தனர். அங்கே இருள் சுழ்ந்திருந்ததைப் பார்த்ததும் கேசவன்

“இதைப் போலத்தான் கஷியையும் இருள் சூழ்ந்திருந்தது. நானும் கோதகனும் சென்றபோது இதுபோல ஒரு கொடூரமான இருள் சூழ்ந்த கஷியைத்தான் கண்டோம்.”

“அப்படியா!! அப்படி என்றால் இந்த இருளானது அந்த அசுரர்களுடையது. இதை அகற்ற அந்த சூரியனே உதவிக்கரம் நீட்ட வேண்டும்”

என்று வீரராகவன் கூறி முடித்ததும். முழுமதியாளின் கழுத்திலிருந்த நீர்த்துளிப் பதக்கம் ஜொலித்தது. அதனுளிருந்து வந்த ஒளியோடு சூரியன் தனது ஒளிக்கதிர்களையும் சேர்த்து விட்டதில் ஒரு நொடியில் கொசம்பியில் இருள் நீங்கி மரம் செடிக் கொடிகள் அனைத்தும் புத்துயிர் பெற்றது. அதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால் முழுமதியாளின் முகம் வாடியிருந்தது. அதை கவனித்த வேதாந்தகன் அவளிடம்

“என்ன மதி? ஏன் உன் முகம் வாடியிருக்கிறது?”

“எனக்கு கவலையாக இருக்கிறது. அதை சொல்லாமா?”

“தாராளமாக சொல்லலாம். சொன்னால் தானே எங்களுக்கும் தெரியும்”

“ஆகட்டும் தளபதியாரே. என் கவலை என்னவென்றால் இந்த நீர்த்துளிப் பதக்கம் தான் நம்மூரை அந்த அசுரர்களிடமிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது இல்லையா”

“ஆமாம் இதில் என்ன கவலை உனக்கு மதி?”

“இரு வேதாந்தகா. இரு. அப்படியென்றால் இப்போது நாம் இந்த பதக்கத்துடன் இங்கு அதாழது கொசம்பிக்கு வந்துள்ள இந்த நேரத்தில் அந்த அசுரர்கள் நமது பிரயாகாவைத் தாக்க முயன்றிருந்தால்!”

என்று முழுமதியாள் கூறியதும் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின் கேசவன்

“மதி சொல்வதும் சரிதான். நாமும் நமது பதக்கமும் அங்கில்லாத நேரத்தை அந்த அசுரர்கள் நிச்சயம் உபயோகித்துக் கொள்ள தான் பார்ப்பார்கள். தளபதியாரே இப்போது என்ன செய்வது?”

“நீங்கள் சொல்வதும் சரிதான் ஆனால் என் அண்ணன் வீரசேகரனுக்கு இது தெரியாமால் இருந்திருக்காது. அவர் இதை யோசிக்காமல் கூறியிருக்கவும் மாட்டார். ஆகையால் நாம் நமது பாதையை தொடர்ந்துச் செல்வோம்”

“அதற்கில்லை தளபதியாரே அங்கே நம் மக்கள்…ஒரு வேளை நாம் உயிரோடு இருந்தால் தான் இது போல அசுரர்களால் இருண்ட இடங்களை மீட்டெடுக்க முடியுமென்றெண்ணி அவர் நம்மை அனுப்பி வைத்திருந்தால்!!”

“ஆம் வேதாந்தகன் சொல்வது போல தான் தலைவர் எண்ணியிருப்பார். எதற்கும் நாம் திரும்பி பிரயாகா சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம் வாருங்கள்”

“ஞானானந்தம் அண்ணா சொல்வது தான் சரி வாருங்கள் சென்று பார்த்துவிட்டு வந்திடுவோம்”

“ம்…சற்று பொறுமையாக இருங்களேன். என்னை யோசிக்க விடுங்கள்”

“மன்னிக்க வேண்டும் தளபதியாரே. இதில் யோசிக்க ஒன்றுமில்லை. வாருங்கள் நம் தலைவரையும் நம் மக்களையும் பார்த்துவிட்டு வந்திடுவோம். எங்க பிள்ளைக் குட்டிங்க எல்லாத்தையும் விட்டுவிட்டு தான் உங்களுடன் வந்துள்ளோம். தயவுசெய்து திரும்பிச் சென்றுப் பார்த்து வருவோம் தளபதியாரே.”

என்று அனைவரும் தளபதி வீரராகவனிடம் மாறி மாறி சொல்ல அவரும் சரி என்று தலையசைக்க அனைவரும் பிரயாகாவை நோக்கித் திரும்பினர். அதைக் கண்ட சூரிய பகவான் அவர்களைத் தடுத்து நிறுத்த ஏதேதோ செய்துப் பார்த்தும் அவர்கள் நிற்காததால் வேறு வழியின்றி அவர்கள் முன் தோன்றி

“சற்று நில்லுங்கள். நான் தான் சூரிய தேவன். நீங்கள் எவரும் பின்வாங்கக் கூடாது. என்னுடன் சேர்ந்து முன்னோக்கிச் செல்லுங்கள்.”

அனைவரும் சூரிய தேவனை வணங்கினர். பின் முழுமதியாள் சூரியனிடம்

“சூரிய தேவா தங்களுடன் பயணிக்க நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம் ஆனால் நாங்கள் எங்கள் ஊரான பிரயாகாவில் இல்லாதிருக்கும் சமயம் அந்த அசுரர்கள் எங்கள் ஊரை அழித்துவிட்டால்…இதோ இந்த கொசம்பியைப் போல இருளாக்கிவிட்டால்!”

“அப்படி எதுவும் பிரயாகாவிற்கு நேர்ந்திடாது. கவலை வேண்டாம்.”

சூரிய தேவனின் சொல்லில் நம்பிக்கையில்லாதவர்களைப் போல் அதே இடத்தில் அசையாது நின்றிருந்தனர்.

தொடரும்…Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s