அத்தியாயம் 55: எஞ்சியவர் பதினாறு

வேதாந்தகனும் முழுமதியாளும் நீர்த்துளிப் பதக்கச் சங்கிலியுடன் எல்லையை நோக்கிச் சென்றனர். அவர்கள் இருவரும் எல்லையை நெருங்கியதும் முழுமதியாள் கழுத்திலிருந்த பதக்கம் அவள் கழுத்தின் இடது மற்றும் வலது புறமாக ஆடிக்கொண்டேயிருந்தது. அவர்கள் எல்லையைச் சென்றடைந்ததும் அதன் ஆட்டம் நின்றது. ஆனால் நவியாகம்ஷியின் எலும்புகூடு சில்லு சில்லாக நொறுங்கிப் போனது. அதைப் பார்த்த அனைவரும் வியப்பில் முழுமதியாளையும் வேதாந்தகனையும் பார்த்தனர். நவியாகம்ஷியின் மண்டை ஒடு உருண்டு முழுமதியாள் காலடியில் வந்ததும் அங்கேயே கிடந்தது. அப்போது அதை எடுக்க முயன்ற முழுமதியாளை தடுத்து நிறுத்திய தலைமை மருத்துவர் அவள் அருகேச் சென்று அந்த மண்டை ஓட்டைப் பார்த்து திகைத்த அவர்

“வீரராகவா இங்கே வா. இதைப் பார்”

என்றதும் வீரராகவன் ஓடி மருத்துவர் அருகே சென்று

“என்னவாயிற்று மருத்துவரே!”

“இங்கே பார் இந்த அதிசயத்தை.”

“என்ன அதிசயம் மருத்துவரே? எனக்கொன்றும் தெரியவில்லையே!”

“இதோ இதன் மண்டை ஓட்டைப் பார். அதிலிருந்து கசிந்துக் கொண்டிருந்த திரவத்தைப் பார்”

“ஆமாம். எங்கே அந்த திரவத்தை காணவில்லை.”

“திரவம் அங்கேயே தான் இருக்கிறது வீரராகவா ஆனால் உறைந்துப் போய் இருக்கிறது. நீர்த்துளிப் பதக்கத்தின் தாக்கத்தில் அது உறைந்துப் போயுள்ளது. மற்ற எலும்புகள் எல்லாம் நொறுங்கி மண்ணோடு மண்ணாக கலந்துவிட்டாலும் இந்த மண்டை ஓடு மட்டும் பாதியாகி உருண்டு வந்ததற்குக் காரணம் இந்த பெண் அணிந்திருக்கும் பதக்கத்திடம் மன்னிப்பு கேட்கவே வந்துள்ளது.”

என்று மருத்துவர் கூறி முடித்ததும் அந்த மண்டை ஓடு இருந்த இடத்திலேயே கருகி சாம்பலாகி மண்ணோடு மண்ணாக கலந்து விட்டது.

அங்கு நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் திகைப்பில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மற்ற அனைவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தனர். பின் வீரசேகரன்

“ம்…முழுமதியாள் உன் கவனக்குறைவால் இப்போது எங்கள் அனைவருக்கும் தேவையில்லாத அலைச்சலைக் கொடுத்துவிட்டாய். அப்போதே அதை அணிந்து வந்திருந்தால் இப்படி இரண்டு முறை இங்கு அனாவசியமாக வந்திருக்க வேண்டியதில்லை அல்லவா”

“என்னை மன்னித்து விடுங்கள் தலைவரே இனி நான் இந்த பதக்கமின்றி எங்கும் செல்ல மாட்டேன். இது இனி என் கழுத்திலிருந்து இறங்கவே இறங்காது”

“நல்லது. சரி இங்கு இனி நமக்கென்ன வேலை? அனைவரும் ஊருக்குள் செல்லலாம் வாருங்கள்.”

“ஆகட்டும் அண்ணா. ம்…சுப்பு மற்றும் ரங்கனைத் தவிர மற்ற எல்லோரும் வாருங்கள்.”

என்றதும் அனைவருமாக ஊருக்குள் சென்றனர்.

ஈசத்துவத்தை அடைவதற்காக காட்டிற்குள் தவம் மேற்கொள்ளச் சென்ற மதிநாகசுரனுக்கு ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்று அவனது உள்ளுணர்வு உணர்த்தியது. அதோடு அவனை அந்த தவத்தை மேலும் தொடரவிடாது அவன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைப் பாய்ந்துக் கொண்டே இருந்தது. அவனால் அவன் மேற்கொண்ட வேலையில் சரியாக ஈடுபட முடியாமல் தவித்தான். நேரே அங்கிருந்த ஆற்றில் மூன்று முறை மூழ்கி எழுந்தான். மீண்டும் தவம் மேற்கொள்ள அதற்கான விதிமுறைகளின்படி தானே ஏற்பாடு செய்திருந்த இடத்தில் அமர்ந்தான். ஆனால் இம் முறையும் அவனால் தன்னை மனதை ஒரு நிலைப் படுத்த முடியாமல் போனது. அவ்வாறு ஏன் தனக்கு மீண்டும் மீண்டும் நடக்கிறது என்ற குழப்பத்தில் செய்வதறியாது தவித்தான். வேறு வழியேதும் புலப்படாததால் நேராக ஆசானிடமே சென்று அதற்கான காரணத்தைத் தெரிந்துக் கொள்ள முடிவெடுத்து வட்ஸாவை நோக்கிச் சென்றான்.

இதற்கிடையில் வட்ஸாவில் நவியாகம்ஷியை காணவில்லை என்று அனைவரும் அங்குமிங்குமாக தேடிக்கொண்டிருந்தனர். அப்போது காற்கோடையன் கண்விழித்துப் பார்த்தார். தன் இனத்தவர்கள் பரபரப்பாக எதையோ தேடுவது அறிந்து அவரருகே இருந்த மந்திராசுரனை தனது மெல்லிய குரலில் அழைத்தார். ஆசானின் குரல் கேட்டதும் மந்திராசுரன் உடனே அவரிடம்

“ஆசானே சொல்லுங்கள் என்ன வேண்டும்?”

“அனைவரும் ஏன் பதற்றமாக உள்ளீர்கள்? அங்கே எதைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்?”

“ஆசானே அது ஒன்றுமில்லை நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.”

“நீங்கள் தான் இனி பார்த்துக் கொள்ள வேண்டும் மந்திரா ஆனாலும் இப்போது நான் தெரிந்துக் கொள்ளக் கூடாதா என்ன?”

“நம் நவியாகம்ஷியைக் காணவில்லை ஆசானே. அவளை தான் அனைவருமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.”

“என்னது நவியாவை காணவில்லையா? அவள் என்ன சிறுப் பிள்ளையா? நம் போர் படையின் தலைவி அவள். எங்கே சென்றிருக்கப் போகிறாள். இங்கே தான் ஏதாவது செய்து நாம் பிரயாகாவை நெருங்க வழி கண்டுப் பிடிக்கச் சென்றிருப்பாள்.”

“அப்படி இருந்தால் நல்லது தான் ஆசானே. ஆனால்…”

“என்ன ஆனால்?”

“தாங்கள் நேற்று மதிநாகசுரனுடன் யாராவது சென்றிருக்க வேண்டுமென சொன்னதிலிருந்தே நவியா ஏதோ சிந்தனையிலிருந்தாள். ஒரு வேளை அவள் மதியைத் தேடி அவனுக்கு உதவச் சென்றிருப்பாளோ ! என்று எண்ணிக் கொண்டு நான் நின்றிருந்த போதுதான் தங்கள் குரல் கேட்டு வந்தேன்.”

“சரி அப்படி சென்றிருந்தாலும் அதில் தவறொன்றும் இல்லையே! நீங்கள் எல்லோரும் ஏன் அதற்காக இப்படித் தவிக்க வேண்டும்?”

“அவள் இங்கே எங்களில் யாரிடமாவது சொல்லிக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் அவள் எவரிடமும் சொல்லாது சென்றிருக்கிறாளா! ஏன் அவள் அப்படி செல்ல வேண்டும்? அப்படியே சென்றிருந்தாலும் அவள் மதியிடம் சென்றுவிட்டாளா? என பல ஐயங்கள் எழுகின்றன.”

“ம்…சரி சரி இரு நான் கண்டறிந்து சொல்கிறேன்.”

என்று தனது ஞானதிருஷ்டியில் நவியாகம்ஷி எங்கே என்று கண்டுப்பிடிப்பதற்காக தன் கண்களை மூடினார் காற்கோடையன். அவர் கண்விழித்து ஏதேனும் விவரம் சொல்லுவார் என்று அவரருகிலேயே காத்திருந்தான் மந்திராசுரன். ஆனால் ஆசான் எழவேயில்லை. அதற்குள் வட்ஸா, கஷி, மாயாபுரி மற்றும் பாதாளச் சுரங்கம் என எல்லா இடங்களிலும் சென்று நவியாகம்ஷி இருக்கிறாளா என்று பார்த்துவிட்டு…அவள் எங்குமில்லாததால் சோர்வாகவும், சோகமாகவும் அனைவரும் திரும்பி வந்து சேர்ந்தனர்.

ஆசான் அருகே அமர்ந்திருந்த மந்திராசுரனிடம் வந்த மந்தாகிஷி

“என்ன? மந்திராசுரா அண்ணா…நவியாவைத் தேடாமல் ஆசானருகே அமர்ந்திருக்கிறீர்கள்? இவ்வளவு தான் உங்களுக்கு நவியா மீதுள்ள அக்கறையா?”

“வேண்டாம் மந்தாகிஷி. இங்கே என்ன நடந்தது என்று தெரியாமல் வார்த்தையை விட்டுவிடாதே. ஆசான் நவியா இருக்குமிடத்தை அவரது ஞானதிருஷ்டியில் கண்டு சொல்வதாக கூறினார் ஆனால் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். அதுதான் அவர் எப்போது வேண்டுமானாலும் எழுந்து நவியாவிற்கு என்ன நடந்தது அல்லது அவள் எங்கே இருக்கிறாள் என்ற ஏதாவது விவரம் சொல்வாரே என்று இங்கேயே காத்திருக்கிறேன்”

என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது மந்திராசுரன் அருகே வந்து நின்றனர் மதிநாகசுரன் மற்றும் நவியாகம்ஷியின் பிள்ளைகளான பாற்கடையான், நாதவேழிரி, ராட்சதரசி மற்றும் நம்மாரசுரன். அவர்களில் ராட்சதரசி மந்திராசுரனிடம்

“மாமா ஆசானும் உடம்பு முடியாது படுத்தப்படுக்கையாகி விட்டார். அப்பாவோ ஈசத்துவத்தை அடைவதற்காக காட்டிற்குச் செனறு விட்டார். இப்போது எங்கள் தாயாரையும் காணவில்லை. ஏன் எங்கள் குடும்பத்தினருக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது?”

என்று கேட்டாள் அப்போது மிளானாசுரி கோபரக்கன் மகளானா வியழியசுரி ராட்சதரசியைப் பார்த்து

“என்ன இது என் குடும்பம் உன் குடும்பமென்று பேசுகிறாய் ராட்சரசி. இது நம் குடும்பம். தாய் நவியாகம்ஷியை காணவில்லை என்று நாங்களும் தான் பதற்றத்தில் உள்ளோம். அதுவுமில்லாமல் எங்கள் தாயார் மிளானாசுரியை பரிக்கொடுத்துவிட்டு நிற்கும் நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது! சொல்!”

அதைக் கேட்டுக்கொண்டிருந்த மந்தாகிஷி

“அப்படிப் பார்த்தால் எனது மகன் மற்றும் என் கணவன் இறந்துப் போனதற்கு நான் எங்கு போய் நீதிக் கேட்பேன்”

“என்ன இது மந்தா? அவர்கள் தான் குழந்தைகள் ஏதோ பேசுகிறார்கள் என்றால் நீயுமா?”

“என்ன மந்திரா அண்ணா? இரு உயிர்களை இழந்த வேதனையில் நான் பேசிவிட்டேன். இப்படியே இங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தால் நமது நவியாவிற்கு என்ன ஆனது? அவள் எங்கிருக்கிறாள் என்று எப்படி தெரிந்துக் கொள்ள முடியும்? உடனே ஏதாவது செய்து இந்த குழப்பத்திலிருந்து வெளிவர வேண்டும்”

“அதற்கு அந்த நவியாவே நேரில் வந்தால் தான் முடியும்”

“ஏன் அப்படி கூறுகிறாய் யாழி? இதோ நமது ஆசான் கண்விழித்தால் கூறிவிடுவாரே!”

“மந்திரா அண்ணா இவர் எப்போது கண்விழிப்பது நாம் எப்போது தெரிந்துக் கொள்வது? தேவையில்லாமல் காலதாமதம் செய்கிறோம் என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.”

என்று அவர்கள் அனைவரும் அவர்களுக்குள்ளே விவாதித்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்து சேர்ந்தான் மதிநாகசுரன். அவனைப் பார்த்ததும் மந்திராசுரன் ஓடிச் சென்றுக் கட்டியணைத்துக் கொண்டு

“மதி வா வா. இங்கே ஒரே குழப்பமாக உள்ளது. நல்ல வேளை நீயே வந்து விட்டாய். ஈசத்துவம் பெற்று விட்டாயா? ஆமாம் எங்கே நவியா?”

என்று மந்திராசுரன் கேட்டதும் சற்று பதற்றமானாலும அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்

“நவியாவை இங்கே உங்களிடம் தானே விட்டுச் சென்றேன். இப்போது என்னிடம் அவள் எங்கே என்று கேட்கிறீர்கள்!!”

“மதி நவியாவை காணவில்லை. அவள் ஒருவேளை உனக்கு உதவிப் புரிய வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் தான் அப்படிக் கேட்டேன்.”

“இல்லையே அவள் என்னிடம் வரவேயில்லையே!”

“அப்படியென்றால் அவள் எங்கு சென்றிருப்பாள்?”

“அவள் எங்கே சென்றிருக்கப் போகிறாள். இங்கு தான் எங்காவது இருப்பாள். அவளே வந்துவிடுவாள். கவலை வேண்டாம்”

“இல்லை மதிநாகசுரரே….இல்லை…நாங்கள் அனைவரும் எல்லா இடங்களிலும் சென்றுப் பார்த்து வந்துவிட்டோம். நமது நவியாகம்ஷி எங்குமே இல்லை.”

“என்ன பிதற்றுகிளாய் யாழி? மந்திரா என்ன நடந்தது என்பதை விளக்கமாக சொன்னால் நான் புரிந்துக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.”

என்று மதிநாகசுரன் கர்ஜித்ததும் அனைவரும் சற்று ஒதுங்கி நின்றனர். பின் மந்திராசுரன் நடந்ததை விளக்கிக் கூறினான். அதைக் கேட்டதும் நேராக தன் ஆசானிடம் சென்ற மதிநாகசுரன் அவரின் கையைப் பிடித்துக் கொண்டு கண்களில் கண்ணீருடன்

“ஆசானே என் நவியா எங்கே? தயவுசெய்து கண் திறந்து நடந்ததைக் கூறுங்கள். ஆசானே!! ஆசானே!!”

என்று கதறினான். மதிநாகசுரனின் அழுகுரல் கேட்டும் ஆசான் எழவேயில்லை. ஆனால் மூடியிருந்த அவர் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்ததைப் பார்த்த மதிநாகசுரன் அவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே

“ஆசானே ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்று உங்கள் கண்களில் வடியும் கண்ணீரை வைத்தே புரிகிறது. ஆனால் என்ன அது என்று தயவுசெய்து கண்விழித்துக் கூறிவிடுங்கள். என் நவியாவிற்கு என்ன ஆனது? அவள் எங்கே?”

என்று ஆசானின் கைகளை இறுக்கிப் பிடித்தப்படி அழுதான் மதிநாகசுரன். அவனின் ஆசை மனைவி. வீராதிவீரி. எதற்கும் அஞ்சாதவள். துணிச்சலான பெண் என்றால் நவியா என்றளவுக்கு பெயர் பெற்றவள் அவர்களுடன் இல்லாததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை…அவன் மீண்டும் ஆசானிடம்

“ஆசானே! ஈசத்துவம் அடைவதற்கான தவத்தை மேற்கொள்ள முடியாது என் மனம் ஒரு நிலையில் இல்லாது என்னை பாடாய்ப்படுத்தியது அது ஏன்? அவ்வாறு நிகழாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டுமென்று தங்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளவே வந்தேன். ஆனால் இங்கோ என் நவியாவை காணவில்லை. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது ஆசானே!”

என்று ஆசானிடம் மதிநாகசுரன் கேட்டதும் மீண்டும் அவர் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது. அதைப் பார்த்த மதிநாகசுரன் மீண்டும் அவர் கண்களைத் துடைத்து விட தன் வலது கையைக் கொண்டுப்போனதில் அதிர்ந்துப் போனான். அவனின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டதும் மந்திராசுரன்

“மதி என்னவாயிற்று? ஏன் அமைதியாகிவிட்டாய்? ஆசானே! ஆசானே! எழுந்திரியுங்கள்”

என்று மந்திராசுரன் காற்கோடையனின் கைகளைப் பிடித்து உலுக்கினான் ஆனால் ஆசானின் கைகள் சட்டென கீழே படுக்கையில் விழுந்தன. அதைப் பார்த்ததும் அனைவரும் காற்கோடையனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தனர். மந்திராசுரன் மதிநாகசுரனிடம்

“மதி…மதி…மதி…இப்படி நம்மை அம்போ என்று விட்டு விட்டுச் சென்றுவிட்டாரே! நாம் என்ன செய்வோம். நமது நவியா எங்கிருக்கிறாள் என்ற விவரத்தை சொல்ல வந்து சொல்லாது சென்று விட்டாரே மதி. ஈசனே இது உனக்கே நியாயமா சொல். எங்கள் ஆசானின் உயிரைக் குடித்து உனக்கென்ன ஆகப் போகிறது?”

மதிநாகசுரன் ஒரு நிமிடம் பிரம்மை பிடித்தவன் போல இருந்தான். பின் சட்டென சுயநினைவுக்கு திரும்பியவன் தன் மனைவியைக் காணவில்லையே என்றழுவதா இல்லை தன்னை சிறு வயது முதல் அந்த தேவர்களிடமிருந்துக் காப்பாற்றி வளர்த்து பல வித்தைகளையும் சித்திகளையும் கற்றுக்கொடுத்து தந்தைக்கு தந்தையாக, குருவுக்கு குருவாக இருந்து வந்த ஆசான் காற்கோடையனின் மறைவுக்காக அழுவதா என்ற திகைப்பிலிருந்தான். பின் அதிலிருந்தும் மீண்டு வந்து ஆக வேண்டி காரியங்களை செய்வதில் இறங்கினான். கோபரக்கனிடம் சில வேலைகளையும், சிகராசுரனிடம் சில வேலைகளையும் என பிரித்துக் கொடுத்து காற்கோடையனை சகல மரியாதையுடன் அவருக்கான இறுதிச் சடங்குகளை அவர் கற்றுக்கொடுத்த அசுரர்குல முறைப்படி சிறப்பாக செய்து அவரை அனுப்பிவைத்துவிட்டு அனைவரும் வந்தனர். அப்போது மந்திராசுரன் மதிநாகசுரனிடம்

“நம்மைக் காப்பாற்றி வளர்த்து பாதுக்காத்து வந்த ஆசானின் ஓரே ஒரு ஆசை, அதுவே அவரின் கடைசி ஆசையும் கூட…அதை நாம் எப்பாடுப்பட்டாவது நிறைவேற்ற வேண்டும்.”

“ஆமாம் மந்திரா. அந்த இந்திரனை…”

“சும்மா விடக்கூடாது மதி…”

“சரி இருவரும் இங்கு இப்படி சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே…அங்கே நமது சாம்பீனிகள் ஒவ்வொன்றாக தரையில் விழுந்துக் கொண்டே இருக்கின்றன. அதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் உண்டா என்று கூறுங்கள். அதுவுமில்லாமல் நமது நவியாவை கண்டறிந்திட வேண்டிய வழியையும் யோசியுங்கள். ஆசானுக்கு அவரின் நேரம் நெருங்கியது அந்த யமன் அவரை அழைத்துக் கொண்டான். இனி எஞ்சி இருப்பவர்களாவது என்ன செய்யலாமென்று ஒரு முடிவுக்கு வாருங்கள். என்னடா இவள் இப்படிப் பேசுகிறாளே என்று யாரும் எண்ண வேண்டாம். நான் என் சிம்பாவை பறிக்கொடுத்த போது நமது ஆசான் இதைத் தான் என்னிடம் சொல்லி என்னைத் தேற்றினார். அதையே தான் இப்போது நான் உங்கள் அனைவருக்கும் சொல்லி உங்களைத் தேற்ற முயற்சிக்கின்றேன்.”

“ஆகட்டும் மந்தாகிஷி. நீ சொல்வதும் சரிதான். இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம். வாருங்கள்”

என்று கூறிக்கொண்டே அனைவரும் சென்று வீழ்ந்துக் கொண்டிருந்த சாம்பீனிகளைப் பார்த்தனர். அனைத்து சாம்பீனிகளும் காற்கோடையனின் ஆன்மாவால் உருவாக்கப்பட்டு அவரின் கட்டளைப்படி இருந்து வந்தது. இப்போது அவரே இல்லாது போனதும் அவரின் நிழல்களான சாம்பீனிகளும் ஒன்றுமில்லாது வீழ்ந்தன. அதைப் பார்த்த மதிநாகசுரனும் மந்திராசுரனும் அவர்களுக்குள்

“மந்திரா இவற்றில் ஒன்றிருந்தால் கூட நமது ஆசானே நம்முடன் இருப்பதுப் போல ஒரு உணர்வைக் கொடுத்திருக்கும் ஆனால் அனைத்தும் இப்படி அவருடனே சென்றுவிட்டனவே!!”

“என்ன செய்ய மதி. ஆசான் அவர் இருக்கும் போதே அந்த தேவலோகத்தைக் கைப்பற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு ஊர் மக்களையும் அழித்து சாம்பீனிகளாக்கி நமக்கென பெரும்படையை உருவாக்கினார்…என்ன செய்ய? சரி இனி நாம் என்ன செய்யப் போகிறோம் மதி?”

“ஆமாம் மதிநாகசுரரே. இனி நாம் என்ன செய்யப் போகிறோம். இப்போது நாம் ஆறு பேர் தான் உள்ளோம். நம்மால் எப்படி அந்த தேவலோகத்தை கைப்பற்ற முடியும்?”

“மந்தாகிஷி நீ போட்ட கணக்கில் சிறிய தவறு இருக்கிறது”

“கணக்கா!! என்ன கணக்கு? என்ன தவறு?”

“இப்போது நாம் ஆறு பேர் அல்ல…நாம் பதினேழுப் பேர் உள்ளோம். நமது இளஞ்சிங்கங்களை விட்டுவிட்டாயே!”

“அண்ணா அவர்களுக்கு இனி தான் நாம் பயிற்சியளிக்க வேண்டும். அவர்கள் அனைத்தையும் பயின்று அதன் பின் படையை உருவாக்கி எப்போது தேவலோகத்தைக் கைப்பற்றுவது?”

“தேவலோக்ததை விடு மந்தா.‌..முதலில் எப்போது நாம் அந்த பிரயாகாவைக் கைப்பற்றுவது என்று முதலில் யோசிப்போம்.”

“ஆமாம் யாழி நீ சொல்வதும் சரி தான் எப்படியாவது அந்த பிரயாகாவையும் அவர்களிடமிருக்கும் அந்த நீர்த்துளிப் பதக்கத்தையும் அழிக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே தீட்டி செயலில் இறங்க வேண்டும்.”

“மதிநாகசுரா எது செய்தாலும் சற்று பொறுமையாக சிந்தித்து செய்திட வேண்டும் ஏனெனில் நம்மிடம் ஆட்கள் குறைவு. அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்ல நவியா வேறு எங்கு சென்றுள்ளாள் என்று தெரியவில்லை. நீ இவர்களை அழைத்துக் கொண்டு நவியாவைத் தேடுவதுடன் திட்டத்தையும் தீட்டு. நான் இனி நமது அடுத்த தலைமுறையினரை அதற்கு தயார் செய்கிறேன்.”

“ஆக நமது பிள்ளைகளுக்கு இனி நமது ஆசான் காற்கோடையனின் இடத்திலிருந்து நாம் அவரிடமிருந்துக் கற்ற அனைத்தையும் கற்பிக்கப் போவது எங்கள் ஆசானின் முதல் சீடனான நமது மந்திராசுரன் அண்ணா. பிள்ளைகளா இவர் தான் இனி உங்களின் ஆசான்.”

என்று மந்தாகிஷி சொன்னதும் அதை ஆமோதித்துப் பேசினான் மதிநாகசுரன். பின் பிள்ளைகளை மந்திராசுரன் பொறுப்பில் விட்டுவிட்டு மற்ற ஐந்துப் பேரும் நவியாவைத் தேடியும், பிரயாகாவை கைப்பற்றிடும் எண்ணத்துடனும் மீண்டும் பாதாள சுரங்கத்திற்குள் சென்றனர்.

பிரயாகாவிற்கு முன் முடிந்திருந்த பாதாளச் சுரங்கத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அவர்களுக்காகக் காத்திருந்ததை அறியாது சென்றனர். முதலில் சென்ற சிகராசுரன் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டதும் அவனை சுட்டெரித்தது. அதைப் பின்னால் வந்துக் கொண்டிருந்த மற்ற நால்வரும் கண்டதும் சூரியனின் ஒளிக்கதிர்கள் அவர்கள் மீதுப் படாதவாறு இன்னும் பின்னால் சென்றனர். அப்போது மதிநாகசுரன் அவர்களிருந்த இடத்தை இருளாக்கி சூரியனின் கதிர்கள் வராதவாறு செய்தான். அடுத்து என்ன செய்வென்று யோசிக்க அங்கேயே அமர்ந்துக் கொண்டனர். அப்போது மந்தாகிஷி

“நாம் நமது சிகராசுரனையும் இழந்துவிட்டோம். எனக்கென்னவோ நம்மால் அந்த பிரயாகாவை நெருங்கக் கூட முடியாது என்று தோன்றுகிறது.”

“ம்….மந்தாகிஷி போதும் உன் பிதற்றலை நிறுத்து. உனக்கு எங்களுடன் வர இஷ்டமில்லை என்றால் நீ வட்ஸாவிற்கே திரும்பிச் சென்று விடு.”

என்று மதிநாகசுரன் கூறியதும் அவள் விருட்டென்று எழுந்து வட்ஸாவிற்குச் சென்றாள். அந்தப் பாதாளச் சுரங்கத்திற்குள் மீதமிருந்தது மதிநாகசுரன், யாகம்யாழி மற்றும் கோபரக்கன் ஆகிய மூவர் மட்டுமே.

அங்கு அமர்ந்து யோசித்தப்போது மதிநாகசுரனுக்கு ஒன்றுத் தோன்றியது அதை யாழியிடமும் கோபரக்கனிடமும் கூறினான். அதைக் கேட்டதும் இருவரும் பயம் கலந்த திகைப்பில் ஆழ்ந்தனர். அதுவரை பயமறியாத அசுரர்களின் கண்களிலும் மனதிலும் பயம் என்ற ஒரு புதிய உணர்ச்சித் தொற்றிக்கொண்டது.

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s