அத்தியாயம் 54: கவனக்குறைவு

தேவர்கள், அசுரர்கள் மற்றும் பிரயாகா மக்கள் என மூன்றுப் பிரிவினர்களுக்குள் ஆடப்படும் இந்த பரமபத ஆட்டத்தின் அதாவது இந்த சூழ்ச்சியாட்டத்தின் இறுதிப் பகடையாக ஈசத்துவத்தை அடையச் சென்றுள்ளான் மதிநாகசுரன். தங்களின் இறுதிப் பகடையாக அந்த அசுரனை அதை எடுக்கவிடாது செய்து… கூட இருக்கும் சக அசுரர்களை ஒவ்வொருவராக அழிப்பதை மும்முரமாக செய்து வருகின்றனர் தேவர்கள். இதில் எதுவுமே தெரியாது புரியாது ஆட்டத்தை விறுவிறுப்பாக ஆடிக் கொண்டிருக்கும் நான்கு ஆட்ட நாயகர்கள். தேவர்களுடன் கைக்கோர்த்து பரந்தாமனை சிந்தையில் எண்ணிக்கொண்டு அவர்களால் ஆன எல்லா வற்றையும் செய்துக் கொண்டே ஆட்டத்தின் முடிவை அறிந்துக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கும் பிரயாகா மக்கள், தலைவர்கள் வீரசேகரன் மற்றும் மாயாபுரி ஊர் தலைவர்.

இந்த பரமபத ஆட்டத்தில் இத்தனை நாட்களாக பூர்வஜென்ம புண்ணிய பலன்களினால் ஏணிகளின் மீதேறி பவணி வந்த அசுரர்களை இப்போது பாம்புகளான பல தடைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துக் கொண்டிருக்கின்றன. இத்தனை நாட்களாக அசுரர்கள் என்னும் பாம்புகளிடம் கடிப்பட்டு மாண்டு மடிந்தவர்களினூடே தப்பித்துப் பிழைத்த மனிதர்கள் இப்போது சிறு சிறு ஏணிகளில் ஏறத் துவங்கியுள்ளனர். இவர்கள் ஏறி வரும் பாதையிலிருக்கும் பாம்புகள் அனைத்தையும் அகற்றும் பணியை செவ்வனே செய்து வருகின்றனர் தேவர்கள்.

ஞானானந்தம் நடந்த விவரத்தைக் கூறி முடித்ததும் அதை கேட்டுக்கொண்டிருந்த தளபதி வீரராகவன்

“ம் ….இப்போது எல்லாம் நன்றாகவே புரிகிறது. நன்றி ஞானானந்தம்.”

“தளபதியாரே இதற்கு எதற்கு நன்றி என்ற பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம்”

“இருக்கட்டும் ஞானானந்தம். உங்களால் தானே இப்போது இது யார் என்று அடையாளம் தெரிந்துக் கொள்ள முடிகிறது‌.”

“அப்படிப் பார்த்தால்…இதற்கு நீங்கள் இந்த நவியாகம்ஷியின் எலும்புக் கூடுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் அவள் என் மனைவியின் தாலியைப் பறிக்காதிருந்திருந்தால்…இப்போது என்னால் அடையாளம் சொல்லியிருக்க முடியாதல்லவா!”

“ஹா! ஹா! ஹா!”

“எதற்காக சிரித்தீர்கள் கேசவன். நான் சிரிக்கும் படி என்ன சொல்லிவிட்டேன்”

“இல்லை நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் நாம் அனைவரும் அந்த அசுர இனத்தினருக்கே நன்றி சொல்ல வேண்டும் ஏனெனில் அவர்கள் தானே உங்களை சிறைப் பிடித்துச் சென்றனர்.”

“இல்லை இல்லை அவர்கள் அனைவருமாக அதை செய்யவில்லை அதைச் செய்தது இதோ இங்கே வெறும் கூடாகக் கிடக்கும் இந்த நவியாகஷி தான்.”

“சரி சரி நமக்குள் எதற்கு விவாதம். எப்படியோ இது யார் என்ற விவரம் அறிந்துக் கொண்டோம். வாருங்கள் சென்று நம் தலைவரிடம் கூறுவோம்.”

“ஆகட்டும் தளபதியாரே”

“தலைமை மருத்துவரே வாருங்கள் அரண்மனைக்குச் செல்லலாம்”

“செல்லலாம் ஆனால் இந்த எலும்புக்கூட்டை என்ன செய்வது?”

“அதை அங்கேயே விட்டுவிடுவோம். அது எதுக்கு நமக்கு? வாருங்கள்.”

“இல்லை…”

“என்னவாயிற்று மருத்துவரே? ஏன் எங்களுடன் வரத் தயங்குகிறீர்கள்?”

“தயக்கம் தான் வீரராகவா. தயக்கமே தான்.”

“அது தான் ஏன் என்று கேட்கிறேன்? சொன்னால் அதற்கும் ஏதாவது வழியிருக்கிறதா என்பதை ஆராயலாம்.”

“இவளின் இந்த மண்டை ஒட்டிலிருக்கும் இந்த திரவம் காய்ந்து போகாதிருக்கிறது…வந்துப் பாருங்கள். அது எப்படி உடல் முழுவதும் எரிந்துப் போன பிறகும் மண்டை ஓட்டிலிருக்கும் இது காயாதிருக்கிறது?.”

“எங்கே நகருங்கள் பார்ப்போம்… அட ஆமாம். இது எப்படி சாத்தியம் மருத்துவரே?”

“அதைப் பற்றிய யோசனை தான் எனக்கு. அதுவுமில்லாமல் இந்த பச்சைத் திரவம் போன்ற இது என்ன செய்யும் என்பதும் நமக்குத் தெரியாது ஆகையால் தான் இதை இங்கேயே விட்டுவிட்டு ஊருக்குள் வரத் தயங்குகிறேன் வீரராகவா”

“ம்…புரிகிறது மருத்துவரே…..”

“ம்…ம்…தொடாதே வீரராகவா…அதை உன் கரத்தால் தொட்டுப் பார்க்காதே! அது என்ன செய்யுமோ என்னவோ! நான் அதைப் பரிசோதித்துப் பார்க்கும் வரை எவரும் அந்த திரவத்தைத் தொடதிருங்கள்.”

“ம்…சரி மருத்துவரே. நீங்கள் சந்தேகிப்பதும் சரி தான். நீங்கள் இங்கேயே இதை என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துக் கொண்டிருங்கள். நம் இரு காவலர்களான சுப்புவும் ரங்கனும் இங்கேயே உங்களுடன் இருந்து உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்துத் தருவார்கள். நாங்கள் அனைவரும் ஊருக்குள் சென்று தலைவர்களிடம் இங்கு நடந்தவைகளைக் கூறுகிறோம். நீர்த்துளிப்பதக்க அதிபர்களே வாருங்கள் நாம் செல்லலாம்.”

“தளபதியாரே நாங்களும் மருத்துவருடன் இங்கேயே இருக்கலாமா?”

“இல்லை கேவசன். அது பற்றி நம் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் நால்வரும் என்னுடன் வந்து தலைவரிடம் அனுமதிப் பெற்றபின் வந்துக்கொள்ளுங்களேன்.”

“ஆகட்டும் தளபதியாரே. அப்படியே செய்கிறோம்”

என்று தலைமை மருத்துவர், காவலர்கள் சுப்பு மற்றும் ரங்கன் ஆகியோரை அங்கேயே விட்டுவிட்டு மற்றவர்கள் ஊருக்குள் சென்றனர். அங்கே வீரசேகரனையும் மாயாபுரி ஊர்த் தலைவரையும் கண்டு நடந்த அனைத்தையும் விவரித்தனர். அதைக் கேட்டதும் வீரசேகரன் கேசவனைப் பார்த்து

“கேசவன் உங்களுக்கு உங்கள் பதக்கம் ஏதும் இது சம்மந்தமாக ஏதேனும் உணர்த்தியதா?”

கேசவன் உடனே முழுமதியாளைப் பார்த்து

“மதி இதற்கு நீ தான் பதிலளிக்க வேண்டும். தலைவர் வீரசேகரன் கேட்பதற்கு பதில் சொல்”

“ஓ! ஓ! மன்னித்து விடுங்கள் அண்ணா. நான் காலையில் குளிப்பதற்காக என் கழுற்றிலிருந்த பதக்கச் சங்கிலியை கழற்றி வைத்தேன்‌. அதன் பின் அரண்மனையிலிருந்து அழைப்பு வந்ததும் தங்களுடன் இங்கு வந்து விட்டேன்…அந்த சங்கிலியை மாட்டிககொள்ள மறந்து விட்டேன்”

“என்ன மா…இப்படி செய்து விட்டாயே? அதை எதற்கு கழற்றினாய்?”

“ம்…என்ன கேசவன் நான் உங்களிடம் கேட்டால் நீங்கள் இருவரும் உங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறீர்களே!! என்னவாயிற்று என்பதை அனைவருக்கும் கேட்கும்படி சொன்னால் நன்றாக இருக்கும்.”

“அது ஒன்றுமில்லை தலைவரே…”

“ஒன்றுமில்லை என்றால் நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் முழுமதியுடன் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்?”

“தலைவரே நானே கூறுகிறேன்.”

“யாரேனும் ஒருவர் கூறினால் தானே எங்களுக்கெல்லாம் புரியும்…ம்…ஆகட்டும் முழுமதியாள்… நீயே கூறு”

“தலைவரே என்னை மன்னித்து விடுங்கள். நான் அந்த பதக்கச் சங்கிலியை இன்று அணிந்துக் கொள்ள மறந்து விட்டேன்.”

“என்ன இது சிறுப்பிள்ளைகளைப் போல காரணம் கூறுகிறாய் மதி? இப்படி மறப்பதற்காகவா அதை இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வைத்து உங்களிடம் தந்துள்ளோம்?”

“இதோ ஒரு நொடியில் வீட்டுக்குச் சென்று எடுத்து வந்துவிடுகிறேன் தலைவரே.”

“ம்…எடுத்து வா மதி. இனி அது உன் கழுத்திலிருந்து கீழே எங்கும் இறங்கக்கூடாது. இது என் கட்டளையாகும்.”

“ஆகட்டும தலைவரே. இனி எக்காரணம் கொண்டும் அதை என் கழுத்திலிருந்து கழற்ற மாட்டேன். இதோ நான் சென்று உடனே எடுத்து வருகிறேன்”

“ம்…சரி சரி…சென்று அதை எடுத்துக் கொண்டு ஊர் எல்லைக்கே வந்துவிடு. நாங்கள் அனைவரும் அங்கு தான் இருப்போம். புரிகிறதா?”

“ஆகட்டும் தலைவரே. நான் நேராக அங்கேயே வந்துவிடுகிறேன்.”

என்று கூறி அங்கிருந்து வீட்டுக்குச் சென்றாள் முழுமதியாள். மற்ற அனைவரையும், மாயாபுரி தலைவரையும் அழைத்துக் கொண்டு நவியாகம்ஷியின் எலும்புக்கூடு இருக்கும் இடத்திற்குச் சென்றார் வீரசேகரன். அவர்கள் சென்றுக் கொண்டிருக்கும் போது ஞானானந்தம் கேசவனுக்கு மட்டும் கேட்பது போல மெல்ல

“கேசவன் இன்நேரம் மதி நம்முடன் வந்து சேர்ந்திருக்க வேண்டுமே!! ஏன் இன்னும் அவளைக் காணவில்லை”

“ஞானானந்தம் நமக்குத் தெரிந்தது இந்த ஒரு வழிதான். ஆனால் மதியோ இந்த ஊரைச் சேர்ந்தவள் ஆயிற்றே! வேறெதாவது வழியில் வருகிறாளோ என்னவோ! அது நமக்கு எப்படித் தெரியும். நமக்கு முன் ஊர் எல்லைக்கு சென்று விட்டாளோ என்னவோ! அங்குச் சென்றுப் பார்த்தால் தெரிந்துவிடும்”

ம்…நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான் கேசவன். இன்னும் சற்று தூரம் சென்றோமே என்றால் தெரிந்துவிடப் போகிறது அல்லவா.”

“ஆமாம் ஞானானந்தம்‌. என்ன வேதாந்தகா எதுவுமே பேசாது அமைதியாகவே இருக்கிறாயே? என்ன ஆயிற்று?”

“ஒன்றுமில்லை கேசவன் அண்ணா. எனக்கென்னவோ இறந்து எரிந்துப் போன அந்த அசுரக்குலப் பெண்ணால் இந்த பிரயாகாவுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்திடுமோ என்று பதற்றமாக இருக்கிறது.”

“அவள் தான் இறந்து விட்டாளே வேதாந்தகா! பின்பு ஏன் பதற்றம்?”

“அதுக்கில்லை ஞானானந்தம் அண்ணா. அவள் நாம் பாரப்பதற்கு சற்று முன்னரே உடலெரிந்து இறந்திருக்கிறாள் என்று அந்த தலைமை மருத்துவர் கூறுகிறார்”

“ஆமாம் அதற்கென்ன?”

“அது எப்படி எரிபொருள் ஏதுமின்றி அவள் இறந்திருக்கக்கூடும்? அவளை எரித்தவர் யார்? அவளின் மண்டை ஓட்டிலிருந்து ஏன் ஒரு வகையான திரவம் கசிய வேண்டும்? இது வேண்டுமென்றே நம்மை அழிப்பதற்கு அந்த அசுரர்கள் நடத்தும் நாடகமா? இவையெல்லாம் சேர்ந்து என்னை மிகவும் குழப்புகிறது.”

“ம்…சரி சரி…இதைப் பற்றி நாம் பிறகு நம் இருப்பிடம் சென்ற பின் பேசிக்கொள்ளலாம். இப்போது நாம் எல்லைக்கு வந்துவிட்டோம். வேதா உன் முகத்தை சற்று தெளிவாக வைத்துக் கொள். உன் மனதின் குழப்பம் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.”

“அப்படியா? சரி சரி…ஆனால் அங்கே என் மதியை காணவில்லையே? அவள் ஏன் இன்னும் எல்லைக்கு வந்து சேரவில்லை? என்னவாகியிருக்கும்?”

“அது தானே அவள் இங்கே வந்து இருப்பாள் என்றல்லவா நான் நினைத்தேன்! அதைத் தான் ஞானானந்தத்திடமும் சற்று முன் கூறினேன். அவள் ஏன் இன்னும் வரவில்லை. ம்.‌..தலைவர் நம்மை வரச்சொல்கிறார். வாருங்கள் வேகமாக சென்றிடுவோம்.”

என்று மூவரும் வேகமாக தலைவர் அருகே சென்றதும் வீரசேகரன் மூவரையும் பார்த்து

“என்ன முழுமதியாளை இன்னும் காணவில்லை? உங்களுள் யாருக்காவது ஏதாவது தெரியுமா?”

“இல்லைத் தலைவரே எங்களுக்கும் ஒன்றும் தெரியாது. அதைப் பற்றித்தான் நாங்களும் பேசிக்கொண்டிருந்தோம்.”

“சரி நான் காவலரை அனுப்பி என்னவென்று பார்த்து வரச் சொல்கிறேன்.”

“இல்லைத் தலைவரே. நானே சென்றுப் பார்த்து வருகிறேன்.”

“சரி வேதாந்தகன் நீங்களே சென்று பார்த்து அழைத்து வாருங்கள்.”

என்று வீரசேகரன் கூறியதும் வேகவேகமாகச் சென்றான் வேதாந்தகன்.

முழுமதியாள் வீட்டில் அவள் கழற்றி வைத்த இடத்தில் அந்த நீர்த்துளிப் பதக்கம் இல்லாததால் பதற்றமாகி எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டிருந்தாள். அவளுடன் வீட்டுப் பணிப்பெண்கள், பணியாட்கள், அவள் அம்மா, தாத்தா, சீதை என அனைவரும் தேடிக்கொண்டிருந்தனர். வேதாந்தகன் சென்றுப் பார்த்து

“அனைவரும் இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? மதி அங்கே எல்லையில் அனைவரும் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். நீ என்னவென்றால் இங்கே இருந்து கிளம்பக் கூடவில்லை”

“வேதா என்னை மன்னியுங்கள். நான் …அந்த நீர்த்துளிப் பதக்கத்தை கழற்றி வைத்த இடத்தில் அது இப்போதில்லை அதைத் தான் நாங்கள் அனைவருமாகத் தேடிக்கொண்டிருக்கிறோம்.”

“என்ன கூறுகிறாய் மதி? எப்படி அது காணாமல் போகும்? சரி சரி சீக்கிரமாக தேடி எடுப்போம் வா”

என்று அனைவரும் எல்லா இடங்களிலும் தேடினர். அப்போது வெளியே விளையாடச் சென்றிருந்த ஞானானந்தத்தின் இருப் பிள்ளைகளும் வீடு திரும்பினர். அவர்கள் சீதையை அழைத்துக் கொண்டே வீட்டினுள் வந்தனர்

“அம்மா அம்மா…எங்களுக்குப் பசிக்கிறது. சாப்பிடுவதற்கு ஏதாவது தா..மா..”

“கண்ணுகளா அம்மாவும் மற்ற அனைவரும் ஒரு முக்கியமான பொருளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நீங்களே அடுப்படிக்குள் சென்று ஏதாவது எடுத்து உண்ணுங்கள் ….ம்…போங்கள்”

“சரி மா….நான் முறுக்கு எடுத்துக்கொள்கிறேன்”

“அம்மா நான் அதிரசம் எடுத்துக் கொள்கிறேன்”

என்றுத் துள்ளிக்குதித்துச் சென்ற பிள்ளைகளை தடுத்து நிறுத்தினான் வேதாந்தகன். அவர்களும் நின்று வேதாந்தகனைப் பார்த்து

“என்ன மாமா? எதற்கு எங்களை நிறுத்தினீர்கள். எங்களுக்குப் பசிக்கிறது. நகருங்கள் நாங்கள் சென்று உண்பதற்கு ஏதாவது எடுத்து வருகிறோம்”

“சரி சரி போகலாம் போகலாம் அதற்கு முன் உன் கழுத்தில் எப்படி இந்த சங்கிலி வந்தது? யார் மாட்டிவிட்டா?”

“ஓ!! இதுவா… இது இன்னைக்கு காலையில மதி அக்கா கழற்றி வச்சுட்டு குளிக்கப் போனாங்களா அப்போ இது பளபளன்னு மின்னுச்சா…அதைப் பார்க்க அது பக்கத்தில போனோமா…அழகா இருந்ததால நான் தான் எடுத்து மாட்டிக்கிட்டு வெளில விளையாடப்போயிட்டேன். என் தோழிகள் எல்லார்கிட்டயும் இதைக் காண்பித்தேனா. எல்லாருக்கும் இது ரொம்பப் பிடிச்சுப்போச்சு மாமா.”

“அப்படியா!! அதைக் கழற்றி மாமா கிட்ட தந்துடுமா. என் செல்லமில்லையா.”

“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கே மாமா”

“என்ன நீங்க ரெண்டும் பேரும் முறுக்கும் அதிரசமும் சாப்பிடாமா என்ன பேசிகிட்டிருக்கீங்க? என்ன ஆச்சு வேதா?”

“அக்கா உங்க குழந்தையின் கழுற்றைப் பாருங்கள்!”

“ஆங்!! இது எப்படி உன் கழுற்றில். வா இங்கே !”

என்றுக் கூறி சீதை அவளருகே வந்த குழந்தையின் கழுற்றிலிருந்த நீர்த்துளிப்பதக்கச் சங்கிலியை கழற்றி வேதாந்தகனிடம் கொடுத்து

“எங்களை மன்னித்துவிடுங்கள் தம்பி. ஏதோ அறியா பிள்ளைகள் தவறிழைத்து விட்டனர்.”

“அக்கா அது எனக்குத் தெரியாதா? பாவம் குழந்தைகள் என்னச் செய்வார்கள். சரி நீங்கள் சென்று அவர்களுக்கு உண்ண ஏதாவது கொடுங்கள். இதில் அவர்கள் தவறு ஒன்றுமே இல்லை. எல்லாம் மதியின் தவறு தான்”

“இல்லை தம்பி கேட்காமல் இப்படி அடுத்தவர் பொருளை எடுத்துப் போட்டுக்கொள்வதும் தவறு தான். இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சென்று மதியிடம் விவரத்தைக் கூறி இருவரும் எல்லைக்கு உடனே சென்றிடுங்கள். இல்லையேல் அனைவருமாக இங்கு வந்து விடப்போகிறார்கள்.”

“ஆகட்டும் அக்கா. நான் வருகிறேன்”

என்று அங்கிருந்து முழுமதியாளிடம் சென்று நடந்தவைகளை கூறி அவளின் கழுத்தில் அந்த சங்கிலியைப் போட்டுவிட்டு இருவருமாக. எல்லைக்கு விரைந்துச் சென்றனர்.

தொடரும்…..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s