அத்தியாயம் 53: எலும்புக்கூடும் தாலியும்

பாதாள சுரங்கத்தை இடித்து நொறுக்கி தரைமட்டம் ஆக்கிய போது அதன் அருகே இருந்த இடங்களிலும் விரிசல் ஏற்பட்டிருந்தது. அந்த விரிசல் மதிநாகசுரன் நவியாகம்ஷியிடம் கோபமாக கர்ஜித்தபோது சற்று பெரிதாகி எந்த நேரமும் இடிந்து விழும் நிலையிலிருந்தது. அந்த இடத்தில் மதிநாகசுரனை எவ்வாறு கண்டுபிடித்து அவனுக்கு உதவுவது என்ற சிந்தனையில் அங்குமிங்குமாக நடந்த நவியாகம்ஷி சுரங்கத்தின் கூரைக்கு அதிர்வை ஏற்படுத்தினாள். அசுரர் பரம்பரை ஆயிற்றே! ஏற்கனவே விழும் நிலையிலிருந்த கூரை அவள் ஏற்படுத்திய அதிர்வில் அவள் தலையிலேயே இடிந்து விழந்தது. தன் மீது விழுந்த மண் மற்றும் கற்களை நகர்த்தியதும் மேல சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். அவளால் சூரிய தேவனின் கதிர்வீச்சுகளை பார்க்க முடியாது அவள் உடல் முழுவதும் தீயிலிட்டது போல சுட்டதில் இருள் தேடி ஓடினாள். ஆனால் அந்த பாதாள சுரங்கத்தின் கூரையில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டிருந்ததால் அவள் இருள் தேடிச் சென்ற வழியெல்லாம் சூரியன் தன் கதிர்களை அவளின் மீது படும்படியே கிடைத்த கூரை விரிசல் துவாரங்களின் ஊடே சென்று அவளைச் சுட்டெரித்தார். அவளும் சூரியனிடமிருந்து தப்பித்துச் செல்ல பல முயற்சிகளை செய்துப் பார்த்தாள் ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியாது அவளின் உடல் பாதி வெந்திருந்ததில் அதற்கு மேல் எங்கும் ஓடவும் முடியாது சூரிய தேவனின் சுட்டெரிக்கும் கதிர்வீச்சுகளுக்கு இரையானாள்.

சூரியனும் தேவலோகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரின் கீழ் உயிர்வாழக் கூடாதென்று இருளை தங்களுக்கானதாக மாற்றிக்கொண்டு வாழ்ந்தனர் அசுரர்கள். அதனாலே தான் அவர்களால் அழிக்கப்பட்ட ஊர்களை எல்லாம் இருள் சூழ்ந்திருந்தது. அசுரர்கள் என்றால் இருள் என்றானது. இருளை வென்று அனைவருக்கும் விடியலைத் தரக்கூடியவர் சூரியன் அவரை எல்லா இடங்களிலும் வென்று இருளை பரப்பி வந்த அசுரர்களால் நீர்த்துளிப் பதக்கம் கொண்ட பிரயாகாவை மட்டும் ஏதும் செய்ய முடியாது போனதால் சூரியன் தன் முழு சக்தியையும் பிரயாகாவிற்கு அளித்து வந்தார். அவர் உதித்திருந்த நேரத்தில் வெளிப்பட்ட நவியாகம்ஷி அவரின் சக்தியை எதிர்கொள்ள முடியாது எரிந்து சாம்பலானாள்.

அந்த பாதாள சுரங்கத்தின் மேல சற்றுத் தொலைவில் நடந்து வந்துக் கொண்டிருந்த காவலர்கள் சுப்பு மற்றும் ரங்கன் தூரத்தில் ஏதோ புகையைப் பார்த்ததும் சுப்பு ரங்காவிடம்

“டேய் ரங்கா அதோ அப்படியே இடதுகை பக்கமா கொஞ்சம் பாரு ஏதோ புகையா இருக்கு இல்ல!”

“அட ஆமாம் சுப்பு. நாம அந்த இடங்களை அதுவரைக்கும் நேத்து தானே இடிச்சுப் போட்டோம்! இன்னைக்கு என்ன அங்க ஒரே புகை மண்டலமா இருக்குது?”

“சரி வா போய் என்னன்னு பார்தது வரலாம்.”

“வேண்டாம் சுப்பு இந்த சுற்று வட்டாரத்துல எதாவது வித்தியாசமா தென்பட்டா நம்ம தளபதி வீரராகவன் கிட்ட சொல்லணும்ங்கறது தான் நமக்கிடப்பட்ட கட்டளை. அதுபடியே செய்வோம் வா போய் தளபதியார்ட்ட சொல்லலாம்.”

“என்ன ரங்கா நீ இப்படி இருக்க. இது வெறும் புகைதானே இதைப் போய் தளபதியார்ட்ட சொல்லணுமா என்ன? நாமளே என்னன்னு பார்த்துட்டா ஆச்சு. உனக்கு புகை ல என்ன வித்தியாசமா தெரியுது? நாம போய் தளபதியார்ட்ட புகையைப் பத்தி சொல்ல அவரும் வந்து பார்த்துட்டு அடிக்கிற வெயில்ல எரிஞ்ச புல்லையெல்லாம் காண்பிக்கவா என்னை அழைத்தீர்கள்னு நம்ம மேல கோவிச்சுக்கிட்டார்னா!”

“கோவிச்சா கோவிச்சுக்கட்டுமே. நம்ம தளபதியார் தானே! ஆனா இதை நாம சொல்லாம விட்டு அதனால ஏதாவது பெரிசா நடந்திடுச்சுன்னா அப்புறம் நாம யாருமே உயிரோடிருக்க முடியாம போயிடுமே‌! அதை யோசிச்சிப்பார் சுப்பு.”

“சரி அதுதான் பேசிகிட்டே இவ்வளவு தூரம் நடந்து வந்துட்டோமே…ஒரு எட்டு எட்டிப்பார்த்துட்டு போய் தளபதியார்ட்ட சொல்லலாமே!”

“ம்….பேசாம வா சுப்பு.”

என்று ரங்கனும் சுப்புவும் சூரியனால் சுட்டெரிக்கப்பட்ட நவியாகம்ஷி அருகில் வரை சென்றும் அங்கே எதனால் புகை வருகிறது என்பதை பாராது தளபதி வீரராகவனிடம் நடந்ததை விவரிக்க விரைந்து சென்றனர். தளபதியாரின் கூடத்தில் இருவரும் நடந்த அனைத்தையும் அவரிடம் விவரித்ததும் உடனே வீரராகவன் தன் படையாட்கள் ஒரு பத்துப் பேருடன் அவ்விடத்திற்கு விரைந்துச் சென்றுப் பார்த்தார்.

அங்கே எரிந்து சாம்பலாகி வெறும் ஒரு ராட்சத மனிதனின் கூடு மட்டும் கிடந்ததை அனைவரும் பார்த்ததும் இரண்டடி பின்னால் சென்றனர். அப்போது வீரராகவன் செய்தி சொன்ன இரு காவலர்களிடமும்

“நீங்கள் இந்த ராட்சத மனிதன் எரிந்துக் கொண்டிருந்ததைப் பார்த்தீர்களா?”

உடனே சுப்பு பதிலளித்தான்

“இல்லை தளபதியாரே. நாங்கள் பார்த்தபோது நெருப்பேதும் இல்லை. ஆனால் இந்த இடமே புகை மண்டலமாக இருந்தது. நாங்கள் அந்த புகை மண்டலத்திற்குள் சென்று பார்க்கலாமென்று நினைத்தோம் ஆனால் அதனுள்ளே ஏதாவது இருந்தால் என்று எண்ணி தங்களிடம் கூறுவதற்காக தங்கள் கூடாரத்திற்கு வந்துவிட்டோம். இல்லையா ரங்கா”

“ம்…ஆமாம் ஆமாம்”

என்று இருவரும் சொன்னதும் வீரராகவன் தன் அண்ணனான தலைவன் வீரசேகரனுக்கு செய்தியனுப்பினான். செய்தியனுப்பிய சில வினாடிகளிலெல்லாம் வீரசேகரனும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். புகை சற்று தணிந்ததும் வேலையாட்களை கொண்டு நவியாகம்ஷி உடலின் எலும்பு கூடை மேலே எடுத்து வந்து அதன் அருகே சென்றுப் பார்த்துக்கொண்டிருந்த போதே வீரசேகரனின் மதகுருவும், பிரயாகாவின் தலைமை மருத்துவருமான சந்தனக்கோபன் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் வீரசேகரன் வணக்கம் சொல்லி

“வாருங்கள் சந்தனக்கோபன் அவர்களே. வணக்கம். ஏன் தாங்கள் வருவதற்கு இவ்வளவு தாமதம்?”

“மன்னிக்க வேண்டும் தலைவரே. ஒரு முக்கியமான மூலிகையை தயாரித்துக்கொண்டிருந்ததில் தாமதமாகிவிட்டது. ஏனெனில் அதை அப்படியே விட்டுவிட்டால் பிறகு அந்த மூலிகை பிரயோஜனப்படாது போய்விடும் அதுதான்…”

“ம்..சரி சரி அதைப் பற்றி நாம் பிறகு பேசிக் கொல்லலாம். இப்போது வந்து இதைப் பாருங்கள். இந்த எலும்புக்கூடு சாதாரண மனிதனுடையது போல தெரியவில்லை. தாங்கள் தான் இது யாருடையது என்றும் எப்படி இப்படி எரிந்துள்ளது என்றும் கூற வேண்டும். இது நாங்கள் அன்று பாதாளச் சுரங்கத்திலிருநத்து கண்டறிந்தோமே அகோரமான ராட்சதர்களின் உடல் போலவும் இல்லை…அது தான் சற்று குழப்பமாக உள்ளது.”

“ம்….சரி இந்த எலும்புக்கூடு இங்கேயே இருக்கட்டும். நான் எனது சில உபகரணங்களைக் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்து இது என்னவாக இருக்கக்கூடுமென்று அறிந்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். இரு காவலர்களை மட்டும் இங்கே என்னுடன் விட்டுவிட்டு நீங்கள் அனைவரும் ஊருக்குள் செல்லலாம்.”

“ஆகட்டும் குருவே. சரி வீரராகவா வா நாம் இங்கிருந்து சென்று விடலாம்.”

“தலைவரே தாங்கள் செல்லுங்கள். நான்… சுப்பு, ரங்கனுடன் இங்கேயே நம் குருவுக்கு உதவியாக இருந்துக்கொள்கிறோம். நீங்கள் மற்ற அனைவரையும் அழைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றிடுங்கள். இதைப் பற்றி அந்த நால்வருக்கும் செய்தி அனுப்பிடுங்கள். அவர்களால் இது யார் என்ன என்று அடையாளம் சொல்ல முடிகிறதா என்றும் பார்ப்போம்.”

“அதுவும் சரி தான் வீரராகவா. நீ இங்கேயே இருந்துக்கொள். நான் சென்று அந்த நால்வருக்கும் செய்தி அனுப்பி அவர்களை இங்கு வரச்சொல்கிறேன்.”

என்று கூறிவிட்டு அங்கிருந்து ஊருக்குள் சென்று அந்த நால்வரையும் தன்னை வந்துக் காணும் படி செய்தி அனுப்பி வரச்சொன்னார் வீரசேகரன். அவரின் செய்தி கிடைத்ததும் நால்வரும் வீரசேகரனின் அரண்மனைக்கு விரைந்துச் சென்றனர். அவர்களிடம் வீரசேகரன் ஊர் எல்லையில் இடித்த பாதாள சுரங்கத்திலிருந்து ஒரு ராட்சத எலும்புகூடு கிடைத்துள்ளதைப் பற்றி விவரித்தார். அதைக் கேட்டதும் வியப்பில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் நீர்த்துளி பதக்க வீரர்கள். பின் வீரசேகரனிடம் விடைப்பெற்றுக் கொண்டு நேராக ஊரின் எல்லைக்குச் சென்றனர். அங்கே இருந்த பிரயாகாவின் தலபதியாருக்கும், தலைமை மருத்துவருக்கும் வணக்கம் கூறிவிட்டு கேசவன்

“இந்த எலும்புக்கூடு எங்கிருந்து கிட்டியது?”

“அதோ அந்த பாதாளக் குழியிலிருந்து தான் கிட்டியுது”

என்று ரங்கன் சொன்னதும் கேசவன், மழுமதி மற்றும் வேதாந்தகன் ஆகிய மூவரும் அந்த இடத்திற்குச் சென்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஞானானந்தும் அந்த எலும்புக்கூட்டையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் அதில் எதையோப் பார்த்து

“ஓ! அவளா இவள்!! ஆனால் இவள் எப்படி இப்படி!!”

என்று தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட தலைமை மருத்துவரும் வீரராகவனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ரங்கனும் சுப்புவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பாதாளக் குழியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த மூவரும் திரும்பி ஞானானந்தத்தைப் பார்த்தனர். வீரராகவன் ஞானானந்தம் அருகே வந்து

“பலே ஞானானந்தம் பலே! இது யாரென்று உங்களுக்குத் தெரியும் போலிருக்கிறதே! அது யாரென்று எங்களுக்கும் சொன்னால் நன்றாக இருக்குமல்லவா. சொல்வீர்களா?”

“நிச்சயமாக சொல்கிறேன் தளபதியாரே.”

“ம்…சொல்லுங்கள் ஞானானந்தம் சொல்லுங்கள்”

என்று வீரராகவன் அது யாரென்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் கேட்க, அதே ஆர்வத்தோடு ரங்கனும், சுப்புவும் அருகே வர…தலைமை மருத்துவர் ஞானானந்தனிடம்

“இது மனித இனத்தை சேர்ந்தது அல்ல என்பது எங்களுக்குத் தெரிந்ததே. அதை தவிர ஏதாவது விவரமறிந்தால் தயவுசெய்து கூறவும்.”

“ஆம் மருத்துவரே இது மனித இனத்தைச் சேர்ந்தவை அல்ல. ஏனெனில் மனிதர்களுக்கான நல்ல குணங்கள் என்றுக் கூறப்படும் ஈவிரக்கம், ஈகை, பாவம், புண்ணியம் ஆகியவை இவற்றிற்கு கிடையாது. ஆனால் அவ்வினத்திற்குள் அன்பு, பாசம், காதல், காமம், மோகம் என எல்லா குணாதிசயங்களும் இருக்கிறது.”

“எவ்வாறு தங்களால் இவ்வளவு தெளிவாக அந்த இனத்தைப் பற்றி விவரிக்க முடிகிறது ஞானானந்தம்?”

“ஏனெனில் நான் அவர்களின் கைதியாக சில நாட்கள் அவர்களுடன் இருந்திருக்கிறேன்.”

“ஓ!! சரி…இதைப் பார்த்ததும் அவளா இவள் என்று ஏதோ சொன்னீர்களே…அது எப்படி?”

என்று வீரராகவன் கேட்டதும் ஞானானந்தம் ஒன்றும் பதிலளிக்காது அமைதியாக நவியாகம்ஷியின் எலும்புக்கூட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். உடனே தனது கேள்விக்கான விளக்கத்தை அளித்தார் வீரராகவன்

“ஏனெனில் நீங்கள் நால்வரும் இங்கு வருவதற்கு சற்று முன்பாகத்தான் நமது தலைமை மருத்துவர் இந்த எலும்புக்கூடு ஒரு பெண்ணினுடையது என்றார். நீங்களும் இங்கு வந்து இதைப் பார்த்ததும் அப்படி கேட்டீர்களா அதுதான் அப்படி கேட்கிறேன்”

என்று கூறியும் ஞானானந்தம் ஏதும் சொல்லாது அமர்ந்திருந்தான். அங்கு நடந்தவைகளைப் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த கேசவன் அந்த பாதாள குழியிலிருந்து ஏதோ ஒன்றை தன் கையில் எடுத்து வந்து நேராக ஞானானந்தத்திடம் சென்று அவனருகே அமர்ந்தான் கேசவன். பாதாளக் குழியிலிருந்து கண்டறிந்து எடுத்து வந்ததை ஞானானந்தத்தின் உள்ளங்கையில் வைத்து அவன் கரங்களை மூடினான். அதை உணர்ந்த ஞானானந்தம் தன் கைகளைத் திறந்துப் பார்த்ததும்

“ஆம் இவள் அவளே தான். பாதகி…ராட்சசி… தளபதியாரே இவள் அவளே தான்.”

என்று கண்களில் கண்ணீருடன் முகத்தில் மலர்ச்சியுடன் கூறினான் ஞானானந்தம்.

“எவள்? யார்? என்று விளக்கமாக கூறுங்கள் ஞானானந்தம். இப்போது எதற்காக நீங்கள் அழுகிறீர்கள்? தயவுசெய்து இது யார் என்ன என்ற விவரத்தை உங்கள் நால்வரில் யாரேனும் சொல்கிறீர்களா? உங்களுள் யாருக்காவது இது யாரென்று தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றெண்ணி தான் உங்களை இங்கு அனுப்பிவைக்க தலைவரிடம் சொல்லிவிட்டேன். ஏனெனில் உங்களுள் இருவர் அந்த அசுரர்களையும் அந்த அகோரமான ஜந்துக்களையும் நேரில் பார்த்தவர்கள் இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை கேட்க ஆவலாகவும், அதில் ஆபத்திருந்தால் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்ய காத்திருக்கிறோம் … ம்…சொல்லுங்கள்”

தளபதி வீரராகவன் சொன்னதைக் கேட்டதும் ஞானானந்தத்தின் தோள்களில் கையைப் போட்டு அவனை சமாதானம் செய்த கேசவன்

“ஞானானந்தம் சொல்லுங்கள். தளபதியார் கேட்பதிலும் நியாயமிருக்கிறதல்லவா. யார் இவள்? நீங்கள் சொன்ன அதே ராட்சசியா?”

“கேசவன் இங்கு என்ன நடக்கிறது என்று எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.”

“சொல்கிறேன் தளபதியாரே. நானே சொல்கிறேன்”

என்று தன் கண்களைத் துடைத்துக் கொண்டு. ஏதோ ஒரு கெட்டது அழிந்தது என்ற மகிழ்ச்சியான முகத்துடன் கூறலானான் ஞானானந்தம்.

“இவள் தான் என் மனைவியையும் குழந்தைகளையும் பிடித்து வைத்து சித்திரவதை செய்து, என்னை மிரட்டி எங்களை கைதிகளாக அவர்கள் அரண்மனைக்கு இழுத்துச் சென்றவள். எங்கள் குழந்தைகளை குழந்தைகள் என்றும் பாராமல் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டவள். அந்த பிஞ்சுக் குழந்தைகளை அந்த அகோர ஜந்துக்களிடம் வீசி எறிந்தவள். அந்த அசுரக் குல அரசன் என்று சொல்லிக்கொண்ட மதிநாகசுரன் என்பவனின் மனைவியாவாள். இவள் பெயர் நவியாகம்ஷி என்பதாகும்.”

“ஓ!!! அப்படியா!! எல்லாம் சரி…ஆனால் இந்த எலும்புக்கூட்டைப் பார்த்து எப்படி உங்களால் இது அந்த நவியாகம்ஷியினுடது தான் என்று சொல்ல முடிந்தது?”

“அது…முதலில் சந்தேகம் தான் இருந்தது. அதனால் தான் ஒன்றும் பேசாதிருந்தேன். ஆனால் எப்போது கேசவன் இவளின் எலும்புக்கூடு இருந்த குழியிலிருந்து இந்த தாலியை எடுத்து வந்து என் கையில் கொடுத்தாரோ அப்போது இது அந்த நவியாகம்ஷி தான் என எனக்கு ஊர்ஜிதமானது.”

“சரி அது யாருடைய தாலி? இவளுடையதா? எப்படி நீங்கள் பார்த்ததும் அவளாக இருக்குமோ என்று சந்தேகித்தீர்கள்? நடந்ததை முழுமையாக சொல்கிறீர்களா…அப்போது தான் எங்களுக்கும் தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும்.”

“சொல்கிறேன் தளபதியாரே சொல்கிறேன். இந்த ராட்சசி எங்களைப் பிடித்துக் கைதியாக கொண்டு செல்ல முயன்ற போது நான் மறுத்தேன் அதற்கு என் மனைவியை அவள் கழுத்திலிருந்த தாலியைப் பிடித்து இழுத்து என் முன் தள்ளிவிட்டு…அந்த தாலியை உற்றுப் பார்த்து அதை அவள் வலது கை மணிக்கட்டில் சுற்றி இறுக்கக் கட்டிக் கொண்டாள். என் சீதை அவளிடம் அதைத் திருப்பித் தரும் படி மன்றாடினாள் ஆனால் அதற்கு அந்த ராட்சசி மனமிரங்கவில்லை. அதன் பின் நாங்கள் வேறு வழியின்றி அவர்களுடன் கைதியாகச் சென்றோம். அவள் சீதையின் தாலியை இழுத்துப் பறித்ததில் என் சீதையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அதன் வடு இன்னமும் என் மனைவி சுமந்துக் கொண்டிருக்கிறாள். இப்படி ஒரு பாதகத்தை செய்த இவளை எப்படி மறக்கமுடியும் நீங்களே சொல்லுங்கள்! பெண்ணாக இருந்தும் மற்றொருப் பெண்ணை துன்புறுத்திய இவளைப் போன்ற அரக்கிகளுக்கு இது போன்ற முடிவு தான் நேரும். இதுதான் நியாயமுமாகும்.”

தொடரும்…Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s