பிரதி பிம்பம்

இந்த ரதியாம்பிகாவுக்காகவே பிறந்து வளர்ந்து வந்து என்னை பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு முன் தன்னைப் பிடித்திருக்கிறதா என்று எனக்கு முன்னுரிமை கொடுத்த கேசவனை திருமணம் புரிந்து என் புகுந்த வீட்டிற்கு சென்றேன். அங்கே அனைவருடனும் நன்றாக பழகினேன். அவர்கள் அனைவருடனும் உடனே ஒரு இணைப்பு ஏற்பட்டது. மகிழச்சியாக என் திருமண வாழ்க்கை சென்றுக் கொண்டிருந்தது. எங்களுக்கு இரண்டு இரட்டையர்கள் என நான்கு குழந்தைகள் இரண்டு வருட வித்தியாசத்தில் பிறந்தனர். அவர்களுக்கு ராகேஷ், ராஜேஷ், ரம்யா, ராதா என்று பெயரிட்டோம். வருடங்கள் உருண்டோடின. வசதிகள் பெருகியது. குழந்தைகள் பெரியவர்களானார்கள். ஆளுக்கொரு கார், பெரிய பங்களா, வருடத்தில் ஒரு மாதம் வெளிநாட்டுச் சுற்றுலா என்று மிகவும் அற்புதமாக சென்றுக் கொண்டிருந்தது எங்களின் வாழ்க்கை. மூத்த இரட்டையர்கள் அமெரிக்காவில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியான கூகுளில் பணியாற்றுகிறார்கள். இரண்டாவது பெண் இரட்டையர்கள் லண்டனில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ரம்யா ஆடிட்டராகவும், ராதா இன்டிப்பென்டென்ட் ம்யூசிஷியனாகவும் பணி புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையில் அவரவர் நின்று பேசக்கூட நேரமின்றி வேகமாக ஓடிக் கொண்டிருந்தனர்.

நானும் ஆரம்பத்தில் நிற்க நேரமின்றி எனது பிள்ளைகள், அவர்களின் வகுப்பு பாடங்கள், பாட்டுக் க்ளாஸ், கராத்தே க்ளாஸ் என்று பிள்ளைகளை கொண்டு விடுதல் கூட்டிக் கொண்டு வருதல் என தினம் தினம் ஓட்டத்திலேயே எனது பாதி வாழ்க்கையும் ஓடியது. இப்போது அனைவரும் நன்றாக அவரவர் வாழ்க்கையில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் செட்டிலாகி விட்டனர். நால்வருக்கும் திருமணமாகி நான்கு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். ஆறு மாதங்கள் அமெரிக்காவில் இரண்டு மகன்களுடனும் இரண்டு பேரப்பிள்ளைகளுடனும் மூன்று மாதங்கள் லண்டனில் இரண்டு மகள்களுடனும் இரண்டு பேரப்பிள்ளைகளுடனும் மூன்று மாதங்கள் இந்தியாவில் தனிக்குடித்தனம் என்று எங்கள் இருவரின் வாழ்க்கை நகர்ந்தது.

இப்படியே சென்றுக் கொண்டிருந்த எங்களது வாழ்க்கையில் எங்களுக்கு சதாபிஷேகம் செய்து அழகுப் பார்க்க வேண்டி எங்களது பிள்ளைகள் அனைவரும் இந்தியா வந்திருந்தனர். மிகவும் கோலாகலமாக நடந்தேறியது எங்களின் சதாபிஷேகம். அன்று முழுவதும் நானும் கேசவனும் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்பதற்கு ஏற்றார் போல அன்றிரவு உறக்கத்திலேயே என்னைத் தனியாக விட்டு விட்டு இறைவனடி சேர்ந்தார் கேசவன். ஒரு நாள் முன் மகிழ்ச்சி வெள்ளத்திலிருந்த வீடு அடுத்த நாளே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. வாழ்க்கை என்றால் நம்மோடு எப்போதும் இருப்பவர்கள் நம்முடனே கடைசி வரை வருவார்கள் என்ற நினைப்பில் இருந்த எனக்கு கேசவனின் மரணம் உண்மையை புரியவைத்தது. எனது வாழ்க்கையே வெருச்சோடிப் போனது போல உணர்ந்தேன். பிள்ளைகள் அவர்களின் கடமைகளை செய்து முடித்ததும் அவரவர் நாட்டிற்கு செல்ல தயாராகினர். அதற்கு முன்பு என்னையும் அவர்களுடன் வரும்படி வற்புறுத்தினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அப்போது எனது இளைய மகன் ராஜேஷ் என்னைப் பார்த்து

“அம்மா நீ தனியா இங்கே இருந்து என்ன பண்ணப் போற? பேசாம கிளம்புமா. உனக்கு யார் கூட இருக்கணுமோ அவங்க கூடவே போய் இருந்துக்கோமா. நீ எங்க இருந்தாலும் நாங்க எல்லாரும் உன்னை அடிக்கடி வந்து பார்த்துக்கறோம் மா. ப்ளீஸ் எங்க கூட கிளம்புமா”

“இல்ல கண்ணா நீங்க எல்லாரும் கிளம்பிக்கோங்கப்பா உங்களுக்கெல்லாம் வேலையிருக்கு, பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு. என்னை மட்டும் இங்கேயே விட்டுடங்கப்பா. நானும் கேசவனுமா சென்று வந்த இடங்களின் இந்த ஃபோட்டோஸ், அவரும் நானுமா சேகரித்து வைத்திருக்கும் இந்த க்ராக்கரிஸ், இதோ இதைப் பாரேன் இது கேசவன் ரொம்ப ஆசைப்பட்டு சுவிட்சர்லாந்தில் வாங்கின பெல், அந்த சேர் இந்தோனேசியா ல ஆர்டர் பண்ணி வாங்கினார். இப்படி இந்த வீட்டுல என் கேசவனோட நினைவுகளோட நான் இருந்துக்கறேன்ப்பா. நீங்க எல்லாரும் கிளம்பி பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க சரியா. சாரி கண்ணா. அம்மாவால இந்த தடவை உங்களுக்கெல்லாம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சுவீட்ஸ் அன்ட் ஸ்னாக்ஸ் எல்லாம் பண்ணித்தர முடியாம போயிடிச்சி.”

என்று நான் சொன்னதும் ராகேஷ் என்னைப் இறுக்கி அணைத்துக் கொண்டு

“அம்மா என்ன பேசற நீ? இப்பவும் நீ எங்களைப் பத்தி தான் நினைக்குற… பேசுற…நாங்க உன்னை நினைச்சுத் தான் கவலைப்படறோம் மா. நீ எப்படி தனியா இங்கே…அதெல்லாம் சரி வராதுமா. எங்களால நிம்மதியா அங்க எங்க வேலையைப் பார்க்க முடியாது. புரிஞ்சுக்கோயேன் ப்ளீஸ்.”

“அதெல்லாம் எந்த கவலையும் உங்க யாருக்குமே வேண்டாம்ப்பா. நானும் கேசவனுமா இங்கே பக்கத்துல இருக்குற ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம் ல எங்க பெயர்களைப் பதிவு செய்து வச்சிருந்தோம். அது அவருக்கு தேவைப்படலை ஆனா எனக்குத் தேவைப்படும் போது உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு அங்க போறேன். நீங்க எனக்கு அடிக்கடி ஃபோன் போட்டுப் பேசுங்கப்பா அது போதும். அதுவுமில்லாம அதே கேம்பஸ்லயே ஒரு ஆர்ஃபனேஜ் இருக்கு அங்கே நானும் உங்க அப்பாவும் அடிக்கடிப் போய் அந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு நிறைய கிஃப்ட்ஸ் மற்றும் சாப்பாடு எல்லாம் குடுத்து அவங்களோட ஒரு வாரம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வந்துக்கிட்டிருந்தோம். அதை நான் தொடர்ந்து செய்யணும்னு நினைக்கிறேன். வயசாயிடுச்சு இல்லப்பா…நீங்க சொல்லறா மாதிரி எல்லாம் இனி தனியா பயணம் பண்ணறதுங்கறது கொஞ்சம் கஷ்டம் தான். புரிஞ்சுக்கோங்க.”

அப்போது குறுக்கிட்டு பேசிய என் இளைய மருமகள் விசித்ரா

“அத்தை நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”

“என்ன விசித்ரா? நான் என்னைக்கு நீ சொன்னதை தப்பா எடுத்துக்கிட்டிருக்கேன்! நீயும் என் மகள் தானே அதனால் நீ எதையுமே தப்பா கேட்டதுமில்லை இனி கேட்க போவதுமில்லைன்னு எனக்கு நல்லா தெரியும் மா. அதனால தயங்காம கேளுமா.”

“இவ்வளவு பெரிய வீடு முழுக்க பல வகையான கைவினைப் பொருட்கள், கலைப் பொருட்கள், அப்படி இப்படினு இவ்வளவு சாமான்களை சேர்த்து வச்சிருக்கீங்களே இதை எல்லாம் எப்படி துடைச்சு பார்த்துக்கப் போறீங்க?”

“அதுக்கு தான் வேலையாட்கள் இருக்காங்களேமா. அவங்க பார்த்துப்பாங்க. ம்…இருங்க உங்களுக்கு சேரவேண்டியதை தந்திடறேன்”

என்று எனது அறைக்குச் சென்று எங்கள் லாக்ரைத் திறந்தேன். அதிலிருந்த எனது நகைகளை எல்லாம் எடுத்து வந்து என் மகன்கள் மற்றும் மகள்களுக்கும் மருமகள்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் என பகிர்ந்துக் கொடுத்தேன். அப்போது என் மகள் ரம்யா என்னைப் பார்த்து

“அம்மா இவ்வளவு நாள் நீ லாக்ர்ல பூட்டி வைத்திருந்ததை எல்லாம் எங்க தலையில கட்டிட்ட இல்ல…இப்போ நாங்க எங்க பாங்க் லாக்ர்ல இதை எல்லாம் வைச்சுட்டு ஊருக்குப் போகப் போறோம். இதுக்காகவா விழுந்து விழுந்து இவ்வளவு நகைகளை சேர்த்த?”

“என்ன பண்ண ரம்யா நானும் பெண் தானே!”

“அம்மா இதெல்லாம் நீ ஆசை ஆசையா பார்த்துப் பார்த்து வாங்கினது. எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம். இந்தா நீயே வச்சுக்கோ. உனக்கு இதை வச்சு என்ன பண்ணணும்னு தோணுதோ பண்ணிக்கோ. எங்களுக்கு தரவேண்டியதனைத்தையும் நீயும் அப்பாவும் நிறையவே தந்திருக்கீங்க எங்களுக்கு அது போதும் மா. இந்தா புடி…இல்ல…குடு… நானே உன் லாக்ர்ல வச்சுட்டு வரேன். நீ மறுபடியும் மாடிப்படி ஏறி போக வேண்டாம். என்னப்பா சொல்லுறீங்க நீங்க எல்லாரும்?”

“எஸ் ரம்யா நீ சொல்லறது தான் சரி. அம்மா நீயும் அப்பாவும் எங்களுக்கு கல்வி, அன்பு, பாசம், குடும்பம்ங்கற நிரந்தரமான சொத்துக்களைக் கொடுத்திருக்கீங்க அதுவே எங்களுக்குப் போதும்.”

என்று ராகேஷும்

“ஆமாம் மா அண்ணணும் ரம்யாவும் சொல்லறது தான் சரி. எங்களுக்கு எதுவும் வேண்டாம் மா.”

என்று ராஜேஷும்

“எஸ் மா தே போத் ஆர் வெரி கரெக்ட். எனக்கும் வேண்டாம் மா. எங்களுக்கு நீ ஆரோக்கியமா, சந்தோஷமா, நிம்மதியா இருந்தாலே போதும் மா.”

என்று ராதாவும் கூறியதைக் கேட்டதும் என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அதைத் துடைக்க எட்டுக் கரங்கள் ஓடி வந்தன. அன்று என் மனம் நிறைந்திருந்தது. ஏனெனில் எங்கள் பிள்ளைகளை நாங்கள் சரியாக வளர்த்துள்ளோம் என்று பல தருணங்களில் உணர்ந்திருந்தாலும் அன்று சற்று பெருமிதமாகவும் இருந்ததால் மனம் பூரித்தது. ஆனால் அதைப் பகிர்ந்துக் கொள்ள கேசவனில்லையே என்ற வருத்தம் என் மனதைப் பிசைந்தது. பிள்ளைகள் அவரவர் ஊர்களுக்குச் சென்றனர். நான் ஒரு ஆறு மாதங்கள் அங்கேயே என் கேசவனின் நினைவுகளுடனும், பேரன் பேத்திகளுடன் வீடியோ கால்களும் என்று சுற்றி சுற்றி வந்தேன். ஊருக்கு செல்வதற்கு முன் ரம்யா என்னிடம் சொன்னது என் மனதின் ஓரத்தில் இருந்திருக்கிறது போலும். ஓர் நாள் அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றேன். அங்கே ஒரு குழந்தை என்னிடம் வந்து

“பாட்டி நீங்க உங்க வீட்டுல நிறைய தோடு வச்சிருக்கீங்களா?”

“ஏம்மா கேக்கற?”

“இல்ல பாட்டி நீங்க ஒவ்வொரு தடவை வரும் போதும் ஒவ்வொரு கலர்ல தோடு போட்டுட்டு வர்றீங்களே அது தான் கேட்டேன்”

அப்போது என் மனதின் ஓரத்திலிருந்த
என் ரம்யாவின் பேச்சு அன்று என் மனதில் மீண்டும் உதிக்கச் செய்தது. எதற்காக நான் இவ்வளவு பொருட்களை சேர்த்து வைத்தேன்? யாருக்காக இவைகளை வாங்கி இப்படி அழகாக அடுக்கி வைத்தேன்? இவைகளுக்காக எவ்வளவு செலவு செய்துள்ளேன்? இதற்கு பதிலாக இன்னும் அந்த ஆசிரமத்திலிருக்கும் ஒரு இருபது குழந்தைகளைப் படிக்க வைத்திருக்கலாமே! என்ற எண்ணங்கள் என்னை அன்று முழுவதும் தூங்க விடாது படுத்தி எடுத்ததில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.

மறுநாள் எழுந்ததும் என் பிள்ளைகளை கான்பரன்ஸ் காலில் வரச்சொல்லி அதைச் சொன்னேன். அதைக் கேட்டதும் நால்வரும்

“அம்மா ஏன்மா? இங்க வாயேன் மா.”

“அம்மா நீ ஏன் அந்த ஓல்டேஜ் ஹோம்ல போய் இருக்கணும்? நாங்க எல்லாரும் உனக்கு இருக்கோமே மா”

“அம்மா திஸ் இஸ் டூ மச். எதுக்காக இப்போ நீ இப்படி ஒரு டிஸிஷன் எடுத்திருக்க?”

“அம்மா உன்னைத் தாங்கறதுக்கு நாங்க நாலு பேர் காத்திருக்கும் போது ஏன் மா நீ முதியோர் இல்லம் போறேன்னு சொல்லற?”

என்று நாலவரும் என்னிடம் மாறி மாறி கேள்விக் கேட்டனர். அவர்கள் அனைவரும் பேசி முடிக்கும் வரை காத்திருந்த பின்

“எல்லாரும் பேசி முடிச்சாச்சா? இப்போ நான் பேசலாமா? உங்க எல்லாரோட தவிப்பும் அக்கறையும் எனக்கு நல்லா புரியுது. ஆனால் ப்ராக்டிக்கலா யோசிச்சுப் பாருங்க. நீங்க எல்லாருமே வேலைக்குப் போறீங்க. உங்க பசங்க ஸ்கூல், கிளாஸ்ன்னு போறாங்க. நீங்க உங்களுக்குள்ளேயே உட்கார்ந்து பேச நேரமில்லாமல் ஓடிக்கிட்டிருக்கீங்க… இதுல நான் வந்து அங்க உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்ணப்போறேன்? அதுவுமில்லாம நீங்களும் சற்று நின்னு நிதானமா யோசிங்க…எதுக்காக? எதை சாதிக்க இப்படி குடும்பம் பிள்ளைகள் எல்லாரையும் விட்டுட்டு இப்படி ஓடிக்கிட்டிருக்கீங்கன்னு…பசங்க வளர்ந்துட்டா அப்புறம் அவங்க …அவங்க வாழ்க்கை, அவங்க ஃப்ரெண்ட்ஸ் ன்னு அவங்க உலகமே வேற ஒண்ணா மாறிடும். நீங்க அவங்களோட இருக்க வேண்டிய தருணங்களில் இப்படி ஓடிக்கிட்டே இருந்தீங்கன்னா அப்புறம் உங்களுக்குன்னு நேரம் கிடைக்கும் போது அவங்க உங்ககிட்ட இருக்க மாட்டாங்க. அதுனால முடிஞ்ச வரை உங்களோட இந்த ஓட்டத்துக்கு இடையில உங்க பசங்களோடவும் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. அது தான் உங்க வயசான காலத்துல உங்க கூடவே வரப்போற பசுமையான நினைவுகளாயிருக்கும். அது தான் உங்களுக்கு அந்த வயதில் நீங்கள் நகர்ந்துச் செல்ல டானிக்காக இருக்கும்‌. வாழ்க்கையை ஓடிப்பார்க்க நினைக்காதீங்க கொஞ்சம் நிதானித்துக் கொண்டு நடந்து தான் பாருங்களேன் அப்போ அதிலிருக்கும் அமைதி, அழகு, நிம்மதி, சந்தோஷம் எல்லாம் புரிஞ்சுக்கலாம். நானும் உங்க அப்பாவும் அப்படித் தான் வாழ்ந்திருக்கிறோம் அதுனால தான் இப்போ அந்த பழைய நினைவுகள் என்னை நகர்த்திக்கிட்டிருக்கு. அதுவே எனக்குப் போதும் கண்ணுகளா. அதுவுமில்லாம அங்க இருக்குற பெத்தவங்க இல்லாத அந்த குழந்தைகளுக்கு படிப்பு, கைவேலை, எல்லாம் கத்துக் கொடுத்து அவங்களையும் உங்களைப் போல சிறந்த பிள்ளைகளா உருவாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. நீங்க ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டோ இல்ல பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டோ எது புக் பண்ணினாலும் இனி என்னால அவ்வளவு தூரம் பிரயாணம், இந்த நேரம் மாற்றம் எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ள முடியாதுப்பா..‌.என் உடலும் அதுக்கு ஒத்துழைக்காது. இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன். உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டுமா என்னுடன் இருக்க வேண்டுமா வாங்க சந்தோஷமா இருக்கலாம். என்ன சொல்லுறீங்க?”

கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. ராகேஷ் பேசி அந்த நிசப்தத்தை உடைத்தெறிந்தான்

“அம்மா நீ சொல்லறது எல்லாமே கரெக்ட் தான் மா. சரி நீ அங்கேயே போய் இருந்துக்கோ. நாங்க மாறி மாறி வந்து உன்னைப் பார்த்துக்கறோம். அப்படி நீ அங்கப் போனேன்னா இப்ப இருக்குற வீடு அதிலுள்ள பொருட்கள் எல்லாத்தையும் என்ன பண்ணப்போற?”

“ம்…இது நல்ல கேள்வி. அதை அப்படியே வைக்கறேன். நீங்க வந்து ஏதாவது பண்ணிக்கோங்க.”

“இல்லமா…எனக்கு அதுக்கெல்லாம் டைமில்ல…”

“எங்களுக்கும் நேரமில்லை மா.”

“அப்படின்னா நான் இதை எல்லாம் வித்துடவா?”

“அம்மா அதெல்லாம் நீயும் அப்பாவுமா வாங்கின சொத்துக்கள் அதனால் அதை என்னவேண்டுமானாலும் பண்ண உன்னைத் தவிர வேறு யாருக்குமா ரைட்ஸ் இருக்கு! சொல்லு.”

“அப்போ சரி சொல்லிட்டீங்க இல்ல இனி நான் பார்த்துக்கறேன்.”

“பத்திரமா இருமா. நான் ஒரு மூணு மாசம் கழிச்சு வந்து உன்னைப் பார்க்கறேன்.”

“அம்மா நாங்க தீபாவளிக்கு வர்றோம்”

“சரி கண்ணுகளா. உங்களால எப்ப முடியுதோ அப்போ வாங்க நோ ப்ராப்ளம். சரி நான் அப்போ இந்த மாசமே அங்கே ஷிப்ட் பண்ணிடறேன் சரியா.”

“ம்….சரி மா. உன் விருப்பத்துக்கு நாங்க குறுக்கே நிற்க மாட்டோம். கோ அஹெட் ரதியா மா”

“நன்றி குழந்தைகளா. சரி சரி இப்போ என் பேரப்பிள்ளைகளைப் பேச சொல்லுங்க”

என்றதும் அவர்கள் வந்தனர். அவர்களுடன் பேசிவிட்டு ஃபோனை வைத்ததும் அந்த ஹோமுக்குக் கால் செய்து விவரங்களைச் சொன்னேன். அவர்களும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்கள். அடுத்த நாளே ரியல் எஸ்டேட் காரர் ஒரு வரை வரவழைத்து பேசினேன். அவரும் எங்கள் வீட்டை விற்றுத் தர ஏற்பாடு செய்வதாக கூறினார். எங்களுக்கு இன்னுமொரு சிறிய வீடு இருந்தது. அதில் நானும் கேசவனுமாக சேகரித்து வைத்திருந்த பொருட்களில் முக்கியமான சில வற்றை கொண்டுச் சென்று ஆட்களை வைத்து அடுக்கி ஒரு ம்யூசியம் போல வைத்தேன். வீடு விற்கப்பட்டது. எனக்குப் பிடித்த ஓரிரண்டு நகைகளைத் தவிர மீதமிருந்த அனைத்து நகைகளையும் விற்றேன்.

பணம் என் வங்கியில் போடப்பட்டது. அவ்வளவு பொருட்களின் சொந்தக்காரி, மூன்று பீரோ முழுக்க அடுக்கப்பட்டிருந்த உடைகளுக்கு உரிமைக்காரி, நகைகள் நிரம்பிய லாக்கருக்கு எஜமானி… அன்று… கையில் வெரும் இரண்டு சிறியப் பெட்டிகளுடன் அந்த ஆசிரமத்திற்குச் சென்றேன்.

அங்கேயிருந்த அந்த பிஞ்சுக் குழந்தைகள் என்னைப் பாரத்ததும் ஓடி வந்தன நானும் அவர்களை என் இரு கரங்களில் வாரிக் கட்டி அணைத்துக் கொண்டேன். அந்த ஆசிரமத்தில் நானும் ஒருத்தியானேன். என்னிடம் இருந்த பணம் நகை பொருட்கள் எதுவுமே என் பிள்ளைகளுக்கு தேவையில்லை ஏனெனில் அவர்களுக்கு அவை அனைத்தையும் தாங்களே வாங்கிக்கொள்ளும் அளவிற்கு ஆளாக்கியுள்ளோம். ஆகையால் என்னிடமிருந்த பணத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒன்றை மட்டும் வங்கியில் போட்டேன். இரண்டாவது பங்கை என் பேரப்பிள்ளைகள் பெயரில் எஃப் டியில் போட்டேன். மூன்றாவது பங்கை எங்களுக்காக அத்துனை வருடங்கள் வேலைப்பார்த்தவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தேன். நான்காவது பங்கை வைத்து ஆசிரமத்தை விரிவுப்படுத்தினேன். வசதிகளைப் பெருக்கிக் கொடுத்தேன். அங்கிருந்த பிள்ளைகள் படிப்பதற்காக பண்ணிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடத்தைக் கட்டினேன். அங்கேயிருந்த சிறிய முதலுதவி கூடத்தை அனைவருக்கும் பயன்படும்படியான க்ளினிக்காக மாற்றியமைத்தேன். வங்கியில் போட்டிருந்த எனது பங்கிலிருந்து வந்த வட்டியே எனது மாத செலவுக்கு போதுமானதாக இருந்தது. அதை வைத்து அங்கிருந்த முதியவர்கள், பிள்ளைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள் ஆகிய தினங்களை விமர்சையாக இல்லாவிட்டாலும் நல்ல உணவு, புதிய உடை அளித்து மகிழ்ச்சியாக கொண்டாடினோம். என் பிள்ளைகளும் அவ்வப்போது வந்து என்னுடன் இருந்து அவர்களால் ஆன உதவிகளை அந்த இடத்திற்கும் அங்கிருந்தவர்களுக்கும் செய்து வந்தனர். அவர்கள் எங்கள் பெயரிலே ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அதில் பணத்தைப் போட்டு அதன் மூலம் அந்த இடத்தையும், மருத்துவமனையையும், பள்ளிக்கூடத்தையும் பராமரித்து வந்தனர். பேரப்பிள்ளைகளும் வந்து அங்கிருந்த பிள்ளைகளுடன் ஓடியாடி விளையாடிச் சென்றனர்.

சம்பாத்தியம் என்பது நாம் வாழ்வதற்கு முக்கியமானது தான். ஆனால் அதற்கும் எல்லையை வகுத்துக் கொண்டோமேயானால் நமது வாழ்க்கை அழகானதாக அமைதியானதாக நிம்மதியானதாக இருக்கும். ஓட வேண்டிய வயதில் தான் ஓட முடியுமென்றெண்ணி ஓட்டத்தைத் தவிர வேறெதுவுமே காணதவாறு நமது வாழ்க்கைக்கு நாமே திரையிட்டுக்கொள்ளாது நின்று நிதானமாக ஓடியும், நடந்தும், ஓய்வெடுத்தும் நமது வாழ்க்கையைக் கடந்துச் சென்றால்…வாழ்க்கை நமக்கு பல அற்புதமான அனுபவங்களை, பாடங்களை, பரிசுகளை, நட்புக்களை நமக்களிப்பதில் தவறுவதில்லை. அவற்றை நாமும் வேகமாக கடந்திடாது ரசித்து வாழ முடியும்.

அந்த ஆசிரமத்தின் பள்ளியில் படித்த பிள்ளைகள் பெரிய பெரிய கம்பெனிகளில் பணிப்புரிந்தனர். அவர்கள் அங்கிருந்து வெளியேச் சென்றாலும் அந்த ட்ரஸ்ட்டுக்கு பணம் அனுப்புவதையும், மாதம் ஒரு முறையாவது வந்து அங்கிருந்த அனைவருடனும் நேரம் செலவிடுவதையும் தவறாது செய்து வந்தனர். அந்த கடவுள் என் மூலம் விதைத்த ஒரு சிறிய விதையானது இன்று பெரிய வானுயர விருட்சமாக ஓங்கி வளர்ந்து கம்பீரமாக நிற்கின்றது.

ஒவ்வொரு நாள் இரவும் அன்று நடந்த அனைத்து விஷயங்களையும் எனது டைரியில் குறிப்பெழுதி வைத்து கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உறங்கச் செல்வேன். அன்றிரவும் குறிப்பெழுதி வைத்துவிட்டு கடவுளுக்கு நன்றிச் சொல்லிவிட்டு மனநிறைவோடு படுத்துறங்கினேன்.

பல வருடங்களாக என்னைப் பிரிந்திருந்த கேசவன் வந்தார் தன் கரங்களை நீட்டி என் கரம் பிடிக்க காத்திருப்பதாக சொன்னார். நானும் என் கரம் நீட்டி அவர் கரங்களைப் பற்றிக் கொண்டேன். இருவரும் வானில் புதிய பறவைகளைப் போல வட்டமடித்துப் பறந்துக் கொண்டே வெகு தூரம் பயணிக்க ஆரம்பித்தோம். அந்தப் பயணத்தின் போது கேசவன் என்னிடம்

“ரதியா நீ நல்ல காரியம் செய்துள்ளாய். நீ இதுவரை செய்துள்ள நல்ல விஷயங்கள் தான்… எந்த பாவப் பொதிளையும் சுமக்காது, எந்த வித வலி வேதனையுமின்றி உனக்கு இவ்வாறான ஒரு இனிய பயணத்தை அளித்துள்ளது.”

என்றார். அதைக்கேட்டதும் நான் இன்னும் மகிழ்ச்சியானேன். என் மறைவினால் நான் பெற்றெடுத்த பிள்ளைகள் மட்டுமின்றி நான் வளர்த்தப் பிள்ளைகளும் என் ஆசிரமத்து நண்பர்களும் என அனைத்து நல்லுள்ளங்களும் எங்களுக்காக வடித்த ஒவ்வொரு சொட்டுக் கண்ணீருக்கும் நாங்கள் இருவரும் நன்றி சொல்லிக்கொண்டே இருப்போம்.

எங்கள் பெற்றவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம்… எதைக் கொண்டு வந்தோம் நாம் எடுத்துச் செல்வதற்கு. வெறும் ஆறடி இடமிருந்தாலே போதுமென்று. அது அந்தக் காலம். இப்போது அந்த ஆறடியும் சொந்தமில்லை நமக்கு. மின்சார தகனம் செய்து சில மணிநேரத்தில் எல்லாம் ஒரு பிடி சாம்லுடன் திரும்பிச் சென்று விடுகிறார்கள் நம் சொந்தங்கள்.

நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து வேறுலகம் செல்லும் போது நாம் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. நாம் வாழும் காலத்தில் ஓடோடி சேர்த்துவைக்கும் பொருட்களையும், பொன்னையும், சொந்தங்களையும், நட்புக்களையும் தான் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் நாமும் நம்முடன் எடுத்துச் செல்ல சிலவற்றை அதாவது கண்ணுக்கு தெரியாத, உருவமில்லாத சிலவற்றை சேர்த்து வைத்தோமே என்றால் அவை நாம் இவ்வுலகிலிருந்து பிரிந்து செல்லும் போது நம் கரம் பிடித்து கேசவன் என்னிடம் சொன்னது போல எந்த வித வலி வேதனையுமின்றி ஒரு இனிமையான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். அது தான் நாம் வாழும் காலத்தில் சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான சொத்தாகும். அது வேறெதுவுமில்லை புண்ணியம் தான் அது.

நாங்கள் சேர்த்து வைத்த பொன், பொருள், வீடு, வாசல் எங்களுடைய இந்த இனிய பயணத்திற்கு சிறிய வகையில் உதவியிருந்தாலும் பெரியதாக உதவியவை எவை தெரியுமா?… நாங்கள் எங்கள் கடமைகளை சரிவரச் செய்தது, எங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதனைத்தையும் செய்து முடித்தது, இந்த சமுகத்திற்கு நல்ல மனிதர்களை உருவாக்கிக் கொடுத்தது, அனைவருக்கும் நல்லதையே நினைத்தது, எங்களால் முடிந்த வரை அனைத்து நல்ல காரியங்களையும் செய்தது ஆகியவையாகும். அவைகளை செய்யும் போது அவைகள் அனைத்தும் விண்ணுலகில் எங்களைக் காக்கப் போகும் துவார பாலகர்கள் என்றறிந்திடாது செய்தோம். கேசவன் எனக்கு முன்னே அறிந்துக் கொண்டுவிட்டார் ஆனால் நான் அன்று தான் அதை அறிந்துக் கொண்டேன்.

பணம், பொன், பொருள், பதவி அகியவை மண்ணுலகத்தில் நாம் மேற்கொள்ளும் பயணங்களுக்குத் தான் உதவியாக இருக்கும்.

நாம் அவைகளை வைத்து செய்யும் புண்ணியக் காரியங்கள் தான் நமது விண்ணுலகப் பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

எங்களால் அந்த புண்ணிய பணியை விட மனமில்லாததால் நானும் கேசவனும் இணைந்து அந்த இடத்திலேயே அவர்களுக்கு பாதுக்காப்பாகவும், அவ்வப்போது எங்களாலான… ஆனால் அவர்களின் கண்களுக்குத் தெரியாதவாறு சில சிறிய உதவிகளையும் செய்து வந்ததில் மரணமில்லா மகிழ்ச்சியைப் பெற்று வந்தோம்.

உயிருடன் இருந்தாலும்,
உயிரற்றுப் போனாலும்,
நம்முடனே வருவதும்,
நம்மால் செய்ய முடிந்ததும்
புண்ணியக் காரியங்களே!
பணம், பொன், பொருள்களுக்கு எல்லை நம் மரணம்
புண்ணியக் காரியங்களுக்கு எல்லை என்பது இன்னும் வகுக்கப்படவில்லை!
முடிந்த வரை புண்ணியக் காரியங்களில்
ஈடுபடுங்கள்
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.

மண்ணுலகின் பிரதி பிம்பமே விண்ணுலகம். மண்ணுலகில் எதை விதைக்கிறீர்களோ அது தான் விண்ணுலகில் உங்களுக்கு நன்மைத் தரக்கூடிய விருட்சமாகும். ஆகையால் நல்லதே எண்ணுங்கள், நல்லவைகளையே செய்திடுங்கள், இரு உலகிலும் நன்மையையே பெற்றிடுங்கள்.

எங்களுக்குக் கிடைத்த இந்த இரு உலகப் பயணத்திலும் நாங்கள் நன்றாகவே பயணித்தோம், பயணித்துக் கொண்டும் இருக்கிறோம் என்ற மன நிறைவுடன்.

உங்கள்
ரதியாம்பிகா கேசவன்.

🙏நன்றி🙏


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s