அத்தியாயம் 52: ஈசத்துவ மந்திர ஏடு

மாற்று வழி தேடிச் சென்ற மதிநாகசுரனும், சிகராசுரனும் வேறு வழி ஏதுமில்லை என்ற பதிலுடன் திரும்பி வந்தவர்களிடம் நவியாகம்ஷி

“என்ன சொல்கிறீர்கள் இருவரும்? வேறு வழியில்லை என்றால் நாம் எப்படி பிரயாகாவை அழிப்பது அந்த தேவேந்திரனை நெருங்குவது? நமது ஆசானின் ஆசையையும் நமது குலத்தையும் எப்படி காப்பாற்றுவது?”

“நவியா… நவியா…நவியா!”

என்று தொடர்ந்து பேசிய நவியாகம்ஷியை பார்த்து கர்ஜித்தான் மதிநாகசுரன். அதைக் கேட்டதும் நவியாகம்ஷி

“ம்…நன்றாக இருக்கிறது‌. ஏற்கனவே ஒரு முறை இவ்வாறு சப்தமிட்டதால் பாதாளப் பாதை பாதியாகியுள்ளது…இப்போது என்ன நேரப் போகிறதோ?”

“நவியா உன்னால் முடிந்தால் நல்ல யோசனை சொல் இல்லையெனில் சற்று அமைதியாக இருந்து மற்றவர்களை யோசிக்க விடு.”

“ஓ!!! அது சரி…நீங்களே யோசித்து நல்ல வழியைக் கண்டறியுங்கள். நான் இனி ஏதும் கூறப் போவதில்லை”

என்று தன் இரு கரங்களையும் இறுக்கக் கட்டிக்கொண்டு அந்த பாதாள சுரங்கத்தின் ஒரு மூலையில் சென்று அமர்ந்துக் கொண்டாள் நவியாகம்ஷி. ஆட்களும் நேரமும் குறையக் குறைய அசுரர்கள் நிம்மதியின்றி அவரவர் இஷ்டத்திற்கு பேசவும் நடக்கவும் ஆரம்பித்தனர். ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்த அசுரர்களைப் பார்த்து மதிநாகசுரன்

“இங்கே பாருங்கள். நாம் தான் அந்த இந்திரனை அழித்து… நமக்கு தீங்கிழைத்தவர்களை அழிப்போம் என்று நமது அடுத்த சந்ததியினருக்கு உணர்த்த போகும் நம் இனத்தின் கடைசி சந்ததிகள். நம்மைப் பார்த்து தான் நமது அடுத்த சந்ததியினர் இருக்கிறார்கள். ஆகையால் நாம் ஏதாவது செய்து வெற்றியுடன் தான் அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டும். அதுவரை எந்தெந்த வழிகள் எல்லாம் உள்ளதோ அந்தந்த வழிகளை எல்லாம் பின்பற்றிச் செல்வோம். வாருங்கள் இனி இந்த பாதாள சுரங்கம் வேலைக்கு ஆகப்போவதில்லை. இனி நாம் நேருக்கு நர் தான் யுதம் புரிய வேண்டும்.”

“மதி நீங்கள் ஒருமுறை நம் ஆசானிடம் எதற்காக இந்த அற்ப மனிதர்களுடன் இன்னும் போரிட வேண்டும் என்றும் நமக்கான படையை நாம் தான் திரட்டி விட்டோமே என்றும் அதனால் நேரடியாக அந்த இந்திரனுடனேயே சண்டையிட்டு வென்றிடலாமே என்றும் கேட்டதாக கூறினீர்களே அது உங்களுக்கு ஞாபகமிருக்கா?”

“ஆங் ஞாபகம் உள்ளது நவியா. அதற்கு என்ன?”

“இப்போதா நாம் ஏன் அதைச் செய்யக்கூடாது?”

“எதை கூறுகிறாய் நவியா?”

“நாம் இந்த பிரயாகா மக்களுடன் சண்டையிடுவதற்கு பதில் ஏன் அந்த இந்திரனையே தாக்கக் கூடாது?”

“ஹா! ஹா! ஹா!”

“மெல்ல சிரியுங்கள் மதி. நான் சொன்னதில் தங்களுக்கு ஏன் இவ்வளவு சிரிப்பு?”

“நவியா நான் அதை நம்மிடம் சாம்பீனிகளின் பெரும்படை இருந்தபோதே கேட்டேன்…அதை அப்போதே மறுத்துவிட்டார் ஆசான். அதற்கு அவர் கூறிய காரணம் …அந்த தேவேந்திரனுக்கு படைபலத்தைவிட அந்த பரந்தாமனின் பலம் தான் பெரியதாம் அதனால் அவனுடன் மோதுவதற்கு நாம் இன்னும் நம் படைபலத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றார். அப்போதே அவர் அவ்வாறு கூறினார்…அப்படி என்றால் இப்போது நம்மிடமிருக்கும் படைபலத்தைப் பார் நவியா…நன்றாக பார்…இதை வைத்துக் கொண்டு எவ்வாறு அந்த தேவேந்திரனை நாம் நெருங்குவது சொல்”

“அப்படிப் பார்த்தால் இந்த பிரயாகா மக்களை நாம் அழித்தாலும் நமது பழைய படைபலம் நம்மிடம் இருக்காதே!! பின் எப்படி நாம் தேவேந்திரனை எதிர்ப்பது மதி?”

“அதற்கான வழியை நமது ஆசான் தான் கூறமுடியும். முதலில் நம்மைப் பாடாய்ப்படுத்தும் இந்த பிரயாகாவையும் அழித்து நம்வசமாக்குவோம். அதன் பின் என்ன செய்யலாமென்று சிந்தித்துக் கொள்ளலாம்.”

“ம்…அதுவும் சரிதான். ஆனால் இப்போது எப்படி நாம் பிரயாகாவிற்குள் செல்வது?”

“அதற்கு சற்று கால தாமதமாகும். ஏனெனில் அதற்கான ஒரே வழி நான் ஈசத்துவம் சித்தியை முறையாக கற்று தேர்ச்சிப் பெற வேண்டும். அதை பெற்றால் அதன் பின் இந்த பிரயாகா என்ன அந்த தேவலோகமே என் வசமாகிவிடும். நமது ஆசான் அப்போதே அதை முறைமாகப் பயின்றிட வற்புறுத்தினார். நான் தான் எதனாலோ அதை தவிர்த்துக் கொண்டே வந்தேன்”

“எனக்கு ஒரு சந்தேகம் மதிநாகசுரா. அதைக் கேட்கலாமா?”

“ம்…கேள் மந்தாகிஷி.”

“ஆசான் தானே தங்களுக்கு அந்த ஈசத்துவ சித்தியை பயிற்றுவித்திருக்க வேண்டும்?”

“ஆமாம் இதில் உனக்கென்ன சந்தேகம்?”

“அப்படியென்றால் அவரே அதை உபயோகித்து அந்த தேவலோகத்தை என்றோ கைப்பற்றியிருக்கலாமே!”

“அவரால் அதன் ஒரு பகுதியைக் கற்பிக்க மட்டுமே முடியும். ஏனெனில் நமது அசுர குலத்துக்கே குருவான சுக்கிராச்சாரியார் அந்த சக்தியை அசுரகுல அரசப் பரம்பரைக்கு மட்டும் தான் அளித்துள்ளார். அரசக் குலத்தவர்களும் எளிதாக அதை அடைந்து விட முடியாது. அதற்கான விதிமுறைகள், வழிமுறைகள், பூஜைகள், யாகங்கள், பலிகள் என பல சடங்குகளை மேற்கொண்டால் தான் அது சாத்தியமாகும்.”

“ஓ!! சரி சரி. ஆனால் எனக்கு இன்னுமொரு சந்தேகம்”

“ம்….இன்று என்ன சந்தேகம் தீர்க்கும் சுபமுகூர்த்த தினமா? ஆகட்டும் கேள்”

“அப்படி சுக்கிராச்சாரியார் கொடுத்த அந்த சக்தி நமது தலைவரும் தங்கள் தந்தையுமான மஹா பலி அரசரிடமும் இருந்திருக்குமில்லையா? நமது ஆசான் கூறிய அந்த அமிர்தம் கடைதலின் போது ஏற்பட்ட யுதத்தில் ஏன் நம் தலைவர் ஈசத்துவத்தைப் பிரயோகிக்கவில்லை? அதை அப்போதே பிரயோகித்திருந்தால் இப்போது நாம் நம் குடும்பத்தினருடன் இணைந்து இந்த பிரபஞ்சத்தில் நாமே நிறைந்திருந்திருப்போம் இல்லையா…நான் என் சிம்பாவையும் இழந்திருக்க மாட்டேனே மதிநாகசுரா.”

என்று கேட்ட மந்தாகிஷியைப் பார்த்து

“மந்தா!! மந்தா!! இருந்திருந்தால் உபயோகித்திருக்க மாட்டாரா சொல். அவருக்கும் நான் அறிந்து வைத்துள்ள வரை தான் தெரியும் அதற்கு மேல் அவர் என்றில்லை அவருக்கு முன்னிருந்த அரசர்களும் பலமுறை முயன்றும் முடியாதுப் போயிருக்கிறது.”

“ஏன் அப்படி?”

“அது தான் நம் அரசக் குலம் வாங்கி வந்த சாபம். ஆம் நமது பாட்டனார் செய்த வேலை. அவர் தான் நமது அரசக் குல பரம்பரையில் கடைசியாக ஈசத்துவம் சித்திக் கொண்டு அந்த தேவலோகத்தையே ஆட்டிப் படைத்து வந்தவர். ஒருமுறை அவர் இந்திராணியை சிறைப்பிடித்து வந்துள்ளார். அதை அறிந்ததுமே கொந்தளித்தது தேவலோகம். உடனே மும்மூர்த்திகளுமாக கூடி ஆலோசனைச் செய்து ஒரு திட்டம் தீட்டினர். அவர்களில் திருமால் மோகினியாக மாறி இந்திராணியை சிறைப்பிடித்துத் தன் வாகனத்தில் வைத்துக் கொண்டு காட்டு வழியாக அரண்மனைக்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்த நமது அரசர் தேரின் முன் திடீரென தோன்றினார். உடனே தேரோட்டி தேரை நிறுத்த அசுரக்குல அரசர் என்னவாயிற்று என்று தேரிலிருந்து இறங்க. அவர் மோகினியைப் பார்க்க…அவளின் அழகில் மயங்க…அவளை தன்னுடன் வரும்படிக் கூறி தன் தேரிலே ஏறச் சொல்ல…மோகினியும் ஏறி அமர்ந்தாள். அவளைப் பார்த்ததுமே இந்திராணிக்கு வந்திருப்பது திருமால் தான் என்றுப் புரிந்துப் போனதால் அவளின் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்ததைக் கண்ட அரசர் அவளுக்கு சிநேகிதிக் கிடைத்ததற்காகத்தான் அவள் புன்னகைத்தாள் என்று எண்ணிக்கொண்டு இருவரையும் அவரின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் இருவரையும் தனது அந்தப்புரத்தில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு அவர் உணவருந்தச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தை மோகினியான திருமால் உபயோகித்து அரசரிடமிருந்த ஈசத்துவ சக்தியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தேவலோம் சென்று தேவலோகமே அசுரக்குல அரசருடன் போரிட தயாராக வந்தனர். அதைக் கண்ட நமது பாட்டனார் அவர்கள் எந்த தைரியத்தில் வந்துள்ளதாக வினவ அதற்கு பதிலேதும் கூறாது அவரின் தலையைத் துண்டித்தான் இந்திரன். எப்படி நடந்தது? என்ன நடந்தது? என்று எதுவுமே அறியாது மாண்டார் அரசர்.”

“எப்படி திருமால் அரசரின் ஈசத்துவ சித்தியை பறித்துச் சென்றாராம்?”

“அந்த ஈசத்துவ சித்தியை அடைவதற்கான செயல்கள் அனைத்தையும் செவ்வென செய்து முடித்தால் அதைப் பற்றிச் சுக்கிராச்சாரியார் எழுதி வைத்திருந்த ஏடு ஒன்றைப் பெறலாம். அந்த ஏட்டில் தான் அந்த சக்திக்கான மூல மந்திரம் இருந்தது. அதைப் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அதை அந்த தேவலோகக் காரர்கள் கண்ணில் படாது பாதுகாக்க வேண்டும். அதிலும் திருமாலுக்கு அதன் அருகே இருந்தால் போதும் உடனே அதை தனதாக்கிக் கொள்ளும் வல்லமைவாய்ந்தவராவார். அதனால் தான் அதை பலத்தப் பாதுக்காப்புகளுடன் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தினருகே செல்வதற்காகவே திருமால் காத்திருந்தார் அப்போது நமது அரசர் இந்திராணி மீது கொண்ட மோகத்தை அறிந்துக் கொண்டு அதையே உபயோகித்து உள்ளே நுழைந்தவர் அந்த ஏடு அந்தப்புரத்தின் பின்னாலிருந்த ஒரு மாளிகையில் வைக்கப்பட்டிருந்ததை உணர்ந்தார். மோகினியாயிற்றே!! அங்கிருந்த அனைவரையும் தன் அழகில் மயங்கச் செய்து அந்த மந்திர ஏடு அடங்கிய மரப்பேழையை எடுத்துக் கொண்டும், இந்திராணியையும் அழைத்துக் கொண்டும் அங்கிருந்துச் சென்றுவிட்டார். மீண்டும் வந்து தாக்கியதில் தலைவர் தலை வெட்டப்பட்டதும் நம்மவர்கள் பயத்தில் அங்குமிங்குமாக தெறித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர். தலைவனை மட்டும் கொன்று விட்டு வேறெவரையும் எதுவும் செய்யாது அங்கிருந்து சென்றுள்ளனர் தேவலோகத்தவர்கள். அவர்கள் சென்றதும் மீண்டும் நம் இனத்தவர் ஒன்று கூடி என் தந்தையை தலைவனாக்கி அவரும் சிறப்பாக நம்மக்களைக் காத்து அவர்களுக்காகவே வாழ்ந்தும் வந்துள்ளார். அவராலும் அந்த ஈசத்துவத்தை அடைய முடியாது போனது. இக்கதையை ஆசான் எனக்கு சிறுவயதிலிருந்தே சொல்லி வந்துள்ளார் ஆனால் என்னவோ எனக்கு அதை அடைவதற்கான அந்த நினைப்பே வராதிருந்தது. ஆனால் இப்போது வந்துள்ளது. நான் எப்படியாவது அந்த மூல மந்திர ஏடு பெறுவதற்கான செயல்களை சிறப்பாக செய்து முடித்து அதைப் பெற வேண்டும். அது தான் இந்த யுகத்தில் மூன்று லோகங்களையும் நான் ஆள்வதற்கான ஒரே வழி. அதற்கான வேலைகளில் நான் இப்போதே இறங்குகிறேன்.”

“மதி அதற்காக என்ன செய்யப் போகிறீர்கள்?”

“நீங்கள் அனைவரும் வட்ஸா சென்று ஆசானுடனும் நமது பிள்ளைகளுடனும் இருங்கள் நான் காட்டிற்குள் சென்று தவம் மேற்கொண்டு, வேள்வி ஒன்றை நடத்தி, அதன் பின் செய்ய வேண்டிய பலிகளைக் கொடுத்து அந்த மூல மந்திரம் ஏடு அடங்கிய மரப்பேழையுடன் வருகிறேன்”

“மதி…அது வந்து…”

“நவியா இதில் எந்தவித மாற்றமுமில்லை. அனைவரையும் அழைத்துக் கொண்டு வட்ஸாவிற்குச் செல். ஆசானிடம் நடந்தவற்றை விளக்கமாக கூறு. ம்…அனைவரும் நவியாகம்ஷியுடன் வட்ஸாவிற்கு செல்லுங்கள்.”

என்று கூறிவிட்டு அங்கிருந்து தனது இலகிமா சித்திக் கொண்டு காற்றோடு காற்றாக கலந்து காட்டிற்குள் சென்றான் மதிநாகசுரன். அவன் சென்றப் பாதையைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்த நவியாகம்ஷி தோளில் கையைப் போட்டுத் தட்டிக் கொடுத்தார்கள் மந்தாகிஷியும், யாகம்யாழியும். பின் அனைவரும் அங்கிருந்து வட்ஸாவிற்குத் திரும்பிச் சென்றனர். அவர்களின் வருகையைக் கண்ட மந்திராசுரனின் கண்கள் மதிநாகசுரனைத் தேடியது. அதைப் பார்த்த நவியாகம்ஷி மந்திராசுரனிடம் நடந்தவைகளைக் கூறினாள். அதைக் கேட்டதும் மந்திராசுரன்

“நல்லது நவியாகம்ஷி. இப்போதாவது அதைத் தேடிச் சென்றானே நம் மதி அதுவரை சந்தோஷம் தான். ஆனால் அவனைத் தனியாக விடாது உங்களுள் யாராவது ஒருவர் அவனுடன் சென்றிருக்கலாம். ம்…பரவாயில்லை. ஈசத்துவ சித்தியுடனான மதிநாகசுரனின் வருகைக்காகக் காத்திருப்போம்.”

“ஏன் அவருடன் யாராவது சென்றிருக்க வேண்டும் என்கிறீர்கள் மந்திரா அண்ணா? ஏன் என் மதிக்கு ஏதாவது ஆபத்து நேர வாயப்புள்ளதா?”

“அதற்கில்லை நவியா. அந்த ஈசத்துவ சித்திக்கான மூல மந்திர ஏடு அடங்கிய மரப்பேழையை அடைவது என்பது மிக கடினமான செயலாகும். அதற்காக நம் மதிநாகசுரன் மேற்கொள்ளப் போகும் யாகங்களும் உக்கிரமானவைகளாக இருக்கும். அந்த நேரத்தில் அவனரகே யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன் அவ்வளவு தான். இருக்க வேண்டும் என்றில்லை. அப்படி இருந்தாக வேண்டுமென்றால் நம் மதியே உன்னை அவனுடன் இருக்கச் சொல்லியிருப்பானே!! சரி சரி எல்லோரும் வந்து ஓய்வெடுங்கள்.”

என்று மந்திராசுரன் கூறியதைக் கேட்ட நவியாகம்ஷிக்கு மனதில் பதற்றம் தொற்றிக் கொண்டது. அவள் தனக்குள்ளே

“ஒரு வேளை மதிக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால்? நான் அவருடன் சென்றிருக்க வேண்டுமோ? மந்திரா அண்ணா சொல்வதுப் போல அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்? ம்…ஹூம்…நான் உடனே அவர் சென்றுள்ள காட்டிற்குள் செல்ல வேண்டும். அவருக்கு என்னாலான உதவிகளை செய்தாக வேண்டும். இதை இப்போது இவர்களிடம் கூறினால் என்னை விட மாட்டார்கள். ஆகையால் எவரிடமும் சொல்லிக்கொள்ளாது இங்கிருந்து சென்று மதிக்கு உதவ வேண்டும். ஆனால் எப்படிச் செல்வது? அவரைப் போல இலகிமா சித்தி எனக்குத் தெரியாதே!! ம்…முதலில் அந்த பாதாள சுரங்கத்திற்குள் சென்று அவர் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாரோ அங்கிருந்தே நானும் என் பயணத்தை மேற்கொள்கிறேன்.”

என்று அனைவரும் உறங்கும் வரை காத்திருந்து பின் வட்ஸாவிலிருந்து பாதாளச் சுரங்கத்தின் வழியே தன் கணவனும், அசுரக்குல தலைவருமான மதிநாகசுரனுக்கு உதவ வேண்டி பிரயாகாவை நோக்கிச் சென்றாள் நவியாகம்ஷி. பாதாளப் பாதை பாதியான இடத்தைச் சென்றடைந்தாள். அங்கிருந்து மதிநாகசுரன் சென்ற திசையை நோக்கி பயணிக்க திரும்பிய போது அவள் தலையில் இடிப்போல விழுந்தது பாதாளத்தின் கூரை. தன் மீது விழுந்த பாதாளத்தின் கூரையான மண் மற்றும் கற்களை தனது கைகளால் தள்ளி விட்டுப் பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

தொடரும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s